Tuesday, June 6, 2023

ரிஷிகேஷ்

 எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது. ஒன்பதாவது தொடராக பத்ரிநாத்-ரிஷிகேஷ் பயணம் பற்றிய கட்டுரையை சொல்வனத்தில் படிக்க இங்கே சொடுக்கவும் ரிஷிகேஷ்

 

இந்தியாவின் ஆன்மீக தலங்களில் ஒன்றான ரிஷிகேஷ், உத்தரகாண்டில் உள்ள ஒரு சிறிய நகரம். இமயமலையின் அடிவாரத்தில் கங்கைக்கரையோரத்தில் அமைந்துள்ள ஊரின் இரு கரைகளிலும் மடங்கள், யோகா, ஆயுர்வேத நிலையங்கள், கோவில்கள் நிறைந்து இருக்கிறது. மனநிம்மதியைத் தேடி பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் இருந்து இங்கு வருகிறார்கள். “உலகின் யோகா தலைநகரம்” என்று அழைக்கப்படும் ரிஷிகேஷில் யோகா, தியானம், ஆன்மீக பயிற்சிகள் பற்றிய படிப்புகள் கற்றுத் தரப்படுவதால் இந்தியர்கள் மட்டுமன்றி வெளிநாட்டினர் பலரும் தங்கள் பயிற்சியை ஆழப்படுத்தவும், யோக வாழ்க்கைமுறையில் வாழ, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் இங்கு வருவதால் பல வெளிநாட்டினரையும் பார்க்க முடிகிறது.

அவர்களும் இங்குள்ள உணவு, உடைக்கு மாறியிருக்கிறார்கள். பேரம் பேசி பொருட்களை வாங்குவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. சிலர் ஹிந்தியிலும் நன்கு பேசுகிறார்கள்! தமிழ்நாடு சென்று படிக்க ஒரு அமெரிக்க மாணவி என்னிடம் தமிழைக் கற்றுக் கொடுக்கச் சொல்லி வகுப்புகள் எடுத்துக் கொண்டாள். ஈஷ்வரின் அமெரிக்க நண்பர்கள் சிலர் தமிழில் நன்கு பேசி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்! அவர்கள் தமிழ்நாட்டில் பல வருடங்களாகத் தங்கி ஆசிரியர் பணி செய்தவர்கள். அடிக்கடி தமிழ்நாடு சென்று வருபவர்களும் கூட! ஒரு நாட்டிற்குச் செல்வதற்கு முன் அந்த நாட்டைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டு தான் செல்கிறார்கள். நம் ஆட்கள் தான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டினர் தானே என்று ஏமாற்ற நினைத்தால் ஏமாந்து தான் போவார்கள்.

நாங்கள் தங்கியிருந்த ‘ஹோட்டல் கங்கா ஃபாரெஸ்ட் வியூ’ விடுதியின் முன்வாசல் வழியே வெளியே வந்தால் “மா கங்கா” ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாகத் ததும்பிச் சென்று கொண்டிருந்தாள். ஆற்றை ஒட்டி ‘அஸ்தபாத்’ நடைபாதையில் பறவைகளும், குரங்குகளும், கால்நடைகளும், நாய்களும் மனிதர்களுடன் மனிதர்களாக உலா வந்து கொண்டிருக்க, மந்திகளின் சேட்டை கொஞ்சம் அடாவடியாகத் தான் தெரிந்தது! ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்கள் கலந்த நீண்ட அலகுடன் இதுவரையில் நாங்கள் கண்டிராத ‘ஹார்ன்பில்’, அதுவும் ஒரே நேரத்தில் மூன்று பறவைகளை மரத்தில் பார்த்த எங்களுக்குப் பரம சந்தோஷம். மறக்காமல் ‘க்ளிக்’கிக் கொண்டோம்😎

ரிஷிகேஷிலும் ‘சௌராஷ்ட்ரா ஆசிரமம்’ ஒன்று நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து பத்து நிமிட நடையில் இருந்தது! அம்மாவும் அப்பாவும் அங்கே தங்கியிருந்ததாக முன்பே சொல்லியிருக்கிறார்கள். ஈஷ்வரின் நண்பர் ஒருவரும் மதுரையிலிருந்து அடிக்கடி இங்கு வந்து ஆசிரமத்தை நிர்வகிக்கிறார். நாங்கள் வருவதை அவருக்குத் தெரிவித்தவுடன் கண்டிப்பாக அங்கு வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, நாங்களும் மாலை நான்கு மணியளவில் அங்கு சென்றோம். வெயில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

விடுதியிலிருந்து கங்கைக்கரையோரம் முழுவதும் செல்லும் நீண்ட நடைபாதை குப்பைகள் இன்றி நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது. பெரிய பெரிய மரங்கள். ஆற்றங்கரை படிக்கட்டுகளின் ஓரம் சிறு கோவில்கள் அந்தச் சூழலை மேலும் ரம்மியமாக்க, நடைபாதையின் நடுநடுவே வரும் செங்குத்தான படிகளில் மேலேறினால் சிறிய, குறுகிய தெருக்களில் பெரிய வீடுகள்! அதிர்ஷ்டசாலிகள்! தினமும் புண்ணிய நதியைத் தரிசிக்கும் பாக்கியவான்கள்! வீடுகளைக் கடந்தால் பிரதான ‘வீரபத்ர’ சாலை. இருபுறமும் மரங்கள். ஏகப்பட்ட மருந்தகங்கள், பல்பொருள் கடைகள், விடுதிகள், புழுதியைக் கிளப்பிக் கொண்டுச் செல்லும் எலெக்ட்ரிக் ரிக்க்ஷா, இரண்டு, நான்கு சக்கர வண்டிகள், தள்ளுவண்டியில் காய்கறி, பழங்களை விற்பவர்கள் என சாலைக்காட்சிகளுக்கு குறைவில்லை. இந்த களேபரத்தில் சாலையோரத்தில் குடிசையைப் போட்டுக் கொண்டு இரும்புச்சாமான்களை விற்றுக் கொண்டிருந்தது சில குடும்பங்கள். சிரித்த முகத்துடன் சமைத்துக் கொண்டிருந்த பெண்களும் உணவருந்திக் கொண்டிருந்த ஆண்களும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் சிரிப்பொலியும் என்று அழகான சின்னஞ்சிறிய உலகம்! தார்ப்பாய் கூடாரம். மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல். திறந்த வெளியில் தான் வாழ்க்கை. ஆனாலும் கேலியும் கிண்டலுமாகப் பேசி சிரித்துக் கொண்டு ஈக்கள் மொய்க்கும் இடத்தில் வாழ்கிறார்கள்! “மகிழ்ச்சி என்பது அந்தந்த நொடிகளில் வாழ்பவர்களுக்கே சொந்தம்”. சாத்தியப்படுத்திக் கொண்டிருந்த மனிதர்களிடம் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம்! ம்ம்ம்…

