Wednesday, August 31, 2022

தூங்காத கண்ணென்று ஒன்று

வானொலியில் நமக்குப் பிடித்த பாடலை கேட்க நேர்ந்தால் அன்றைய நாள் முழுவதும் அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே மகிழ்ச்சியான நாளாக பொழுதுகள் கரையும். பாடல்களின் நடுநடுவே நேயர்கள் பங்கும் பெரும் சில நிகழ்ச்சிகளையும் கேட்டுக் கொண்டே பயணிப்பது குதூகலமாக இருக்கும். தொகுப்பாளர்கள் கேட்கும் கேள்விக்கு சளைக்காமல் ஜல்லி அடிப்பார்கள் நேயர்கள். நக்கலாக, சீரியஸாக, உண்மையாக என்று பல தொனியில் பதில்கள் வரும். நம் பதிலையும் அதில் ஒன்றோடு பொருத்திப் பார்த்துச் சிரித்துக் கொள்ளலாம். அப்படித்தான் இந்த கேள்வியும். தொகுத்து வழங்குபவர்கள் இருவரும் செம கில்லாடிகள். போட்டு வாங்குவது எப்படி என்று இவர்களிடம் கற்றுக் கொள்ளலாம். செம ஜாலியான எனக்கு மிகவும் பிடித்த வானொலி நிகழ்ச்சி. இப்படித்தான் நேற்று ஒரு கேள்வியைக் கேட்டார்கள்.

"Can the couple that sleeps apart due to sleep issues still be happy?"

இதற்குப் பதில் தெரிந்தது தான் என்றாலும் நேயர்களின் நக்கலான பதில்களுக்காக காத்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே பல சுவையான பதில்கள்.

"நான் அதிகாலையில் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் தனியாகத் தான் படுத்துக் கொள்வேன். இதனால் மனைவிக்குத் தொந்தரவு இல்லாமல் நான் பாட்டுக்கு கிளம்பி விடுவேன்." என்று தொடங்கி வைத்தார் தொகுப்பாளர். அதைத் தொடர்ந்து நேயர்கள் பலரும்

"சில வருடங்களாக நானும் கணவரும் தனித்தனியாக தான் படுத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறோம்."

"25 வருட திருமண வாழ்விற்குப் பிறகு பல குடும்பங்களில் இது சாதாரணமான நிகழ்வு தான். என்ன தான் கணவன் மனைவியாக இருந்தாலும் சேர்ந்தே தான் உறங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரவர் விருப்பப்படி அமைதியான நல்ல உறக்கத்திற்குத் தனித்தனியாக உறங்குவதால் உறவுகள் பலப்படுமே ஒழிய குறையாது." என்று ஒரு நேயர்.

"குறட்டை விட்டுத் தூங்குபவர்களுடன் உறங்கி தன் தூக்கத்தைத் தொலைத்து நிம்மதியின்றி இருப்பதற்கு தனியாகவே படுத்துடலாம்."

"அமைதியான ஆழ்ந்த உறக்கம் அவசியம். அதற்கு இது ஒன்று தான் தீர்வு."

"விருந்தினர்கள் வந்து தங்குவதற்கு ஒரு அறை அநேக வீடுகளில் இருக்கும். பலருக்கும் அது தப்பியோடி படுத்துக்கொள்ளும் இடம்."

"தினமும் நடு இரவில் வேறொரு அறையில் தூங்க ஓடுவேன். என் கணவரின் குறட்டைச்சத்தம் அத்தனை கொடுமை."

ஒருவர் இன்னொரு படி மேல். "நானும் என் கணவரும் தனித்தனி வீட்டில் இருக்கிறோம். வாரத்தில் 3-4 நாட்கள் சேர்ந்து உறங்குவோம். அதுவே நன்றாக தான் இருக்கிறது." என்றார்.

சிலர் , " எனக்கு snuggle பண்ணித் தூங்கணும்."

"நான் டிவி பார்ப்பேன், லேட்டா தூங்குவேன். குறட்டை விடுவேன். கணவருக்குச் சிறு சப்தம்கூட இடைஞ்சல் தான். அதனால் நாங்கள் தனித்தனியாக தான் தூங்குகிறோம். நன்றாக தான் இருக்கிறது. நாங்களும் சந்தோஷமாகத் தான் இருக்கிறோம்."

இப்படி பல விதமான பதில்கள்.

கனடா வந்த புதிதில் நாங்கள் சென்ற வீட்டில் கணவரும் மனைவியும் தனித்தனியே அவரவர் அறையில் படுக்கிறார்கள் என்பது பெரிய அதிர்ச்சியாக இருந்தது எனக்கு அப்போது! அவர்களுக்குள் என்ன பிரச்னையோ?. சும்மா உலகத்திற்காக சேர்ந்து இருக்கிறார்களோ என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக நினைத்திருக்கிறேன்.

ஆனால் அவரவர் வேலை நேரம், பழக்க வழக்கங்களைப் பொறுத்து இப்படி உறங்குவதில் தவறில்லை. அதனால் கணவன்-மனைவி உறவு பாதிக்கப்படப் போவதுமில்லை என்று புரிந்து கொண்டேன்.

இதில் ஒரு பெண் சிரித்துக் கொண்டே "என் கணவர் குறட்டை விட்டால் ரயில் ஓடுவது போல் இருக்கும். இதற்காகவே தனியாக படுக்கிறேன்." என்றார்.

பெரும்பாலான மக்களுக்கு குறட்டை ஒலி தான் இந்தப் பிரிவினையை ஏற்படுத்துகிறது என்று தொகுப்பாளர் சிரித்துக் கொண்டே, " தனித்தனியாக படுப்பதால் உறவு கணவன்-மனைவி ஒன்றும் பாதிக்கப்படுவதில்லை. மேலும் பலப்படவே செய்கிறது." என்று நிகழ்ச்சியை முடித்தார்.

தூக்கம் எத்தனை அவசியமானது. இன்பமானது என்பதை உறக்கத்தைத் தொலைத்தவர்களுக்கு மட்டுமே தெரியும். புரியும்.

நம்மூரில் இரவானால் வீடுகளில் பலப்பல டெசிபல்களில் விதவிதமான சத்தங்களில் அநேக ராகங்களில் 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' என்று குறட்டை விட்டுத் தூங்கும் மனிதர்களிடையே தூங்கிப் பழகியவர்களுக்கு அமைதியாக இருந்தால் 'பேசும் படம்' கமல் மாதிரி அதை ரெக்கார்ட் செய்து ஓட விட்டுத் தான் தூங்க வேண்டும். நமக்கு அநியாயத்திற்குப் பொறுமை இருக்கிறது.





Monday, August 29, 2022

மரமே மரமே

ராபர்ட் ஃபிராஸ்ட் நினைவு இல்லத்திற்குச் சென்று வந்த பிறகு அவரது கவிதைகளை அறிந்து கொள்ளும் எளிய முயற்சி.

Tree At My Window

Tree at my window, window tree,
My sash is lowered when night comes on;
But let there never be curtain drawn
Between you and me.

Vague dream head lifted out of the ground,
And thing next most diffuse to cloud,
Not all your light tongues talking aloud
Could be profound.

But tree, I have seen you taken and tossed,
And if you have seen me when I slept,
You have seen me when I was taken and swept
And all but lost.

That day she put our heads together,
Fate had her imagination about her,
Your head so much concerned with outer,
Mine with inner, weather.


- Robert Frost

ஒரு குழந்தையின் மனநிலையில் ஆரம்பித்து தத்துவார்த்தமாக முடிகிறது இந்த ஜன்னலோர மரத்தைப் பற்றின அழகிய கவிதை. பனிக்காலத்தில் இலைகளைத் துறந்து மொட்டையாக கறுத்து நிற்கும் மரங்கள் பனி கொட்டும் நாளில் வெண்பனியுடனும் ஐஸ்மழை பொழியும் நாட்களில் கிளைகள் எடை தாங்காது வளைந்தும் நிற்கும். பெருங்காற்றில் பூமிக்கும் அதற்குமான பல கால பந்தம் அறுந்து வேரோடு சாய்ந்து விடும் அபாயங்களும் உண்டு. மழைக்காலத்தில் துளிர்த்து, வெயில்காலத்தில் குளுமையைத் தந்து தென்றல் வீசிடும் நாட்களில் அழகாய் தலையசைத்து இலையுதிர்காலத்தில் வண்ண வண்ண இலைகளுடன் என்று ஒவ்வொரு பருவத்திலும் வலம் வரும் மரங்கள் அனைத்தும் பல புறக்காரணிகளால் பாதிப்புக்கு உள்ளாவதைப் போல் தானும் உள்மனக் காரணிகளால் கவலை கொள்வதாகச் சொல்லி முடித்ததில் மனங்கவருகிறது இந்தக் கவிதை.

