Wednesday, June 7, 2023

ஒடிசா ரயில் விபத்து


ஜூன் 2ம் தேதி மாலை ஏழு மணியளவில் ஒடிசாவின் பாலசோரில் உள்ள பஹனகா பஜார் ரயில் நிலையத்தில் நடந்த கோரமான ரயில் விபத்தில் இதுவரையில் 288 பேர் இறந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகிறது. மிகவும் வேதனை தரும் விஷயம். சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் தடம் புரண்டு அங்கு நின்றிருந்த சரக்கு ரயிலில் மோதியதால் பல பெட்டிகள் கவிழ்ந்து அதே நேரத்தில் பெங்களூரிலிருந்து கல்கத்தா செல்லும் மற்றொரு ரயில் யஸ்வந்த்பூர்-ஹவுரா சூப்பர்பாஸ்ட் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியுள்ளது. அதிர்ஷ்டவசமாக தப்பித்தவர்களின் சில்லிடும் அனுபவங்களைப் படிக்கவே கண்கலங்குகிறது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பலரும் ரத்த தானம் செய்ய காத்திருந்ததும் ஒடிசா அரசும் உள்ளூர் மக்களும் விரைந்து மருத்துவ உதவிகள் செய்து வருவதும் மத்திய அரசாங்கம் நிவாரணப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருவதும் ஆறுதலான செய்தி. ரயில் பிரயாணத்தின் போது காப்பீடு அதாவது இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது என்று கற்றுக் கொள்வோம். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதம மந்திரியின் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரயில்வே நிர்வாகம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும், சிறிய காயங்களுடன் இருப்பவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடு வழங்குகிறது. ஒடிசாவின் முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் அவர் மாநிலத்தைச் சேர்ந்த 39 இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ5,00,000 என அறிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்திலிருந்து 103 பேர் இறந்துள்ளதாக முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து வந்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் மற்றும் குழுவினர், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டுத் தகவல்கள் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் இறந்த குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 1லட்சம் ரூபாயும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விபத்தைத் தடுக்க இந்திய தொழில்துறையுடன் இணைந்து ஆராய்ச்சி வடிவம் மற்றும் தரநிலை அமைப்பால் (RDSO) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) தான் 'கவச்' அமைப்பாகும். 'கவச்' என்றால் கவசம் என்று பொருள். இந்திய ரயில்வே முழுவதும் ரயில் செயல்பாடுகளில் பாதுகாப்பை அடைய தென் மத்திய ரயில்வே மூலம் சோதனைகள் நடைபெற்று வருகிறது. இது பாதுகாப்பு ஒருமைப்பாடு நிலை-4 (SIL-4) தரநிலைகளுடன் கூடிய அதிநவீன மின்னணு அமைப்பாகும். இதனால் சிவப்பு நிற சிக்னலில் கடக்கும் ரயில்களைத் தடுத்து மோதலைத் தவிர்க்க முடியும். வேக கட்டுப்பாடுகளின்படி ஓட்டுநர் ரயிலைக் கட்டுப்படுத்தத் தவறினால், 'கவச்' அமைப்பு ரயிலின் பிரேக்கிங் சிஸ்டத்தை தானாகவே செயல்படுத்தும். மேலும் 'கவச்' அமைப்புகளுடன் பொருத்தப்பட்ட இரண்டு இன்ஜின்களுக்கு இடையே மோதலை தடுக்கும் ஆற்றலும் அவசரகால சூழ்நிலைகளின் போது கணினி மூலம் SoS செய்திகளை அனுப்பும் திறனும் கொண்டது இந்த 'கவச் சிஸ்டம். நெட்வொர்க் மானிட்டர் சிஸ்டம் மூலம் ரயில் இயக்கங்களின் மையப்படுத்தப்பட்ட நேரடி கண்காணிப்பு இதன் கூடுதல் அம்சமாகும். இந்த அமைப்பால் 10,000 ஆண்டுகளில் பிழையின் நிகழ்தகவு 1 ஆக இருக்கும் என்று நம்பப்படுகிறது. தற்போது சில வழித்தடங்களிலும் ரயில்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம் விரைவில் பிற மாநில ரயில் பாதைகளிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 'கவச்' அமைப்பு இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போதைய 'இன்டர்லாக் சிஸ்டம்' என்பது மிகவும் பாதுகாப்பான சமிக்ஞை வழி. அதாவது ஏதாவது ஒரு வழித்தட அமைப்பு (சிஸ்டம்) செயலிழந்தால் அனைத்து சமிக்ஞைகளும் (சிக்னல்களும் ) சிவப்பு நிறமாக மாறி அப்பாதையில் வரும் அனைத்து ரயில்களையும் நிறுத்தும் இந்த இன்டர்லாக் அமைப்பு அன்று அப்பொழுது மட்டும் வேலை செய்யாதது ஏன்? அதை யார், எதற்காக மாற்றி இருப்பார்கள்? இதற்கான பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் விசாரணை செய்வதன் மூலம் உண்மையான தகவல்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதால் இந்த விபத்தைக் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்ட பிறகு சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளார் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ்.

உலகில் வேறு எங்கும் நடக்காத ரயில் விபத்து ஒன்று ஏதோ இப்பொழுது தான் முதன்முதலாக இந்தியாவில் நடப்பது போல எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் ஒப்பாரி வைத்து அரசியல் செய்து கொண்டிருப்பது வேதனை. இதற்கு முன்பு கூட உயிர்ச் சேதங்களுடன் ரயில் விபத்துகள் இந்தியாவில் நடந்திருக்கிறது. தற்பொழுது பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பதும் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதும் ஆட்சியர்களின் கடமை. ரயில்வே நிர்வாகம் துரிதமாகச் செயல்பட்டு மீண்டும் ரயில்களை இயக்கத் துவங்கியுள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதற்குள் ரயில்வே நிர்வாகத்தைப் பற்றி அரையும் குறையுமாகத் தெரிந்தவர்கள் தூற்ற ஆரம்பித்திருப்பது அவர்களின் அறிவிலித்தனத்தைத் தான் காட்டுகிறது.

மேலும் இத்தகைய கோரமான விபத்துகள் இனியும் நடக்காமல் இருக்க 'கவச்' தொழில்நுட்ப அமைப்புகளைத் துரிதமாகச் செயல்படுத்த அரசு முன்னெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிபிஐ விசாரணையில் மேற்கொண்டு தகவல்கள் தெரியும் வரை இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களையும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் பூரண நலம் பெறவும் கடவுளை வேண்டுவோம்.

ஓம் ஷாந்தி!








No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...