Wednesday, August 31, 2022

தூங்காத கண்ணென்று ஒன்று

வானொலியில் நமக்குப் பிடித்த பாடலை கேட்க நேர்ந்தால் அன்றைய நாள் முழுவதும் அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே மகிழ்ச்சியான நாளாக பொழுதுகள் கரையும். பாடல்களின் நடுநடுவே நேயர்கள் பங்கும் பெரும் சில நிகழ்ச்சிகளையும் கேட்டுக் கொண்டே பயணிப்பது குதூகலமாக இருக்கும். தொகுப்பாளர்கள் கேட்கும் கேள்விக்கு சளைக்காமல் ஜல்லி அடிப்பார்கள் நேயர்கள். நக்கலாக, சீரியஸாக, உண்மையாக என்று பல தொனியில் பதில்கள் வரும். நம் பதிலையும் அதில் ஒன்றோடு பொருத்திப் பார்த்துச் சிரித்துக் கொள்ளலாம். அப்படித்தான் இந்த கேள்வியும். தொகுத்து வழங்குபவர்கள் இருவரும் செம கில்லாடிகள். போட்டு வாங்குவது எப்படி என்று இவர்களிடம் கற்றுக் கொள்ளலாம். செம ஜாலியான எனக்கு மிகவும் பிடித்த வானொலி நிகழ்ச்சி. இப்படித்தான் நேற்று ஒரு கேள்வியைக் கேட்டார்கள்.

"Can the couple that sleeps apart due to sleep issues still be happy?"

இதற்குப் பதில் தெரிந்தது தான் என்றாலும் நேயர்களின் நக்கலான பதில்களுக்காக காத்திருந்தேன். எதிர்பார்த்தது போலவே பல சுவையான பதில்கள்.

"நான் அதிகாலையில் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் தனியாகத் தான் படுத்துக் கொள்வேன். இதனால் மனைவிக்குத் தொந்தரவு இல்லாமல் நான் பாட்டுக்கு கிளம்பி விடுவேன்." என்று தொடங்கி வைத்தார் தொகுப்பாளர். அதைத் தொடர்ந்து நேயர்கள் பலரும்

"சில வருடங்களாக நானும் கணவரும் தனித்தனியாக தான் படுத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறோம்."

"25 வருட திருமண வாழ்விற்குப் பிறகு பல குடும்பங்களில் இது சாதாரணமான நிகழ்வு தான். என்ன தான் கணவன் மனைவியாக இருந்தாலும் சேர்ந்தே தான் உறங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரவர் விருப்பப்படி அமைதியான நல்ல உறக்கத்திற்குத் தனித்தனியாக உறங்குவதால் உறவுகள் பலப்படுமே ஒழிய குறையாது." என்று ஒரு நேயர்.

"குறட்டை விட்டுத் தூங்குபவர்களுடன் உறங்கி தன் தூக்கத்தைத் தொலைத்து நிம்மதியின்றி இருப்பதற்கு தனியாகவே படுத்துடலாம்."

"அமைதியான ஆழ்ந்த உறக்கம் அவசியம். அதற்கு இது ஒன்று தான் தீர்வு."

"விருந்தினர்கள் வந்து தங்குவதற்கு ஒரு அறை அநேக வீடுகளில் இருக்கும். பலருக்கும் அது தப்பியோடி படுத்துக்கொள்ளும் இடம்."

"தினமும் நடு இரவில் வேறொரு அறையில் தூங்க ஓடுவேன். என் கணவரின் குறட்டைச்சத்தம் அத்தனை கொடுமை."

ஒருவர் இன்னொரு படி மேல். "நானும் என் கணவரும் தனித்தனி வீட்டில் இருக்கிறோம். வாரத்தில் 3-4 நாட்கள் சேர்ந்து உறங்குவோம். அதுவே நன்றாக தான் இருக்கிறது." என்றார்.

சிலர் , " எனக்கு snuggle பண்ணித் தூங்கணும்."

"நான் டிவி பார்ப்பேன், லேட்டா தூங்குவேன். குறட்டை விடுவேன். கணவருக்குச் சிறு சப்தம்கூட இடைஞ்சல் தான். அதனால் நாங்கள் தனித்தனியாக தான் தூங்குகிறோம். நன்றாக தான் இருக்கிறது. நாங்களும் சந்தோஷமாகத் தான் இருக்கிறோம்."

இப்படி பல விதமான பதில்கள்.

கனடா வந்த புதிதில் நாங்கள் சென்ற வீட்டில் கணவரும் மனைவியும் தனித்தனியே அவரவர் அறையில் படுக்கிறார்கள் என்பது பெரிய அதிர்ச்சியாக இருந்தது எனக்கு அப்போது! அவர்களுக்குள் என்ன பிரச்னையோ?. சும்மா உலகத்திற்காக சேர்ந்து இருக்கிறார்களோ என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக நினைத்திருக்கிறேன்.

ஆனால் அவரவர் வேலை நேரம், பழக்க வழக்கங்களைப் பொறுத்து இப்படி உறங்குவதில் தவறில்லை. அதனால் கணவன்-மனைவி உறவு பாதிக்கப்படப் போவதுமில்லை என்று புரிந்து கொண்டேன்.

இதில் ஒரு பெண் சிரித்துக் கொண்டே "என் கணவர் குறட்டை விட்டால் ரயில் ஓடுவது போல் இருக்கும். இதற்காகவே தனியாக படுக்கிறேன்." என்றார்.

பெரும்பாலான மக்களுக்கு குறட்டை ஒலி தான் இந்தப் பிரிவினையை ஏற்படுத்துகிறது என்று தொகுப்பாளர் சிரித்துக் கொண்டே, " தனித்தனியாக படுப்பதால் உறவு கணவன்-மனைவி ஒன்றும் பாதிக்கப்படுவதில்லை. மேலும் பலப்படவே செய்கிறது." என்று நிகழ்ச்சியை முடித்தார்.

தூக்கம் எத்தனை அவசியமானது. இன்பமானது என்பதை உறக்கத்தைத் தொலைத்தவர்களுக்கு மட்டுமே தெரியும். புரியும்.

நம்மூரில் இரவானால் வீடுகளில் பலப்பல டெசிபல்களில் விதவிதமான சத்தங்களில் அநேக ராகங்களில் 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' என்று குறட்டை விட்டுத் தூங்கும் மனிதர்களிடையே தூங்கிப் பழகியவர்களுக்கு அமைதியாக இருந்தால் 'பேசும் படம்' கமல் மாதிரி அதை ரெக்கார்ட் செய்து ஓட விட்டுத் தான் தூங்க வேண்டும். நமக்கு அநியாயத்திற்குப் பொறுமை இருக்கிறது.





No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...