Sunday, August 14, 2022

வந்தே மாதரம்

நாங்கள் முதன் முதலில் புலம்பெயர்ந்த நாடு கனடா. அங்கு நான் கண்டு வியந்த பல விஷயங்களில் ஒன்று, கனடியன் வீடுகளில் அந்நாட்டின் கொடி பறந்து கொண்டிருந்த அழகு தான்! இந்தியாவில் அதுவரை நான் பார்த்திராத ஒன்று. நம் தேசியக்கொடியை பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் மட்டுமே காண முடியும்.  ஆனால், இங்கோ வீடுகளில், கடைகளில், பூங்காக்களில், அரசு அலுவலகங்களில் என்று காணும் இடங்களில் எல்லாம் பறந்து கொண்டிருக்கும். அதுவும் பெரிய பெரிய அளவுகளில் உயரத்தில் பறப்பதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கும். 

அமெரிக்காவில் ஜூலை 4 சுதந்திர தினத்தன்று பலரும் வீடுகளில் கொடியைப் பறக்க விடுவர். வேற்று நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் இரு நாட்டு கொடிகளையும் பறக்க விடுவதும் இங்கு வாடிக்கை. 

அமெரிக்காவிலும் கறுப்பர்கள், வெள்ளையர்கள், யூதர்கள், செவ்விந்தியர்கள், புலம்பெயர்ந்தவர்கள் என்று பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.  தினம் பல துப்பாக்கி வன்முறைச் செயல்களும், போதை மருந்துப்  பிரச்னைகளும், வேலையில்லாத திண்டாட்டமும், ஏழ்மையும், மாநிலங்கள் வாரியாக பல்வேறு பிரச்னைகள் பூதாகரமாக இருந்தாலும் அவர்கள் தேசியக்கொடிக்குத் தரும் மரியாதையில் குறைவில்லை. யாரும் எனக்கு வேலை இல்லை, உணவு இல்லை என்று கொடியை அவமதிப்பது இல்லை. அவரவர் விருப்பத்துடன் வீட்டில் பெருமையுடன் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு வித பெருமிதம் அவர்களுக்கு! பள்ளியிலிருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள். தேசியக்கொடி பறக்கும் இடத்தை நோக்கி நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு தேசிய கீதம் இசைப்பதும் இறந்த போர் வீரர்களின் நினைவாக நகரில் கொடிகளை வைத்து மரியாதை செய்வதும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. தேசியக்கொடி நாட்டின் அடையாளம். நாட்டு மக்களுக்குப் பெருமை தரும் விஷயம். 

ஒலிம்பிக்ஸ் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்கள் மேடையில் நிற்க, அவர்கள் நாட்டு கொடி ஏற்றப்படுவதும் அவர்களின் தேசியகீதம் இசைக்கப்படுவதும் அந்த விளையாட்டு வீரர்களுக்கும் நாட்டுக்கும் எத்தனை பெருமை!

நமது பாரத தேசம் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப் பெற்று 75 வருடங்களாகப் போவதை நாடே கோலாகலமாக கொண்டாட ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரம் மூலம் மூவர்ண கொடியை  வீட்டிற்குள் ஏற்ற மக்களை ஊக்குவிக்கிறது அரசு. மக்களின் இதயங்களில் தேசபக்தி உணர்வைத் தூண்டுவதும் இந்திய தேசியக் கொடி பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  பலரும் உத்வேகத்துடன் வீடுகளில் முதன்முறையாக கொடியேற்றி மகிழ்வுறுவதைப் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது.

இதிலும் அரசியல் ஆதாயம் தேட முயல்பவர்களை நினைத்தால் தான் அதிசயமாக இருக்கிறது! தேசியம் என்றாலே வெறுப்பை உமிழும் இந்த தீவிரவாதப் போக்கு அபாயகரமானது. 

நம் செல்வங்களையும் வளங்களையும் சூறையாடிச் சென்றவர்கள், நம் மீது திணித்த இன, மதவாத பிடியில் சிக்கிச் சீரழியவேண்டும் என்று நமக்கும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இடையில் தீராப்பகையை உருவாக்கிவிட்டுச் சென்றது இன்று வரை தொடருவது தெரிந்த வரலாறு. வெளியில் இருக்கும் எதிரிகளை விட உள்நாட்டில் இருந்து கொண்டே இந்தியாவை வீழ்த்த நினைக்கும் எதிரிகள் தான் பேராபத்தானவர்கள். அவர்களுடன் தான் நாம் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த எட்டப்பன்கள் இருக்கும் வரை நாடு முன்னேற பல்வேறு தடைகளை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். தேசியக்கொடி ஏற்றினால் தேசப்பற்று வந்துவிடுமா, வேலை கிடைத்து விடுமா என்று அறிவாளித்தனமாக பேசித்திரிபவர்கள் இன்றைய சொகுசு வாழ்க்கையில் சிறைசென்றவர்களின், சித்திரவதை அனுபவித்தவர்களின், இன்று வரையில் நாட்டுக்காக உயிர் துறக்கும் ராணுவத்தினரின் வலியை மறந்து அவர்களுக்கான மரியாதை என்று கூட நினைக்க மறந்தது வேதனை தான். தேசியத்தை வளர்க்காமல் தேசியஉணர்வைத் தூண்டாமல் துண்டாட நினைப்பதைத் தான் இந்த அரசியல்  பேசும்  நடுநிலைவாதிகள் செய்து கொண்டிருப்பது. பாகிஸ்தான், சீனா  கொடியை கூட இவர்கள் ஏற்றி வைத்து மரியாதை செலுத்த தயங்க மாட்டார்கள் என்பது தான் உண்மை. 

இந்தியா எனது தேசம் என்று நினைக்கும் எவரும் தங்கள் இல்லங்களில் நமது தேசியக் கொடியை ஏற்றுவதில் பெருமை கொள்வார்கள். இனி வரும் தலைமுறைக்காவது தேசியக்கொடியின் மீதான மரியாதையையும் மதிப்பையும்  கற்றுக் கொடுப்போம். 

ஜெய்ஹிந்த்!

 



No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...