Monday, December 17, 2018

பயணக் குறிப்புகள் – ஸ்விட்சர்லாந்து


Mountain View
 நடுவில் ஒருநாள் ஓய்வு எடுத்துக் கொண்டு, துணிகளை துவைத்து முடித்து, ஸ்விட்சர்லாந்து போவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டோம். ஸ்வெட்டர்ஸ், ஜாக்கெட்ஸ், பனிக்குல்லாய், கையுறை, காலுறை, பூட்ஸ், குழந்தைகளுக்கான தீனிகள், அங்கு நாங்களே சமைத்து சாப்பிட வேண்டிய சாமான்கள் என்று எல்லாவற்றையும், செல்வியும், முருகனும் பேக் பண்ண, இரண்டு கார்களில் எல்லா லக்கேஜ்களையும் ஏற்றி விட்டு வழியில் சாப்பிடுவதற்கு எங்களுக்குப்  பிடித்த brochen களையும், பழங்களையும் எடுத்துக் கொண்டு ஒரு வழியாக எங்கள் குடும்பமும் முருகனின் குடும்பமும் கிளம்பினோம். அவர்களுடைய செல்போன் ஒன்றையும் எங்களுக்கு கொடுத்து விட்டு, GPS துணையுடன் முருகன் கார் முன்னே செல்ல, நாங்கள் அவர்களைத்  தொடர்ந்து சென்றோம். வழியில் காருக்கும் பெட்ரோல் போட்டுக் கொண்டு 10 மணிநேரப் பயணத்திற்குத்  தயார் ஆனோம். முருகன் ஜெர்மனியர்கள் ஸ்டைலில் வேகமாக வண்டி ஓட்ட, அவரைத்  தொடர்ந்து செல்வது கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. எங்கள் காரை முடிந்த வரை அழுத்திக் கொண்டு கியர் மாற்றி மாற்றி என் கணவரும் கஷ்டப்பட்டு ஒட்டிக் கொண்டே வந்தார்.

நாங்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பழங்கதைகளைப் பேசிக் கொண்டே போனோம். ஸ்விட்சர்லாந்தைப் பல திரைப்பாடல்களில் பார்த்திருந்தாலும் நேரில் பார்க்கப் போகிற அனுபவம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. நல்ல போக்குவரத்து நெரிசல் கூட. மழையும் தூர ஆரம்பித்தது. குழந்தைகளும் தூங்க ஆரம்பித்தார்கள். புரியாத பாஷையில் எழுதியிருந்த வழிகாட்டிகளை ஆங்கிலத்தில் தப்பும் தவறுமாக சொல்லிப் பார்த்துக் கொண்டேயும், அடிக்கடி எங்கள் முன்னே முருகனின் சிவப்பு நிறக் கார் போய்க் கொண்டிருக்கிறதா என்று ஒரு கண் அங்கே வைத்துக் கொண்டும் சென்று கொண்டிருந்தோம். ஓட்டினோம், ஓட்டினோம், ஜெர்மனியின் பார்டர் வரைக்கும். நடுவில் எங்கள் காரைப் பார்த்து ஒரு 'ஃப்ளாஷ்' வேறு. என்னவென்று, முருகன் & செல்வியிடம் கேட்டதற்கு, நீங்கள் வண்டியை வேகமாக ஒட்டி இருப்பீர்கள். அது உங்களையும் காரையும் படம் பிடித்திருக்கும் என்று கலக்கமூட்ட, இனிமேல், வெளிநாட்டுச் செலவுடன் ஸ்பீடிங் கட்டணமும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று சாந்திப்படுத்திக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
முதலில் ஆஸ்திரியா பார்டர் அருகே வண்டியை நிறுத்தி toll charge கட்டிய பிறகு அதன் வழியே ஸ்விட்சர்லாந்து சென்றோம், சென்றோம், சென்று கொண்டே இருந்தோம். நடுவில் ரெஸ்ட் ஏரியாவில் வண்டிகளை நிறுத்தி ரிலாக்ஸ் செய்து கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். ஆல்ப்ஸ் மலைத்தொடர் கண்ணில் பட ஆரம்பித்தவுடன் அப்பாடா என்றிருந்தது. ஆல்ப்ஸ் மலையின் பிரமாண்டம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவாறு இருந்தது. நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்த கூட்டம் அதிகமாக இருந்தது. ஸ்விட்சர்லாந்து பார்டரில் அங்கு தங்கியிருக்கும் நாளில் கார் pass போன்று ஒன்றை வாங்க வேண்டியிருந்தது. வாங்கிக் கொண்டு மீண்டும் கார் ஓட்டம். இப்போது ஸ்விட்சர்லாந்து நாட்டின் உள்ளே.
அங்கே கட்டிடங்கள் எல்லாம் வித்தியாசமாக இருந்தன. மரத்தினாலான பெரிய,பெரிய வீடுகள். அப்பார்ட்மெண்ட் போல பல குடியிருப்பு வசதிகள் கொண்ட பல மாடி வீடுகள். பெரிய பெரிய நகரங்களுக்குச்  செல்லும் வழிகாட்டிகள். நாங்கள் நண்பர் முருகனின் GPS சொன்னபடி போகவேண்டிய இடத்திற்கான வழியை எடுத்து நகரினுள் சென்றோம். மெல்ல பொழுது சாய ஆரம்பிக்கும் நேரம். பச்சைப்பசேல் என எங்கு பார்த்தாலும் புல்வெளிகள். பரந்து விரிந்த மலைகள். நடுநடுவே சலசலவென்ற சத்தத்துடன் நீரோடைகள். மெதுவாக, மலையேற ஆரம்பித்தோம். என் கணவர் இயற்கைச் சூழலில் countryside பக்கம் தங்கி இருக்க ஆசைப்பட்டதால் ஒரு அருமையான விடுமுறை விடுதியை முருகன் தேடிப் பிடித்திருந்தார்.

Road to our resort

Our lovely resort
 மெதுவாக சிறு நகரங்களிலிருந்து விடுப்பட்டு வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய மலைப்பாதையில் ஏற ஆரம்பித்தோம். பொதுவாக அங்கே ஏழு மணிக்குள் கடைகள் அடைக்கப்பட்டு விடுவதால் மனித நடமாட்டம் மிகவும் குறைவு. சின்ன சின்ன சந்துகள். எங்கும் மிகத் தெளிவான வழிகாட்டிகள் ஆங்கிலத்தில். எங்கே செல்கிறோம் என்ற திக்கு திசை தெரியாமல் GPS ஒன்றையே நம்பி எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. மலைமேல் ஏற,ஏற என் கணவருக்குப்  பதட்டம் ஆரம்பித்தது. முன்னே போகும் முருகனின் காரோ ஆட்டோமாடிக் கார். அதனால் எனகென்ன என்று லட்டு மாதிரி அவர் சொன்ன மாதிரி எல்லாம் போய்க் கொண்டிருந்தது. இவரோ கியரை மாற்றி மாற்றி கை வலிக்க ஓட்டுவதைப்  பார்த்தால் பாவமாகத்தான் இருந்தது. என்ன செய்ய முடியும் இப்போது. நாங்கள் எங்கள் விடுமுறை விடுதியின் ஓனரை முதலில் பார்த்து சாவி வாங்கிக் கொண்டு போக வேண்டும். இதற்குள் நன்கு இருட்டி விட்டது. மலைபாதையோ ஒரு கார் செல்லும் அளவில் தான் இருந்தது. மறுபக்கம் எட்டிப் பார்த்தால் குலை நடுங்கும் அளவுக்கு பள்ளம். மனம் எதைஎதையோ நினைக்க பயம் தொற்றிக் கொண்டது. ஏதோ தப்பு செய்து விட்டோமோ? பேசாமல் நகரத்திலேயே தங்கி இருக்கலாமோ என்று. முருகன் வேகமாக ஒரு இடத்தில் திரும்ப, சிறிதும் யோசிக்காமல், நாங்களும் திரும்ப, அங்கே ஒன்றும் இல்லை. அதற்கு மேல் போனால் பள்ளம் தான். பிரச்சினையே இப்போது தான். எங்கள் காரைப் பின்னாடி எடுப்பதற்குள் காவு தீர்ந்து விட்டது. ஒவ்வொரு முறையும், கார் நின்று புறப்படுவதற்குள் என் கணவருக்கு வேர்த்து விறுவிறுக்க ஆரம்பித்து விட்டது,அந்த மலையிலும்! அந்த கும்மிருட்டில் அங்கே ஒன்றும் இங்கே ஒன்றுமாக, மலையில் வீட்டு வெளிச்சங்கள், மலை முழுவதும் கிண்கிணி என்று மாட்டின் கழுத்தில் கட்டியிருக்கும் மணியின் ஓசைகள், அதன் எதிரொலிகள், எங்கள் வண்டி சத்தத்தைக் கேட்டு குரைத்த நாய்கள் என்று இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஆனால், இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டே GPS ஐ நம்பாமால், அந்த இரவு நேரத்தில் (மணி பத்தரை இருக்கும் என்று நினைக்கிறேன்) ஒரு கும்பலாக எங்கள் காரை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களிடம் நண்பர் முருகன் ஜெர்மனில் விலாசத்தை கேட்க, அவர்களும், இன்னும் கொஞ்சம் தூரம் போனால் வந்து விடும் என்று சொன்ன பின்னால் தான் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. ஆனால் இதைப் பற்றிய கவலையேதும்  இல்லமால் எனக்கென்ன மனக்கவலை, என் அப்பா, அம்மா தான் இருக்கிறார்களே என்று நிம்மதியாக தூங்கிக்  கொண்டிருந்தார்கள் குழந்தைகள்!!! அதற்குள் நான் நாளை முதல் வேலையாக நகரத்தில் ஒரு நல்ல ஹோட்டல் பார்த்து தங்கி விட வேண்டியது தான். இப்படி பயந்து பயந்து என்னால் தினமும் வர முடியாது என்று புலம்ப ஆரம்பித்து விட்டேன். ஒரு வழியாக, அந்த ஓனர் வீட்டைக் கண்டுபிடித்து விட்டோம், அதற்கு முன்பே அவர் வீட்டு நாய்  நாங்கள் வந்து விட்டதை கத்தி அவரும் வெளியே வந்து, சாவி கொடுத்து விட்டு, அவர் வண்டியை எடுத்துக் கொண்டு, நாங்கள் இருக்கப் போகும் இடத்தை காட்ட வந்தார்.
My husband with the resort owner & her sons

அவர் தன்னுடைய பெரிய ட்ரக்கில் முன்னே செல்ல, நல்ல தூரம் விட்டு எங்கள் காரும் பின்தொடர, ஒரு இருண்ட வீட்டின் முன்னால் வந்து நிறுத்தினார். அதெல்லாம் தனியார் சொத்துக்கள் என்பதினால் அவர்கள் போட்டுக் கொண்ட ரோடு. நடுவில் மலையிலிருந்து தண்ணீரின் ஓட்டம் வேறு. மேடும் பள்ளமுமாக காரின் டயர் போகும் பாதைகள். அதை விட்டு நடுவில் ஓட்டினால் வண்டி பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும். அப்படி மாட்டிக் கொண்டால், என்னை கூப்பிடுங்கள் நான் வந்து மேலே இழுத்து விடுகிறேன் என்று ஜஸ்ட் லைக் தட் சொன்ன பொழுது இன்னும் பயமாகி விட்டது. இருட்டில் தட்டுத் தடுமாறி வீட்டின் முன் காரை நிறுத்தி குழந்தைகளையும் எழுப்பி விட்டு, வெளியே வரும் பொழுது எங்கள் முகம் பேயறைந்தது போல் இருந்தது. ஒரே கும்மிருட்டு. ஆனால், மலைக்காற்றும், மாடுகளின் மணியோசையும், பச்சைப்புல் வாசனையும், கோமிய மணமும் கலந்து எங்கோ ஒரு உலகத்துக்கு கொண்டு சென்றது. இந்த மலைக்கு மேல் ஒரு மலையில் ஒரு பெரிய விடுதி ஒன்றும் இருந்தது.

வீடு திறந்து இருந்தது. உள்ளே நுழைந்தால், சமையல் அறை, உட்கார்ந்து சாப்பிட வசதியாக நீளமான மேஜை, நாற்காலிகள், அதையடுத்து டிவி ஒன்று வைத்து பார்க்க வசதியாக சாய்வு நாற்காலிகளையும், படிப்பதற்கு வசதியாக சின்ன மேஜை, நாற்காலிகளும் இருந்தன. வீடு சில்லென்றி ருந்தது. சமையல் அறையில் சமைக்க அடுப்பும், வீட்டை உஷ்ணப்படுத்த ஒரு அடுப்பும், பாத்திரங்களும், அழகாக அடுக்கி வைக்கப்படிருந்தன. கீழேயே குளிக்க பாத்ரூமும் இருந்தது. முதல் மாடியில் ஒரு பெரிய படுக்கை அறையும், அதற்கு மேல் மாடியில் ஏழு பேர் படுக்க வசதியாக படுக்கைகளும் போடப்பட்டு மிகவும் வசதியாக இருந்தது. வீட்டின் முன் அறையில் விறகு வெட்ட வசதியாக கோடாலியும், விறகுகளும் இருந்தது. அவரும் வெட்டி வைத்திருந்த விறகுகளை அடுப்பில் போட, சிறிது நேரத்திலேயே வீடு கண,கணவென்றாகியது.
Nitin experimenting wood cutting


நீண்ட நேரம் தலையை அசைத்து அசைத்து முருகன், செல்வியுடன் ஜெர்மனில் ஆய், ஆய் என்று ஒவ்வொரு வாக்கியத்தையும் நீட்டி முழக்கி முடித்து பேசியதை சிறு வயதில் புரியாத ஆங்கிலப் படத்தை பார்த்த மாதிரி நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். இந்தியர்களா நீங்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர் தன்னுடைய வீட்டை இருபகுதிகளாக பிரித்துக் கட்டி விடுமுறையில் வருபவர்களுக்கு வாடகைக்கு விட்டுக் கொண்டிருந்தார். ஒரு பகுதி நன்கு பெரியதாகவும், இன்னொரு பகுதி ஒரு குடும்பம் தங்கும் வகையிலும் அழகாக கட்டியிருந்தார். அவர் அப்பாவின் உதவியுடன் தானே இந்த வீட்டை கட்டியதாக சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. இந்த மலையில் ஒரு பெரிய வீட்டை தனி ஆளாக கட்ட வேண்டுமென்றால் மிகுந்த சிரமமாக இருந்திருக்கும். கில்லாடி லேடி தான் என்று நினைத்துக் கொண்டோம். இதற்குப் பக்கத்தில் அவருடைய மாடுகளைக்  கட்டிப் போட்டிருந்தார். தான் நன்றாக மசாஜ் செய்பவர் என்றும் மணிக்கு 100 euros என்றும் மேலும் மேலும் எங்களைப்  பிரமிக்க வைத்துக் கொண்டே இருந்தார்! அவரிடம் ஆட்டுக்கறி, பால், பாலாடைக்கட்டி எல்லாம் விலைக்கு கிடைக்கும் என்று சொல்லி விட்டு போகும் பொழுது மணி 11.30 நெருங்கிக் கொண்டிருந்தது. அவரை அனுப்பி விட்டு எங்கள் பெட்டிகளை காரிலிருந்து இறக்கி வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்து விட்டு அடுத்த நாள் காலையில் சீக்கிரம் எழுந்து வெளியே கிளம்ப வேண்டும் என்று ஓடிப் போய் கட்டிலில் தஞ்சம் புகுந்தோம்.


Morning View

Saturday, December 1, 2018

திரும்பிப் பார்க்கிறேன்(2007)



குழந்தைகள் இருவருடனும் தம்பியுடனும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்ஸில் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் இருந்த கம்பார்ட்மெண்டில் ஏறிய பலரும் வீட்டிலேயே உணவை முடித்து விட்டு நேராக தூக்கம் போட வந்தவர்கள் போல இருந்தார்கள். ஒரு சிலர் ரயிலின் ஓட்டத்தில் சாப்பிட காத்துக் கொண்டிருந்தார்கள். கண்கள் சிவக்க கரை வேட்டி கட்டியவர் தள்ளாடித் தள்ளாடி அவருடைய இருக்கையில் அமர்ந்து கொண்டார். ஆஹா! நமக்குன்னு எப்பேர்ப்பட்ட ஆட்கள் வந்து சேருகிறார்கள்? வாந்தி கீந்தி எடுத்துத் தொலையாமல் இருக்கணுமே என்ற கவலையும் சேர்ந்து விட்டது. ஆண் பயணிகள் பலரும் ஓரிரு பெண்களுமாய் நிரம்பி விட்டிருந்தது எங்கள் கம்பார்ட்மெண்ட். பாதாம் பால், குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் எடுத்துக் கொண்டு என்னைச் சந்திக்க வந்திருந்த என்னிடம் படித்த மாணவி பேசி விட்டுக் கிளம்ப, தம்பி வாங்கி வந்திருந்த இரவு உணவை குழந்தைகளுக்கு ஊட்டி விட்டு நானும் அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு அமர, உறுமலுடன் வண்டியும் புறப்பட...அப்பாடா என்றிருந்தது.

