Tuesday, September 12, 2023

மறக்குமா நெஞ்சம்?


ஒரு சாதாரண இசைநிகழ்ச்சியில் நடந்த அசாம்பாவிதங்கள் என்று கடந்து செல்ல முடியவில்லை. இன்று தந்தி டிவியில் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நிகழ்வு மேலாண்மை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் நடந்த உரையாடலைக் காண நேர்ந்தது. அவர் பேசியதில் அத்தனை முரண்பாடுகள். வட இந்தியாவில் நடக்கும் ரஹ்மானின் இசைநிகழ்ச்சியை விட அதிக எண்ணிக்கையில் தென்னிந்தியாவில் இந்த "மறக்குமா நெஞ்சம்" நிகழ்ச்சியை நடத்தி விட வேண்டும் என 'யாரோ' தீர்மானித்திருக்கிறார்கள். அதற்கு பலிகடா ஆனது ஏஆர் ரஹ்மானின் ரசிகர்களும் குடும்பங்களும்😞.

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ACTC நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹேமந்த் பொறுப்பற்றத்தனமாக பேசினார். இதுவரையிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் அனுபவம் இருப்பவருக்குத் திட்டமிட்டபடி 40,000 மக்கள் கலந்து கொள்ளவிருந்த இந்த நிகழ்ச்சியே முதல் நிகழ்ச்சி என்று கூறினார்.  

முதலில் இத்தனை பெரிய மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். 25,000 பேர் கலந்து கொள்ள மட்டுமே அனுமதி கொடுத்திருக்கிறது காவல்துறை. அதற்கான காவலர்களே பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருப்பார்கள். அப்படியென்றால் 40,000 பேர் வருவார்கள் என்று திட்டமிட்ட இந்த நிறுவனம் யாரை ஏமாற்ற நினைத்திருக்கிறது? இது கண்டனத்துக்குரியது மட்டுமில்லாமல் தண்டனைக்குரிய குற்றமும் அல்லவா? சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கிற்காக மீம் போடுபவர்களை நடுராத்திரியில் கைது செய்யும் காவல்துறையும் ஏவலாளியும் அமைதி காப்பது ஏனோ?

அடுத்து தேதி மாற்றத்தால் நடந்த குழப்பம் என்றார். பலரும் டிக்கெட்டை கேன்சல் செய்ததால் எண்ணிக்கையில் நடந்த குளறுபடியாம். ஆன்லைன் டிக்கெட் விற்பனை என்றால் எப்படி குழப்பமாகும்? ட்விட்டரில் பலரும் "கேன்சல் செய்யும் வசதியே அவர்களுடைய தளத்தில் இல்லை. எப்படி நாங்கள் செய்ய முடியும்" என்று புலம்பியிருக்கிறார்கள். பணத்தைக் கட்டி அனுமதிச்சீட்டு வாங்கியவர்களுக்கு மீண்டும் மறுதேதியிட்ட அனுமதிச்சீட்டு வழங்கியிருக்கிறார்கள். எத்தனை பேருக்கு கொடுத்தீர்கள் என்றால் தடுமாறுகிறார். ஆன்லைன் வர்த்தகத்தில் எப்படி குழப்பம் நடக்கும்? புரியவில்லை. அப்படியே நடந்திருந்தாலும் பழைய அனுமதிச்சீட்டுகளைக் கொண்டு வருபவர்களை இனம் காண முடியவில்லை என்றால் என்ன மாதிரியான நிறுவனம் இது? எதன் வகையில் மக்களை உள்ளே அனுமதித்தார்கள்? இது முழுக்க முழுக்க இவர்களின் அஜாக்கிரதையால் நடந்த தவறு. கஷ்டப்பட்டு ஒப்புக்கொள்கிறார். வேறு வழி?

25,000 பேருக்கு அனுமதி வாங்கி விட்டு 36,000 பேருக்கு டிக்கெட்டையும் விற்று 4,000 பேருக்கு காம்ப்ளிமெண்டரி டிக்கெட்டுகள் கொடுத்தார்களாம். மொத்தம் 40,000 கணக்கு. ஆனால் 45,000 பேருக்கு இருக்கை வசதிகள் செய்து வைத்திருந்தார்களாம். எத்தனை பெரிய அபத்தம்? காவல்துறைக்கு 'பெப்பே' காட்டியவர்களைப் பாவம் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில் வைத்திருக்கிறது இந்த அரசு.

45,000 இருக்கைகள் போட தெரிந்திருக்கிறது. அதற்கான கட்டமைப்புகள் இருக்கிறதா என்று பார்த்தார்களா? கூட்டத்தைச் சமாளிக்க போதுமான ஆட்களை போடாதது யாருடைய தவறு? 45,000 பேருக்கு எத்தனை பௌன்சர்கள், அனுமதிச்சீட்டை சரிபார்ப்பவர்கள், இவர்களை நிர்வகிப்பவர்கள் இருந்தார்கள்? பதில் இல்லை.

கார்களில் வருபவர்கள் அதிகரித்திருக்கும் இந்த வேளையில் வெறுமனே 8,000 வண்டிகள் நிறுத்தவும் 20,000 இரு சக்கர வண்டிகள் நிறுத்தவும் ஏற்பாடு செய்திருந்தார்களாம். நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வருபவர்கள் ஷேர் ஆட்டோவிலா வரப்போகிறார்கள்? அங்கு நிறுத்த வசதி இல்லையென்றால் தொலைவில் எங்காவது ஓரிடத்தில் நிறுத்தி மக்களைப் பேருந்தில் அழைத்து வர செய்திருக்கலாமே? இத்தனை வருட அனுபவம் இருக்கிறது என்பவருக்கு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கூட்டம் என்று தெரியாமல் போயிருக்கிறது பாருங்கள். அத்தனை அலட்சியம்!

நம் மக்களுக்கும் பொது இடங்களில் ஒழுங்காக வரிசையில் நின்று சென்றால் விரைவில் அரங்கிற்குள் செல்லலாம் என்ற அடிப்படை அறிவு என்பது அறவே கிடையாது. முண்டியடித்துக் கொண்டுச் சென்று தான் மட்டும் அல்லது தன் குடும்பம் மட்டும் முதலில் உள்ளே செல்ல வேண்டும் என்ற மனநிலை தான். திரையரங்குகளில் கூட அப்படித்தான் நடந்து கொண்டார்கள். அதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் மூச்சு விடச் சிரமப்பட்டிருக்கிறார்கள். கொடுமையெல்லாம் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி பதட்டத்துடன் பேசியத்தைப் பார்க்க வருத்தமாக இருந்தது. இந்த வடு ஆறுமோ? பொறுக்கிகளை முட்டிக்கு முட்டி தட்டி அடிக்க காவல்துறை அங்கு இல்லை. இந்த நிறுவனம் பௌன்சர்களை வைத்திருந்ததாக சொன்னவர்கள் எத்தனை பேர் இந்த ஒழுங்கற்றவர்களை அப்புறப்படுத்தினார்கள்? அங்கு முறையிட கூட ஆட்கள் யாரும் இல்லை என்று சொல்வதற்கு கட்டுக்கடங்காத கூட்டம் வந்து விட்டது என்று சொல்கிறாரே தவிர உண்மையில் எத்தனை அனுமதிச்சீட்டு கள்ளச்சந்தையில் விற்பனை ஆகியிருக்கிறது? யார் விற்றிருக்கிறார்கள் என்று இவர்களுக்கும் மீறிய செயலாக பேசுகிறார். இருக்கலாம். அப்படியென்றால் அந்த 'கள்ள பார்ட்டி' யார் என்று கண்டறிய வேண்டியது யாருடைய கடமை?

யாருக்காக இப்படி விழுந்தடித்துக் கொண்டு நிகழ்ச்சியைப் பார்க்க வந்தார்களோ முதலில் அவரிடமிருந்த வந்த ட்வீட் தான் வேதனையைத் தருவதாக இருக்கிறது. உள்ளே வரமுடியாமல் போனவர்கள் அனுமதிச்சீட்டின் நகலை இவருக்கு அனுப்பினால் ஆவண செய்வாராம் A.R.ரஹ்மான். தனக்கு வெளியில் நடந்தது எதுவும் தெரியாது என்கிறார். ஓகே. அதில் ஓரளவு உண்மை இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். இவரைப் பார்க்கவும் பாடுவதைக் கேட்கவும் தானே பணத்தைக் கொட்டி அங்கே வந்தார்கள். இதுவரையில் பாதிக்கப்பட்ட பெண்களிடமோ நிகழ்ச்சியைக் காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய மக்களிடமோ நடந்த தவறுக்குப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க கூட மனமில்லாமல் இருக்கிறார். 'மன்னிப்பு' என்ற வார்த்தை அத்தனை கடினமானதா? இன்று இவருடைய சுயரூபம் தெரிந்த மனிதர்கள் பலத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்.

"வெளிநாடுகளில் எத்தனை கச்சேரிகளை நடத்தியுள்ளேன். இதுவரையில் இப்படியெல்லாம் நடந்ததில்லை." என்கிறார் ரஹ்மான். எப்படி நடக்கும்? இத்தனை பேர் அமர முடியும் என்றால் அத்தனை அனுமதிச்சீட்டுகள் மட்டுமே வெளிநாடுகளில் விற்க முடியும். அதிகமாக விற்று களேபரம் நடந்தால் லாடம் கட்டிவிடுவார்கள்.