இவர்களை வேடிக்கைப் பார்த்து யோசித்துக் கொண்டே வந்தால் மூன்று நிலைகள், அழகான சிற்பங்கள் கொண்ட வண்ண கோபுரத்துடன் முருகன் கோவில் ஒன்று! வட இந்தியாவில் ‘கார்த்திகேயன்’ என்று அழைக்கப்படும் முருகனின் பெயரில் சௌராஷ்ட்ரா ஆசிரமம். இங்கு யார் வேண்டுமானாலும் தங்கலாம். உணவும் இலவசம்(முன்கூட்டியே தகவல் கூறினால் பெரிய குழுவாக வருபவர்களுக்குச் சமைத்தும் கொடுக்கிறார்கள்). தற்போது மின்சார கட்டணம் கட்டுவதற்காக மட்டும் குறிப்பிட்ட தொகையைக் கேட்கிறார்கள். ஆசிரம செலவுகளுக்கு மனமுவந்து அளிக்கும் நிதியுதவியையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் எதிரில் முருகன் சந்நிதி. முருகன் என்றாலே அழகு தானே? சர்வ அலங்காரங்களுடன் மயில்வாகனன் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். காலை, மாலை இருவேளை பூஜைகள் சிறப்பாக நடக்கிறது. நவராத்திரியை முன்னிட்டு அங்கிருந்த தேவி திவ்யமாக காட்சி தந்து கொண்டிருந்தாள். விநாயகர், சிவன், விஷ்ணு, நவக்கிரகங்கள் என்று சிறிய கோவில். முன்பு அங்கு இருந்த தவசிகள் பாதாள அறையில் பல நாட்களுக்குத் தவம் செய்திருக்கிறார்கள். ஈஷ்வருக்கு மிகவும் பிடித்து விட்டது. விட்டால் அங்கேயே அமர்ந்து விடுவார் போல இருந்தார்😮 அதற்குள் அவருடைய நண்பர் எங்களை வரவேற்று அங்கிருந்த மற்ற நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி சுவையான தேநீரையும் வழங்கினார்.

மதுரையிலிருந்து 1940களில் ரிஷிகேஷ் வந்த சௌராஷ்ட்ரா துறவி ராக்கேஷ் ஆனந்தா சிறுகுடிசையில் தங்கி இருந்து படிப்படியாக இந்த ஆசிரமத்தைக் கட்டியிருக்கிறார். பல குருக்களுடன், பிரபலங்களுடன் (ரஜினி, ஸ்ரீஸ்ரீரவிசங்கர்) எடுத்த பழைய படங்களை மாட்டியிருந்தார்கள். நாங்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றின விவரங்களை அறிந்து கொண்டோம். மறுநாள் காலையில் நடைபெறவிருக்கும் விஜயதசமி பூஜைக்கு வருமாறு அழைக்க, நாங்களும் சரியென்று சொல்லி விடைபெற்றோம்.

‘சார்தாம்’ பயணத்தில் பெரும்பாலும் வாழைப்பழமும் ஆப்பிளும் தான் அதிகம் கிடைத்தது. கோவிலின் எதிரே இருந்த பழக்கடையில் எனக்குப் பிடித்த பழங்களைப் பார்த்ததும் ஓடிச்சென்று ஐஸ், சர்க்கரை சேர்க்காமல் ஆளுக்கொரு பழச்சாறு குடித்தோம். அத்தனை சுவையாக இருந்தது😋 மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருக்க, படிகளில் இறங்கி சிறிது நேரம் கங்கைக்கரையோரம் அமர்ந்திருந்தோம். வெயில் கொஞ்சம் குறைந்திருந்தது. காற்றும் வீச, மலைகள் சூழ அமைதியாக ஓடும் நதியின் அழகைப் பார்த்துக் கொண்டு அங்கே அமர்ந்திருப்பதே ஜென் நிலை தான்! எங்கள் விடுதியின் அருகில் கூட ஒரு யோகா மையம் இருந்தது. அங்கே அறை எடுத்துத் தங்கி யோகா வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். அறைகளும் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. நீல வானம் மெதுவாக மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு வண்ணங்களை ஓவியமாய்த் தீட்ட, நதியில் பிரதிபலித்துக் கொண்டே காலையில் இருந்து அனலாய் தகித்துக் களைத்த வசீகரன் அஸ்தமிக்க ஆரம்பித்து விட்டான். மாலை நடை செல்பவர்கள் வியர்க்க விறுவிறுக்க கடமையாக நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு சிலரே அஸ்தமிக்கும் சூரியனை வழியனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