எதிரில் இருந்தவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த ஆரோக்கிய உணவைச் சாப்பிட, சுற்றி இருந்த அனைவரும் ஓசி பேப்பர் படிப்பது போல் ஆர்வத்துடன் என்ன உணவோ என்று பார்த்தும் பார்க்காத மாதிரியும் சிறிது நேரத்தில் தூங்க ஆயத்தமானார்கள். மனிதர்களுக்குப் பொறுமை கொஞ்சம் குறைந்து விட்டதோ? பாவம்! நிம்மதியாக சாப்பிட முடியாமல் 'லபக் லபக்'கென்று அவதி அவதியாக முழுங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் சடாரென விளக்கை அணைத்து விட்டுத் தூங்கவும் மற்றவர்களும் தூங்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வதென சிலருக்குப் பாடம் எடுக்க வேண்டும் போல! சுயநலமே ஓங்கி இருக்கிறது!

தம்பி அவன் இருக்கைக்குச் செல்ல, மகளும் மேலேறி அவள் படுக்கையில் தூங்க, மடியில் சுப்பிரமணியை படுக்க வைத்துக் கொண்டே ஓடும் ரயிலின் எதிர்ப்புறத்தில் வேகமாக மறையும் தெரு விளக்குகளையும் , ரயில் பாதையோர வீடுகளையும், வானில் நட்சத்திரங்களையும் கண்ணாடி மூடிய ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஜன்னல் கண்ணாடிய திறக்காத. செயின் பறிப்பு நடக்குது. யார் பிஸ்கட் கொடுத்தாலும் குழந்தைங்க வாங்கிச் சாப்பிடாம பார்த்துக்கோ.

அப்பா அப்பா! எனக்குத் தெரியாதா?

உனக்கு ஒன்னும் தெரியாது. ஊர் ரொம்ப கெட்டுப் போச்சு. ஜாக்கிரதையா வந்து சேருங்க! புறப்படும் முன் அப்பா ஃபோனில் சொன்னது நினைவுக்கு வந்தது. எத்தனை வயதானாலும் எனக்கு குழந்தைகள் இருந்தாலும் அப்பாவிற்கு இன்னும் பொறுப்பில்லாத செல்ல மகளாகவே இருக்கிறேன் போல! அதற்காகத்தான் கிளம்பி வந்து விடுவார். இந்த முறை வேண்டாம் என்றதால் வரவில்லை. ஹ்ம்ம்ம்... இனி எப்பொழுதும் வரப்போவதுமில்லை.

திடீரென ஒரு சலசலப்பு. டிக்கெட் டிக்கெட் என்று வெள்ளைச்சட்டை, கருப்பு கோட், கையில் பேப்பர், பேனா சகிதம் கண்ணாடி மாட்டிக் கொண்டு சால்ட் பெப்பர் 'தல' தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பிக் கொண்டிருந்தார். இந்த ரயில் பயணத்தில் வெள்ளைச் சட்டை அவசியமா? கருப்பு கோட் எதற்கு? பாவம் அவர்! நம்மூர் சீதோஷணத்திற்கு ஏற்ற உடைகளை அணிய ஏன் மறந்து போனோம்? அடிக்கிற வெயிலுக்கும் புழுக்கத்துக்கும் நீண்ட கைச்சட்டை அவஸ்தைகள் வேறு! வெளி வரத்தெரியாத அடிமை மனது பழகி விட்டது! ஹ்ம்ம்ம்...
பாஸ்போர்ட் சரி பார்த்து அவர் வேலையைத் தொடர அடுத்த கம்பார்ட்மெண்ட் சென்று விட்டார்.

தூங்குடா! சிறிது நேரம் தூங்குவது போல் பாவலா செய்து கொண்டிருந்தான் சுப்பிரமணி. ரயிலின் குலுக்கலில் என்னைத் தவிர அனைவருமே தூங்கியிருந்தார்கள். திடீரென மேல் பெர்த்திலிருந்து கீழிறங்கிய மகள், அம்மா! தூக்கமே வரலை.

வா. பக்கத்துல வந்து படு என்று அவளும் மடியில் தலை வைத்துப் படுக்க, ரயில் சந்திப்புகளை நெருங்கும் வேளையில் மெதுவாகச் சென்று 'கிரீச்' என தண்டவாளத்தை உரசியபடி நின்று பயணிகளை ஏற்றுக் கொள்வதும், சில சந்திப்புகளில் ஹாரனை ஒலித்தபடி கடக்க, அங்கு பச்சை விளக்கு, கொடி காட்டி காட்டி ஒருவர் டாட்டா சொல்வதும், 'தடதட'வென என்ஜின் சத்தம் மாறுவதுமாய் இரவு உறங்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

அம்மா! தூங்க முடியல. எப்படி குறட்டை விடுறாங்க பாரு. கண்கள் உறங்க ஏங்கினாலும் தூங்க முடியா அவஸ்தையுடன் காதைப் பொத்திக் கொண்டு மகள்!

இந்த ரயில் சத்தத்தையும் மீறி நிஜமாகவே பல பல டெசிபல்களில் குறட்டை! அப்பொழுது தான் நானும் கவனித்தேன்! கடவுளே! தன்னை மறந்து தூங்கும் பொழுது மக்களை வேடிக்கை பார்க்க கூடாதோ? அதிபயங்கரமாக இருக்கிறது! வாயைத் திறந்து போட்டு குறட்டையோ குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் தாத்தா! அருகில் கழுத்தை தொங்கப்போட்டுக் கொண்டு தூங்குபவர்! எனக்கு வர்ற கோவத்துக்கு இவங்க மூக்கில க்ளிப் மாட்டி விடணும் போல இருக்கும்மா!

கோவப்படாத. வா வா! எல்லாரும் எப்படி தூங்குறாங்க குறட்டை விடறாங்கன்னு வேடிக்கை பார்ப்போம். ஒருவர் உச்சாஸ்தாயில் குறட்டை விட, இன்னொருவர் சரிகம பாட, அடிக்கடி உதட்டை நனைத்துக் கொண்டே மற்றொருவர் என்று தூங்காமல் பேசி சிரித்துக் கொண்டே வந்தோம். போரடிக்காமல் இருக்க UNO கார்டு கேம் விளையாடினோம். சிறிது நேரத்தில் பயணக் களைப்பில் மகள் தூங்கி விட்டாள். இருள் விலகும் அழகை ரசித்துக் கொண்டேயிருக்கையில் சுப்பிரமணி ரெஸ்ட்ரூம் போக வேண்டும் என்று எழுந்து கொண்டான். இந்த நேரத்திலா? இதுவரை அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்த்ததில்லை. கொடுமைடா! சரி வா! என்று ரயிலுடன் சேர்ந்து தள்ளாடி தள்ளாடி எழவும், தூங்கிக் கொண்டிருந்த தம்பியும் என்னாச்சு என்றவுடன், இவனுக்கு பாத்ரூம் போகணுமாம். சுத்தமா இருக்குமா?

அதற்குள் தம்பி செய்தித்தாளை எடுத்துக் கொண்டு டாய்லெட் சீட்டில் போட்டு சுப்பிரமணியை உட்கார வைக்க, ஹை! (எவர்)சில்வர் டாய்லெட்! அதிகாலை வேளை! சுத்தமாக இருந்தது! நான் வாழ்நாள்ல எட்டிக் கூட பார்த்ததில்ல. எல்லாம் உன்னால. சீக்கிரம் வேலைய முடிடா!

அம்மா, நான் அப்பா கூட இப்பவே பேசணும். அடம் பிடிக்க, தம்பியும் ஃபோனை கொடுக்க...

அப்பா! நான் எங்கே இருக்கேன் தெரியுமா!?

டேய்! ஃபோன் பத்திரம்டா !

ஓடும் ரயிலில் டாய்லெட் சீட்டில் உட்கார்ந்து கொண்டு எனக்கு இந்த டாய்லெட் பிடிச்சிருக்குப்பா! கீழ தண்டவாளம், மண் தரையெல்லாம் தெரியுது. நீங்களும் வந்திருந்துக்கலாம். எப்படியாவது லீவு போட்டுட்டு வாங்க. நான் வேணா உங்க மேனேஜர்ட்ட பேசவா? பெரிய மனிதனாட்டாம் பேசிக் கொண்டிருந்தான் ஆறு வயது சுப்பிரமணி.

கடைசியில் எழுந்து வந்து விட்டான். என்னடா?

அவ்வளவு தான்! ஒண்ணுமில்ல.

இதுக்காடா இவ்வளவு ஸீன் போட்ட?

பாவம் தம்பி. முதல் நாள் இரவு எங்களை அழைத்துச் செல்ல விமான நிலையத்தில் காத்திருந்ததில் சரியான தூக்கம் இல்லை. இப்பொழுது இவன் செய்த கலாட்டாவில்... நீ போய் தூங்கு. இனி இவன் தூங்க மாட்டான். நான் பார்த்துக்கிறேன்.

அடுத்த ஸ்டேஷன்ல காஃபி வாங்கிக் கொடுத்துட்டு தூங்கப் போறேன்.

'காஃபி காஃபி' குரலில் சிலர் புரண்டு படுக்க, சூடான காஃபி! அந்த காலை நேரத்திற்கு இதமாக இருந்தது. விலை ஏற ஏற காபியின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. ரயில் நகர, தம்பி அவனிடத்திற்குத் திரும்ப,

மகளும் எழுந்து வர, நாங்கள் மூவர் மட்டும் கண்ணாடியை மேலே தூக்கி விட்டு ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தோம். ஆரவாரமில்லாத இரவு மனதிற்கு தரும் அமைதி அங்கே மெல்ல மெல்ல விடைபெற்று ஆர்ப்பாட்ட பகல் பொழுதிற்குத் தயாராக, சூரியனும் வான் உலா வர... வறண்ட காவிரியைக் கடந்து, கொடை ரோடு, திண்டுக்கல், சோழவந்தான் வயல்வெளிகளிலும் மலைகளிலும் மனம் பறக்க... மதுரையை நெருங்க நெருங்க... தாத்தா, பாட்டி, பெரியம்மா, சித்தி என்று எல்லோரையும் காணும் ஆவலுடன் குழந்தைகள் காத்திருக்க...

மஞ்சள் வண்ணத்தில் 'மதுரை சந்திப்பு' பதாகை தரும் உணர்வு அலாதியானது. தாய் மடியில் படுத்துறங்கும் நிம்மதியைத் தரவல்லது. கோவில்கள், என் சிறுவயதில் பாட்டி, பெரியம்மாவுடன் சுற்றிய இடங்கள், உறவுகள், நான் பிறந்து வளர்ந்த ஊர்... பல பல உணர்வுகளுடன் அலைக்கழித்து பிறந்த மண்ணில் கால்வைக்க, எங்களை எதிர்நோக்கி காத்திருந்த அனைவர் முகத்திலும் அதே மகிழ்ச்சி!

இனி நானும் குழந்தையாகி என் தாயின் அரவணைப்பில் ...

Wednesday, November 21, 2018

தேங்க்ஸ்கிவிங் டே


நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை அமெரிக்காவில் 'தேங்க்ஸ்கிவிங் டே'. விடுமுறை நாள்.

 கொலம்பஸ் இந்த மண்ணில் கால் வைத்த நாள் முதல் வந்தேறி வெள்ளையர்களின் படைபலம் மற்றும் சூழ்ச்சி வேலைகளின் முன்னால்  தாக்குப்பிடிக்க முடியாமல் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள், கொஞ்சம் கொஞ்சமாய் தங்களுடைய நிலம், உரிமை, உடமை, மரபு என எல்லாம் இழந்து, இன்று தங்களுடைய சொந்த மண்ணில் சிறுபான்மையினராக அகதிகளைப் போல வாழும் அவலச்சூழலில் இருக்கின்றனர். நிதர்சனம் இப்படியிருக்க, தங்களை வரவேற்று, இருக்க இடம் கொடுத்து, உணவும் கொடுத்ததற்காக வெள்ளையர்கள் செவ்விந்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சம்பிரதாய நாளாகத்தான் இந்த "தேங்ஸ்கிவிங் டே” துவங்கியது. இன்றைக்கு அந்த சம்பிரதாயம் கூட மறக்கப்பட்டு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக்கி விட்டார்கள்.

வேலை,கல்வி என தொடங்கி பல்வேறு காரணங்களினால் நாடெங்கும் சிதறிக் கிடக்கும் குடும்பத்தினர் இந்த நாளில் ஒன்று சேர்ந்து விருந்தும், கொண்டாட்டமுமாய் கழிக்கும் நாளாக மாறிவிட்டிருக்கிறது. வான்கோழி இறைச்சியும், பூசணி, உருளைக்கிழங்கில் செய்த இனிப்புகள், சோள ரொட்டியும் மதுபானமும் என உணவு மேசைகளில் நிரம்பிவழிவது மட்டும் மாறவில்லை. வான்கோழியின் உருவமும், எடையும் வருடாவருடம் அச்சமூட்டும் அளவிற்கு பெரிதாகிக் கொண்டிருப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

இந்நாளுக்காக சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் மக்கள் கூட்டத்தால் சாலைகள் நிரம்பி வழியும். அலங்கார விளக்குகள் கடைகளையும் வீடுகளையும் அலங்கரிக்கும். நுகர்வு கலாச்சாரத்தின் பிடியில் சிக்கிய இன்னொரு பண்டிகை இந்த “தேங்ஸ் கிவிங் டே”. தள்ளுபடி விற்பனைகள், சலுகைகள் என அடுத்த மாத கிறிஸ்துமஸ் கொண்டாட்ட உற்சாகமும் இந்த காலகட்டத்திலிருந்தே எல்லோரையும் தொற்றிக் கொள்ளும். இந்த வாரத்தில் தான் அதிகளவு விற்பனைகளும் நடக்கும். தள்ளுபடி என்கிற பெயரில் மக்களை வசீகரிக்க, அவர்களும் ஏதோ காணாததை கண்டவர்களைப் போல கடைகடையாக ஏறி தேவையானதுடன் தேவையற்றதையும் அள்ளிக் கொண்டு வருவார்கள்!

எது எப்படி இருந்தாலும் வருடம் முழுவதும் எதையாவது ஒன்றை, ஏதாவது ஒன்றிற்காக துரத்திக் கொண்டிருக்கும் இயந்திர வாழ்க்கையின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்கவும், இளைப்பாறவும் இது போல கொண்டாட்டங்கள் அவசியமாகிறது. குடும்பம், குழந்தைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் என நமக்குப்  பிரியமானவர்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்வதன் பலனை யாரும் தவறவிடக்கூடாத ஒன்று.

எனக்கு மிகவும் பிடித்த கொண்டாட்ட நாள் இது.

கொண்டாட்ட மனநிலையைத் தரும் எந்நாளும் எனக்குத் திருநாளே!

Happy Thanksgiving!


Wednesday, October 31, 2018

இனிப்பு எடு கொண்டாடு

முதன் முதலில் 'ஹாலோவீன் டே' பற்றி கேள்விப்பட்டதெல்லாம் வீடு வீடாகச் சென்று ட்ரிக் ஆர் ட்ரீட் என்று கேட்க வேண்டும். ட்ரீட் கொடுப்பவர்கள் இனிப்பை கொடுப்பார்கள். ட்ரிக் என்றால் ஏதாவது செய்ய வேண்டுமாம். இதுவரை யாரும் ட்ரிக் செய்து பார்த்ததில்லை. கேட்டதுமில்லை. 

முதல் ஹாலோவீன் டே கனடாவில். மகளுடன் ஒரு பையை எடுத்துக் கொண்டு தெருக்களைச் சுற்றி வலம் வந்ததில் சாக்லேட், மிட்டாய்களுடன் பையும் நிரம்பி வழிய அவளுக்கோ ஒரே குஷி. அதுவும் எல்லாம் தனக்கே எனும் பொழுது கேட்கவா வேண்டும்? இன்னும் கொஞ்ச தூரம், இன்னும் கொஞ்ச வீடுகள், இன்னொரு பை வேண்டுமானால் எடுத்துக் கொண்டு வருவோமோ? ப்ளீஸ்ம்மா. இதுவே போதும். வீட்டுக்குப் போகலாம். நேரமாகிறது. வேண்டா வெறுப்பாக வீட்டுக்குள் வந்தவள் பையைக் கொட்டி அதிலிருந்த இனிப்புகளை பல நாட்களுக்கு ஆனந்தமாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்! அந்த வயதில் அதுவே பேரானந்தமாக இருந்திருக்க வேண்டும்!

ஆரம்பப்பள்ளி வயது வரை மகளுடன் நானும் கூடவே சென்று வருவது நடுநிலைப்பள்ளி வந்தவுடன் நின்று விட்டது. பின் தோழிகளுடன் கூட்டாக ஏதாவது ஒரு டிஸ்னி கதாபாத்திரம் இல்லையென்றால் பிடித்த கார்ட்டூன் பாத்திரமாக உடையணிந்து சென்று அந்த நாளை குஷியாக இரவு வரை கொண்டாடி வீட்டுப்பாடத்தையும் முடித்து விட்டு களைத்துப் போய் திரும்புவாள். பல அமெரிக்க நண்பர்கள் வீட்டில் ஸ்பெஷல் பார்ட்டி எல்லாம் வைத்து குழந்தைகளுடன் பெரியவர்களும் வீடுகளை அலங்கரித்து கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

இப்பொழுது மகனும் அவன் நண்பர்களுடன் இரவு வரை சுற்றித் திரிந்து ஒரு பெரிய பை நிறைய மிட்டாய்களுடன் வந்து தனக்குப் பிடித்த இனிப்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை பல மாதங்களுக்கு வைத்துக் வேடிக்கை பார்த்து ஒரு நாள் அலுத்துப் போய் அதை யாருக்காவது கொடுத்து விடுகிறேன். பெண் குழந்தைகளைப் போல இந்த நாளுக்காக பிரத்தியேகமாக ஆடைகளைத் தேடி அலைவதில்லை சுப்பிரமணியும் அவன் நண்பர்களும். சோம்பேறிகள்! அவர்களுடைய குறிக்கோள் அதிகப்படியான மிட்டாய்கள் மட்டுமே! ஜாலி பார்ட்டிகள்!

