Sunday, August 21, 2022

ஞாயிறு என்பது சுகமா ?

ஞாயிற்றுக்கிழமை என்றாலே "சோம்பலான நாள்" என்றே மனதில் பதிந்துவிட்டிருக்கிறது. சிறுவயதில் அந்த நாளில் தான் பாட்டி வீட்டிற்குச் செல்வது வழக்கம். எங்கள் சமூகத்தில் திருமணமான பெண்கள் தாய் வீட்டுக்குச் செல்லும் தினம். பெரும்பாலும் உள்ளூரிலேயே இருந்ததால் இதெல்லாம் சாத்தியமாயிற்று அப்போது. பாட்டி வீடுகளில் மகள்கள், பேரக்குழந்தைகள் என்று வீடே கலகலக்கும் குதூகலமான நாள். அத்தைகளும் அவர்கள் அம்மா வீட்டிற்குச் சென்று விடுவார்கள். சமயங்களில் அவர்களுடன் சேர்ந்து அவர்கள் அம்மா வீட்டிற்கும் சென்று விடுவோம். ஆட்கள்  நடமாட்டமில்லாமல் வெறிச்சோடி இருக்கும் தெருக்களில் மற்ற வீட்டுக் குழந்தைகள் அனைவருடனும் ஓடிப்பிடித்து விளையாட ஜாலியாக இருக்கும். நடுநிலைப்பள்ளி வயது வரை இந்த ஆட்டம் தொடர்ந்தது.

சூப்பரான மதிய உணவு, நியூசினிமா, சென்ட்ரல், சிட்டிசினிமா இதில்  ஏதோ ஒரு திரையரங்கில் ஒரு திரைப்படம், மாலை நேரத்து நொறுக்குத்தீனியாக சுடச்சுட நெய் வழியும் பெரிய போளியல், ஜீராவில் மிதக்கும் இனிப்பு வடை, ஐஸ்கிரீம் என்று கேட்டதெல்லாம் கிடைக்கும். தாழம்பூ வைத்து ஜடை இல்லையென்றால் மதுரை மல்லி, பிச்சிப் பூக்களைச் சூடிக் கொண்டு இரவில் சௌராஷ்ட்ரா ஸ்பெஷல் அம்பட் பாத், பன் அல்வா/ தக்காளி சாதம், சேமியா அல்வா  என்று திகட்ட திகட்ட சாப்பிட்டு விட்டு விடை பெறுகையில் பாட்டி தரும் காசை வாங்கி அடுத்த நாள் பள்ளியில் என்ன வாங்கிச் சாப்பிடலாம் என்று அசை போடும் மனம். ரிக்ஷாவில் இரவில் வீடு திரும்புகையில் தான் அடுத்த நாள் பள்ளிக்கூடம் அதுவும் வாராந்திர தேர்வு என்று ஒரு கழுத்தறுப்பு இருப்பதும் நினைவிற்கு வர படித்ததெல்லாம் மறந்து போன மாதிரி உணர்வு. நல்ல மதிப்பெண்கள் வாங்கவில்லையென்றால் அப்பாவிடம் அடி வாங்க வேண்டும். அதை நினைத்தவுடன் "உதிரிப்பூக்கள்" அஸ்வினி முகம் போல சோகம் அப்பிக்கொள்ளும். 

மேல்நிலைப்பள்ளி நாட்களில் எப்படா வார விடுமுறை வரும் என்று இருக்கும். அதுவும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை. காலையில் எழுந்திருப்பதே தாமதமாகத்தான். அன்று இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் திரையிசைப் பாடல்கள், பாட்டுக்குப்பாட்டு, திரைப்பட வசனங்கள் என்று களைகட்டும். தில்லானா மோகனாம்பாள், பட்டிக்காடா பட்டணமா, திருவிளையாடல்  என்று பல பிரபல திரைப்படங்களின் வசனங்களைக் கேட்க, அதே வசனங்களை சேர்ந்து பேசி என்று பொழுதுகள் இனிமையாக கரையும். பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் நமக்குத் தெரிந்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவருக்குத் தெரியவில்லை என்றால் நகத்தைக் கடித்துக் கொண்டே "லூசு லூசு. இது கூட தெரியல." என்று தெரிந்த பாடல்களை நாங்கள் எங்களுக்குள் பாடிக் கொண்டிருப்போம். எதுவும் இல்லையென்றால் இருக்கவே இருக்கு கேசட்டுகள். தமிழ், ஹிந்தி என்று மாறிமாறி காதில் ரத்தம் வரும் வரை கேட்டு மகிழ்வோம். மாலை நேரம் மீண்டும்  சோக டியூன் இழையோடும். அதை மறக்க அம்மா ஏதாவது நொறுக்குத்தீனி கொடுப்பார்.

