Tuesday, June 14, 2022

அன்புள்ள அப்பா


ஆல்பனிக்கு குடிபெயர்ந்த சில மாதங்களில் வேலை நிமித்தமாக கலிஃபோர்னியா செல்ல வேண்டிய நிர்பந்தம் கணவருக்கு! நிவியையும், வயிற்றில் சுப்பிரமணியுடன் இருந்த என்னையையும் விட்டுச் செல்ல அவருக்கு மனமில்லை. ஆனால் ஹெச்1பி விசாவைத் தக்க வைக்க வேறு வழியில்லை. போகத்தான் வேண்டும். 

"அப்பா போய்த்தான் ஆகனுமாம்மா? இங்கேயே ஏதாவது வேலைக்குப் போகலாமே" அழாத குறையாக கேட்டுக் கொண்டே இருந்தாள். இந்த அம்மாவுக்கு கோபம் வேறு அடிக்கடி வரும். 'படிபடி' என்று அனத்துவாளே செல்ல மகளுக்கோ அப்படி ஒரு கவலை!

"நான் தான் இருக்கிறேனே! உன்னைய நல்லா பார்த்துப்பேன்."

 எவ்வளவு தான் ஆறுதலாகச் சொன்னாலும் அவள் கவலையாகவே இருந்தாள். இருக்காதா பின்ன? சேர்ந்து புத்தகங்கள் வாசிக்க, விளையாட பூங்காவிற்கு அழைத்துச் செல்ல, கீபோர்டு இசைக்க என்று சகலமும் அப்பாவுடன் தான் அவளுடைய பொழுதுகள். சாப்பாடு, வீட்டுப்பாடம், குளியல், கடைகளுக்கு வருவது, அவ்வப்பொழுது சேர்ந்து விளையாடுவது என்று என்னுடன்.

"ஐ வில் மிஸ் யூ டாட்" என்று அவரை விமானமேற்றி விட்டு அமைதியாக என் விரல்களைப் பிடித்துக் கொண்டு வருபவளைப் பார்த்து எனக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது. இனி கோபம் வந்தாலும் மகளுக்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வீடு திரும்பியவுடன் கையை மேலும் இறுக பற்றிக் கொண்டாள்.
 
"உள்ளே போக பயமா இருக்கும்மா."

என்ன பயம்?

"அப்பா இல்லல்ல. அதான்!"

அடக்கடவுளே! "ஏன்? நான் இருக்கேனே?"

அதற்குப் பிறகு வந்த நாட்களில் நான் எங்கே இருக்கிறேனோ அங்கே தான் இருப்பாள். தனியாக எங்கும் செல்ல பயம். அப்பா இல்லாத தனிமை தந்த கவலை. முடிந்தவரை நான் சகலமுமாக இருக்க, சிறிது நாட்கள் ஆயிற்று அவளுடைய பயங்கள் விலக. காலையில் டே கேரில் அவளை விட்டு விட்டு வேலைக்குச் சென்று மாலையில் அழைத்து வரும் ஒவ்வொரு நாளும் தவறாமல் கேட்பாள்.
 "அப்பா எப்போம்மா வருவாரு?"

தினமும் தூங்கப் போகுமுன் (கலிஃபோர்னியாவில் அப்பொழுது தான் மாலை நேரமாக இருக்கும்) அப்பாவிடம் பேசி விட்டுத்தான் தூங்குவாள். நான் வயிற்றில் குழந்தையுடன், வீடு, அலுவலகம், கடைகள் சென்று வர, இவளை அழைத்துக் கொண்டு நூலகம், பூங்கா, நண்பர்கள் வீடு என்று அப்பா இல்லாததை நினைத்துக் குழந்தை கவலைப்படக் கூடாதே என்று முடிந்தவரை அவளுடனே இருந்தேன். சமயங்களில் அலுவலக வேலை இரவு வரை நீளும் பொழுது வீட்டிற்கு வந்து நிவியையும் அழைத்துச் சென்று விடுவேன். தூக்கக் கலக்கத்தில் அவளும் பொறுமையாக இருந்தாள். டே கேர், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வரும் காது, தொண்டை வலி, காய்ச்சல் மாதம் தவறாமல் வர ஆரம்பித்தது. அப்பொழுதெல்லாம் அவளுடைய அழுகையினூடே அப்பா எப்பம்மா வருவார் என்று தான் கேட்பாள். 

'மாங்கு மாங்கு' என்று இங்கு ஒருத்தி தூங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறேன். எப்பொழுது பார்த்தாலும் அப்பா அப்பா என்று புலம்புகிறாளே என்று கோபம் வந்தாலும் அவளின் மனவேதனை புரியாமல் இல்லை. சீக்கிரம் வந்து விடுவார். கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்லி கணவரிடமும் "வேறு வேலை பார்த்து ஊருக்கு வந்து விடுங்கள். நிவி மிகவும் ஏங்கிப் போயிருக்கிறாள்" என்று அவரும் வருத்தப்பட்டு...

ஒரு வழியாக ஆறேழு மாதங்களுக்குப் பிறகு ஈஷ்வருக்கும் நியூஜெர்சி மாநிலத்தில் வேலை கிடைக்க, வார இறுதிகளில் வீடு வர...கொஞ்சம் சமாதானம் ஆனாள். முற்றிலுமாக ஆல்பனி வந்து சேர்ந்தவுடன் தான் பழைய கலகலப்புடன் வலம் வர ஆரம்பித்தாள்.

மீண்டும் அப்பாவுடன் சேர்ந்து புத்தங்கள் வாசிப்பது, கீ போர்டு, நீச்சல், சைக்கிள் ஓட்டுவது என்று அவர்களும் கைக்குழந்தையுடன் நானும் என்று நாட்கள் வருடங்களாகி அப்பாவைப் போலவே ஆங்கில இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டு வாசிப்பது விவாதிப்பது என்று இன்று வரை தொடர்கிறது.

இப்பொழுது படித்து முடித்து வேலைக்குச் சென்று விட்டாலும் அவள் வீடு வந்து சேரும் வரை அப்பாவும் காத்திருக்க, வீட்டுக்கு வந்தவுடன் அன்று நடந்தவைகளைப் பேசி, என்ன சாப்பிட்டாள் என்ற விவரம் வரை கேட்டுக் கொண்டு, "நீங்க போய் தூங்குங்கப்பா" என்று சொன்னவுடன் தான் அப்பாவிற்கும் நிம்மதியாக இருக்கிறது. 

இன்றும் ஆங்கில இலக்கியங்கள், அமெரிக்க அரசியல், நடைமுறைச் சிக்கல்கள் என்று பேசி அலசுகிறார்கள்.

காலம் மாறி விட்டது. இன்று மகளுக்காக அப்பாவின் காத்திருப்புகள்! 
எப்பொழுதும் அன்னையர் தினத்தன்று ஊருக்கு வருபவள் இந்த முறை தந்தையர் தினத்தன்று ஊருக்கு வருகிறேன் என்றதில் ஈஷ்வருக்கு அத்தனை சந்தோஷம்!
 
இருக்காதா பின்ன?

இதைவிட வேறு என்ன பரிசு வேண்டும்?

No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...