ஹாலோவீன் டேக்கு அடுத்த நாள் ஸ்கூல் லீவு விடணும்மா. டேய் நீ மொதல்ல ஹோம்ஒர்க்க முடி. அப்புறம் ட்ரிக் ஆர் ட்ரீட் போகலாம் மொமெண்ட்களும் உண்டு.அவன் வகுப்பு பெண்கள் வேண்டுமென்றே லேட்டாக வந்து இவனை வம்புக்கிழுக்கவும், சிறு குழந்தைகள் அழகழகு உடைகளில் மனதை கொள்ளை கொள்ளவும் தவறுவதில்லை.

வழக்கம் போல் மிட்டாய் நிறுவனங்களுக்கு குஷியான நாள். பார்களிலும் நல்ல கூட்டமிருக்கும்.

மொத்தத்தில் ஒரு இனிமையான மாலை.

அமெரிக்க கொண்டாட்டங்களின் பின்னணியில் எப்பொழுதுமே பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு இருக்கும். இந்த நாளும் அத்தகையது தான். குழந்தைகளின் மகிழ்ச்சியில் யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்நாளை கொண்டாடுவதில் அர்த்தமில்லை என்று ஒதுங்கிக்கொள்பவர்களும் உண்டு.

கொண்டாட்ட மனநிலையைத் தரும் எந்நாளும் எனக்கு உவப்பானதே!

தட் இனிப்பு எடு கொண்டாடு மொமெண்ட் 🙂


Happy Halloween!

🎃👻👹

Saturday, October 27, 2018

வரும் முன் காப்போம்...

அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தை “மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு” மாதமாக அனுசரிக்கின்றனர்.

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள், நோயிலிருந்து மீளும் வழிவகைகள் அது பற்றிய கலந்துரையாடல்கள், கருத்தரங்கங்கள் என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மற்றும் தன்னார்வ நிறுவனக்கள் நாடு முழுவதும் இந்த மாதத்தில் நடத்ததுகின்றனர். 

மார்பக திசுக்கள் பால் சுரப்பிகள், பால் குழாய்கள் கொழுப்பு மற்றும் அடர் திசுக்களால் ஆனது. அடர்ந்த மார்பக திசுக்களை கொண்ட பெண்களுக்கு கொழுப்பு திசுக்களை விட அடர் திசுக்கள் அதிகமாக இருப்பதும் அதனை மேமோகிராமில் கண்டறிந்தவுடன் அல்ட்ராசவுண்ட், MRI பரிசோதனைகளில் புற்று நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் நோயின் தீவிரத்திலிருந்து காப்பாற்ற உதவும். வயதான பெண்களுக்கு அதுவும் மாதவிடாயின் இறுதிக்காலத்தை நெருங்கும் 66 சதவிகித பெண்களுக்கும் மாதவிடாய் முற்றிலும் நின்ற 25 சதவிகித பெண்களுக்கும் இப்பிரச்னை அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள். 

சமீபத்திய மாத இதழ் ஒன்றில் படித்தறிந்த தகவல் இது -எட்டுப் பெண்களில் ஒருவருக்கு அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய். அமெரிக்காவில் வருடாந்திர உடற்பரிசோதனையின் போது பெண்களுக்கு அதுவும் நாற்பது வயது மேற்பட்டோருக்கு மேமோகிராம் பரிசோதனை கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது. 

ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், தினமும் உடற்பயிற்சி, மாதாந்திர மார்பக பரிசோதனை, வருடாந்திர மேமோகிராம் பரிசோதனை, புற்று நோய் வரலாறு ஏதும் இல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நான்சி என்ற பெண்மணியின் சமீபத்திய மேமோகிராம் பரிசோதனையில் மார்பக புற்று நோயின் கடைசி கட்டத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளார். தனக்கு எப்படி வந்தது என்று திகைத்தவருக்கு கிடைத்த தகவல் மேமோகிராம் பரிசோதனையில் இனம் கண்டு கொள்ள முடியாத கான்சர் திசுக்களுக்கு அவருடைய அடர் மார்பக திசுக்களே புற்று நோய்க்கான காரணம் என்றும் கூறியுள்ளார்கள். 

இந்தியச் சூழலில் மார்பகப்புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு எந்த அளவில் இருக்கிறது என்பது தெரியவில்லை. அதிக பொருட்செலவுகள் கொண்ட இம்மருத்துவ பரிசோதனைகள் எல்லோருக்கும் சாத்தியமில்லை. இதுபோல பெருகி வரும் புது நோய்களுக்காகவாது மருத்துவ காப்பீடுகள் என்பது அவசியமாகிறது. 

என்னுடைய நண்பர்கள் பலரும் மார்பக புற்று நோயிலிருந்து மீண்டு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். நோய் வருவதற்குப் பல காரணங்கள் இருப்பினும் சிலருக்கு நோயின் தீவிரம் மற்றும் பாதிப்பு அதிகமாகமாய் இருந்தால் உயிரிழப்பு தவிர்க்க முடியாதது என்பதால் பெண்கள் ஆரம்பநிலை பரிசோதனைகளின் மூலம் தங்கள் உடல்நிலையை கண்காணித்துக் கொள்வதே, நமக்கும் நம் குடும்பத்திற்கும் நல்லது. 

வரும் முன் காப்போம்!

சோஷியல் மீடியா குழப்பங்கள்

படிக்கிறேன்னு சொல்லிட்டு கதவ மூடிட்டு கேம் விளையாடிட்டு இருந்தவன் திடீர்னு வேகமா வெளிய வந்தான். அடுப்ப எட்டி பார்க்கறான். Oven திறந்து பார்க்கறான். நாலா பக்கமும் ஒடறான். டபடபன்னு அலமாரிகள திறந்து பார்க்கறான். மூடியிருந்த சம்படங்கள்ல தேடறான்.

என்னடா தேடற?

சொல்லிடும்மா. எங்க ஒளிச்சு வச்சிருக்கே? எனக்குத் தெரியும்.

என்னத்த ஒளிச்சு வச்சிருக்கேன்?

நீ எங்கேயோ மறைச்சு வச்சிருக்க. ப்ளீஸ்ம்மா...

டேய். நான் எங்கடா பண்ணினேன்.

நான் பார்த்தேன்.

என்னத்த பார்த்த?

நீ இன்ஸ்டகிராம்ல போட்ட படத்தை பார்த்துட்டேன். ப்ளீஸ் கொடும்மா.

டேய் அது இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படம்டா.

வாட்??? திஸ் இஸ் நாட் ஃபேர்னு ஏமாற்றத்தோட போனவன் அங்க போய் இப்படி கமெண்ட் பண்ணி வச்சிருக்கு

Don’t be fooled, there were no scones made as of September 9th, 2018.

இந்த மார்க்கு தம்பி தான் நாம போட்ட போஸ்டுகளையும், படங்களையும் நமக்கே போட்டு ஞாகப்படுத்தறானே! அப்படி வந்ததுல ஒரு படத்த போட்டு யம் யம் யம் யம்மின்னு இன்ஸ்டால போட்டுட்டு என் வேலைய பார்த்தது குத்தமாயா?

நிம்மதியா ஒரு போஸ்ட் போட முடியுதா?

World Mental Health Day

இன்று பலருக்கும் மன அழுத்தம் பல்வேறு காரணங்களால் அதிகரித்து இருக்கிறது. கணவரால் 46% பெண்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாகவும் , 75% குடும்ப பொறுப்புகளைப் பெண்கள் கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் இதைத்தவிர பணிச்சுமை , நண்பர்களின் போர்வையில் வருபவர்கள் தரும் துன்பங்கள் தங்களைத் துயரப்படுத்துகிறதென ஆய்வில் கூறியிருப்பதாக வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். முடிவில், மனச்சோர்வுடன் இருப்பது குற்றமல்ல. அக்குறையை போக்கிக் கொள்ள தகுந்த மருத்துவ ஆலோசனையும்,மருந்துகளும், உடனிருப்பவர்களின் அன்பும், கரிசனமும் இருந்தால் போதும். தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அது உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளோரையும் மிகவும் பாதிக்கும். மனவருத்தத்துடன் இருப்பவர்களுக்காக பல ஹெல்ப்லைன்களை அணுகி ஆலோசிக்கவும் என்று கூறி பேச்சை முடித்தார்கள்.

நேற்று வேலை முடிந்து செல்லும் ஒரு பெண் புலம்பிக் கொண்டே இருந்தாள். பெண்களின் கையில் அதிகாரம் கிடைத்தால் எப்படியெல்லாம் ஆடுகிறார்கள். இதற்கு ஆண்களே பரவாயில்லை. பெண் பாஸ் கிடைத்தவர்கள் நரகத்தைத் தான் அனுபவிக்க வேண்டும் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே, சாரி! இன்றைய நாள் எனக்கு நன்றாக இல்லை. அலுவலகத்தில் ஒரே பிரச்சனை. வேலை செய்யவே பிடிக்கவில்லை. நாளை மீண்டும் அவளைப் பார்க்க வேண்டுமே என்று நினைத்தாலே படபடப்பாக இருக்கிறது என்றார். பாவமே! என்றிருந்தது எனக்கு. சில பதவி அதிகாரம் பிடித்த பெண்களை அறிவேன். இப்படியாகத் தான் பலருக்கும் மன உளைச்சல் தொடங்குகிறது. சிறு சிறு மனக்குறைகள் பேசித் தீர்க்க முடியாவிடில் பெரும் துயரத்திற்குத் தள்ளி விடும்.

வீட்டில் போதிய ஆதரவும் புரிந்து கொள்ளலும் கிடைக்காத பள்ளிகளில் தடுமாறும் குழந்தைகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பள்ளிகளும் பெற்றோர்களும் அதிக கவனம் எடுத்து வழிநடத்திச் செல்ல வேண்டிய பருவம் இது. இங்கு பள்ளிகளில் கூட தகுந்த மன ஆலோசகர்கள் மாணவர்களை கண்காணித்து வழிநடத்துகிறார்கள். இருந்தும் பல வேதனை மிகுந்த சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது. பள்ளியிலிருந்து ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் குழந்தைகளுக்குத் தியானம், யோகா போன்றவற்றை அறிமுகப்படுத்தி மனதை ஒருமைப்படுத்தும் வழிகளைப் பள்ளிகளில் ஆரம்பிக்க வேண்டும். சில பள்ளிகளில் வெற்றிகரமாக செய்தும் விட்டார்கள் என்று கூறினார்.

இன்றைய அவசர உலகில் நமக்கான நேரத்தை ஒதுக்கி நம்மை பல வழிகளில் மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. நமக்குள் இருக்கும் மனநோயை கண்டறிவோம். துன்புறும் நம் நண்பர்களுக்குத் தோள் கொடுத்து
உதவுவோம்.

பாடறியேன் படிப்பறியேன்...

அப்பாவின் நெருங்கிய நண்பர் கனிந்த முகமும், நெற்றியில் நாமமும் உயரத்திலும் குணத்திலும் வளர்ந்த மனிதர். என்னடா கொழந்தே எப்படியிருக்க ? இந்தா என்று கை நிறைய இனிப்பு பைகளுடன் வீட்டிற்கு வருவார். பாட்டியுடனும் அன்பாக பேசி விட்டுச் செல்வார். எங்களுடைய திருப்பதி பயணங்கள் பெரும்பாலும் அவர் குடும்பத்துடன் தான். முதன் முதலாக அவர் வீட்டிற்குச் சென்றிருந்த பொழுது பாடும்மா என்று மாமி சொல்ல... கணீரென்று அந்த அக்கா பாடிய பாடல்...

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்துப் பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம் அம்மா... பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ...

இனிமையாகப் பாடியதில் லயித்துப் போய் திறந்த வாயை மூட மறந்து கேட்டுக் கொண்டிருந்தோம். அந்த வயதில் தமிழ் பேசுபவர்களிடம் அதிகம் பழகியதில்லை. அவசியமும் இருந்ததில்லை. வேற்று மொழியில் பேசும் தயக்கம் , அவர்களைப் போல் சரளமாகப் பேச முடியவில்லையே என்று பேசாமல் சிரித்தே சமாளித்த காலம்! அந்தக் குரலும் பாட்டும்... அசை போட்டுக் கொண்டே வீட்டிற்குத் திரும்பும் வழியில் அம்மாவிடம் எப்படிம்மா இவ்வளவு நல்லா பாடுறாங்க? அவர்கள் சிறுவயதிலிருந்தே இசையைக் கற்றுக் கொள்கிறார்கள் என்றார். அப்ப நீ ஏன் என்னைய மியூசிக் கிளாஸ்ல போடல? நம்ம பழக்கம் கிடையாது 😞அத்தனைக்கும் அம்மாவும் கேள்வியறிவில் கொஞ்சம் பாடுவார். முறையான பயிற்சி கிடைத்திருந்தால் நன்றாக பாடியிருப்பார்! ஆனாலும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி நானும் பாட்டுப் புத்தகங்களை வாங்கி வரிகளை மனனம் செய்து பாடுவதாக நினைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டு தானிருந்தேன்!

மேல்நிலைப்பள்ளியில் ம்யூசிக் கிளாஸ் என்று ஒன்று இருந்தது. பரவாயில்லையே நமக்கும் ஒரு சான்ஸ் கிடைச்சிடுச்சு என்று ஆர்வத்துடன் வகுப்புக்குச் சென்றேன். சுருட்டை முடி, வைரத்தோடு, முத்து மூக்குத்தி, அன்றலர்ந்த பூவைச் சூடி பளிச்சென்று மங்களகரமான ஆசிரியை. பேசுவதே பாடுவது போல் இருந்தது. மரத்தடியின் கீழ் வகுப்பு. சிலுசிலு காற்று.

ம்ம்ம். எழுதிக்கோங்க.

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.

என்று தேவாரப் பாடல் ஒன்றை அவர் சொல்லச் சொல்ல நாங்களும் எழுதிக் கொண்டோம். அதற்குப் பிறகு அவர் பாடினாரே பார்க்கலாம்! அய்யோடா! டீச்சர் மாதிரி பாட முடியுமா என்ற ஐயத்துடன் ... எங்க பாடுங்கன்னு சொல்லவும் கோரஸாக பொன்ன்ன்ன்ன்ன்ன்ஆஆஆஆர் மேஏஏஏஏஏஏஏஏனியனே என்று நாங்கள் கத்தி கூப்பாடு போட்டு இழுக்கவும் பாவம் பயந்தே போய் விட்டார். நாங்களும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்தோம்? பாடுவது போல் நினைத்துக் கொண்டு தான் பாடினோம். அவருக்குத் தான் அது கர்ண கொடூரமாக கேட்டிருக்கிறது 😞

அவரும் எங்களை எப்படியாவது பாட வைத்து விட வேண்டும் என்று அடுத்தடுத்த வகுப்புகளில் கடும் முயற்சி செய்து பார்த்தார். சிந்து பைரவி படத்தில் சிவகுமாரிடம் பேட்டியெடுப்பவர் 'உங்கள் மனைவியின் சங்கீத ஞானம்' என்று கேட்க... வெளியில் தள்ளு வண்டியில் காய்கறி விற்பவரிடம் சுலக்ஷ்னா 'கிலோ என்ன விலைப்பா?' என்று கேட்பதைப் போல் தான் இருந்தது எங்கள் சங்கீத ஞானமும்.

ஒரு வழியாக இந்த ஞான சூன்யங்களுக்கு ஒன்றும் கற்றுத்தர முடியாது என்று வெறுத்துப் போய் தேசிய கீதமாவது ஒழுங்காக பாடித் தொலைக்கட்டும் என்று பாட சொல்லிக் கொடுத்தார். 'ஜன கண மன அதி...' என்று பாடத் துவங்கினாலே அவர் கஷ்டப்படுவதை நாங்களும் உணர்ந்தோம். விதி வலியது!

எனக்கு பாட்டு வந்ததோ இல்லையோ ஆனால் அந்த ஆசிரியைப் போல் பாடிக் காண்பித்து மிமிக்ரி செய்ய மட்டும் வந்தது. இந்த நக்கல் பண்ற வேலையை விட்டு விட்டு ஒழுங்காக கற்றுக் கொண்டிருந்துக்கலாம். ஹ்ம்ம்...

இன்று வரை விடாமுயற்சி தான். நான் சத்தம் போட்டுத் தான் பாடுவேன்ன்னு பாடினாலும் பாடுற மாதிரி வாசித்தாலும் சுப்பிரமணி இருந்தால் மட்டும் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது. உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும். என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்னு பாடுவதை கேட்க சகிக்காமல் பாட்டு கிளாஸ் வேணா போயேன் என்று இவரும் ஏதோ திட்டம் போடறார். ஐயோ பாவம் அந்த பாட்டு டீச்சர். பொழைச்சுட்டுப் போகட்டும். நம்மளால அநியாயத்துக்கு ஒரு உயிர் பலியாகக் கூடாது.

