Tuesday, June 6, 2023

காசி

எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது. ஒன்பதாவது தொடராக பத்ரிநாத்-ரிஷிகேஷ் பயணம் பற்றிய கட்டுரையை சொல்வனத்தில் படிக்க இங்கே சொடுக்கவும் காசி 

காசி யாத்திரை என்றதும் பாட்டியை வழியனுப்ப குழந்தைகளாக இருந்த நாங்கள் அம்மாவுடன் ரயில்நிலையத்திற்குச் சென்று வணங்கி வழியனுப்பியது நினைவிற்கு வந்தது. பாட்டி வயதை ஒத்த வேறு பல பாட்டிகளும் அந்தப் பெட்டியில் இருந்தனர். பொதுவாக காசிக்குச் செல்பவர்கள் குடும்பக்கடமைகளை முடித்துவிட்டு ‘அக்கடா’ என ஓய்ந்திருக்கும் கடைசிக்காலத்தில் சென்று வருவது மரபு. 2008ல் அம்மாவும் அப்பாவும் சென்று வந்த பிறகு அவர்களின் பயணத்தைப் பற்றிக் கேட்க, அம்மாவோ, ” உனக்கு அங்க போகப் பிடிக்குமா தெரியலை. அங்கங்க படிகள்ல, போற வழியில கொஞ்சம் அசுத்தமா இருக்கு. ஆனாலும் போயிட்டு வா” என்றவுடன் என்னுடைய ஆவல் சற்று குறைந்து விட்டது.

இன்று நேற்றல்ல இந்தக் கனவு. ‘மா கங்கா’வைப் பற்றின எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தவறாமல் பார்த்துப் பார்த்து படித்துறைகளையும் காசி விஸ்வநாதரையும் தரிசிக்க வேண்டும் என்ற பலநாள் தவம். மோடிஜியின் ஆட்சியில் ‘நமாமி கங்கே’ திட்டத்தில் கங்காவைச் சுத்தப்படுத்த அப்பாடா! என்றிருந்தது. அதனால் 2020 மார்ச்சில் அங்கு செல்ல திட்டமிட்டோம். நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்குமாம். கொரோனா கோரத்தாண்டவம் ஆட, “இரண்டு வருடங்களுக்குப் பயணம் கியணம்னு மூச்சு விடாப்பிடாது” என்று மகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டாள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டால் நாம் அவர்களுக்கு குழந்தைகளாகி விடுகிறோம். அதுவும் நல்லதாகி விட்டது. 2021ல் காசி விஸ்வநாதர் கோவிலைக் கங்கைக்கரையுடன் இணைத்துச் சீரமைக்கும் வேலைகள் முடிந்து பிரம்மாண்ட கோவில் வளாகத்தைப் பார்த்தவுடன் எப்படியாவது சென்று விடுவது என்று நினைத்தது அன்று நடந்தே விட்டது! இந்துவாகப் பிறந்து வாழ்பவர்கள் அனைவருக்கும் காசிக்குச் செல்வது என்பது வாழ்நாள் தவமாக இருக்கும். அதனால் இப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கும் பொழுது விஸ்வநாதரைத் தரிசித்து வர கிளம்பிச்செல்லும் மக்கள் அதிகரித்து விட்டார்கள்.

எண்ணங்களை அசைபோட்டுக் கொண்டே விமானத்திலிருந்து பார்த்தால் பச்சைப்பசேலென விளைநிலங்கள்! நடுநடுவே பஞ்சு பொதி மேகங்கள் காட்சி தர, டேராடூனிலிருந்து நான்கு மணிநேரத்தில் வாரணாசி லால்பகதூர் சாஸ்திரி சர்வதேச விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம்! பெட்டிகளுடன் வெளியே வர, விடுதியிலிருந்து அழைத்துச் செல்ல வந்திருந்தவர் வண்டி நிற்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல, ‘பளிச்’சென்று பிரகாசமாக இருந்தது வாரணாசி. வண்டிகள் நிற்குமிடத்தில் அழகான ‘கங்கைப்படித்துறை’ மினியேச்சர் மாதிரியை வைத்திருந்தார்கள். அங்கிருந்து நாங்கள் தங்கவிருந்த ‘ஹோட்டல் பச்சன் பேலஸ்’ விடுதிக்குச் செல்ல ஒரு மணிநேரம் ஆனது. வழியில் வருணா நதிப்பாலத்தைக் கடந்து புதிய பழைய சாலைகளில் பயணித்து வந்தோம். சாலை விரிவாக்கம், புதுப்பாலங்களைக் கட்டும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. சில பிரியாணி, மதுபானக்கடைகளைப் பார்த்தவுடன் தான் ‘சார்தாம்’ யாத்திரை முழுவதும் சைவ உணவு விடுதிகளை மட்டும் கண்டதும் ஒரு மதுபானக்கடையும் இல்லாததும் நினைவிற்கு வந்தது. காசி அப்படியல்ல. கோவிலுக்குச் செல்லும் முன்னர் ஒரு பெரிய மசூதி தென்பட்டது. அதன் அருகே தான் அசைவ உணவுக்கடைகளும்.

விடுதியிலிருந்து ஒரு மைல் தொலைவில் வண்டிகளை நிறுத்திவிடுகிறார்கள். அங்கிருந்து இரு சக்கர வண்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. இல்லையென்றால் நடைப்பயணம் தான். அதிகாலையிலும் இரவு 10 மணிக்குப் பிறகு மட்டும் நான்கு சக்கர வண்டிகள் உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். விடுதிச் சிப்பந்திகள் இருவர் எங்கள் பெட்டிகளை எடுத்துக் கொண்டு ‘விறுவிறு’வென்று நடக்க, நாங்கள் அவர்களைத் துரத்திக் கொண்டு நடைபோட, வழியெங்கும் ‘பளிச்’சென்ற வண்ணங்களுடன் கட்டடங்கள். துணிகள், பலகாரம், பீடா, லஸ்ஸி, பன்னீர் முதல் சகலவிதமான பொருட்களை விற்கும் சிறுசிறு கடைகள், நடுநடுவே கோவில்கள் என ஏராளமாக இருக்கிறது!சந்தையில் காய்கறி, பழங்கள், பூஜைக்கான பொருட்களை விற்பவர்கள் என்று திரும்பின பக்கமெல்லாம் மக்கள் கூட்டம். அந்தத் தெருவே உயிர்ப்புடன் அத்தனை வித்தியாசமாக உற்சாகமாக இருந்தது. நடுவில் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் வழி என்று ஒரு தெருவாயிலில் ஆதிசங்கரர் உருவச்சிலையுடன் முகப்பு வளைவு. வாசலில் காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எட்டிப்பார்த்தால் தெரு முழுவதும் கடைகள்! ஆஹா!

மாடுகளும் நாய்களும் மனிதர்களுடன் உலாவுவதைப் பார்த்துக் கொண்டே நான்கு பேர் சென்றால் தெருவை அடைத்து விடும் சின்னஞ்சிறிய தெருவுக்குள் நுழைந்தோம். காசியின் அழகே இந்தச் சிறிய நீண்டு வளைந்து செல்லும் தெருக்கள் தானே! எதிரே இரு சக்கர வண்டி வந்தால் கூட ஒதுங்கி நின்று வழியை விட வேண்டியிருக்கிறது. தெரு முழுவதும் கடைகள் உணவகங்கள் விடுதிகள்! எங்கள் விடுதியும் வர, உரிமையாளர் திரு.பியூஷ் சிரித்துக் கொண்டே வரவேற்றார்.