காவல்துறையினரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியிருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு வந்த ஒருவர், வண்டிகள் நிறுத்துமிடங்களில் ஏகப்பட்ட கலாட்டா. இடமில்லாதாதல் காவலர்கள் தான் வண்டிகளை நகர்த்திக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தால் தான் பாவமாக இருந்தது என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.இந்த நிறுவனம் ஏன் வண்டிகள் நிறுத்துமிடத்தில் போதுமான ஆட்களை நிறுத்தவில்லை? கேட்டால் எதிர்பாராத கூட்டம். கள்ளச்சீட்டு கூட்டம் என்று கதை கட்டுகிறார் இந்த ஹேமந்த். ஏற்கெனவே இதே போல் கள்ளச்சீட்டு கூட்டத்தால் கோயம்புத்தூரி்ல் இதே ரஹ்மானின் இசைநிகழ்ச்சியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது இவர் நடத்திய நிகழ்ச்சியில். அப்பொழுதே அதை கவனித்து சரிசெய்திருக்க வேண்டாமா ரஹ்மான்? இந்தப் பொறுப்பைக்கூட தன் விசிறிகளுக்காக செய்ய மாட்டாரா? இப்பொழுது  மீண்டும் ஒரு களேபரம் நடந்திருக்கிறது என்றால் யார் மீது குற்றம்? இவரைத் தண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்😡

பணத்தைத் திருப்பித் தருகிறோம் என்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மன உளைச்சலுக்கும் அதிலிருந்து அவர்கள் மீண்டு வரவும் என்ன செய்யப் போகிறார்கள்?

பணத்திற்காக பேயாய் அலையும் மனிதர்களிடம் மாண்பை எதிர்பார்ப்பது தவறோ?

இனி வரும் காலங்களிலாவது அரசும், காவல்துறையும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் பணத்திற்காகவும் புகழுக்காகவும் மட்டுமே இல்லாமல் நிகழ்ச்சியை வழங்குபவரும் பொறுப்புகளை கடமைகளை உணர்ந்து நடக்கட்டும். பொதுமக்களும் பொறுக்கிகளை இனம் கண்டு அநீதிகள் நடக்காத வகையில் விழிப்புடன் இருக்கட்டும்.

'மறக்குமா நெஞ்சம்' ஆறாத ரணமாகிப் போயிருக்கிறது!

The Courier

மேற்குலகிற்கும் ரஷ்யாவிற்குமிடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் நிகழ்ந்த நிகழ்வினை விறுவிறுப்பாக படமெடுத்திருக்கிறார்கள். காலத்திற்கேற்றவாறு வண்டிகள், நடிப்பவர்கள் உடைகள், ஆடைகள், தோரணைகள் என்று எப்படித்தான் பீரியட் படங்களில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களோ என்று ஆச்சரியப்பட வைக்கிறது. சமையல் அறையில் இருக்கும் பாத்திரங்கள் தொடங்கி சுவர் அலங்காரங்கள், அலுவலகங்களில் இருக்கும் தொலைபேசிகள் என்று சின்னசின்ன விஷயங்களில் கூட அத்தனை கவனம் செலுத்தியிருந்தார்கள். ஹாலிவுட் பீரியட் படங்களை மிஞ்சவே முடியாது என்பதற்கு இந்தப்படமும் ஒரு சான்று. செய்தித்தொடர்பு வளர்ச்சி அவ்வளவாக இல்லாத காலத்தில் உளவுத்துறை எப்படி எல்லாம்செயல்பட்டிருக்கும் என்று நினைத்தாலே பதட்டமாகத் தான் இருக்கிறது!

ரஷியா என்றாலே 'KGB' என்பதும் அதன் கொடுரமான தண்டனைகளும் நினைவிற்கு வரும். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யாவிற்கிடையே நடக்கும் செய்திப் பரிமாற்றங்கள். எப்படி சாத்தியாமாகிறது? நம்மைப் போல மனிதர்கள் எப்படி உளவு பார்க்கிறார்கள் என்பதை அழகாக காட்டியிருக்கிறார்கள். எப்படி படம் முடியுமோ என்று ஒவ்வொரு காட்சியையும் அதனோடு இழைந்து வரும் இசையும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்கிறது. ஒரு நிமிடம் கூட கவனத்தைச் சிதற விடாமல் பார்க்க வைக்கும் படம். நடித்த கதாபாத்திரங்கள் அனைவரும் நன்றாக நடித்திருந்தார்கள். அனாவசிய காட்சிகள் இன்றி அழகாக கொண்டு சென்றது சிறப்பு.

ரஷ்யாவில் உயர் பதவியில் இருக்கும் நல்ல மனிதர் அவருடைய கனவு நகரத்தில் வாழ முடிந்தததா? இங்கிலாந்து தொழிலதிபர் KGBயிடம் மாட்டினாரா? இவர்களை இங்கிலாந்து, அமெரிக்க உளவுத்துறைகள் எவ்விதம் கையாண்டன என்று பதைபதைப்புடன் அருமையாக எடுத்திருந்தார்கள். பல நாட்களுக்குப் பிறகு பார்த்த ஒரு நல்ல படம்.

"The Courier" அமேசான் பிரைமில் காண கிடைக்கிறது.


The Banshees of Inisherin

 

படத்தின் சில காட்சிகளைப் பார்த்தவுடனே முழுப்படத்தையும் பார்த்தே தீருவது என்று நானும் ஈஷ்வரும் தீர்மானித்தோம். 2021ல் சென்று வந்த அயர்லாந்தை நினைவூட்டியது பெரும் காரணம் என்றாலும் இந்தப் படத்தில் நடித்துள்ள இரு நடிகர்களின் படங்களையும் பார்த்திருக்கிறோம் என்பதாலும் தான். தேர்ந்த நடிகர்கள். வேறு என்ன வேண்டும்?

ஆரம்பக்காட்சியே அமர்க்களமாக இருந்தது. அயர்லாந்தின் பரந்த நிலப்பரப்பும் ஜொலிக்கும் அட்லாண்டிக் கடலும் நீல வானமும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அழகிய பழங்காலத்து வீடுகளும் கற்களால் எழுப்பப்பட்ட சுற்றுச்சுவர்களும் காட்சிக்குக் காட்சி அழகு சேர்க்கிறது.அந்நாட்டு மக்களின் ஆங்கிலம் வேறு ராகத்துடன் பேச, கேட்க அழகாக இருந்தது. சப்டைட்டில் வசதி இருப்பதால் புரிகிறது மாதவா!

இங்கிலாந்தின் கீழ் அயர்லாந்து இருக்கும் பொழுது உள்ளூர் சண்டைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை. அங்குள்ள கிராமங்களில் கால்நடைகளை வளர்ப்பது தான் பிரதான தொழில். இங்கும் அப்படியே. நாங்கள் அங்குச் சென்றிருந்த பொழுது சிலரைச் சந்தித்துப் பேசுகையில் பலரும் கட்டிட வேலை செய்பவர்களாக இருந்தார்கள். நகர்ப்புறங்களுக்குச் சென்று வேலை செய்து விட்டு வீடு திரும்புவது வாடிக்கை என்று கூறினார்கள். ஒவ்வொரு ஊரிலும் தேவாலயங்கள் இருந்தது. இந்தப்படத்திலும் ஞாயிறு அன்று தேவாலயத்திற்குச் செல்லும் காட்சிகளில் மட்டுமே சில மனிதர்கள் வருகிறார்கள்.

நீண்ட கால நண்பர்கள் இருவரிடையே வரும் பிரிவினை. தான் என்ன தவறு செய்தோம் என்று புரியாத வெள்ளந்தியான கிராமத்து மனிதன். மன்னிப்பு கேட்டு நட்பை எப்படியாவது தொடர விரும்புபவன். "நீ ஒரு முட்டாள். உன்னோடு என் பொன்னான நேரத்தைச் செலவிட விரும்பவில்லை. இசையில் எதையாவது சாதிக்க விரும்புகிறேன்." என்று சில காரணங்களைக் கூறி திடீரென மாறிவிட்டிருக்கும் இன்னொருவன். இவர்கள் இருவரும் படம் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நடுவில் வேறு சில முக்கிய கதாபாத்திரங்கள்.

இந்த ஊரில் இரண்டு கொலைகள் நடக்கப்போகிறது என்று சூனியக்காரி தோற்றம் கொண்ட பக்கத்து வீட்டுக் கிழவி சொல்வது நடக்கிறதா? வெறுப்பு என்பது எந்த எல்லை வரைச் செல்லும்? மனித மனம் எப்படியெல்லாம் மாறும்? என்பதை அழகாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். அருமையான ஒளிப்படக்காட்சிகள் வேறு படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது.

ஐரிஷ் பின்னணி என்றால் குடிக்கும் காட்சிகள் இல்லாமலா? மது அருந்துவது அவர்களின் கலாச்சாரத்தின் அங்கம். அதன் தொடர்பான காட்சிகளும் வசனங்களும் அருமை. பெரும் நடிகர்கள். அழகான ரசிக்கத்தகுந்த கவிதைகளைப் போல நகரும் காட்சி அமைப்புகள் என்று படத்தை ரசிக்க வைக்கிறது.


(Hulu) ஹுலுவில் வெளிவந்திருக்கிறது. கண்டுகளியுங்கள்😊

Monday, September 11, 2023

இரண்டாவது இன்னிங்ஸ் சாத்தியமா?

அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான ப்ரைமரி தேர்தலில் வெற்றி பெறுபவரே எதிர்வரும் நவம்பர் 2024 அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிட முடியும். தற்போது குடியரசுக்கட்சியின் சார்பில் பலர் களத்தில் இறங்கியிருந்தாலும் ஒரு சிலரே அதிக கவனம் பெற்று வருகின்றனர். இவர்களில் பல குற்றச்சாட்டுகளுக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாகியிருக்கும் முன்னாள் அதிபர் ட்ரம்ப், கடந்த தேர்தல் முடிவுகளில் ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டாத முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ், ஃபுளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ், தொழில்நுட்ப தொழிலதிபர் மற்றும் எழுத்தாளர் விவேக் ராமசாமி, முன்னாள் சௌத் கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி, சௌத் கரோலினா செனட்டர் டிம் ஸ்காட், நியூஜெர்சியின் முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இன்றைய தேதியில் ப்ரைமரி தேர்தல் நடந்தால் முன்னாள் அதிபர் ட்ரம்ப் தான் குடியரசுக்கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக வெற்றி பெறுவார். அவருக்கெதிரான சட்ட சிக்கல்களும் குற்றச்சாட்டுகளும் இருந்த போதிலும் தற்போதைய அதிபர் பைடனை எதிர்க்க சரியான போட்டியாளராக 59 சதவிகித குடியரசுக்கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என வால்ஸ்ட்ரீட் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பு கூறுகிறது. 600 குடியரசுக்கட்சி ப்ரைமரி தேர்தல் வாக்காளர்கடையே நடந்த கருத்துக்கணிப்பில் ஃபுளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸை விட ட்ரம்ப் 46 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் நடத்திய கருத்துக்கணிப்பில் இருந்ததை விட தற்போது ட்ரம்புக்கான ஆதரவு 11 சதவீதம் உயர்ந்துள்ளது! அப்போது 48 சதவீத குடியரசுக்கட்சியினர் அவரை முன்னணி வேட்பாளராக ஆதரித்தனர். அவர் மீதான வழக்குகளின் தீவிரம் அதிகரித்து அவரும் வேளையில் வாக்காளர்களின் ஆதரவும் கூடி வருவது எதிர்கட்சியினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவர் மீது பல குற்ற வழக்குகள் இருந்த போதிலும் அவையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பைடன் அரசாங்கத்தால் போடப்பட்டுள்ளது என 60 சதவிகிதத்திற்கும் மேலான குடியரசுக்கட்சி வாக்காளர்கள் கூறியுள்ளனர். 2020 தேர்தலுக்குப் பிறகு ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி வழக்குகள் தொடுத்த ட்ரம்ப்பின் நடவடிக்கையில் தவறு இல்லை. அவை "துல்லியமான வாக்கெடுப்பை உறுதி செய்வதற்கான சட்டபூர்வமான முயற்சிகள்" என்று ஏறக்குறைய 78 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 16 சதவீதம் பேர் ஜார்ஜியா மாநில வாக்கெடுப்பில் காங்கிரஸை சான்றளிக்க விடாமல் தடுக்க டிரம்ப் சட்டவிரோதமாக முயன்றதாகத் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பிற்கு வாக்களிக்க அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் ஈடுபட்ட 48 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

டிசாண்டிஸ் 13 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும், முன்னாள் சௌத் கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி 8 சதவீத வாக்குகளும் தொழில்நுட்ப தொழிலதிபர் விவேக் ராமசாமி மற்றும் நியூஜெர்சி முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோர் முறையே 5 மற்றும் 3 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தற்போது பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரைமரி தேர்தலில் வென்று அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மத்திய அரசின் முக்கிய பிரிவுகளை மாற்றியமைப்பதாகவும் சமூக பாதுகாப்பு வலைத்திட்டங்களைக் குறைப்பதாகவும் கூறியுள்ளார். பைடன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குத் தொடுக்க ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பதாகக் கூறி தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதாகவும் சபதம் செய்துள்ளார்! நியூயார்க் நகரில் பிறந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ட்ரம்ப் 2016 அதிபர் தேர்தலுக்கு முன் ரியல் எஸ்டேட் டெவலப்பர் மற்றும் தொழிலதிபராக இருந்தவர். "தி அப்ரெண்டிஸ்" என்னும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பிரபலமானவர். நவம்பர் 2022ல் அதிபர் தேர்தலுக்கான முகாந்திரத்தைத் தொடங்கி விட்டார். அதற்கு முன்பே அவர் மீதான வழக்குகளும் தொடங்கி விட்டது. இருந்தும் பைடனுக்கு எதிராகவும் அமெரிக்காவின் சிக்கல்களைத் திறமையாக கையாள்வதில் சிறந்தவராகவும் அவருக்கு ஆதரவும் பெருகி வருகிறது.

ஜனநாயக கட்சியினரால் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சரிவை மாற்றியமைக்க ஃபுளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக மே 2023ல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதிய தலைமுறை தலைவராகத் தன்னை முன்னிறுத்திக் கொள்பவர். தனது மாநிலத்தில் நிர்வாக அதிகாரத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய ஒரு கடினமான தலைவராக அறியப்படுபவர். கொரோனா காலத்தில் பள்ளிகளை விரைவாக திறந்தது, முகக்கவசம், கோவிட் தடுப்பூசி தேவைகளைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்தது என பைடன் அரசின் கட்டுப்பாடுகளை மீறிய மாநில ஆளுநர் என்பதால் கட்சியினரிடையே அதிக கவனம் பெற்றவர். ட்ரம்ப்பிற்குத் தொடரும் ஆதரவால் குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அதிபர் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் பயின்றவர். ஜட்ஜ் அட்வகேட் ஜெனரலாக (JAG) கடற்படையில் பணிபுரிந்தவர். அதிபர் ஜோ பைடன் மற்றும் காங்கிரஸில் ஜனநாயக கட்சியினரால் முன்வைக்கப்பட்ட பல பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைத்து நாட்டைப் பொருளாதார சீரழிவிலிருந்து மீட்கப்போவதாக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஃபுளோரிடாவில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார் டிசாண்டிஸ். இதனால் அமெரிக்க நிறுவனங்கள் முக்கியமான தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வது தடுக்கப்படும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது துணை நிறுவனங்களுக்கு விவசாய நிலங்கள் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவுடனான நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை மாற்றியமைக்கவும் திருடப்பட்ட அறிவுசார் முறைகளால் செய்யப்பட்ட பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்யவும் சீனாவின் முன்னுரிமை வர்த்தக நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும் விரும்புகிறார். கல்வித்துறை, எரிசக்தித்துறை,
குடியேற்றப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளாக இடதுசாரி சிந்தனைக்கு எதிரான பல திட்டங்களையும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். இவர் தீவிர வடதுசாரி சிந்தனை கொண்டவர். பல கொள்கைகளில் முன்னாள் அதிபருக்கு உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் இந்தியர்கள் பலரின் கவனத்தைப் பெற்றுள்ள இந்திய அமெரிக்கரான விவேக் ராமசாமி பிப்ரவரி 2023ல் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை பிரகனப்படுத்தி போட்டியில் பங்கேற்றுள்ளார். தற்போது மூன்றாம் இடம் நோக்கி முன்னேறி வரும் விவேக் இடதுசாரி கொள்கைகளுக்கு எதிரானவராக, இளைய தலைமுறை வாக்காளர்களை குடியரசுக்கட்சியில் இணைப்பதில் தீவிரமாகச் செயல்படுபவர். ஊழலுக்கு எதிரானவர். 38 வயதான விவேக் குடியரசுக்கட்சியின் தேர்தல் களத்தின் இளைய வேட்பாளர். “Nation of Victims: Identity Politics, the Death of Merit, and the Path Back to Excellence” and “Woke, Inc.: Inside Corporate America’s Social Justice Scam.”புத்தகங்களை எழுதியவர். இந்து மதத்தைப் பின்பற்றுபவர். ஓஹையோ மாநிலத்தில் சின்சினாட்டி நகரில் பள்ளிப்படிப்பை முடித்து ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டமும் யேல் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். அவரது மனைவி, அபூர்வா, ஓட்டோலரிஞ்ஜாலஜியில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர், அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

"ரோவியண்ட் சயின்சஸ்" என்னும் உயிரி தொழில்நுட்பவியல் தனியார் நிறுவனத்தையும் 'Strive Asset Management' என்ற முதலீட்டு மேலாண்மை நிறுவனதையும் நிர்வகித்த தொழிலதிபர். சமூக ஆர்வலர். "அமெரிக்கா ஃபர்ஸ்ட் 2.0" என்பது இவருடைய அரசியல் தாரக மந்திரம். இன்று நாடு எதிர்கொண்டிருக்கும் மிக அழுத்தமான பிரச்சினைகள், இழந்த பொருளாதாரத்தை மீட்டு கம்யூனிச சீனாவிலிருந்து சுதந்திரம் பெறுவது வரை விவேக்கின் பார்வை தேசிய மறுமலர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

முன்னாள் சௌத் கரோலினா கவர்னர் நிக்கி ஹேலி குடியரசுக்கட்சியில் புதிய தலைமுறை தலைமைக்கு அழைப்பு விடுத்து பிப்ரவரி 2023ல் தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் தெற்கு எல்லையை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும் ஹேலி, ப்ரைமரியில் வெற்றி பெற்றால் முதல் பெண் மற்றும் அதிபர் பதவிக்கு குடியரசுக்கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையைப் பெறுவார். 2004ல் சௌத் கரோலினா ஹவுஸுக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அம்மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக 2011ல் அவர் பதவியேற்றபோது நாட்டின் இளைய ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார். முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கீழ் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக 2017ல் பதவியேற்று 2018 வரை தொடர்ந்தார்.

சௌத் கரோலினாவின் பாம்பெர்க்கில் இந்திய பெற்றோர்களுக்குப் பிறந்தார். கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு முடித்தவர் அங்கு தனது கணவர் மைக்கேல் ஹேலியைச் சந்தித்தார். சௌத் கரோலினா இராணுவ தேசிய காவல் படையின் சார்பாக 2013ல் ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய மைக்கேல் தற்போது ஒரு வருட பணிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஹேலிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் ஒரு பாரம்பரிய பழமைவாதி. அமெரிக்க கடனை நிர்வகிக்கவும் உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும் நட்பு நாடுகளுடான ஆதரவைப் பராமரிக்கும் கொள்கைகளை முன்வைக்கிறார். தனது கிறிஸ்தவ நம்பிக்கை, கருக்கலைப்பு, சிறார்களுக்கான பாலின மாற்ற சிகிச்சைக்கு எதிரான எதிர்ப்பைப் பற்றி வெளிப்படையாகவே பேசியுள்ளார். ஜூன் 2023ல் GOP நியமனத்திற்கான தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதன்மை போட்டியாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் 2020 தேர்தலுக்குப் பிறகு தனது நடவடிக்கைகளுக்காக "ஒருபோதும் ஜனாதிபதியாக இருக்கக்கூடாது" என்று கூறினார். ஜோ பைடனின் வெற்றிக்கான காங்கிரஸின் சான்றிதழை மேற்பார்வையிடும் துணைத் தலைவர் என்ற முறையில், ஜனவரி 6, 2021 அன்று தேர்தல் முடிவை மாற்றுவதற்கான ட்ரம்பின் வேண்டுகோளை பென்ஸ் நிராகரித்ததால் இருவரும் வெளியேறினர். முன்னாள் வானொலி பேச்சு தொகுப்பாளரான பென்ஸ், 2012ல் இந்தியானாவின் 50வது ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினராக ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியானா பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவர். அவருக்கும் அவரது மனைவி கரேன் என்பவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