ஆதலால் கொலுவுக்கு என்னை அழைத்த நண்பர்கள் என்னைய பாடச் சொல்லி வற்புறுத்தாதீங்க. அப்புறம் நான்....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.பாடீஈஈஈஈருவேன். படியில இருக்கிற பொம்மைகள் எல்லாம் எழுந்து நின்னுடும்.

என் பெயரில் ஒரு பாடகி இருந்தார்ங்கிற பெருமையுடன்....

போவோமா ஊர்கோலம்
நகரெங்கும் கொலு வலம்ம்ம்ம்ம்ம்ம்

Back to school night

சமீபத்தில் சுப்பிரமணியின் பள்ளியில் பெற்றோர்களுக்கான 'Back to school night' நாளன்று நானும் கணவரும் சென்றிருந்தோம். அப்பா நீங்களும் அம்மா கூட போயிட்டு வரணும் என்று சுப்பிரமணி மிரட்டியதில் வேண்டா வெறுப்பாக வந்தார். ஒவ்வொரு வருடமும் பள்ளி திறந்த ஒரு மாதத்திற்குள் இந்த நிகழ்ச்சியன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களைச் சந்திக்கவும் ஆசிரியர்களும் மாணவர்களிடம் தாங்கள் எதிர்பார்ப்பது என்ன, எதன் அடிப்படையில் மதிப்பெண்கள் போடுவார்கள், மாணவர்களின் பங்களிப்பு மற்றும் அவர்கள் படிக்கப் போகும் பாடத்திட்டங்களை 10 நிமிடங்களில் விளக்கிக் கூற முயல்வார்கள். பல ஆசிரியர்களும் மகளுக்கும் வகுப்பெடுத்தவர்கள். சுப்பிரமணியைப் பற்றிக் கேட்டவுடன் நன்றாக படிக்கிறானே! என்று ஆச்சரியமூட்டினார்கள்😧 அதிலும் ஒரு ஆசிரியர் அவனுக்கு நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் இருக்கு. வகுப்பில் ஒரே கலகலப்பு தான் என்றார். என்னத்த பண்றானோ ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

ஆங்கில வகுப்பில் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் கட்டுரையை எப்படி எழுதுவது என்று மாணவர்களுக்கு நடைமுறைப் பயிற்சி அளிக்கிறார்கள். என் கல்லூரி படிவத்தை மாமா தான் நிரப்பியதாக ஞாபகம்! மகள் அவளுடைய கல்லூரி விண்ணப்ப படிவத்தை அவளே நிரப்பினாள். இப்பொழுது சுப்பிரமணியும் அவனே தான் செய்ய வேண்டும்.

கணிதத்தில் நான் கல்லூரியில் படித்ததைப் படித்துக் கொண்டிருக்கிறான்! எனக்கும் தெரியும்டா என்றேன். ஆச்சரியப்படுகிறான்! அம்மாவுக்கு தோசை தான் சுட தெரியும்னு நினைச்சிருப்பான் போல 😛 எனக்குப் பிடிக்காத இயற்பியல் பாடம் அவ்வளவு கடினமாக இருக்கிறது. எப்படித்தான் படிக்கிறானோ? சோஷியல் சயின்ஸ் வகுப்பில் அன்றாட அரசியல் நிகழ்வுகளை விவாதிக்கிறார்கள். நமக்குத் தான் தினம் ஒரு பிரச்னையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறாரே இந்த ட்ரம்ப்.

மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நடப்பை, உலக அரசியலைப் பற்றி விவாதிப்பது எவ்வளவு பெரிய விஷயம்! அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறை அரசியல். விவாதங்கள் விவரங்களைத் தெளிவுப்படுத்தலாம். மகளும் சரி, மகனும் சரி அரசியல் செய்திகளை வாசிக்கவும், தொலைக்காட்சியில் பார்க்கவும் தவறுவதில்லை. விவாதிக்கவும் செய்வார்கள்! என் பள்ளிக்காலங்களில் காலை நேரக் கூட்டத்தில் தலைப்புச் செய்திகள் வாசிப்பதோடு சரி. நமக்கு கல்வியறிவு என்று புத்தகத்தில் இருப்பதை மனனம் செய்வது என்றே இருந்த நிலை இன்று மாறியிருக்கிறதா?

விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் புதிதாக கட்டப்பட்டிருக்கும் உடற்பயிற்சி கூடம் மற்றும் புதிய உபகாரணங்களைக் காட்டி உங்கள் வரிப்பணம் நல்ல முறையில் உங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுகிறது என்று சொன்னார்கள்! படிப்பு என்பது உடல் நலம் பேணுதலையும் சேர்த்தே கற்றுத் தருகிறார்கள். எனக்கு இந்த ஊரில் பிடித்ததே இது உங்கள் வரிப்பணம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்க உதவும் திட்டங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று தான் உள்ளூர் தேர்தலில் வேண்டுகோள் வைப்பார்கள் பள்ளிகளில். நாமோ எது இலவசமாக கிடைத்தாலும் ஊரான் வீட்டுப்பணம் போலவும் எந்த திட்டமும் அரசியல்வாதிகள் அவர்கள் கைப்பையிலிருந்து உழைத்து சம்பாத்தித்த பணத்தில் நமக்கு சகாயம் செய்வது போலவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஹ்ம்ம்...

சுப்பிரமணிக்கு மிகவும் பிடித்த மியூசிக் கிளாஸ். எந்த மொட்டைத்தலை ஆசிரியரைப் பார்த்து ஒன்பதாம் வகுப்பில் பயந்தானோ அவர் தான் இன்று வரை அவனுடைய மியூசிக் டீச்சர். ஒன்பதாம் வகுப்பிலேயே அவரிடம் உங்களைக் கண்டால் என் பையன் அநியாயத்திற்குப் பயப்படுகிறான் என்று சொல்லி, நான் அப்படியா இருக்கிறேன் பயப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள் என்றதை சுப்பிரமணியிடம் சொல்லி நீ ஒழுங்கா இருந்தா உனக்கு ஒரு பிரச்னையும் இல்லை என்று சொன்னதெல்லாம் ஞாபகம் வந்தது.

நானெல்லாம் ஆணி அடித்த மாதிரி ஒரே வகுப்பில் ஒரே இடத்தில் தான் வருடம் முழுவதும் படித்திருக்கிறேன். ஆசிரியர்கள் தான் மாறுவார்கள். சுப்பிரமணியின் ஒவ்வொரு வகுப்பும் பள்ளியின் ஒவ்வொரு மூலையில் இருக்கிறது. ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்கு ஓடி வர வேண்டியிருக்கிறது! பாவம்! ஆனால் வேண்டியது தான். சுறுசுறுப்பாக இருக்க உதவும். படிகளில் ஏறி இறங்கி கிடுகிடுவென மணியடிப்பதற்குள் வகுப்பறையைத் தேடி ஓட்டம் தான்! ஜாலியாக இருந்தது.

இந்தப் பள்ளிகளில் எனக்கு மிகவும் பிடித்த அம்சமே அந்தந்த வகுப்புகளில் பாட சம்பந்தப்பட்ட புத்தகங்களும், படங்களும் என்று அழகாக வைத்திருப்பார்கள். கணினி மற்றும் புத்தகங்களுடன் விசாலமான நூலகம். மகள் அங்கு தான் மாலை நேரங்களில் இருப்பாள். சுப்பிரமணி மறந்தும் கூட அந்தப் பக்கம் போவதில்லை 😞 இந்த வருடம் சுப்பிரமணிக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பெண்கள். பார்த்தாலே மிடுக்காக பல வருட அனுபவங்களுடன். மிகவும் பிடித்திருந்தது. மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருப்பதாக கூறினார்கள். நடுநிலைப்பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை கற்றுத்தரும் ஆசிரியர்கள் தான் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். பள்ளி இறுதி ஆண்டை நெருங்கும் பொழுது மாணவர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பிரச்னைகள் செய்வதும் குறைகிறது.அனைத்து ஆசிரியர்களும் பெற்றோர்களிடம் வலியுறுத்திய ஒரு விஷயம் - உங்கள் மகனுக்கோ மகளுக்கோ பாடத்தில் கேள்விகள் இருந்தால் பள்ளி முடிந்தவுடன் நாங்கள் இருக்கும் நேரத்தில் வந்து கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம் என்றார்கள். தனியார் டியூஷன் என்ற கான்செப்ட் அறவே இல்லை! இப்பொழுது மெதுவாக இந்தியர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல வேளை! என் குழந்தைகள் தப்பித்தார்கள்.

இப்படியாக இரண்டு மணிநேரம் அவனுடைய வகுப்புகளுக்குச் சென்று இறுதியில் அவனுடன் கிண்டர்கார்டனில் இருந்து படிக்கும் நெருங்கிய நண்பர்களின் அம்மாக்களுடன் சிறிது நேரம் அரட்டை. இது தான் நாம் பள்ளிக்கு வரும் கடைசி Back to school night என்றேன். இனி அவர்கள் கல்லூரிக்குச் சென்று விடுவார்கள். எப்படா போவான் என்றிருக்கிறது என்று ஒருவர் சொல்ல, நான் இன்னும் தயராகவில்லை என்று சொல்லும் பொழுதே கண்ணீர் துளிர்த்தது இன்னொரு அம்மாவிற்கு. பலருக்கும் இந்த வகுப்பில் படிப்பவர்கள் இரண்டாவது செல்லக் குழந்தைகள். 12 வருடம் ஓடியே போய்விட்டது. இரட்டை வால் ரெங்குடுகளாக பார்த்த நாள் முதல் பதின் பருவ சேட்டை நாயகர்கள் இன்று கல்லூரி செல்ல தங்களைத் தயார் செய்து கொள்ளும் கட்டிளங்காளைகளாக! அவர்களின் குழந்தைப்பருவங்களை அசை போட்டு அவர்கள் செய்த குறும்புகளைப் பேசி...ம்ம்ம்ம்ம்...

பட்டமளிப்பு விழாவில் மீண்டும் சந்திப்போம் என்று கூறி விடைப்பெற்றோம்.

எப்படிம்மா இருந்தது? எந்த டீச்சர உனக்கு ரொம்ப பிடிச்சது?

முழுக்கதையையும் சொல்லி நீ ஒழுங்கா படிடா! படிச்சிருவேல்ல?

ஆள் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்பப் ....

அதுக்கெல்லாம் எங்க பதில் வர்றது?

வண்டியில் போகும் பொழுதும் சாப்பிடும் நேரத்தையும் தவிர மற்ற நேரங்களில் அதிகம் பேசிக்கொள்வதுமில்லை 😞எப்பொழுது தூங்குகிறான் என்றே தெரியவில்லை 😞

உனக்கென்ன மனக்கவலை...உன் தாய்க்கன்றோ தினம் தினம் உன் கவலை...

Wednesday, October 24, 2018

The Last Drop - India's water crisis

'The Last Drop - India's water crisis' என்றொரு நேஷனல் ஜியோக்ராபிக் ஆவணப்படமொன்றில் இந்தியாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை, நீர்நிலைகளின் இன்றைய நிலை, இனி வரப்போகும் அபாயங்களையும் விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள்

2030ல் 40 சதவிகித மக்கள் நீரின்றி அவதியுறுவார்கள் என்ற அதிர்ச்சிகரமான ஆராய்ச்சித் தகவலுடன் ஆரம்பமாகும் இந்த ஆவணப்படம் வறண்ட ராஜஸ்தானிலிருந்து தொடங்குகிறது. பல மைல்களுக்கு ஒட்டகம் மூலமாக எங்கோ இருக்கும் கிணற்றிலிருந்து குடம் குடமாக தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். தண்ணீர் இல்லாததால் பலரும் நகரை நோக்கி இடம் பெயர அங்கும் இதே நிலைமை தான். பல மாடி அடுக்குக்குடியிருப்புகள் ஆற்றுப்படுகையின் மேல் கட்டப்பட்டு நீராதாரத்தை அழித்து வருகிறது. மழைநீர் சேகரிக்கும் வகையில் ராஜஸ்தான் அரண்மனைகளில் கட்டியுள்ள சிறு குளங்கள் இன்று கழிவுகளைச் சுமந்து நிற்கும் அவலங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

குர்கிராம் நகரின் விஸ்தரிப்பும் பல மாடிக்கட்டிடங்களும் நீரில்லாத நகரமாக உருவாகி வருவதையும் , தலைநகர் டெல்லியில் வசதியுள்ளவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வழங்கப்படுவதும் அதனால் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காமல் போவதும் குறைந்த நீர் அதிக மக்களுக்குப் போக வேண்டிய சூழ்நிலையில் வெகு தொலைவிலிருந்து எடுத்து வர ஆகும் நேரமும், செலவும் அனைத்து மக்களுக்கும் நீர் சேர முடியாததற்கு காரணங்களாகிறது. டெல்லியில் சங்கம் விஹார் காலனியில் பத்து வீடுகளுக்கு ஒரு குழாய் இருக்கிறது. மக்களும் தண்ணீர் லாரியை நம்பித்தான் இருக்கிறார்கள். குறுகிய தெருக்களும் போக்குவரத்து நெரிசலில் மாட்டியிருக்கும் லாரித்தண்ணீருக்காக காத்திருக்கும் மக்களிடையே எழும் பதட்டமும் சண்டையும் தினமும் நாம் கடந்து வரும் நிகழ்ச்சிகள் தான். இன்று தெருவுக்குள் நடப்பது நாளை நகரங்களுள் பின் மாநிலங்களுக்குள் நடக்கும். இன்றே காவிரி, முல்லைப்பெரியாறு விஷயத்தில் நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.

காடுகளை அழித்து வீடுகள் கட்டி மழையும் பொய்த்ததில் வறட்சி தான் நிலவுகிறது. மலைப்பிரதேசமான சோரா நகரில் மழை பெய்தாலும் சேருமிடம் என்னவோ பங்களாதேஷில். இந்தியாவில் பல்வேறு இடங்களில் நிலவும் உண்மை நிலவரத்தை கவலையுடன் படம் முழுவதும் சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.

மும்பையிலிருந்து இரு மணிநேர தொலைவில் இருக்கும் கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு வறண்ட கிணறு பார்க்கவே பரிதாமாக இருக்கிறது. வீட்டுப்பெண்கள் தான் தினமும் பல முறை பல மைல்களுக்கு நடந்து சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். தண்ணீர் பிடித்துக் கொண்டு வரவே பலதார மணங்களும் நடக்கிறது. எத்தனை கொடுமை? வழி முழுவதும் வறண்ட நிலம் தான்.

பசுமையான பஞ்சாப் மாநிலம் தந்த விளைச்சலில் இந்தியாவில் உணவுப்பொருட்கள் மிகுந்த காலங்கள் தொலைந்து நீரற்ற வறண்ட நிலங்களால் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையும் கூடியுள்ளது. 60 சதவிகித விவாசாயிகள் நிலத்தடி நீரை நம்பியே உள்ளனர். ஆழ்துளை கிணறுகளின் மூலம் உலகளவில் அதிகமாக நீரை உறிஞ்சுவதும் இந்தியா தானாம்!

பஞ்சாபில் படிட்ண்டா நகரில் இருந்து 'கான்சர்' ட்ரைனில் ஏறி ராஜஸ்தானுக்கு செல்கிறார்கள்! பயிர்களுக்குத் தெளிக்கப்படும் மருந்துகள் நிலத்திற்குச் சென்று நிலத்தடி நீரை மாசுபடுத்துவது மட்டுமில்லாமல் கான்சரையும் இலவசமாக அளிக்கிறது. படிப்பறிவில்லாத ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் இனி எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

தெலுங்கானா மாநிலத்தில் ஃப்ளோரைடு ஆர்சன் கலந்த தண்ணீரினால் உடற்குறைபாடுகள் ஏற்பட்ட குழந்தைகளை காண்பித்தார்கள். என்று எப்பொழுது இவ்விஷயத்தில் விழிப்புணர்வு வரப்போகிறதோ?

தொழிற்சாலை, மனித கழிவுகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆற்று நீரில் கலக்கப்படுகிறது. யமுனை ஆற்றின் கரையோரம் விளைவிக்கும் காய்கறிகளில்  நச்சு கலந்த நீரால் அப்பகுதிகளில் விளையும் காய்கறிகளும் அதனை உண்ணும் நமக்கும் பல நோய்களும் வருகிறது என்பதை ஆய்வு செய்து நிரூபித்துள்ளார்கள்.

தொழிற்சாலைகளின் கழிவுகளையும் இறந்த உடல்களையும் சுமந்து கொண்டு புனித நதியாம் வற்றாத கங்கை நதியை இன்று நச்சுக்கிடங்காக்கி வைத்திருக்கிறோம். சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை மற்றும் வீட்டு கழிவுநீர் கங்கை ஆற்றில் கலந்து மாசுபடுத்திய நீரில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாமல் நுண்ணுயிர்களை இழந்து உயிரற்றுக் கிடக்கிறது பெரும்பாலான நீர் நிலைகள் என்று வருத்ததுடன் பகிர்கிறார்கள் இயற்கை மற்றும் மாசு கட்டுப்பட்டு ஆர்வலர்கள்.

