Tuesday, August 2, 2022

மதிய உணவு

சென்ற வார "நீயாநானா" நிகழ்ச்சியில் மதிய உணவு பற்றின விவாதம் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே நடந்தது. குழந்தைகளின் மதிய உணவு பெரும்பாலும் வறுத்த கிழங்குடன் எலுமிச்சம்பழ சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் என்றிருந்தது. ஒருமித்த குரலில் சிறார்கள் அனைவரும் இதையே தினமும் கொடுத்தால் எப்படித் தின்பது? வகைவகையான உணவு இல்லை. இதுதாண்டா சாக்கு என்று பெற்றோர்களைப் போட்டுப் பார்த்தார்கள். ஒரே ஒரு லஞ்ச்பாக்ஸில் மட்டும் சுருட்டின சப்பாத்திகள் ஏழு எட்டு இருந்தது.

பெற்றோர்களோ அசைவ உணவைப் பள்ளிக்கூடத்திற்கு எப்படி கொடுத்தனுப்ப முடியும்? காலையில் அவர்கள் கிளம்பும் நேரத்துக்கு வகைவகையாக எப்படி செய்து கொடுக்க முடியும்? அவர்களுக்குப் பிடித்ததைச் சமைத்துக் கொடுத்தாலும் சாப்பிடாமல் மிச்சம் வைக்கிறார்கள் என்று அவர்கள் சார்பு புலம்பலை முன்வைத்தார்கள்.

இதில் முக்கியமாக நான் கவனித்தது பல பள்ளிகளில் குறிப்பாக தனியார் பள்ளிகளில் குழந்தைகள் வகுப்பறையிலேயே சாப்பிடுவதாக கூறினார்கள். மணியடித்தவுடன் மைதானத்த்திற்கு ஓடி மரநிழலில் நண்பர்களுடன் சாப்பிட்ட காலங்கள் மலையேறிவிட்டனவோ! குழந்தைகள் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் நினைப்பதில் தவறில்லை. ஆனால் ஆளை வைத்து கண்காணித்து அவர்கள் சாப்பிடும் நேரத்தில் கூட சுதந்திரமில்லாமல் அவர்களை ஆட்டிப்படைப்பது என்னவிதமான செயல் என்று தான் புரியவில்லை. அரசுப் பள்ளிகளில் ஒரு மணி நேரமும் பல தனியார் பள்ளிகளில் அரை மணி நேரம் தான் மதிய உணவுக்கான நேரமாம்! இடைவேளையில் மட்டும் தான் நண்பர்களுடன் குதூகலிப்பது, பேசுவது, சாப்பிடுவது என்று மாணவர்கள் காத்திருக்கும் நேரம். அதையும் இப்படி சுருக்கிவிட்டிருக்கிறார்கள்!

என் ஆரம்பப்பள்ளி நாட்களில் அம்மா மதியம் சுடச்சுட சாப்பாடு கொண்டு வந்து கையில் உருட்டித் தர நாங்கள்(அக்கா, தங்கை) உண்போம். நண்பர்களும் எங்களுடன் சேர்ந்து உணவருந்துவார்கள். பிறகு நாங்களே மதிய உணவை எடுத்துக் கொண்டுச்சென்ற நாட்களில் நண்பர்களுடன் வட்டமாக உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிட்டு முடிப்போம். சிறிது நேரம் ஓடிவிளையாடவும் செய்தோம்.

மேல்நிலைப்பள்ளி நாட்களிலும் இது தொடர்ந்தது. மதிய உணவுக்குப் பின் பள்ளிக்கு வெளியில் விற்கும் நொறுக்குத்தீனியையும் விட்டு வைப்பதில்லை. பெரும்பாலும் இட்லி, சட்னி, தக்காளி சாதம், புளியோதரை, வத்தக்குழம்பு சாதம், வெயில் காலங்களில் தயிர் சாதம், மாம்பழம் என்று எடுத்துச் செல்ல எளிதாக இருக்கும் உணவுகள் தான். ஒழுங்காக சாப்பிட்டு விட்டு வருவோம்.கல்லூரி வரை இதுதான் தொடர்ந்தது. பள்ளி, கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் காய்கறி, கீரைகளுடன் சாப்பாடு என்று போனது.