முன்னாள் நியூஜெர்சி கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி இரண்டாவது முறையாக அதிபர் தேர்தல் போட்டியில் இறங்கியுள்ளார். ஜூன் 2023ல் நியூஹாம்ப்ஷயரில் உள்ள டவுன் ஹாலில் தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கி ட்ரம்ப்பை நேரடியாக எதிர்கொள்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். மற்ற முக்கியப் பிரச்சினைகளுக்கிடையில் அவரது சட்ட சிக்கல்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து GOP முன்னோடியை மீண்டும் மீண்டும் தாக்கிப் பேசிவருகிறார். முன்பு 2016 GOP ப்ரைமரியில் இருந்து வெளியேறிய பிறகு ட்ரம்ப்பை ஆதரித்து 2020 மறுதேர்தல் பிரச்சாரத்தின் போது அவருக்கு நெருக்கமான ஆலோசகராகப் பணியாற்றினார். 2020 தேர்தல் முடிவுகளைப் பற்றிய முன்னாள் ஜனாதிபதியின் தவறான அறிக்கைகள், முடிவுகளை மாற்றியமைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பிறகு ட்ரம்பை எதிர்த்து குரல் கொடுக்கும் குடியரசுக்கட்சி விமர்சகர்களில் ஒருவரானார். கிறிஸ்டி 2009ல் கார்டன் மாநிலத்தின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முறை ஆளுநராகப் பதவி வகித்தவர் பிரிட்ஜ்கேட் ஊழல், 2017 மாநில அரசு பணிநிறுத்தம் எதிர்ப்பின் காரணமாக 2018ல் பதவியை விட்டு வெளியேறினார். 2002 முதல் 2008 வரை நியூஜெர்சியின் அரசு வழக்கறிஞராக ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ.புஷ்ஷின் கீழ் பணியாற்றினார். ஊழலில் கடுமையானவர் என்ற நற்பெயரைப் பெற்ற கிறிஸ்டி 1987ல் செட்டான் ஹால் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றவர். மேரி பாட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

சௌத் கரோலினா செனட்டர் டிம் ஸ்காட், செனட்டில் உள்ள ஒரே ஒரு கறுப்பின குடியரசுக்கட்சி உறுப்பினர். கொள்கை ரீதியான பழமைவாதி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஸ்காட், மே 2023ல் அதிபர் தேர்தலில் தன்னை இணைத்துக் கொண்டார். 1994ல் சார்லஸ்டன் நகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 2010ல் அமெரிக்க காங்கிரஸிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு சௌத் கரோலினா காங்கிரஸில் பணியாற்றினார். 2013ல் நிக்கி ஹேலி அவரை காலியாக இருந்த செனட் இருக்கையை நிரப்ப செனட்டராக நியமித்தார். செனட்டில் பால்மெட்டோ மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் கறுப்பின நபர் என்ற பெருமையைப் பெற்றார். வடக்கு சார்லஸ்டனில் பிறந்த அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவரான ஸ்காட், சார்லஸ்டன் சதர்ன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றவர். திருமணமாகாதவர். ஒரே மாநிலத்தில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்பதால் நிக்கி ஹேலிக்கும் டிம் ஸ்காட்ட்டிற்கும் பலத்த போட்டி இருந்தாலும் தேசிய அளவில் அறிமுகமான ஹேலிக்கு கட்சியினரிடையே ஆதரவு கூடி வருகிறது.

இவர்களைத் தவிர நார்த் டகோட்டா கவர்னர் டக் பர்கம், டெட் குரூஸ் இன்னும் பலர் போட்டியில் இருந்தாலும் அதிக கவனம் பெற்றவர்கள் வரிசையில் இருப்பவர்கள் ட்ரம்ப்பை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதில் தான் அரசியலே உள்ளது. எப்படி பந்தை வீசினாலும் சிக்ஸர் அடிப்பதில் கில்லாடி முன்னாள் அதிபர் என்பதால் தான் சட்டப்பிரச்னைகளை மீறி கட்சியில் அவருக்கு இன்னும் ஆதரவு உள்ளது. அவரை வெல்வது தான் மற்ற போட்டியாளர்களுக்கு மிகச் சவாலாக இருக்கும்.

அதுவும் தவிர, அமெரிக்கத் தேர்தலில் கட்சி தன்னார்வலர்கள், பிரச்சார உட்கட்டமைப்பு, பணம், விளம்பரங்கள் போன்ற சில காரணிகள் முக்கிய அங்கம் வகிக்கிறது. இவற்றையெல்லாம் தாக்குப் பிடிக்க முடிபவர்களால் மட்டுமே தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியும். இதன் பொருட்டே பலரும் வேட்பாளர் போட்டியிலிருந்து நடுவில் விலகி விடுவார்கள். தற்பொழுது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் மக்களைச் சந்தித்து தங்களுடைய கொள்கைகளை எடுத்துரைத்து ஆதரவைத் தேடி வருகிறார்கள். விரைவில் மாநிலங்களில் ப்ரைமரி தேர்தல்கள் நடைபெற உள்ளது.

எதிர்கட்சி வேட்பாளரான ஜோ பைடனை எதிர்க்கத் தகுதியான குடியரசுக்கட்சி வேட்பாளராக இதுவரையில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் இருந்து வருகிறார். அவருடைய சட்ட சிக்கல்கள் இந்த தேர்தலின் முடிவை மாற்றுமா என காத்திருக்கும் எதிர்கட்சியினருடன் சேர்ந்து நாமும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ட்ரம்ப் ஆட்டத்தில் இருக்கும்பட்சத்தில் மக்களிடையே ஆதரவு குறைந்து வரும் ஜோ பைடனுக்கு சவாலான தேர்தலாகத் தான் இருக்கும்.






Friday, September 1, 2023

ஸ்மைல் ப்ளீஸ்!


மலையாளப் படங்களைப் போலவே மராத்தியிலும் பல அருமையான படங்கள் வெளிவருகிறது. என்னுடைய தாய் பாஷையை ஒத்திருக்கும் மொழி என்பதால் நல்ல படங்கள் என்றால் உடனே பார்த்து விடுவோம். சமீபத்தில் அமேசான் ப்ரைமில் பார்த்த படம் 'ஸ்மைல் ப்ளீஸ்'. புகைப்படம் எடுப்பவருடைய கதை என்பதும் இப்படத்தைப் பார்க்க ஆவலைத் தூண்டியது. மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு கதையை நல்ல செய்தியுடன் கொண்டு வந்ததற்கே பாராட்டலாம். கதாபாத்திரங்களின் அலட்டல் இல்லாத நடிப்பு. அழகான காட்சியமைப்பு. திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்க வேண்டும். இதில் கூடவே மறதி நோய் பற்றின சிறிது விழிப்புணர்வும் இருக்கிறது. சபாஷ்👍

'Still Alice' என்ற ஹாலிவுட் திரைப்படம் மறதி நோயால் பாதிக்கப்பட்டவருடைய வாழ்க்கையை அழகாகச் சித்தரித்திருக்கும். அதில் நடுத்தர வயது கதாநாயகி. ' ஸ்மைல் ப்ளீஸ்' படத்தில் மிகச் சிறிய வயதில் கூட இந்நோய் தாக்கும் வாய்ப்புகள் இருப்பதையும் அவரைச் சுற்றியுள்ள குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, நோயை எதிர்கொள்ள கதாநாயகி தடுமாறுவதையும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் கூட இந்த நோயால் பாதிக்கப்படுகிறவர்களைப் பற்றி ஆழமாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனாலும் 'அல்சைமர்ஸ்' என்று அங்கொன்று இங்கொன்றுமாக பரவலாக கேட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்நோயைப்பற்றி மக்கள் அறிந்து கொள்வதும் அவசியம். அதனால் இந்தப்படம் கவனம் பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன்.

அவரவர் கனவைத் துரத்தி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நோயாளிக்குத் தேவையான கவனத்தையும் அன்பையும் தர வேண்டிய அவசியம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. அந்நிலையிலும் அன்பானவர்ளின் ஆதரவால் கனவைச் சாதிக்க முடியும் என்ற நல்ல செய்தியுடன் நிறைவடைகிறது. அப்பாடா! நமக்கே ஆயிரத்தெட்டு சோதனைகள்! சோகமாக முடிக்காமல் விட்டார்களே என்று மகிழ்ச்சியாக இருந்தது😊 

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை நண்பர்கள் மூலம் கேட்டறிந்திருக்கிறேன். 'Still Alice' படத்தைப் பார்த்தவுடன் எனக்கு அப்படியொரு நிலை வந்தால் எப்படி இருக்கும் என்று உண்மையிலேயே பயந்து போனேன். முன்னெச்சரிக்கையாக குழந்தைகளிடம் கூட பேசினேன். இந்நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் குழப்பங்கள், ஏமாற்றங்கள், தனிமை, விரக்தியை பொறுமையாக கையாளும் மனப்பக்குவம் அவரைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கு அவசியம். அழகான காட்சியுடன் படத்தை நிறைவு செய்ததற்கே விருது கொடுக்கலாம்😊

பொறுமை இருப்பவர்களும் வசதியுடையவர்களும் கிடைத்தால் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எஞ்சிய வாழ்க்கையை ஓரளவு நிம்மதியாக கழிப்பார்கள். மற்றவர்களின் நிலைமை பாவம் தான்😔 இவர்களைக் கையாளுவது அத்தனை எளிதல்லவென பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர் மட்டுமே நன்கு அறிவர். நண்பர் ஒருவரின் தந்தை காணாமல் போய் அவரைக் கண்டுபிடிப்பதற்குள் குடும்பமே பதறிப்போனது. எதிரே நிற்கும் குடும்ப உறுப்பினர் யார் என்றே தெரியாமல் வேற்று மனிதருடன் பேசுவது போல் பேசும் அன்பானவர்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது😢

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டிமென்ஷியா பாதிப்பு 7.4% என்று ஆய்வுகள் கூறுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட 8.8 மில்லியன் இந்தியர்கள் டிமென்ஷியாவுடன் வாழ்கின்றனர். ஆண்களை விட பெண்களிடையே அதிகமாகவும், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகமாகவும் இந்நோய்த்தாக்குதல் உள்ளது. தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அல்சைமர் சங்கம் வெளியிட்டுள்ளது😔

தமிழில் ஏன் இத்தகைய படங்கள் வருவதில்லை என்று யோசித்தால் புரியும். சாதியை ஒழித்து விட்டோம் என்று கொக்கரித்துக்கொண்டே கொம்பு சீவும் 'சாதீய' படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் நிலைமை மாறாத வரை நாம் மலையாளம், மராத்தி, இந்திப் படங்களைப் பார்ப்போம்.