பல நதிகளின் ஆதாரத்தை தொலைத்து  வீடுகளை கட்டி வீட்டுக்கழிவுகளை அதன் மேல் கொட்டி பிளாஸ்டிக் பைகளும், பொருட்களும் என்று குப்பைகூளங்களாக்கி வைத்திருக்கிறோம். மழை குறைந்து நீரின் தேவை அதிகரித்து நிலத்தடி நீரும் சுத்தமாக உறிஞ்சப்பட்டு தூய்மையான நீர் என்பதே கானலாகிப் போயிருக்கிறது. மனிதர்கள் விலங்குகள் மட்டுமல்ல நம் சுற்றுப்புறச்சூழலையும் இயற்கை வளங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறோம். சென்னை வெள்ளத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டோமா? இல்லை.

மஹாராஷ்ட்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் பருவமழைக்குப் பிறகு வறண்டு விடும் நிலைமையில் இருந்த கிராமத்தில் மக்கள் அனைவரும் 'பானி
ஃபவுண்டேஷன்'  NGO துணையுடன் சேர்ந்து பல நாட்களுக்கு நீரைத் தேக்கி வைக்க ஆழ்குழிகள் வெட்டியதில் வறண்ட நிலம் பசுமையாக மாறி இன்று விளைச்சல் பூமியாக மாறி இருக்கிறது. மக்கள் தங்கள் தேவைகளை உணர்ந்து சேர்ந்து உழைத்தால் எல்லா மாநிலங்களிலும் இது சாத்தியமே! அடுத்தவரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லாத நிலையும் சாத்தியம் என்று உணர்த்தியது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

மலை நகரமான ஐஸ்வால் மிசோராமில் வீட்டுக் கூரைகளைச் சரிவாக கட்டியும் , வீணாகப் போகும் நீரை முறையாகச் சேகரித்தும் தத்தம் தேவைக்கு வீடுகளில் மழை நீரைச் சேகரிப்பதைப் போல் நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றலாம் என்ற நல்வழியை காட்டியுள்ளார்கள்.


அரசாங்கமே செய்யும் என்று காத்திருக்காமல் தங்களின் நீர்த்தேவைகளை குறைத்துக் கொள்ளவும், மழை நீரைச் சேகரிக்கவும் , மறு சுழற்சி முறையில் நீரை மீண்டும் பயன்படுத்தவும் வழிகள் கண்டறிந்து முறைப்படுத்த வேண்டும். அரசாங்கமும் மக்கள் பெருக்கத்தை குறைக்க கடுமையான விதிகளைக் கொண்டு வர வேண்டும். தனி மனிதரும் தத்தம் சமூக பொறுப்புகளை உணர்ந்து நடந்தாலொழிய இதற்குத் தீர்வு இல்லை.

தண்ணீரை நாம் அசுத்தமாக்குகிறோம். அசுத்தமாக்குவதையும் அசுத்தமாக்குபவர்களையும் கண்டு கொள்ளாமல் செல்கிறோம். நஞ்சுத்தண்ணீர் மீண்டும் பழங்கள், காய்கறிகளின் உருவில் நமக்கே நஞ்சாக நம் வீடுகளில் நுழைகிறது.

இதனால் அதிகம் பாதிக்கப்படவிருப்பது அடித்தட்டு மக்களே. நீரின்றி விவசாயம் பெருமளவில் பாதிக்கும். விவசாயிகளும் சிக்கனமாக நீரைப் பயன்படுத்துவதை பாலைவன நாடுகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். கானல் நீராகிப் போகும் காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் இத்தகைய ஆவணப்படங்களைப் பள்ளி மாணவர்களுக்கும் எடுத்துச் சென்று அடுத்த தலைமுறையினருக்கு நீரின் அவசியத்தை , மேலாண்மையை, நிலத்தடி நீரை மேம்படுத்தும் வழிமுறைகளை எடுத்துச் சொல்லவும் செயல்படுத்த வேண்டிய அவசர நிலையிலும் இருக்கிறோம். வங்கிகளில் பணத்தைச் சேர்த்து வைப்பதாலோ சொத்துக்களைச் சேர்த்து வைப்பதாலோ எந்தப் பயனுமில்லை என்பதை மக்கள் உணருவார்களா ? உயிர் வாழ ஆதாரமான நீரின்றி இவ்வுலகு அமையாது என்பதனை என்று நாம் உணரப்போகிறோம்!


Watch it here












Thursday, October 11, 2018

உலக பெண் குழந்தைகள் தினம்


இன்று உலக பெண் குழந்தைகள் தினம். 

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுகளை களைந்தெறிவதும், பாதுகாப்பான சமத்துவ சூழலை உருவாக்குவதும், அதற்குத் தேவையான விழிப்புணர்வு மற்றும் தீர்வுகளைப்  பேசும் நாளாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

முன் எப்போதையும் விட பெண்கள் பற்றியும், பெண் குழந்தைகள் பற்றியும் இப்போது பேச வேண்டியது அவசியமாகிறது. இன்றளவும் பெண்களை போகப் பொருளாக , உடமையாகப்  பார்ப்பதும், அவர்களுக்கான உரிமைகளை முடக்குவது என எல்லா வகையிலும் பெண்களுக்கான சவால்கள் குறைவதாக இல்லை. கல்வி, வேலை மற்றும் பொருளாதார ரீதியாக சமத்துவம் பெற்று தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஒவ்வொரும் பெண்ணும்  இங்கே கடும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. 

பெண்களால் போராட முடிகிறது. அதற்கான வாய்ப்புகள், தளங்கள் இருக்கிறது. போராடுகிறார்கள். ஆனால் குழந்தைகள்?

இந்தியச் சூழலை மட்டும் எடுத்துக் கொண்டால், சமீப நாட்களில் பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. ஒவ்வொரு சம்பவமும் பதைபதைக்க வைக்கிறது. தீர்வுகள் வெளியில் இருந்து வருவது இல்லை. நாம் நம்மிடையே உருவாக்க வேண்டியது. எனவே இதையெல்லாம் வெளிப்படையாக பேசுவது அவசியமாகிறது.  அதற்கான சூழலை உருவாக்கிட நாம் ஒவ்வொருவரும் முன் வருவது அவசியம்.

சமீப நாட்களில் ட்விட்டரில் ”#metoo” என்கிற தளத்தில் தங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைப் பற்றி இந்தியப் பெண்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது நல்லதொரு துவக்கம். யார் குற்றவாளி என்பதைப் பற்றி பேசுவதை விட இனி எவரும் பெண்கள் மீது இது போல அத்துமீறல்களைச் செய்துவிட்டு தப்பிக்க முடியாது என்கிற செய்தியை அனைவரும் உள்வாங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த திசையில் நாம் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது.

ஆணோ, பெண்ணோ குழந்தைகளைப்  போற்றுவோம், பாதுகாப்போம். கொண்டாடுவோம். 


Thursday, August 2, 2018

திரும்பிப்பார்க்கிறேன்...கற்றதனாலாய பயன்

வேலை முடித்து கல்லூரியிலிருந்து வீட்டிற்குத் திரும்பி மகளுக்கு சாப்பிட கொடுத்து விட்டு நானும் சாப்பிட்டு முடித்து டீ போட்டுக் கொண்டிருக்கையில் அழைப்பு மணி சத்தம். இதுவே ஆல்பனி என்றால் யாராக இருக்கும் என்று யோசித்திருப்பேன். அன்று மதுரையில் யார் எப்பொழுது வருவார்கள் என்று தெரியாது. எந்த நேரமும் தெரிந்தவர்கள் வீட்டிற்கு உரிமையோடு போய் பேசி விட்டு வரலாம். வாசலில் நின்றிருந்தவரைப் பார்த்து ஐந்தாறு வருடங்களாகி விட்டிருந்தது. ஆள் மாறாமல் அதே அமைதியுடனும் புன்னகையுடனும்! கல்லூரியில் வேறொரு துறையில் படித்த சீனியர் மாணவி. அவர் எதுக்கு இப்பொழுது வந்திருக்கிறார் என்று யோசித்துக் கொண்டே வரவேற்று அவருக்கும் டீ எடுத்துக் கொண்டு பேச அமர்ந்தேன்.

கணவரிடம் அவரை அறிமுகப்படுத்தி விட்டு பொதுவாக சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். இன்னும் அவர் வந்த காரணத்தைச் சொல்லவில்லை. வெகு நேரம் கழித்து தனக்கு கணினியியல் சம்பந்தப்பட்ட சில பாடங்களில் கேள்விகள் இருப்பதாகவும் அதற்கு உதவ முடியுமா என்று கேட்டார். அவர் சொன்ன பாடங்களை நான் கல்லூரியில் படித்தும் வேலை பார்த்துக் கொண்டிருந்த கல்லூரியில் மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்துக் கொண்டிருந்ததால் சரியென்று சொல்ல, அவருடைய அசைன்மெண்ட் பேப்பர்களை கொடுத்தார். அமெரிக்க பல்கலையின் பெயரோடு இருக்கவும், அவர் தன் சோகக்கதையைச் சொல்ல... கண்முன்னே 47 நாட்கள் படம் விரிந்தது. கிட்டத்தட்ட ஜெயப்ரதா கதாபாத்திரத்தின் கதை தான். அவர் கூறிய விஷயங்களை நம்ப முடியவில்லை. இவ்வளவு மோசமான மனிதர்கள் கூட இருக்கிறார்களா என்று அதிர்ச்சியாக இருந்தது. நரகத்திலிருந்து தப்பித்து மன உளைச்சலுக்கும் ஆளாகியிருந்தார். அமெரிக்கா சென்ற பிறகு கல்லூரியில் மேற்படிப்பு படித்து நடுவில் தொடர முடியாமல் மீண்டும் படிக்க கல்லூரியிலிருந்து  ஒப்பந்தம் பெற்று வந்திருந்தார். இரண்டு மாதத்தில் தேர்வு நெருங்குவதாகவும் அவருக்குப் படிக்க உதவுமாறும் கேட்டுக் கொள்ள நானும் உதவினேன்.

முதலில் அசைன்மெண்ட் முடித்து அனுப்பி வைத்து தேர்வுக்கும் அவரைத் தயார் செய்து அவரும் எழுதி முடிக்க, நாங்கள் கனடா வந்து விட்டோம். சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் வேலை பார்ப்பதாகத் தெரிந்து கொண்டேன்.

திருமணம் என்ற போர்வையில் பெண்களின் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக சிதைக்க முடிகிறது சில ஆண்களால்? படித்தவர்கள் பண்பானவர்கள் என்ற மாய பிம்பத்தையும் வெளிநாட்டில் வசித்தாலும் பெண்களைச் சிறுமைப்படுத்துவதிலும் மாற்றம்மில்லை என்றுணர்ந்தேன். எத்தனை கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்திருப்பார் அந்தப் பெண் என்பதை நினைத்த பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. .

சித்திரவதைகளையும் மன உளைச்சல்களையும் வலியுடன் கடந்து வாழ்ந்து சாதிக்க வேண்டும் என்ற முடிவுடன் வந்திருந்த பெண்ணிற்கு உதவ முடிந்ததே என்ற திருப்தி எனக்கு.

நான் பயின்ற கல்வியால் எனக்குப் பொருளாதார ரீதியாக எண்ணற்ற பயன்கள் கிடைத்திருக்கிறது. கிடைத்துக் கொண்டிருமிருக்கிறது.  அன்று அப்பெண்ணிற்கு உதவ முடிந்ததில் கிடைத்த மனநிறைவு ஒன்று போதும் கற்ற கல்வியின் பெரும்பயனை அடைந்ததற்கு.

🙏🙏🙏

Sunday, July 29, 2018

Hotel Rwanda


1994 ருவாண்டாவில்  ஹூட்டு, டுட்சி என்ற இரு குழுக்களுக்கிடையே நடந்த போரின்  இனப்படுகொலையை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்  2004ல் வெளிவந்த 'ஹோட்டல் ருவாண்டா'. ஃப்ரெஞ்ச் ஹோட்டல் நிர்வாகியாக வருபவர் தன் குடும்பத்தினரையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்ற போராடுவது தான் கதை.  அரசியல் ஆதாயம் தேடி இனப்படுகொலை நடத்தியவர்கள், லஞ்சம் ஊழல் விரித்தாடும் அரசாங்கம், அகதிகளின் பரிதாப நிலைமை, மக்களை காப்பாற்ற நினைக்கும் UN என அழகான  திரைக்கதை. நடித்திருந்தவர்களும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்திருந்தார்கள்.

1994ல் இவ்வளவு பெரிய உயிரிழப்பும் கலவரங்களும் அரங்கேறியிருக்கிறது. அதே காலகட்டத்தில் உலகின் மறுபகுதியில்  கணினி மற்றும் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகம் இல்லாததால் என் போன்ற பலரும் அறிந்திடாத விஷயங்களுள் இதுவும் ஒன்று. செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் கூட கேள்விப்பட்ட மாதிரி நினைவில்லை எனக்கு. இப்படத்தின் மூலமே இத்துயர நிகழ்ச்சியை  உலகில் பலரும் அறிந்திருக்கலாம். அதில் ஒரு காட்சி நிஜமாகவே மனதை உலுக்கி விட்டது.

😢😢😢





  

Thursday, July 26, 2018

அமெரிக்காவும் என் ஆரம்ப நாட்களும்...

1990களில் வேலை நிமித்தமாக அமெரிக்காவிற்கு இந்தியர்கள் அதிகம் வர ஆரம்பித்திருந்த நேரம். பெரு நகரங்களில் வாழும் அமெரிக்கர்களுக்குப் பல நாடுகளில் இருந்து வரும் மக்களின் அறிமுகம் இருப்பதால் நிறத்திலும் உருவத்திலும் வேறுபாடு கொண்ட மனிதர்களை  'வெறிச்' பார்வை பார்ப்பதில்லை அல்லது குறைவு. அமெரிக்காவின் மூலை முடுக்குகளில் அலுவல் காரணமாக புலம் பெயர்ந்து வெள்ளை மற்றும் கறுப்பின அமெரிக்கர்களை ஒரு வித அச்சத்துடனே எதிர் கொண்ட அனுபவம் இந்தியர்கள் பலருக்கும் உண்டு.

1999ல் யூட்டா மாநிலத்தில் இருந்த பொழுது நண்பர்களுடன் விடுமுறையில் Yellowstone National Park சென்றிருந்தோம். இரவு வான வேடிக்கைகளைக் கண்டு களித்து விட்டு வயோமிங் மாநிலத்தில் உள்ள உணவகத்திற்கு ஏழு எட்டு நண்பர்கள் சகிதம் குழுவாக நுழைந்தவுடன் அங்கு உணவருந்திக் கொண்டிருந்தவர்கள், உணவு பரிமாறுவார்கள் அனைவரும் ஏதோ ஏலியன்களைக் கண்டது போல் எங்களைப் பார்த்தபொழுது தான் அவர்களையும் கவனித்தேன் . ஆஜானுபாவ 'வெள்ளை' அமெரிக்கர்கள்! அவர்களின் முகத்தில் தெரிந்தது ஆச்சரியமா! அதிர்ச்சியா? சிறிது நேரம் எங்களையே உற்று நோக்கி விட்டு அவர்கள் வேலையைத் தொடர்ந்தார்கள்.

யூட்டாவில் இருந்த (மார்மோன் கிறிஸ்தவர்கள்) அமெரிக்கர்கள் மிகவும் நட்புடன் பழகி மரியாதையாகவும் அன்புடனும் நடத்தியதால் நெருடல்கள் இல்லாமல் வாழ முடிந்தது.  முதன் முறையாக வயோமிங் மாநிலத்தில் வெள்ளை அமெரிக்கர்கள் கூட்டத்தில் இருந்த பொழுது தான் கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது. 'out of place' உணர்ந்த தருணத்தில் பயம் அப்பிக்கொண்டது.

பின்னொரு நாளில் யூட்டாவிலிருந்து நியூயார்க்கிற்கு காரில் வந்து கொண்டிருந்தோம். பனிக்காலம். சாலைகள் பனி, ஐஸ் என்று உறைந்து கிடந்திருந்தது. கார் வழுக்கி எதிர்த்திசையில் வரும் டிரக்குடன் மோதி விடாமல் அன்று உயிருடன் தப்பியதே கடவுளின் அனுக்கிரகம் என்று அடுத்த திருப்பத்தில் எந்த ஊர் என்று கூட தெரியாமல் உள்ளே நுழைந்து மெக்கானிக் கடையைத் தேடிச் சென்றோம். உள்ளே வந்த காரைப் பார்த்தவுடன் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்  'பிரவுன்' மனிதர்களை முதன் முதலாக கண்ட ஆச்சரியத்தில் வர, எனக்கோ, என்னை விட கொஞ்சம் உயரமாக இருப்பவர்களைக் கண்டாலே உதறல் எடுக்கும். ஏற்கெனவே சாலையில் நடக்கவிருந்த பெரும் விபத்து தந்திருந்த அதிர்ச்சியுடன் இவர்களைப் பார்த்தவுடன் இன்னும் 'படபட'வென நெஞ்சு அடித்துக் கொண்டிருக்க, மகளுடன் பின்சீட்டில் பயந்தபடியே நான். முருகா! முருகா!