விடுதியில் இருந்து அரைமணி நேரத் தொலைவில் ‘திரிவேணி படித்துறை’ இருக்கிறது. முதன்முதலில் ஹரித்வாரில் கண்ட ‘கங்கா ஆரத்தி’யில் மனதைப் பறிகொடுத்திருந்தோம். அங்கே இருந்தது போல் இங்கும் கூட்டம் இருந்தால் என்று நினைத்து முன்னாடியே போய் நல்ல இடத்தில் அமர்ந்து கொள்ளலாம் என்று நடக்க ஆரம்பித்தோம். வீடுகளையும், விடுதிகளையும், யோகா மையங்களையும், கோவில்களையும் கடந்து கூடவே பவனி வந்த கங்கையுடன் நடந்த களைப்பே தெரியவில்லை. மக்கள் கூட்டம் தெரியும் இடம் தான் படித்துறை என்று தெரிந்தது. காலணிகளை வைத்து விட்டு வில்லையை வாங்கிக் கொண்டோம். கிருஷ்ணன் தேரோட்ட, அர்ஜுனன் அமர்ந்திருக்கும் பெரிய சிலையுடன் கூடிய வளைவு படித்துறையை அலங்கரிக்கிறது. ‘மா கங்கா’ சிலையும் அங்கிருந்தது. கங்கா தீர்த்தம் எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் கேன்கள், பூஜைப்பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.

மழை இல்லாததால் சுத்தமாக இருந்த படிகளில் அமர, ஆளுக்கு 250ரூபாய் கட்டணம் கட்டி ரசீதும் வாங்கியாயிற்று. வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதினரும் அங்கே குழுமியிருந்தனர். மெதுவாக கூட்டம் சேர, ஆறு மணிக்குள் படிகள் முழுவதும் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. அதைத்தவிர மண்டபத்திலும் நல்ல கூட்டம். வார நாட்களில் இந்த கூட்டம் இருந்தால் வார விடுமுறையில் எவ்வளவு இருக்கும்?!

பூஜைக்கான வேலைகள் ஆரம்பமாயின. விதவிதமான தீபாராதனை விளக்குகள், பூஜைப்பொருட்களுடன் 13 பூஜை மேடைகள். ஆராதனை செய்ய இளைஞர்கள் முதல் அனுபவமிக்க ஆச்சாரியார்கள். வரிசையாக படியில் அமர்ந்திருந்தவர்களை அழைத்து கங்கா அன்னைக்குப் பூஜை செய்ய சொன்னார்கள். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆச்சாரியார் மந்திரங்கள் சொல்ல, தேங்காய், பழம், பூக்கள், மஞ்சள், குங்குமம், புதுத்துணி வைத்து மலர்களால் அன்னையை அர்ச்சித்து தீபங்கள் காட்டி பூஜை செய்தது வார்த்தைகளில் சொல்லிட இயலாத உள்ளார்ந்த உணர்ச்சிகரமான அனுபவம்! மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. பல சிந்தனைகளால் மன நிம்மதியற்ற நிலையில் ஆரம்பித்த இந்த யாத்திரையில் ஒவ்வொரு நிமிடத்தையும் முழுவதுமாக அனுபவித்து மன நிறைவு கொண்டோம். இந்த உலகத்தை இயக்கும் பஞ்ச பூதங்களும் ஒருமித்த நிலையில் மக்களின் மனங்களும் பக்தியில் என்று அந்த இடமே பரவசமாக இருந்தது. இயற்கையை ஆராதிக்கும் மனமிருந்தால் போதும். எங்கும் எதிலும் இறைவனைக் காணலாம்.

நன்கு இருட்டிய பிறகு 6.45 மணியளவில் மகா தீபாராதனை ஆரம்பமாகியது. பின்னணியில் அருமையான பஜன்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் இருந்த வட இந்தியர்கள் பலரும் சேர்ந்து பாடியதைக் கேட்க ரம்மியமாக இருந்தது. 13 ஆச்சாரியார்களும் நான்கு திசைகளை நோக்கி ஒரு சேர செய்த தூப, தீபாராதனையின் போது கூட்டத்தில் ‘ஜெய் கங்கா மையா’ கோஷம் மயிர்க்கூச்செறியும் அனுபவம். விளக்கை நம் கைகளில் கொடுத்து ஆராதனை காட்டவும் சொல்கிறார்கள். அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. மகிழ்வுடனும் நிம்மதியுடனும் கூட்டம் கலைந்து பஜனை செய்யும் இடத்தில் கூட்டம் கூடி விட்டது. மக்களைப் பார்த்தவுடன் அவர்களும் உற்சாகமாகப் பாடல்களைப் பாட, இளைஞர்கள் கூட்டம் ஆடிப்பாடிக் கொண்டாட, அங்கே இருந்தவர்களின் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியைக் கூறவும் வேண்டுமா? யாரும் யாரையும் வெறுக்காத மனநிலையில் நான் அங்கு கண்டதெல்லாம் அன்பும் பக்தியும் இன்பமும் மட்டுமே. இந்துக்களாகப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும்! நம்மை மிரட்டிக் கட்டுப்படுத்துபவர்கள் இன்றி நமக்குப் பிடித்த கடவுளை வணங்கிக் கொண்டாட முடிகிறது. இனிய அனுபவத்துடன் கூட்டம் கலைய, காலணிகளை வாங்கிக் கொண்டோம். “காசு கொடுங்கள்” என்று யாரும் தலையைச் சொரிந்து கொண்டு கேட்கவில்லை. மதுரையில் கோவில்களில் காலணிகளை வைக்க இலவசம் என்றாலும் சிலர் கேட்கிறார்கள்.