ராபர்ட் ஃபிராஸ்ட் வீட்டைச் சுற்றி பெரிய பெரிய மரங்கள் இருந்தது. அவர் குறிப்பிடும் ஜன்னல் வழியே தெரிந்த மரம் தான் இந்த கவிதையின் ஆதாரம் போலும்!

மரங்கள் சூழ் மாடி வீடுகளில் கண் விழித்தவுடன் முதலில் தெரிவது ஜன்னல் அருகே அசைந்தாடும் மரமாகத் தான் இருக்கும். எத்தனை பேர் அதனை ரசிப்பார்கள் என்பது வேறு விஷயம். காலையில் எழும்பொழுதே அந்த நாள் எப்படி இருக்கப் போகிறதோ என்ற கவலையுடன் தான் பலருக்கும் விடியும். வேலைகளை முடித்து விட்டுக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய கட்டாய மனக்கவலை அம்மாக்காளுக்கு. படிக்கச் செல்ல வேண்டுமே என்று குளிர் காலையில் எழுந்திருக்க மனமின்றி எழும் பிள்ளைகள், அன்றைய அலுவலை நினைத்து என்று அவரவர்க்கு அவரவர் கவலை. இதில் மரம் ஜன்னலில் எட்டிப்பார்த்தால் என்ன? பார்க்காவிட்டால் என்ன?

ஜன்னலில் எட்டிப்பார்க்கும் மரத்துடனான பொழுதுகள் இனிமையானவை. ரசிக்கத்தகுந்தவை. குழந்தையின் மனநிலையில் தான் "ஜன்னல் மரம்" என்று பெயரிட்டுப் பேசிட முடியும்! என்ன? குழந்தை மனம் தான் வேண்டும். அதைத்தான் இன்று இழந்து கொண்டிருக்கிறோம்😞😔😢



Sunday, August 21, 2022

ஞாயிறு என்பது சுகமா ?

ஞாயிற்றுக்கிழமை என்றாலே "சோம்பலான நாள்" என்றே மனதில் பதிந்துவிட்டிருக்கிறது. சிறுவயதில் அந்த நாளில் தான் பாட்டி வீட்டிற்குச் செல்வது வழக்கம். எங்கள் சமூகத்தில் திருமணமான பெண்கள் தாய் வீட்டுக்குச் செல்லும் தினம். பெரும்பாலும் உள்ளூரிலேயே இருந்ததால் இதெல்லாம் சாத்தியமாயிற்று அப்போது. பாட்டி வீடுகளில் மகள்கள், பேரக்குழந்தைகள் என்று வீடே கலகலக்கும் குதூகலமான நாள். அத்தைகளும் அவர்கள் அம்மா வீட்டிற்குச் சென்று விடுவார்கள். சமயங்களில் அவர்களுடன் சேர்ந்து அவர்கள் அம்மா வீட்டிற்கும் சென்று விடுவோம். ஆட்கள்  நடமாட்டமில்லாமல் வெறிச்சோடி இருக்கும் தெருக்களில் மற்ற வீட்டுக் குழந்தைகள் அனைவருடனும் ஓடிப்பிடித்து விளையாட ஜாலியாக இருக்கும். நடுநிலைப்பள்ளி வயது வரை இந்த ஆட்டம் தொடர்ந்தது.

சூப்பரான மதிய உணவு, நியூசினிமா, சென்ட்ரல், சிட்டிசினிமா இதில்  ஏதோ ஒரு திரையரங்கில் ஒரு திரைப்படம், மாலை நேரத்து நொறுக்குத்தீனியாக சுடச்சுட நெய் வழியும் பெரிய போளியல், ஜீராவில் மிதக்கும் இனிப்பு வடை, ஐஸ்கிரீம் என்று கேட்டதெல்லாம் கிடைக்கும். தாழம்பூ வைத்து ஜடை இல்லையென்றால் மதுரை மல்லி, பிச்சிப் பூக்களைச் சூடிக் கொண்டு இரவில் சௌராஷ்ட்ரா ஸ்பெஷல் அம்பட் பாத், பன் அல்வா/ தக்காளி சாதம், சேமியா அல்வா  என்று திகட்ட திகட்ட சாப்பிட்டு விட்டு விடை பெறுகையில் பாட்டி தரும் காசை வாங்கி அடுத்த நாள் பள்ளியில் என்ன வாங்கிச் சாப்பிடலாம் என்று அசை போடும் மனம். ரிக்ஷாவில் இரவில் வீடு திரும்புகையில் தான் அடுத்த நாள் பள்ளிக்கூடம் அதுவும் வாராந்திர தேர்வு என்று ஒரு கழுத்தறுப்பு இருப்பதும் நினைவிற்கு வர படித்ததெல்லாம் மறந்து போன மாதிரி உணர்வு. நல்ல மதிப்பெண்கள் வாங்கவில்லையென்றால் அப்பாவிடம் அடி வாங்க வேண்டும். அதை நினைத்தவுடன் "உதிரிப்பூக்கள்" அஸ்வினி முகம் போல சோகம் அப்பிக்கொள்ளும். 

மேல்நிலைப்பள்ளி நாட்களில் எப்படா வார விடுமுறை வரும் என்று இருக்கும். அதுவும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை. காலையில் எழுந்திருப்பதே தாமதமாகத்தான். அன்று இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் திரையிசைப் பாடல்கள், பாட்டுக்குப்பாட்டு, திரைப்பட வசனங்கள் என்று களைகட்டும். தில்லானா மோகனாம்பாள், பட்டிக்காடா பட்டணமா, திருவிளையாடல்  என்று பல பிரபல திரைப்படங்களின் வசனங்களைக் கேட்க, அதே வசனங்களை சேர்ந்து பேசி என்று பொழுதுகள் இனிமையாக கரையும். பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் நமக்குத் தெரிந்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவருக்குத் தெரியவில்லை என்றால் நகத்தைக் கடித்துக் கொண்டே "லூசு லூசு. இது கூட தெரியல." என்று தெரிந்த பாடல்களை நாங்கள் எங்களுக்குள் பாடிக் கொண்டிருப்போம். எதுவும் இல்லையென்றால் இருக்கவே இருக்கு கேசட்டுகள். தமிழ், ஹிந்தி என்று மாறிமாறி காதில் ரத்தம் வரும் வரை கேட்டு மகிழ்வோம். மாலை நேரம் மீண்டும்  சோக டியூன் இழையோடும். அதை மறக்க அம்மா ஏதாவது நொறுக்குத்தீனி கொடுப்பார்.

தொலைக்காட்சி வந்தவுடன் காட்சிகள் மாறின. காலையில் 7-7.30 அரை மணிநேரம் பழைய ஹிந்திப் பாடல்காட்சிகள். அதுவும் தெரிந்த பாடல்கள் என்றால் ஒரே குஷி தான். அம்மா மட்டும் எழுந்திருந்து காய்கறிகள் வாங்க கடைக்குச் சென்று வந்து சமையல் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். நாங்கள் சோம்பலுடன் எழுந்து காஃபி குடித்துவிட்டு மீண்டும் தூக்கம். அதற்குள் மஹாபாரதம் ஆரம்பித்து விடும். எல்லோரும் படுத்துக்கொண்டே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்போம். கறிக்குழம்பு வாசம் பசியைக் கிளப்ப, சாப்பிட்டு முடிப்பதற்குள் மதிய நேர ஆங்கிலச் செய்திகள். அதைத் தொடர்ந்து அவார்ட் வாங்கின இந்திய மொழியில் ஒரு படம். இந்த அவார்ட் படங்கள் மெதுவாக ஆமை போல் நகரும். ஒரு சில படங்களைத்தவிர மற்றதெல்லாம் எதற்கு அவார்டு கொடுத்திருப்பார்கள் என்று யோசிக்க வைக்கும் ரகம் தான். ஆனாலும் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக பார்த்துக் கொண்டே மதிய தூக்கம். மாலை காஃபி வேளையில் "நாளைக்கு ஸ்கூலுக்குப் போறதுக்கு ரெடியா?" என்று அம்மா கேட்கும் பொழுது பின்னணியில் மீண்டும் அதே சோக கீதம் இசைக்கும்.