பெட்டிகளை வைத்து விட்டு ஈஷ்வர், நண்பர் வேதமூர்த்தியிடம் நாங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவலைக் கூற, அவரும் உடனே புறப்பட்டு வந்துவிட்டார். அவர் வீட்டிலிருந்து இரு நிமிடங்களுக்குள் விடுதி இருந்தது. அங்கிருந்தவர்கள் அவரை ‘குருஜி’ என்று அழைத்தார்கள். எங்கள் திருமணத்தில் பார்த்தது. இப்பொழுது முற்றிலும் மாறியிருந்தார். வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து கோவிலிலும் கங்கைக்கரையிலும் திருவாசகம் ஓதிக்கொண்டு வாழ்பவர். ஈஷ்வருக்கும் அப்படிப்பட்ட தனித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை! ஆனால் பாவம்! “எதுக்கு மாப்பிள்ளை காசிக்குப் போகிறீர்கள்? என் மகளைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்ன்னு அப்பவே காசி யாத்திரைக்குப் போயிட்டு இருந்த மனுஷனை வம்படியா பிடிச்சு…” ஹ்ம்ம்ம்… அதெல்லாம் சொல்லி மாளாது😂 “சரி, நானே ஒரு தண்டமும் கமண்டலமும் இப்ப வாங்கிக் கொடுக்கிறேன். காசியிலே இருந்து விடுங்களேன்”ன்னு சொன்னால் “நீயும் வா” என்றவுடன் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒரு வாழ்க்கை வாழ கிடைத்தால் கசக்குமா என்ன?

தேநீருக்குச் சொல்லிவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். “இப்பொழுதுதான் வந்து இறங்கி இருக்கிறீர்கள். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பிறகு கங்கைக்கரைக்குச் செல்லலாம்” என்று வேதமூர்த்தி அண்ணா கூறவும் நாங்களும் ஓய்வு எடுத்துக் கொண்டோம். நாலரை மணி போல் கிளம்பி அவர் வீட்டிற்குச் சென்றோம். விடுதியின் எதிரே சிறு கடையில் சோப்பு, சீப்பு முதல் தண்ணீர் பாட்டில்கள் வரை கிடைக்கிறது. அதைத் தாண்டிச் சென்றால் வெளிநாட்டினரைக் கவரும் விதத்தில் ஏகப்பட்ட உணவுப்பட்டியலுடன் இரு உணவகங்கள். ஒரு தாத்தா பாட்டி பூரி, இட்லி விற்றுக் கொண்டிருந்த கடையின் எதிரே பழங்களை நம் கண்முன்னே சாறு பிழிந்து கொடுக்கிறார்கள். விலையும் அதிகமில்லை. அப்படியே பாம்பு வால் போல் தெரு நீள்கிறது. நான்கைந்து நாய்கள் இங்கும் அங்கும் எனக்கென்ன என்று படுத்துக் கொண்டிருந்தது. ரொட்டி வாங்கிப் போட்டாலும் சாப்பிடவில்லை. அதற்குப் பிடித்தது தான் வாங்கிக் கொடுக்கணுமாம். நல்லா தயிரும், இட்லி தோசையும் சாப்பிடுது. ஆஹான்! கெடுத்து வச்சிருக்கானுங்களே! “அது ஒன்றும் செய்யாது சும்மா போங்க” என்று உள்ளூர்க்காரர்கள் கூறினாலும் உள்ளூர உதறல் தான்! போதாக்குறைக்கு மாடு வேறு குறுக்கால நின்று கொண்டு😨 இவர்களையெல்லாம் கடந்து அண்ணாவின் வீட்டிற்குச் சென்றோம்.

நல்ல வசதியான வீடு தான்! அவரே சமைத்து உண்கிறார். டீ போட்டுக் கொடுத்தார். தேவையான பொருட்களுடன் நிம்மதியான மினிமலிஸ்ட் வாழ்க்கை! அனைவருக்கும் கிடைக்காத வரம்! அருகே அழகான சிவன் கோவில். தெருவில் நெருக்கமான வீடுகள். வீட்டுச்சுவர்களில் அழகான சிவன், ஹனுமன், விநாயகர், கங்கா மாதா ஓவியங்கள்! மின்சார கம்பிகளில் மந்திகள் தொங்கிக் கொண்டு சேட்டை செய்து கொண்டிருந்தது கொள்ளை அழகு. அதுவும் அந்த குட்டிக்குரங்குகள்😍

கரையில் உட்கார வசதியாக இருக்கும் என்று ஆளுக்கொரு பிளாஸ்டிக் சேர் எடுத்துக் கொண்டு ‘ட’ வடிவில் இரு சிறு தெருக்களைக் கடந்து சென்றவுடன் எதிரே ‘மா கங்கா!’. வருணபகவானின் கொடையால் இருகரைகளையும் தொட்டு வண்டல் மண்ணைச் சுமந்தபடி ஆவேசமாக ஓடிக்கொண்டிருந்தாள்! படிகள் துவங்கும் இடத்தில் ‘பிரிஜ் ராமா பேலஸ்’ என்ற நான்கு நட்சத்திர உயர் ரக விடுதி. கரையில் அமைந்திருப்பதால் அங்கு தங்க விலையும் அதிகம்! அதிக அளவில் வெளிநாட்டினர் அங்கே தங்கியிருந்தனர். பிரசித்திப் பெற்ற ‘கங்கா ஆரத்தி’ நடக்கும் ‘தஷஷ்வமேதா’ படித்துறை அருகே இருந்ததும் மற்றொரு காரணம். 45 செங்குத்தான படிகள் கீழே இறங்கி அங்கிருந்த வட்டமான தூணின் மேல்தளத்தில் அமர்ந்து கொண்டோம். மாலைச்சூரியன் கருமேகங்களுக்குள் ஒளிந்து கொண்டிருந்தது.

மோட்டார் படகுகள் பெரும் இரைச்சலுடன் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்ததில் அமைதியற்ற சூழல்😒 உல்லாசமாக படகுகளில் சவாரி சென்று கொண்டிருந்த பயணிகளில் சிலர் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் நின்று கொண்டு படங்களை எடுக்கவும் மறக்கவில்லை😊 எனக்குத்தான் உதறலாக இருந்தது😟 நியூயார்க்கில் ‘லேக் ஜார்ஜ்’ல் 2005ல் இலையுதிர்கால அழகைக் காண 47 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற படகு ஒன்று நிலைதடுமாறி விழுந்ததில் 20 பேர் இறந்து விட்டனர். பயணிகள் அனைவரும் மூத்த குடிமக்கள். அதற்குப்பிறகு தான் படகில் செல்பவர்களின் உயிரைக் காக்க லைஃப் ஜாக்கெட் கட்டாயமாக்கப்பட்டது. கேரளாவிலும் தேக்கடியில் அப்படி ஒன்று நடந்து பேருக்கு ஒரு லைஃப் ஜாக்கெட் கொடுக்கிறார்கள். அதை முறையாக அணியாமல் மக்கள் பயணிக்கிறார்கள். பார்க்கும் நமக்குத் தான் பகீரென்று இருக்கிறது! என்னவோ போடா மாதவா!

மெல்ல இருள் கவிழ, சிறிய, பெரிய படகுகள் ‘கங்கா ஆரத்தி’ நடக்கும் இடத்தில் ஒதுங்க ஆரம்பித்து விட்டது. ‘முன்ஷி காட்’டில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டமும் மெல்ல கலைய, வெள்ளம் காரணமாக ஆரத்தியை எளிதாக முடித்துக் கொண்டார்கள். அப்படியே அங்கே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தோம் என்றே தெரியவில்லை. பசிக்கிற மாதிரி இருக்கவே, அண்ணா ஒரு நல்ல உணவகத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூற, சூரியோதயம் காண காலையில் மீண்டும் வரலாம் என்று கிளம்பிவிட்டோம்.