2020ல் மராத்தியில் சிறந்த கதாநாயகிக்கான விருதை இப்படத்தில் நடித்த 'முக்தா பார்வே' பெற்றிருக்கிறார்👏


Tuesday, August 29, 2023

இகிகை

 சொல்வனம் இதழ் 301ல் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை 'இகிகை', அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று ஆராயும் 'Ikigai: The Japanese Secret to a Long and Happy Life'  புத்தகத்தின் விமரிசனம்.


இன்றைய பரபரப்பான உலகில் எதையோ ஒன்றைத் தேடி அது உண்மையிலேயே நமக்குப் பிடித்தமானதா என்று யோசிக்கக் கூட நேரமில்லாமல் காலில் சலங்கையைக் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்கிறோம் என்று பலரும், வாழும் வாழ்க்கையின் பொருளை, நோக்கத்தை உணர்ந்து வாழ்பவர்கள் சிலருமாக இந்த உலகத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அதனால் தான் "ஏன் தான் விடிகிறதோ? இன்றைய நாளை எப்படிக் கடந்து செல்வதோ?" என்று அங்கலாய்த்துக் கொண்டே வாழ்க்கையைக் கடக்க வேண்டிய நிர்பந்தத்தில் பலரும் இருக்கிறோம். ஆனால், சில உள்ளங்களே விடியலுக்காகக் காத்திருக்கும். வாழும் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக அனுபவிக்கும்.

புறக்காரணிகளால் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் அல்லது வாழ்வதாக நினைப்பவர்கள் கூட எதையோ ஒன்றைத் தொலைத்து அது என்ன என்று தெரியாமலேயே வாழ்ந்து முடிக்கிறார்கள். ஆற அமர உட்கார்ந்து எதில் உண்மையான இன்பம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாலே இந்த வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு மனமகிழ்ச்சியாக வாழ முடியும் என்கிறது 'இகிகை'.

இகிகை(Ikigai) என்ற ஜப்பானிய வார்த்தைக்கு "மகிழ்ச்சியாக இருத்தலின் காரணம்" அல்லது "தினமும் காலையில் மகிழ்ச்சியுடன் எழுந்திருக்க ஒரு காரணம்" என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். நாம் ஏன் வாழ்கிறோம் என்று புரியாமலே நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்று தெரிந்து கொள்ளாமலே ஏனோ பிறந்தோம் வாழ்கிறோம் என்றில்லாமல் வாழ்க்கையின் நோக்கத்தையும் அர்த்தத்தையும் கண்டறியும் ஒரு வழியாக சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமடைந்து வரும் ஒரு கோட்பாடு 'இகிகை'. ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கான ஒரு குறிக்கோள் உள்ளது. அது அவர்களின் உணர்வுகள், திறமைகள், மதிப்புகளின் தனித்துவமான கலவையாக இருக்கும். இதுவே அவர்களின் வாழ்க்கைக்கு நிறைவையும் திருப்தியையும் அளிக்கிறது என்கிறது இந்த ஜப்பானியக் கோட்பாடு.

உலகிலேயே அதிக ஆயுட்காலம் உள்ள நாடுகளில் ஒன்றான ஜப்பானின் 'ஒகினாவா' மாகாணத்தில் வாழும் மக்கள், சமூகம் மற்றும் வாழ்க்கை நோக்கத்தின் வலுவான உணர்வைக் கொண்டுள்ளவர்களாக இருக்கின்றனர். இதுவே அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் காரணமாகவும் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. வாழும் வாழ்க்கையில் நிறைவையும் மகிழ்ச்சியையும் தரும் "இகிகை' என்பது அனைவருக்குள்ளும் இருந்தாலும் அதைக் கண்டறிந்து வாழ்பவர்களால் மட்டுமே நீண்ட ஆயுளுடனும் மனநிறைவுடனும் வாழ முடிகிறது.

"Ikigai: The Japanese Secret to a Long and Happy Life" என்பது ஹெக்டர் கார்சியா மற்றும் பிரான்செஸ்க் மிரயெஸ்சால் எழுதப்பட்ட புத்தகம், இது 'இகிகை' பற்றிய கருத்தை ஆராய்ந்து அது எவ்வாறு நிறைவான வாழ்க்கையை வாழ உதவுகிறது என்பதை விளக்குகிறது. இந்தப் புத்தகம் ஜப்பானியத் தீவான ஒகினாவாவில் வசிப்பவர்களுடன் நடந்த நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது. அங்கு பலரும் நீண்ட ஆயுள், மனமகிழ்வுடன் ஒரு சமூகமாக இணைந்து வாழும் கலாச்சாரம் உள்ளது. ஆசிரியர்கள் நடத்திய நேர்காணல்களையும், உளவியல், நரம்பியல், சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் ஆராய்ச்சி செய்து, ஒருவரின் சொந்த இடுகையைக் கண்டுபிடிப்பதற்கான விரிவான மற்றும் அணுகக்கூடிய வழிகாட்டியை முன்வைக்கிறார்கள். "இருத்தலின் காரணம்" அல்லது "காலையில் படுக்கையிலிருந்து உங்களை எழுப்பும் விஷயம்" என வரையறுக்கப்படும் 'இகிகை' என்ற கருத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் புத்தகம் தொடங்குகிறது.

'இகிகை' என்பது நான்கு கூற்றுகளின் கலவையாகும்: நீங்கள் எதை விரும்புகிறீர்கள், நீங்கள் எதில் சிறந்தவர், உலகிற்கு என்ன தேவை, உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்வது? என்பதே அந்த நான்கு அடிப்படை மூலக்கூறுகள். "உங்கள் இகிகையைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு வேலை அல்லது பொழுதுபோக்கைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, மாறாக உங்கள் தனித்துவமான நோக்கத்தையும் வாழ்க்கையின் பொருளையும் கண்டறிவதாகும்" என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். இகிகையின் நான்கு கூறுகள் ஒவ்வொன்றையும் விரிவாக ஆராய்ந்து, வாசகர்களுக்கு அவர்களின் ஆர்வங்கள், திறமைகள், மதிப்புகள் மற்றும் நிதித்தேவைகளை அடையாளம் காண உதவும் நடைமுறைக் குறிப்புகள் மற்றும் பயிற்சிகளை இப்புத்தகத்தில் வழங்கியிருக்கிறார்கள். இந்தச் செயல்பாட்டில் சுய விழிப்புணர்வு, பிரதிபலிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அத்துடன் புதிய அனுபவங்கள் மற்றும் வாய்ப்புகளுக்கான அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர்.

புத்தகத்தின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்று இகிகைக்கும் நல்வாழ்வுக்கும் இடையிலான தொடர்பு. அந்த வலுவான உணர்வு தான் அதிக மகிழ்ச்சி, ஆரோக்கியம், நீண்ட ஆயுளை அனுபவிக்கக் காரணமாக உள்ளது. உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் விவாதிக்கின்றனர். புத்தகத்தின் மற்றொரு முக்கியமான கருப்பொருள் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் கருத்து. "உங்கள் இகிகையைக் கண்டுபிடிப்பது என்பது தனிப்பட்ட நிறைவு மட்டுமல்ல, அதிக நன்மைக்குப் பங்களிப்பதும் உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதும் ஆகும்" என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். "உங்கள் இகிகையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் உங்கள் உறவுகள், பணி மற்றும் சமூகத்தில் அதிக தொடர்பையும் அர்த்தத்தையும் காணலாம்" என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சில அடிப்படை கேள்விகள் மூலமாக நான்கு கூற்றுகளின் குறுக்குவெட்டைக் கண்டறிவதன் மூலம் இகிகையை அடையாளம் கண்டு, நிறைவான நோக்கமுள்ள வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முடியும்.

நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? - எதில் ஒருவர் நிரந்தரமாக மகிழ்ச்சியையும் மனநிறைவையும் பெறுகிறாரோ அந்தச் செயலைக் கண்டறிவதே 'இகிகை'யின் முதல் படி. ஒருவருக்கொருவருக்கு மாறுபடும் இந்தக் கூற்று, ஒருவரின் ஆர்வத்தை/ஆர்வங்களைக் குறிக்கிறது. கலை, இசை, சமையல், நடைப்பயணம், பிரயாணம், வாசிப்பு என்று நீளும் பட்டியலில் எதுவாகவும் இருக்கலாம்.

நீங்கள் எதில் சிறந்தவர்? - ஒருவரின் திறமையைக் கண்டறிவது இரண்டாவது படி. ஒருவரின் தனித்திறன்களைக் கண்டறிவதன் மூலம் நம்பிக்கையையும் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தலாம்.