கல்லூரியில் படிக்கும் பொழுது கேட்கவே வேண்டாம். சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாக இருந்தாலும் திங்கள் காலையில்  பஸ்சைப் பிடிக்க அவ்ளோ தூரம் போகணுமே என்ற சோகம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.  வீட்டிலிருந்து குறைந்தது 30 நிமிட நடை. பேருந்தைத் தவற விட்டால் மேலும் ஒரு அரைமணிநேர நடை கல்லூரிக்குச் செல்ல. அடுத்த நாள் லேபுக்குத் தயாராகணும். இல்லையென்றால் எல்லார் முன்னாடியும் கேள்விகள் கேட்டு அசிங்கமாக நிற்க வேண்டுமே என்று துக்கம் தொண்டையை அடைக்க புத்தகத்தைத் திறந்து நாலு வரி படிக்க ஆரம்பிக்கும் பொழுது வயலின்கள் இசைக்கும் சோக கீதம்....

வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பின்னும் மாலை வரை இருக்கும் குதூகலம் இரவில் மெல்ல மெல்ல விடைபெற்று அதே ஞாயிறு சோகங்கள் தொடர்ந்தது. இங்கு கூடுதலாக ஒரு வாரத்திற்கான திட்டங்களை முன்கூட்டியே செய்தாக வேண்டும். சமையல், குழந்தைகள், கணவர் என்று அவர்களுடைய தினப்படி வேலைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.  அதுவும் இந்த கொரோனாவிற்குப் பிறகு நிலைமை ரொம்பவே மாறிவிட்டிருக்கிறது.

என்னவோ போடா மாதவா!



 

Wednesday, August 17, 2022

வேலிகள்

 ராபர்ட் ஃபிராஸ்ட் நினைவு இல்லத்திற்குச் சென்று வந்த பிறகு அவரது  கவிதைகளை அறிந்து கொள்ளும் எளிய முயற்சி. 

இன்று வாசித்தது. அருகருகே இருக்கும் வீடுகளுக்கிடையே வேலிகள் ஏன் என்பதை இரு கதாபாத்திரங்கள் வாயிலாக எளிமையாக சொல்லி யோசிக்க வைக்கிறது இந்தக் கவிதை. 

இரு வீடுகளுக்கிடையே வெறும் கற்களால் அமைக்கப்பட்ட மதிற்சுவர். ஒவ்வொரு பனிக்காலத்திற்குப் பிறகு மழை, வெயிலால்  கற்களுக்கிடையே சிறிது இட மாற்றம். பாதசாரிகளால் உருவான பெரிய இடைவெளிகள். இதனைச் சரிசெய்ய வீட்டு உரிமையாளர்கள் இருவரும் வசந்தகாலத்தில் அவரவர் எல்லைக்குள் நின்று சந்தித்து உரையாடுகிறார்கள்.  ஆப்பிள் மரங்கள் ஒரு வீட்டிலும் பைன் மரங்கள் பக்கத்து வீட்டிலும் இருக்கையில் வேறு எதுவும் இரு வீடுகளுக்கிடையே கடந்து செல்ல வாய்ப்பில்லாத பொழுது அவசியமா இந்த வேலி, பிரிவினை எல்லாம் என்று வேலிகளின் மீது நம்பிக்கையற்றவர் கேட்பதற்கு கிடைக்கும் பதில் தான் சுவாரசியமானது.

"அருகருகே இருக்கும் வீடுகளின் சுமூக உறவுகளுக்கு வேலி நல்லது." என்று பதிலளிக்கிறார் வேலி அவசியம் என நினைக்கும் பைன் மரங்களுக்குச் சொந்தக்காரர்.

எந்த மதில் பிரிக்கிறதோ அதைச் சரிசெய்யும் பொழுது தான், அந்தச் சந்திப்பில் தான் பேசிக்கொள்ளும் வாய்ப்பு. இந்தப் பிரிவினையில் ஆர்வம் இல்லாவிட்டாலும் அடுத்தவருக்காக ஒவ்வொரு வருடமும் அதனைச் சரிசெய்ய இணைவது அல்லது ஒப்புக்கொள்வது தான் சுமுகமான உறவுக்கு வித்திடுகிறதோ?

இது மனித உறவுகளுக்கும் பொருந்தும் தானே?

குடும்பம், இனம், மொழி, நாடு, மதம், அரசியல் என்று எத்தனை எத்தனை வேலிகள் அமைத்து உறவாடுகிறோம். வீடுகளுக்கிடையே நாடுகளுக்கிடையே பாதுகாப்பிற்கு என்று பலதரப்பட்ட வேலிகள்!  மனதளவில் நமக்கு நாமே மதில்கள் அமைத்து ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே அனுமதித்து உறவுகளிடமிருந்து விலகி நிற்கிறோம். அப்படி இருந்தால் உறவுகளும் பலப்படுகிறது என்று நம்புகிறோம்.  இன்றைய சூழலில் தமக்குப் பிடிக்காவிட்டாலும் தேவையற்றதாக இருந்தாலும் அடுத்தவருக்குப் பிடித்திருக்கிறது, தேவையாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சுமுகமான உறவு நீடிக்கும் என்பதைத்தான் இந்தக் கவிதை முன்மொழிகிறதோ?

அமெரிக்காவில் பல இடங்களில் பெரிய பெரிய வேலிகளை வைத்திருப்பார்கள். பெரும்பாலும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த விவசாய நிலங்களில் இதனை அதிகம் காணலாம். பெரிய வீடுகள் சுற்றிலும் மதில் எழுப்பி இருக்கும். தன் வீட்டின் சுற்றுப்புறம்  வழியாக  பாதசாரிகள் கடந்து செல்வதை (சட்டப்படி இது குற்றம்)விரும்பாதோர் செய்வது. அந்நியப்படுத்தலைத் தான் வேலிகள் என்று கூறுகிறாரோ கவிஞர்😟

எது எப்படியோ எக்காலத்திற்கும் பொருந்தும் இந்த கவிதை!

Mending Wall

Something there is that doesn't love a wall,
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun;
And makes gaps even two can pass abreast.
The work of hunters is another thing:
I have come after them and made repair
Where they have left not one stone on a stone,
But they would have the rabbit out of hiding,
To please the yelping dogs. The gaps I mean,
No one has seen them made or heard them made,
But at spring mending-time we find them there.
I let my neighbor know beyond the hill;
And on a day we meet to walk the line
And set the wall between us once again.
We keep the wall between us as we go.
To each the boulders that have fallen to each.
And some are loaves and some so nearly balls
We have to use a spell to make them balance:
‘Stay where you are until our backs are turned!’
We wear our fingers rough with handling them.
Oh, just another kind of out-door game,
One on a side. It comes to little more:
There where it is we do not need the wall:
He is all pine and I am apple orchard.
My apple trees will never get across
And eat the cones under his pines, I tell him.
He only says, ‘Good fences make good neighbors.’
Spring is the mischief in me, and I wonder
If I could put a notion in his head:
‘Why do they make good neighbors? Isn't it
Where there are cows? But here there are no cows.
Before I built a wall I'd ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offense.
Something there is that doesn't love a wall,
That wants it down.’ I could say ‘Elves’ to him,
But it's not elves exactly, and I'd rather
He said it for himself. I see him there
Bringing a stone grasped firmly by the top
In each hand, like an old-stone savage armed.
He moves in darkness as it seems to me,
Not of woods only and the shade of trees.
He will not go behind his father's saying,
And he likes having thought of it so well
He says again, ‘Good fences make good neighbors.’