இரவு உணவிற்கு உணவகங்களைத் தேடிச் சென்ற தெருக்களில் துணிக்கடைகள் ஏராளம். தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்க எனக்கும் கடைக்குச் சென்று துணிகள் வாங்க ஆசை. சாப்பிட்டு விட்டு வரலாம் என்று நினைத்து உணவகங்களைத் தேடினால் அங்கும் கூட்டம்! தள்ளு வண்டிகளில் ஆலு பூரி, பானி பூரி வகைகள் தான் அதிகம் தென்பட்டது. ஓரிடத்தில் இலைகளை மடித்து கிண்ணங்களாக்கி பானிபூரிகளை வைத்து தயிர், விதவிதமான சாஸ்கள் கலந்து நல்ல வியாபாரம். நாங்கள் இளநீர் குடித்து வாழைப்பழம், சப்போட்டா பழங்களை வாங்கிக் கொண்டு மீண்டும் கடைத்தெருவுக்குள் வந்தால் துணிக்கடைகளை மூட ஆரம்பித்திருந்தார்கள். அவசரத்திற்கு இரண்டு குர்த்திகளை மட்டும் வாங்கிக் கொண்டேன். 8.30 மணிக்கெல்லாமா கடைகளை மூடுவார்கள்? என்ன ஊருடா இது? என்று ஏமாற்றமாக இருந்தாலும் காசியில் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானமாகி விட்டேன். ஈஷ்வருக்கு அப்பாடா என்றிருந்திருக்கும். ஆனாலும், “நாளைக்கு வாங்கிக்கலாம்” என்று நல்லபிள்ளையாக சொல்லி விட்டார்.

ஈ-ரிக்ஷாவில் ஏறி விடுதிக்கு வந்து சாப்பிட்டு விட்டு அன்றைய நாளின் இனிமையான பொழுதுகளை அசை போட்டபடி தூங்கி விட்டோம். காலையில் நான் விழிப்பதற்குள் ஈஷ்வர் எழுந்திருந்தார். “வெளியில் வந்து பாரு” என்றவுடன் கேமரா சகிதமாக ஓடினால் மூடுபனி படர்ந்த கங்கா நதி. மேகங்களுக்குள் புதைந்திருந்த சூரியபகவான் வெளியே தலைநீட்ட யோசித்துக் கொண்டிருந்தார். அழகான கவிதையாக காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தது. சிறிது தூரம் நடந்து காலை நேர அதிசயங்களைக் கண்டுகளித்து விட்டு சௌராஷ்ட்ரா ஆசிரமத்தில் நடக்கும் விஜயதசமி பூஜைக்குச் செல்ல தயாரானோம். குழந்தைகள் வருவார்கள் என்று சொல்லியிருந்தார்கள். அதனால் பிரசாதமாக வாழைப்பழங்களை வாங்கிச் சென்றோம். பூக்கள், பத்தி, சமையலறையிலிருந்து வெண்பொங்கல் மணம் மதுரையில் இருப்பது போன்று இருந்தது. எங்களைக் கண்டதும் ஈஷ்வரின் நண்பர் ரகுவும் சேலத்தைச் சேர்ந்த துறவியும் வந்து பூஜையில் கலந்து கொண்டார்கள். ஒரு பெரிய கிண்ணத்தில் நெய், மிளகு மணக்க வெண்பொங்கல். பின் காபி. மதியமும் அங்கே வந்து சாப்பிடுமாறு கூற, அவர்களிடமிருந்து விடைபெற்று சிவானந்த ஆசிரமத்திற்குச் செல்ல ஆட்டோவில் ஏறினோம். பூக்கள், காய்கறி, பழங்கள் விற்கும் சந்தைகள், உணவகங்கள், விடுதிகள், ஆசிரமங்கள் என்று அந்தச் சாலை முழுவதும் மிகவும் பரபரப்பாக இருந்தது.

15 நிமிட தூரத்தில் இருந்தது சிவானந்த ஆசிரமம். போக்குவரத்து நெரிசல். வண்டிகளின் சத்தம். இங்கு எப்படி ஆசிரமத்தை அமைத்தார்கள் என்று யோசித்துக் கொண்டே உள்ளே நுழைந்தால் 120 படிகள்! அய்யோடா! மூச்சு வாங்க ஏறி விட்டேன். அங்கிருந்த சாதுக்கள் சகஜமாக ஏறி இறங்குகிறார்கள்!ம்ம்ம்! வயதானவர்கள், மூட்டு வலி இருப்பவர்கள் தான் பாவம். அம்மா படிகளில் ஏற முடியாததால் கீழேயே உட்கார்ந்து இருந்ததாகவும் அப்பா மட்டும் ஆசிரமத்திற்குச் சென்று வந்ததாகக் கூறியது அப்பொழுது புரிந்தது. வயதானவர்களும் ஏறிச்செல்லும் வகையில் வசதிகளைச் செய்தால் நன்றாக இருக்கும்.

அத்தனைப் படிகளைக் கடந்து வந்தால் பரபரப்பின்றி வேறொரு அமைதியான உலகம் காத்திருக்கிறது அங்கே! நுழைவாயில் தூண்களில் வாழ்க்கையைச் சிறப்புற வாழ கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களைப் பொரித்து வைத்திருந்தது சிறப்பு. சிலவற்றையாவது கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உள்ளே சென்றால் அமைதியான அழகான சிவன் கோவில். அப்பொழுது தான் அபிஷேகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். சுவாமியை வணங்கிவிட்டு வலம் வருகையில் ஸ்ரீஆதிசங்கரர் உருவச்சிலையுடன் குருக்களின் படங்களும் இருந்த மண்டபத்தில் கணீரென்று தமிழில்

“நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க “

என்று கண்மூடி பக்தியுடன் பாடிக் கொண்டிருந்தார்கள் அக்கா தங்கை இருவர். அவர்கள் கணவர்களும் அங்கே இருந்தனர். அடடா! நமக்குத் தெரிஞ்ச நாலு வரிகளாச்சே என்று நானும் வாயசைக்கவும் அந்தப் பெண்களில் ஒருவருடைய கணவர் அவர்களிடம் “இவா நன்னா தமிழ்ல பாடினா” என்று சொல்லவும் நானும் சிரித்துக் கொண்டே தமிழில் பேச ஆச்சரியப்பட்டார்கள். நாம் உடுத்தும் உடையும், போடும் மேக்கப்பும் நம்மை வேற்று ஆட்களாக மாற்றிவிடுகிறதோ? சிரித்துக் கொண்டே என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். சென்னையிலிருந்து டெல்லியில் இருக்கும் அக்கா வீட்டிற்கு வந்திருந்த தங்கை சிவ தீக்ஷை பெற்றிருக்கிறார். ஆன்லைனில் திருவாசகம் பாடல்கள் வகுப்புகள் எடுப்பதாகவும் கூறினார் என்று தெரிந்தவுடன் ஈஷ்வரையும் அறிமுகப்படுத்தி விட்டு வேறு பாடல்களையும் பாடச் சொல்லிக் கேட்க, அவர்களும்

“தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆய மாய காயம் தன்னுள் ஐவர் நின்றுஒன்றல் ஓட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே …”

என்று திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தையும் பாடி மகிழ்வித்தார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தது. நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று விவரங்களைக் கேட்டு அவர்களைப் பற்றியும் சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெற்றோம். அதற்குள் கோவிலில் ருத்ரம் சொல்லிக்கொண்டே அபிஷேகம் ஆரம்பிக்க, அங்கிருந்த சிலருடன் நாங்களும் அமர்ந்து பூஜை முடியும் வரை இருந்தோம். ஈஷ்வர் தியானம் செய்து கொண்டிருந்தார். வெளியில் இருந்த இரைச்சல் தொலைந்து போய் அத்தனை அமைதி அங்கே குடிகொண்டிருந்தது. இதனைத் தேடித்தான் இத்தனை மக்களும் இங்கே ஓடி வருகிறார்களா? அங்கே தங்கி இருந்தவர்கள் முகத்திலும் சாந்தோமோ சாந்தம். பல ஆன்மீக வகுப்புகள் நடக்கிறது. ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு செல்ல மனமில்லாமல் ‘ஆந்திரா ஆசிரமம்’ சென்றோம்.

அழகான திருப்பதி பெருமாள் தரிசனம் ரிஷிகேஷிலும் கிடைக்கிறது. கோவிலில் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் அதிகம் சுற்றிப்பார்க்க முடியவில்லை. அருகே அவர்களின் உணவகம் கூட இருந்தது. அங்கிருந்து அருகிலிருக்கும் ‘இஸ்கான்’ இயக்கத்தைச் சேர்ந்த ‘மதுபான் ஆசிரமம்’ வந்து சேர்ந்தோம். உயர்ந்த அழகான கோவில் கோபுரம். சுத்தமான வளாகம். பளிங்கினால் செய்த ராதா கிருஷ்ணர் சிலைகள். அங்கிருந்து ஜானகி பாலம், மலைகள் அழகாகத் தெரிந்தது. வெயிலின் உக்கிரம் கூடிக் கொண்டே வர, சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்குச் செல்ல ஜானகி பாலத்திற்கு அருகேயே இறக்கி விட்டுச் சென்று விட்டார் ஆட்டோக்காரர். இப்படியே ‘அஸ்தபாத்’ நடைபாதை வழியே கங்கையை ஓட்டிச்சென்றால் ஆசிரமம் வந்து விடும். அந்தப்பாதையில் வண்டிகளை அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறியதால் நடக்க ஆரம்பித்தோம்.

அங்கே சாலையோர தள்ளு வண்டியில் சுடச்சுட பூரி வியாபாரம் கனஜோராக நடந்து கொண்டிருந்தது. அவ்வளவு தான்! ஈஷ்வருக்குச் சாப்பிட ஆசை வந்து நான்கு பூரி, காரமான உருளைக்கிழங்கு சன்னா மசாலா சாப்பிட்டோம். நல்ல சுவையுடன் இருந்தது. விலையும் அதிகமில்லை. எவர்சில்வர் தட்டுக்களில் தான் பரிமாறுகிறார்கள். நெகிழிக் குப்பைகள் குறைவாக இருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. பெரிய உணவகங்களில் கிடைக்கும் உணவுகளின் சுவையை விட பல சாலையோரக்கடைகளில் கிடைக்கும் உணவுகளின் சுவை நன்றாக இருக்கிறது. என்ன? கேட்டாலும் கேட்காவிட்டாலும் காற்றோடு கொஞ்சம் புழுதியையும் சேர்த்துச் சாப்பிடுவோம். இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்று நம்பாட்டுக்கு லபக்கிக்கிட்டே போக வேண்டியதுதான். குழந்தைகளுடன் வந்திருந்தால் இந்த சுதந்திரம் எல்லாம் கிடைக்காது.

அங்கிருந்து சுவாமி தயானந்த ஆசிரமத்திற்குச் செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, எனக்கோ தலைச்சுற்ற, ஈஷ்வர் சட்டைத் தொப்பலாக நனைந்து நடுவழியில் இப்படி மாட்டிக் கொண்டோமே என்று இருந்தது! ஓரிடத்தில் நிழற்குடையின் கீழ் சிறிது நேரம் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது அனுபவித்தால் புரிகிறது! அக்டோபர் மாதமே இப்படி இருக்கிறதே கோடையை நினைத்தாலே பயமாக இருந்தது. மதுரை வெயில் எல்லாம் ஒன்றுமில்லை. வாங்கிய தண்ணீர் பாட்டிலும் காலியாக, தாகம், களைப்புடன் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தோம்.

