Thursday, June 22, 2023

டைட்டன்

இந்த வாரம் செய்தி ஊடகங்களும் சமூக வலைதளங்களும் அல்லோலகப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம், அட்லாண்டிக் கடலில் மறைந்து போன நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றித் தான். 'டைட்டன்' என்று பெயரிடப்பட்ட இந்தக் கப்பல் ஜூன் 18, 2023 ஞாயிற்றுக்கிழமை மாசசூசெட்ஸின் 'கேப் காட்' நகருக்கு கிழக்கே 900 கடல் மைல் தொலைவில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை ஆய்வு செய்யும் பணியின் போது காணாமல் போனது. கப்பலில் 96 மணி நேர ஆக்சிஜன் சப்ளை மட்டுமே இருப்பதும் அதுவும் 22ந் தேதி வியாழக்கிழமை காலை 7:08 மணிக்கு தீர்ந்துவிடும் என்று அமெரிக்க கடலோர காவல்படை கூறியது தான் பதட்டத்திற்கு காரணம். அந்த கால கெடுவும் முடிந்து விட்டது தான் கொடுமை😞

'ஓஷன் கேட்' நிறுவனம் 2021லிருந்து இத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இது மூன்றாவது பயணமாகும். ஐந்து பேர் அமர்ந்து செல்லக் கூடிய நீர்மூழ்கிக் கப்பலில் பயணிக்க $250,000 கட்டணம் செலுத்த வேண்டும். இதில் பயணித்தவர்கள், 'ஓஷன்கேட்' பயண நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ் , பிரிட்டிஷ் பில்லியனர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு டைவர் பால் ஹென்றி நர்ஜோலெட், பாகிஸ்தானின் பிரபல தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் என்ற செல்வந்தர்கள்.

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய சோக வரலாறு ஆங்கில படத்தின் மூலம் வெகு பிரபலமாயிற்று. 70 ஆண்டுகளுக்குப் பிறகு 1985 ஆம் ஆண்டில் கடலின் அடிப்பகுதியில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் கீழே விழுந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் கண்டு வர கிளம்பிய 'டைட்டன்' கப்பலை வெளியில் இருந்து ஒருவர் இயக்கிக் கொண்டிருக்க, திடீரென்று தொடர்பு அறுந்து போன நிலையில் ஐவரின் நிலை என்ன? நீர்மூழ்கிக்கப்பலின் பாதுகாப்பு அம்சங்களில் ஏதேனும் குறையா? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஐந்தாவது முறையாக ஆழ்கடல் பயணம் செய்த 'ஓஷன்கேட்' பயண நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டாக்டன் ரஷ், இந்தக் கப்பலில் நவீன பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக கூறியிருக்கிறார். நீர்மூழ்கிக் கப்பல் அதன் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் அனைத்து நிலையான சோதனைகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதை உறுதி செய்துள்ளது. ஆனால் கப்பல் தொழில்துறை பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்ததா என்பது பற்றிய கேள்விகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

என்ன தான் கூறினாலும் இப்படிப்பட்ட சாகச பயணம் அதுவும் உயிரைப் பணயம் வைத்து $250,000 பணமும் கட்டி கடலுக்கடியில் தேவையா? என்று பலர் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்! சிலரோ, அந்தப் பணத்தில் எத்தனையோ நல்ல விஷயங்களைச் செய்திருக்கலாம் என்று இலவச அறிவுரைகளைத் தெளித்தபடி ...ம்ம்ம்ம்.

 

இப்படி அநியாயமாக காணாமல் போய் விட்டார்களே? சுவாசிக்க பிராண வாயு இல்லாமல் அந்தச் சிறிய படகிலிருந்து தப்பிச் செல்ல வழியுமில்லாமல் என்ன பாடுபட்டார்களோ என்று அடித்துக் கொள்கிறது என் மனம்!

கடலுக்கடியில் மீட்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் எந்தவித அறிகுறியும் கிடைக்கவில்லை என்பது தான் சோகமே. ஏதாவது அதிசயம் நடந்து விடாதா? நல்ல செய்தி கிடைத்து விடாதா? அவர்கள் ஐவரும் உயிருடன் திரும்பி வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

தவறிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வோம். 

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...