தொலைக்காட்சி வந்தவுடன் காட்சிகள் மாறின. காலையில் 7-7.30 அரை மணிநேரம் பழைய ஹிந்திப் பாடல்காட்சிகள். அதுவும் தெரிந்த பாடல்கள் என்றால் ஒரே குஷி தான். அம்மா மட்டும் எழுந்திருந்து காய்கறிகள் வாங்க கடைக்குச் சென்று வந்து சமையல் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். நாங்கள் சோம்பலுடன் எழுந்து காஃபி குடித்துவிட்டு மீண்டும் தூக்கம். அதற்குள் மஹாபாரதம் ஆரம்பித்து விடும். எல்லோரும் படுத்துக்கொண்டே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்போம். கறிக்குழம்பு வாசம் பசியைக் கிளப்ப, சாப்பிட்டு முடிப்பதற்குள் மதிய நேர ஆங்கிலச் செய்திகள். அதைத் தொடர்ந்து அவார்ட் வாங்கின இந்திய மொழியில் ஒரு படம். இந்த அவார்ட் படங்கள் மெதுவாக ஆமை போல் நகரும். ஒரு சில படங்களைத்தவிர மற்றதெல்லாம் எதற்கு அவார்டு கொடுத்திருப்பார்கள் என்று யோசிக்க வைக்கும் ரகம் தான். ஆனாலும் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக பார்த்துக் கொண்டே மதிய தூக்கம். மாலை காஃபி வேளையில் "நாளைக்கு ஸ்கூலுக்குப் போறதுக்கு ரெடியா?" என்று அம்மா கேட்கும் பொழுது பின்னணியில் மீண்டும் அதே சோக கீதம் இசைக்கும்.

கல்லூரியில் படிக்கும் பொழுது கேட்கவே வேண்டாம். சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாக இருந்தாலும் திங்கள் காலையில்  பஸ்சைப் பிடிக்க அவ்ளோ தூரம் போகணுமே என்ற சோகம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.  வீட்டிலிருந்து குறைந்தது 30 நிமிட நடை. பேருந்தைத் தவற விட்டால் மேலும் ஒரு அரைமணிநேர நடை கல்லூரிக்குச் செல்ல. அடுத்த நாள் லேபுக்குத் தயாராகணும். இல்லையென்றால் எல்லார் முன்னாடியும் கேள்விகள் கேட்டு அசிங்கமாக நிற்க வேண்டுமே என்று துக்கம் தொண்டையை அடைக்க புத்தகத்தைத் திறந்து நாலு வரி படிக்க ஆரம்பிக்கும் பொழுது வயலின்கள் இசைக்கும் சோக கீதம்....

வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பின்னும் மாலை வரை இருக்கும் குதூகலம் இரவில் மெல்ல மெல்ல விடைபெற்று அதே ஞாயிறு சோகங்கள் தொடர்ந்தது. இங்கு கூடுதலாக ஒரு வாரத்திற்கான திட்டங்களை முன்கூட்டியே செய்தாக வேண்டும். சமையல், குழந்தைகள், கணவர் என்று அவர்களுடைய தினப்படி வேலைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.  அதுவும் இந்த கொரோனாவிற்குப் பிறகு நிலைமை ரொம்பவே மாறிவிட்டிருக்கிறது.

என்னவோ போடா மாதவா!



 

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...