ராபர்ட் ஃபிராஸ்ட் நினைவு இல்லத்திற்குச் சென்று வந்த பிறகு அவரது கவிதைகளை அறிந்து கொள்ளும் எளிய முயற்சி.
இன்று வாசித்தது. அருகருகே இருக்கும் வீடுகளுக்கிடையே வேலிகள் ஏன் என்பதை இரு கதாபாத்திரங்கள் வாயிலாக எளிமையாக சொல்லி யோசிக்க வைக்கிறது இந்தக் கவிதை.
இரு வீடுகளுக்கிடையே வெறும் கற்களால் அமைக்கப்பட்ட மதிற்சுவர். ஒவ்வொரு பனிக்காலத்திற்குப் பிறகு மழை, வெயிலால் கற்களுக்கிடையே சிறிது இட மாற்றம். பாதசாரிகளால் உருவான பெரிய இடைவெளிகள். இதனைச் சரிசெய்ய வீட்டு உரிமையாளர்கள் இருவரும் வசந்தகாலத்தில் அவரவர் எல்லைக்குள் நின்று சந்தித்து உரையாடுகிறார்கள். ஆப்பிள் மரங்கள் ஒரு வீட்டிலும் பைன் மரங்கள் பக்கத்து வீட்டிலும் இருக்கையில் வேறு எதுவும் இரு வீடுகளுக்கிடையே கடந்து செல்ல வாய்ப்பில்லாத பொழுது அவசியமா இந்த வேலி, பிரிவினை எல்லாம் என்று வேலிகளின் மீது நம்பிக்கையற்றவர் கேட்பதற்கு கிடைக்கும் பதில் தான் சுவாரசியமானது.
"அருகருகே இருக்கும் வீடுகளின் சுமூக உறவுகளுக்கு வேலி நல்லது." என்று பதிலளிக்கிறார் வேலி அவசியம் என நினைக்கும் பைன் மரங்களுக்குச் சொந்தக்காரர்.
எந்த மதில் பிரிக்கிறதோ அதைச் சரிசெய்யும் பொழுது தான், அந்தச் சந்திப்பில் தான் பேசிக்கொள்ளும் வாய்ப்பு. இந்தப் பிரிவினையில் ஆர்வம் இல்லாவிட்டாலும் அடுத்தவருக்காக ஒவ்வொரு வருடமும் அதனைச் சரிசெய்ய இணைவது அல்லது ஒப்புக்கொள்வது தான் சுமுகமான உறவுக்கு வித்திடுகிறதோ?
இது மனித உறவுகளுக்கும் பொருந்தும் தானே?
குடும்பம், இனம், மொழி, நாடு, மதம், அரசியல் என்று எத்தனை எத்தனை வேலிகள் அமைத்து உறவாடுகிறோம். வீடுகளுக்கிடையே நாடுகளுக்கிடையே பாதுகாப்பிற்கு என்று பலதரப்பட்ட வேலிகள்! மனதளவில் நமக்கு நாமே மதில்கள் அமைத்து ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே அனுமதித்து உறவுகளிடமிருந்து விலகி நிற்கிறோம். அப்படி இருந்தால் உறவுகளும் பலப்படுகிறது என்று நம்புகிறோம். இன்றைய சூழலில் தமக்குப் பிடிக்காவிட்டாலும் தேவையற்றதாக இருந்தாலும் அடுத்தவருக்குப் பிடித்திருக்கிறது, தேவையாக இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சுமுகமான உறவு நீடிக்கும் என்பதைத்தான் இந்தக் கவிதை முன்மொழிகிறதோ?
அமெரிக்காவில் பல இடங்களில் பெரிய பெரிய வேலிகளை வைத்திருப்பார்கள். பெரும்பாலும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த விவசாய நிலங்களில் இதனை அதிகம் காணலாம். பெரிய வீடுகள் சுற்றிலும் மதில் எழுப்பி இருக்கும். தன் வீட்டின் சுற்றுப்புறம் வழியாக பாதசாரிகள் கடந்து செல்வதை (சட்டப்படி இது குற்றம்)விரும்பாதோர் செய்வது. அந்நியப்படுத்தலைத் தான் வேலிகள் என்று கூறுகிறாரோ கவிஞர்😟
எது எப்படியோ எக்காலத்திற்கும் பொருந்தும் இந்த கவிதை!
Mending Wall
No comments:
Post a Comment