Sunday, August 14, 2022

வந்தே மாதரம்

நாங்கள் முதன் முதலில் புலம்பெயர்ந்த நாடு கனடா. அங்கு நான் கண்டு வியந்த பல விஷயங்களில் ஒன்று, கனடியன் வீடுகளில் அந்நாட்டின் கொடி பறந்து கொண்டிருந்த அழகு தான்! இந்தியாவில் அதுவரை நான் பார்த்திராத ஒன்று. நம் தேசியக்கொடியை பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் மட்டுமே காண முடியும்.  ஆனால், இங்கோ வீடுகளில், கடைகளில், பூங்காக்களில், அரசு அலுவலகங்களில் என்று காணும் இடங்களில் எல்லாம் பறந்து கொண்டிருக்கும். அதுவும் பெரிய பெரிய அளவுகளில் உயரத்தில் பறப்பதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கும். 

அமெரிக்காவில் ஜூலை 4 சுதந்திர தினத்தன்று பலரும் வீடுகளில் கொடியைப் பறக்க விடுவர். வேற்று நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் இரு நாட்டு கொடிகளையும் பறக்க விடுவதும் இங்கு வாடிக்கை. 

அமெரிக்காவிலும் கறுப்பர்கள், வெள்ளையர்கள், யூதர்கள், செவ்விந்தியர்கள், புலம்பெயர்ந்தவர்கள் என்று பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.  தினம் பல துப்பாக்கி வன்முறைச் செயல்களும், போதை மருந்துப்  பிரச்னைகளும், வேலையில்லாத திண்டாட்டமும், ஏழ்மையும், மாநிலங்கள் வாரியாக பல்வேறு பிரச்னைகள் பூதாகரமாக இருந்தாலும் அவர்கள் தேசியக்கொடிக்குத் தரும் மரியாதையில் குறைவில்லை. யாரும் எனக்கு வேலை இல்லை, உணவு இல்லை என்று கொடியை அவமதிப்பது இல்லை. அவரவர் விருப்பத்துடன் வீட்டில் பெருமையுடன் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு வித பெருமிதம் அவர்களுக்கு! பள்ளியிலிருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். தேசியக்கொடி பறக்கும் இடத்தை நோக்கி நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு தேசிய கீதம் இசைப்பதும் இறந்த போர் வீரர்களின் நினைவாக நகரில் கொடிகளை வைத்து மரியாதை செய்வதும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. தேசியக்கொடி நாட்டின் அடையாளம். நாட்டு மக்களுக்குப் பெருமை தரும் விஷயம். 

ஒலிம்பிக்ஸ் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்கள் மேடையில் நிற்க, அவர்கள் நாட்டு கொடி ஏற்றப்படுவதும் அவர்களின் தேசியகீதம் இசைக்கப்படுவதும் அந்த விளையாட்டு வீரர்களுக்கும் நாட்டுக்கும் எத்தனை பெருமை!

நமது பாரத தேசம் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப் பெற்று 75 வருடங்களாகப் போவதை நாடே கோலாகலமாக கொண்டாட ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரம் மூலம் மூவர்ண கொடியை  வீட்டிற்குள் ஏற்ற மக்களை ஊக்குவிக்கிறது அரசு. மக்களின் இதயங்களில் தேசபக்தி உணர்வைத் தூண்டுவதும் இந்திய தேசியக் கொடி பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  பலரும் உத்வேகத்துடன் வீடுகளில் முதன்முறையாக கொடியேற்றி மகிழ்வுறுவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது.

இதிலும் அரசியல் ஆதாயம் தேட முயல்பவர்களை நினைத்தால் தான் அதிசயமாக இருக்கிறது! தேசியம் என்றாலே வெறுப்பை உமிழும் இந்த தீவிரவாதப் போக்கு அபாயகரமானது. 

நம் செல்வங்களையும் வளங்களையும் சூறையாடிச் சென்றவர்கள், நம் மீது திணித்த இன, மதவாத பிடியில் சிக்கிச் சீரழியவேண்டும் என்று நமக்கும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இடையில் தீராப்பகையை உருவாக்கிவிட்டுச் சென்றது இன்று வரை தொடருவது தெரிந்த வரலாறு. வெளியில் இருக்கும் எதிரிகளை விட உள்நாட்டில் இருந்து கொண்டே இந்தியாவை வீழ்த்த நினைக்கும் எதிரிகள் தான் பேராபத்தானவர்கள். அவர்களுடன் தான் நாம் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த எட்டப்பன்கள் இருக்கும் வரை நாடு முன்னேற பல்வேறு தடைகளை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். தேசியக்கொடி ஏற்றினால் தேசப்பற்று வந்துவிடுமா, வேலை கிடைத்து விடுமா என்று அறிவாளித்தனமாக பேசித்திரிபவர்கள் இன்றைய சொகுசு வாழ்க்கையில் சிறைசென்றவர்களின், சித்திரவதை அனுபவித்தவர்களின், இன்று வரையில் நாட்டுக்காக உயிர் துறக்கும் ராணுவத்தினரின் வலியை மறந்து அவர்களுக்கான மரியாதை என்று கூட நினைக்க மறந்தது வேதனை தான். தேசியத்தை வளர்க்காமல் தேசியஉணர்வைத் தூண்டாமல் துண்டாட நினைப்பதைத் தான் இந்த அரசியல்  பேசும்  நடுநிலைவாதிகள் செய்து கொண்டிருப்பது. பாகிஸ்தான், சீனா  கொடியை கூட இவர்கள் ஏற்றி வைத்து மரியாதை செலுத்த தயங்க மாட்டார்கள் என்பது தான் உண்மை. 

இந்தியா எனது தேசம் என்று நினைக்கும் எவரும் தங்கள் இல்லங்களில் நமது தேசியக் கொடியை ஏற்றுவதில் பெருமை கொள்வார்கள். இனி வரும் தலைமுறைக்காவது தேசியக்கொடியின் மீதான மரியாதையையும் மதிப்பையும்  கற்றுக் கொடுப்போம். 

ஜெய்ஹிந்த்!

 



Tuesday, August 9, 2022

சௌராஷ்டிரர்களின் பூர்வ சரித்திரம்


திரு.ஜெயமோகனின் தளத்தில் எதையோ தேடப் போய் எதுவோ ஒன்று கிடைத்தது. ஆம். திண்டுக்கல்லில் இருந்து சௌராஷ்ட்ர வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பின்வருமாறு பதில் அளித்துள்ளார்.  

//

"நானறிந்தவரை சௌராஷ்டிரர்களின் தமிழகக் குடியேற்றம், அவர்களின் வாழ்க்கைச்சூழல் சார்ந்து சௌராஷ்டிரர் முழு வரலாறு என்னும் நூல் உள்ளது. ஆசிரியர் கே. ஆர்., சேதுராமன், மதுரை. முக்கியமான புனைவு என ஏதுமில்லை. எம்.வி.வெங்கட்ராமின் வேள்விதீ நாவலில் உள்ளது மேலோட்டமான ஒரு சித்திரம் மட்டும்தான்.

சௌராஷ்டிரர்களின் பூர்வ வரலாறு என ஒரு சிறு நூலை லண்டன் சுவாமிநாதன் என்னும் ஆய்வாளர் லண்டன் அருங்கட்சியக நூலத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளார்."

//

"சௌராஷ்டிரர்களின் பூர்வ சரித்திரம்" எனும் நூலைப் பற்றி குறிப்பிட்டும் சுட்டியும் கொடுத்திருக்கிறார்.

 இரண்டணாவிற்கு 1911ல் விற்கப்பட்டிருக்கிற இந்நூலில் எம்முன்னோர்கள் பற்றின தகவல்களைப் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.  