எதிரே ‘மா கங்கா’. ஆசிரமத்திற்குள் நுழைந்தவுடன் அழகான சிறிய கோவில். உள்ளே மாணவர்களுக்கு வேத மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் குரு. அவர்கள் அனைவரும் கணீரென சொல்வதைக் கேட்க நன்றாக இருந்தது. ஆண்களும் பெண்களும் கோவிலுக்குள் செல்ல உடை விஷயத்தில் கண்டிப்பாக இருக்கிறார்கள். அருகிலேயே சிறிய கட்டடத்தில் பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதிக்குச் சிலை எழுப்பி அங்கே பலரும் தியானித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு உரக்கப் பேசக்கூடாது என்று எழுதி வைத்திருக்கிறார்கள். வெயிலில் நடந்து வந்த களைப்பெல்லாம் ஓடியே போச்சு! மனம் அமைதியானால் சர்வமும் அமைதியாகி விடுவது மாயையோ! பரந்த வளாகத்தில் அழகான குடியிருப்புக் கட்டடங்கள். சுத்தமாக அமைதியாக இருந்தது.அங்கேயே சில நாட்கள் தங்கி விடமாட்டோமா என்று மனம் ஏங்கத்தான் செய்தது!

ஆசிரமத்திற்கு இரு வழிகள் இருக்கிறது. பிரதான சாலைக்குச் செல்ல வேறு வழியில் தெருக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டே நடந்தோம் நடந்தோம் வெகு நேரம் நடந்தோம். முதலில் தென்பட்ட ஆட்டோவைப் பிடித்து பசியுடன் சௌராஷ்ட்ரா ஆசிரமத்திற்குச் சென்றோம். நன்றாக சாம்பார், ரசம் சகிதம் சௌராஷ்ட்ரா சாப்பாடு சாப்பிடலாம் என்று ஆசையாகப் போனால் ரவா கேசரி, பூரி, கொண்டைக்கடலை மசாலா என்று ஏமாற்றி விட்டார்கள்😞 ரவா கேசரி சுவையாக இருந்தது. சாப்பிட்டுச் சிறிது நேரம் பேசி காபி குடித்து விட்டு விடுதிக்குத் திரும்பினோம்.

அப்படியே ஆற்றில் ஒரு குளியல் போட்டால் என்ன என்று உடைகளை மாற்றிக் கொண்டு படித்துறைக்குச் சென்று ஆற்றில் கால் வைத்தால் ‘சில்ல்ல்ல்ல்ல்’ என்று இருந்தது. கங்கையில் முதன் முதலாக குளிக்கிறேன். பார்க்கத்தான் அமைதியாகத் தெரிகிறது. ஆளை இழுத்துக் கொண்டு சென்று விடும் வேகம். ஆழமும் கூட. ஈஷ்வர் பிடித்துக் கொள்ள மூன்று முறை முங்கி எழுந்தேன். முதன் முதலில் ஆற்றில் குளித்தது கர்நாடகாவில் பாகமண்டலா திரிவேணி சங்கமத்தில். இது புது அனுபவம். அதுவும் கங்கையில்! ஈஷ்வரும் குளித்து முடித்த பிறகு மரத்தடிப் பிள்ளையாரை வணங்கி விட்டு விடுதிக்கு வந்து இளைப்பாறினோம். புத்துணர்ச்சியாக இருக்கவே, தேநீருக்குச் சொல்லி விட்டு விடுதியின் முன்னறையில் அமர்ந்திருந்தோம். வெளியில் மந்திகள் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்! “ரொம்ப பக்கத்தில போகாதீங்க” என்று மேனேஜர் வேறு பயமுறுத்தி இருந்தார். அது வேறு சாப்பிட ஒன்றும் கிடைக்காத ஆத்திரத்தில் கோவமாக இருந்தது. முடிந்த மட்டும் படங்களை எடுத்தேன்.

டெல்லியிலிருந்து வந்து அங்கு தங்கியிருந்த ஒரு குடும்பத்துடன் பேசிக் கொண்டிருந்த பொழுது ‘கங்கா ஆரத்தி’ பார்க்க ‘பரமார்த்த நிகேதன்’ ஆசிரமத்திற்குச் செல்லுமாறு கூறினார்கள். சரி என்று மாலையில் அங்குச் செல்ல முடிவெடுத்தோம். அப்பொழுது தான் விடுதிக்குள் நுழைந்த ஒருவர் ஈஷ்வரைப் பார்த்துத் திகைத்த முகத்துடன் உள்ளே வந்தார். பின்பு ஏதோ நினைத்தவராக, “நீங்கள் பாலிவுட் நடிகரா?” என்று கேட்டு ஈஷ்வருக்கா ஒன்றும் புரியவில்லை. என்னைய வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலையேன்னு நினைத்தவராக, “நானா? இல்லையே? இப்பொழுதான் முதன் முதலாக இப்படியொரு கேள்வியை எதிர்கொள்கிறேன்” என்று சிரித்தபடி கூறவும், அந்த நபரும், “எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரது சாயல் உங்களிடம் அப்படியே இருக்கிறது.” என்று படத்தைக் காண்பித்தார். பாவம் ஈஷ்வருக்குத் தான் அந்த நடிகர் யாரென்றே தெரியவில்லை. என்னிடம் கேட்டார். “நான் இவருடைய படங்களைப் பார்த்திருக்கிறேன். உங்களுக்கும் அவருக்கும் சம்பந்தமேயில்லை” என்றேன். ஆனால் அந்த நபர் திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டு கைகுலுக்கி விடைபெற்றார்! இப்படியும் சிலர்!