அண்ணாவின் வீட்டிலிருந்து மூன்று தட்டுக்களை எடுத்துக் கொண்டு அந்தச் சிறிய உணவகத்திற்குள் நுழைந்தோம். படிக்கட்டு மேடையிலேயே அடுப்பை வைத்து பெரிய வாணலியில் உருளைக்கிழங்கு போண்டா, சமோசா, கட்லட்டை ஒருவர் பொரித்துக் கொண்டிருக்க, சுடச்சுட வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. உள்ளே ஒருவர் சமோசா தயாரிக்க மாவைத் தேய்த்து மசாலாவை உள்ளே வைத்துக் கொண்டிருந்தார். கடையின் வாசலில் மெல்லிய முறுகலான தோசையும், வெங்காய ஊத்தப்பமும் ஊற்றிக் கொண்டிருந்தவருக்கு வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. சமையலுக்கு 2 பேர், ஒத்தாசைக்கு இருவர், பணத்தை வாங்கி கொள்ள, பரிமாற ஒருவர் என்று அந்தச் சிறுகடையில் அப்பொழுது ஐந்து பேர் பம்பரம் போல வேலை செய்து கொண்டிருந்தார்கள்! நாங்கள் கேட்டது தட்டில் வைத்ததும் தான் தெரியும். உடனே காலியாகி விட்டது. அத்தனை சுவை! மூன்று பேர் வயிறார சாப்பிட்டும் 150ரூபாய் தான் ஆனது. நம்ப முடிகிறதா? எங்களாலும் நம்ப முடியவில்லை. காசியில் உண்பதற்கான செலவு மிகவும் குறைவு என்பதை அடுத்தடுத்த நாட்களில் நன்கு தெரிந்து கொண்டோம். நாளைக்காலையில் இங்கே அருமையான ஜிலேபி கிடைக்கும். ஆனால் கடை 9 மணியளவில் தான் திறப்பார்கள் என்றார். அதனாலென்ன? ஜிலேபிக்காக எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று கூறி அங்கிருந்து அண்ணாவிடம் விடைபெற்று விடுதிக்குத் திரும்புகையில் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தினர் (வெளிநாட்டினர்) பாடலைப் பாடிக் கொண்டே சென்றார்கள். Prague நகரில் சாலையில் இதே போல பஜனை செய்து கொண்டு சென்ற குழுவினரைக் கண்டது நினைவிற்கு வந்தது. ஆனந்தமான மனிதர்கள்!

வழியில் இசைக்கருவிகளை விற்கும் கடையைக் கண்டவுடன் ஈஷ்வர் புல்லாங்குழல் ஒன்றை எடுத்து இசைத்துப் பார்க்க, பிடித்துப் போய் வாங்கியும் விட்டார். மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது. மேளச் சத்தம் கேட்க, தொங்கும் மின்சார வயர்களைத் தூக்கிப் பிடித்தபடி வாலிபர்களும் சிறுவர்களும் ‘துர்கா மாதா கீ ஜே’ என்று குரலெழுப்பி கல்கத்தா காளி உருவச்சிலையைத் தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். எட்டு மணிக்குப் பெரும்பாலான கடைகளை மூடி நகரம் உறக்கத்திற்குத் தயாராகி விடுவது உறங்கா நகரத்தில் வளர்ந்த எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது! திருவிழா கூட்டத்தைக் கண்டால் மதுரைக்காரர்களுக்குத் தொற்றிக் கொள்ளும் உற்சாகத்துடன் நாங்களும் கூட்டத்தைப் பின்தொடர்ந்தோம். அங்கே வேறு தெருக்களில் இருந்து வந்த காளி மாதா சிலைகளுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்க, சிறிது நேரம் வேடிக்கைப் பார்த்துவிட்டு கடைக்குச் சென்று பால் அருந்தி விட்டு விடுதிக்குத் திரும்பினோம்.

விடுதி உரிமையாளர் பியூஷிடம் “கொண்டாட்டமாக இருக்கிறதே?” என்றால், “துர்கா பூஜையை இரவு முழுவதும் கொண்டாடுவோம். உங்களுக்கு விருப்பம் என்றால் என்னோடு வாருங்கள். வீட்டிற்குச் சென்று என் அம்மா, தங்கையுடன் உங்களையும் அழைத்துச் செல்கிறேன். நீங்களும் கண்டுகளிக்கலாம். நான் யாரையும் இதுவரை இப்படி கேட்டதில்லை. நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்று தான் கேட்டேன்.” என்று அவர் கேட்டதும் ஒரு கணம் போகலாமா என்று கூட யோசித்தேன். ஈஷ்வர் சோர்வாக இருந்ததால் ‘நன்றி’ கூறி விடைபெற்றோம்.

நாங்கள் இருந்த அறை மட்டுமல்ல அந்த விடுதியில் எந்த அறையிலும் ஜன்னல் இல்லை😵 சுற்றிலும் கட்டடங்கள் இருந்தால் ஜன்னல் வைத்தும் என்ன பயன் என்று விட்டுவிட்டார்கள் போலிருக்கு! ஹ்ம்ம்ம். ஏசியும் வேலை செய்த மாதிரி தெரியவில்லை. வரவேற்பாளரிடம் தெரிவித்த பிறகு இருவர் வந்து பார்த்து அப்போதைக்கு எதையோ சரி செய்து விட்டுச் சென்றாலும் நடுராத்திரியில் மீண்டும் அதே பிரச்னை. களைப்பில் எப்படியோ தூங்கிவிட்டோம். காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி சூரியோதத்தைக் காண தெருவுக்குள் நுழைந்தால் முதுகைக் காண்பித்தபடி அசைபோட்டுக் கொண்டிருந்தது மாடு! இரைச்சல் இல்லாத, மனித நடமாட்டம் குறைந்த இடத்தின் அமைதியில் அழகும் குடியிருக்க, விடிந்தும் விடியாத பொழுதுகள் தான் எத்தனை அழகு! பால் பாக்கெட்டுகள் விற்பனைக்குக் காத்திருக்க, தெருவிளக்குகள் இன்னும் எரிந்து கொண்டிருந்தது. நாங்கள் மட்டுமே நடந்து சென்று கொண்டிருந்தோம். நாய்களுக்கும் இன்னும் விடியவில்லை. ஒரே நாளில் அந்த தெருக்கள் பழக்கமாகி ‘முன்ஷி காட்’ வரும் பொழுது சூரிய பகவான் வானை அலங்கரித்துக் கொண்டிருந்தார்.

மெல்ல மெல்ல வானில் தூரிகையால் வண்ண வண்ண ஓவியங்களைத் தீட்ட நாங்களும் முடிந்தவரையில் படங்களைக் க்ளிக்கிக் கொண்டோம். வானின் பொன்னிறம் கங்கா நதியில் பிரதிபலித்து வாவ்! ‘தளக்தளக்’ என்று கரையை முட்டி மோதி சுழன்று சுழன்று ஓடும் ஆறு. ஆற்றின் ஓட்டத்தில் கட்டி வைத்திருந்த படகுகள் ஆடிக்கொண்டிருக்க, பறவைகளின் ‘குக்கூ’ பாஷைகள் என்று அந்த இடமே சொர்க்கமாக இருந்தது. வெளிநாட்டினர் பலரும் காமெராவும் கையுமாக காட்சிகளைப் படங்கள் எடுத்துக் கொண்டும் ரசித்துக் கொண்டும் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் காலை சூரியோதத்தைக் காண பயணிகளை ஏற்றி வரும் இயந்திரப்படகுகளின் இரைச்சலில் அனைத்தும் தொலைந்து போயின😞 நாங்களும் ஒரு படகில் ஏறி அப்படி என்ன தான் இருக்கிறது இந்த கங்கைக்கரையில்? எதற்கு மக்கள் அடித்துக் கொண்டு வருகிறார்கள்? எது அவர்களை இப்படி ஈர்க்கிறது என்று பார்க்க கிளம்பி விட்டோம்.