வந்தவர்கள் என்ன ஏது என விவரம் கேட்டு விட்டு, காரை செக் செய்கிறோம் என்று எங்களை இறங்கச் சொல்லி சரி செய்து கொடுத்து பணம் ஏதும் வாங்கிக் கொள்ளாமல் பத்திரமாகச் செல்லுங்கள் என்று சொல்லும் வரை நான் செத்து செத்து...ஓ மை காட்! புது இடம், தெரியாத மனிதர்கள் என்றால் அநியாயத்திற்குப்  பயம் தொற்றிக் கொள்கிறது, இனி ஆளை வைத்து எடை போடக்கூடாது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

இப்படித்தான் ஒருமுறை வாஷிங்டன் செல்ல நண்பரின் காரில் மகளும், பெரியம்மாவும் வர, எங்களுடைய காரில் கணவர் வண்டியை ஒட்ட, கைக்குழந்தையுடன் பின் இருக்கையில் நான். GPS இல்லாத காலத்தில் யாஹூ மேப்ஸ் கையில் வைத்துக் கொண்டு ஏதோ ஒரு திருப்பத்தில் வழியைத் தவற விட்டதில் அது எங்கெங்கோ சுற்றி கடைசியில் கருப்பு அமெரிக்கர்கள் அதிகம் வாழும் இடத்தில் கொண்டு நிறுத்த, தலையில் கறுப்புத் துணியைச் சுற்றிய 'பீம் பாய்'கள் பலரும் பூம் பாக்ஸ்-ல் சத்தமாக பாட்டை அலற விட்டு நடனமாடிக் கொண்டும் உரக்க பேசி சிரித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் மாட்டிக் கொண்டோம். நான்கைந்து பேர் காரைச் சுற்றி நின்று கொண்டு நோட்டமிட, என்னடா எங்க ஏரியாவுக்குள்ள வர்ற அளவுக்கு தில் இருக்கா?வென்று கேட்கும்  தொனியில் ஒரு லுக்கு! துப்பாக்கியை காட்டி மிரட்டினால் ஒன்றும் செய்ய முடியாது. கடவுளே அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என மனம் அடித்துக் கொண்டிருந்தது. மகளும் பெரியம்மாவும் இருந்த காரைச் சுற்றியும் கூட்டம். எனக்கு வியர்த்து விறுவிறுத்து கடவுளே இங்க இருந்து எப்படியாவது தப்பிச்சுப் போகணுமே என்ற பதட்டம். செத்து செத்துப் பிழைப்பது என்பது அது தானோ? கார் கண்ணாடியை இறக்கி கணவரும் அவர்களிடம் நாங்கள் செல்ல வேண்டிய வழியைத் தவற விட்டுவிட்டோம். இங்கிருந்து எப்படிச் செல்வது என்று கேட்க, நிதானத்துடன் இருந்த ஒருவர் வழியைச் சொல்லி அனுப்ப... ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தது போலத் தான் இருந்தது. பணம் கேட்டு மிரட்டாமல் விட்டார்களே! அப்படிப்பட்ட கூட்டத்தில் இருந்து தப்பித்ததை இன்றும் நினைத்தால்... திக் திக் திக்... அவர்களைப் பார்த்தால் பயம் வருவதென்னவோ உண்மை தான். வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் கருப்பப்பா இருக்கிறவன் கையில துப்பாக்கி இருக்கும் ...ஹாலிவுட் படங்களின் தாக்கம் அப்படி :(

கோவில், இந்திய மளிகைக் கடைகள், உணவகங்கள், சமீபத்திய தமிழ் மக்களின் வருகை என்று பெருகியதில் இப்பொழுதெல்லாம் மதுரையில் இருப்பது போல் தான் தோன்றுகிறது. சமீபத்தில் நானும் சுப்பிரமணியும் பேசிக்கொண்டே பூங்காவை கடந்த பிறகு தான் சேலை, மல்லிகைப் பூ, நகைகள் போட்டுக் கொண்டு ஊரில் இருப்பது போல் உடையணிந்து அங்கு குழுமியிருந்த அமெரிக்கர்களை கடந்து வந்திருக்கிறேன்! அவர்களும் வித்தியாசமாகப் பார்க்கவில்லை நாங்களும் உணரவில்லையென்று! 'melting pot' சமூகத்தில் எளிதாக ஒன்றி விட முடியும். முடிகிறது. பல நாட்டு மக்கள் குடியிருக்கும் ஆல்பனியும் அப்படிப்பட்ட ஊர் தான். நல்ல வேளை!

இன்றோ அமெரிக்காவில் பலருக்கும் இந்தியர்களைப் பற்றி தெரிந்திருக்கிறது.   கல்வி, கணினி, மருத்துவம், ஆராய்ச்சி, அரசியல் என்று பல்வேறு  துறையிலும் இந்தியர்களின் பங்கு இருப்பதால் வேற்று கிரக மனிதர்களைப் பார்க்கும் 'வெறிச்' பார்வை இல்லை. ஆனால் இவர்கள் வேலைகளை இந்தியர்கள் எடுத்துக் கொண்டது போல் ஒரு மாயத் தோற்றமும் அறியாமையும் பொறாமையும்  வேண்டுமானால் இருக்கிறது. நேற்று வந்தவர்கள் இன்று உயர் பதவிகளில், நல்ல வேலைகளில், பெரிய வீடுகளில் வாழ்கிறார்கள் என்பது சிலருக்கு உறுத்தலாகத் தான் இருக்கிறது! அமெரிக்க இந்திய குடிகளிடமிருந்து நிலத்தை ஆக்கிரமித்த பழங்கதைகளும் அமெரிக்காவே புலம் பெயர்ந்தவர்களால் உருவான நாடு என்பதை இதற்கு முன் வந்த வெள்ளையர்கள் பலரும் மறந்து விட்டிருப்பது அறியாமை தான்!













Tuesday, July 24, 2018

நியூயார்க்-மதுரை பயணம் (2017)

நேரம் கிடைக்கும் பொழுது நானும் மகளும், கணவர் மட்டும் இல்லையென்றால் நான் மட்டும் குழந்தைகளுடன் ஊருக்குச் சென்று வருவது வாடிக்கை. நாங்கள் குடும்பமாக மதுரைக்குச் செல்வது எப்பொழுதாவது அதிசயமாக நிகழும். அப்படி ஒரு வாய்ப்பு பல வருடங்களுக்குப் பிறகு 2017ல் நிகழ, பல திட்டங்களுடன் ஆரம்பமானது எங்கள் பயணம். நாங்கள் அனைவரும் சேர்ந்து செல்லும் பொழுது எனக்கு பதட்டமும் கூடி பத்திரமாக போய் ஊர் வந்து சேர வேண்டும் என்ற கவலையும் சேர்ந்து கொள்ளும். புறப்படும் நாள் அன்று பாஸ்போர்ட், OCI கார்டுகள், விசா எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பல முறை சரிபார்த்துக் கொண்டு வீட்டிற்குள் அடுப்பு, ஹீட்டர் விளக்குகள் என்று ஒவ்வொன்றையும் சரி பார்த்து அணைத்து விட்டு பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்ல வேண்டிய விஷயங்களை மறக்காமல் சொல்லி விட்டு அனைவரும் சுவாமியை வேண்டிக் கொண்டு நியூயார்க் நகரம் நோக்கி மாலை நான்கு மணிக்கு மகிழ்ச்சியுடன் பெட்டிகளை வண்டியில் ஏற்றி விட்டு, கேமரா, கைபேசி, சார்ஜர் சரிபார்த்து ஒரு வழியாக கிளம்பி விட்டோம். குழந்தைகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விடுமுறை.

கோடையில் மரங்கள் செழித்து வழியெங்கும் அணிவகுத்து அழகாக காட்சி தந்து கொண்டிருந்தது. நடுவில் சிறிது நேரம் இளைப்பாறி ஜேஎஃப்கே விமான நிலைய போக்குவரத்து நெரிசலை கடந்து வந்து சேரும் பொழுது இரவு எட்டு மணிக்கும் மேல். நானும் குழந்தைகளும் பெட்டிகளுடன் விமான நிலையத்திற்குள் சென்று எமிரேட்ஸ் கவுண்ட்டரில் பாம்பு போல் நீண்டிருந்த வரிசையில் ஐக்கியமாகி செக்கின் செய்ய காத்திருக்க, கணவர் வண்டியை நிறுத்தி விட்டு வந்து சேர்ந்து கொண்டார்.

விமான நிலையம் வழக்கம் போல் பரபரப்பாக! எங்கும் மக்கள் கூட்டம்! சுடிதார், சேலை, குர்தா ஜீன்ஸ் அணிந்த பெண்களும், குட்டை, நெட்டை, கருப்பு, வெள்ளை, பிரவுன் என்று பல நிறத்தில் மனிதர்கள் அனைவரையும் ஒரு சேர காண முடியுமென்றால் அது விமான நிலையங்களில் தான்! எத்தனை எத்தனை முகங்கள்! ஒவ்வொரு முகங்களிலும் ஒவ்வொரு உணர்வுகள்! நேரம் போவதே தெரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். எத்தனை விதமான பெட்டிகள்! வெளிநாட்டுக்காரர்களின் பெட்டிகள் அடக்கமாக இருப்பது போலவும் நாம் தான் முடிந்தவரையில் பெட்டிகளில் திணித்துக் கொண்டு செல்வது போலவும் ஒரு தோற்றம். கண்டிப்பாக நம் மக்கள் பூட்டு போட்டுக் கொண்டு பெட்டிகளுடன் வருவார்கள் :) பலரும் தங்கள் பெட்டிகளை அடையாளம் காண வண்ண வண்ண அருக்காணி ரிப்பன் போட்டு அலங்கரித்திருப்பார்கள். இப்படி சுற்றி நடப்பதை வேடிக்கை பார்த்து கிண்டலடித்துக் கொண்டிருக்கையில் வரிசையும் நகர, எங்கள் முறை வந்தவுடன் நான்கு பேருக்கும் சேர்த்து இருக்கைகள் இருக்குமாறும் ஜன்னலோர இருக்கை வேண்டும் என்று கேட்டுக் கொள்ள அவரும் போட்டுக் கொடுத்து விட்டார். அப்பாடா! பெட்டிகள் இல்லாமல் இனி சுதந்திரமாக உலா வரலாம் என்று நினைக்கும் பொழுதே அம்மா பசிக்குது பாட்டு பாட ஆரம்பித்து விட்டான் சுப்பிரமணி!

பரந்து விரிந்த நியூயார்க் விமான நிலையத்தில் உணவகங்களுக்கும் கடைகளுக்கும் பஞ்சமில்லை. பிரகாசமாக இருக்கும் இடத்தில் இணைய தொடர்பு வேறு இலவசம். பலரும் தங்கள் கைபேசியில் மூழ்கி இருந்தார்கள். வயதானவர்கள் மட்டும் கைபேசி இல்லாததால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சாப்பாடு இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. அவரவர்க்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு சாப்பிட்டு முடித்தாலும் இன்னும் இரண்டு மணிநேரத்தை ஓட்டியாக வேண்டும். இளம்பெண்களும் ஆண்களுமாய் திடீரென நம் மக்களின் கூட்டம். ஆங்கிலத்தை இழுத்து இழுத்து ஹிந்திக்காரர்கள் பேசுவதை கேட்க வேடிக்கையாக இருக்கும். நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வந்தமர்ந்த பெண்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்டதற்கு வால் ஸ்ட்ரீட் நிர்வாகம் ஒன்றினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 250 எம்பிஏ பட்டதாரிகளாம். பெங்களூரிலிருந்து வந்திருந்தார்கள்! ஒரு வார ட்ரைனிங். நியூயார்க் பிடிக்கவில்லை. சாப்பாடு சரியில்லை என்று புலம்பித் தள்ளி விட்டார்கள்! இவர்களே இன்னும் ஓரிரு வருடத்தில் இங்கு வந்து செட்டிலானாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை. சீ சீ இந்தப் பழம் புளிக்கும் கதை தான்! நினைத்துக் கொண்டேன். நன்றாக பேசினார்கள். மகளுக்கும் பொழுது போனது. இன்னும் சிறிது நேரம் இருந்தது. வேறு வழி? நேரம் போவதே தெரியாமல் கடைகளைச் சுற்றி பார்க்க ஆரம்பித்து நேரமானவுடன்  விமானத்திற்குள் சென்று இருக்கைக்குள் அமர்ந்து கொண்டோம்.

முதன் முறையாக எமிரேட்ஸ் விமான பயணம். பல நல்ல ரெவியூக்களை கேட்டிருந்ததால் ஆவலுடன் காத்திருந்தோம். மாடியில் படுக்கை வசதிகளுடன் முதல் வகுப்பு ! ஏறிய பல குழந்தைகளும் மாடிக்குச் செல்ல அடம் பிடித்து வேண்டா வெறுப்பாக தங்கள் இருக்கைக்கு வந்து கொண்டிருந்தார்கள். நான் பயணம் செய்ததிலேயே மிகப்பெரிய விமானம் இதுவாகத் தான் இருக்கும். அம்மா பக்கத்தில் நான் தான் உட்காருவேன் என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் மகனும் மகளும். நடுவில் உட்கார்ந்தால் தோளில் சாய்ந்து தூங்குகிறேன் பேர்வழி என்று என்னை ஒரு வழியாக்கி விடுவார்கள். தப்பித்து மகளின் ஜன்னலோர இருக்கையில் தாவி அமர்ந்து கொண்டேன். பக்கத்தில் மகளும் அவளுக்கருகில் மகனும் அமர்ந்து கொள்ள, தன் இருக்கையை தாரை வார்த்து விட்டு கணவர் பக்கவாட்டு முன்வரிசையில் நடு இருக்கையில்(எனக்குப் பிடிக்காத வார்த்தை மிடில் சீட் ) அமர்ந்து கொண்டு பக்கத்து இருக்கைப் பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தார்! கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

பிளாஸ்டிக் புன்னகை விமான பணிப்பெண்கள் இறுக்கமாக உடையணிந்து கொண்டு மாடிக்கும் கீழுக்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். எப்படி இவ்வளவு இறுக்கமாக அணிய முடிகிறதோ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். லேயர் லேயராக முகப் பூச்சுகள்! ஹ்ம்ம்... இவர்களால் தான் மேக்கப் தொழிலே வெற்றிகரமாக நடக்கிறதோ? கேபின் குழுவில் பெரிய கண்கள், லேசான வழுக்கைத் தலையுடன் ஒரு ஃபகத் ஃபாசில் கூட இருந்தார் :) முதலாம் வகுப்பு மற்றும் பிசினஸ் வகுப்பு பிரயாணிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்புகள் நடந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் விமானி நியூயார்க் நகர நேரம், சேரப்போகும் துபாய் நகர நேரங்களை கூறி விட்டு அனைவரையும் வரவேற்று சுகமான பயணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு விமானத்தை இயக்க, அரபி, ஆங்கில வரவேற்புரைகள், விமான பாதுகாப்பு விளக்கங்கள் முடிந்தவுடன்

கடைசி நிமிட அப்டேட்களை எழுதி முடித்து கைபேசியை அணைத்து விட்டு விமானம் முன்னாடி செல்கிறதா பின்னோக்கிச் செல்கிறதா என்ற குழப்பத்தில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விமான நிலையம் விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. இரவு நேர நியூயார்க் நகரம் மின்னொளியில் ஜொலிப்பதைக் காண ஆவலுடன் காத்திருந்தேன். விமானம் மெதுவாகத் திரும்பி ரன்வேக்குள் செல்ல முயலுகையில், எரிந்து கொண்டிருந்த அனைத்து விளக்குகளும் 'பட்பட்'வென கண நேரத்தில் மின்துண்டிப்பு இழந்து விமானமே இருட்டில் மூழ்கியது. என்னடா! மதுரைக்கு வந்த சோதனை? யாருக்கும் எதுவும் புரியவில்லை. அநேகமாக பயணிகளின் முதல் அனுபவமாக இருக்க வேண்டும். கொஞ்சம் பதட்டம் கூடும் பொழுது திகைத்துப் போயிருந்த விமான பணிப்பெண்களும் அனைவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். செயலிழந்த விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து கதவு திறக்கும் வரையில் ஒரே படபடப்பு தான். நடு வானில் அட்லாண்டிக் மேல் பறக்கையில் இம்மாதிரி அசம்பாவிதம் நடந்திருந்தால்...முருகா! முருகா! குடும்பத்துடன் போகும் பொழுது தான் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமா?

சிறிது நேரத்தில் தண்ணீர் கொடுத்து ஆற்றுப்படுத்தினார்கள். ரணகளத்திலும் கிளுகிளுப்புக்கு குறைச்சலில்லை என்பது போல் முதல் வகுப்பு பிரயாணிகளுக்கு அந்த நேரத்திலும் சாப்பாடு போய்க் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொறியாளர்கள் விமானத்தின் பழுதை சரி செய்ய போராடிக் கொண்டிருந்தார்கள். கடவுளே! துபாயில் அதிக நேரமில்லையே? சென்னை செல்லும் விமானத்தை விட்டு விட்டால் மதுரை செல்வதும் தாமதம் ஆகி விடுமே என்ற கவலை தொற்றிக் கொள்ள... விமான பணிப்பெண்ணோ அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. துபாயில் பார்த்துக் கொள்வார்கள் என்று சொன்னாலும் பதட்டமாகவே இருந்தது.