உலகிற்கு என்ன தேவை? என்று அறிந்து அதற்கான பங்களிப்பை அளிப்பது மூன்றாவது படி. அது அரசியல், பருவநிலை மாற்றம், சுகாதாரம், கல்வி, திரைப்படத்துறை, பொதுப்பணித்துறை, சமூகப்பணி... என்று அவரவர் ஆர்வத்தைப் பொறுத்தது. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வாழத் தேவையான அடிப்படை திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி?- இந்த உலகில் வாழத் தேவையான செல்வத்தைப் பெற திறமைகள் அவசியம். திறமைகளை வளர்த்துக் கொண்டு மேற்கூறிய மூன்று கூற்றுகளையும்
கையாளும் பொழுது வாழ்க்கையின் நோக்கம் தெளிவாகிறது. நோக்கம் தெளிவாகையில் பயணம் எளிதாகிறது. பயணம் எளிதாகையில் மனம் நிறைவு கொள்கிறது. ஆயுள் நீள்கிறது. என்பதைத் தான் 'இகிகை' கற்பிக்கிறது.

இந்த நான்கு கேள்விகளின் பதிலைக் கண்டறிபவர் தன்னுடைய 'இகிகை'யை கண்டறிகிறார். ஒருவரின் உணர்வுகள், திறமைகள், மதிப்புகள், நிதித்தேவைகள் அனைத்தும் சங்கமிக்கும் புள்ளியில் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தையும் அர்த்தத்தையும் காண முடியும் என்கிறது 'இகிகை' கோட்பாடு. ஆனால் அதைக் கண்டறிவது தான் கடினம். அதற்குத் தொடர்ந்து சுய பிரதிபலிப்பும் சொகுசு வாழ்க்கையிலிருந்து சவாலான புதிய விஷயங்களை முயற்சி செய்வதில் ஆர்வமும் தொடர்க்கேள்விகளையும் அதற்கான தீர்வுகளைக் கண்டடைய முயற்சியும் இருக்க வேண்டும்.

ஒருவரின் இகிகையை கண்டுபிடிப்பதற்கான மற்றொரு வழி, அவர்களுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் தரும் செயல்களில் ஈடுபடுவதாகும். ஒருவர் விரும்பும் செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் முன்பு அறிந்திராத புதிய திறமைகளையும் ஆர்வங்களையும் கண்டறியலாம். இகிகையை அடையாளம் கண்டுகொள்வது முதல் படி என்றால் அதை அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைப்பது இரண்டாம் படி. இது தொழில், உறவுகள் அல்லது வாழ்க்கைமுறையில் மாற்றங்களைச் செய்வதைக் குறிக்கிறது. இகிகையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ்வதன் நன்மைகளில் ஒன்று, அது ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் வழிவகுக்கும். வாழ்க்கையின் நோக்கம் மற்றும் அர்த்தத்தின் வலுவான உணர்வைக் கொண்டவர்கள் மனச்சோர்வு, பதட்டம், பிற மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது குறைவு என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
இகிகையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ்வது வாழ்க்கையில் அதிக வெற்றியைத் தருவது மட்டுமில்லாமல் திருப்திக்கும் வழிவகுக்கும். மனதிற்குப் பிடித்த வேலையைச் செய்யும் பொழுது ஏற்படும் உந்துதல் காரணமாக ஈடுபாடும் உற்பத்தித்திறனும் அதிகரிக்கிறது. அதுவே வெற்றிக்கு காரணமாகவும் அமைந்து மனமகிழ்ச்சியைத் தருகிறது.

ஒருவரின் இகிகையை கண்டுபிடிப்பதுடன் மற்றவர்களின் இகிகையை அங்கீகரித்து ஆதரிப்பதும் முக்கியம். இதன் பொருள் அவர்களின் உணர்வுகள், திறமைகள் மற்றும் மதிப்புகளை மதித்து, அவர்களின் நோக்கம் மற்றும் பொருளைப் பின்தொடர்வதில் அவர்களுக்கு ஆதரவளிப்பதாகும். இது ஆரோக்கியமான சமூகங்களையும் சூழல்களையும் உருவாக்குகிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு. தனக்கான சமூகத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நீண்ட ஆயுளுடனும் மனமகிழ்ச்சியுடனும் வாழலாம் என்பதே 'இகிகை' கற்றுத் தரும் பாடம்.

இதை நம் வீட்டுப் பெரியவர்கள் புராணங்கள், வழிபாடுகள், வாழ்க்கைமுறைகளால் வெவ்வேறு விதமாக நமக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு வரையில் கூட இந்த சமூக வாழ்வு சாத்தியமாகத் தான் இருந்தது. நாம் தான் புரிந்து கொள்ளாமல் மாயச்சூழலில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய 'கங்கையை நோக்கிய பயணத்தில்' இமயமலைப் பகுதிகளில் சிறுகிராமங்களில் வாழும் மக்கள் ஒரு குழுவினராக, ஒருவருக்கொருவர் ஆதரவாக தங்களை சுறுசுறுப்புடன் வைத்துக் கொண்டு மகிழ்வுடன் இருந்ததை நேரில் கண்ட பொழுது அவர்களின் 'இகிகை'யை அறிந்து அவர்கள் வாழ்வதாகவே தோன்றியது.

"இகிகை: நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய ரகசியம்" என்ற புத்தகம் நிறைவான வாழ்க்கையை வாழ விரும்பும் எவருக்கும் நடைமுறை ஆலோசனைகளையும் நுண்ணறிவுகளையும் வழங்குகிறது. தனிப்பட்ட கதைகள், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒருவரின் சொந்த இகிகையை கண்டுபிடிப்பதற்கான விரிவான மற்றும் அணுகக்கூடிய வழிகாட்டியை வழங்கியிருக்கிறார்கள் புத்தக ஆசிரியர்கள்.

இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைத்த நண்பருக்கு நன்றி.

நூலகத்தில் பல நாட்கள் காத்திருந்து வாங்கி வந்து வாசித்த புத்தகம். அடிக்கடி இந்தப் புத்தகத்தை வாங்கி படித்ததைப் பார்த்து நூலகத்தில் வேலை செய்யும் பெண்மணி, "மிக நல்ல புத்தகம். நானும் பலமுறை வாசித்திருக்கிறேன். பலரும் இந்தப் புத்தகத்திற்காக காத்திருக்கிறார்கள்." என்று கூறும் பொழுது நான் அடிக்கடி எடுத்துச் செல்லும் காரணம் என் கண் முன்னே வந்து சென்றது. அது எனக்கு மட்டுமே தெரிந்த பரமரகசியம்😎
புத்தர் ஜாதக கதைகள் 

Saturday, August 12, 2023

ஜெயிலர்

 


'ஜெயிலர்' பத்தி விமரிசனம் பண்ணவில்லையென்றால் சமூகவலைத்தளத்தில் இருந்து என்ன பிரயோஜனம்? இல்லையா மக்களே😎 எத்தனை வயதானாலும் நண்பர்களோடு படம் பார்க்கிறதென்பது ஒரு ஆனந்தம் தான். அதுவும் ரஜினி படமென்றால் அது ஒரு படி மேல் ஜாலி. அதுவும் நியூயார்க்லன்னா சொல்லவே வேண்டாம் 😊 மாலை 7.20காட்சிக்கு முன்பதிவெல்லாம் செய்துகொண்டு ஏழு மணிக்குத் திரையரங்கில் கூடி பார்க்கவேண்டுமே எல்லார் முகத்தையும்! மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 'போக்கிரி ராஜா', சிவம் திரையரங்கில் 'முரட்டுக் காளை', நடனாவில் 'தம்பிக்கு எந்த ஊரு' படங்கள் நினைவிற்கு வந்தது. முன்பதிவு செய்யும் வசதிகள் இல்லாத காலத்தில் கூட்டத்தில் முண்டியடித்து டிக்கெட் கைக்கு கிடைத்தவுடன் வரும் உற்சாகம் இருக்கிறதே! அது தனி சுகம்! பிறகு கல்லூரி படிக்கும் காலங்களில் நண்பர்களுடன் போகும் பொழுது என்று அந்தச் சின்ன சின்ன சுகங்கள் எல்லாம் தொலைந்து விட்டது. அதனால் கூட்டமாக நண்பர்களுடன் திரையரங்கிற்குச் சென்று பார்ப்பதே சுகானுபவம் ஆகிவிட்டிருக்கிறது!

கையில் செல்ஃபோன் வைத்திருந்தால் அடிக்கடி படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாடி நரம்புகளில் ஏறிவிட்டிருக்கிற உணர்வு. மறக்காமல் குழுப்படங்கள் எடுத்தாகி விட்டது. என்ன! பெரிய ரஜினி படச் சுவரொட்டிகள் தான் மிஸ்ஸிங்.

அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். ஆளுக்கொரு சீட்டியுடன். பொண்ணுங்க இப்படியெல்லாம் ரவுடி மாதிரி விசில் அடிக்கக் கூடாதுன்னு அடிச்சு வளர்த்ததால இயற்கையா விசிலடிக்கிறதும் மறந்து போய் விட்டது. சே! விசில் அடிச்சே பாட்டுப்பாடும் பாடகியை இந்த உலகம் இழந்து விட்டது! என்னத்த சொல்ல😉 இன்று வரையில் தொடருகிறது அதற்கான முயற்சிகள் என்பது வேறு விஷயம்.

கொஞ்ச நேரம் விளம்பரங்கள் போட்டு கழுத்தறுப்பான்னு பார்த்தா... டபக்குன்னு ஐங்கரன் படத்த போட்டுட்டான்! அவ்வளவு தான் விசிலு சத்தம்!! பாவம் ஈஷ்வர்! முன்வரிசையில் மீனா கையைத் தட்டிக் கொண்டு செம உற்சாக ஆட்டம்.