ஒய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் காலையில் சென்ற வழியே ‘ஜான்கி பாலம்’ வரை வண்டியில் சென்று இறங்கி விட, அங்கிருந்து 15 நிமிட நடை. சைக்கிளில், தள்ளுவண்டிகளில் வைத்து வழியெங்கும் விதவிதமான உணவுக்கடைகள். மக்களும் நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்களும் எண்ணெயில் வறுபட்டுக் கொண்டிருந்த உருளைக்கிழங்குத் துண்டுகளையும் சமோசாக்களையும் வாங்கிச் சுவைத்துக் கொண்டே நடந்தோம். இந்தமாதிரி சிறு தொழில் வியாபாரிகள் ஊர் முழுவதும் தென்பட்டார்கள். கொரோனா காலத்தில் பயணிகள் யாரும் இன்றி இவர்கள் எல்லாம் எப்படிச் சமாளித்தார்களோ!

பாலத்தில் சரியான கூட்டம். நாங்கள் அங்கு போய்ச் சேர, ஆரத்தி அப்பொழுது தான் முடிந்திருந்தது. வந்தது தான் வந்தோம் அந்த ஆசிரமத்திற்குச் செல்லலாம் என்று உள்ளே போனால் அது வேறு உலகமாக இருக்கிறது! குப்தகாசியில் சந்தித்த ரஷ்யப் பெண்மணி ஒருவர் “இந்த ஆசிரமத்தில் தங்கி இருக்கும் அமெரிக்கப் பெண்மணி தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். நல்ல மார்க்கெட்டிங் திறமை இருக்கிறது. ஆனால் அங்கு வரும் இந்தியர்களிடம் அவர்களுக்குத் தெரியாமலே இந்தியாவைப் பற்றின வெறுப்பை விதைத்துக் கொண்டிருக்கிறார்” என்றார்😯 எவ்வளவு தூரம் இதில் உண்மை இருக்கிறது என்பது அந்த ஆசிரமத்தின் நிரந்தர உறுப்பினர்களுக்குத் தான் தெரியும்😑

அங்கு வெளிநாட்டினர், உள்நாட்டினர், மாணவர்கள், சாதுக்கள் என்று நல்ல கூட்டம். பெரிய பெரிய சிவன், விஷ்ணு, ஹனுமன் சிலைகள். மரங்கள், செடிகள் என்று மக்களைக் கவரும் வண்ணம் ஒளியூட்டப்பட்டு பிரம்மாண்டமாக இருந்தது! மிகப்பெரிய வளாகம். கட்டடங்கள் என்று பிரமிக்க வைத்தது! எங்கிருந்தோ சாப்பாட்டின் வாசனை வரவே, மோப்பம் பிடித்துச் சென்றால் அருகிலேயே கேன்டீன் இருந்தது. அங்கே தோசை, இட்லி எல்லாம் கிடைக்கிறது. துண்டைப் போடு என்று ஓரிடத்தில் இடம்பிடித்து உட்கார்ந்து விட்டோம். சட்னி, சாம்பாருடன் சுடச்சுட மொறுமொறு தோசை. ஆகா! தெய்வம் இருப்பது இங்கே மொமண்ட். எதிரில் அமர்ந்திருந்த சாது சிரித்த முகத்துடன் சிநேகபாவத்துடன் களையாக இருந்தார். அவர் பத்ரிநாத் அருகே ஆசிரமம் வைத்திருப்பதாக கூறினார். எங்களுடைய சொந்த ஊர் மதுரை என்றதும் ராமேஸ்வரம் செல்ல அடிக்கடி மதுரை சென்றிருக்கிறேன். நல்ல ஊர் என்றார். அமெரிக்காவிற்கும் அடிக்கடி வருவாராம்! ம்ம்ம்… அவர் எங்களைத் தமிழர்கள் என்று நினைத்து விட்டார் என்று நினைக்கிறேன். “உன் மனைவி குஜராத்தியா” என்று ஈஷ்வரிடம் கேட்க, “இல்லை நாங்கள் சௌராஷ்ட்ரா. இப்படித்தான் அவளை எல்லோரும் கேட்பார்கள்” என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்ல, அதான் அவர் முதலில் என்னிடம் இந்தியில் பேசினாரோ? நான் வேற அச்சா அச்சா. டீக் ஹே என்று பதில் சொல்லி அவரைக் குழப்பிவிட்டேன் போலிருக்கிறது😆 ஹே ராம்!

திருப்தியாகச் சாப்பிட்டு விட்டு வெளியில் படித்துறைக்கு வந்தால் தவக்கோலத்தில் பெரிய சிவன் சிலை! கூட்டம் இல்லாததால் சில பல படங்களை எடுத்துக் கொண்டோம். 2013 வெள்ளத்தின் பொழுது சிவனின் கழுத்து வரை தண்ணீர் அலையடித்து ஆக்ரோஷமாக செல்லும் காட்சி செய்திகளில் பார்த்தது நினைவிற்கு வந்தது! இன்றும் கம்பீரமாக இருந்தார் நீலகண்டன்! ரிஷிகேஷ் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது கங்கையில் இருக்கும் சிவனின் சிலை தான். இக்கரையில் பார்க்க வேண்டிய ஆசிரமங்களும் கோவில்களும் அத்தனை இருக்கிறது. நேரமின்மை காரணமாக எங்களால் பார்க்க முடியவில்லை. அங்கிருந்த பூ விற்கும் சிறுவர்கள் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்குமாறு கேட்க, ஈஷ்வர் வாங்கிக் கொடுத்தார். சிறிது நேரம் கரையில் அமர்ந்து விட்டு ‘ராம் ஜூலா’ பாலம் வழியே சாலையை வந்தடைந்தோம். வழியில் கடைகளை அடைத்துக் கொண்டிருந்தார்கள். உணவகங்கள் மட்டும் திறந்திருந்தது. இன்றும் துணிக்கடைகளுக்குச் செல்ல முடியவில்லை😞 ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு விடுதிக்குள் வந்து மறுநாள் டேராடூன் விமான நிலையத்திற்குக் காலையில் செல்ல வண்டிக்குச் சொல்லி விட்டுத் தூங்கி விட்டோம்.

