Tuesday, August 9, 2022

தேசிய கைத்தறி தினம்

முன்பொரு காலத்தில் நெசவுத்தொழில் தான் சௌராஷ்ட்ரா மக்களின் அடையாளமாக இருந்தது. “பட்டுநூல்காரர்கள்” என அரசு சாதீய அங்கீகாரம் செய்தது. எம்மக்கள் வாழ்ந்த தெருக்களில் தறி சத்தம் ஏதாவது ஒரு வீட்டிலிருந்து கேட்டுக் கொண்டே இருக்கும். அந்தக்குடும்பமே தறி வேலை செய்ய வேண்டியிருக்கும். காலை முதல் மாலை வரை உடலுழைப்பைக் கோரும் இந்த வேலைக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. சங்கங்கள் அமைத்து இன்றும் ஒரு சிலர் வாழ்வில் ஒளியேற்றிக் கொண்டிருந்தாலும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை இம்மக்களுக்கு. இன்று மதுரை புறநகர்ப்பகுதிகளுக்கு குடிபெயர்ந்து சென்று விட்டார்கள். அங்கு ஒலித்துக் கொண்டிருக்கும் தறியின் ஓசை சொல்லாமல் சொல்லும் அவர்களுடைய வேதனைகளையும் வலிகளையும்.

அடுத்த சந்ததியினர் பலரும் கல்வி கற்று வேலை தேடி வெளியிடங்களுக்குச் சென்று விட, குலத்தொழில் இயந்திரமாக்கப்படலில் தன்னை இழந்து கொண்டிருக்கிறது. அனைவரும் கைத்தறி ஆடைகளை வாங்கி ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும்.

//மீள்

ஒரு காலத்தில் நெசவு நெய்வது சௌராஷ்டிரா மக்களில் பெரும்பாலானோரின் குடும்பத்தொழிலாக இருந்தது. நாங்கள் குடியிருந்த தெருவில் காலை முதல் மாலை வரை இந்த தறிகளின் 'டக் டிக் டக் டிக்' சத்தம் கேட்காத வீடுகள் மிகவும் குறைவே. ஒவ்வொரு டக் டிக்கும் ஒரு தாள நயத்துடன் பட்டு நூலை குறுக்காக எடுத்துச் செல்லும் களியுடன் ஆடும் ஆட்டத்தில் பிறப்பதே அழகான சேலை. தறி நெய்பவரின் கைகள் இழுக்கும் கயிறு டக் என்றால் கால் கீழிருக்கும் கட்டையை அழுத்த, களி வலமிருந்து இடமாகவோ, இடமிருந்து வலமாகவோ ஒரு இழையை நெய்யும் அழகே அழகு.

வேடிக்கையாக இருக்கிறதே என்று நானும் பல முறை பக்கத்து வீடுகளில் தறி மேல் ஏறி கலாட்டா செய்திருக்கிறேன். ஆனால் அந்த வேகம், கை கால்களின் கோ-ஆர்டினேஷன் இல்லாததால் என்னால் ஒரு முறை கூட சரியாக செய்ய முடிந்ததில்லை.

பார்ப்பதற்கு எளிதாக இருக்கும் இந்த வேலை எவ்வளவு கடினம் என்பது செய்பவர்களுக்குத் தெரியும். ஒரு சேலை நெய்வது என்பது பல சிறுசிறு வேலைகளை கொண்ட பெரிய வேலையாகும். பட்டு நூலை வாங்கி அதை சிக்கில்லாமல் பிரித்து, பல வண்ண பட்டு நூல்களை டிசைன்களுக்கு ஏற்றவாறு சேர்த்து, தெருவில் பாவு பிரிப்பது என்று செய்து பிறகு தறியில் ஏற்றுவார்கள். அது ஒரு சேலையாக வெளிவரும் பொழுது அவர்கள் முகத்தில் பிறந்த குழந்தையை கையில் ஏந்தும் மகிழ்ச்சி ததும்பும். விசேஷ தினங்கள் நெருங்குகையில் ஓயாத தறி சத்தம் சொல்லாமல் சொல்லும் ஆர்டர்கள் முடிக்க வேண்டிய நேரமென்று!

தறி இருக்கும் வீடுகளில் குனிந்தே வீடுகளில் வளைய வருவார்கள். இன்றும் சில வீடுகளில் செய்து வரும் அதிக உடல் உழைப்பும், குறைந்த வருமானமும் கொண்ட இத்தொழில் இயந்திரமாக்கலுக்குப் பிறகு நலிந்தே விட்டது. அவர்களின் குழந்தைகளும் படித்து நல்ல வேலைக்குச் செல்ல ஆரம்பிக்க, தறிகள் இருந்த இடம் மட்டுமே பலரின் வீடுகளில் நினைவுகளாக!

#NationalHandloomDay
#தேசியகைத்தறிதினம்

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...