கிழக்கு நோக்கி அமைந்திருந்த படித்துறைகள் அனைத்தும் தங்கத்தால் ஜொலிப்பது போல் இருந்தது! வடக்கே ‘பஞ்சகங்கா காட்’டில் துவங்கி தெற்கே ‘அசி காட்’ வரை படித்துறைகள் நீள்கிறது. 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட படித்துறைகள் மராத்தா மன்னர்களால் 18ம் நூற்றாண்டில் சீரமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் முன்ஷி காட்’டில் துவங்கி தெற்கே ‘அசி காட்’ வரைச்சென்று பின் வடக்கே ‘பஞ்சகங்கா காட்’ வரை பயணித்தோம். படித்துறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயருடனும் தனித்த அழகுடனும் இருந்தது. வெள்ளத்தால் படிகள் பல மறைந்து சில இடங்களில் கரையோரக் கோவில்களும் ஆற்றில் மூழ்கியிருந்தது! பிறைவடிவ கரையோரத்தில் 84க்கும் மேலான படித்துறைகள் அமைந்திருக்கிறது. மணிகர்ணிகா, ஹரிச்சந்திரா படித்துறைகளைத் தகனம் செய்வதற்கும் மற்ற அனைத்தும் மக்கள் குளிப்பதற்கும் பூஜைகள் செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். எல்லா படித்துறைகளிலும் அழகான கோவில்கள் இருக்கிறது. படித்துறையில் படிக்கட்டுகள் கூட வித்தியாசமாக காண்போரை வசீகரிக்கிறது! படகோட்டி நாங்கள் படமெடுப்பதைப் பார்த்து ஒவ்வொரு படித்துறை அருகிலும் சிறிது நேரம் நிறுத்தி அவருக்குத் தெரிந்த விஷயங்களைக் கொஞ்சம் விளக்கவும் செய்தார். அண்ணாவும் சில படித்துறைக் கோவில்களைப் பற்றின தகவல்களையும் சொல்லிக்கொண்டு வந்தார். அநேகமாக எல்லா படித்துறைகளிலும் மக்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

இதில் ‘தஷஷ்வமேதா’ படித்துறை மிகவும் பிரபலமானது. இங்கு தான் பிரம்மா பத்து குதிரைகளைக் கொண்டு அசுவமேத யாகம் செய்தார் என்று கூறப்படுகிறது. அதனாலேயே ‘தஷ(10) அஷ்வ(குதிரை) மேதா’ என்ற காரணப்பெயர். இந்த படித்துறையில் கங்கா அன்னைக்கு நடக்கும் தீப ஆரத்தி உலகப்பிரசித்திப் பெற்றது. காசிக்கு வரும் பலரும் இந்தப் படித்துறைக்கு அதிகம் வருவதால் எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. பல கற்பனைகளுடன் சென்றிருந்த எனக்கு மகா ஆரத்தியைக் காண முடியவில்லையே என்ற வருத்தம். நாங்கள் சென்ற இரு வாரங்களுக்கு முன்பு வரை படிகள் முழுவதும் மறைந்து தண்ணீர் மேலேறியதால் ஆற்றில் குளிப்பதைத் தடை செய்திருந்ததாகக் கேள்விப்பட்டோம். நல்ல வேளை! நாங்கள் அங்கிருந்த பொழுது தண்ணீர் கொஞ்சம் வடிந்து குளிக்க அனுமதித்தார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன். ஆனாலும் நாங்கள் நின்றிருந்த படிகளில் இருந்து இன்னும் 25 படிகள் வரை கீழே தண்ணீருக்குள் இருப்பதாக அறிந்து வியந்தோம்!

தென் முனையில் இருக்கும் ‘அசி காட்’டிலும் கங்கா ஆரத்தி நடைபெற்றாலும் கூட்டம் குறைவாக இருக்கிறது. இங்கு தான் ‘ராமசரிதமனஸ்’ எழுதிய துளசிதாஸ் இயற்கை எய்தியதாக கூறப்படுகிறது. நதிகள் அசியும் கங்காவும் சங்கமிக்கும் இந்த இடத்தில் அழகிய சிவன் கோவில் உள்ளது.

சில படித்துறைகள் கவிஞர்களின், அரசர்களின், அரசிகளின் நாட்டுத்தலைவர்களின் நினைவாக அவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது. அதில் துளசிதாஸ் நினைவாக ‘துள்சி காட்’, வாரணாசியை ஆண்டு ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட ‘சேட் சிங்’ நினைவாக ‘சேட் சிங் காட்’, ராஜபுத்திரர்களின் ‘மன்மந்திர் காட்’ பார்ப்பதற்கு ராஜஸ்தான் அரண்மணையைப் போன்று இருக்கிறது. உண்மையை மட்டுமே பேசும் மன்னன் ஹரிச்சந்திரன் நினைவாக ‘ஹரிச்சந்திரா காட்’, ராணி ‘அஹில்யாபாய்’ நினைவாக ‘அஹில்யாபாய் காட்’, அன்னை ஆனந்தமயி ஆசிரமம் இருக்கும் ‘ஆனந்தமயி காட்’, அழகிய ஜெயின் கோவில்களுடன் ‘ஜெயின் காட்’, நம் நாட்டின் முதல் ஜனாதிபதி நினைவாக ‘ராஜேந்திரபிரசாத் காட்’, விஜயநகர மன்னரால் கட்டப்பட்ட ‘விஜயநகரம் காட்’ மற்றும் ‘கேதர் காட்’. இங்கே இருக்கும் சிவன் கோவில் விமானம், சிலைகள் நம்மூர் கோவிலைப் போல் இருக்கிறது. ஹனுமன் கோவில் இருக்குமிடத்தில் ‘ஹனுமன் காட்’ பளிச்சென்று ஆரஞ்சு வண்ணத்தில், ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் ‘பஞ்சகங்கா காட்’ என்று நீள்கிறது பட்டியல்.

இதில் ‘சிந்தியா காட்’ கோவில்கள் ஆற்றில் மூழ்கி இருக்கிறது. நீர் வற்றியதும் நன்கு தெரியும் என்று நினைக்கிறேன். ‘நேபாளி காட்’ டில் அழகான பசுபதிநாத் கோவில் இருக்கிறது. கங்கா, வருணா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் ‘ஆதிகேஷவ காட்’டில் அழகான பெருமாள் கோவில் இருக்கிறது. செல்ல வேண்டும் என்று நினைத்தோம். கோவில்கள் ஒவ்வொன்றும் அத்தனை அழகுடன் பழமை மாறாமல் இருப்பது தான் சிறப்பு. 18ம் நூற்றாண்டு ‘தர்பங்கா காட்’ பலரையும் கவரும் வண்ணம் இருந்தது. அங்கே தான் ‘பிரிஜ்ராம பேலஸ்’ ஹோட்டல் உள்ளது. அங்கிருந்து ஆற்றைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பயணிகளைக் கவரும் வகையில் கைகளைக் குவித்து கூப்பிய ‘நமோ காட்’ புதிதாக கட்டப்பட்டுள்ளது.

காசியில் இறந்து கங்கையில் எரியூட்டப்பட்டால் சொர்கத்திற்குச் செல்லலாம் என்ற நம்பிக்கை உள்ளது. “மணிகர்ணிகா படித்துறையில் இறந்தவர்களின் சடலம் வந்து கொண்டே இருக்கும். சதா பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். ஆற்றில் சடலங்கள் மிதக்கும்” என்று முன்பு கதை கதையாகச் சொல்வார்கள். இப்பொழுது அப்படியில்லை. மின்சார எரியூட்டி வந்தபிறகு படித்துறைகள் சுத்தமாகி உள்ளது. ஆனாலும் படிகளில் மரக்கட்டைகள் குவிந்திருந்தன. அருகிலேயே இறப்பை நோக்கிக் காத்திருப்பவர்கள் தங்கியிருக்கிறார்கள்😔 தெருவில் நடந்து செல்லும் பொழுது வேகவேகமாக இறந்தவர்களின் உடலை எடுத்துக் கொண்டு ‘ஹர ஹர மஹாதேவ’ சொல்லிக் கொண்டே செல்கிறார்கள். இறப்பு என்றாலே பதட்டத்தைத் தருகிறது. என்று அதையும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோமோ அப்பொழுதுதான் மரணபயத்திலிருந்து முழுவிடுதலையும் கிடைக்கும். இறப்பைக் கொண்டாடுகிறது காசி நகரம். அதனால் தான் வாழ்விலிருந்து விடுதலை பெற அங்கு பலர் காத்துக் கொண்டு இருக்கிறார்களோ?


