இன்றைய பரபரப்பான உலகில் குடும்பம், வேலை, உடல்நலம் என்று நம்மை பாடாய்படுத்தும் விஷயங்கள் ஏராளம். குழந்தைகளின் கல்வி என்று வந்தாலே பெற்றோர்களுக்கு ரத்த அழுத்தம் எகிறிப் போகிறது. பள்ளிக்கட்டணம், சீருடை, புத்தகங்கள், டியூஷன், கோச்சிங் என்று நீள்வது நம் சேமிப்பைக் கரைப்பதில் வல்லது. வேலை என்றால் அங்கு பணிபுரிபவர்களோடு நடக்கும் மல்யுத்தம். உயர்பதவியில் இருப்பவர்களுக்குப் பதில் சொல்வதிலிருந்து கூட வேலை செய்பவர்களைச் சமாளித்து ஒவ்வொரு நாளையும் கடப்பது என்பது முள்ளில் நடப்பது போலத்தான். சரி 'அக்கடா' வென்று உட்காரலாம் என நினைக்கும் சமயத்தில் தான் தோள்பட்டை, கழுத்து, இடுப்பு, முட்டி என்று அக்குவேறு ஆணிவேராய் உடல் பாடாய் படுத்தும். இதனால் உண்டாகும் மனஅழுத்தம் தரும் வேதனையைப் போல வேறு எதுவுமிருக்காது. ஏனென்றால் செக்கு மாடு மாதிரி காலை விடிந்ததும் தொடங்கும் இந்த வாழ்க்கை யுத்தம் இரவு தூங்கும் வரையில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நமக்கே நமக்கான நேரங்கள் குறையும் பொழுது தான் வாழ்க்கையை வெறுக்க ஆரம்பிக்கிறோம். இன்று படித்ததில் சிலவற்றை நானும் தொடர்வதால் இந்த மூச்சுமுட்டும் சிக்கல்களில் இருந்து தப்பிக்க முடிகிறது. அதைப் பகிர்ந்தால் சிலருக்கு உபயோகமாக இருக்கலாம் என்பதால் இந்த பதிவு.
1.பிடிக்குதோ இல்லையோ தினமும் நடப்பது மனதிற்கும் உடலுக்கும் நல்லது. அதுக்கெல்லாம் எங்கே நேரம் என்று கேட்க வேண்டாம். அதற்கான நேரத்தை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சோம்பல் நம்மை ஆட்கொண்டுள்ளது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் அரைமணிநேரம் என்பது மெதுவாக காலை மாலை அரைமணிநேரமாக மாறும். நடப்பதில் உள்ள ஆனந்தம், என்னவென்றால் நமக்குத் பிடித்த பாடல்களைக் கேட்டுக் கொண்டே செல்லலாம். ஏதாவது யூடிபில் கேட்க வேண்டுமென்றால் அதற்குச் சரியான நேரம் அது தான். யாரையாவது அழைத்துப் பேச வேண்டுமா? இதை விட நல்ல நேரம் கிடைக்குமா? அதனால் தினமும் நடப்பது நல்லது. நானும் மகளும் தினமும் 10,000 அடிகள் நடப்பது என்று ஒருவரை ஒருவர் கண்காணிக்கத் தொடங்கியுள்ளோம். இதுவும் நன்றாக இருக்கிறது.
2. சில நேரங்களில் எதுவும் செய்யத் தோணாது. அப்படியே மந்தமாக இருக்க வேண்டும் போல் தோணும். ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு நன்றாக தூங்கலாம், பிடித்த புத்தகத்தைப் படிக்கலாம். தோட்ட வேலைகள் செய்யலாம். தொலைக்காட்சியில் படங்கள், நாடகங்கள் பார்க்கலாம். வெளியில் சென்று சாப்பிட்டு வரலாம். அல்லது ஒன்றுமே செய்யாமல் சோம்பேறித்தனமாக விட்டத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். உடலுக்கும் மனதிற்கும் சோர்வு ஏற்படுவது இயற்கை. அதை மதித்து நடந்தால் நமக்குத் தான் நல்லது.
3. முகம் தெரியாத மனிதர்களுக்கு உதவுவது என்றுமே நல்லது. உதவி தேவைப்படுவோர் பலர் உள்ளனர். நம்மால் முடிந்த அளவிற்கு உதவுவதில் எந்த சிரமமும் இருக்காது. நம்மை நம் குடும்பத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டு இருப்பது அவசியம் என்றாலும் நம்மை விட பலர் கஷ்டப்படுகிறார்கள் என்று புரிந்து அவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது அலாதியான மன திருப்தி உண்டாகும்.