படத்தின் முதல் பாதி தாத்தாவாக பேரனுடன் ரஜினிக்கே உரிய ஜாலி குட் ஃபெல்லொ ஆக்ட். படுகச்சிதமாக இருந்தது. பேரனாக நடித்த சின்னப்பையன் சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலம். அவனைப் பார்த்தவுடனே அனைவருக்கும் ஒரே சந்தோஷம். அழகான குடும்பமாக காண்பிக்கிறார்கள் அதுவும் ஒரு காவல் அதிகாரி வீடு என்றால் கதை எப்படி போகும் என்பது தமிழ்ப்படங்களைப் பார்ப்பவர்கள் எளிதில் கற்பனை செய்து கொண்டுவிடலாம். நாமெல்லாம் புள்ளி வைத்தால் கோலம் போடுபவர்களாச்சே😉

கதை ஆரம்பமானது. இத்தனை வன்முறை தேவையா? என்னாயிற்று தமிழ் திரையுலகிற்கு! பில்லா,காளி படங்களும் பழிவாங்கல் படங்கள் தான். ஆனால் வன்முறையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூகத்திற்கு நல்லதா? இதைப் பொழுதுபோக்கு என்று கடந்து செல்லவே முடியவில்லை. இதை ஆதரித்து உற்சாகப்படுத்துகிறோமோ என்று தான் தோன்றியது. நேற்று நாங்குநேரியில் பள்ளிக்கூட மாணவர்களிடையே நடந்த கத்திக்குத்து சம்பவம் எப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற பயத்தை உருவாக்கியுள்ளது. சமீபத்திய வன்முறைப் படங்கள் எத்தகைய தாக்கத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? வன்முறையைக் குறைத்திருக்க வேண்டும். அதுவும் மிக நெருக்கத்தில் காதை அறுப்பது, இளநீரைச் சீவுவது போல தலையைச் சீவுவது, கழுத்தை அறுப்பது என்று ரத்த சகதி. சை! நான் தான் தமிழ்ப்படங்களில் இருந்து விலகி விட்டேனோ? ஐயோ! இந்த கொரியன் நாடகங்களைப் பார்த்து இப்படி ஆயிட்டேனா😍

இனி தான் இந்த காளியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறேன்னு ரஜினி கிளம்பிய பிறகு அதுவும் அந்த திகார் சிறைக்காட்சிகள் 'மூன்று முகம்' ரஜினி அப்படியே ஸ்டைலாக நடந்து வந்தது போல் இருந்தது. ரம்யாகிருஷ்ணனின் படையப்பா வசனம் படம் முழுவதும் ஞாபகத்திற்கு வந்தால் நீயும் ரஜினி ரசிகனே😍 72 வயதிலும் இந்த மனிதரால் ரசிகர்களை உற்சாகப்படுவதால் தான் 'ரஜினி' இன்றும் முன்னணியில் இருக்கிறார்😍 இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அந்த மனுஷன நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறோம்😔 இந்தா! அடுத்த படத்துக்கு கமிட் ஆயிட்டாராம்! என்னவோ போடா மாதவா!

பின் இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் 'எண்டே' தேசத்தைச் சேர்ந்தவர்கள் போல. மோகன்லால் வரும்பொழுதெல்லாம் ஒரே கைத்தட்டல் தான். ரஜினி மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்குன்னு பேசி வியாபாரத்துக்கும் வியாபாரம் ஆச்சு. சன்டிவிக்காரனுக்குப் பணமும் ஆச்சு.

ஒரு நேர்மையான அதிகாரி யாருக்கும் பங்கம் வராமல் தந்திரமாக வில்லன்களை அழிப்பது தான் கதை. தன் கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் அது அவனது மகனாகவே இருந்தாலும் போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பான்ங்கிற கதையை ரஜினி ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் நெல்சன். ரஜினிய வச்சு சமூகநீதிப்படங்கள்னு அவரை கீழே இழுத்துவிட்ட ரஞ்சித் கும்பல் கொஞ்சம் இந்த இயக்குநர்ட்ட கத்துக்கலாம்.

பொழுதுபோக்கிற்காகத் தான் திரைப்படங்கள் எல்லாம். ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் பணம் கிடைக்கிறது என்பதற்காக வன்முறையைத் தூண்டிவிடும் காட்சிகளில் நடிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கும் சமூக வெறியைத் தூண்டும் அரசியல்வியாதிகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

அந்தப்பாட்டைப் பற்றிச் சொல்லவில்லையென்றால் தெய்வ குற்றமாகி விடும். ஐயோ! தமன்னாவா அது? பாவம்! இப்படி "மெகபூபா மெகபூபா" குத்துப்பாடல் ரேஞ்சிற்கு இறங்கிட்டாரே! செம ட்ரெண்டிங்கில் இருக்கு அந்தப்பாடல்! அதிலும் ஒரு சிலர் ஆட்டம் எல்லாம் கிளாஸ். பலர் ஆடும் ஆட்டத்தைப் பார்த்தால் 'பகீர்' என்று இருக்கிறது. அரைகுறை ஆடைகள் உடுத்திய சிறு வயதுப் பெண்களுடன் டூயட், ரொமான்ஸ், தேவையில்லாத 'பஞ்ச்' டயலாக் என்றில்லாமல் நல்ல கதை, ரஜினிக்கேற்ற படம், அதை ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி எடுத்து வெற்றி கண்டுள்ளது 'ஜெயிலர்' படம்.

 அப்புறம், ஆங்! யோகிபாபு! அவரைப் பார்த்தவுடனேயே சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்! அதிகம் மெனக்கெடமால் உடல்மொழியிலேயே நடிக்கிறார். பரோட்டா சூரிக்குப் பிறகு இப்போதைக்கு சிரிப்பிற்கு இவர் ஒருத்தர் தான் போல. அப்புறம் குடும்பத்தலைவியாக ரம்யாகிருஷ்ணன். இருவரும் கொடுத்த பாத்திரத்திற்கு நடித்திருக்கிறார்கள். வில்லன் நடிகர் அந்த கதாபாத்திரத்தைப் பார்த்து அவரே மிரண்டு விட்டார் போல✌

இந்தப்படத்தை நண்பர்களுடன் டொரோண்டாவில் பார்த்திருந்தால் அந்த அனுபவமே அலாதியாக இருந்திருக்கும். 'பவர்பாண்டி' படத்தை நண்பர்களுடன் டொரோண்டா திரையரங்கில் பார்த்த பொழுது இலங்கைத்தமிழ் மக்கள் அடித்த கமெண்ட்கள் கேட்க ரகளையாக இருந்தது. இந்தப்படத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இன்னும் ஜாலியாக இருந்திருக்கும். அது ஒன்று தான் எனக்கு மிஸ்ஸிங் ஆக இருந்தது.

மற்றபடி, "காதலின் தீபம் ஒன்று ஏற்றினானே என் நெஞ்சில்" என்று இன்றும் ரசிப்பவர்கள் சொல்வதெல்லாம் "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் குறையவே இல்லை."

Tuesday, August 8, 2023

ஸ்வீட் காரம் காஃபி



மூன்று தலைமுறைப் பெண்களைப் பற்றின வாழ்க்கைப் பயணத் தொடர்.

பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையில் அவர்களுக்கென்று கிடைக்கும் நேரம் என்பது அரிது. அதுவும் திருமணத்திற்குப் பின் செக்கு மாடு போல குடும்பம் குடும்பம் என்று கணவன், குழந்தைகள் உலகத்தில் சிக்கி தனக்கென்றிருக்கும் உணர்வுகளைக் கூட அது மறக்கடித்து விடுகிறது. அதனால் தான் புதியதொரு உலகத்தைக் காண்கையில் ஆனந்தப் பெருமூச்சு விடுகிறாள்.

இப்பொழுதெல்லாம் பல பெண்களும் நன்கு உஷாராகி விட்டார்கள். தங்களுடைய நண்பர்கள், அவர்களுடனான பொழுதுபோக்குகள் என்று மாறி விட்டிருக்கிறது. என்ன? பல ஆண்களால் தான் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களின் உலகத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் சுய முடிவு ஓரளவுக்கு எடுக்க முடிகிறது. வீட்டில் இருக்கும் பெண்கள் சிறிது சிறிதாக வெளியே வர முயற்சிக்கிறார்கள்.

கணவனை இழந்த பாட்டியாய் நடிகை லட்சுமி கதாபாத்திரம் மிகவும் அருமை. பொதுவாகவே பாட்டிகளுக்குத் தான் தைரியம் அதிகமாக இருக்கும். வயதின் முதிர்ச்சியோ வாழ்க்கை அனுபவமோ மிகவும் துணிந்தவர்களாக பல பாட்டிகள் இருப்பார்கள். அப்படித்தான் இந்த சுந்தரி பாட்டி. அவருடைய இளமைக்காலத்திலேயே மனதிற்கு விரும்பியவனைத் திருமணம் செய்திருந்தாலும் ஏதோ ஒரு மன நெருடல். இழந்த தன்னுடைய நெருங்கிய நட்பைத் தேடுகிறது அவருடைய மனம். அதற்கான விடையைத் தேடி அவர் தொடங்கும் பயணத்தில் மருமகள் காவேரி பேத்தி நிவேதிதாவுடன் நடக்கும் கலந்துரையாடல்கள். முதல் காட்சியே அருமை. கணவர் இறந்த நாள். மகன் ஏதோ அம்மா கவலையாக இருப்பார் என்று அவன்பாட்டுக்குப் பேசிக் கொண்டிருப்பான். அப்போது லட்சுமி மனதிற்குள்ளே பேசுவதாக வரும் வசனங்கள் அருமை.

கணவனுக்குப் பிறகும் மனைவி என்பவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம். அதே போல, வயதாகி விட்டால் அவ்வளவு தான் என்பது போலத் தான் நாம் நம் பெற்றோரை நடத்துகிறோம். அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறந்து விடுவது எவ்வளவு கொடுமை? நாளை நமக்கும் அதே நிலைமை தான் என்று உணர்ந்தாலே போதும் அவர்களை நன்கு புரிந்து கொண்டு நடக்க ஆரம்பித்து விடுவோம்.

கல்லூரி நாட்களில் சிறகை விரித்து வாழ்ந்தவள் திருமணத்திற்குப் பிறகு கணவன், குழந்தைகள் என்று தன் உலகத்தைச் சுருக்கிக் கொண்டு அவர்களுக்காகவே உயிர் வாழ்பவளாகி விடுகிறாள். பொதுவாகவே குடும்பங்களில் அம்மாவின் இருப்பை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அச்சாக இருந்து குடும்ப சக்கரத்தைச் சுழற்றுபவள் அவளே என்று புரியும் பொழுது காலம் கடந்திருக்கும். நல்ல வேளை! இந்தத் தொடரில் அப்படி இல்லை. அதே போல, திருமணத்திற்குப் பிறகு பெண்கள் பலரும் தங்களுடைய கனவுகளை, அபிலாஷைகளைத் தொலைத்து வேறொரு உலகத்தில் வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். அதையும் சிலர் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். பலர் சந்தர்ப்பம் கிடைத்ததும் மீண்டு வாழ்கிறார்கள்.