இந்தப் படித்துறைகள் ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கினாலே உடல் எடை தன்னால் இறங்கி விடும்😄 அத்தனை படிகள். அதனால் நடமாட்டம் நன்கு இருக்கும் பொழுதே சென்று விடுவது நல்லது. செங்குத்தான படிகளில் ஏறுவதும் இறங்குவதும் கொஞ்சம் சிரமம் தான்! வட இந்தியப் பாட்டிகள் ‘கிடுகிடு’ என்று இறங்கி ஆற்றில் நன்றாக குளித்து விட்டு அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று வழிபட்டு ‘கிடுகிடு’வென ஏறி விடுகிறார்கள்! நன்றாக உழைத்து உரமேறிய உடம்பு. நம்மால் பொறாமைத்தான்பட முடிகிறது. ஹ்ம்ம்ம்😔

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் படகில் படித்துறைகளைப் பார்த்துப் படங்களை எடுத்து முடித்து மீண்டும் ‘முன்ஷி காட்’ ட்டிற்குத் திரும்பினோம். எட்டு மணிக்கே வெயில் போட்டுத் தாக்கியது. ஒரு எலுமிச்சை ‘சாய்’ குடித்து முதல் முறையாக கங்கையில் குளிக்க ஆற்றில் இறங்கினால் அதன் வேகம் ஆளை இழுத்துச் சென்று விடும் போல இருந்தது. நல்ல வேளை! தடிக்கயிறுகள், இரும்புச்சங்கிலிகள் கட்டி இருந்தார்கள். அதைப் பிடித்துக் கொண்டு பயந்தபடி இறங்கினால் படிகளாக இருந்தது.கீழே படிகள் தான் இருக்கிறது என்று அண்ணா சொன்னாலும் பயம் யாரை விட்டது. வெள்ள நீர் என்பதால் பழுப்பு நிறத்தில் இருந்தது. கங்கா மாதாவை வணங்கி மூன்று முறை ஆற்றுக்குள் இறங்கி எழுந்து கைகளால் நீரை அள்ளி அன்னைக்கு அபிஷேகம் செய்து வணங்கினோம். மிகவும் திருப்தியாக இருந்தது. சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தால் துணிகளும் காய்ந்து விடுகிறது. சரி விடுதிக்குச் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு சாப்பிடப் போகலாம் என்று கிளம்பினோம்.

ஒன்பதே கால் மணியளவில் முதல் நாள் இரவு சென்ற உணவகத்திற்குச் சென்றால் நீளவாக்கில் ஜிலேபி எண்ணையில் பொரிந்து கொண்டிருந்தது. நன்கு பொரிந்ததும் ஜீராவில் போட்டு ஒரு முக்கு முக்கி எடுத்தால் சுவையான ஜிலேபி. யம்யம்யம்! சிறிய ஓட்டைப் போட்ட துணியில் மாவைப் போட்டு அந்த மனிதர் அழகாக ஜிலேபியை டிசைன் டிசைனாக போடுகிறார். பார்க்க எளிதாக இருந்தாலும் கடினமான வேலை தான். ஜிலேபி முடிந்ததும் அதே எண்ணையில் பூரி போட ஆரம்பித்து விட்டார். ஆனால் பூரி மாவின் நடுவே கருப்பு உளுந்து மாவை வைத்து உருட்டித் தட்டுகிறார்கள்.எனக்கு வெறும் ஜிலேபி மட்டும் போதும் என்று காலை உணவை முடித்து அருகிலிருந்த கடையில் சூடான தேநீர் சாப்பிட்டோம். ஜிலேபியின் சுவைக்காகவே தினமும் சாப்பிடலாம் போல் இருந்தது😋

சிறிது நேர ஓய்விற்குப் பிறகு “வெயில் அதிகமாக இருக்கிறது. வெளியே எங்கும் வரமாட்டேன்” என்று ஈஷ்வர் சொல்லிவிட்டார்😟அங்கேயே உட்கார்ந்திருக்கவும் பிடிக்கவில்லை. கொஞ்சம் வெளியில் சென்று வரலாம் என்று கையில் சிறிது பணத்தை எடுத்துக் கொண்டு தெருக்களைச் சுற்றிப் பார்த்து வருகிறேன் என்று கிளம்பி விட்டேன். இரண்டு ஆட்கள் மட்டுமே நடந்து செல்ல முடியும் அளவு குறுகிய தெருக்களில் ஏதோ ஒரு அழகு! எத்தனை முறை நடந்து சென்றாலும் அலுக்கவில்லை. நடுநடுவே கோவில்கள். சிவனே பிரதானம். நாமே அபிஷேகம் செய்யலாம். தடுக்கி விழுந்தால் பலகாரக்கடைகள்!சிறு தொழில் செய்யும் பலரை மொத்தமாக ஒரே தெருவில் பார்க்கலாம். பயணிகளை நம்பியே பல கடைகள். தொழில்கள்! இவர்கள் எல்லோரும் கோவிட் காலத்தில் எப்படி பிழைத்தார்களோ? என்று யோசித்தபடியே வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்த தெருக்களில் இருந்து சந்தைக்கு வந்து சேர்ந்தேன்.


விடுதியிலிருந்து சந்தைக்கு நேரடியாக வரும் வழியில் எனக்குப் பிடித்த இனிப்புக்கடைகள். முதல் நாள் பாலைக் கொதிக்கவைத்து செய்த பன்னீர் அடுத்த நாள் மதியத்திற்குள் விற்றுத் தீர்ந்து விடுகிறது! பூஜைப் பொருட்களை வாங்கிக் கொண்டு கோவிலுக்குச் செல்லும் கூட்டம், சுவாமியைத் தரிசித்து விட்டு வருபவர்கள் என்று மக்கள் நடமாட்டம் அதிகம். வழியில் சுடச்சுட இட்லி, தோசை, வடை விற்றுக் கொண்டிருக்கும் கடைகளைக் குறித்து வைத்துக் கொண்டேன். சிவன் கோவிலில் இருந்து சிவாஷ்டகம் ஒலித்துக் கொண்டிருந்ததைக் கேட்க அருமையாக இருந்தது. ஓ! இனிப்புக் கடை பக்கத்தில் பீடா கடை! சபாஷ்! எதிரே அம்மன் கோவில். கடந்தால் இடப்புறத்தில் சந்தை. வலப்புறத்தில் ‘தஷஷ்வமேதா’ படித்துறை. தெருவில் வகைவகையான காய்கறிகள், பழங்கள், தள்ளு வண்டிகளில் இளநீர் என்று கொட்டிக் கிடந்தது. இளநீரைக் குடித்து விட்டு தெருவோரக்கடைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தேன். பனாரஸ் பட்டு அங்கு பிரபலமாயிற்றே! “உள்ளே வந்து பாருங்கள்” என்று கூவிக்கூவி அழைக்கிறார்கள். கண்களைக் கவரும் விதவிதமான ரகங்களில் வண்ணங்களில் சேலைகள். சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு. லல லாலா… வாங்க வேண்டும். ஆசை தான். ஆனால் எனக்கு விருப்பமான சேலைகள் கிடைத்தால் வாங்கலாம் என்று கடந்து விட்டேன். லஸ்ஸி கடைகளும் ஏராளம்! குடிக்கத்தான் பயமாக இருந்தது!


காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் நுழைவாயிலில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. காவல்காரர்களும் கண்கொத்திப்பாம்பாக காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். குறுகிய தெரு முழுவதும் சேலை, நகை, பலகாரக்கடைகள். வளையல் கடையைப் பார்த்ததும் நின்று விட்டேன். அழகழகான கண்ணாடி, பிளாஸ்டிக் வளவிகள்! ஆசை யாரை விட்டது? ஒரு செட் வாங்கலாம் என்று போய்…😍 மகளுக்கும் வாங்கிக் கொண்டேன். நேரத்தைப் பார்த்தால்😳 அடடா! நேரம் போனதே தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறேன்.

விடுதிக்குத் திரும்பி வாங்கின வளவிகளைக் காண்பித்தேன். ஈஷ்வர் சிரித்துக் கொண்டார். “எவ்வளவு இதெல்லாம்?”. “அதெல்லாம் எதுக்கு இப்ப?”. “ம்ம்ம். மதியம் என்ன சாப்பிடலாம்?”. “எனக்கு ஒன்றும் வேண்டாம்” என்றவுடன் “சரி. நானும் வேதமூர்த்தியும் சாப்பிட்டு வருகிறோம்” என்று அவர் கிளம்பிப் போக நான் கிண்டிலில் மூழ்கி விட்டேன். “அருமையான பூரி. நெய்யில் பொரித்து தருகிறார்கள். “நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன்.” என்று சாப்பிட்டு வந்தவர் கூற, அடடா! மிஸ் பண்ணிட்டேனே என்று இருந்தது. “அப்பப்பா! நல்ல வெயில்! மழை வரும் போல இருக்கு. 3.30மணி போல கோவிலுக்குப் போகலாம். ரெஸ்ட் எடு.” என்று கூறி அவரும் ரெஸ்ட் எடுத்துக் கொண்டார்.