4. வெளியில் எங்காவது சென்று யாருடனும் பேசாமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது. எனக்கு மிகவும் பிடித்தமான விஷயமும் கூட. நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களைப் பார்ப்பதும் கவனிப்பதும் கூட நல்ல பொழுதுபோக்கு தான். அது ஒரு பூங்காவாக இருக்கலாம். அங்கே வரும் குழந்தைகள், பெரியவர்கள், விலங்குகள் என்று மனதை அமைதிப்படுத்தும் விஷயங்கள் பல உண்டு. நூலகத்திற்குச் சென்றால் அங்கே இருக்கும் அமைதியில் சிறிது நேரம் புத்தகத்தை வாசிக்கலாம். மாலுக்குச் சென்று கடைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடக்கலாம். இல்லையென்றால் வீட்டு வாசலில், மர நிழலில் அதுவும் எதையாவது ஒன்றைக் கற்றுக் கொடுக்கும். கற்பதற்கான மனநிலை நமக்கு இருந்தால்😀
5. நம்முடைய பிரச்னைகளைக் கையாளுவது எப்படி என்று நண்பர்களிடம் பேசிப் பார்க்கலாம். அதற்கான விடைகளைத் தேடிப் பார்க்கலாம். எந்த ஓரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்று நம்ப வேண்டும். அந்த மனநிலையில் தீர்வுகளை நோக்கியே எண்ணங்கள் நகரும். இல்லையென்றால் பிரச்னையைப் பற்றியே எண்ணி அழுது கொண்டிருப்போம்.
6. அடுத்த நாள் செய்யப் போகும் வேலைகளை முதல் நாளிலேயே திட்டமிட்டு டு-டூ லிஸ்ட் போட்டு வைத்துக் கொண்டால் சிரமம் இருக்காது. நான் பின்தொடரும் வழக்கம். இதனால் பல நேர மணித்துளிகள் மிச்சமாகும். நமக்குத் பிடித்த வேலைகளைச் செய்யவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். முறையான திட்டமிடல் அன்றைய நாளை பிரச்னைகளைச் சமாளித்து இன்பமாக கழிக்க உதவும்.
7. நம்முடைய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்துகொள்வது என்றுமே நல்லது. பலங்கள் தெரிந்து கொண்டால் அதை வைத்து முன்னேற வழிகள் கிடைக்கும். பலவீனங்களை அறிந்துசரி செய்து கொண்டால் வாழ்க்கை எப்பொழுதும் 'இனிமை நிறைந்த உலகமிருக்கு இதிலே உனக்கு கவலை எதுக்கு?' மோடில் சென்று விடும். பலங்களையும் பலவீனங்களையும் ஒவ்வொருவரும் அறிந்து எழுதி வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. வேலையிடத்தில் நடக்கும் வருடாந்திர ரெவியூவில் அக்குவேறாக ஆணிவேராக அலசுவார்கள். அது நிச்சயம் பணியிடத்திலும் நம் சுய முன்னேற்றத்திற்கும் உதவுகிறது. இது அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். பலவீனங்களை பலங்களாக மாற்றிக்கொள்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.
8. ஒரு வேலையை எடுத்துச் செய்யும் பொழுது ஆயிரத்தெட்டு தடங்கல்கள் வரும். அதற்காக துவண்டு விடாமல் சின்ன சின்ன அடிகளாக எடுத்து வைத்து முன்னேறிச் செல்ல எல்லாம் நலமே! உடல் எடையை குறைக்க கிளம்புபவர்கள் துவக்கத்தில் 'தாம் தூம்' என்று டயட், உடற்பயிற்சி என கோலாகலமாக ஆரம்பிப்பார்கள். எடை குறையவில்லை என்றவுடன் விரைவிலேயே சோர்ந்து விடுவார்கள். ஒரு வாரத்திற்கு ஒரு பவுண்ட் குறைந்தாலே வெற்றி தானே? மேலும் குறைக்க என்ன செய்ய வேண்டும் யோசிக்க வேண்டுமே தவிர, மெதுவாக எடை குறைகிறது என்பதற்காக ஒரேடியாக முயற்சியைக் கைவிட்டால் யாருக்கு நஷ்டம்? எதிர்பார்ப்பைக் குறைத்து விடாமுயற்சியில் கவனம் செலுத்த வேண்டும். நான் கற்றுக் கொண்ட பாடம்.
9. ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு கலை தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் புதிதாக கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் வாசிப்பது முதல் வரைதல், வண்ணங்களைத் தீட்டுதல், எழுதுவது, விளையாடுவது என்று எதுவாக கூட இருக்கலாம். ஆனால் நல்ல முறையில் தனியாகவோ நண்பர்கள்,குடும்பத்தினருடனோ பொழுதுபோக்க, மனதிற்கு நிம்மதி கிடைக்கும்.
10. இன்று இப்பொழுது இந்த நொடியில் வாழ்க்கையின் முக்கிய விஷயம் என்னவோ அதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். இதனால் மற்ற தேவையற்ற விஷயங்களில் இருந்து மனதை விலக்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும். தேர்வுக்காலங்களில் படிக்க மட்டுமே செய்ய வேண்டும். கிரிக்கெட், திரைப்படம் என்று இருந்தால் கஷ்டம் தான்.