"சௌராஷ்ட்ரர்கள் என்கிற பதத்துக்கு செழிப்பான ராஜ்ஜியத்தில் வசிப்பவர்கள் என்று அர்த்தம். அவர்கள் இந்து மதத்தவர்கள். ஆதியில் மத்துவர்கள். தென்னிந்தியாவில் குடியேறிய பிறகு சிலர் சங்கராச்சாரியார், ராமானுஜாச்சாரியார் இவர்களுடைய பிரசாங்கங்களைக் கேட்டு ஸ்மார்த்தர்களாயும் வைஷ்ணவர்களாயும் மாறி விட்டார்கள்😮😯😲

https://www.jeyamohan.in/168238/

சௌராஷ்டிரர்-வரலாறு



தேசிய கைத்தறி தினம்

முன்பொரு காலத்தில் நெசவுத்தொழில் தான் சௌராஷ்ட்ரா மக்களின் அடையாளமாக இருந்தது. “பட்டுநூல்காரர்கள்” என அரசு சாதீய அங்கீகாரம் செய்தது. எம்மக்கள் வாழ்ந்த தெருக்களில் தறி சத்தம் ஏதாவது ஒரு வீட்டிலிருந்து கேட்டுக் கொண்டே இருக்கும். அந்தக்குடும்பமே தறி வேலை செய்ய வேண்டியிருக்கும். காலை முதல் மாலை வரை உடலுழைப்பைக் கோரும் இந்த வேலைக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. சங்கங்கள் அமைத்து இன்றும் ஒரு சிலர் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருந்தாலும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை இம்மக்களுக்கு. இன்று மதுரை புறநகர்ப்பகுதிகளுக்கு குடிபெயர்ந்து சென்று விட்டார்கள். அங்கு ஒலித்துக் கொண்டிருக்கும் தறியின் ஓசை சொல்லாமல் சொல்லும் அவர்களுடைய வேதனைகளையும் வலிகளையும்.

அடுத்த சந்ததியினர் பலரும் கல்வி கற்று வேலை தேடி வெளியிடங்களுக்குச் சென்று விட, குலத்தொழில் இயந்திரமாக்கப்படலில் தன்னை இழந்து கொண்டிருக்கிறது. அனைவரும் கைத்தறி ஆடைகளை வாங்கி ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும்.

//மீள்

ஒரு காலத்தில் நெசவு நெய்வது சௌராஷ்டிரா மக்களில் பெரும்பாலானோரின் குடும்பத்தொழிலாக இருந்தது. நாங்கள் குடியிருந்த தெருவில் காலை முதல் மாலை வரை இந்த தறிகளின் 'டக் டிக் டக் டிக்' சத்தம் கேட்காத வீடுகள் மிகவும் குறைவே. ஒவ்வொரு டக் டிக்கும் ஒரு தாள நயத்துடன் பட்டு நூலை குறுக்காக எடுத்துச் செல்லும் களியுடன் ஆடும் ஆட்டத்தில் பிறப்பதே அழகான சேலை. தறி நெய்பவரின் கைகள் இழுக்கும் கயிறு டக் என்றால் கால் கீழிருக்கும் கட்டையை அழுத்த, களி வலமிருந்து இடமாகவோ, இடமிருந்து வலமாகவோ ஒரு இழையை நெய்யும் அழகே அழகு.

வேடிக்கையாக இருக்கிறதே என்று நானும் பல முறை பக்கத்து வீடுகளில் தறி மேல் ஏறி கலாட்டா செய்திருக்கிறேன். ஆனால் அந்த வேகம், கை கால்களின் கோ-ஆர்டினேஷன் இல்லாததால் என்னால் ஒரு முறை கூட சரியாக செய்ய முடிந்ததில்லை.

பார்ப்பதற்கு எளிதாக இருக்கும் இந்த வேலை எவ்வளவு கடினம் என்பது செய்பவர்களுக்குத் தெரியும். ஒரு சேலை நெய்வது என்பது பல சிறுசிறு வேலைகளை கொண்ட பெரிய வேலையாகும். பட்டு நூலை வாங்கி அதை சிக்கில்லாமல் பிரித்து, பல வண்ண பட்டு நூல்களை டிசைன்களுக்கு ஏற்றவாறு சேர்த்து, தெருவில் பாவு பிரிப்பது என்று செய்து பிறகு தறியில் ஏற்றுவார்கள். அது ஒரு சேலையாக வெளிவரும் பொழுது அவர்கள் முகத்தில் பிறந்த குழந்தையை கையில் ஏந்தும் மகிழ்ச்சி ததும்பும். விசேஷ தினங்கள் நெருங்குகையில் ஓயாத தறி சத்தம் சொல்லாமல் சொல்லும் ஆர்டர்கள் முடிக்க வேண்டிய நேரமென்று!

தறி இருக்கும் வீடுகளில் குனிந்தே வீடுகளில் வளைய வருவார்கள். இன்றும் சில வீடுகளில் செய்து வரும் அதிக உடல் உழைப்பும், குறைந்த வருமானமும் கொண்ட இத்தொழில் இயந்திரமாக்கலுக்குப் பிறகு நலிந்தே விட்டது. அவர்களின் குழந்தைகளும் படித்து நல்ல வேலைக்குச் செல்ல ஆரம்பிக்க, தறிகள் இருந்த இடம் மட்டுமே பலரின் வீடுகளில் நினைவுகளாக!

#NationalHandloomDay
#தேசியகைத்தறிதினம்

Monday, August 8, 2022

யாரிந்த ராபர்ட் ஃபிராஸ்ட் ?

"Robert Frost வாழ்ந்த வீடு இவ்வளவு பக்கத்துல இருக்கு. இத்தனை நாள் தெரியாம போச்சே! போகலாமா?" ஈஷ்வர் கேட்க,

"யாரிந்த ராபர்ட் ஃபிராஸ்ட் ? பெயர் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே" என நானும் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தேன்.

"இரு நான் அவரோட கவிதைகளை வாசிக்கிறேன். உனக்கு நல்லாவே தெரியும்"னுட்டு
I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.

"அட! நான் அடிக்கடி அந்த கடைசி இரண்டு வரிகளைப் போட்டு பல படங்களை ஃபேஸ்புக்ல போட்டிருக்கேனே! அதான் இந்த பேரு தெரிஞ்ச பேராட்டம் இருந்துருக்கு. நல்ல வேளை! அந்த மனுஷன் எழுதுனதுல ரெண்டு வரியாவது எனக்குத் தெரிஞ்சிருக்கு. நான் என்ன ஆங்கில இலக்கியம் படிச்சேனா இல்லைன்னா கவிஞர்களைத் தெரிஞ்சுக்கிட்டேனா?" ஜாலியா நான் உண்டு என் கணினி உண்டுன்னு இருந்தவள ஆங்கில இலக்கியவாதியோட முடிச்சு போட்டாரு பாருங்க தட் கடவுள் இருக்காருடா கொமாரு மொமெண்ட் 😎 ஹ்ம்ம்ம்!

"இரு. இன்னொரு பிரபலமான கவிதையை வாசிக்கிறேன்"னு ஈஷ்வர் வாசிக்க, நான் வண்டியை ஒட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தேன்.

Whose woods these are I think I know.
His house is in the village though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound’s the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

"எப்படி இருக்கு?"

"ம்ம்ம். நல்லா இருக்கு. இந்த ஊரின் பின்புலத்தில் எழுதப்பட்ட இந்த மாதிரி கவிதைகளை நம்மூர் மாணவர்கள் எந்த அளவிற்குப் புரிந்து கொள்வார்கள்?"

"அதெல்லாம் கவிதைகளைத் தேடிப் படிக்க ஆரம்பிச்சாலே எழுதினவங்களோட வாழ்க்கை முறை, வீடு, உலகம்னு தெரிஞ்சிக்க ஆசையா இருக்கும். சில படங்கள் மூலமா கற்பனையில் இதெல்லாம் புரியும் சாத்தியம் இருக்கும்னு" ஈஷ்வர் சொல்லிக் கொண்டே வர,

"என்னுடைய பள்ளியில் இந்த கவிதையை ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்து விட்டு ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் சொல்லி கவிதையின் சுவையை இழக்க செய்திருப்பார் அந்த ஆங்கில ஆசிரியர்." என்றேன்.

"ஆமாம். கவிதைகள் என்பது பொருள் சொல்லிப் புரிய வைப்பதோ எழுத்துக்களின் தொகுப்போ அல்ல. ஒரு நல்ல கவிதை வாசிப்பவர்கள் மனதில் ஒன்றி கற்பனையை வளர்க்கும். அதோடு வாழ்வியலும் கூடவே வரும்." என்று பேராசிரியராகி பேச ஆரம்பித்து விட்டார் ஈஷ்வர்.

ஆல்பனியே குக்கிராமம் என்று சொல்பவர்கள் உண்டு. அதனைத் தாண்டினால் பழங்காலத்து வீடுகள், உயர்ந்த மரங்கள், பரந்து விரிந்த பச்சைப்பசேல் நிலங்கள் என அழகிய பல குக்குக்கிராமங்கள் மனத்தைக் கொள்ளைக் கொள்ளும். இரு வழிப்போக்குவரத்து தான் வழிநெடுக. மலைகளும், நீரோடைகளும், ஆறு, ஏரி, குளங்கள் என கண்களுக்கு விருந்தாக இருந்தது பயணம் முழுவதும். பக்கத்து மாநிலமான வெர்மாண்ட்டில் பென்னிங்டன் நகருக்கு அருகில் உள்ள ஷாப்ட்ஸ்பர்ரி எனும் ஊரில் திரும்பு திரும்பு என்று ஜிபிஎஸ்ஸில் அவள் வேறு ஆணையிட...

"என்ன இது? ஒன்னும் பெரிய இடமா தெரியலையே?"

"அங்க போய் நிப்பாட்டு" என்ற இடத்தில் எந்த வண்டியும் இல்லை.

"இன்னைக்குத் திறந்திருக்காங்களா? கேட்டீங்களா?"

சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தால்...

அமைதி தவழும் இடத்தில் ஒரு வீடு. சுற்றிலும் தோட்டம். வண்டியை நிறுத்தி விட்டு வீட்டுக்குச் செல்லும் பாதையில் ஆற அமர உட்கார்ந்து இளைப்பாற பெரிய மரத்தின் கீழ் நாற்காலிகள். இங்கு தான் ராபர்ட் ஃபிராஸ்ட்-ம் உட்கார்ந்து எழுதியிருப்பாரோ?

நல்ல வெயில். இதமாக தென்றல். உள்ளே சென்றால் இளம்பெண் ஒருவர் வரவேற்பறையில் இருந்தார். அந்த வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆளுக்கு பத்து டாலர் கொடுத்து டிக்கெட்டை வாங்கி விட்டு அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அந்தப் பெண் விரிவாக கவிஞரைப் பற்றின தகவல்களைக் கூறி எங்கிருந்து வருகிறோம் என்ற விவரங்களைக் கேட்டுக் கொண்டார். மஹிந்திரா கல்வி அறக்கட்டளை வாயிலாக இந்தியாவில் புனேயில் தங்கி ஒரு வருடம் படித்ததை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். அப்படி ஒன்று இருக்கிறதே இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன்!ம்ம்ம்ம்!

அந்த அறை முழுவதும் கவிஞர் எழுதிய புத்தகங்கள், அவரைப்பற்றின புகைப்படங்கள், வாழ்த்து அட்டைகள் என்று பலவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவர் வாழ்ந்த வீட்டையே கண்காட்சியாக்கி இருக்கிறார்கள்.

அவருடைய கவிதைகள் இங்கிலாந்தில் முதலில் பிரசுரமாகி பின்பு தான் அமெரிக்காவில் பிரபலமாகி இருக்கிறது. கலிஃபோர்னியாவில் பிறந்து நியூஇங்கிலாந்து மாநிலங்களில் வாழ்ந்து அதன் கிராமப்புற அழகின்பால் ஈர்க்கப்பட்டு வெர்மாண்ட் மாநிலத்தில் குடியேறியிருக்கிறார். வட அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களில் நான்கு பருவங்களும் வெவ்வேறு அழகுடன் வலம்வருவதையும் கிராமப்புற அழகையும் வாழ்க்கையையும் அவருடைய கவிதைகள் பலவும் எளிய முறையில் கூறுகிறது. பல உயரிய விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளதை அங்கே உரிய தகவல்களுடன் வைத்திருந்தார்கள். கவிதைகள் எழுதுவதுடன் விவசாயமும் செய்து அதில் திருப்தியற்று அருகிலிருந்த கல்லூரியில் பணியாற்றியதாக அவருடைய சுயசரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வரவேற்பறைப் பெண் விவரித்தார்.

அவர் பணிபுரிந்த பென்னிங்டன் கல்லூரி இந்த வீட்டை பராமரித்துக் கொண்டிருக்கிறது. ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் ஆப்பிள் மரங்களுடன் பச்சைப்பசேல் சூழலில் அமைந்துள்ள  250 ஆண்டுகளுக்கும் மேலான இந்த வீட்டின் முன் அறையில் தான் "Stopping by Woods on a Snowy Evening" என்ற புகழ்பெற்ற கவிதையை எழுதி உயரிய விருதினையும் பெற்று பிரபலமாகியுள்ளார். அவரைப் பொறுத்தவரை கவிதை என்பது அதிக சிந்தனையுடன் எழுதப்பட்டதோ அல்லது அறிவு சார்ந்ததாக இல்லாமல் எளிமையாக தெளிவாக இருந்தாலே போதுமானது என்று குறிப்பிட்டிருக்கிறார். இன்றைய தமிழ்க்கவிஞர்கள் பலரும் தங்கள் அறிவைப் புலப்படுத்த குறியீடுகள், தொன்மங்கள், படிமங்கள்  அது இது என்று நம்மைப் பைத்தியங்கள் ஆக்கிக் கொண்டிருப்பது தான் நினைவிற்கு வந்தது. அப்படி எழுதுவது தான் கவிதை. தங்களுடைய கவிதையைப் படித்துப் பொருளுணர அறிவு வேண்டும் என்று நினைக்கும் அதிமேதாவிகள் தான் இன்றைய தமிழக கவிக்கள். அவர்கள் எல்லோரும் ராபர்ட் ஃபிராஸ்ட் கவிதைகளைப் படித்தால் நலம் என்று நினைக்கத் தோன்றியது.

அறைகளில் அந்த வீட்டின் அழகுப் படங்கள் பலவும் கருப்பு வெள்ளையில் வெவ்வேறு பருவங்களில் எடுக்கப்பட்டிருந்ததையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். வரைந்து பார்க்கணும் என்று மனதில் ஒரு ஆசை. அவருடைய கவிதைகள், மனைவி, குழந்தைகள், அமெரிக்கா அதிபர் கென்னடியுடன் எடுத்த படங்களும் அவருடைய வாழ்க்கையை விவரிக்கும் வகையில் இருந்தது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அழகான பல படைப்புகளை வழங்கியிருக்கிறார். அமெரிக்க அரசாங்கம் அவர் உருவம் பதித்த முத்திரையை வெளியிட்டு கெளரவித்திருக்கிறது. இரண்டு அறைகள் மட்டுமே பார்வையாளர்கள் பார்க்க முடியும். மாடிக்குச் செல்ல அனுமதியில்லை. ஜன்னல்கள், கதவுகள், சாளரமும் பழமைமாறாமல் அழகைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது சிறப்பு.

வெளியே பசுமை நடை வழித்தடத்தில் அவருடைய கவிதை வரிகளை எழுதி வைத்திருந்தார்கள். மரங்களும் செடிகளும்,  தேனீ, வண்டுக்களின் ரீங்காரமும் பறவைகளின் குரல்களும் அச்சூழலை ரம்மியமாக்கின. ஒரு நல்ல கவிஞரை அறிந்து கொண்ட திருப்தியில் மரநிழலில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்துக் கொண்டேன். 
கொண்டு வந்திருந்த குளிர்ந்த நீராகாரத்தைக் குடித்து விட்டு அருகிலிருக்கும் அம்மாநிலத்தின் போர் நினைவுச்சின்னத்தையும் பார்த்து விட்டு வீடு போய்ச் சேரலாம் என்று நடையைக் கட்டினோம்😇😇😇

வீடியோ சுட்டி 👇


Wednesday, August 3, 2022

கதை கேளு கதை கேளு

ஜெயா தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே தொகுத்து வழங்கும் "கதை கேளு கதை கேளு" நிகழ்ச்சியில் இரு வாரங்களாக இளையராஜாவின் கதை அருமையாக சென்று கொண்டிருக்கிறது. இசை இயக்குனர் தேவிஸ்ரீபிரசாத்தும் பாடகர் கார்த்திக்கும் இரு வாரங்கள் இளையராஜாவின் கதையை அவருடைய இசைப்பயணத்தைப் பாடல்கள் மூலமாக கேட்டு நமக்குச் சொல்வது போல் நன்றாக அமைந்திருக்கிறது இந்நிகழ்ச்சி.

தேவிஸ்ரீ பிரசாத் இசைஞானியின் தீவிரமான ரசிகர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தன் ஆஸ்தான கலைஞன் மீது அபரிதமான பாசம் கொண்டுள்ளதை மனிதர் அநியாயத்துக்குச் சிறு குழந்தை போல் இயல்பாக அவருடைய பேச்சிலும் உடல்மொழியிலும் வெளிப்படுத்திய பாங்கு அருமை. இளையராஜா எனும் ஆளுமை ஸ்ரீதேவிபிரசாத்தை முழுமையாக ஆட்கொண்டிருந்ததை அணுஅணுவாக அனுபவித்துச் சொன்னதை பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தும் போதெல்லாம் அந்தப் பாடல்களும் நமக்குப் பிடித்ததற்கு இது தான் காரணமோ என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

சென்ற வாரம் பாடகர் கார்த்திக் இளையராஜாவிடம், "எப்படி ராஜா சார் இப்படியெல்லாம் உங்களால யோசிக்க முடியுது?" என்று வியந்து இசை கற்றவர்கள், தெரிந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் தொனியில் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். நானோ "பாடறியேன், படிப்பறியேன் பள்ளிக்கூடம் தானறியேன்" கோஷ்டி. என்ன தான் ஈஷ்வர் மொழிபெயர்த்தாலும் இசையென்று வந்து விட்டால் அதன் நுணுக்கங்கள் எல்லாம் "கிலோ என்ன விலை?" என்ற ரேஞ்சில் தான் அறிவு. நல்ல வேளை! பாண்டே என்னைப் போன்ற நேயர்களுக்கும் புரியும் வகையில் கேள்விகளை மாற்றிக் கேட்டுத் தெளிவுபடுத்தினார். சபாஷ் பாண்டே!

பொதுவாகவே இளையராஜாவின் பல பேட்டிகளில் அவர் பேசியது சிலருக்குப் பிடிக்காமல் போனதாக படித்திருக்கிறேன். அடுத்தவரைக் காயப்படுத்திப் பேசியதாக ஆர்எஸ்பி மீடியாக்களால் சித்தரிக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் இந்த காலத்தில் எடுத்ததெற்க்கெல்லாம் அரசியல் செய்யும் மனப்பாங்கு ஓங்கி இருக்கும் நேரத்தில் இந்நிகழ்ச்சியில் யாருக்கு அவல் தரப்போகிறாரோ என்ற ஆவலும் பலருக்கு இருந்திருக்கும்.  நல்ல வேளை! அப்படி ஏதும் நடக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரையில் இவருடைய இசையில் அமைந்த பாடல்களைத் தான் கண்விழித்த நேரத்திலிருந்து உறங்கும் வரை கேட்டுக் கொண்டிருக்கிறேன்😍

வெள்ளை உடையில் கனிந்து நிற்கிறார் பல மனங்களைத் தன் இசையால் வசப்படுத்திய ஞானி! நடுநடுவே பொது மக்கள் சிலரின் கேள்விகளுக்கும்  இசையுடனான அவருடைய பயணம், அனுபவம், அறிவு, கற்றுக்கொண்ட வித்தைகள் என சிறப்பு விருந்தினர்கள் கேட்ட கேள்விகளுக்கும் எளிமையாக பாமரர்களுக்கும் புரியும் விதத்தில் சிரித்துக் கொண்டே பதில் அளித்த விதம் அருமை.

"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" ல் துவங்கிய பயணம்.. தொடரட்டும்💖

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா!





ஆடிப்பெருக்கு

காலையில் ஆறு மணிக்கெல்லாம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று விட்டால் ஆடிப்பெருக்கு தினக்கூட்டத்தை சமாளித்து விடலாமென அங்கு போனால் உறங்கா நகர மக்கள் நீண்ட வரிசையில் அம்மன் தரிசனத்திற்காக காத்திருந்தார்கள். பெண்கள் சிலர் புதுப்புடவை சரசரக்க , நகை மினுமினுக்க, சில மஞ்சள் பூசிய இயற்கை முகங்கள், மேக்கப் போட்ட பல செயற்கை முகங்கள், எண்ணெய் திரி விளக்கு, மதுரை தாழம்பூ குங்குமம், பூக்களின் மணத்துடன் கோவில் மண்டபமே ரம்மியமாக இருந்தது. மெல்ல நகர்ந்த வரிசை, தீபாராதனை, அழகு அம்மன் தரிசனம் குங்குமம் வாங்கிக் கொண்டு சுவாமி தரிசனம் முடித்து குளத்து படிக்கட்டில் சிறிது நேரம் ஆசுவாசம். கோவிலின் நுழைவாயிலில் புது மணப்பெண் மணமகன் குடும்பத்தினருடன் வந்து தாலி பிரித்து சேர்க்கும் வைபவம் வெட்கத்துடன் அரங்கேறிக் கொண்டிருந்தது.

வெளியில் ஆட்டோ, கார்கள் என்று மாடர்ன் ரெஸ்டாரண்ட் முன் முண்டியடித்துக் கொண்டு போக்குவரத்து. ஆடிப்பெருக்கு அன்று புது ஹோண்டா காரின் பின்சீட்டில் வைர, தங்க நகைகளுடன் பட்டுச்சேலை உடுத்திய பெண்மணி. இன்ச் இன்ச்சாக நகரும் கூட்டத்தில் வண்டி மீது யாரும் உரசிடாதவாறு ஒட்டிச் செல்லும் டிரைவர். மதுரையில் வண்டி ஓட்டுவதற்கு சாமர்த்தியம் வேண்டும்! புது வண்டி கீறல் படாமல் கடந்து செல்லும் வரை எனக்குத்தான் படபடப்பாக இருந்தது!

அதிகாலை கூட்டத்துடன் ஆடிப்பெருக்கு கூட்டமும் சேர்ந்து அம்மன் வீதிகளில் கலகலப்பாக...

சூடான பஜ்ஜி அங்கே
சுவையான சொஜ்ஜி இங்கே
சந்தோசம் மீறி பொங்க
ஹ … ஹ…..ஹ….ஹ…ஹா

தோசை வடையும் ஜோரு
வெகு பொருத்தமாய் சாம்பாரு
பூரி கிழங்கு பாரு..
ஹ … ஹ…..ஹ….ஹ…ஹா

இனி இஷ்டம் போல வெட்டு ...ன்னு மாடர்ன் ரெஸ்டாரண்ட்டில் கொண்டாடியதெல்லாம்ம்ம்ம்ம்...

அந்த நாள் இனிய நாள் 🙂

ஆறு வறண்டால் என்ன?மனது வறண்டு போகா விட்டால் பெருக்கலாம் ஆயிரம் நற்பண்புகளை!

அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள் 🙂🙂🙂

Tuesday, August 2, 2022

மதிய உணவு

சென்ற வார "நீயாநானா" நிகழ்ச்சியில் மதிய உணவு பற்றின விவாதம் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே நடந்தது. குழந்தைகளின் மதிய உணவு பெரும்பாலும் வறுத்த கிழங்குடன் எலுமிச்சம்பழ சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் என்றிருந்தது. ஒருமித்த குரலில் சிறார்கள் அனைவரும் இதையே தினமும் கொடுத்தால் எப்படித் தின்பது? வகைவகையான உணவு இல்லை. இதுதாண்டா சாக்கு என்று பெற்றோர்களைப் போட்டுப் பார்த்தார்கள். ஒரே ஒரு லஞ்ச்பாக்ஸில் மட்டும் சுருட்டின சப்பாத்திகள் ஏழு எட்டு இருந்தது.

