Sunday, March 22, 2015

நீ எப்பம்மா வருவே???

காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு காலங்கள் ஓடினாலும் இந்நாள் மட்டும் நினைவுகளை பின்னோக்கிச் செல்ல வைத்து விடுகிறது. என்றாவது ஒருநாள் இறக்கத் தான் போகிறோம் என்று தெரிந்திருந்தாலும் அந்த இழப்பு நம்மைத் தாக்கும் பொழுது தான் அதன் பாதிப்பு அதிகம் தெரிகிறது.

வைத்தியம் செய்ய வசதியில்லாமல் இறப்பது, பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லாமல் இறப்பது, முதுமையின் காரணமாக இறப்பது என்பதை ஏற்றுக் கொள்ளும் மனம், 'திடீர்' இழப்பை ஏற்றுக் கொள்ளத்  தடுமாறுகிறது. அதுவும் குடும்பத்தில் உள்ளவரின் இறப்பு எனும் போது அதன் பாதிப்பிலிருந்து மீள்வதும் கடினமாக இருக்கிறது.

ஐந்து வருடத்திற்கு முன்பு இதே நாளில் அன்று தொலைபேசியில் அடுத்தடுத்துஅழைப்புகள் வந்திருந்ததைப் பார்த்தவுடனே ஒரு நெருடல். எடுத்து பேசும் பொழுது தம்பி கவலையுடன் அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம். மதியம் திடீரென்று நெஞ்சு வலிப்பது போல் இருக்கிறது என்றார். அந்த நேரம் வரை அவருக்கு ஒன்றும் சீரியஸாக இருக்காது என்ற நம்பிக்கையில் அவனும் இருந்தான்.

எந்த ஆஸ்பத்திரியில் ?

தெற்குவாசல் வடமலையானில்.

டாக்டர்கள் இருக்கிறார்களா?

பெரிய டாக்டருக்குத் தகவல் சொல்லியாயிற்று. அவர் எப்போது வருவார் என்று தான் தெரியவில்லை. அப்பாவை அவசரப்பிரிவில் வைத்திருக்கிறார்கள். நீங்கள் யாரும் அருகில் இல்லை. எனக்கு பயமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டான்.

ஒன்றும் ஆகாது. கவலைப்படாதே. என்ன நடக்கிறது என்று தெரியப்படுத்து என்று ஃபோனை வைத்து விட்டாலும் மனசு அடித்துக் கொண்டு தான் இருந்தது. வாழ்க்கை நிம்மதியாக போகிறதே என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு செய்தியா??

அடுத்து என்ன செய்தி வருமோ என்று காத்திருந்த நேரத்தில் மூத்தவனிடம் இருந்து ஃபோன். ஐயோ! இவன் என்ன சொல்ல போகிறானோ என்று படபடப்புடன் எடுத்தால்...

அப்பா உயிருடன் இல்லை என்று தேம்பி தேம்பி சிறு குழந்தையைப் போல் அழுது கொண்டே சொல்லவும் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. கம்பெனியில் மூத்த பதவியில் இருப்பவன், குடும்பத்தில் எனக்கு இளையவன் என்றாலும் மூத்தவனாக பொறுப்புகளைச் சுமப்பவன் வாய் விட்டு அழும் பொழுது ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்க... வந்த அழுகையையும் கட்டுப்படுத்திக் கொண்டு, ஒரு மகனாக உன் கடமையை அவருக்குப் பிடித்த மாதிரி செய்திருக்கிறாய். போன மாதம் கூட உன் வீட்டில் இருக்கும் வரை அவரை நன்றாகவே கவனித்திருக்கிறாய். வேறு என்ன செய்ய முடியும்? இப்படி ஒரு நிலைமை வரும் என்று தெரியுமா என்ன? வருத்தப்படாமல் போய் அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடி. அழாதே. எதுவும் நம் கையில் இல்லை.

சரி, நீ எப்பொழுது வருவாய்???

எனக்காக காத்திருக்க வேண்டாம், சொல்லும் போதே உடைந்து போனேன்.

அதற்குள் மதுரையில் இருந்து தம்பி சின்னவனும், நீங்கள் எல்லோரும் வரும் வரை அப்பாவை வைத்திருக்கலாம் என்று ஐஸ்பாக்ஸ் சொல்லி இருக்கிறோம். வந்து விடு சீக்கிரம்.

நான் இன்று கிளம்புவது சாத்தியமில்லை. நாளை இரவு கிளம்பி வந்து சேருவதற்குள் இரண்டு மூன்று நாட்கள் ஆகி விடும். எனக்காக யாரும் காத்திருக்க வேண்டாம். காரியங்களை முடித்து விடுங்கள்.

பெற்றவன் முகத்தை பார்க்க கூட முடியாத தொலைதூரத்தில் இருந்து கொண்டு என்ன செய்ய முடியும்? மெளனமாக அழுவதைத் தவிர!

சில நிமிடங்களுக்குள் மீண்டும் ஃபோன். அக்காவிடமிருந்து! நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? நேற்று கூட பேசும் போது நல்லா தானே இருந்தார்? இவருக்கு என்ன குறை? பார்த்துக் கொள்ள ஆளில்லையா?? வசதி இல்லையா?? செக்-அப் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி இப்போது பார். போய் சேர்ந்துட்டார் மொத்தமாக! அவளும் அழுது கொண்டே பேச, நீ உன் உடம்பை பார்த்துக் கொள். உன் குரலை கேட்டால் BP ஏறிடும் போலிருக்கு என்றவுடன் கொஞ்சம் தணிந்தாள். நாங்கள் எல்லோரும் கிளம்பி விட்டோம். நீ எப்போது வருவாய்?

ம்ம்ம்...வருகிறேன். நீ போய் பார்த்துக் கொள்.

மனதும், உடலும் சோர்ந்து விட்டது. மனதுக்குள்ளே அழுதழுது தொண்டையும், தலையும் 'விண்விண்' என்று வலிக்க..

அதற்குள் கணவருக்கும் தகவல் தெரிந்து வருத்தப்பட்டார். இப்பொழுதுதான் உன் தம்பியுடன் பேசினேன். நன்றாகத் தானே இருந்தார்? ஷாக்கிங் ஆக இருக்கிறது.

அன்று காலையில் அப்பா கோவிலுக்குச் செல்வதை பார்த்ததாக அவர் நண்பர்களும் கூறி இருக்கிறார்கள். பெரியப்பா பையனோ சித்தப்பாவை அன்று மதியம் பார்த்துப் பேசி விட்டு வந்தேனே? என்னால் நம்பவே முடியவில்லை என்று கணவரிடம் சொல்லி இருக்கிறார்.

சரி, நான் பிறகு பேசுகிறேன். பேசுவதற்கு எனக்கும் தெம்பில்லை என்று வைத்து விட்டேன்.

தங்கையிடமிருந்து ஃபோன். மிகவும் நொறுங்கிப் போயிருந்தாள். அழுது கொண்டே இருந்தாள்.

அவர் விதி. நாம் என்ன செய்ய முடியும்? ஆஸ்பத்திரியில் பல நாட்கள் இருந்து அவரும் கஷ்டப்பட்டு அவரைச் சுற்றி இருப்பவர்களையும் கஷ்டப்படுத்தாமல் போனாரே என்று திருப்திபட்டுக்க வேண்டியது தான். ஒரு டாக்டராக உனக்குத் தெரியாததல்ல.  

அவள் ஏதேதோ பேச நினைத்தாள் போலும். அப்பா பெண்ணாயிற்றே! சிலருக்குப் பேசுவதற்கும், அழுவதற்கும் கூட உரிமைகள் மறுக்கப்படுகிறது. நாளை சிகாகோவிலிருந்து விசா வாங்கிக் கொண்டு நானும் மகளும் ஊருக்குச் செல்கிறோம். நீ எப்போது கிளம்புகிறாய்?

தெரியவில்லை.

சீக்கிரம் வந்து விடு. அழுது கொண்டே அவளும் வைத்து விட்டாள்.

மீண்டும் தம்பியிடமிருந்து ஃபோன். வீட்டுக்கு அப்பாவை அழைத்து வந்தாச்சு. மாமாக்கள், பெரியப்பா, பெரியம்மா, நண்பர்கள் என்று அனைவரும் தகவல் தெரிந்து வந்திருந்தார்கள். எல்லோரும் பேசி முடித்து அம்மாவிடம் கொடுக்க... அழுது முடியட்டும் என்று காத்திருந்தேன். நல்லா தான் இருந்தார். இப்படி ஆகும்னு தெரியல. உன் கூட பேசணும்னு சொல்லிட்டே இருந்தார்... அதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சு!

அமைதியாக கேட்டுக் கொண்டே இருந்தேன். என்ன பேசுவது?

ஐஸ் பாக்ஸில் தான் வைத்திருக்கிறோம். நீங்கள் எல்லோரும் வந்தவுடன் காரியங்களைச் செய்யலாம் என்று.

எனக்காக ஒன்றும் காத்திருக்க வேண்டாம். அக்கா வந்தவுடன் செய்ய வேண்டிய காரியங்களை செய்து விடுங்கள்.

அப்பா முகத்தை கடைசியாக பார்க்க வேண்டாமா??? நீ வாம்மா, சீக்கிரம்!

அந்த கொடுப்பினை தான் இல்லையே? அதற்கு மேல் பேச முடியவில்லை ...

என்ன செய்வது? முதலில் பாஸ்போர்ட் எங்கிருக்கிறது என்று பார்க்க வேண்டும். விசா வாங்கும் தொல்லை வேறு இருக்கே?

மாலையில் வீடு வந்தவுடன் கணவரும் இந்தியா போக டிக்கெட், விசா வாங்க போக வேண்டிய இடம், ட்ரைன் டிக்கெட் என்றிருக்க...

மகளும், நீ போம்மா, நான் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல். நான் பார்த்துக் கொள்கிறேன். எதைப்பற்றியும் கவலைப்படாதே. நீ ஊருக்குப் போய் பாட்டியுடன் இருந்து விட்டு வா என்றாள். 

மகனோ குழப்பத்துடன், எனக்கு அப்பாவின் அப்பா, அம்மாவை தெரியாது. தாத்தாவும் இப்பொழுது இல்லை. பாட்டியையாவது உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். நான் ஒழுங்காக ஸ்கூலுக்குப் போய் வருவேன். நீ கவலைப்படாமல் போய் விட்டு வாம்மா என்றான்.

உன் பேரக்குழந்தைகளுக்காவது நீ இன்னும் சிறிது காலம் உயிரோடு இருந்திருக்கலாம்ப்பா...

இயந்திர கதியில் நானும் தயாரானேன்...

ஊருக்குச் செல்ல.


Friday, February 27, 2015

ஊரு விட்டு ஊரு வந்து ...

வாவ்!!! நாட்கள் மாதங்களாய், வருடங்களாய் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது! மதுரையை விட்டு வந்த இந்த பதினேழு வருடங்கள் எப்படிச் சென்றது என்றே தெரியவில்லை! பல வருடங்களுக்கு முன் வாழ்வில் காணாத குளிரில் நடுங்கிக் கொண்டே டொரோண்டோவில் வந்திறங்கிய அந்நாள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது!

மதுரையில் பிறந்து வளர்ந்து என் வீடு, என் மக்கள் என்ற ஒரு குறுகிய வட்டத்தில் வாழ்ந்து வந்த எனக்கு எப்போது தான் மேற்குலகத்தை பார்ப்பது? படித்து மட்டுமே பார்த்த இடங்களை எப்போது கண்டுகளிப்பது ?? என்பது கனவாகவே இருந்து வந்தது. மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையில் மாண்ட்ரியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து அவர்களும் கல்லூரியில் சேர்ந்த பிறகு ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்றவுடன் கைக்குழந்தையை  வைத்துக் கொண்டு முடியுமா, முடியாதா என்று அந்த ஆசைக்கு முற்றுப் புள்ளி வைத்தாயிற்று. வேலை கிடைத்து கனடாவிற்கு போகப் போகிறோம் என்றவுடன் வெளிநாடு போக வேண்டும் என்ற ஆசையும் கனவும் நிறைவேறப்போகிறது என்ற நினைவே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

அதற்குப்பிறகு இரு மாதங்களில் மகளுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்க திருச்சி பயணம் , கனடா செல்ல விசா வாங்க கோயம்புத்தூர் பயணம், அலுவலில் இருந்து ஐந்து வருட விடுமுறையில் செல்வதற்கு அரசாங்கத்திடமிருந்து அனுமதி வாங்க சென்னை பயணம் எனஅலைந்த அலைச்சலில் வெளிநாடு செல்வதைப் பற்றிய எண்ணங்களோ அதனால் ஏற்படப்போகும் சாதக பாதகங்களைப் பற்றியோ எதுவும் நினைத்துப் பார்க்க கூட முடியாத அளவிற்கு வேலைகள் என்னை ஆக்கிரமித்திருந்தது.

மதுரையை விட்டு கிளம்பிய அவ்விரவில் தான் மனதில் ஒருவித அச்சம் ஏற்பட்டது. கண்ணீருடன் வழியனுப்ப வந்த சொந்தங்களை விட்டுப் பிரிகிற உணர்வா? குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ளப் போகிறோம் என்ற பயமா? வெளிநாட்டு வாழ்க்கை பிடிக்குமோ பிடிக்காதோ என்ற கலக்கமா? கடல் கடந்து பல மைல்களுக்கு அப்பால் வாழப்போகும் வாழ்க்கையைப் பற்றின பயம் அன்று தான் தெரிந்தது. ஆனாலும் மனதில் கொஞ்சம் தைரியம். எதுவும் பிடிக்கவில்லை என்றாலும் திரும்பி வந்தால் வேலை இருக்கிறது என்ற நினைவே சிறிது ஆதரவாக இருந்தது. கணவரும் மகளும் அருகில் இருக்கும் போது எதற்கு மனதை குழப்பிக் கொள்ள வேண்டும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டாலும் தயக்கமும் கலக்கமும் கூடவே இருந்ததென்னவோ உண்மை.

விமான நிலையத்தில் அப்பா, அம்மா, தம்பிகள், தங்கை, அக்கா என்று அனைவரையும் பிரியும் பொழுது தப்பு செய்து விட்டோமோ என்று அழுத அழுகையில் குழந்தையும் மிரண்டு விட்டது. முதல் முறை விமானப்பயணம் வேறு மனதில் திகிலை கொடுக்க, குழந்தையும் மிரட்சியுடனே இருந்தாள். லண்டன் வரை ஒகே பயணம். அங்கிருந்து டொரோண்டோ எப்படா வரும் என்றாகி விட்டது. மகளுக்கோ பயணம் ஒத்துக் கொள்ளவில்லை. அவளுக்கும் தாத்தா, பாட்டியை பிரிந்த சோகம். சொல்ல தெரியவில்லை.

கையை பிசைந்து சாப்பிட்டுப் பழகி விட்டு ஃபோர்க், ஸ்பூன் பார்த்தவுடன் ஒரு அந்நியம். பிரட்,  இலை தழைகளைப் பார்த்தவுடன் வந்த பசியும் ஓடி விட்டது. காரசாரமாக உண்ட நாக்கிற்கு உப்பு மட்டும் போட்டு சுட்ட மீனை கண்டதும் வராத வாந்தியும் உவ்வே...என்னை பார்த்து மகளுக்கும், அவளைப் பார்த்து எனக்கும் என்று...