11. வேலை செய்வது எவ்வளவு அவசியமோ அது போல நேரத்திற்குத் தூங்குவதும் மிக அவசியம். நம் உடல் உறுப்புகள் நன்கு ஓய்வெடுத்துக் கொண்டால் தான் அடுத்த நாள் பிரச்னையில்லாமல் வண்டி ஓடும். இல்லையென்றால் உடல் உபாதையால் அவதிப்பட நேரிடும். குறிப்பிட்ட நேரத்திற்குள் ஃபோன், டிவியை மறந்து தூங்கினால் உடலும் "நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே" என்று துதி பாடும். இன்று பலரும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி கண்கள் தூக்கத்திற்குக் கெஞ்சினாலும் நேரம் சென்று தூங்கி அழுது வடிகிறார்கள். அதனால் எரிச்சலும் ஏமாற்றமும் வீண் மன வருத்தமும் தான் மிஞ்சும். சரி தானே?
12. சிலர் வாழ்க்கையை மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டு புலம்புவார்கள். "இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்" அவ்வளவு தான் வாழ்க்கை என்று புரிந்து கொண்டால் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து விட வேண்டும் என்று துடிக்கும் மனம். அப்பொழுது நம்முடைய எதிர்மறை எண்ணங்களும் மாறி இன்பப்பாதையில் பயணிக்க ஆரம்பிக்கும்.
13. "துன்பம் வரும் வேளையிலே சிரிங்க" என்று சொன்னாலும் அழுது விடுவது நல்லது. சில விஷயங்கள் ஆண், பெண் பேதமறியாது. இருவரையுமே போட்டுத் தாக்கும். மனது விட்டு ஒரு பாட்டம் அழுது விட்டு அடுத்த நொடி அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பி விட வேண்டும். "ஐயோ எனக்கு மட்டும் ஏன் இப்படி?" என்று '96' பட ராம் போல 'அங்கேயே தான் இருக்கிறேன்" என்று ஒரே இடத்தில் நின்று கொண்டு இருந்தால் மேலும் மேலும் பிரச்னைகளும் மன அழுத்தமும் நமக்கு வருமே ஒழிய, வேறு எந்த நல்ல விஷயமும் நடக்காது.
14. வாழ்க்கை என்றால் இன்பமும் துன்பமும் கலந்து இருக்கும். இன்பம் வரும் பொழுது வாழ்க்கையைக் கொண்டாடியவர்கள் துன்பம் வரும் பொழுது மட்டும் அத்தனை எதிர்மறை எண்ணங்களுடன் இருப்பார்கள். உலகத்தை, நண்பர்களை, குடும்பத்தை என்று எல்லாவற்றையும் வெறுப்பார்கள். அவர்களுக்குள்ளே, அவர்களை சுற்றி இருக்கும் நல்ல விஷயங்கள் எதையும் பார்க்க மாட்டார்கள். அவர்களை விட கொடுமைகளை அனுபவிப்பவர்ககளை நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். நமக்குத் துன்பம் வருகையில் எப்பொழுதுமே நம்மை விட அதிக துன்பத்தில் சிரமப்படுபவர்களைப் பார்த்து அமைதி கொண்டு விரைவில் வெளிவரும் வழிகளைக் கண்டறிய முயல வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை நரகமாகி விடும்.
15. முன்பெல்லாம் டைரி எழுதுவது ஒரு சிலரின் வழக்கமாக இருந்தது. இப்பொழுது கணினியிலேயே கூட எழுதிவிடலாம். ஆனாலும் சில நிமிடங்கள் உட்கார்ந்து அந்நாளினை ஆசை போட்டு அன்று நடந்த நல்லது கெட்டது எழுத ஆரம்பித்தால் மனம் விட்டுப் பேசியது போன்ற தெளிவு கிடைக்கும். மனம் அமைதியாய் இருக்கும் பொழுது நாம் எழுதியவைகளை மீண்டும் படிக்க, தெளிவு பிறக்கும். பின்வரும் நாட்களில் நம்மைத் திருத்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். நிச்சயம் பின்பற்றிப் பாருங்கள். நாம் நன்றி கூற எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. அதற்கெல்லாம் நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. என்ன போராட்டமான வாழ்க்கையாக இருந்தாலும் காலையில் உயிரோடு எழுவதே நாம் செய்த புண்ணியம் தான். சிலருக்கு பிரச்னையில்லாமல் கக்கா போவதே ஆனந்தமான விஷயம். உட்கார்ந்த இடத்தில் காபி கிடைத்தால் பேரதிர்ஷ்டம். இப்படி ஆனந்தமடைய எத்தனையோ விஷயங்களை எழுத ஆரம்பித்தால் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இல்லையென்றால் அடுத்தவரைப் பார்த்துப் பொருமிக் கொண்டு தான் இருப்போம்.
16. நம் வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்வதும் பிரச்னைகளில் சிக்கிக்கொள்வதும் நம்மிடம் தான் உள்ளது. நமது வாழ்க்கை நமது பயணம். மற்றவரைப் போல வாழ முற்படாமல் நமக்கான வாழ்க்கையை வாழ முயன்றால் அதுவே சுகம் இல்லையென்றால் சுமை தான். வாழ்க்கைப் பயணத்தில் நிரந்தரம் என்று எதுவுமில்லை. எல்லாமே ஒரு பயணம் போல தான். இதுவும் கடந்து போகும் என்று உணர்ந்து கொண்டால் எல்லாம் நலமே!
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment