Wednesday, June 15, 2022

அன்புள்ள அப்பா

ஒரு முறை 'நீயா நானா'வில் அப்பாக்கள் Vs மகன்கள் என்ற சுவாரசியமான விவாதம் நடந்தது. மகன்கள் அனைவரும்அவரவர் அப்பாக்கள் மீது ஒரே மாதிரி குற்றசாட்டுக்கள் தான் வைத்தார்கள்.

"எப்ப பாரு திட்டுவார்."

"செலவுக்குப் பணம் கேட்டா கோவம் வரும்."

"அன்பா பழக மாட்டார். அதனால தான் அம்மாகிட்ட எல்லாம் பேசுறோம்." இப்படி போய்க்கொண்டிருந்தது அவர்களின் வாதம்.

அப்பாக்களும் மகன்கள் மீது ஒரே மாதிரியான குற்றச்சாட்டுக்களைத் தான் வைத்தார்கள்.

"ஒன்னும் சொல்ல மாட்டான். அவங்க அம்மாகிட்ட தான் எல்லாத்தையும் சொல்லுவான். சொல்ற பேச்சைக் கேட்க மாட்டான். எதிர்த்துப் பேசுவான். அன்பா நாலு வார்த்த பேசினதில்ல."

இதில் ஒருவர் "எல்லாத்துக்கும் காரணம் அவன் அம்மா தான் சார்." என்று ஒரு போடு போட்டார்.

உண்மையாக இருக்குமோ என்று எனக்கே தோன்றியது. பிள்ளை நம் பேச்சைக் கேட்டு நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று அம்மாக்கள் அவர்களைத் தங்கள் சொல்பேச்சு கேட்பவர்களாக வளர்க்கிறார்களோ? மகன் தன் மீது மட்டுமே அதிக பாசம் கொண்டுள்ளவனாக இருக்க வேண்டும் என்ற உளவியல் காரணமாக கூட இருக்கலாம்.

என் மகன் விளையாட்டாக பேசியதைக் கணவரிடம் கூறிய போது "அவன் ஏன் என்கூட இந்த மாதிரி விளையாட்டுத்தனமாக பேசுவதில்லை?" என்று வருத்தப்பட்டார்.

யோசித்துப் பார்த்ததில் அதில் சிறிதளவு உண்மையும் இருப்பதாகவே எனக்குத் தோன்றியது.

அப்பாவுடன் பேசும் பொழுது கொஞ்சம் மரியாதை, பயம் கலந்த உணர்வு தான் மேலோங்கி இருக்கிறது. இதே அம்மாவிடம் பேசும் பொழுது ஒரு நண்பனிடம் பேசுவது போல அதிக உரிமையுடன் குழந்தைகள் அதுவும் மகன்கள் பழகுகிறார்கள்.

இதை மாற்ற வேண்டுமென்றால் அப்பாவும் மகனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சுப்பிரமணி எதைக் கேட்டாலும் "நீயே அப்பாவிடம் கேள்." என்று சொல்ல, அவனும் ஈஷ்வருடன் பேசிக் கொண்டிருந்தான்.

இருவரின் புரிதலில் கொஞ்சம் நெருங்கி இருந்தார்கள். அவனும் சரளமாக அப்பாவுடன் பேச, ஈஷ்வருக்கும் மகிழ்ச்சி. சேர்ந்து நடைபயிற்சிக்குச் செல்வது, இசை வாத்தியங்களை இசைப்பது என்று நிலைமை மாறியிருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி. 

பெரும்பாலான அப்பாக்களுக்குத் தங்கள் மகன்கள் நெருக்கமாக தங்களுடன் அளவளாவ வேண்டும் என்பதே விருப்பம். மகன்களுக்கும் அதே எண்ணம் இருந்தாலும் ஏதோ ஒரு மனத்தடை. மகன் தன்னைப் போல் ஆகிவிடக்கூடாது என்று நினைக்கும் அப்பாக்கள் தங்களையும் அறியாமல் சில விஷயங்களில் கூடுதல் அழுத்தம் கொடுப்பதை மகன்கள் புரிந்து கொண்டால் எல்லாம் சுபம். தன் அப்பாவிடம் தான் எதிர்பார்த்த ஒன்றை தன் மகனுக்கு கொடுத்து விட  துடிக்கும் தந்தை மனது மகன்களுக்குப் புரிவதில்லை. அதனால் தான் உறவில் இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. தந்தை-மகன் உறவின் அருமை நெருங்கிப் பழகும் இருவருக்கும் மட்டுமே புரியும். இருவரும் அடிமனதில் ஒருவருக்கொருவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தாலும் கொஞ்சம் விலகியே இருக்கும் அன்பை உணர்ந்து அப்பாக்களுடன் மகன்கள் பழக அம்மாக்கள் தான் வழிவிட வேண்டும் என்பது புரிந்தது.

இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.  


No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...