டொரோண்டோ வந்து விட்டது என்று பைலட் சொன்னவுடன் அப்பாடா என்றிருந்தது! வெளியில் வந்தவுடன் திருவிழாவில் தொலைந்து போன குழந்தையின் மனநிலையில் இருந்தேன் நான். இது ஒரு அந்நிய தேசம் என்ற நினைவு முதலில் உறுத்தியது. ஆங்கிலம் தான் பேசினார்கள் என்றாலும் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. பிப்ரவரி 28 டொராண்டோவில் வந்திறங்கிய அந்த இரவில் பலவிதமான குழப்பமான எண்ணங்கள். கனவு நிறைவேறி விட்டது என்று ஆனந்தப்படுவதா, புது இடம் பிடிக்குமா, இந்த வாழ்க்கை முறை ஒத்து வருமா என்று புரிந்தும் புரியாமலும் குளிரில் நினைவுலகத்துக்கு வந்த போது வண்ண மயமாக இருந்த நகரம் ஆனந்தத்தை தந்தது. இரவில் விளக்கொளியில் மின்னிய நகரங்களைப் பார்த்த பொழுது கனவு மாதிரியே இருந்தது.

கணவரின் நண்பர் தினேஷ் எங்களுக்காக காத்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் அப்பாடா மதுரை நண்பர் இருக்கிறார் என்ற எண்ணமே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. வானுயர்ந்த கட்டடங்கள், வண்ண விளக்குகளுடன் ஜொலித்த நகரம் அதுவரை நான் காணாத ஒன்று. டர்பன் போட்ட சீக்கிய டாக்ஸி டிரைவர்கள், பல தமிழ், இந்திய முகங்கள் அச்சம் மெல்ல மெல்ல என்னை விட்டுச் செல்வது போல் உணர்ந்தேன்.

தினேஷின் காரில் நான் குழந்தையுடன் ஏறிக் கொள்ள, பெட்டிகளுடன் கணவர் வாடகைக்காரில் தொடர்ந்தார். அப்பொழுதெல்லாம் GPS வசதிகளும் கிடையாது. அட்ரஸ் தெரியுமா என்று தினேஷ் கேட்டவுடன் தான் பிறந்த வீடு, புகுந்த வீடு , இப்பொழுது இந்த முகவரியையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்ணமும் வந்தது. அவருடன் தாய்மொழியில் பேசிக் கொண்டு அடிக்கடி கணவரின் காரும் பின்தொடர்கிறதா என்று பார்த்துக் கொண்டே வந்து சேர்ந்தோம். முகவரி தேடி அங்குமிங்கும் சுற்றி அலைந்து பசி மற்றும் களைப்புடன் அபார்ட்மெண்ட் வந்து சேர , குழந்தையும் நன்கு விழித்திருந்தாள்.

கம்பெனியே ஒரு அபார்ட்மெண்ட் பார்த்து வீட்டில் சுவாமி படம், விளக்கு வைத்து கோலம் போட்டிருப்பதை கண்டவுடன் மனதில் ஒரு நிம்மதி. பிரிட்டிஷ் ஏர்லைனில் சென்னையிலிருந்து புறப்படும் போது நம்மூர் சாப்பாடு கொடுத்தார்கள். அதற்குப் பிறகு அவர்கள் கொடுத்த எதுவும் பிடிக்கவில்லை. மகளும் நானும் பசியில் துவண்டிருந்தோம்.

ராம், கோயம்புத்தூர்காரர். சாதம், பீன்ஸ், தயிர் எடுத்துக் கொண்டு வந்து குழந்தையுடன் வருகிறீர்கள் என்று சொன்னார்கள். அதான் சமைத்துக் கொண்டு வந்தேன் என்று சொல்லி விட்டு சிறிது நேரம் பேசி விட்டுச் சென்றார்.  மதுரையிலிருந்து மதியும், முருகேசன் என்பவரும் அவருடன் தங்கியிருப்பதாக சொன்னவுடன் அப்பாடா, பேசுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நினைவே ஆறுதலாக இருந்தது. பசியுடன் இருந்த மகளுக்குத் தயிர் சாதம் கொடுத்தவுடன் அவளும் தூக்கத்திலிருந்து கொஞ்சம் தெளிவானாள். 

வீட்டைச் சுற்றிப் பார்த்து ...நான்கு பர்னர் கொண்ட ஸ்டவ், சுடு தண்ணீர், குளிர் தண்ணீர், பாத்ரூமில் டப், வெஸ்டெர்ன் டாய்லெட், பெரிய்ய  ஃபிரிட்ஜ் இத்யாதிகளைப் பார்த்து  வியப்பும் கலக்கமாகவே இருந்தது. பழக்கமே இல்லாத வெஸ்டர்ன் டாய்லெட்டை கண்டு மகள் மிரள...மெதுவே எனக்குள்ளும் மகளை எப்படி பார்த்துக் கொள்ளப் போகிறேன் என்ற பயம் வந்து விட்டது. சதாசர்வ காலமும் தாத்தா, பாட்டி பெரியம்மா, சித்தி, மாமாக்கள் என்று வளர்ந்து விட்டு அவளை நினைத்து தான் பெருங்கவலையாக இருந்தது. 

அந்த இரவில் இனி ஒளிரப் போகும் நாட்கள் எப்படி இருக்குமோ என்று ஒரு தயக்கத்துடன் நினைத்த மாதிரியே வந்து விட்டோம் என்று பெருமையாக இருந்தாலும் விடை தெரியாத பல கேள்விகள் மனதில்! அமைதியாக உறங்கிக்  கொண்டிருந்த நகரில் மூன்று உயிர்கள் எதிர்காலத்தை நினைத்து மனப்போராட்டத்துடன் விடியலுக்காக காத்திருந்த அந்த நாட்களை இன்று நினைத்தாலும் ...







Sunday, January 25, 2015

விமானத்தில் ஓர் நாள்...

பஸ், ரயில், விமான பயணங்கள் என்றுமே ஒரு அனுபவமாகவும், பல சுவாரசியங்களுடனும் இருக்கும். சமயங்களில் தொல்லையாகவும், எதிர்பாரா திருப்பங்களுடனும் இருந்தாலும் பயணத்தின் போது நாம் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் நடை, உடை, பாவனை, சம்பிராதாய பேச்சுக்கள் ...இன்னும் இப்படி எவ்வளவோ மனதை ஈர்க்கும் விஷயங்கள்! அந்த வகையில் பயணங்களை நான் மிகவும் ரசிப்பதுண்டு.

விடுமுறை முடித்து கலிஃபோர்னியாவிலிருந்து இரவில் பதினொரு மணிக்கு சிகாகோ நோக்கி விமானம் கிளம்பியது. மூடிய விமானத்திற்குள் மூச்சு திணறுவது மாதிரி இருந்தாலும் நடு சீட்டில் உட்காரும் பொழுது உண்மையாகவே அப்படி தான் இருந்தது. சே! வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வர கண்ணாடி சீட் கிடைக்கவில்லையே என்று ஒரு சின்ன எரிச்சல்! அந்த சீட்டில் உட்கார்ந்திருந்தவன் கல்லூரி படிக்கும் மாணவன் போல் இருந்தான். ஒரு சிநேக புன்னகையுடன் ஹாய் என்றான். பதிலுக்கு நானும் ஒரு ஹாய் சொல்லிக் கொண்டே என் இருக்கையில் அமர்ந்தேன். கணவர், குழந்தைகள் அவரவர் இடங்களில். வலப்பக்கத்தில் வந்து அமர்ந்தவன் உட்கார்ந்த மறு நிமிடமே நித்யாதேவியின் அரவணைப்பில்!!! எப்படித்தான் இவர்களால் இப்படி தூங்க முடியுமோ??? கொடுத்து வைத்தவர்கள்!

சிறிது நேரத்தில் விமானமும் அன்ன நடையிட்டு ரன்வேயில் மற்ற விமானங்களைத் தொடர, என் அருகில் அமர்ந்திருந்தவன் சிறு குழந்தையின் உற்சாகத்துடன் தானாகப் பேசி சிரித்து ரசித்துக் கொண்டிருந்தான்! கடைசியில் சிக்னல் கிடைத்து விமானம் மேலெழும் பொழுது கண்களை இறுக மூடிக் கொண்டு எதையோ சொல்லிக் கொண்டே அடிக்கடி கைகளை கழுவுவது போல் ஏதோ ஒருவித டென்ஷனில் இருந்தான்! சடக்கென்று காலை கொஞ்சம் மேலே தூக்குற மாதிரி பண்ணுவான் பிறகு கீழே குனிந்து எதையோ தேடுவது போல் சிறிது நேரம். நான் பார்த்தால் ஒரு ஹி ஹி...

ஹார்ம்லெஸ் பட் நார்மலாக இல்லை என்று மட்டும் புரிந்தது. எனக்குன்னு எங்கிருந்து தான் வருவார்களோ! இனி தூங்கிய மாதிரி தான் என்று எண்ணிக் கொண்டேன்.

முன்வரிசையில் ஒரு கைக்குழந்தை திடீர் திடீரென அழுது மற்றவர்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க, 'என்ன நடந்தாலும் தூங்குவோர் சங்கத்து ஆட்கள்' மட்டும் கண்களை இறுக்க மூடிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள்! நடுநடுவே குளிர்பானங்களும் வந்து போய்க் கொண்டிருந்தது. விமானம் ஆட்டம் காணும் போதெல்லாம் விமானியின் எச்சரிக்கை மணி ஒளிர, தூங்குற ஜனங்களுக்கு என்ன கவலை? என்னைய மாதிரி கோட்டான்கள் தான் எப்படா விடியும் என்று காத்திருந்தோம். அடிக்கடி என் குழந்தைகள் தூங்குகிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருந்தேன்.

ஒரு வழியாக அதிகாலையில் ஐந்து மணிக்கு சிகாகோவில் தரையிறங்கும் பொழுது லேசான பனித்தூறல்! என் அருகில் அமர்ந்திருந்தவன் ஹை! ஸ்னோ ஸ்னோ என்று திரும்பி என்னை பார்த்தவன் சிரித்துக் கொண்டே ஹி ஹி! ஐ ஆம் ஃப்ரம் நியூ ஆர்லியென்ஸ். நெவர் சீன் ஸ்னோ பிஃபோர் என்று மீண்டும் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டுமிருந்தான். அப்பாடா ! எஸ்கேப் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே இறங்கும் பொழுது தூக்கத்திற்கு கண்கள் ஏங்கியது!

சிகாகோவில் குளிருக்கா பஞ்சம்?? செம குளிர்! விமான நிலையத்தில் நுழைந்தவுடன் அதிகாலை என்பதே மறந்து போய் விட்டது. அந்த நேரத்திற்கே கடைகள் திறக்கப்பட்டு, எண்ணையில் பொறியும் சிக்கன், பீப், பேக்கன் மற்றும் பீட்சா வாசனையில் தூங்கிக் கொண்டிருந்த வயிறும் முழித்துக் கொண்டது. மகன் விழித்துக் கொண்டே பிரகாசத்துடன் கடைகளை நோட்டமிட்டுக் கொண்டு வர, வழி கேட்டு நடந்தோம் நடந்தோம் ஒரு அரை மைல் தூரத்திற்கும் மேல்...அவ்வளவு பெரிய்ய்ய்யய விமான நிலையம்!!!

'மினுக்மினுக்' வண்ண ஒளியில் கண்களை கவரும் விதத்தில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்! குழந்தைகள், வயதானவர்கள், உடல் ஊனமுற்றோர்களுக்கான வசதிகளுடன் கழிவறைகள், உட்காருவதற்கு வசதியான இருக்கைகள், பலவித உணவுக்கடைகள், தடுக்கி விழுந்தால் ஸ்டார்பக்ஸ் என்று விமான நிலையம் கலகலப்பாகவும், சுத்தமாகவும் இருந்தது. கலைநயத்துடன் கூடிய சிலைகள், ஓவியங்கள் என்று அழகாக அலங்கரித்து வைத்திருந்தார்கள். ஏனோ, சென்னை விமான நிலையம் இப்படி இல்லையே என்ற ஏக்கம் வந்தது :(

நடந்த நடையில் தூக்கமும் பிரியாவிடை கொடுக்க...இனி மூன்று மணிநேரம் காத்திருக்க வேண்டும். ஒவ்வொருவராக முகம் கழுவிக் கொண்டு வந்தாயிற்று. சுற்றிலும் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில்! வாயை திறந்து போட்டபடி, முகத்தை புத்தகத்தால் மறைத்தபடி, ஒரு கையை முட்டுக் கொடுத்தபடி, காலை நீட்டிக் கொண்டு இப்ப சரிந்துடுவாரோ என்று பயமுறுத்தியபடி ...இப்படி பல கோணங்களில் பலரும் தூங்கியபடி இருக்க...தூங்க மறந்த குழந்தைகள் கைகளில் பொம்மைகளுடன் சுற்றிக் கொண்டிருக்க அவர்களுடன் அரைத்தூக்கத்தில் பாவப்பட்ட பெற்றோர்கள்!

அந்த அதிகாலை நேரத்திலும் 'டிப்டாப்'பாக உடையணிந்தவர்களும், பார்த்தவரை கவரும் வண்ணம் உதட்டுச்சாயத்துடன் 'பளிச்'சென்ற மேக்கப்புடன் வளைய வரும் பெண்களும், அழுக்கு ஜீன்ஸ், டி-ஷர்ட் இளைஞர்களும், காதில் ஹெட்ஃபோன், கையில் அலைபேசி, கணினியுடன் மற்றும் சிலரும் என்று வேடிக்கை பார்க்க அவ்வளவு மக்கள் கூட்டம்! பெண்கள் பலரும் 'UGG' பூட்ஸ் அணிந்திருந்தார்கள்!

என் தூக்கம் போயாச்சு! இனி என்ன செய்வது? அங்கிருக்கும் செல்ஃபோன் சார்ஜிங் ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டு சிறிது நேரம் நாட்டு நடப்பை பார்க்க வேண்டியது தான்! அதுவும் சிறிது நேரத்தில் போர் அடித்து விட்டது. இப்போது என்ன செய்வது? சுவர்களில் மாட்டி இருந்த படங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அத்தனையும் குளோபல் வார்மிங் சம்பந்தமாக பெரிய பெரிய புகைப்பட வல்லுநர்களால் எடுக்கப்பட்ட அழகிய படங்கள். பல வருடங்களுக்குத் தொடர்ச்சியாக ஐஸ்லேண்ட், அண்டார்டிகா , ஐரோப்பிய நாடுகளில் பனிமலைகள் உருகி நீர்மட்டம் உயர்ந்திருப்பதை புள்ளி விவரங்களுடன் படிக்க படிக்க பதட்டம் !!! அப்படியே அங்கிருந்த படங்களை பார்த்தும் படித்தும் முடித்தாயிற்று. கிளைமேட் சேன்ஜ் தற்போதைய ஹாட் டாபிக். படித்தால் கவலை தான் மிஞ்சுகிறது! எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் ?? யோசித்துக் கொண்டே வந்தால் இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது அடுத்த ஃபிளைட்டுக்கு !

திடீரென ஒரு அறிவிப்பு- கேட் மாறி விட்டது என்று! பாம்பே விமான நிலையம் கண்முன் வந்து சென்றது. திட்டிக் கொண்டே மீண்டும் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு ஓட்டம்! அங்கு ஏற்கெனவே இருந்த கூட்டத்துடன் ஐக்கியாமாயச்சு!

சொன்ன நேரத்திற்கு விமானமும் வந்து, வரிசை எண் படி உட்கார்ந்து இப்பொழுது எனக்கு ஜன்னல் சீட்! ஹையா!!! ஜாலி ஜாலி! பக்கத்தில் நின்றிருந்த விமானத்தை நீரில் கழுவி விட்டு கொட்டும் பனி உறைந்து விடாமல் இருக்க ஆன்டி-ப்ரீசிங் கெமிக்கலை ஸ்ப்ரே செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் குளிரில் பனிமழையில் நனைந்து கொண்டே வேலை செய்து கொண்டிருந்தவர்களைப் பார்க்க கஷ்டமாக இருந்தது!