அதிகாலையில் எழுந்து தயாராகி கங்காவைப் பார்த்து விடைபெற்று வரலாம் என்று கிளம்பினேன். ஈஷ்வரும் தயாராகி வந்து விடுவதாகச் சொல்ல, வெளியில் “புத்தம் புது காலை பொன்னிற வேளை!…”. காலை நடை செல்லும் உள்ளூர் மக்கள் அனைவரும் கையில் தமிழக முதல்வரைப் போல ஒரு மந்திரக்கோலை கையில் வைத்திருந்தார்கள். நாய், குரங்குகளை விரட்ட😂 ‘சிலுசிலு’ காற்று. கொஞ்சம் குளிர். குளித்து விட்டுப் பூஜைகள் செய்பவர்கள், அசமஞ்சமாக உட்கார்ந்திருப்பவர்களைக் கடந்து சென்றால் ஓரு ஆசிரமத்தில் சூடான எலுமிச்சம்பழ தேநீரை இலவசமாக கொடுக்கிறார்கள். காசு கொடுத்தால் வாங்கிக் கொள்கிறார்கள். குடித்து விட்டுக் காத்திருக்கையில் ஈஷ்வரும் சேர்ந்து கொள்ள, காசு கொடுத்து விட்டு காலைப்பூஜை நடந்து கொண்டிருந்த சாய்பாபா கோவிலை வலம் வந்தோம். சமீபமாக சாய்பாபா கோவில்கள் நிறைய முளைத்திருக்கிறதோ! ஆல்பனியில் கூட ஒன்றை ஆரம்பித்து கோலாகலமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆந்திர மக்கள். நல்ல கூட்டமும் சேருகிறது! ஆற்றில் ஒருவர் கயாக்கில் ஹாயாக சென்று கொண்டிருந்ததை ஈஷ்வர் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்😔 அவருக்குப் படகு, கனூ, கயாக்கில் ஆற்றுக்குள் துடுப்புப் போட்டபடி செல்ல மிகவும் பிடிக்கும்.

‘ரிவர் ராஃப்ட்டிங்’ என்னும் காற்றடைத்த மிதவையில் பயணம் செல்வது இங்கு மிகவும் பிரபலமாக இருக்கிறது. அலைகள், சுழல்கள் இருக்கும் பகுதிகளில் அழைத்துச் செல்வார்கள். அதிலிருந்து மீண்டு வரும் சாகசம். தூர்தர்ஷனில் அந்நிகழ்ச்சியைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் திகிலாகத் தான் இருந்தது. முதன் முதலில் யூட்டா மாநிலத்திலும் பின்பு நியூயார்க்கில் ஹட்சன் ஆற்றிலும் பயந்து கொண்டே ராஃப்ட்டிங் செய்ததும் நினைவிற்கு வந்தது. குழந்தைகள் வந்திருந்தால் விரும்பிச் செய்திருப்பார்கள். வேறு வழியின்றி நானும் கூட போயிருப்பேன்.

“ரிஷிகேஷை நாம ரொம்ப மிஸ் பண்ணப் போறோம்.” ஈஷ்வர் சொல்ல, உண்மை தான். ஏதாவது ஒரு ஆசிரமத்தில் தங்கி விட மாட்டோமோ என்று மனம் ஏங்கினாலும் கடமைகள் தான் இன்னும் இருக்கிறதே என்ற நினைவு வர, “ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” என சமாதானப்படுத்திக் கொண்டு விடுதிக்குத் திரும்பினோம். எல்லாவற்றையும் பேக் செய்து வைத்திருந்தேன். வண்டியும் வர, விடுதி சிப்பந்திகளிடம் விடைபெற்று விமான நிலையத்திற்கு கிளம்பினோம். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என்று காலை நேரப் பரபரப்புடன் இருந்த நகரத்தை விட்டு ‘குளுகுளு’ மலைப்பாதை வழியே பயணம் அருமையாக இருந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கோவில்களும் இயற்கைக்காட்சிகளும் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் கட்டிய புராதனக் கோவில்களும் மனதிற்கு ஆறுதலைத் தரும் அருமருந்தாக இருக்கிறது. ‘தேவ பூமி’ என்று இந்த புண்ணிய பூமியைக் கொண்டாடுவது இதனால் தானோ? வட இந்திய இந்துக்கள் பலருக்கும் ‘சார்தாம்’ யாத்திரை என்பது வாழ்நாள் தவமாக இருக்கிறது. அதனால் வயது முதிர்ந்தவர்களும் தவறாமல் ஹரித்வார், ரிஷிகேஷ், சார்தாம் பயணத்தை மேற்கொள்கிறார்கள். 12 நாட்களில் ஏழு விடுதிகளில் தங்கி பல ஊர்கள், ஆறுகள், கோவில்களுக்குச் சென்று பல மனிதர்களைச் சந்தித்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்த்து மகிழும் ஒரு இனிய அனுபவமாக அமைந்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறி, இன்னும் நான்கு மணிநேரத்தில் காசியில் இருப்போம் என்ற நினைவே இனிக்க, ‘பை, பை உத்தரகாண்ட்’ சொல்லி காசி விஸ்வநாதரைத் தரிசிக்க உத்தரப்பிரதேசத்தை நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்தது.

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...