'ஜுன்டீன்த்' என்பது அமெரிக்காவில் அடிமைத்தனத்தின் முடிவை நினைவுகூரும் ஒரு விடுமுறை. விடுதலை நாள், சுதந்திர நாள், கொண்டாட்ட நாள் என்று அழைக்கப்படும் இந்நாள் ஜூன் மாதம் 19ம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1863ல் அதிபர் ஆபிரஹாம் லிங்கன் அடிமைத்தனத்தை ஒழித்து விடுதலையை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் கறுப்பின மக்கள் விடுதலை பெற்றனர். ஆனால் தெற்கு மாநிலங்களில் இந்தச் செய்தி மெதுவாகவே பரவியது. 1865ஆம் ஆண்டில் யூனியன் வீரர்கள் டெக்சாஸின் கால்வெஸ்டனுக்குச் சென்று உள்நாட்டுப் போர் முடிந்துவிட்டதாகவும் டெக்சாஸில் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் இனி சுதந்திரமாக வாழலாம் என்று அறிவித்த நாளே 'ஜுன்டீன்த்' என்று கொண்டாடப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக பிணைக்கைதிகளாக வாழ்ந்த கறுப்பின குடும்பங்களுக்கு விடுதலை என்பது எத்தகைய இன்பமான செய்தியாக இருந்திருக்கக் கூடும்? அதுவும் அமெரிக்காவில் மற்ற மாநிலங்களில் கறுப்பின மக்களுக்கு விடுதலை கிடைத்த போதிலும் டெக்சாஸ் மாநிலத்தில் தான் கடைசியாக விடுதலை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நாளை கறுப்பின அமெரிக்கர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தாலும் பல்வேறு இனக்குழுவினரும் இன்றைய தலைமுறையினரும் 'Black Lives Matter' போராட்டத்திற்குப் பிறகு தான் இந்நாளைப் பற்றி அறிந்து கொண்டுள்ளனர்.
ஜூன் 17, 2021 அன்று அடிமைத்தனத்தின் முடிவை நினைவுகூரும் வகையில் கூட்டாட்சி விடுமுறை நாளுக்கான மசோதாவில் அதிபர் பைடன் கையெழுத்திட்டார். இதன் மூலம் இன சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திக்கவும் இன்னும் செய்ய வேண்டிய பணிகளுக்கு நம்மை மீண்டும் அர்ப்பணிக்கவும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முடியும் என்று அதிபர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் 28 மாநிலங்கள் இந்நாளை அரசு விடுமுறையாக கொண்டாடுகிறது. ஆனால் தனியார் நிறுவனங்களில் விடுமுறை இல்லை என்பதால் இந்த நாளைக் கொண்டாட வேண்டிய கறுப்பினத்தவர்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. என்ன ஒரு முரண்!
கடந்து வந்த பாதையை, நாட்டின் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டியது அந்நாட்டு மக்களின் கடமை. அந்த வகையில் இன்றைய 'ஜூன்டீன்த்' அடிமை மக்களின் வரலாற்றில் மிக முக்கியமான நாள்.
எல்லோரும் கொண்டாடுவோம்!
No comments:
Post a Comment