Wednesday, June 7, 2023

குளோபல் வார்மிங்கா? வார்னிங்கா ?

இதுவரையில் கலிஃபோர்னியா, வாஷிங்டன் என அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களில் தான் காட்டுத்தீ பரவி அதிகளவில் பொருட்சேதாரங்களும் கால்நடைகள், காட்டு விலங்குகள், பறவைகள், மனித உயிரிழப்புகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் வெயில் அதிகமாகி வறட்சியால் காடுகளில் உள்ள மரங்கள் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் என்றும் உண்டு. சில  அறிவிலிகளால் கூட பல வருட மரங்கள், பறவைகள், விலங்குகளை இழந்திருக்கிறோம். இதுமட்டுமில்லாமல், மலைச்சரிவுகளால் அதிகமான கனிம வளங்களையும் கலிஃபோர்னியா மாநிலம் இழந்திருக்கிறது. ஒருமுறை கட்டுக்கடங்காத காட்டுத்தீயால் சான்பிரான்ஸிஸ்கோ வரை புகை பரவி மக்களைத் திக்குமுக்காட வைத்தது. 'பே ஏரியா'வில் வாழும் மனிதர்களைக் கூட அப்புறப்படுத்த ஆயத்தமாக இருந்தார்கள் தீயணைப்புப் படையினர்!

இப்பொழுதெல்லாம் கனடாவில் காட்டுத்தீ என்றால் அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்கள் வரை அதன் புகை பரவி விடுகிறது. இந்த வாரத்தில் ஆகாயம் மூச்சு விட சிரமப்படுவது போல் வெளிர் ஆரஞ்சு வண்ணத்திலேயே காலையும் மாலையும் உலாவந்து கொண்டிருக்கிறது. இதில் எங்க ஊர் 'ரமணன்' வேறு காற்றில் மாசு அதிகம் கலந்திருப்பதால் மூச்சு விடச் சிரமப்படுபவர்கள், ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் கவனமாக வீட்டுக்குளேயே இருங்கள் என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார். காலையில் கோலம் போடக்கூட அதிகம் யோசிக்க வேண்டியிருக்கிறது. மகள் வேறு, முகக்கவசம் இல்லாமல் வாசலைத் தாண்டக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறாள். தீபாவளிக்கு முன்தின இரவு மதுரையில்  விளக்குத்தூண் பஜாரில் எங்கள் குடும்பம் மட்டுமே முகக்கவசம் போட்டு சுத்திக்கொண்டு இருந்தோம். இங்கும் நான் மட்டும் தான் போட்டுக் கொண்டு திரிகிறேன். நியூயார்க் நகரம் ஆல்பனியை விட மிக மோசமாக இருக்கிறது. 

கனடாவில் வடகிழக்கில் கியூபெக் மட்டுமின்றி பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா, ஒண்டாரியோ, நோவா ஸ்கோஷியா மற்றும் வடமேற்கு பிரதேசங்களிலும் பெரும் தீ எரிந்து வருகிறது. அதிக வெப்பமான வறண்ட வானிலை காட்டுத்தீக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். 400க்கும் மேற்பட்ட காட்டுத்தீயால் கனடாவில் இருந்து அமெரிக்கா முழுவதும் புகை வருகிறது என்று கனேடிய இன்டர்ஏஜென்சி ஃபாரஸ்ட் ஃபயர்ஸ் சென்டர் தெரிவித்துள்ளது. கியூபெக்கில் நேற்று 150க்கும் மேற்பட்ட காட்டுத் தீ எரிந்து அதில் 110க்கும் மேற்பட்ட காட்டுத் தீ கட்டுப்படுத்த முடியாததாகக் கருதப்படுகிறது. நாடு தற்போது 413 காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகிறது. அவற்றில் 249 கட்டுப்படுத்த முடியாதவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. தீயினால் எட்டு மில்லியன் ஏக்கருக்கு மேல் எரிந்துள்ளது. மேலும் 26,000 மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகிறது!


நியூயார்க் நகரத்தின் காற்றின் தரக் குறியீடு நேற்று 200ஐத் தாண்டியது. இது "மிகவும் ஆரோக்கியமற்றது" என்ற மாசு அளவு. தற்போதைய காட்டுத்தீயால் வட கரோலினாவின் பெரும்பகுதி, வடக்கு வர்ஜீனியா, மேரிலாந்தின் பெரும்பகுதி, டெலாவேர், கிழக்கு பென்சில்வேனியா, நியூயார்க், வெர்மான்ட், மசாசூசெட்ஸ், கனெக்டிகட், நியூஜெர்சி, ரோட் ஐலண்ட் , மேற்கு நியூ ஹாம்ப்ஷயர், கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் புகை மூட்டம் இருக்கும் என்று வானிலையாளர்கள் கணித்திருக்கிறார்கள். இன்னும் 24 மணிநேரம் வரை தொடர்ந்திருக்கும் புகைமூட்டம் மெல்ல மறைந்து போகும் என்று இப்போதைக்குச் சொல்லி இருக்கிறார் 'ரமணன்'😌


2022 அக்டோபரில் டெல்லியில் இருந்ததைப் போல இருக்கிறது புகைமூட்டம்!
நீல வான தரிசனம் மீண்டும் எப்பொழுது கிடைக்குமோ? அக்கினித்தேவனும் வாயு, வருணபகவான்களும் கருணை புரிவார்களா?

என்னவோ போடா மாதவா! 

No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...