சரியாக 3.30மணிக்குத் தயாராக, கருமேகங்கள் கூடி வருவதைப் பார்க்க பயமாக இருந்தது. அண்ணாவும் வந்து சேர, காசி விஸ்வநாதரைத் தரிசிக்க கிளம்பினோம். அர்ச்சனைப் பொருட்களை வாங்கிக் கொண்டு முதலில் அன்னபூரணி கோவிலுக்குச் சென்றோம். குட்டி அம்பாள். உலகை ரட்சிப்பவள் மஞ்சள், ஆரஞ்சு நிறப் பூமாலைகளுடன் திவ்யமாக காட்சி தந்து கொண்டிருந்தாள். மிக மிகச் சிறிய கோவில். வணங்கி விட்டு அங்கிருந்து நேராக காசி விசாலாட்சி கோவிலுக்குச் சென்றோம்.

நகரத்தார் கட்டிக் கொடுத்த கோவிலாம். நம்மூர் பாணியில் இருந்தது சிறப்பு. சிறிய நுழைவாயில். வாசலில் பூக்களை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் வெள்ளிக்கவசத்தில் அம்மனும் ஆதி விசாலாட்சியும் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தார்கள். சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோவிலில் அம்மனைச் சுற்றி வலம் வரும் மண்டபம் முழுவதும் சிவலிங்கங்கள்! நவக்கிரங்களும் இருக்கிறது. வட நாட்டில் பூஜைகள் என்பது நம்மூரில் செய்வது போல இல்லை என்று நினைக்கிறேன். வெளியே நல்ல மழை! அங்கே திருவாரூர் பக்கத்தில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. வாஞ்சையோடு பேசினார்கள். நம்மூர் மக்கள் நம்மூர் மக்கள் தான்😍 மழை நிற்கும் வரை கோவிலில் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தோம். “ஊருக்கு வந்தா வீட்டுக்கு வாங்க” என்று அழைக்க அவர்களால் மட்டுமே முடியும்💗 சிறிது நேரத்தில் மழையும் நிற்க, தண்ணீர் வழிந்தோடும் ஈர தெருக்களின் வழியே காசி விஸ்வநாதர் கோவிலை அடைந்தோம்.

வாவ்! பழைய கோவிலைப் பார்த்தவர்கள் இன்று இந்தக்கோவிலைப் பார்த்தால் பிரமித்துப் போகும் அளவிற்கு மாற்றம் செய்திருக்கிறார்கள். நான் கேள்விப்பட்டவரையில் கடைகள், குடியிருப்புகள் அடர்ந்த பகுதிகளையும் குறுகிய தெருக்களையும் கடந்து சென்றால் உள்ளே கோவில் இருக்கிறது தெரியும் என்று முன்பு சொல்வார்கள். கோவிலுக்குச் செல்ல ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே அப்பொழுது இருந்திருக்கிறது. தற்போது ஏழு நுழைவாயில்கள் வழியாக கோவிலுக்குச் செல்ல முடிகிறது! தங்கத்தால் வேயப்பட்டுள்ள ‘நகரா’ பாணி கோபுரங்கள் தூரத்தில் இருந்தே கோவிலின் இருப்பை உணர்த்துகிறது. மணிகர்ணிகா படித்துறைக்கு அருகில் லலிதா படித்துறையிலிருந்து கோவிலுக்குச் செல்ல வசதியாக நடைபாதையைக் கட்டியிருக்கிறார்கள்.


மிகப்பெரிய சுத்தமான வளாகம்! மழையில் அந்த இடமே புத்துணர்ச்சி பெற்றது போல் இருந்தது. வளாகத்தின் உள்ளே அருங்காட்சியகம், நூலகம், அரங்குகள், பக்தர்கள் தங்கும் இடங்கள், உணவுக்கூடங்கள் என்று 23 புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. நாங்கள் சென்ற நுழைவாயிலில் இருந்து உள்ளே வலப்பக்கம் திரும்பியவுடன் பாரதமாதா கோவில். இந்திய வரைபடத்தின் பின்னணியில் மூவண்ணக் கொடியை ஏந்திய அழகிய பாரதமாதா சிலை. பலரும் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். ஹிஹி! நாங்களும் எடுத்துக் கொண்டோம்😀 கோவிலைக் கடந்து சென்றால் ஆதி சங்கராச்சாரியார், காசி கோவிலைக் கட்டிய மகாராணி அஹில்யாபாய் திருவுருவச்சிலைகள்.

செருப்புக்களையும் செல்ஃபோன்களையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். கோவிலுக்குள் செல்வதற்கு முன் முழுவதுமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள். பல அழகான கோணங்களில் கோவிலைப் படமெடுக்க முடியவில்லையே என்று வருத்தமாக இருந்தது.

நீண்ட வரிசையில் மக்கள் இலவச தரிசனத்திற்காக காத்திருந்தார்கள். சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் வாங்க வேண்டும். அதற்கும் நீண்ட வரிசை. காத்திருந்து கோவிலுக்குள் சென்றோம். காவலர்கள் இருந்தும் கொஞ்சம் தள்ளுமுள்ளுவாக இருந்தது. கர்ப்பகிரகத்திற்குள் தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி மேடையின் நடுவே தரையில் குட்டி ஜோதிர்லிங்கம். சிவசிவா! பால், பூக்கள், கங்கா தீர்த்தம் என்று மக்கள் கொண்டு வரும் பூஜைப் பொருட்களால் அபிஷேகம் செய்து தொட்டுக் கும்பிட அனுமதிக்கிறார்கள். அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் இனம் புரியாத, வார்த்தைகளில் விவரிக்க இயலாத பரவசமாக இருந்தது. நின்று நிதானமாக வணங்கினோம். புரோகிதர் சிவனின் மாலை ஒன்றைத் தர, மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு மனஅமைதியுடன் வெளியே வந்தோம். இதற்குத்தான், இந்தப் பரவசத்திற்குத் தான் சிவனைத் தேடி மக்கள் அலைகடலென திரண்டு வருகிறார்கள். இப்பொழுது கூட்டம் அதிகரித்திருந்தது! நல்ல வேளை! தப்பித்தோம்!

கருவறையின் மேலே கொடி மற்றும் திரிசூலத்துடன் தங்கத்தால் வேயப்பட்டுள்ள கோவில் கோபுரம் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. வளாகத்தில் கால பைரவர், விஷ்ணு, சிவன்,கௌரி, அவிமுக்தேஸ்வரா, விநாயகர், கார்த்திகேயா, சனீஸ்வரர்க்கு சந்நிதிகள் இருக்கிறது. பெரிய நந்தி ஒன்று எதிரே இருக்கும் மசூதியை நோக்கி இருக்கிறது. சிவன் கோவில்களில் சிவனை நோக்கித்தான் நந்தி அமர்ந்திருக்கும். அந்த வழக்கு தான் இன்னும் நடந்து கொண்டிருக்கிறதே! என்னத்த சொல்ல😌’ஞான வாபி’ என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிணறு கோவிலில் உள்ளது. வரலாறுகளை உள்ளடக்கியது காசி நகரம் மட்டுமல்ல கோவிலும் கூட.

உலகின் பழமையான நகரங்களில் ஒன்றான காசியில் பார்க்க வேண்டிய முக்கியமான கோவில்களைப் பார்த்தோம். இன்னும் பார்க்க வேண்டிய கோவில்கள் ஏராளம் இருக்கிறது. ஒவ்வொன்றைப் பற்றியும் எழுதினால் கட்டுரை நீண்டு கொண்டே போகும் என்பதால்…😃 அதே போல் பல மடங்களும், ஆசிரமங்களும் படித்துறைகள் அருகிலும் கோவிலைச் சுற்றிலும் தங்கும் வசதிகளுடன் இருக்கிறது. உள்ளூரில் பல சேவைகளும் செய்து வருகிறார்கள். நிறைய சந்நியாசிகளைப் பார்க்க முடிகிறது.