நாங்கள் இருந்த விமானத்திற்குள் இருவர் ஏறுவதும் இறங்குவதுமாய் எதை எதையோ சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள்! விமான பணிப்பெண்ணும் எங்கெங்கு எக்ஷிட் இருக்கிறது, தண்ணீரில் விமானம் இறங்கி விட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்று சொல்லும் பொழுது, தண்ணீரில் விழுந்தால் குளிரிலேயே மர்கயா தான். ஆனாலும் ஒரு நம்பிக்கை- ஃப்லோட்டிங் சீட் இருக்கிறதா என்று சரிபார்த்தாயிற்று! மதியத்திற்குள் ஊருக்குச் சென்று விடலாம்! போனவுடன் நானும் மகளும் மெக்சிக்கன் உணவு சாப்பிடுவது என்றெல்லாம் கனவு காண ஆரம்பித்து விட்டோம் !

திடீரென ஒரு பெண்மணி வந்து விமானத்தில் எடை அதிகமாக இருக்கிறது. இரண்டு பேர் இறங்கினால் ஆளுக்கு $500 டிஸ்கவுன்ட் என்று ஆசை காட்ட , இருவர் இறங்கியும் இன்னமும் கிளம்புவேனா என்று அடம் பிடித்து நின்று கொண்டிருக்க...சிறிது நேரம் கழித்து அதே பெண்மணி விமானத்தில் ஏதோ மெக்கானிக்கல் கோளாறு இறங்குங்கள் என்று சொல்லி எல்லோரையும் இறக்கி விட்டார்கள். சிலர் டென்ஷன் ஆனார்கள்! என்ன பயன்?? அந்தப் பெண்மணி யாருடனோ பேசுவது போல் எங்களை விவரமாக தவிர்த்தார்.

ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம்...ஓடியே போயிற்று. அதற்குள் பனிமழையும் தீவிரமாக , வெதர் காரணம் என்று மேலும் இரண்டு மணி நேரங்கள்! யாரும் குரலை உயர்த்தி 'காச்மூச்' என்று கத்தவில்லை. பொறுமையாக உட்கார்ந்திருந்தார்கள்!!

இப்படியே போனால் என்ன செய்வது? இரவிற்குள் வீடு போய் சேருவோமா என்ற கவலை வந்து விட்டது. இதற்கு முன்னும் நியூயார்க்கில் எட்டு பத்து மணிநேரங்கள் மாட்டிக் கொண்ட அவஸ்தையான அனுபவமுண்டு. நினைத்தாலே பயமாக இருந்தது!

வானிலிருந்து அழகாக அசைந்து அசைந்து கீழிறங்கி பூமியை அலங்கரிக்கும் பனிமழையை வேடிக்கை பார்ப்பது தவிர வேறென்ன செய்ய முடியும் ? சிறிது நேரத்தில் எங்கும் வெள்ளைவெளேர் என பனியின் ராஜ்ஜியம்! விமானங்கள் வருவதிலும், இறங்குவதிலும் பிரச்னைகள் ஏற்பட்டு சிறு கலவரம்!

மக்கள் தரையில் அமர்ந்து கொண்டு கணினி மற்றும் கைப்பேசியில் தொலைந்திருந்தார்கள். என் அருகில் இருந்தவரின் மனைவி கடைக்குச் சென்று கொழுப்பில்லாத பால், வாழைப்பழம், க்ளூட்டன் ஃப்ரீ கேக் என்று கணவருக்கு கொண்டு வந்து கொடுத்தார். கணவர்களின் உடல்நலத்தில் மனைவிகளுக்குத் தான் எவ்வளவு அக்கறை???

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடிக்கிட்டும் , ஃபேஸ்புக்ல பொலம்பிக்கிட்டும், எப்பத்தான் ஃபிளைட் வரும் என்று மக்கள் டென்ஷன் ஆக, இந்தா அந்தா என்று வந்து சேர்ந்தது ஒரு விமானம். கடவுளே, இதாவது பத்திரமாக எங்களை ஊர் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வீடு வந்து சேரும் பொழுது மாலை நேரமாகி விட்டது. கலிஃபோர்னியா நேரப்படி மாலை தான் என்றாலும், நியூயார்க் நேரப்படி இரவு மலர ஆரம்பிக்க...

வந்தவுடன் மெக்சிக்கன் உணவு சாப்பிட்டுத் தூங்கியவர்கள் தான்...







































Wednesday, January 7, 2015

அவள் எனக்கா மகளானாள்...

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல நெகிழ்ச்சியான தருணங்கள். மனம் அசை போட்டு பார்த்திட இன்பமான நிகழ்வுகள். அப்படியான ஒன்று- 'கங்கிராஜுலேஷன்ஸ், நீ அம்மாவாக போற' என்று மகப்பேறு மருத்துவர்((நாத்தனாரும் கூட) கூறிய அந்நாள், வாழ்வில் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய நாள் என்று கூட சொல்லலாம்.

ஒரு உயிரை சுமக்கப் போகிறேன் என்ற நினைவே எனக்குள் ஆச்சரியத்தையும், அச்சத்தையும் ஒருங்கே ஏற்படுத்தி இன்பத்தையும், பயத்தையும் கொடுத்தது. செய்தி கேட்ட அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம். அதுவரை என் இஷ்டத்திற்கு இருந்த வாழ்க்கை அன்று முதல் நான் செய்யும் ஒவ்வொன்றையும் என்னுள் வளரும் கருவை முன்னிறுத்தியே மாறிப் போனது. தலைச்சுற்றல், வாந்தி என்ற பிரச்னைகள் ஏதும் இல்லாவிட்டாலும் மனதளவில் ஒருவித மாறுதல்!

மெதுவா நட, பார்த்துப் போ, பைக்கில போகத்தான் வேணுமா ?? .. இப்படி பல கேள்விகளை பார்க்கிறவர்கள் என்னை பார்த்து கேட்ட பொழுது கூடுதல் கவனமும் பதட்டமும் என்னைத் தொற்றிக் கொள்ள...கை தானாகவே அடிவயிற்றை தொட்டுப் பார்த்து உனக்கு ஒன்றும் இல்லை. நான் கவனமாக இருப்பேன் என்று எனக்குள் நானே பலமுறை சொல்லிக் கொண்டேன்.

கணவரிடமும் இனிமேல் தடாலடியாக பைக்கை ஓட்ட வேண்டாம். இருவரும் பைக்கில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்று பலரும் அறிவுரை கூற அவர் இன்னும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள...

தங்கையும் மகப்பேறு மருத்துவராக இருந்தது மிக்க பலமாக இருந்தது. நான்காவது மாதத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்று தெரிந்தவுடன் டாக்டரும் கண்டிப்பாக பல வாரங்களுக்கு ஒய்வு தேவை என்று சொல்லி, எதுவும் ஆகிவிடக் கூடாதே என்ற பயத்தில் கழிந்த நாட்கள் என்னை ஆயாசப்படுத்தினாலும் அம்மா வீட்டில் என்னை கவனித்துக் கொள்ள ஆட்கள் இருந்தாலும் அனைவருக்கும் கவலையை தந்த நாட்கள் அவை.

ஒன்றும் செய்யாமல் படுத்தே இருப்பது ஒரு கொடுமை என்றுணர்ந்த நாட்களும் கூட! நான் எழுந்திருந்து நடந்தால் மெதுவா, பார்த்து என்று என்னைச் சுற்றி என் குடும்பத்து ஆட்கள் பதட்டத்துடன் என ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகவே கழிந்தது. ஒரு வழியாக மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு தான் நான் நானாகவே உணர்ந்தேன்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தையும் வளர, வயிறும் பெரிதாக, பார்த்தவர்களும் உனக்குப் பெண் குழந்தை தான் என்று சொல்லியே பூரிப்படைய வைத்தார்கள். ஏற்கெனவே செய்த ஸ்கேனில் பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் கணவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அந்நொடியிலிருந்து என்ன பெயர் வைப்பது, எப்படி அழைப்பது என்ற கனவு தான். வீட்டிற்கு வந்தவுடன் சுவாமி விவேகானந்தரின் புத்தகம் கண்ணில் பட, பெயரும் அன்றே முடிவானது :)

நாட்கள் செல்ல செல்ல விருந்துகளும் அதிகமானது. நான் எதன் மேலாவது ஆசைப்பட்டு சாப்பிடாமல் போனால் குழந்தைக்கு ஏதாவது ஆகி விட்டால்??? (நல்ல காரணம் எனக்கு கிடைத்து விட்டது... ) அதான், பருத்திப்பால் , பால்கோவா, பெங்காலி ஸ்வீட்ஸ்,ரசமலாய், ஜிலேபி, போளியல் இத்யாதிகள் முதல் வகைவகையான பிரியாணி விடாமல் சாப்பிட்டு...

தாழம்பு, மனோரஞ்சிதம் , பிச்சி, கொடிப்பிச்சி, மல்லிகை, முல்லை என்று மலர்களையும் சூடிக் கொண்ட அந்த நாட்கள் ...மனம் விரும்புதே :)

வளைகாப்பு செய்து எங்களுக்குப் பழக்கமில்லை என்று புக்ககத்தில் சொன்னாலும் தன் ஆசைக்காக கைநிறைய கண்ணாடி வளையல்களை அணிவித்து அழகு பார்த்தாள் அம்மா.

எட்டாம் மாதத்தில் இருந்தே பார்ப்பவர்கள் எல்லாம் எப்போ டெலிவரி என்று கேட்கும் அளவுக்கு நானும் மாறித் தான் போனேன்!

வேலை பார்த்த கல்லூரி மலை மேல் இருந்ததால் நடப்பதும் கடினமாகிப் போனது. கால் வீங்கினால் பார்லி தண்ணீர், காலையில் வெறும் வயிற்றில் பழைய சாதம் கரைத்த தண்ணீர், கால்சியம் மருந்துகள் , பழங்கள், காய்கறிகள், கீரைகள் என்று எனக்குப் பழக்கமில்லாத, பிடித்த, பிடிக்காத அனைத்தையும் என் குழந்தைக்காக, அவளின் நலனுக்காக என்று சாப்பிட ஆரம்பித்தேன்.

டாக்டரும் சிறுசிறு வேலைகள், யோகா, உடற்பயிற்சிகள் செய்தால் நல்லது என்றவுடன் தினமும் வீட்டை துடைப்பது என ஆரம்பித்தேன். மனதில் ஓடிய ஒரே விஷயம், நார்மல் டெலிவரி ஆக வேண்டும், குழந்தையும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று நிறையவே மெனக்கெட்டேன்.

கேட்கும் பாட்டிலிருந்து படிக்கும் புத்தகம் வரை என ஒவ்வொன்றிலும் கவனம். கணவரும் எனக்குப் பிடித்த, அவருக்குப் பிடித்த பாடல்களை கிடார், புல்லாங்குழல் கொண்டு இசைக்க, குழந்தையின் அசைவை கண்டு களித்த கணங்கள் எல்லாம்...இனிமையானவை!

சுடச்சுட சாப்பிட்டாலோ, குடித்தாலோ குழந்தைக்கு ஒன்றும் ஆகி விடக்கூடாதே என்ற கவலை வேறு! கணவரின் நண்பர்கள் சர்ப்ரைஸாக குடும்பங்களுடன் வந்து சுவையான மீன் குழம்பும், வறுவலும் செய்த அந்த நாட்கள் மறக்க முடியாததொன்று!

பிரசவ நேரம் நெருங்குகையில் சாப்பாடு, தூக்கம் குறைந்து களைப்புடன் எப்போது குழந்தை பிறக்கும் என்று நாட்களை எண்ண ஆரம்பிக்க...

ஜனவரி முதல் வாரத்தில் ஒரு வெள்ளிகிழமையன்று நடக்க முடியாமல் சிரமப்படுவதைப் பார்த்த கல்லூரி முதல்வர் எப்போதிருந்து விடுமுறையில் போகிறாய் , நன்றாக ரெஸ்ட் எடுத்துக் கொள் என்று அன்புடன் சொல்ல... என்னை பார்ப்பவர்களுக்கு பயமாக இருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டேன்.

மாதம் ஒரு முறை டாக்டரைப் பார்க்க ஆரம்பித்து, நாட்கள் நெருங்க மாதம் இருமுறையானது. ஒன்பதாவது மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை சென்று பரிசோதித்துக் கொள்ள, டாக்டரும் குழந்தை நலமாக இருக்கிறாள், பயமே வேண்டாம் இன்னும் இரு வாரங்களில் உன் கைகளில் தவழுவாள் என்றவுடன் பயமும் பரவசமுமாய் வீடு வந்து சேர்ந்தோம்.

வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் பார்த்துக் கொண்டே ராபியா பிரியாணியையும் ஒரு கட்டு கட்டி விட்டு அப்பாடா என்று நிமிர்ந்தால் ஒரு இனம் புரியாத வலி வயிற்றில். டாக்டரை பார்த்து விட்டு தானே வந்தோம். இது ஒரு வேளை, false pain போல என்று எனக்குள் நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

சில நிமிடங்களில் 'விசுக்விசுக்' என்று உயிர் போகும் வலி. நிச்சயமாக இருக்காது. டாக்டர் தான் குழந்தையின் தலை திரும்பவே இல்லை. இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கிறது என்று சொன்னாரே! ஒரே குழப்பத்துடன் இருப்பதை பார்த்து கணவரும் என்னாச்சு , ஏன் டல்லாயிட்டே? ஆர் யூ ஆல்ரைட்? என கேட்டவுடன், வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு. false pain போல என்றவுடன் பிரசவத்தை பற்றின புத்தகத்தை புரட்ட, அதில் சொல்லப்பட்டிருந்த அனைத்தும் என்னுள் நடப்பதை உணர்ந்தேன்.

எப்படி சாத்தியமாகும் என்று நினைக்கும் போதே உயிர் போய் மீண்டது போல் ஒரு வலி. அப்போதே இரவு 11 மணிக்கு மேல் ஆகி விட்டது. காலை வரை தாக்குப்பிடிக்க முடியும் என்ற நினைப்பு சிறிது சிறிதாக உடைந்து கொண்டிருந்தது. கணவருக்குப் பதற்றமும் தொற்றிக் கொள்ள, ஏற்கெனவே தயாராக வைத்திருந்த துணிகளை பையில் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே தாங்க முடியாத வலியில் துடிப்பதை பார்த்த என் கணவரும் பக்கத்து வீடுகளின் கதவை தட்டிப் பார்த்தும் பலனில்லாமால், என்னை தனியே விட்டுச் செல்ல பயந்து என்ன செய்வது என்று தவித்த தவிப்பு...அவருக்குள்ளும் பயம் தொற்றிக் கொண்டது.

தொலைப்பேசி, கைப்பேசியின் உதவியின்றி தொடர்பு கொள்வது எவ்வளவு சிரமம் என்று இன்று நினைத்தால் புரிகிறது!

ஒவ்வொரு நிமிடமும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில்! சரி, அருகில் இருக்கும் ஆஸ்பத்திரிக்குப் போகலாம், பைக்கில் தான் போக வேண்டும் என்று கணவர் பயத்துடன் சொன்னாலும், அதெல்லாம் ஒன்னும் ஆகாது அம்மா வீட்டிற்கே போய் விடலாம். அங்கு தங்கை இருக்கிற தைரியத்தில் என்ன நடந்தாலும் அவள் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் நடுஜாமத்தில் பைக்கில் மெதுவாக இப்ப எப்படி இருக்கு, இன்னும் கொஞ்ச தூரம் தான், வலி வந்தா சொல்லு என்று அவர் பேசிக் கொண்டே சென்றாலும் வலியின் தீவிரம் அதிகமாகிக் கொண்டே போவதை பல்லை கடித்துக் கொண்டு... வீடு போய் சேர்ந்தால் போதும் என்ற கவலையிலும் பயத்திலும் நான் அமைதியாகவே இருந்தேன்.