பெற்றோர்களோ அசைவ உணவைப் பள்ளிக்கூடத்திற்கு எப்படி கொடுத்தனுப்ப முடியும்? காலையில் அவர்கள் கிளம்பும் நேரத்துக்கு வகைவகையாக எப்படி செய்து கொடுக்க முடியும்? அவர்களுக்குப் பிடித்ததைச் சமைத்துக் கொடுத்தாலும் சாப்பிடாமல் மிச்சம் வைக்கிறார்கள் என்று அவர்கள் சார்பு புலம்பலை முன்வைத்தார்கள்.

இதில் முக்கியமாக நான் கவனித்தது பல பள்ளிகளில் குறிப்பாக தனியார் பள்ளிகளில் குழந்தைகள் வகுப்பறையிலேயே சாப்பிடுவதாக கூறினார்கள். மணியடித்தவுடன் மைதானத்த்திற்கு ஓடி மரநிழலில் நண்பர்களுடன் சாப்பிட்ட காலங்கள் மலையேறிவிட்டனவோ! குழந்தைகள் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் நினைப்பதில் தவறில்லை. ஆனால் ஆளை வைத்து கண்காணித்து அவர்கள் சாப்பிடும் நேரத்தில் கூட சுதந்திரமில்லாமல் அவர்களை ஆட்டிப்படைப்பது என்னவிதமான செயல் என்று தான் புரியவில்லை. அரசுப் பள்ளிகளில் ஒரு மணி நேரமும் பல தனியார் பள்ளிகளில் அரை மணி நேரம் தான் மதிய உணவுக்கான நேரமாம்! இடைவேளையில் மட்டும் தான் நண்பர்களுடன் குதூகலிப்பது, பேசுவது, சாப்பிடுவது என்று மாணவர்கள் காத்திருக்கும் நேரம். அதையும் இப்படி சுருக்கிவிட்டிருக்கிறார்கள்!

என் ஆரம்பப்பள்ளி நாட்களில் அம்மா மதியம் சுடச்சுட சாப்பாடு கொண்டு வந்து கையில் உருட்டித் தர நாங்கள்(அக்கா, தங்கை) உண்போம். நண்பர்களும் எங்களுடன் சேர்ந்து உணவருந்துவார்கள். பிறகு நாங்களே மதிய உணவை எடுத்துக் கொண்டுச்சென்ற நாட்களில் நண்பர்களுடன் வட்டமாக உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிட்டு முடிப்போம். சிறிது நேரம் ஓடிவிளையாடவும் செய்தோம்.

மேல்நிலைப்பள்ளி நாட்களிலும் இது தொடர்ந்தது. மதிய உணவுக்குப் பின் பள்ளிக்கு வெளியில் விற்கும் நொறுக்குத்தீனியையும் விட்டு வைப்பதில்லை. பெரும்பாலும் இட்லி, சட்னி, தக்காளி சாதம், புளியோதரை, வத்தக்குழம்பு சாதம், வெயில் காலங்களில் தயிர் சாதம், மாம்பழம் என்று எடுத்துச் செல்ல எளிதாக இருக்கும் உணவுகள் தான். ஒழுங்காக சாப்பிட்டு விட்டு வருவோம்.கல்லூரி வரை இதுதான் தொடர்ந்தது. பள்ளி, கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் காய்கறி, கீரைகளுடன் சாப்பாடு என்று போனது.

இன்றைய காலகட்டத்தில் மதியநேரத்தில் பள்ளிக்குச் சென்று அம்மாக்கள் உணவு கொடுப்பது இயலாத காரியம். வீட்டிற்கும் பள்ளிக்கும் தொலைவு அதுவுமில்லாமல் பல அம்மாக்களும் வேலைக்குச் செல்கிறார்கள். பள்ளிகளும் ஊக்குவிப்பதில்லை. "நொறுங்கத் தின்றால் நூறு வயது" என உணவை மென்று சாப்பிடச் சொல்லி விட்டு அரைமணிநேரம் மட்டுமே கொடுத்தால் எப்படி? அங்கிருந்த பெற்றோர்களில் ஒருவர் பள்ளி ஆசிரியர். அவரும் "பாவம் தான் சார். நண்பர்களுடன் பேசி முடிக்க பத்து பதினைந்து நிமிடங்கள். பிறகு சாப்பிட எப்படி நேரம் பத்தும்?" என்றார். இப்படி அரக்கப்பரக்க சாப்பிட வற்புறுத்துவதால் தான் சாப்பிடுவதில்லையோ? எல்லா குழந்தைகளும் அப்படி அல்ல என்றாலும் மெதுவாக சாப்பிடும் குழந்தைகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

இந்தப் பிரச்னை வேறுவிதத்தில் எனக்கு அமெரிக்காவிலும் இருந்தது. ஆரம்பப்பள்ளி நாட்களில் என் குழந்தைகள் இரண்டும் ஒன்றும் சாப்பிட மாட்டார்கள். இந்திய உணவுப் பிரச்னை. சரியென்று சாண்ட்விச் கொடுத்தனுப்பினாலும் போனது அப்படியே வரும். இதை நினைத்து எனக்குதான் மனஅழுத்தம் வந்தது. அவர்களுக்கும் சேர்த்து நான் சாப்பிட்டு எடை கூடியது. பல பெற்றோர்களுக்கும் தீராத பிரச்னை இது. நடுநிலைப்பள்ளி வயதில் கொஞ்சம் சாப்பிட்டார்கள். நானும் அவர்களுக்குப் பிடித்த பழங்கள், காய்கறிகள், சாப்பாடு தான் கொடுத்து அனுப்பினேன். சமயங்களில் பள்ளியில் சாப்பிட பணமும். ம்ஹூம்! என்னை பாடாய் படுத்தினார்களே ஒழிய, முழுவதும் சாப்பிடவே இல்லை. அவர்களாக மேல்நிலைப்பள்ளியில் திருந்தி சாப்பிட துவங்கினார்கள். ஆனால் இப்பொழுது நேரம் இல்லை. இருவரும் மியூசிக் வகுப்புகள் எடுத்திருந்தார்கள். அது மதிய உணவு இடைவேளையில் தான் நடக்கும். மகளுக்கு வயிற்றுப்புண் வந்து அவதியுற, பள்ளியைக் கூப்பிட்டு நான் "சாப்பிட கூட நேரம் கொடுக்காமல் இப்படி நல்லா இருந்தவளை சீக்காளியாக்கி விட்டீர்களே" என்று முறையிட, மருத்துவர் அறிவுறுத்தினால் அவள் வகுப்பில் சாப்பிடலாம் என்று துண்டுசீட்டு வாங்கிக் கொடுத்தேன்.

பெரும்பாலான பெற்றோர்களுக்கு குழந்தைகள் சாப்பாடு விஷயத்தில் என்றும் பிரச்னை தான். காலை உணவை தூக்கக்கலக்கத்தில் அவதிஅவதியாக முழுங்கிக் கொண்டு பள்ளிப்பேருந்தைப் பிடிக்க ஓட வேண்டும். மதியம் இந்த அக்கப்போருகள். முடிவில் நான் என்னை மாற்றிக் கொண்டேன். வீட்டிற்கு வந்ததும் இரண்டு வேளை உணவை திருப்தியாக நிம்மதியாக சாப்பிடட்டும் என்று. வேறு என்ன செய்ய முடியும்?

சில பெற்றோர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் குழந்தைகள் சமர்த்தாக சாப்பிட்டு விடுகிறார்கள். ஹம்ம்ம்ம்ம்!

விவாதத்தில் பங்குபெற்ற குழந்தைகள் நல மருத்துவர் அருண், "அரசுப்பள்ளிகளில் தரப்படும் மதிய உணவில் கூட குழந்தைகளுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து விடுகிறது. பெற்றோர்களும் ஆரோக்கியமான சத்தான உணவுகளை குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்" என்றார்.

எங்க திங்குதுகள்? அதுகளுக்கும் சேர்த்து நாம தான் தின்னு எடைய குறைக்க முடியாம கஷ்டப்படறோம்😓

என்னவோ போடா மாதவா !


'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...