ஒரு நாள் காலையில் ஈஷ்வர் அசதியாக இருக்கிறது என்று நான் மட்டும் சூரியோதயம் பார்க்க கிளம்பினேன். வழியில் அண்ணாவும் சேர்ந்து கொண்டார். அன்று மழைமூட்டமாக இருந்ததால் கரையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படிகளில் நாய்களும் இறங்கி வருகிறது. குரங்குகள், புறாக்கள் என்று தீனிக்காக மனிதர்களைத் தொடரும் கூட்டம் அழகு. சந்தியாவந்தனம் செய்பவர்கள், வீட்டில் இருந்து சிறு சொம்பை எடுத்து வந்து மந்திரங்கள் சொல்லி கங்கா மாதாவிற்கு அபிஷேகம் செய்து வழிபடுபவர்கள், வீட்டிலிருந்து காலை உணவைக் கொண்டு வந்து ஆற்றில் தீபமேற்றி வழிபட்டுத் தண்ணீரில் விடும் பெண்கள் என அனைவரும் படித்துறைகளில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வீட்டிற்குச் செல்வது வாடிக்கையாக இருக்கிறது. ஒருவர் தினமும் காலையில் ருத்ரம் சொல்லி ஹோமம் செய்து கொண்டிருந்தார். பூஜை முடித்து பிரசாதமும் கொடுத்தார். வெயில் காலையிலேயே ஆரம்பித்து விடுகிறது. நானும் கங்கையில் குளித்து துணி காய்ந்த பிறகு விடுதிக்குப் புறப்பட்டேன்.


காசியில் தங்கியிருந்த நாட்களில் காலையிலும் மாலையிலும் ‘முன்ஷி காட்’ படித்துறையில் அமைதியாக உட்கார்ந்து துள்ளியோடும் ‘மா கங்கா’வைப் பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டு இருந்தோம். ‘சும்மாயிருத்தல்’ கணங்களை அனுபவித்த நேரம் அது! சிரித்த முகத்துடன் ஒரு தம்பதியர் கையில் சிறு குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் படியில் அமர்ந்து கொண்டார்கள். கையிலிருந்த துணியை விலக்கினால் குழந்தை என்று நான் நினைத்தது அழகாக அலங்கரித்த குட்டி தவழும் கிருஷ்ணன் விக்கிரகம்😮 ஏதோ குழந்தையைப் போல அந்தப் பெண்மணி மடியில் கிடத்திக் கொண்டாள். ஆண் தண்ணீரில் இறங்கி கங்கா மாதாவை வணங்கி மூன்று முக்கு முங்கி எழுந்து வர, இந்தப் பெண்மணி சிறு குழந்தையைக் கொடுப்பது போல் சிரித்துக் கொண்டே லட்டு கோபாலை கணவரிடம் கொடுக்க, அவரும் இரு கைகளால் வாங்கிக் கொண்டு மீண்டும் மூன்று முறை முங்கினார். தன் சொந்தக் குழந்தையைக் குளிப்பாட்டியது போல் சிரித்துக் கொண்டே மனைவியிடம் கொடுக்க, அந்தப் பெண்மணியும் துண்டால் அழகாக துடைத்து வேறு துணியை மாட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்தார். மிக மிக எளிமையான மனிதர்களாகத் தெரிந்தார்கள். ஆனால் அவர்களின் உலகில் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தார்கள். பார்க்க பார்க்க எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கடவுளையும் குழந்தையாக கொண்டாடுவதில் தான் எத்தனை இன்பம்! அவர்களிடம் எனக்குத் தெரிந்த இந்தியில் பேசிக்கொண்டிருந்தேன். கங்கையில் குளிப்பாட்ட வீட்டிலிருந்து தவழும் கிருஷ்ணன் விக்கிரகத்தை எடுத்து வந்திருக்கிறார்கள். குழந்தை இல்லை என்று நினைக்கிறேன். வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கத் தெரிந்து விட்டால் வாழ்க்கையே சொர்க்கம் தான். பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தரும் என்று நினைத்து, வாழும் கணங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கிடையில் அந்த தம்பதியரை எனக்கு மிகவும் பிடித்தது. நாம் சந்திக்கும் மனிதர்கள் நமக்கு கற்பிக்கும் பாடங்கள் ஏராளம்!

அங்கு இது போல் பல அழகான காட்சிகள். எழுதிக் கொண்டே இருக்கலாம்😎

பௌர்ணமி நாளன்று பால் நிலா வெளிச்சத்தில் கங்கா ஜொலித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று ஈஷ்வர் ‘தஷஷ்வமேதா’ படித்துறையில் ஆரத்தி நடக்கிறது என்று சொல்ல, நடுவில் இருந்த இரண்டு கோவில்களைத் தாண்டிச் சென்றால் படகுகளில் மக்கள் ஆரத்தி மேடையை நோக்கி அமர்ந்திருந்தார்கள். படிகளில் நல்ல கூட்டம். நாங்களும் ஐக்கியமானோம். வழக்கமாக ஏழு புரோகிதர்கள் கங்கா ஆரத்தி பூஜை செய்யுமிடத்தில் வெள்ளம் காரணமாக ஐந்து பேர் மட்டும் செய்தார்கள். கோவிலில் பூஜை முடிந்த பிறகு ஒருவர் ஆரத்தி பாடல்களைப் பாட, கங்கா தேவிக்கு மலர்கள் தூவி தூப, தீப பூஜை அமர்க்களமாக நடைபெற்றது. இந்தப் பூஜையின் அழகே புரோகிதர்கள் ஒன்றாக பூஜை செய்யும் நேர்த்தியும் தீப ஒளி, மணிச்சத்தம் என்று மனதை ஒருமுகப்படுத்தும் நிகழ்வும் தான். சில நிமிடங்கள் மனம் அமைதி கொள்வதைப் பூரணமாக உணர முடிகிறது. நிலாவும் பூஜையில் பங்கு கொண்டது போல வானில் உலா வந்து கொண்டிருந்தது. பலரும் தங்கள் கைபேசி வழியே ஊரில் உள்ளவர்களுக்கும் ஆரத்தி நிகழ்வைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். ஹரித்வார், காசியை விட ரிஷிகேஷில் நடந்த ஆரத்தி பூஜை தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயற்கையை வணங்கிப் போற்றுதல் என்பது இந்து சமயத்தின் அங்கமாகவே இருந்து வருகிறது. ஆனாலும் அவற்றைப் பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் அசுத்தப்படுத்தி வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கிறோமே என்று வருத்தமாக இருக்கிறது😞

பௌர்ணமி நாளில் ஆரத்திநிகழ்ச்சியைப் பார்த்த திருப்தியுடன் இரவு உணவுக்குச் சுடச்சுட இட்லி சாப்பிட்டோம். காசியில் உணவு விலை மிகவும் குறைவு. ஒரு இட்லி 10ரூபாய். தோசை 15 ரூபாய். வடை 10 ரூபாய். மல்லிகைப்பூ இட்லி! காசியில் கிடைக்கிறது! அத்தனை இட்லிக்கடைகள்! தோசையும் சூப்பர்! காலையில் எட்டு மணியிலிருந்து இரவு 8 மணி வரை நல்ல வியாபாரம்! மூன்று சகோதரர்கள் சேர்ந்து ஒரு கடை நடத்துகிறார்கள். வடை, ஆமவடை எல்லாம் வாவ் ரகம்! அந்தச் சின்னக்கடையில் இரண்டே இரண்டு மேஜைகள். 8 நாற்காலிகள். வெளிநாட்டினர் பலரும் உட்கார்ந்து சாம்பாரில் இட்லியைத் தோய்த்து அழகாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த உணவகத்தின் வாடிக்கையாளர்களாகி விட்டோம். நெய்யில் பொரித்த கச்சோரியும் கிழங்கு மசாலாவும் இன்ன பிற ஐயிட்டங்களும் என்று குறைவில்லாமல் கிடைக்கிறது ம்ம்ம்ம்…😋