ஒரு வழியாக வீட்டிற்கு வந்தவுடன் சிரமப்பட்டு மாடியேறி ...அதற்குள் பதட்டத்துடன் குடும்பமே அல்லோலகப்பட, கீழ் வீட்டிலிருந்து வந்தவர்கள் விபூதி பூசி விட, அம்மா சீரகத்தண்ணீர் கொடுக்க, தங்கை ஊசி போட்டு எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம் என்று சொல்ல, வாடகைக்கார் பிடிக்க திருப்பரங்குன்றத்திற்கு கணவரும் தம்பிகளும் ஓட,  டிராபிக் இல்லாத கீழவாசல் வழியாக ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தோம்.

அப்பாவுக்குத் தான் என் மேல் கோபம். வரும் வழியில் பைக்கில் ஏதாவது ஆகி இருந்தால் என்று அந்த நேரத்திலும் என்னை கடிந்து கொண்டார் :(

பல வருடங்களாக பிரசவங்களைப் பார்த்து அனுபவமிக்க தாதி ஒருவர் தூக்கக்கலக்கத்தில் கதவை திறந்து விட்டு டாக்டருக்கு உறவினர்கள் என்று தெரிந்தபடியால் டாக்டருக்கும் சேதி சொல்லி விட்டார். அதற்குள் பெரியப்பா, பெரியம்மாவிற்கும் தகவல் சொல்லி அவர்களும் வந்து சேர்ந்து விட்டார்கள். கணவரும், தம்பியும் டாக்டர் வீட்டுக்கே சென்று விட்டார்கள். மணி இரண்டு, மூன்று என்று கரைய வலியின் தீவிரமும் கூடிக் கொண்டே வர, பெற்றவர்களுக்குத் தான் பொறுக்குமா? அவர்களுக்குத் தான் மகளின் வலியும், பிறக்கப் போகும் குழந்தையை பற்றின பயமும், எல்லாம் நல்லவிதமாக முடிய வேண்டுமே என்ற கவலையும்.

டாக்டர்களுக்கு இதெல்லாம் பழகிப் போன ஒன்று தான். அவரும் தங்கையிடம் பேசி உடனே வருவதாக கூறி, எல்லாவற்றையும் தயராக வைத்திருக்குமாறு நர்சிடம் சொல்லி விட்டார்.

ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திருக்கு மாற்றி விட்டார்கள். டாக்டரும் வந்து விட்டார். பிரசவ வலியின் உச்சத்தில் எனக்கு சிசெரியன் பண்ணி விடுங்கள் என்று அழுத அழுகையில், டாக்டர் சிரித்துக் கொண்டே நார்மல் டெலிவரி தான் பண்ண வேண்டும் என்று சொன்ன நீயா இப்படி எல்லாம் பேசுகிறாய், பயப்படாதே, உன் தங்கையும் இருக்கிறாள். நான் இருக்கிறேன், எல்லாம் நலமாக முடியும், நீ ஒத்துழைத்தால் என்று பேசிக் கொண்டே ஏதேதோ ஊசிகள் போட்டு, ஒரு பெண்ணின் 'வலி'மை என்ன என்று உணர வைத்து...மயங்கும் வேளையில்...இதோ உன் குழந்தை என்று கைகளில் கொடுக்க,

புஷ்டி கன்னங்களுடன் அழுது கொண்டே ஒரு புதிய ஜனனம்...இனம் புரியாத ஒரு உணர்வுடன் கைகளில் தவழ்ந்த குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்குள் கணவரும் வந்து சேர, அம்மாவும் சுடச்சுட காபி தர, அப்பாடி ஒரு பெரிய சுமையை இறக்கிய திருப்தியில் நான். தம்பிகளும், தங்கையும், அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா என்று மாறிமாறி குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கொஞ்சிய அந்த நாளிலிருந்து இன்று வரை பாட்டி வீட்டுச் செல்லம்  எனக்கு என்றுமே குழந்தையாகத் தான் தெரிகிறாள்.

வாழ்வின் ஒவ்வொரு கணங்களிலும் அவள் மூலம் நான் கற்ற பாடங்கள் பல!

பல நேரங்களிலும் 'அவள் எனக்கா மகளானாள்...நான் அவளுக்கு மகளானேன்' என்று எண்ண வைத்து விடுகிறாள்!









Thursday, December 4, 2014

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா...

ஒவ்வொரு வருடமும் பெரிய கார்த்திகை அன்று அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோவிலும், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோபுரமும் அதிக அளவில் மனதில் வலம் வரும்.

தீபாவளிக்குப் பிறகு வரும் கார்த்திகை மாதம் தீபஒளியுடன் வலம் வருவது மட்டுமில்லாமல் முருகன், ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து பயபக்தியுடன் விரதம் ஆரம்பிக்கும் இனிய காலமும், எங்கும் பக்திப் பாடல்கள் ஒலிக்க மனதை மயக்கும் தெய்வீகமான காலைப் பொழுதுகளும் கூட!

இம்மாத திங்கட்கிழமைகளில் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது போல் முருகன் இருக்கும் கோவில்கள் எல்லாம் முருக பக்தர்களால் நிரம்பி வழியும். திருப்பரங்குன்றம், அழகர் கோவில், மேலமாசிவீதி முருகன் கோவில்களுக்கு குடும்பம் குடும்பமாக தூக்குச்சட்டிகளில் பால் எடுத்துக் கொண்டுச் செல்லும் பக்தர்களையும் காண முடியும்.

கார்த்திகை மாத திங்கட்கிழமை மாலை நேரங்களில் வாசல் தெளித்து கோலமிட்டு, மண்விளக்குகளில் எண்ணெய் ஊற்றித் திரியிட்டு வாசலை அலங்கரித்து விளக்கேற்றும் வைபவம் பலருக்கும் இனிமையான ஒன்றாக இருந்திருக்கும். தீபஒளியில் ஜொலிக்கும் வீடுகள் தெருவெங்கும் அலங்கரிக்கப்பட்டு யார் வீட்டில் அதிக விளக்குகள் வைத்திருக்கிறார்கள் என்பதிலிருந்து எந்த வீட்டில் அழகான டிசைனில் வைத்திருக்கிறார்கள் என்று வரை பார்க்க ஆவலாய் இருக்கும்.

பாட்டியுடன் அடிக்கடி சென்ற கோவில்களில் திருப்பரங்குன்றமும் ஒன்று. படித்த கல்லூரியும், வேலை பார்த்த இடமும், சில வருடங்கள் வாழ்ந்த வீடும் கோவிலின் அருகில் இருந்ததால் என் மனதிற்கு நெருக்கமானதும் கூட!

இப்போதிருக்கும் போக்குவரத்து நெரிசல் அப்போது இல்லா விட்டாலும் சிறு வயதில் திருப்பரங்குன்றம் செல்வது ஏதோ மதுரையிலிருந்து வெகு தொலைவிற்குப் பயணம் செய்வது போல் இருந்தது.

மிஷன் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப்பில் கூட்டத்துடன் வரும் பேருந்துகளைத் தவிர்த்து கூட்டம் அதிகமில்லாத பஸ்சில் ஏறி வேடிக்கை பார்த்துக் கொண்டே குடும்பத்துடன் சென்ற காலங்கள் எல்லாம் இனியவை!

வழியில் கண்டிப்பாகத் தெரிந்தவர் குடும்பம் ஒன்றாவது ஏறிக் கொள்ள பேச்சுத் துணையுடன் பிஸியாக இருக்கும் தெற்குவாசல், பெரியார் பேருந்து நிலைய நிறுத்தங்களில் ஏறும் கூட்டத்தினரையும் சுமந்து கொண்டு போகும் பஸ்சில் பயணிப்பதே சுகமாக இருக்கும். அன்று குடியிருப்புகள் குறைவான மீனாக்ஷி மில், ஆண்டாள்புரம், பைக்காரா தாண்டியவுடன் மரங்களுடன் கூடிய பசுமலை ஏரியா, தியாகராஜர் காலனி, கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமை நிலங்கள், தியாகராஜர் பொறியியல் கல்லூரி என்று ஒரு வழியாக கோவிலை வந்தடையும் பொழுது நிறுத்தத்தின் எதிரே அழகே உருவாய் மலைக்கு அடியில் நிற்கும் வேலைச் சுமந்த கோபுரம் மனதை கொள்ளை கொள்ளும்!

வெங்காயத்தாமரை நிறைந்த குளம், வெயிலுக்குகந்த அம்மன் கோவில், போலீஸ் ஸ்டேஷன், அதைச் சுற்றியிருக்கும் குடிசை வீடுகள், ரோட்டில் திரியும் ஆடு, மாடு, எருமை, கோழிகள், ஜட்டியுடன் மூக்கு ஒழுகிக் கொண்டே திரியும் குழந்தைகள், குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு பேசிக் கொண்டே சாவகாசமாக நடந்து செல்லும் பெண்கள், பீடி குடித்துக் கொண்டே நடு ரோட்டில் நின்று உரக்க பேசிக்கொண்டிருக்கும் ஆண்கள் என்று கோவிலுக்குச் செல்லும் வழியெங்கும் ரசிக்கத்தக்க காட்சிகள் ஏராளம்!

இம்மாதத்தில் மட்டுமே கிடைக்கும் வெட்டிவேர், கதிர்பச்சையின் மணம் கோவிலுக்குள் நுழையும் பொழுதே தெய்வீகமாக இருக்கும். பெண்கள் தவறாமல் வாங்கித் தலையில் சூடிக் கொள்வார்கள். முருக பக்தர்களோடு ஐயப்ப பக்தர்களும் சேர்ந்து கோவில்களில் 'ஜேஜே' என்று கூட்டமாக இருக்கும்.

பஸ் நிறுத்தத்திலிருந்து கோவிலை நோக்கிச் செல்லும் வழியில் அபிஷேகத்திற்குப் பால், அர்ச்சனைக்குத் தேங்காய், பழத்தட்டு, பூக்கள், பூமாலைகள் விற்றுக் கொண்டு கடைகள் பரபர' வென்றிருக்கும். அர்ச்சனைத் தட்டு வாங்கி அங்கேயே செருப்பும் போட்டு விட்டு படியேறும் போதே யாரவது ஒருவர் 'நங்'கென்று சிதறு தேங்காய் உடைக்க, அதைப் பொறுக்க ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள்.

அவர்களைத் தாண்டி உள்ளே சென்றவுடன் இடப்பக்கத்தில் கருப்பண்ணசாமியை தரிசித்துவிட்டுத் திரும்பினால் வெண்ணை உருண்டைகளை விற்பவர், காளிக்கு வெண்ணை சாத்துங்க, வேண்டியதெல்லாம் நடக்கும், குறைகள் நீங்கும் என்று சொல்லியே விற்றுக் கொண்டிருப்பார். அதை வாங்கி பயபக்தியுடன் சாத்திவிட்டு (இப்பொழுது விடுவதில்லை என்று நினைக்கிறேன்) கோவிலுக்குள் போகுமுன் விநாயகர், துர்க்கை அம்மனையும் வணங்கி விட்டு, வழியில் இருக்கும் எலுமிச்சம் பழ விளக்குகளை கவனமாக கடந்து ஜொலிக்கும் கோவில் கடைகளை பார்த்துக் கொண்டே அர்ச்சனை சீட்டையும் வாங்கிக் கொண்டு தும்பிக்கையை ஆட்டிக் கொண்டே, பைசா வருமா, பழம் வருமா என்று திருநாமம் பூசிக்கொண்டு பக்தர்களை பார்த்துக் கொண்டே இருக்கும் யானையையும், குரங்குகள் கூட்டத்தையும் கடந்து சில படிகள் ஏறி கோவில் குளத்திற்குப் போகும் கூட்டம்.

வழியில் குருகுலத்தில் வருங்காலப் பட்டர்கள் கோரஸாக சுலோகங்களை மனனம் செய்து கொண்டிருப்பார்கள். கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். பெரிய மரம் ஒன்றின் நிழலில் நடந்து கொண்டே அந்த மலைக்கோவிலின் குளத்திற்குப் போய் மீன்களுக்குப் பொரி வாங்கித் தூவி விட, மீன் கூட்டம் துள்ளிக் குதித்து கொண்டு அதைச் சாப்பிட, சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பதும் எனக்குப் பிடித்தமான ஒன்று!

மூல சன்னிதானத்திற்குப் போக படிகளில் ஏறி முருகனின் சந்நிதியின் இடப்பக்கம் காத்திருக்க வேண்டும். கூட்டத்தைப் பொறுத்து முருகனை விரைவாகவோ காத்திருந்தோ பார்க்கலாம். அதிகக் கூட்ட நேரங்களில் மக்கள் வியர்க்க  விறுவிறுக்க முண்டியடித்துக் கொண்டு அச்சிறிய இடத்தில் நீ முந்தி நான் முந்தி என்று இடித்துக் கொண்டு செல்வதும் உண்டு! இந்தக் கோவில் மலையை குடைந்து கட்டியிருப்பதால் மூலவருக்கு அபிஷேகம் நடக்காது. முருகனின் வேலை மட்டும் எடுத்து அபிஷேகம் செய்வார்கள். எல்லோருடைய அபிஷேகப்பாலையும் கலந்து அரோகரா கோஷத்துடன் அபிஷேகம் செய்ய, மலையில் குடைந்த சந்நிதானம் தீப ஒளியில் அழகாக ஜொலிக்க பக்தர்களும் மனமுருகி வேண்டிக் கொள்வார்கள். அபிஷேகப் பால் சந்தனம், விபூதி வாசனையுடன் சுவையாக இருக்கும்.

அலங்காரத்துடன் வீற்றிருக்கும் துர்கை, விநாயகர், பெருமாள், சத்யக்ரீஸ்வரரையும் வணங்கி விட்டுப் படிகளில் இறங்கும் வழியில் தேவி அன்னபூரணியின் தரிசனமும் உண்டு. தனியாக அம்பாளுக்கு இருக்கும் சந்நிதானத்தில் தரிசனம் செய்து விட்டு, மீண்டும் படிகளில் ஏறி அங்கிருக்கும் நடராஜர், தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் ஆசியுடன் படிகளில் இறங்க, உற்சவ மூர்த்தி வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கும் மண்டபம்.

நவக்கிரகங்களும், தனியாளாக அமர்ந்திருக்கும் சனி பகவானையும் தரிசித்து விட்டுத் திரும்புகையில் மயிலிறகால் ஒரு வயதானவர் சாமரம் வீச சுகமாக இருக்கும். அவருக்கு கொஞ்சம் காணிக்கையும் கொடுத்து விட்டு அகத்தியர், தன்வந்திரி, மயில் வாகனத்தில் வீற்றிருக்கும் முருகனையும் தரிசித்து விட்டு சிறிது நேரம் ஆற அமர உட்காருவோம்.

பிறந்த குழந்தையை முதன் முதலில் கோவிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்பவர்களும், நேர்த்திக்கடனை முடிப்பவர்களும் என பலரும் மாவிளக்கு பூஜை செய்து கொண்டிருப்பார்கள். பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு மாவிளக்கு மாவு, தேங்காய், பழம் கொடுப்பார்கள். நெய்யில் ஊறிய பச்சரிசி மாவு, வெல்லத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

உண்டியலில் காணிக்கையைப் போட்டு விட்டு, அபிஷேகப் பாலை அங்குள்ளவர்களுடன் பகிர்ந்து முடித்து வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறிது பாலை எடுத்துக் கொண்டு, கோவில் ஸ்டாலில் விற்கும் அப்பம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே அப்பா, அம்மா, பாட்டி கைப்பிடித்து மீண்டும் வீடு வந்து சேர, அன்றைய நாள் இனிதான ஒன்றாக இருக்கும் !


சிறு வயதில் குடுகுடுவென ஏறிய கோவில் இன்றோ கொஞ்சம் மூச்சு வாங்குகிறது!

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா

ஆல்பனி மலை மீது எதிரொலிக்கும்...






































































.

Sunday, November 30, 2014

அன்புள்ள அப்பா...

திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணுக்கும் வரும் அதே குழப்பம் எனக்கும். புகுந்த வீட்டில் மாமியார் கிடையாது. மாமனாரை எப்படி அழைப்பது? சரி, சம்பிரதாயப்படி மாமா அல்லது பாவா என கூப்பிடுவது என்று நினைத்திருந்தேன்.

கணவரின் அண்ணிகள் மாமனாரை அப்பா என்று அழைப்பதை பார்த்து எனக்கு ஒரே கவலை. என் அப்பாவை விட 20 வயது மூத்தவர். அவ்வளவு வயதான மனிதரைப் போல் எங்கள் குடும்பத்தில் யாரையும் நான் பார்த்தது கிடையாது. எனக்கு தாத்தா மாதிரி இருக்கிறார். இவரைப் போய் எப்படி அப்பா என்று அழைப்பது? அதுவுமில்லாமால் என் அப்பாவைத் தவிர யாரையும் அப்பா என்று கூப்பிடுவது எனக்குப் பிடிக்காத ஒன்று.

ஆனா, என்ன பண்றது?

அவரை பார்க்கச் செல்லும் போதெல்லாம் என்னம்மா, எப்படி இருக்கே? வேலை எல்லாம் எப்படிபோகுது? உங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க என்று கேட்கும் பொழுது பதில் சரியாகச் சொல்லி முடிக்க ஒரு குழப்பத்துடன் மாமா, பாவா... கடைசியில் மைண்ட் வாய்சில் அப்பா என்று எனக்குள் நானே கூறிக் கொள்வேன்.

இதில் கணவருக்கு மிக்க வருத்தம். பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் மருமகள்கள் அப்பா என்று கூப்பிடுவது என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். அண்ணிகளும் அப்படித் தானே கூப்பிடுகிறார்கள்? நீயும் அப்படியே கூப்பிட்டால் நன்றாக இருக்கும். அண்ணிகள் என் அம்மாவையும் அம்மா என்று தான் அழைத்தார்கள் என்றார்.

நானும், என் அப்பாவைத் தவிர யாரையும் என்னால் மனதார அப்பா என்றெல்லாம் கூப்பிட முடியாது. உதட்டளவில் அப்பா  என கூப்பிடுவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை. நீங்கள் என் அப்பாவை என்ன அப்பா என்றா கூப்பிடுகிறீர்கள் என்று கேட்டு விட்டு அப்போதைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டோம். well, எனக்கு என் நியாயம்!

திருமணம் முடிந்த நான்கைந்து மாதங்களில் எங்களுடன் வந்து தங்க மாமனாரை மச்சினர் வீட்டில் இருந்து அழைத்து வந்திருந்தோம். மச்சினர் வீட்டின் மாடியில் ஆபிஸ் இருந்ததால் அங்கு வேலை செய்ய வருபவர்கள், பிசினஸ் ஆட்கள் என்று பலருடனும் பேசி நன்கு நேரத்தைப் போக்கியவர். மாலையில் வாக்கிங் சென்று ஒரு பேக்கரி கடையில் அவர் வயதையொத்த நண்பர்களுடன் பேசி விட்டு அவருக்குப் பிடித்த சமோசா , கேக் என்று மாலைப் பொழுதுகளை போக்கி விட்டு இருந்தவருக்கு எங்கள் வீட்டில் பொழுதைப் போக்குவது மிகவும் சிரமமாக இருந்தது.

நான் என்ன செய்ய முடியும்? பார்க்க எனக்குத் தான் வருத்தமாக இருந்தது.

என் ஆரம்ப கால சமையல் கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய துர்பாக்கியம் வேறு அவருக்கு :(`

அரசியல் என்று பேச்சு வந்தால் காங்கிரஸ் தான் என்று மாமனார் ஆரம்பிக்க, உங்கள மாதிரி ஆட்கள் இருக்கிற வரை இந்தியா உருப்படற மாதிரி தான் என்று அரிவாள் சுத்தியல் எடுக்காத குறையாக மகனுக்கும் அவருக்கும் வாக்குவாதம். குடும்ப பிசினஸ் பற்றி பேச்சு வந்தால் அதற்கும் ஒரே கலவரம். சரி, நீங்க வேலைக்கு கிளம்புங்க . காலணா பெறாத விஷயத்துக்கெல்லாம் இப்பிடியா? எப்ப பாரு வெட்டி பேச்சு பேசிக்கிட்டு என்று கணவரை அவசரஅவசரமாக வெளியில் அனுப்புவதற்குள் போதும்போதுமென்றாகி விடும்.

இவன் இப்படித்தாம்மா! ஆ ஊன்னா கோபம் வந்துடும்(ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம்ங்கறது இது தான் போல ... ) நீ தான் நல்ல வார்த்தை சொல்லி அவன் கோபத்தை குறைக்கணும். (ம்ம்ம். அதுக்கு நான் தான் உங்களுக்கு கெடைச்சேனா ??)

ஓரிரு நாட்கள் அப்பாவிடம் பாராமுகம் தொடரும். அச்சமயங்களில் அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கும். மகள் என்று ஒருத்தி இருந்திருந்தால் அவர் நிலைமை இப்படி இருந்திருக்காது என்று நினைத்துக் கொள்வேன்.

காலையில் நான் எழுவதற்கு முன்பே எழுந்து பால் வாங்கி டீ போட்டு வைப்பது, கீரை வாங்குவது , வீட்டு வேலைக்காரம்மா வந்தால் பாத்திரங்களை எடுத்து வெளியில் வைப்பது என்று வேலைகளை அவர் செய்த போது எனக்குப் பதறி விட்டது. என் அம்மாவிற்குத் தெரிந்தால் அவ்வளவு தான்! நீங்கள் செய்யாதீர்கள் .....அப்பா(மைண்ட் வாய்சில்) என்று சொன்னாலும் காலையில் எழுந்திருக்க என்னால் முடியவில்லை. கருவுற்றிருந்த நேரம். மார்னிங் சிக்னஸ் :(

அவரோ, நீ சின்ன பொண்ணு. உன் உடம்பை பார்த்துக்க என்று சொல்லி மேலும் கில்ட்டியாக்க...எனக்கு மேலும் தர்ம சங்கடம். நீங்க சீக்கிரம் எந்திரிக்கணும், உங்க அப்பா பாவம்! எல்லா வேலையையும் செய்றது எனக்கு கஷ்டமா இருக்கு என்றவுடன் இவர் சிறிது நாட்கள் பார்த்துக் கொண்டார்.

ஒரு வழியாக காலையில் நான் எழ ஆரம்பித்ததும் பால்காரர், அப்பா இல்லியாம்மா? அவர் தான கொஞ்ச நாளா வந்தாரு? ஊருக்குப் போய் விட்டாரா என்று கேட்க, வேலைக்கார அம்மாவோ, அப்பாருட்ட நான் சொல்லி இருந்தேனே என்று சொல்லும் பொழுது அவர் என் மாமனார் என்று சொன்னால் இவர்கள் என்னை தப்பாக நினைத்து விடுவார்கள் போலிருக்கே! என சிறிது அச்சம். பின்னே, எந்த வீட்டில் மாமனார் வேலை செய்வார்?
எனக்குத் தெரிந்து இல்லை. மெதுவாக அவர் மேல் எனக்கு கூடுதல் மரியாதை ஏற்பட்டது.

மாலையில் வாக்கிங் முடிந்து வரும் போது எனக்கும்சேர்த்து சமோசா, கேக் கொண்டு வந்து கொடுக்க .. என் அப்பா மாதிரி அவரும் என்னை மகள் போல் நடத்த...என்னைச் சுற்றி இருந்த ஒருவித இறுக்கம் மெல்ல தளர்ந்து நானும் சகஜமாக இருக்க ஆரம்பித்தேன். அவருடைய பழங்கதைகளைச் சொல்லுங்கள் என்று அவருடைய தனிமையை என்னால் முடிந்த வரையில் கலகலப்பாக்க முயற்சித்தேன்.

அவர் அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள், வாழ்க்கையில் நடந்த நல்ல, கெட்ட விஷயங்கள் என்று அவரும் ஆர்வமாக பேச ஆரம்பித்தார். மதுரையில் அவர்கள் வீட்டுச் சொத்து எங்கெல்லாம் எவ்வளவு இருந்தது என்று பெருமையாக சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, இப்பொழுது உங்களிடம் என்ன இருக்கிறது? போன கதைகளை ஏன் பேசி வெறுப்பேற்றுகிறீர்கள் என்று நெற்றிக்கண் திறக்க கோபக்கனலுடன் அப்பாவுக்கு எதிராக மகன் நிற்கும் போதெல்லாம், நான் தானே அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன்? உங்களுக்கென்ன வேலை? அவருக்குப் பிடித்த விஷயங்களைப் பேசினால் அவருக்கும் நன்றாக இருக்கும் என்று கணவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறேன்.

பழைய நினைவுகள் தரும் சுகத்தைப் போல் வேறு எதுவுமில்லை என்று தினமும் மாலையில் அவருடன் பேசுவது , டிவி பார்ப்பது என்று எனக்கும் பொழுது போனது.

குடும்பத்தில் நடந்த பல விஷயங்களைக் கூறினார். கணவரிடம் இப்படி எல்லாம் நடந்ததா என்று கேட்கும் பொழுது அவர் பதறிக் கொண்டே உனக்கு எப்படித் தெரியும் என கேட்க . ம்ம்ம். ஓப்லா வீட்டு ரகசியம் இப்ப எனக்கும் தெரியுமே என்று அவரை கலவரப்படுத்த எனக்கும் அவையெல்லாம் தோதாக இருந்தது.

மனைவியை இழந்த துயரம், அன்று கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் கணவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு, இன்று வரை மகன் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்ற வருத்தம் என அவர் கலங்கியபடி சொல்லும் பொழுது எனக்கும் வேதனையாகி விட்டது.

மூத்த மகனை இழந்த சோகம் அவரை மிகவும் பாதித்திருந்தது. அதற்குப் பிறகு மனதுக்கு விரும்பாத நிகழ்வுகள், வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம் அதனால் உடல்பாதிப்பு என்று மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.

உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது என்றால் என்னிடம் கூறுங்கள் என்று சொல்லும் பொழுது கூட, நீயோ இன்னும் சிறிது நாளில் கைக்குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும். மருமகள்கள் அனைவரும் வேலை செய்கிறீர்கள், நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லைம்மா என்று சொல்லும் பொழுது உண்மையாகவே என் கண்கள் கலங்கி விட்டது.

மனைவியை இழந்த கணவரின் நிலைமை மிகவும் கொடுமையானது போல!

என் குடும்பத்தின் மீதும் மிகுந்த மரியாதை அவருக்கு என்று பேசும் பொழுது புரிந்து கொண்டேன். தம்பிகள், அப்பா, அம்மா வரும் பொழுது அன்பாக பேசுவார்.

எங்களுக்கு மகள் பிறந்தவுடன் மகாராணி என்று அழைத்து தன் மகன் ஒருவழியாக வாழ்க்கையில் செட்டிலாகி விட்டான் என்ற மனநிறைவுடன் அவரின் விருப்பபடி யாருக்கும் தொந்தரவு தராமல் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

அன்பு தாத்தாவின் அறிமுகம் என் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் என்றுமே எனக்கு உண்டு. அட்லீஸ்ட் மகளுடன் இருப்பது போன்ற ஃபோட்டோ ஒன்றாவது இருக்கிறது. மகனின் பல குணங்கள் தன் அப்பாவை நினைவுறுத்துகிறது என்று கணவர் கூறும் போதெல்லாம் பெருமையாக இருக்கும்.

யாருக்கும் தீங்கு நினைக்காத, பணத்தின் மேல் பற்றில்லாத, தனக்கு தீங்கிளைத்தவர்களையும் மன்னிக்கும் நல்ல பண்பான அமைதியான மனிதர்.

பழகிய சிறிது நாட்களில் என்னையும் அறியாமல் 'அப்பா' என்று சொல்ல வைத்த பெருமையுடன் அவரின் சகாப்தமும் முடிந்தது !






Tuesday, November 4, 2014

Woodstock , NY

இலையுதிர்கால வார விடுமுறையில் ஏதாவது ஒரு மலைப்பகுதிக்குச் செல்லலாம் என நினைத்து வீட்டிலிருந்து தெற்கே ஒரு மணிநேர தொலைவில் உள்ள Woodstock என்ற ஊருக்குச் சென்றோம்.

Woodstock-ஓவியர்களுக்கும், ஓவியக்கூடங்களுக்கும், கைவினைப்பொருள் வல்லுநர்களுக்கும், இசை விழாக்களுக்கும் புகழ் பெற்ற ஒரு குக்கிராமம் என்று கூடச் சொல்லலாம். இங்கு நடந்த இசைவிழாவால் இவ்வூர் மிக்க பிரபலமடைந்தது என கேள்விப்பட்டேன். குறுகலான தெருக்களில் சிறுசிறு கடைகள், நூலகம், போலீஸ், தீயணைப்பு நிலையங்கள்... என்று அழகு மிளிரும் ஊர். இம்மாதிரி சிற்றூர்கள் நகரங்களை விட அமெரிக்காவின் அழகை இன்னும் மெருகேற்றி காட்டுகிறது. வழியெங்கிலும் விளைநிலங்கள், சிற்றூர்களில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சிகள், வண்ண வண்ண இலைகளுடன் மரங்கள் அடர்ந்த மலைகள் என்று ரசித்துக் கொண்டே போக முடியும் என்பதால் எனக்கு மிகவும் பிடித்தமான இடமும் கூட!

நாங்கள் சென்ற அன்று அதிகக் குளிருமில்லாமல் வெயிலுமில்லாமல் 'குளுகுளு'வென்றிருந்தது. கார் நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு நடக்க ஆரம்பித்தோம். குழந்தைகளுடன் குதூகலமாக செல்லும் குடும்பங்கள், கணவன், மனைவி, காதலனுடன் கைகளை கோர்த்துக் கொண்டு காதலி , நண்பர்களுடன் வந்தவர்கள் என்று அனைவரும் வண்டியைத் தொலைவில் நிறுத்தி நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

கோடை முடிவடைந்ததை ஒட்டி பல கடைகளிலும் தள்ளுபடி விற்பனை வேறு! வேடிக்கை பார்த்துக் கொண்டே சில பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வதும் சுகம். உணவகங்களில் மிதமான ஒலியில் பாடல்கள் இசைக்க, கண்ணாடி கோப்பைகளில் மதுவை பருகி ருசித்தபடி உரக்கப் பேசி சிரித்துச் சாப்பிடும் மக்கள் கூட்டம்! தெருக்களில் பீட்ஸா , சாண்ட்விட்ச், பழங்கள் என்று விற்றுக் கொண்டிருந்தார்கள். என்ன தான் வீட்டிலிருந்து சாப்பிட்டு விட்டு வந்தாலும் இவற்றையெல்லாம்  பார்த்தவுடன் மகனும் எனக்குப் பீட்ஸா வாங்கிக் கொடுத்தால் டோனட் வாங்கிக் கொடுக்கத் தேவை இல்லை என்று பேரம் பேச, வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று அவனை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.

முதலில் கண்ணில் பட்ட கடையில் நான் நுழைய, மகள் என்னுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற நினைவுடன் அவளுக்காக சில பொருட்களை வாங்கிக் கொண்டு அடுத்தடுத்த கடைகளுக்கும் விஜயம் செய்ய, மகனோ நிழலில் ஒதுங்கி உட்கார்ந்து கொண்டான். அவ்வப்போது அப்பாவிடம் ஏன் எங்கு போனாலும் அம்மா ஷாப்பிங் செய்கிறாள் என்று கேட்டது காதில் விழுந்தாலும் என் வேலையை நான் பார்த்துக் கொண்டே தானிருந்தேன்.