வேறு வழியின்றி மீண்டும் எங்கள் கைபேசியில் தஞ்சம் புகுந்து கொண்டோம். சில மணிநேரங்களுக்குப் பிறகு  விமானம் புறப்படலாம் என்று பொறியாளர்கள் அனுமதித்த பிறகு ரன்வேக்குள் காத்திருந்து மேலேறிச் சென்றவுடன் தான் நிம்மதியாக இருந்தது. துபாய் பயணம் எவ்வித தடங்கலும் இன்றி செல்ல வேண்டும் என்று கடவுளை கும்பிட்டுக் கொண்டேன். விரைவிலேயே இரவு உணவும் வந்து விட்டது. அப்புறமென்ன? என்னென்ன படங்கள் இருக்கிறது என்று தேடி படம் பார்க்க ஆரம்பித்தோம். தூங்கலையா என்று பக்கத்து வரிசையில் இருந்து கணவர் கேட்க...படம் பார்க்க போறேன் என்று நான் மட்டும் கடமையாக இரண்டு படங்கள் முடிக்க, பலரும் தூங்கி விட்டிருந்தார்கள். நள்ளிரவு ஸ்னாக் வேறு வந்தது. 

கண்கள் கூசும் அதிகாலைச் சூரியோதயம். ஜன்னலை மூடி விட்டு ...மதுரைக்குப் போறேனடி அங்க மல்லிப்பூ மண் மயக்கும் என்று கண்ணயர...மீண்டும் முழிப்பு வர, காலை உணவு இத்யாதிகள் முடிந்து அழகு மலை சூழ் ஐரோப்பிய நகரங்கள் மறைந்து வறண்ட பாலைவனம்...ஒ ஓ! ஓங்கி உயர்ந்த துபாய் கட்டடங்கள். மண் மலைப்பிரதேசங்கள்! வெயிலின் தாக்கம் விமானித்திற்குள் வரை வருகிறதே.. வந்தே விட்டது துபாய். ஒன்றரை மணி நேர தாமதம்! நாங்கள் சென்னை செல்ல வேண்டிய விமானம் காத்திருக்குமோ இல்லை புது பிரளயம் ஏதாவது காத்திருக்குமோ என்று கவலை! அந்த விமானத்தில் இருந்த அனைவருமே அடுத்த விமானம் பற்றிய அச்சத்துடன் பணிப்பெண்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் ஒரே பதில்: உங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கவலை வேண்டாம் என்பதே. 

வெளியில் இறங்கினால் மூச்சு முட்ட அனல்! அடேங்ங்கப்பா! சென்னை சென்னை சென்னை என்று ஏலம் விட்டுக் கொண்டிருந்தவரைத் தொடர்ந்து நடக்க, இல்லை இல்லை ஓட, காத்திருந்த விமானத்தில் ஏறிய பிறகே நிம்மதியாக இருந்தது. மீண்டும் ஒரு படம். சாப்பாடு. அதிகாலை சென்னையில் தரையிறங்க...அதிக கெடுபிடிகள் இல்லாத இமிகிரேஷன் வரிசை. பெட்டிகள் வந்தவுடன் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து சூடாக ஒரு கமகம காஃபி. அநியாய விலை :(

மதுரை செல்லும் விமானமும் நேரத்திற்குப் புறப்பட...ஒரு மணி நேரத்திற்குள் நான் படித்த கல்லூரியைப் பார்த்தவுடன்...சொர்க்கமே என்றாலும்ம்ம்ம்...

Wednesday, June 20, 2018

Wild mushrooms




மழைக்காலத்தில் மரங்களின் கீழும் அதன் தண்டுப்பகுதிகளிலும் பூத்திருக்கும் காளான்கள் சூழலியலில் பெரும்பங்கு வகிக்கிறதாம். சில காட்டு காளான்கள் விலங்குகளுக்கு உணவாகவும் மரங்களுக்குத் தேவையான கனிமங்களை அளித்து தனக்குத் தேவையான உணவினை மரங்களிலிருந்தும் பெற்றுக் கொள்கிறது. கொத்துக்கொத்தாக பல்வேறு வண்ணங்களில், வடிவங்களில், ஈரப்பத சூழ்நிலையில் வளரும் காளான்களும் தான் எத்தனை அழகு!

பிளாஸ்டிக் எனும் அரக்கன்

வட அமெரிக்கா வந்த புதிதில் பிளாஸ்டிக் கப்புகளில் தயிர், வெண்ணெய், ஜூஸ், பால் என்று கடைகளில் வரிசையாக அலங்காரமாக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன். மதுரையில் இருந்த வரையில் தயிர் வாங்குவதெல்லாம் பாத்திரத்தில் தான் அதுவும் அன்றன்று. இப்பொழுது தயிரை வீட்டிலேயே தோய்க்கிறார்கள். பால் கூட கண்ணாடி போத்தல்களில் வந்து கொண்டிருந்தது பிறகு பாக்கெட் பால் என்று பிளாஸ்டிக் பைகளில் வர ஆரம்பித்து விட்டிருந்தது. அம்மா காய்கறி வாங்கி வர மஞ்சள் பையும், வயர் கூடையும் தான் வைத்திருந்தார். நானும் கூட ஊரில் இருந்த வரை. இங்கோ பெரிய பெரிய பிளாஸ்டிக் கேன்களில் பால், தயிர்... என்று பிளாஸ்டிக் சகலத்திலும் வியாபித்திருக்கிறது.காய்கறிகளை, பழங்களை வாங்கி பிளாஸ்டிக் பையில் போட குறைந்தது ஐந்தாறு பைகள் தேறும். பால், தயிர், வெண்ணை, சீஸ், பிரட், முட்டை எல்லாமே பிளாஸ்டிக் உறைகளில். இவை எல்லாவற்றையும் போட்டு எடுத்துச் செல்ல மேலும் சில பிளாஸ்டிக் பைகள். ஒரு குடும்பம் மட்டுமே அத்தனை பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு வாரத்தில் குப்பையில் சேர்க்கிறதென்றால்...ஒரு தெரு, ஒரு நகரம், ஒரு மாநிலம், ஒரு நாடு??? தலையைச் சுற்றுகிறது.

ரத்தப் பரிசோதனைகக்கூடங்களில், மருத்துவமனைகளில், விமான நிலையங்களில், உணவகங்களில் ... கேட்கவே வேண்டாம். அளவே இல்லாமல் பிளாஸ்டிக் பொருட்கள்.

எங்கு தான் இல்லை? பார்க்கும் இடங்களில் எல்லாம் இந்த மக்காத குப்பைகள் தான்! எப்படி ஒழிப்பது என்று புரியாமல் விழித்துக் கொண்டு நம் பங்கிற்கு மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே இருக்கிறோம்.

ஒவ்வொருவரும் முனைப்போடு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தாலன்றி எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நம்மால் முயன்ற வரை சிறு சிறு விஷயங்களில் கவனம் கொண்டால் பிளாஸ்டிக் குப்பைகளை முடிந்தவரை தவிர்க்கலாம். முறையாக மறுசுழற்சி செய்யலாம்.

கன்னியாகுமரி, நாகர்கோவில் மாவட்டங்களில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு ஆறுதலாக இருந்தது. கண்டிப்பாக அனைத்து மாவட்டங்களும் முறைப்படுத்த வேண்டிய ஒன்று. இங்கும் கலிஃபோர்னியாவில் சிறிது முயற்சி செய்கிறார்கள்.

நாம் தான் சுற்றுப்புறச்சூழலை மாசுப்படுத்தி இயற்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையும் நம் வருங்கால சந்ததியினரைப் பற்றின கவலையும் ஏதுமின்றி பொறுப்பற்றுத் திரிகிறோம்.

தமிழ்நாட்டு அரசின் சமீபத்திய பிளாஸ்டிக் தடை உத்தரவு நடைமுறைக்கு வந்து செயல்படுத்துவதும் மக்கள் நம் கையில் தான் உள்ளது.

மக்காத குப்பைகளுடன் வாழ்ந்து வரும் நமக்கு அதன் அழிவுகள் ஏற்படுத்தும் அபாயங்கள் உணரும் காலம் நெருங்கி விட்டதை அறிவோமா?

பள்ளிக்கூடம் திறந்தாச்சு !!!!

பழசு தான்ன்ன்ன்ன்... இதெல்லாம் கடந்த காலமாகி விட்டது. குழந்தைகளும் வளர்ந்து விட்டிருக்கிறார்கள்....

பள்ளிக்கூடம் திறந்தாச்சு !!!!

இந்த மாதம் குழந்தைகளுக்கு கொண்டாட்டம் . பெற்றவர்களுக்கு செலவுகள் அதிகமான திண்டாட்டம். ஆம், பள்ளிகள் திறந்ததினால் நண்பர்களையும், புது வகுப்பு ஆசிரியர்களையும் பார்க்க போகும் ஆவல் குழந்தைகளுக்கு. வகுப்பு கட்டணம் , புத்தகம், நோட்டுக்கள் இத்யாதி செலவுகள் என்று பெற்றோரின் பர்சை பதம் பார்ப்பதால பெற்றவர்களுக்கு கவலை அளிக்கும் மாதம்.

அந்த வகுப்புக்குரிய புத்தகங்கள், தேவையான நோட்டுக்கள், பேனா, பென்சில், காம்பஸ் பாக்ஸ், அழி ரப்பர் என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்டுக்கொண்டு, அரசமரம் முக்கிலிருக்கும் மணீஸ் ஸ்டோருக்கு அம்மாவுடன் நான், அக்கா, தங்கை மற்றும் தம்பிகள் போய் விடுவோம். அதற்குப் பக்கத்திலிருக்கும் சாந்தி ஸ்டோர்சில் அவ்வளவாக கூட்டம் இருக்காது 😞

முதலில் , புத்தகங்கள் வாங்குவோம். எனக்கு எப்பொழுதும் புது புத்தகத்தை முகர்ந்து பார்ப்பது பிடிக்கும். அந்த ப்ரெஷ் இங்க் வாசனை நன்றாக இருக்கும். பிறகு, நோட்டுக்கள், வண்ண வண்ண அட்டைகளுடன். பிரவுன்ஷீட் பேப்பர் ரோல், எல்லா நோட்டுக்களுக்கும் அட்டை போடுவதற்கு. மறக்காமல், லேபல் (பறவைகள், மலர்கள் மற்றும் பல வடிவங்களில்) , பேனா (இங்க் அல்லது பால்பாயிண்ட் ), இங்க் பாட்டில், ஸ்கெட்ச் பேனாக்கள், கேமல் காம்பஸ் பாக்ஸ் , வாசனையுள்ள அழிரப்பர் , பென்சில்கள் என்று எங்கள் எல்லோருக்கும் வாங்கிக்கொண்டு, ஜெம்ஸ்/ true nice பிஸ்கட் என்று கொறிக்க ஏதாவது ஒன்றையும் வாங்கிக்கொண்டு பெரிய தொகையை கட்டி விட்டு சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்து சேர்வோம். சில சமயங்களில், கடைப் பையனே வீட்டுக்கு கொண்டு வந்து விடுவார்.

அப்பா வந்தவுடன், நோட்டுக்களுக்கு அட்டை போட பிரவுன் ஷீட் , லேபல் , பேனா, கோந்து/ சாதம் சகிதம் உட்கார்ந்து விடுவோம். இதெல்லாம் , குடும்பமாக செய்வதால் ஒரு குதூகலம் எப்போதும் இருக்கும். என் நோட்டுக்கு தான் முதலில் அட்டை போட வேண்டும் , இல்லை என்னுடையது தான் என்று எல்லோரும் சண்டை போட்டுகொண்டிருக்கும் பொழுது, போடவா வேண்டாமா என்ற அப்பாவின் மிரட்டலுக்கு பயந்து , அமைதியாக அவரவர் நோட்டுக்கள் வரும் வரை காத்திருப்போம். நோட்டை பிரவுன் ஷீட் மேல் வைத்து, அழகாக மடித்து, முனைகளை வெட்டி உள்ளே செருகி விட, சில நிமிடத்தில் பளிச்சென்று, நோட்டுக்கள் அழகாகிவிடும். பிறகு, எங்களுக்கு பிடித்த லேபல்களுடன், காத்திருப்போம். ஒவ்வொருவருடைய நோட்டிலும் லேபல்கள் ஒட்டி, சிறிது காய்ந்த பிறகு , பெயர், வகுப்பு, பாடம் எல்லாம் எழுதி முடித்த பிறகு , அந்த வருடம் வாங்கிய புதிய புத்தகப் பையில் எல்லாவற்றையும் நேர்த்தியாக அடுக்கி, ஒரு முறை தோளில் போட்டு அழகு பார்த்த திருப்தியுடன் அதை ஓரத்தில் வைத்து விடுவோம்.

புத்தகங்களை, அம்மா பைண்டிங் பண்ண கொடுத்து விடுவார். அந்த பைண்டிங் பிரஸ் போக எனக்கு மிகவும் பிடிக்கும். ஏன் என்றால், அங்கு இருக்கும் வினோதமான மெசினும், இங்க் வாசனையும் தான். ஒவ்வொரு பக்கமாக அவர்கள் அந்த மெசினில் வைத்து லாவகமாக வெளியே எடுத்து போடுவதும், ஒரு பக்கம் பைண்டிங் வேலையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும். அவர்களுக்கு பணம் கட்டிவிட்டு, வீடு வரும் வரை புத்தகத்தின் மேலிருக்கும் optical illusion அட்டையை பர்ர்த்துக் கொண்டே வீடு வரும் வரை சுற்ற விட்டு வழியில் தெரிந்த நண்பர்களிடமும் காண்பித்து ஒரு வழியாக புத்தகப் பையில் வைத்து விட்டு , அடுத்த நாள் பள்ளிக்கு சென்று எல்லோரிடமும் காண்பிக்க வேண்டும் என்ற சுகமான நினைவுடன் அந்த நாள் இனிதே முடியும்.

இன்றும் கூட, என் குழந்தைகளுக்கு பள்ளி திறப்பதற்கு முன் தேவையானவைகளை வாங்க கடைகளுக்குச் செல்லும் பொழுது அதே குதூகலத்துடன் நானும் என் மகளும் செல்கிறோம்!!!!

திரும்பிப்பார்க்கிறேன்...சுப்பிரமணி

சுப்பிரமணியின் பள்ளியில் 'Senior Portraits 2019 ' என்று அடுத்த வருடம் பள்ளி முடிந்து செல்லப் போகும் மாணவ, மாணவியரை விதம்விதமாக ஸ்பெஷல் புகைப்படங்களை எடுக்க ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு விபரங்களை அனுப்பி, அவனும் இந்தா ரெஜிஸ்டர் செய்கிறேன் அந்தா ரெஜிஸ்டர் செய்கிறேன் என்று கடைசி நிமிடத்தில் பதிவு செய்து பள்ளி விட்டு வந்ததும் குளித்து முடித்து தயாராகி அவனே இஸ்திரி போட்ட வெள்ளைச் சட்டை , இஸ்திரி போடாமல் ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்த பேண்ட், தலையை படிய வாரி...

என்னடா! அப்போவோட வெள்ளைச்சட்டைய போட்டுட்டு வந்து நிக்கிற? உன்னோடது எங்க?

அது எங்க இருக்குன்னு தெரியலைம்மா. சத்தம் போடாத! அப்பா திட்டுவாரு😧😧😧

ஹா! இதுக்குத்தான் நீயே அயர்ன் பண்ணிக்கிறேன்ன்னு சொன்னியாக்கும். அதானே சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? உன்னோட...😡😡😡

சரி, சரி... எப்படி சிரிச்சு போஸ் குடுக்குறதுன்னு சொல்ற மாதிரி சிரிச்சு வையி.

போய் மூஞ்சிய கழுவிட்டு கொஞ்சம் பவுடர போட்டுக்க.

இப்பத்தான் குளிச்சேன்.

குளிச்ச மூஞ்சி மாதிரியா இருக்கு?😯

பவுடர் எங்கம்மா?

அது சரி!

என்னடா முன் பதிவுன்னுட்டு இவ்வளவு நேரம் வெயிட் பண்ண வைக்கிறாங்க. என்னை விட என் பக்கத்தில் பொறுமையில்லாமல் உட்கார்ந்திருந்த 'வெள்ளையம்மா' மகனிடம் புலம்பிக் கொண்டே இருந்தார். அடிக்கடி அவன் தலையை கோதி ‘டை’ சரி பண்ணி, அவன் ஏதோ சிபிஐ ஆஃபிசர் போல் தலையில் ஜெல் தடவி அழகாக சட்டையை இன் செய்து ... பார்றா எவ்வளவு நீட்டா வந்திருக்கான். நீயும் வந்திருக்கியே? அழுக்கு மூஞ்சி!

அவருடைய பெண் இரு வருடங்களுக்கு முன்பு தான் பள்ளி முடித்து கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். இவனை கல்லூரிக்கு அனுப்பத்தான் பயமாக இருக்கிறது என்றார். ஓஹோ! உங்க வீட்டு சுப்பிரமணியா அவன்? எனக்கும் தான் என் பையனை அனுப்ப பயமாக இருக்கிறது என்று இரண்டு பேரும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் தான் இருக்கிறோம் என்பதை அடுத்தடுத்து பேசிய விஷயங்களிலிருந்து தெரிந்து கொண்டோம்.

பெண் குழந்தைகளை பயமில்லாமல் அனுப்பி விட முடிகிற காலமாகி ஆண் குழந்தைகளை நினைத்து அதிகம் கவலைப்படுகிறோம்! என்னவோ போடா மாதவா!😔😔😔

எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுப்பிரமணி கைபேசியுடன். ஏண்டா உன் சட்டை இவ்வளவு கசங்கியிருக்கு? அயர்ன் பண்ணியா இல்லியா? அப்பாட்ட கொடுத்திருந்தா நல்லா பண்ணியிருப்பார் இல்ல?