மனைவிக்கு ஒன்றும் தெரியாது என்று நடத்தும் பல ஆண்களின் பிரதிபலிப்பாக இந்தப்படத்தில் குடும்பத்தலைவனாக வருபவரின் கதாபாத்திரம். அப்பனுக்குத் தப்பாமல் மகன். அம்மாவை அதிகம் கண்டுகொள்ள மாட்டான்.

தனக்குப் பிடித்த துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மகள். ஆனால் உலகம் ஒத்துக்கொள்ளாத விளையாட்டுத்துறை. அதுவும் அதே துறையில் இருக்கும் காதலனே முட்டுக்கட்டை போடுகிறான். தன் அண்ணனைப் போலவே உலக நடப்பு அம்மாவிற்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பவள். எப்படி தன்னுடைய பிரச்சினைகளில் இருந்து பாட்டி, அம்மா உதவியுடன் வெளிவருகிறாள்?

இந்த கதாபாத்திரங்கள் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழும் சந்தர்ப்பங்கள் அமைந்து தங்களின் பலம், பலவீனத்தைப் புரிந்து கொள்கிறார்கள். நடைமுறையில் சாத்தியமில்லாத தேவையில்லாத ஜவ்வான காட்சிகள் சில இருந்தாலும் பயணத்தில் நாம் காணும் மனிதர்களின் அறிமுகம் தரும் இனிமையான அனுபவத்தையும் பேசுகிறது இத்தொடர்.  இமாச்சல் பிரதேசம், டெல்லி ஒளிப்படக் காட்சிகள் எல்லாம் அருமை. 

மகள், மனைவி, மருமகள்,அம்மா, பாட்டி என்று ஒரு பெண்ணின் வாழ்வில் பல நிலைகள் இருந்தாலும் தனக்கென வாழும் தருணங்களில் தான் அவள் உயிர்ப்போடு இருக்கிறாள். அதுவே அவளின் வாழ்க்கையை முழுமையாக்குகிறது.

நம் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்வதும் சிக்கலாக்கிக்கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எது தேவை என்று உணர்ந்தாலே போதும். வாழ்வு சொர்க்கம்.

தமிழில் எப்பொழுதாவது தான் ஓரளவிற்கு நல்ல பொழுதுபோக்குத் தொடர் வரும். அமேசான் ப்ரைமில் பார்க்கலாம்.


Monday, August 7, 2023

தரம் சுவை மனம்?

மூச்சுக்கு முந்நூறு தடவை 'தமிழ்' 'தமிழ்' என்று முழங்குபவர்கள் அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் தான் மொழியைக் கொலை செய்வதும் அதுவும் ஊடகங்களில் பேசுபவர்களாகட்டும் தலைப்புச் செய்திகளாகட்டும் பிழைகள் இல்லாமல் இருப்பதில்லை. முன்பு அதிக கவனம் எடுத்துக் கொண்டவர்கள் இப்பொழுது 'ஜஸ்ட் லைக் தட்' என கடந்து விடும் அலட்சியப்போக்கு ஆபத்தானது. நேற்று ஜீ தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான பாட்டுப் போட்டியில் ஒரு காட்சி. இட்லி பொடி விளம்பரம். 'தரம் சுவை மனம்' என்று இருந்தது. எனக்குத் தான் தவறாகத் தெரிகிறதோ?

இத்தனை பெரிய நிகழ்ச்சியை எத்தனை பேர் பார்ப்பார்கள்? நிகழ்ச்சியை நடத்துபவர்களின் கவனத்திற்கு இந்த தவறு தெரியாமல் இருந்தது ஆச்சரியமே! இல்லையென்றால் இதை வைத்து ரேட்டிங் கூடும் என்று நினைத்திருப்பார்களோ?

ஊடகங்களின் தரம் காற்றில் பறக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. காட்டுக்கூச்சல் போடும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை, உடலை வைத்துக் கேலிசெய்யும் மலிவான தரக்குறைவான பேச்சுகள், வேறு வழியின்றி வாங்கிய காசிற்கு மௌனியாய் நடுவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

என்னவோ போடா மாதவா!




இசையால் வசமாகா இதயம் எது?


2020ல் கொரோனா வந்தாலும் வந்தது நாம் அனைவரும் வீட்டுச்சிறையில் தனிமைப்பட்டுக் கிடந்ததை மறக்க முடியுமா? வெளியே போக பயம். கடைகளுக்கு, பணியிடத்திற்கு, பள்ளிகளுக்கு என யாரும் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த நாட்களில் எப்படித்தான் பொழுதைப் போக்குவது என்று தொலைக்காட்சிப் பெட்டிகளில் மூழ்கினோம். பலரும் தங்களுடைய புதுத் திறமைகளைக் கண்டறிய உதவிய காலம் அது. தினம் ஒரு சமையல் என்று என் வீட்டுச் சமையலறையில் எப்பொழுதுமே ஏதாவது ஒரு புது உணவு வகையைச் சமைத்துப் பார்த்தோம். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹுலு, டிஸ்னி, ஹெச்பிஓ என்று ஒன்று விடாமல் பார்த்துக் களைத்துப் போனதெல்லாம் நினைவிற்கு வருகிறது. அதிலிருந்து இன்று வரை மீள முடியவில்லை என்பது தான் துயரம். 

அப்பொழுது தான் திருமதி சுபஸ்ரீ தணிகாசலம் என்பவர் பழைய, அருமையான பாடல்களைத் தொகுத்து வழங்கும் 'QFR - Quarantine From Reality' என்ற வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை யூடியூபில் வழங்க, சமூக வலைதளங்களில் பரவி, தினம் ஒரு பாடலுக்காகக் காத்திருந்து பார்க்க ஆரம்பித்தோம். மெல்லிசை மன்னரின் இசையில் தொடங்கி இளையராஜா, ரகுமான் என்று நீண்ட பட்டியலில் அவர் தேர்வு செய்த பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள். அதனை ஒளிபரப்பிய விதம் அனைத்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி விட்டது.

இதனுடைய வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் சுவைபட, மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இசையின் நுணுக்கங்களை, வாத்தியங்களின் கோர்வையை திருமதி சுபஸ்ரீ விளக்கிச் சொன்னதை யாராலும் மறுக்க முடியாது. ஏதோ ஒரு சில காரணங்களினால் பாடல்கள் நம்மை ஈர்த்துவிடுகிறது. அதைச் சொல்லத் தெரியாதவர்களுக்கு இவர் கூறிய விளக்கங்களைக் கேட்டவுடன் ஒருவேளை, இதனால் தான் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்ததோ என்று தோன்றும்.

ஒரு பாடல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒருவித அனுபவத்தைத் தருவது. அதன் வரிகள் ஏற்படுத்திய தாக்கம், படமாக்கப்பட்ட விதம், பிடித்த நடிகர், நடிகையர்களின் நடிப்பு, ஆட்டம், பாடியவரின் வசீகர குரல், இசைக்கோர்ப்பு என்று ஏதாவது ஒன்று நம்மை அறியாமல் நம் மனதில் சிம்மாசனம் போட்டு இடம் பிடித்திருக்கலாம். ஒவ்வொரு பாட்டுடனும் நம் வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒன்று தொடர்புடன் இருந்திருக்கும். அந்த இனிமையான நினைவுகள் மீண்டும் நினைவில் வர, இந்தப்பாடல்கள் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க என்று நன்றாகவே பொழுதுகள் போனது.

இன்று யூடியூபில் எதையோ தேடப் போய் QFRல் மூழ்கி விட்டேன். எத்தனை திறமையான இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை அனாயாசமாக கையாளுகிறார்கள்! இப்படி ஒரு வாத்தியத்தைக் கற்றுக் கொள்ளவில்லையே என்று ஏங்க வைக்கிறார்கள்! பாடுபவர்கள் பலரும் சூப்பர் சிங்கரில் வந்தவர்கள். குரலில் மெருகேறியிருக்கிறது. அவரவர் இடத்திலிருந்து பாடியதைத் தொகுத்து வழங்குவது என்பது அத்தனை எளிதல்ல. அதைப் பொறுப்பாக நிகழ்ச்சியில் தொய்வே ஏற்படாமல் இத்தனை அத்தியாயங்கள் கொண்டு வந்திருப்பதே மிகப்பெரும் சாதனை! கணினி யுகத்தில் எல்லாமே சாத்தியம் என்று உணர முடிந்தது. ஒவ்வொரு வாத்தியங்களையும் தனித்தனியாக வாசித்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு குழுவாக வாசிக்க ஆரம்பித்து என்று வெற்றிகரமாக தொடர்கிறது. வசீகர குரல் மன்னன் திரு.எஸ்பிபி அவர்களின் மறைவு நாளன்று மட்டும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக விடுமுறை எடுத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் சுபஸ்ரீ அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த பல பாடல்களை நாம் அடிக்கடி கேட்டிருந்தாலும் புதுக்குரலில் கேட்க வித்தியாசமாக இருந்தது. இசையால் வசமாகா இதயம் எது? என்று சும்மாவா சொன்னார்கள்😎 அர்ப்பணிப்பு என்பார்களே அப்படியொரு இசைக்குழுவுடன் சேர்ந்து நம்மை மகிழ்வித்து வரும் அந்தக் குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. இந்த நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கி இசைக்கலைஞர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்ற சுபஸ்ரீயின் தூய எண்ணமும் நிறைவேற வாழ்த்துகள். 

வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்

ஒரு அரசு வெற்றிகரமாக ஆட்சியை நடத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் அமைச்சரவை சகாக்களின் பங்குகளும் அதிகம். அதனால் தான் பொறுப்பான, தகுதியானவர...