விதவிதமான வடிவங்களில் மெழுகுகள், நகைகள், ஆடைகள் , தேநீர் குடுவைகள் என்று பல கடைகள். எனக்குப் பிடித்த பேக்கரி ஒன்றில் நல்ல கூட்டம். அவர்கள் விற்கும் கேக் வகையறாக்கள் நல்ல சுவையுடன் இருக்கும். அங்கு 1968-ல் நடந்த உலகப்புகழ் பெற்ற இசை நிகழ்ச்சி சம்பந்தமாக பல படங்கள் இருக்கும். பண்டிட் ரவிசங்கர் படத்தையும் முதல் முறை வந்த போது பார்த்ததாக ஞாபகம். இப்போது வேறு சில படங்களை மாட்டியிருந்தார்கள். சில 'ஹிப்பி'களும் அங்கே இருந்தார்கள்! முதன் முதலில் இங்கு தான் ஒருவர் எங்களைப் பார்த்தவுடன் புத்தர் கோவிலுக்கு வந்தீர்களா என்று கேட்டு , அடடா! அப்படி ஒன்று இங்கு இருக்கிறதா என்ன? எங்கே என அவரிடமே விவரங்கள் கேட்டு பிரமாண்ட அந்த கோவிலையும் தரிசித்து விட்டு வந்தது நினைவிற்கு வந்தது.

அதே தெருவில் பாண்டிச்சேரி , மீராபாய் என்ற இரு கடைகளிலும் நம்மூர் கைவினைப்பொருட்கள், யோகா, தியானம், ஸ்ரீ அரவிந்தர், கடவுள்கள் பற்றிய புத்தகங்கள், சுவாமி சிலைகள் என்றுகிடைக்கிறது. இந்தியர்கள் என்றவுடன் ஒரு சிநேக சிரிப்பு. செல்ல குசல விசாரிப்பு!

வழியில் ஒரு ஹிப்பி கும்பல் தங்களை மறந்து 'புகைத்துக்' கொண்டிருந்தார்கள்!

மீண்டும் வந்த வழியே திரும்பும் பொழுது மறக்காமல் பீட்ஸா ஆர்டர் பண்ண, அங்கிருந்தவரும் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க, ஆல்பனி என்றதும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். தனக்குச் சிவகுமார் என்று ஒரு சவுத் இந்திய நண்பன் இருப்பதாகவும், தோசை மிகவும் பிடிக்கும் என்று சொன்னார். பீட்ஸா நன்றாக இருக்கு என்று மகனும் சாப்பிட்டுக் கொண்டே வர,

அருகிலிருக்கும் மாதாகிரி என்ற தியான மையத்திற்குச் சென்றோம். ஸ்ரீஅரவிந்தர், அன்னை மேல் ஈடுபாடு கொண்டவர்களால் நடத்தப்படும் இந்த இடத்திற்கு எப்போது வேண்டுமானாலும் சென்று தியானம் செய்து விட்டு வரலாம். அங்கிருக்கும் அமெரிக்கர்கள் அடிக்கடி பாண்டிச்சேரி விசிட் செய்பவர்கள். நன்றாக அன்புடன் பேசுவார்கள். அருகிலிருக்கும் நகரங்களில் இருந்தும் பலர் வந்து செல்கிறார்கள். ஒரு சிறிய அறையில் ஸ்ரீஅரவிந்தர், அன்னை படங்களை வைத்து நாற்காலிகளையும் போட்டு வைத்திருக்கிறார்கள். என் கணவர் சிறிது நேரம் தியானம் செய்ய நாங்களும் அமைதியாக இருந்தோம்.

அப்பப்பா! வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருப்பது தான் எவ்வளவு கடினமான வேலை!!!

சிலுசிலுவென்ற காற்று, உறுத்தாத வெயில், அழகான மலைகள் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டே மகனும், நானும் சிறிது நேரம் வெளியில் அமர்ந்திருந்தோம்.

சரி, பதினைந்து நிமிட தொலைவில் இருக்கும் புத்த மடாலயம் செல்லலாம் என்று கிளம்பி வழியைத் தவற விட்டு, அங்கேயும் இங்கேயும் கேட்டுக் கொண்டு ஒரு வழியாக வந்து சேர்ந்தோம். வழியைத் தவற விடுவதிலும் ஒரு வசதி. உள்ளூர் சாலைகளில், ஆள்அரவமற்ற தெருக்களில், பெரிய பெரிய வீடுகளில் தங்கியிருப்பவர்களையும், அழகிய பழங்காலத்து வீடுகளையும் பார்த்துக் கொண்டே வரலாம். எப்படித்தான் இப்படித் தனியாக ஒதுங்கி இருக்கிறார்களோ என்றுயோசிக்க வைக்கும்! வீடுகள் ஒவ்வொன்றும் ஏக்கர் பரப்பில் இருக்கிறது.  வீட்டுக்குள் என்ன நடந்தாலும் வெளியில் தெரிவதற்கு சான்ஸே இல்லை!  மக்கள் புடைசூழ வாழ்ந்து பழகி விட்டதால் இவர்களுக்கு ஒன்று என்றால் எப்படி வெளி உலகத்தைத் தொடர்பு கொள்வார்கள் என்று ஆச்சரியமாகவும் இருந்தது!

சிறிது தொலைவில் மலை மீது திபெத்திய புத்த மடலாயம் அதற்கே உரிய கோபுர அழகுடன் தெரிய நிம்மதி ஆயிற்று. இது வடஅமெரிக்காவின் மிகப் பெரிய மடாலயம் என்றும் மலைகளும், ஆறு, ஏரி, குளங்களும் சூழ இருக்கும் இந்த இடத்தைத் தலைமை புத்தகுரு தேர்ந்தெடுத்ததாகவும் முதல்முறை அங்குச் சென்றிருந்த பொழுது நிர்வாகிகளுள் ஒருவரான ஓர் அமெரிக்கப் பெண்மணி கூறினார்.

அவர் சொன்னது முற்றிலும் உண்மை. வண்ண வண்ணத் துணிகளாலான கொடிமரங்கள் மலைகள் சூழ அந்த இடம் பார்த்தாலே பரவசமாக இருக்கிறது. பல அமெரிக்கர்களும், சில ஆசியர்களும் வந்திருந்தார்கள். அனைவர் முகங்களிலும் ஒரு வித அமைதி அல்லது என் பிரமை?
கோவில் முழுவதும் சிவப்பு, மஞ்சள், நீலம் என்று வண்ணக் கலவையாகக் கண்ணைக் கவரும் விதத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தீப ஒளியில் விளக்குகள் ஜெகஜோதியாக மின்ன தியான நிலையில் பிரமாண்ட புத்தர்! அவர் எதிரே அமர்ந்து தியானம் செய்ய குஷன் நாற்காலிகள் நேர்த்தியான வரிசையில்! அங்கு நிலவிய மௌனமே அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி விடும் போல!

புத்தரின் காலடியில் தற்போதைய மட நிர்வாகியின் படமும் வைக்கப்பட்டிருந்தது. லக்ஷ்மி, விஷ்ணு, சிவன் வடிவில் பல புத்தர்கள்! அலங்காரங்களோ மனதையும் கண்களையும் கொள்ளைகொள்ளும் விதத்தில்! துறவிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்கிறார்கள். அவர்களுடைய இசைக்கருவிகளும் கேட்பதற்கு வித்தியாசமாகவும் இனிமையாகவும் இருக்கிறது. மலர்கள், சர்க்கரை, அரிசி இன்னும் பல பிரசாதங்கள் கிண்ணங்களில் அழகாக வைக்கப்பட்டிருந்தது.

வெளியில் மந்திரங்கள் எழுதிய உருளைகளை உருட்டி விட்டு வந்தோம். வார இறுதியில் கோவிலில் தொண்டு செய்ய கல்லூரி மாணவர்கள் வருகிறார்கள். தியான வகுப்புகளும் அங்கிருந்து தங்கி மனம் இளைப்பாறவும் வசதிகள் இருக்கிறது. அதற்கென்று தனிக் கட்டணமும் வசூலிக்கிறார்கள்! மரங்கள் அடர்ந்த காடுகள், மலைகள் நிறைந்த சூழ்நிலையில் அங்கிருப்பது நிச்சயம் மன அமைதியைத் தரலாம்.

அமைதியான சூழலில் சிறிது நேரம் அங்கே அமர்ந்து என் கணவர் தியானம் செய்ய, நானும் மகனும் வெளியில் வந்து அங்கிருந்த வயதான புத்தத் துறவியுடன் பேசிக் கொண்டிருந்தோம். ஹிந்தி தெரியுமா என்று அவர் எங்களை கேட்க, ஹ்ம்ம், நம்பள பார்த்தா ஹிந்தி பேசுற மூஞ்சி மாதிரியா இருக்குதுன்னு கேட்க ஆசை தான். ஒரு அசட்டு சிரிப்புடன் சிரித்துக் கொண்டே ஹிந்தி நஹி மாலும், தோடா தோடா என்று மேஜர் சுந்தரராஜன் ஸ்டைலில் ஆங்கிலத்திலும் சொல்ல, உங்களைப் பார்த்தால் ஹிந்திக்காரர்கள் மாதிரி இருக்கிறீர்கள் என்றால் என்ன பதில் சொல்ல முடியும்? இப்பிடித்தான் ஊர்ல பலரும் நெனச்சுக்கிட்டு ஹிந்தியில பேசி கொல்றாய்ங்க...ம்ம்ம்!

இந்தியாவில் எந்தப் பகுதி என்று எங்களை கேட்க, மதுரை, தமிழ்நாடு என்றவுடன், ஓ! சென்னை, பாண்டிச்சேரிசென்றிருக்கிறேன். தோசை மிகவும் பிடிக்கும் என்று சொன்னார் அந்த வயதான துறவி! (ஹ்ம்ம். தோசை பிடிக்கும்னு சொன்ன இரண்டாவது நபர் இவர்! ) பனாரஸ் பல்கலையில் சம்ஸ்க்ருதம் படித்தாகவும், நான்குவகையான புத்த பிரிவில், இவர்கள் கர்மபா என்ற பிரிவைச் சார்ந்தவர்கள், தலாய்லாமா வேறொரு பிரிவைச் சார்ந்தவர் என்றும் சாந்தமாக சிரித்துக் கொண்டே பேசினார். இந்த மடத்திற்கு தலாய்லாமாவும் ஒரு முறை வந்திருக்கிறார்.

சிங்களத்தில் இருப்பவர்கள் எந்த பிரிவு என்று கேட்க நினைத்து விட்டு விட்டேன்.

அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வர,  கணவரும் படங்கள் எடுத்து முடித்து விட, வீடு நோக்கிப் புறப்பட்டோம் 






























Thursday, October 30, 2014

Halloween Day

கனடாவிலும் அமெரிக்காவிலும் மற்றுமொரு பிரபலமான நாள் அக்டோபர் 31.

இறந்தவர்களை நினைத்துப் பார்க்கும் நாளாக ஆரம்பித்து கால சுழற்சியில் இன்று மிட்டாய், சாக்லேட் கிடைக்கும் இனிப்பான நாள் என்று குழந்தைகளும், பார்ட்டி கொண்டாட இன்னுமொரு நாள் என பெரியவர்களும் கார்ப்பரேட் கடைகளின் சித்தாந்தத்தில் உழலும் நாளாகி விட்டது இந்த மாதக்கடைசியன்று வரும் Halloween Day!

இலையுதிர் காலத்தின் தொடக்கமாக அக்டோபர் மாதம் முதலே பெரும்பாலான வீடுகளில் பெரிய பெரிய பூசணிக்காய்கள், காய்ந்த மக்காச்சோள இலைகளை வைத்தும், வீட்டின் முன் வயற்காட்டில் பறவைகளை விரட்ட வைத்திருக்கும் பொம்மைகளை கொண்டு அலங்கரித்தும், சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சிலந்தி வலை,பேய் உருவங்கள், எலும்புக் கூடு, கல்லறை, ஆரஞ்சு வண்ண விளக்குகள் என்றும் வீட்டின் முன் அலங்கரித்து வைத்திருப்பார்கள்.


அந்தி சாய்ந்தவுடன் குழந்தைகள் சிலர் மிக அழகாகவும், சிலர் மிகவும் கோரமாகவும் உடையணிந்து கொண்டு வீட்டுக்கு வீடு சென்று trick or treat  என சொல்ல, பெரும்பாலும் சாக்லேட்ஸ் கொடுக்கிறார்கள். சிலர் காசும் கொடுப்பதுண்டு.

முதல் வருடம் மகளுடன் சென்று ஒரு பை நிறைய சாக்லேட்ஸ் கொண்டு வந்த பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப் பிறகு தான் தெரிந்தது சில குழந்தைகள் பல மாதங்களுக்கு தங்களுக்கு வேண்டிய இனிப்புக்களை சேகரிப்பார்கள் என்று! பிறகு ஏன் டென்டல் இன்சூரன்ஸ் பில் ஏறாது?

குழந்தைகள் நண்பர்களுடன் வீடு வீடாக போய் விட்டு வருவதும் உண்டு. இந்த நாளில் வீட்டை அலங்கரித்து பார்ட்டி கொண்டாடுபவர்கள் பலர்! பெரியவர்களும் இந்த நாளுக்கென பிரயேத்திகமாக விற்கும் உடைகளை போட்டுக் கொண்டு பார்ட்டி கொண்டாடுகிறார்கள். பப்களில் இதற்கென தனி அலங்காரங்களும் நிகழ்ச்சிகளும் உண்டு. குடிமகன்களுக்கும் கொண்டாட்டம்!

அன்றைய தினத்தை பள்ளிகளிலும் நன்கு கொண்டாடுகிறார்கள். உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடைகள் வரை  அத்தினத்தின் கொண்டாட்டங்களை காணலாம்.
ஆசிரியர்களும் வேடமிட்டு குழந்தைகளுடன் ஊர்வலம் போக குழந்தைகள் குஷியாக என எல்லா வயதினரும் கொண்டாடும் ஒரு தினம்!

அமெரிக்காவில் எந்த ஒரு தினத்தையும் லாப நோக்கில் பார்த்து அந்த நாளுக்குரிய உண்மையான நோக்கம் மறைந்து வியாபாரமே முன்னிற்கிறது. மக்களும் அதற்குப் பழகி விட்டார்கள்!

பார்ட்டிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் பூசணிக்காய் நிறத்தில்.  சாக்லேட்ஸ், உடைகள், அலங்காரங்கள், கார்டுகள் என்று கடைகளிலும் குழந்தைப் பட்டாளங்கள் கூட்டம். இந்தப் பரவசம் எல்லாம் கொண்டு வந்த சாக்லேட் மூட்டையை பிரித்து போட்டு தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டவுடன் போய் விடும். அடுத்த நாள் பள்ளிக்கும், வேலைக்கும் எப்போதும் போல போக வேண்டியது தான்:(

காவல் துறையினரும் இருட்டில் குழந்தைகளைத் தனியாக அனுப்ப வேண்டாம், குழந்தைகள் கொண்டு வரும் இனிப்புகள், பழங்களை பெற்றோர் ஒரு முறை பார்த்து விட்டு அவர்களுக்கு கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். சில சைக்கோக்கள் பழங்களில் ஊசி வைத்துக் கொடுப்பதும், இனிப்புகளில் குழந்தைகளுக்கு ஒவ்வாத மருந்துகளை சேர்த்துக் கொடுப்பதும் கேட்கவே கலக்கமாகத் தான் இருக்கிறது!

தெருக்கள் முழுவதும் சாக்லேட் பைகளுடன் அலங்கரித்துக் கொண்டு ஓடித்திரியும் குழந்தைகளை காண்பதும் இனிமையான அனுபவம்!

ட்ரிக் ஆர் ட்ரீட் ??



Monday, October 13, 2014

Back to School ...