ஹிஹிஹி! நான் வயிறு வரைக்கும் தான் அயர்ன் பண்ணினேன். அதுவரைக்கும் தான படத்தை எடுப்பாங்க!😮😮😮

ஐயோ கடவுளே! எப்பேர்ப்பட்ட அறிவுஜீவி? முழுச்சட்டையை அயர்ன் பண்ணாத சோம்பேறி!

நல்ல வேளையாக படத்தை எடுக்கும் ஸ்டூடியோ ஆட்களே வெள்ளைச்சட்டையைக் கொடுத்து மானத்தைக் காப்பாற்றி விட்டார்கள்.

8 போஸ்களுக்கு ஒரு விலை, 16, 32 போஸ்களுக்கு ஒவ்வொரு விலை! இருப்பதிலேயே மினிமம் 8 போஸ்கள். இது போதும்டா. பொண்ணுங்கன்னா அர்த்தம் இருக்கு. ஒவ்வொரு ஆங்கிள்ல வித்தியாசமா தெரிவாங்க. பசங்களுக்கு இதுவே ஜாஸ்தி. எந்த ஆங்கிள்லயும் ஒரே மாதிரித்தான் இருப்பீங்க.

எதைப் பற்றியும் கவலைப்படறவன் இல்ல என் சுப்பிரமணி. ஒரு போஸ் கூட அவனுக்கு ஓகே தான்.

இங்க பாரு, அவங்க சொல்ற மாதிரி ஒழுங்கா தலைய ஆங்கிள்ல வச்சு இப்படி சிரிக்கணும். எங்க சிரி?

அய்யே! இதுக்கு நீ சிரிக்காமலே இருக்கலாம். நல்லா சிரிடா. பல்லை காட்டாத.

அவன் ஸ்டூல் மீது உட்கார்ந்து ஃபோட்டோகிராபர் சொல்ல சொல்ல ஒவ்வொரு கோணத்திலும் படமெடுக்க, பின்னிருந்து நான் மூன்றாம் பிறை கமல்ஹாசனாய் இப்படி சிரிடா , சட்டைய கொஞ்சம் இழுத்து விட்டுக்கோ, கூன் போடாம நிமிந்து உட்காரு என்று அடுத்தடுத்து சைகையில் சொல்ல... கையில் பட்டம் வாங்கிய மாதிரி தொப்பியெல்லாம் போட்டுக் கொண்டு ஒரு க்ளிக். போடாமல் ஒரு க்ளிக் இப்படி பல போஸ்களில் க்ளிக் க்ளிக் க்ளிக் ... இந்தப் படம் சுமாரா வந்திருக்கு. அது நல்லா இருக்கு என்று அங்கேயே கணினியில் பார்த்து... படம் எடுத்தவரையும் டென்ஷானாக்கி ... 😛

இதில் ஒரு படம் அவனுடைய 'இயர் புக்'கில் போட வாங்க வேண்டும். கொள்ளைக்காசு சொல்வார்கள்.

அங்கு வந்திருந்த அவன் வயதுப்பெண்களில் சிலர் இளமை பொங்க இயற்கை அழகுடன் ....செதுக்கிய சிற்பம் போல் மாசு மருவில்லாத முகத்துடன் ஒரு மாணவி.... மிடில் ஈஸ்டர்ன்... அழகென்றால் அவளல்லவோ பேரழகி! அனாவசிய மேக்கப் இல்லை. சிரித்தால்... அபிராமி! அபிராமி! நெற்றி, கண்கள், மூக்கு, இதழ்கள்... செதுக்கி வைத்த சிற்பம் போல்! சில மாணவிகள் ஓவராக மேக்கப் போட்டுக் கொண்டு மிகவும் செயற்கையாக.... ஆனாலும் அந்த அழகுப்பதுமை! சான்ஸே இல்லை... ஹாலிவுட் தேவசேனாக்கள் அவளிடம் பிச்சை எடுக்க வேண்டும். பெண்கள் தான் ஒவ்வொரு பருவத்திலும் எத்தனை அழகு! அதுவும் பதின்பருவப் பெண்கள்...நான் இப்படி வருகிற போகிற மாணவிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் இந்த பசங்கள் எல்லாம் கைபேசியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!

ஒரு வழியாக எடுத்த படங்கள் வந்து விட்டது. ஒரு சில படங்களைத் தவிர எல்லா படங்களிலும் ரகுராம் ராஜன் மாதிரி சிரிச்சு வச்சுருக்கான் எம் புள்ள.

அமெரிக்காவும் என் ஆரம்ப நாட்களும்...மிஷிகன் அனுபவங்கள்

அமெரிக்கா வந்த புதிதில் நாங்கள் தங்கி இருந்ததோ மிக்ஷிகனில் Farmington Hills என்றொரு நகரத்தில். என் வேலையிடமோ Grand Rapids என்ற பக்கத்து நகரத்தில். கார் ஓட்டத் தெரியாத நாட்கள். நான் மட்டும் அங்கு தங்கி இருக்க வேண்டிய சோதனையான காலம்! அதுவரை குழந்தை, கணவரை விட்டு நாட்கணக்கில் தனியாகச் சென்றதில்லை. மதுரையில் இருந்தவரை என் வீடு, அம்மா வீடு என்றிருந்து பழக்கப்பட்ட எனக்கு குழந்தையை விட்டுத் தனியாக இருக்க வேண்டியிருக்கே என்ற கவலை. எப்படி இருக்கப்போகிறேனோ என்ற பதட்டம். அதுவும் தனியாக ரூம் எடுத்து ஹோட்டலில் :( ஒரே அழுகை. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்கிறதோ என்று எரிச்சல்.

அந்த நாளும் வந்தது. விதியை நொந்து கொண்டே பயத்துடன் நான் மட்டும் அந்த அறையில். உணவை ஆர்டர் செய்தால் பெரிய தட்டு நிறைய... அமெரிக்க உணவுகள் பழக்கமில்லாததால் சாப்பிடவும் தெரியாது அப்போது. பாதி சாப்பிட்டு மீதியை அப்படியே வைத்து விட்டு கொஞ்ச நேரம் டிவி பிறகு புத்தகத்தைப் படித்தாலும் தூக்கம் மட்டும் வருவேனா என்று அடம்பிடிக்க...நேரம் செல்ல செல்ல ஒருவித பதற்றம்...

விளக்குகளை அணைத்து விட்டு கண்ணை மூடினால், வெளியில் பேசிக்கொண்டே நடந்து செல்பவர்களின் சத்தம் வேறு பயத்தை கொடுத்தது. அப்படி ஒரு பயந்தாங்கொள்ளி நான் :( உடனே, எல்லா விளக்குகளையும் போட்டு விட்டு, துணைக்கு டிவியையும் ஆன் பண்ணி...தனிமை தந்த பயத்தைப் போக்க மிகவும் சிரமப்பட்டேன்...அதிகாலையில் தூக்கம் வர கண்ணை மூடினால், எழுப்பி விடச் சொன்னீர்களே என்று ரிசெப்ஷனிஸ்ட் எழுப்பி விட, சிவந்த கண்களுடன் அவசரஅவசரமாக தயார் செய்து கொண்டு காலை உணவை சாப்பிடச் சென்றால் muffins, cupcakes, bread, bagels, cereals , பழங்கள், ஜூஸ் , காஃபி என்று அழகாக பரப்பி வைத்திருந்தார்கள். சாப்பிடத் தெரிந்த ஒரே ஐட்டம் cornflakes மட்டுமே. அரையும்குறையுமாக சாப்பிட்டு விட்டு மதியத்திற்கு ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை கொஞ்சம் லவட்டிக் கொண்டு...வாடகை காருக்காக காத்திருந்தேன்.

நினைத்த நேரத்தில் பேசிக்கொள்ள இன்றைய செல்ஃபோன் காலமும் கிடையாது. காலையில் கணவரிடமிருந்து போன் வந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இப்படியெல்லாம பயப்படுவே, யூ ஆர் எ ஸ்ட்ராங் வுமன் அப்படி இப்படின்னு டயலாக் வேற ... இப்படி சொல்லி சொல்லியே என்னைய ஒரு வழி பண்ணிட்டாங்களேன்னு எனக்குள்ள பயங்கர வருத்தம். சந்தோஷமா ஆபீஸ் போ. புது ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. யூ வில் பி ஆல்ரைட். அப்புறம் நீ எங்களடோ பேசுறதுக்கு கூட நேரமிருக்காது...ன்னு வேற சொல்லி எரிச்சல் படுத்த...சரி நான் போயிட்டு வாரேன். கார் வந்துடுச்சு. குழந்தைய பத்திரமா பார்த்துக்கோங்கன்னுட்டு கிளம்ப...

ஓட்டிக் கொண்டு வந்தவரோ ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர். அவர்களைப் பார்த்தாலே எனக்கு ஒரு இனம் புரியாத பயம் :( அவர்கள் பேசுவதை புரிந்து கொள்வது வேறு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. படபடக்கும் இதயத்தோடு ஒரு வழியாக அலுவலகம் வந்து சேர்ந்தேன். புது இடம், புது மக்கள்...அலுவலகத்தில் ஏதோ ஒரு தேவ பாஷையில் அவர்கள் பேச. சுத்தம். ஆங்கிலப்படம் பார்ப்பது போல் இருந்தது. கைநிறைய படிவங்கள். ஒரு மண்ணும் புரியலையே?!

ஹெல்த் இன்சூரன்ஸ், லாங் டெர்ம் டிசபிளிட்டி இன்சூரன்ஸ், 401K...இத்யாதி இத்யாதிகள்...கடவுளே இந்த குப்பைகளை என்னிக்கு படிச்சு என்னிக்கு ...'திருதிரு'வென நான் முழிப்பதை பார்த்த அந்த சைஸ் ஜீரோ வெண்ணிற மங்கை, ஒன்னும் அவசரமில்லை. மெதுவா படிச்சிட்டு அடுத்த வாரம் கொடுத்தா போதும்னு சொன்னதுக்கப்புறம் தான் அப்பாடாவென்றிருந்தது.

எப்படி இப்படி 'சிக்'கென்று இருக்கிறாள்! அழகா மேக்கப் போட்டிருக்காளே. என்ன வயசு இருக்கும்? கல்யாணம் ஆகியிருக்குமா? அழகா இருக்கே அவ போட்டிருக்க ஷூ! என் கவலைகள் திசை திரும்ப...

புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களை ஒரு ஹாலில் உட்கார வைத்தார்கள். அங்கே போனால்...ஐயோ அம்மா...இம்பூட்டு தேசிகளா ??? நடுநடுவே கொஞ்சம் மானே தேனேன்னு போட்டுக்குற மாதிரி ரெண்டு சைனீஸ், மூணு அமெரிக்கன்ஸ்...

நானாக யாரிடமும் சென்று பேசத் தயங்குவேன். நான் பேச ஆரம்பித்தால் அவர்கள் தயங்குவார்கள். அது வேற விஷயம் :) முதலில் என்னிடம் அறிமுகப்படுத்தி பேசியவர் ஒரு தெலுங்குக்காரர். இதற்கு முன் ஏதோ ஒரு ஊரில் வேலை பார்த்திருக்கிறார். இப்பொழுது தான் அமெரிக்கா வந்திருக்கிறீர்களா என்று ஆச்சரியப்பட்டு நாங்கள்லாம் சீனியர்ஸ் லுக் கொடுத்து கொஞ்சம் இலவசமாக அறிவுரைகளையும் அள்ளித் தெளித்து விட்டு நகர...

அமைதியாக உட்கார்ந்திருந்தேன். பிறகு கனடாவிலிருந்து வந்திருந்த ஒரு கனேடிய பெண், PhD முடித்த சைனீஸ், கொஞ்சம் வயதானவர்கள் என்று பலருடனும் பேசிய பிறகு, ஹாய் ஐயாம் ஸ்ரீதேவி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவரிடம்...ஹாய் என்றேன். வேர் ஆர் யூ ஃப்ரம்? இந்த கேள்வி இன்று வரை என்னை திக்குமுக்காடச் செய்யும். அன்றும் நான் யோசித்துக் கொண்டிருக்க அவரே, இன் இந்தியா என்றவுடன், ஹி ஹி ஹி...மதுரை, தமிழ்நாடு என்றவுடன்...ஹேய் ...எனக்கு சேலம்னு சிக்சர் அடிச்சாரே!!! எனக்கா அவ்வளவு சந்தோஷம்! அமெரிக்காவுல, வேலை பார்க்கிற இடத்துல தமிழ்ல பேச முடியுது...அபிராமி அபிராமின்னு சோ ஹேப்பி!

நீங்க மதுரையா? என் கணவரும் மதுரை தான். ஆஹா!! மதுரை வேறயா?? அதுவரையில் இருந்த தனிமை உணர்வு மெல்ல மெல்ல விலகிச் செல்ல...எப்படா சாயங்காலம் வரும். கணவரிடம் சொல்ல வேண்டுமே என்று பரபரத்து... அவருக்கும் கொஞ்சம் டென்ஷன் விலகியது அவர் பேச்சிலிருந்து தெரிய...

அடுத்த நாளே ஸ்ரீதேவி அவர் கணவர் கண்ணனை அறிமுகப்படுத்த, அவருக்கும் என்னைப்ப் பார்த்ததில் மதுரையிலிருந்து வந்திருக்கும் பெண் என்று ஒரே பாசம். படித்த விவரங்கள், ஊர் பற்றி பேச ஆரம்பித்து அவர்கள் வீட்டுக்குத் தினமும் டின்னருக்கு அழைத்துச் செல்ல... மொழி, ஊர் பாசம்ன்னா என்னன்னு தெரிய ஆரம்பித்தது.

எப்படா வெள்ளிக்கிழமை வரும் என்று (அன்றிலிருந்து இன்று வரை) காத்திருப்பேன். முதல் பஸ் பயணம் அமெரிக்காவில். மீண்டும் படப்படப்பு. தூங்கிடக்கூடாதே என்று கவலை. பஸ்சில் ஏறினால் நான் மட்டும் தான் ப்ரவுன் நிறத்தில்! இரண்டு மூன்று வெள்ளை அமெரிக்கர்கள். டெட்ராய்ட் செல்லும் அந்த வண்டியில் நிறைய சாமுவேல் ஜாக்சன்களும், ஜானெட் ஜாக்சன்களுமாய்...அய்யோ...ஒரே நேரத்தில் இவ்வளவு கருப்பு அமெரிக்கர்களை கண்டதும் பயம். அவர்கள் பார்க்க கொஞ்சம் என்ன, நன்றாகவே முரட்ட்ட்ட்ட்ட்டுத்தனமாக இருந்தார்கள். பெரும்பாலான ஆண்களின் கண்கள் 'விஜயகாந்தின் கண்கள்' போலவே சிவப்பா... பெண்களோ பேய் நகங்களுடன். பெரிய பெரிய உதடுகள்...கண்களும் பெரிதாக...அது என்ன முடியா? ...அப்படி ஒரு சுருட்டை. உட்கார அதிக இடமெடுத்துக் கொண்டு...நானோ ஒடுங்கிக் கொண்டே ஒருத்தியின் அருகில்...குடித்து விட்டு வந்திருப்பாளோ? சிகரெட் வேற புகைத்திருப்பாள் போலிருக்கே! குடலை குமட்டும் நாற்றம். இடம் மாறி உட்காரலாம் என்றால்...எதுவுமே பிடிக்கவில்லை. எப்படா ஊர் போய்ச் சேருவோம் என்று இருந்தது.

நடுநடுவே வண்டி நிற்க, கறுப்பாக பயங்கரமாக இருந்தவர்கள் சிலர் இறங்க, பயங்கர கருப்பாக இருந்த சிலர் ஏற...இவர்களுடன் பயணித்த நேரங்களில் 'டப் டப்' என்று அனாயசமாக துப்பாக்கி எடுத்து கொன்று போடும் படங்கள் மனதில் நிழலாட... கடவுளே, ஏன் இதெல்லாம் இப்ப ஞாபகத்துக்கு வந்து தொலையுது? போராட்டத்துடனே ஊர் வந்திறங்கியதும்...குழந்தையையும், கணவரையும் பார்த்தவுடன் தான் அப்பாடா என்றிருக்கும்.

. நான் தனிமையில் பயணம் செய்து அநியாயத்திற்கு மாட்டிக்கொண்ட ராஜபாளையம்-விருதுநகர்-மதுரை பயணம் மூளையில் மின்னலடிக்க...இன்று நினைத்தாலும் குலை நடுங்கும் அந்த அனுபவம் போலில்லாமல், பஸ் பயணங்களில் மனிதர்களை, அவர்களின் நடை உடை பாவனைகளை என்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்து...நன்றாக குடித்து விட்டு வந்தாலும் 'கம்'மென்று அமைதியாக, வாந்தி கீந்தி எடுக்காமல், முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும் பெண்களை நோண்டாமல், கண்களால் கற்பழிக்காமல், கண்ணிருந்தும் குருடர்களாக இடித்துக் கொண்டு ஏறாமல்...அமைதியான பயணம் பிடிக்க ஆரம்பித்தது

பயந்தாங்கொள்ளியாக இருந்த என் ஆரம்பகால நாட்கள் அவ்வளவு உவப்பானதாக இல்லை தான். ஆனாலும் எனக்குப் பிடித்திருந்தது.

😀😀😀

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...