இன்றைய காலகட்டத்தில் மதியநேரத்தில் பள்ளிக்குச் சென்று அம்மாக்கள் உணவு கொடுப்பது இயலாத காரியம். வீட்டிற்கும் பள்ளிக்கும் தொலைவு அதுவுமில்லாமல் பல அம்மாக்களும் வேலைக்குச் செல்கிறார்கள். பள்ளிகளும் ஊக்குவிப்பதில்லை. "நொறுங்கத் தின்றால் நூறு வயது" என உணவை மென்று சாப்பிடச் சொல்லி விட்டு அரைமணிநேரம் மட்டுமே கொடுத்தால் எப்படி? அங்கிருந்த பெற்றோர்களில் ஒருவர் பள்ளி ஆசிரியர். அவரும் "பாவம் தான் சார். நண்பர்களுடன் பேசி முடிக்க பத்து பதினைந்து நிமிடங்கள். பிறகு சாப்பிட எப்படி நேரம் பத்தும்?" என்றார். இப்படி அரக்கப்பரக்க சாப்பிட வற்புறுத்துவதால் தான் சாப்பிடுவதில்லையோ? எல்லா குழந்தைகளும் அப்படி அல்ல என்றாலும் மெதுவாக சாப்பிடும் குழந்தைகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

இந்தப் பிரச்னை வேறுவிதத்தில் எனக்கு அமெரிக்காவிலும் இருந்தது. ஆரம்பப்பள்ளி நாட்களில் என் குழந்தைகள் இரண்டும் ஒன்றும் சாப்பிட மாட்டார்கள். இந்திய உணவுப் பிரச்னை. சரியென்று சாண்ட்விச் கொடுத்தனுப்பினாலும் போனது அப்படியே வரும். இதை நினைத்து எனக்குதான் மனஅழுத்தம் வந்தது. அவர்களுக்கும் சேர்த்து நான் சாப்பிட்டு எடை கூடியது. பல பெற்றோர்களுக்கும் தீராத பிரச்னை இது. நடுநிலைப்பள்ளி வயதில் கொஞ்சம் சாப்பிட்டார்கள். நானும் அவர்களுக்குப் பிடித்த பழங்கள், காய்கறிகள், சாப்பாடு தான் கொடுத்து அனுப்பினேன். சமயங்களில் பள்ளியில் சாப்பிட பணமும். ம்ஹூம்! என்னை பாடாய் படுத்தினார்களே ஒழிய, முழுவதும் சாப்பிடவே இல்லை. அவர்களாக மேல்நிலைப்பள்ளியில் திருந்தி சாப்பிட துவங்கினார்கள். ஆனால் இப்பொழுது நேரம் இல்லை. இருவரும் மியூசிக் வகுப்புகள் எடுத்திருந்தார்கள். அது மதிய உணவு இடைவேளையில் தான் நடக்கும். மகளுக்கு வயிற்றுப்புண் வந்து அவதியுற, பள்ளியைக் கூப்பிட்டு நான் "சாப்பிட கூட நேரம் கொடுக்காமல் இப்படி நல்லா இருந்தவளை சீக்காளியாக்கி விட்டீர்களே" என்று முறையிட, மருத்துவர் அறிவுறுத்தினால் அவள் வகுப்பில் சாப்பிடலாம் என்று துண்டுசீட்டு வாங்கிக் கொடுத்தேன்.

பெரும்பாலான பெற்றோர்களுக்கு குழந்தைகள் சாப்பாடு விஷயத்தில் என்றும் பிரச்னை தான். காலை உணவை தூக்கக்கலக்கத்தில் அவதிஅவதியாக முழுங்கிக் கொண்டு பள்ளிப்பேருந்தைப் பிடிக்க ஓட வேண்டும். மதியம் இந்த அக்கப்போருகள். முடிவில் நான் என்னை மாற்றிக் கொண்டேன். வீட்டிற்கு வந்ததும் இரண்டு வேளை உணவை திருப்தியாக நிம்மதியாக சாப்பிடட்டும் என்று. வேறு என்ன செய்ய முடியும்?

சில பெற்றோர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் குழந்தைகள் சமர்த்தாக சாப்பிட்டு விடுகிறார்கள். ஹம்ம்ம்ம்ம்!

விவாதத்தில் பங்குபெற்ற குழந்தைகள் நல மருத்துவர் அருண், "அரசுப்பள்ளிகளில் தரப்படும் மதிய உணவில் கூட குழந்தைகளுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து விடுகிறது. பெற்றோர்களும் ஆரோக்கியமான சத்தான உணவுகளை குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்" என்றார்.

எங்க திங்குதுகள்? அதுகளுக்கும் சேர்த்து நாம தான் தின்னு எடைய குறைக்க முடியாம கஷ்டப்படறோம்😓

என்னவோ போடா மாதவா !


No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...