என் குழந்தைகளின் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடக்கும் பெற்றோர்களுக்கான 'Back to School night' நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

அவ்வருடத்தில் குழந்தைகள் படிக்கப் போகும் பாடங்கள், அவர்கள் செய்ய வேண்டியது என்ன, பெற்றோர்களுக்கு அதிலிருக்கும் பங்கு என்று ஒவ்வொரு ஆசிரியரும் கூறுவதைக் கேட்டு விட்டு காலை முதல் மாலை வரை பள்ளியில் நடக்கும் வெவ்வேறு வகுப்புகளுக்கு குழந்தைகள் செல்வதை பெற்றோர்களும் உணர்ந்து கொண்டு பெற்றோர்களுக்கும் ஏதாவது கேள்விகள் இருந்தால் கேட்டுக் கொள்ளும் அந்த நிகழ்ச்சிக்குப் போக வேண்டியது பெற்றோரின் கடமையும் கூட !

இந்த வருடமும் மாலை ஆறரை மணிக்குத் தான் இந்நிகழ்ச்சி ஆரம்பம் என்றாலும் கார் பார்க்கிங் பிரச்சினையைத் தவிர்க்க சீக்கிரமே சென்று விட்டேன். என்னைப் போலவே பலரும் வந்து காத்திருந்தார்கள். Parent Teacher Asso. கார்டு வாங்கிக் கொண்டு மாணவர்கள் காலையில் பள்ளிக்கு வந்ததும் மணியடிக்கும் முன் அவரவர் home room-க்குச் சென்று அமர வேண்டும், அப்படியே பெற்றோர்களும் செய்ய வேண்டும் என்று அங்கு போய் உட்கார, வகுப்பிலிருந்த ஆசிரியரும் அனைவருக்கும் அவர்கள் குழந்தைகள் கையால் எழுதிய அவர்களுடைய schedule-ஐ எடுத்துக் கொள்ளச் சொன்னார். அதில் விவரமாக எந்த வகுப்புகள் எந்த ரூமிற்குப் போக வேண்டும், பள்ளியின் வரைபடம் என்று அனைத்து தகவல்களும் இருந்தது.

சிறிது நேரத்தில் வகுப்புக்களில் இருந்த தொலைக்காட்சிப்பெட்டி வழியாக பள்ளி முதல்வர் வந்திருந்த அனைவரையும் வரவேற்று தங்கள் குழந்தைகளின் வகுப்பறைகளையும், ஆசிரியர்களையும் பார்த்து விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டு மாணவர்கள் படிப்பில் பெற்றவர்களும் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முதல் மணியடித்தவுடன் அவனுடைய ஆங்கில வகுப்பிற்குச் சென்றேன். வகுப்பு முழுவதும் ஆங்கில புத்தகங்கள்! மெல்லிய குரலில் அழகாக பேசிய ஆசிரியையும் இந்த வருடம் என்ன என்ன படிக்க போகிறோம், நீங்களும் உங்கள் குழந்தைகளுடன் இந்தப் புத்தகங்களை படிக்கலாம் என்று ஒரு ஆறு புத்தகங்களை காண்பித்தார். மாணவர்களின் மார்க்குகள் எல்லாம் ஹோம்வொர்க, வகுப்பில் அவர்களின் பங்களிப்பு, அசைன்மெண்ட், தேர்வுகள் அடிப்படையில் என்று ஒவ்வொன்றையும் விரிவாகச் சொல்லி கூடவே அவருடைய ஈமெயில், போன் நம்பரையும் கொடுத்து எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். உங்கள் குழந்தைக்குப் பாடம் புரியவில்லை என்றால் மாலை பள்ளி முடிந்ததும் இருந்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம். நீங்களும் அவர்களுடன் பேசுங்கள் என்று சொல்லி முடிக்கும் போது அடுத்த வகுப்புக்குச் செல்ல மணியடிக்க நாங்களும் அந்த அறையைத் தேடிப் போனோம்.

நல்ல வேளை , கணிதம் காலையிலேயே இருக்கிறது. அந்த ஆசிரியையும் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய மறப்பது ஒன்றும் கொலைக்குற்றம் அல்ல. அது தொடர்ந்தால் தான் பிரச்னை. அது மட்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே எட்டாம் வகுப்பு கணிதம் படிக்கலாம். அதே போல் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து கணிதம் படிக்கலாம். அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் அவர்கள் மேல் திணிக்க வேண்டாம். ஏழாம் வகுப்பு கணிதமே படிக்கட்டும். எட்டாம் வகுப்பு கணிதம் படித்தாலும் ஏழாம் வகுப்பு தேர்வையும் அவர்கள் எழுத வேண்டும் என்று ஒரு ஒரு பெரிய லிஸ்ட் போட்டுக் காண்பித்தார். இந்த டீச்சர என் பையன் ஈசியா சமாளிச்சிடுவான்னு நினைத்துக் கொண்டேன் :)

அடுத்தது, டெக்னாலஜி வகுப்பு. அதற்கு மாடியிலிருந்து இறங்கி கொஞ்சம் நடக்க வேண்டும்! வகுப்பறைகளுக்குச் செல்ல மாணவர்களுக்கு நான்கு நிமிடங்கள் கொடுக்கிறார்கள். அதற்குள் அவர்களுக்கு வேண்டிய புத்தகங்கள், நோட்டுக்களை லாக்கரில் இருந்து எடுத்துக் கொண்டு அடுத்த வகுப்பிற்குப்  போய் விட வேண்டும். அடிக்கடி வகுப்புகளுக்குத் தாமதமாக சென்றால் ஹால் பிரின்சிபாலை பார்க்க வேண்டும் :( கஷ்டம் தான் பசங்களுக்கு!

அந்த ஆசிரியர் சிரித்த முகத்துடன் 'கலகல' வென்று பேசினார். இன்னும் சிறிது நாளில் மாணவர்கள் தாங்கள் செய்த ராக்கெட்டை விடப் போவதைப் பற்றி வேடிக்கையுடன் சொன்னார். அவர்களுக்கு நானோ-டெக் பற்றிய ப்ராஜெக்ட் இருக்கிறது என்றும்கூறினார். ஆவலுடன் இருக்கிறேன்! நான்  என்ஜினியரிங் படிக்கும் போது இருந்த மெக்கானிக்கல் லேபின் சூழல் அந்த வகுப்பில்! நிச்சயம் என் மகனுக்குப் பிடித்த வகுப்பாக இருக்கும் என்று தோன்றியது. நிறைய கணினிகள். மாணவர்கள் வரைந்த மெக்கானிக்கல் டிராயிங் சுவர் முழுவதும்! பல சுவாரசியமான விஷயங்கள் மாணவர்களுக்கு பிடிக்கும் வகையில்- கிராபிக்ஸ், CAD , ரோபோடிக்ஸ்... என்று.

அவர் வகுப்பு முடிந்தவுடன் ஆடிட்டோரியத்தில் பேண்ட், ஆர்க்கெஸ்ட்ரா பற்றிய விரிவான விளக்கம். மாணவர்கள் தங்கள் ஃப்ரீ டைமில் ப்ராக்டிஸ் செய்ய வேண்டி இருக்கும். இந்த வருடத்தில் வரப்போகிற மியூசிக் ப்ரோக்ராம் தினங்கள் என்று ஒரு லிஸ்ட்டையும் கொடுத்தார்கள்! என்னுடைய பள்ளிக்கால பாட்டு வகுப்பு நினைவிற்கு வந்து அந்த ஆசிரியருக்கு நாங்கள் கொடுத்த தொல்லைகள் நினைவிற்குவர சிரித்துக் கொண்டேன்.

மீண்டும் மாடியேறி அவனுடைய ஜெர்மன் வகுப்புக்குள் நுழைந்தால் மொத்தமே 10-12 மாணவர்கள் தான் இருப்பார்கள் போலிருக்கு.மற்றவர்கள் எல்லாம் ஃப்ரெஞ்ச் , ஸ்பானிஷ் எடுத்திருக்கிறார்கள். என் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் ஜெர்மன் மேல் இப்படி ஒரு லவ்வோ? வார்த்தைகளை கடித்து இழுத்துப் போட்டுப் பேசுகிறார்கள்!!!சுவிஸ் , ஜெர்மனி நாட்டுக் கொடிகள், அந்த நாடுகளின் பிரபலமான இடங்கள், காலெண்டர் மேல் ஜெர்மன் மொழியாக்கம் என்று எதிலும் ஜெர்மன் மயமாக இருந்தது! அந்த ஆசிரியையும் என் மகளுக்கு வகுப்பு எடுத்தவர். அவரும் ஜெர்மனில் எங்களை வரவேற்றார். அது சரி, அவர் எப்படி சொல்லி இருந்தாலும் அது எனக்கு ஜெர்மன் போலவே இருந்தது :(

அது முடிந்ததும் மியூசிக் தியரி வகுப்பு. வகுப்பில் கிடார், கீபோர்டு அடுக்கி வைத்திருந்தார்கள். அந்த வகுப்பில் மாணவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்கப்படும், எவ்வளவு நேரம் வீட்டில் ப்ராக்டிஸ் செய்ய வேண்டும் என்று சொல்ல, அப்படியெல்லாம் என் மகன் ஒன்றும் ரெகுலரா பண்றா மாதிரி தெரியலையே, இனிமே கொஞ்சம் கவனமா இருக்கணும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆசிரியரும் என் மகனை சரியான வால் பையன் , படு சுட்டி ஆனால் கொஞ்சம் சேட்டை செய்கிறான் என்று வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் சொல்லி விட்டார். ம்ம்ம். அவனிடம் நான் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு ...

அடுத்த social studies வகுப்பிற்கு மீண்டும் மாடியேறிச் சென்றேன்! நல்ல துடிப்பான ஆசிரியர். ஏற்கெனவே மகனும் தனக்குப் பிடித்த ஆசிரியர் என்று சொல்லி இருந்தான். மாணவர்களை நன்கு அறிந்த ஆசிரியர் போல் தெரிந்தார். வகுப்பில் சிவில் வார், மார்டின் லூதர் கிங், ப்ரெசிடெண்ட் படங்கள் சுவர் முழுவதும், புத்தகங்கள் அலமாரிகளில்! நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் , நிதின் நன்றாக வகுப்பில் நடக்கும் டிஸ்கஷனில் பேசுவான், நன்றாகப் படிக்கிறான் என்று சொல்லிக்கொண்டே என் மகன் மறந்து போய் வைத்து விட்டு வந்த அவனுடைய ஸ்வெட்ஷர்ட்டை எடுத்துக் கொடுத்தார்!
இந்த வருடம் உலகில் நடக்கும் போர்களைப் பற்றியும் படிக்கப் போவதாக கூறினார். மாணவர்களுக்கு இன்றைய உலகில் தங்களைச் சுற்றி நடக்கும் செய்திகளையும் வழங்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ம்ம்ம். இந்தியாவில் கூட பாட முறையில் காலத்திற்க்கேற்றாவாறும் உண்மையான வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் மாற்றினால் நன்றாக இருக்கும் என்று மனதில் தோன்றியது!

இதற்குள் மணி ஒன்பதை நெருங்க போதுமடா சாமி, ஆளை விடுங்கப்பா என்ற ரேஞ்சில் பல ஆசிரியர்களும் பெற்றோர்களும். கடைசி வகுப்பு சயின்ஸ். வாரம் ஒரு முறை லேப் இருக்கும். அன்றைய லேப் வேலைகளை மறக்காமல் அன்றே செய்ய சொல்லுங்கள் என்று லேப் டீச்சரும் வகுப்பில் என்ன படிக்கப் போகிறார்கள் என்று ஆசிரியரும் சொல்லும் பொழுது பெற்றோர்கள் கண்களில் விட்டா போதும் என்று தூக்கம் சொக்கிக் கொண்டிருந்தது!!!

நடுநடுவில் இந்திய நண்பர்கள், குழந்தைகளின் நண்பர்களின் பெற்றோர்கள் என்று பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.

அனைத்து வகுப்புகளிலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி,டச் ஸ்க்ரீன் போர்டு, ப்ரொஜெக்டர், அறை முழுவதும் புத்தகங்கள், சுவர்களில் அந்தந்த வகுப்பைச் சார்ந்த படங்கள், குறிப்புகள், மாணவர்கள் அமர இருக்கைகள் என்று கூலாக இருந்தது. ஆசிரியர்களும் 'சிக்'கென்று ரெடிமேட் புன்னகையுடன் டிப்டாப்பாக இருந்தார்கள்! குரலை உயர்த்திப் பேசாமல் எப்படி இவர்கள் மாணவர்களை கையாளுகிறார்கள் என்று மலைப்பாக இருந்தது!

ஆசிரியர்கள் அனைவரும் மகளுக்கும் வகுப்பு எடுத்தவர்கள். ஞாபகமாக அவளைப் பற்றி விசாரித்தார்கள். அனைவரும் சொன்னது சச் எ டார்லிங் கேர்ள், வெரிநைஸ் கேர்ள் , நல்ல படிப்பாளி ..கேட்க மிகவும் நன்றாக இருந்தது. மகன் என்ன பாடுபடுத்துவானோ !

ஒரு வழியாக அனைத்தும் முடிந்து, அலுவலகத்திற்குப் போய் ஆன்லைன் id வாங்கிக் கொண்டேன். மாணவர்களின் ரிப்போர்ட் கார்டு, ஹோம்வொர்க் , தேர்வுகள் பற்றிய நிலவரங்கள் என்று அனைத்தும் ஓரிடத்தில் பார்த்து விடலாம்!

ஆசிரியர்கள்வீட்டுப்பாடத் தகவல்களை வெப்சைட்டில் அன்றன்றே போட்டுவிடுவோம். எங்களுக்கு வீட்டுப் பாடம் இல்லை என்று உங்கள் குழந்தைகள் கூறினாலும் நீங்கள் சென்று பார்த்து விடலாம் :) அவர்களின் ப்ரோக்ரெஸ் ரிப்போர்ட்டும் ஆன்லைனில் இருக்கும் என்று அனைத்து தகவல்களும் தெரிந்து விட்டது. என் மகனைப் போன்ற குழந்தைகளுக்கு இது அனர்த்தமாக தெரிந்தாலும் என்னைப் போன்ற பெற்றோர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்! :)

சில வகுப்புகள் மீண்டும் பள்ளிக்குப் போக வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது! ஒரு வழியாக அனைத்தும் முடிந்து டிராஃபிக் நெரிசலில் மீண்டு வீடு வந்து சேரும் பொழுது இரவு 9.45 மணி.

எப்படி இருந்தது என்று கேட்ட மகனிடம் நன்றாக இருந்தது, எல்லா ஆசிரியர்களிடமும் பேசி விட்டேன். உன்னைப் பற்றியும் சொல்லி விட்டேன் என்றேன் சிரித்துக் கொண்டே! ம்ம்ம். ஏற்கெனவே எல்லோரும் சதாசர்வ காலமும் உன் அக்கா நல்ல படிப்பாளி என்று வெறுப்பேற்றுகிறார்கள். இப்போது நீ வேற பேசிட்டு வந்திருக்கே இனி கொஞ்சம் கவனமா தான் இருக்கணும் என்றான் நொந்து கொண்டே ! சரி, சரி ஸ்கூலுக்குப் போயிட்டு வந்ததில எனக்கு ரொம்ப டயர்டாக இருக்கிறது நான் போய் தூங்கணும் என்றவுடன், இப்படித்தானே எனக்கும் இருக்கும் என்றானே பார்க்கலாம்!

பள்ளியில் இருக்கும் நூலகம், உடற்பயிற்சிக்கூடம், கான்டீன், வகுப்புகள், ஆசிரியர்களைப் பார்க்கும் போதெல்லாம் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை வருகிறது. துள்ளித் திரிந்த பள்ளி நாட்கள் மீண்டும் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...

வேலைக்குச் செல்பவர்களுக்குப் பள்ளிக்குச் செல்ல ஆசை.

பள்ளிக்குச் செல்பவர்களுக்கோ வேலைக்குச் செல்ல ஆசை!

இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போலும்!







Wednesday, September 3, 2014

அயல்நாட்டில் ஒரு சந்திப்பு

வட அமெரிக்காவில் வாழும் என் தாய்மொழி பேசும் மக்கள் அனைவரும் சந்தித்து பேசி மகிழ ஒரு மாநாடு அதுவும் வெர்ஜினியா மாநிலத்தில் என்றவுடன் எப்படியாவது போயே தீருவது என்று கலிஃபோர்னியா போகவிருந்த திட்டத்தையும் மாற்றி அந்த நாளுக்காகக் காத்திருந்தோம்.

மாநாடு நாள் நெருங்க, நெருங்க ரகு திருக்கொண்டா தலைமையில் கார்த்திக் திருக்கொண்டா மற்றும் DC மெட்ரோ குடும்பங்கள் பலவும் மாநாட்டிற்கான நிகழ்ச்சிகள், அழைப்பிதழ்கள், நினைவுப்பரிசு என பல நாட்கள் இணையம், ஃபோன் மூலம் கடுமையாகத் திட்டமிட்டு ஒரு வழியாக பள்ளி ஒன்றில் நானூற்று ஐம்பது பேர் வரை பங்கு கொள்ள வசதியாக இடத்தையும் முடிவு செய்தார்கள்.

மெட்ரோ ஏரியாவில் இருந்தவர்கள் பலரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களுடன் வந்து தங்கி இருக்குமாறு அந்த பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்கள். ஃபேஸ்புக் மூலமாக அழைப்பிதழும், தங்கள் வருகையை தெரியப்படுத்த வேண்டிய கடைசி நாளும் வடஅமெரிக்கா வாழ் சௌராஷ்டிரா மக்களுக்கு தெரியப்படுத்தியும் ஆயிற்று.

நாம் தான் மண்ணின் மணம் மறந்தவர்கள் இல்லையே? தினமும் அதே pinned post பார்த்தாலும் கடைசி நாள் வரை காத்திருந்து பதில் சொன்னவர்களும், பார்த்தவுடன் வருகிறோம் என்று சொன்னவர்களும், கடைசி நிமிடத்தில் வர விரும்பினவர்களும் என ஒரு வழியாக பெரியவர்கள், குழந்தைகள் என்று நானூற்று இருபத்தைந்து பேர் வரை வந்து விட்டதாகவும் தெரிய வர, அத்துடன் அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள் :)

நண்பர் சீனிவாசனும் அவர்களுடன் வந்து தங்குமாறு அன்புடன் அழைத்திருந்தார். கார்த்திக் ஒப்லா மேரிலாண்டில் இருந்தது கூடுதல் போனஸ்! ஆக அவர்களையும் பார்த்த மாதிரி ஆயிற்று, அமெரிக்காவில் இருக்கும் பிற சௌராஷ்டிரா உடன்பிறப்புக்களையும் பார்த்த மாதிரி ஆகி விடும் என்று இரு நாட்கள் முன்பே கிளம்பி கார்த்திக் வீட்டிற்குச் சென்று விட்டோம்.

ஒரு நாள் முழுவதும் கால் வலிக்க ஒன்பது மைல் நடந்து தலைநகரைச் சுற்றோ சுற்று என்று சுற்றி, வளைத்து வளைத்துப் படங்கள் எடுத்துக் கொண்டும், ஆசை தீர வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பார்த்ததும் என இனிமையாக கழிந்தது.

அடுத்த நாள் வெளியே எங்கும் வர மாட்டேன். நேற்று நடந்த நடையில் களைப்பாகி விட்டேன் என்று மகன் கொடி தூக்கிப் போராட்டம் செய்யாத குறையாக சொல்லவும் அன்றைய நாள் வீட்டிலேயே குழந்தைகள் விளையாட, நாங்களும் நிதானமாக பொழுதை களித்தோம். மாலையில் குழந்தைகள் கோல்ஃப் விளையாடப் போக, நியூஜெர்சியிலிருந்து சதீஷின் குடும்பமும் வந்து சேர, கலகலவென்று மதுரை நண்பர்கள், உறவினர்கள் என்று பேசி இனிதே அன்றைய பொழுதும் போனது.

மறுநாள் அதிகாலையில் ஒவ்வொரு குடும்பமாய் மாநாடு செல்லத் தயாராக, ஏதோ கல்யாணத்திற்குச் செல்வது போல் பட்டுப் புடவை சரசரக்க, மதுரை மல்லி மணமணக்க, தங்க,வைர நகை அலங்காரங்களுடன் வீட்டை விட்டு கிளம்பும் போது காலை 8.30. வெயிலும் போக்குவரத்து நெரிசலும் மதுரையை நினைவுறுத்த ஒரு மணி நேர சாலைப் பயணத்தில் வெர்ஜினியா மாநிலம் வந்து சேர்ந்தோம்.

மாநாடு நடந்த இடத்தின் வாசலிலேயே சிவா, சுப்பிரமணியன், ரமேஷ்பாபு அவர்கள் தத்தம் கேமராக்களுடன் வரும் குடும்பங்களை கிளிக்கிக் கொண்டிருக்க, குழந்தைகள் பன்னீர் தெளித்து, சந்தனம், குங்குமம், கற்கண்டு உபசரித்து விழாவிற்கு வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் சிரித்த முகத்துடன் வரவேற்று ரிஷப்ஷன் மேஜைக்குச் செல்லுமாறு சொல்ல, அங்கு மேல்நிலைப் பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் ஒவ்வொரு குடும்பத்தின் அடையாள எண்ணைக் கூறியவுடன் முன்பே தயாரித்து வைத்திருந்த பெயர்கள் எழுதிய பேட்ஜ், மாநாட்டிற்கு வருபவர்களின் விவரங்களுடன் குடும்ப படங்கள், சௌராஷ்டிரா சமையல் குறிப்புகள், பாட்டி அம்மாக்கள் பயன்படுத்திய பேச்சு வழக்குகள் ,பழமொழிகள் ஆகியவற்றை தொகுத்து ஒரு புத்தகமாக வந்திருந்தவர்கள் குடும்பத்திற்கு கொடுத்தார்கள்.

உள்ளே சென்றால் மிக்ஷிகனில் இருந்து ஒரு பஸ்சில் வந்திருந்தவர்களில் நண்பர்கள் பலரும் இருக்க, பள்ளித்தோழி ஆஷாவுடன் பேசி அக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டதும், மதுரை, சேலம், திருச்சி, கும்பகோணம் என்று பல ஊர்களில் இருந்து வந்திருந்த மக்களை ஒரே இடத்தில் பார்த்துப் பேசியதும் மகிழ்ச்சியான அனுபவம்.

உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன். ஆ! ஃ பேஸ்புக்கில் தான் என்று சிலருடனும், உங்கள் மகன் அருமையாக புல்லாங்குழல் வாசிக்கிறான் என்று அவனிடம் சிலரும், நீங்கள் அருமையாக படங்கள் எடுக்கிறீர்கள் என்று கணவரிடமும், நீங்கள் TCE ஆ, நானும் தான் எந்த வருஷம், ஓ! என் தம்பி செட், எனக்கு ஜூனியர், நீங்கள் எனக்கு சீனியர் என்று ஒரு மினி TCE alumini கூட்டத்துடனும் பேசிக் கொண்டிருந்ததில் மதுரைக்கே சென்ற உணர்வு.

சிறிது நேரத்தில் கூட்டம் அதிகரிக்க, பெரியவர்களை கொண்டு விளக்கேற்றி , சிறு குழந்தைகள் கடவுள் வாழ்த்து பாடி முடிக்க, ரகு திருக்கொண்டாவின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தது. முதல் நிகழ்ச்சியாக, குடும்பங்கள் அறிமுகம் செய்து கொள்ள, நேரமின்மை காரணமாக ஐம்பது குடும்பங்கள் மட்டுமே தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடிந்தது. ஃப்ளோரிடாவிலிருந்து வந்திருந்த திருமதி.சாந்தி அவர்கள் அந்த காலத்தில் சௌராஷ்டிரா பெண்கள் கட்டும் முறைப்படி சேலை அணிந்திருந்தது பலருக்கும் பிடித்திருந்தது :)

அடுத்த நிகழ்ச்சியாக பல வருடங்களுக்கு முன் அமெரிக்கா வந்து கடுமையாக உழைத்து எப்படி குழந்தைகளை வளர்த்து ஆளாக்கித் திருமணமும் முடித்து அவர்களும் தங்கள் குழந்தைகளுடன் இன்றும் தாய்மொழியை மறக்காமல் இருக்கிறார்கள், அயல்நாட்டில் குழந்தைகளை வளர்க்கும் பொழுது எதிர் கொள்ளும் பிரச்னைகள், அதிலிருந்து மீள்வது எப்படி என்று சுவையான தகவல்களுடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

சிறு குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் cafeteriaவில்  நடந்து கொண்டிருந்தது. அங்கு அவர்கள் புதுப்புது டிசைன்களில் ஆர்ட் வேலைகள் என்று பிஸியாக இருக்க, பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகள் இடையூறு இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

நடுவில் இளைப்பாறிக் கொள்ள தேநீரும், காபியும் என்று சிறிது நேரம் ஒரு மினி கூட்டம் அங்கு சேர்ந்து கொண்டு உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன், நீங்கள்..

இருபது வருஷத்துக்கு முன்னே பார்த்தது ரொம்பவே மாறீட்டீங்க என சுவாரசியமான பேச்சுக்கள் தொடர ...மீண்டும் கலகலப்பு :)

பெண்களுக்காக ஒரு நிகழ்ச்சி- குழந்தை வளர்ப்பு, வேலைக்குச் செல்வது பற்றியும் உரையாடல்கள் தொடர்ந்தது. பலரும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றவுடன் தங்கள் வேலையைத் தொடர்ந்தது அதில் வந்த பிரச்னைகளை கையாண்டது பற்றி பேசினார்கள். பலருக்கும் உபயோகமாக இருந்திருக்கலாம்.

மேல்நிலைப்பள்ளி, கல்லூரி வயது குழந்தைகள் தங்களுக்குள் பேசி சுபர்ணா தயாரித்திருந்த கேள்விகளுக்கு அவர்கள் அளித்திருந்த பதிலைக் கொண்டு ஒரு panel discussion அருமையாக இருந்தது. அதில் அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது வளரும் குழந்தைகளுக்கு உபயோகமாக இருக்கும்.

மனதை நெருடிய ஒரு விஷயம் - குழந்தைகள் பலரும் தங்களை ஹிந்துக்கள் என்று சொல்ல விருப்பப்படவில்லை என்பதாக இருந்தது. கண்டிப்பாக குழந்தைகளிடம் பெற்றோர்கள் மனம் விட்டுப் பேச வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம் என்பதை சுட்டிக் காட்டியது. மிகவும் வருத்தமான விஷயமும் கூட!

சௌராஷ்டிரா வார்த்தை விளையாட்டு அனைவரும் மகிழும் வண்ணம் நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தது. மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தி தாய்மொழியில் பல வார்த்தைகளை மறந்து விட்டதை நினைத்து வெட்கமாகவும், சோகமாகவும் இருந்தது.

அசோக் காம்பியராக தன் ஜோக்குகளால் மக்கள் சோர்ந்து விடாமல் நிகழ்ச்சிகளை கொண்டு சென்றது பாராட்டுக்குரியது !

அதற்குள் மதிய நேரமும் நெருங்கி விட அனைவரையும் சாப்பிடும் இடத்திற்குப் போகுமாறு கேட்டுக் கொண்டார்கள். அங்கே சைவ, அசைவ உணவுகள் அவரவரே எடுத்துக் கொள்ளும் வகையில் மிக அற்புதமாக பிரித்து வைத்து எந்த வித நெரிசலும் இல்லாதவாறு பார்த்துக் கொண்டது பாராட்டுக்குரியது! இதன் பின்னால் பலரின் கடும் உழைப்பை பார்க்க முடிந்தது.

அங்கு நண்பர்களுடன் படத்தை எடுத்துக் கொண்டும், இணையம் வழியாக பலமுறை பார்த்தும், பேசியிருந்தும் நேரில் பார்த்து...அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே ரேஞ்சில் பலரும் புளங்காகிதமாக பேசிக் கொண்டிருக்க நேரம் சென்றதே தெரியவில்லை.


மீண்டும் மதிய நேர நிகழ்ச்சிகள். சுதர்சன் PHL (Palkar Helpline ) என்று உலகில் பல பகுதிகளில் வாழும் சௌராஷ்டிரா மக்களின் முழு ஆதரவுடனும், முக்கியமாக அமெரிக்காவில் உள்ளவர்களின் பங்களிப்பு எவ்வாறு கடைநிலை சௌராஷ்டிரா மக்களுக்கு உதவியாக இருக்கிறது, அதன் தொண்டுகள், பயன்பெற்றவர்கள் என்று சிறு தொகுப்பாக பேசியதும், மதுரையில் சௌராஷ்டிரா டிரஸ்ட் சொத்துக்கள் அழியும் நிலையில் இருப்பதும் அதைக் காப்பது பற்றி திரு.சிவப்பிரசாத் அவர்கள் பேசிய உரைகள் மிகவும் கவனிக்கத்தக்கதாக இருந்தது.

DC மெட்ரோ அன்பர்களின் நாடகம் ஒன்று அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

நடுவில் தேநீரும், சமோசாவும் என்று சிறிது நேரம் மீண்டும் மக்களுடன் பேசிக்கொண்டு, பெண்கள் மாலை நேர மேக்கப், உடைகள் அணிந்து கொண்டு வலம் வர ...

கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தது. முதலில் TMS அய்யா அவர்களின் பேரன் பாட்டு பாட, பெண்குழந்தைகளின் அழகிய நடனம் , அதைத் தொடர்ந்து மகேஷ் அவர்கள் என் கணவரை கேட்டுக் கொள்ள, அவரும் ஹார்மோனிக்காவில் ஒரு அழகிய தமிழ் பாடலை இசைக்க, முடிவில் ஒரு அழகான நடனத்துடன் இனிதே நிகழ்ச்சிகள் நடந்தது.

நிகழ்ச்சியின்இறுதியாக நன்றியுரை முடிந்தவுடன் இட்லி, வெண்பொங்கல், பூரி, காரட் ஹல்வா, வடை , சன்னா மசாலா, சாம்பார், சட்னிகளுடன் இரவு உணவும் தயாராக இருக்க மக்கள் கூட்டம் மெதுவாக நகர...

சாப்பாடு முடிந்தவுடன் அனைவரிடமும் விடை பெற்று மக்கள் கூட்டம் கலைய, கலையரங்கு மற்றும் சாப்பிட்ட இடங்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சுத்தம் செய்ய ...அடுத்த முறை மிக்ஷிகனில் சந்திப்போம் என்றுஅனைவரும் புறப்பட ...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாள் முழுவதும் தாய் மொழியில் பேசி, கேட்க ஒரு நிறைவான நாளை அளித்த பலரின் நேரமும் உழைப்பும் பங்களிப்பும் மிகவும் பாராட்டுக்குரியது.

மீண்டும் ஒரு மணி நேரப் பயணத்திற்கு நாங்கள் ஆயத்தமாக வெளியில் வந்த பொழுது தான் பகலில் இடியுடன் மழை பெய்திருப்பதும் இரவிலும் மழை எங்களைத் தொடர்ந்ததுமாய் வீடு வந்து சேர்ந்து இரவு இரண்டு மணி வரை வாய் ஓயாமல் பேசி சிரித்து மகிழ்ந்ததுமாய் அந்த நாள் ஒரு ஆனந்தமான நாள்!


படங்கள்  : மகேஷ் சுட்டி , சிவா சொட்டல்லு , விஷ்வேஷ் ஒப்லா 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

18 வருடங்களுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஊருக்குச் சென்றிருந்த பொழுது கோபுர...