பீடாவையும் விட்டு வைக்கவில்லை. அதை அவர்கள் சில பல பொருட்களைச் சேர்த்துச் செய்யும் பாங்கே அழகு தான்! ஒரு கடையில் பீடா வாங்கும் பொழுது சோழவந்தானில் இருந்து வந்திருந்த தமிழ் குடும்பத்தைச் சந்தித்தோம். இரவு நேரங்களில் எருமைப்பாலில் செய்த மலாய்யை பாலில் சேர்த்து மண்சட்டியில் தருகிறார்கள். அந்தக் கடைகளில் வரிசையில் நின்று வாங்கிக் குடிக்க கூட்டம் காத்திருக்கிறது. சுவையோ சுவை! விட்டால் இன்னொன்றையும் குடித்திருப்பேன். பன்னீரில் செய்யும் இனிப்புகள் எல்லாம் மிக சுவையாக இருக்கிறது. ஆக, மதுரையில் நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்😑சாப்பிட்டு முடியவில்லை. நடந்து சென்று கொண்டிருப்போம். எண்ணையில் பொரிக்கிற வாசனை வந்தவுடன் அந்தக் கடையின் முன் நின்று அது என்ன இது என்ன என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டு விடுவோம். காசிக்குப் போனால் நன்றாக ஆனந்தமாகச் சாப்பிடலாம். அத்தனை வகையான பண்டங்கள்!

இரு நாட்கள் புத்த கயா, கயா சென்று பித்ரு பூஜைகளை செய்து விட்டு வந்தோம். கோவில்கள் எல்லாம் மிக அருமை. நம் ஆத்ம திருப்திக்காக செய்யும் பூஜைகளைச் சாதகமாக்கிக் கொண்டு காசைப் பிடுங்குகிறார்கள். அந்தப் பயணமும் சுவாரசியமாக இருந்தது. நிறைய எழுதலாம். கட்டுரை நீண்டு விடும்.

காசியிலிருந்து சாரநாத் மிக அருகில் இருக்கிறது. அங்கும் சென்று வந்தோம். அயோத்தி ராமர் கோவில் கட்டி முடித்த பிறகு செல்லலாம் என்று பக்கெட் லிஸ்டில் போட்டு வைத்திருக்கிறோம். அலகாபாத் திரிவேணி சங்கமம் செல்வதற்குள் ஈஷ்வருக்கு காய்ச்சல் வந்து படுத்து விட்டார். நல்ல வேளை! கோவிட் இல்லை என்றதும் சாந்தமானாலும் இரண்டு நாட்கள் அவரால் படுக்கையிலிருந்து எழுந்திருக்க கூட முடியவில்லை. அங்கிருந்த நாட்களில் மருந்துக்கடைக்காரரும், இட்லி விற்கும் சகோதரர்களும் விடுதிச் சிப்பந்திகளும் நன்கு பரிச்சயமாகி விட்டார்கள்.

காய்ச்சல் இருந்தாலும் வடை சாப்பிடுவேன் என்று ஈஷ்வர்! இட்லி, வடை, ஊத்தப்பம் நன்றாக இருக்கிறது என்று விரும்பிச் சாப்பிட்டார். 100ரூபாயில் இருவருக்கு அருமையான ஆரோக்கியமான சுவையான காலை உணவு கிடைக்கிறது! எப்படி இவர்களால் மட்டும் இத்தனை குறைந்த விலைக்கு விற்க முடிகிறது? நம்மூரில் கொள்ளை விலை விற்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது! சாப்பிட்டவுடன் கொஞ்சம் தெம்பானார் ஈஷ்வர். “இன்றும் நன்கு படுத்து உறங்கி ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல வெயில் அடிக்கிறது. வம்பு வேண்டாம்” என்று நான் மட்டும் அண்ணாவுடன் அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் இருக்கும் சாளக்கிராமம் பார்த்து விட்டு வரக் கிளம்பினேன். ஈஷ்வரால் வர முடியவில்லையே என்று வருத்தம். “நிறைய படங்கள் எடுத்துக் கொண்டு வா” என்றார்.


நகரின் நடுவே மிகப்பெரிய வீட்டில் ஒரு தொட்டி நிறைய சாளக்கிராமம். இதற்கென்றே கட்டியிருக்கிறார்கள். “பரம்பரை பரம்பரையாக சேர்த்து வைத்தது. வீட்டில் வைத்துப் பூஜை செய்ய முடியாதவர்கள் கொண்டு வந்து கொடுத்தது என்று 10,000 வரை இருக்கும்” என்று கூறினார். அந்த அறையைப் பராமரிக்க மட்டுமே ஒரு ஆளை வைத்திருக்கிறார்கள். தினமும் அபிஷேகம் செய்து எண்ணையில் துடைத்து வைக்கிறார்கள். பூமாலைகளைக் கொடுத்து எங்களைப் பூஜை செய்யச் சொன்னார். ஈஷ்வர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாங்களும் பூஜைகள் செய்து வணங்கினோம். சுடச்சுட பூரி, ஒரு கப் தயிர், குலாப்ஜாமூன், ஆச்சார் எல்லாவற்றையும் அழகாக பெரிய தட்டில் சின்னச் சின்ன கோப்பைகளில் உணவகங்களில் பரிமாறுவதுபோல் எடுத்துக் கொண்டு வந்தார் அவர் மனைவி. சிறிது நேரம் பேசிவிட்டு சாளக்கிராமம் பார்க்க, பூஜை செய்ய எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கூறி கிளம்பினோம். பெரும் வசதி படைத்தவர் தான். ஆனால் அவருக்குப் பெருந்துயரம் ஒன்றும் இருந்தது. பணம், வசதிகள் இருந்தால் கவலைகள் இருக்காது என்று யார் சொன்னார்கள்? எங்களிடம் அவருடைய துயரத்தைப் பகிர்ந்து கொண்ட பொழுது,ஈஷ்வரா! இவருடைய கவலை விரைவில் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டேன்.

வெயில் பாடாய் படுத்தியது. மழை வரும் போலிருக்கிறது. அத்தனை வெக்கை! விடுதிக்குத் திரும்பியதும் ஈஷ்வரிடம் படங்களைக் காட்டி நாங்கள் பேசியதைக் கூறினேன். அவரும் அவர்களுடைய துயரத்தைக் கேட்டு கவலைப்பட்டார். காய்ச்சல் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது. அடுத்த நாள் என் பங்கிற்கு காய்ச்சல். அன்று ஈஷ்வர் வெளியில் சென்று வந்தார்.


ஒருநாள் நகரத்தார் சத்திரத்திற்குச் சென்று வந்தோம். குப்தகாசியில் சந்தித்த செட்டியார் குடும்பங்களில் இருவர் அங்கே நிர்வாகக் குழுவில் இருக்கிறார்கள். அவர்கள் எங்களை அங்கு தங்க ஏற்பாடுகள் செய்வதாகக் கூறினார்கள். நாங்கள் தான் ஹோட்டலில் தங்க முன்னேற்பாடுகள் செய்து விட்டதைக் கூறி அங்கு சென்று வருகிறோம் என்று கூறியிருந்தோம். அத்தனை பெரிய சத்திரம்! வெளியில் இருந்து பார்த்தாலே காரைக்குடியில் இருக்கும் வீடுகளின் அமைப்பில் இருப்பது தெரியும். உள்ளே ஜன்னல்கள் இல்லாத இடத்தில இருட்டாக இருக்கிறது. சுத்தமாக நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். அவரவர் வசதிக்கேற்ப தனி அறைகளிலோ, ஹாலிலோ அல்லது வெளியில் வராண்டாவிலோ தங்கிக் கொள்ளலாம். பல தங்கும் அறைகள் இருக்கிறது. நிறைய யாத்திரீகர்கள் தங்கி இருந்தார்கள். அங்கே எனக்கு மிகவும் பிடித்தது அமைதியும் அழகும் ஒரு சேர இருந்த ஈஸ்வரன் கோவில் தான். அம்மாவும் அப்பாவும் காசிக்குச் சென்றிருந்தபொழுது அங்குதான் தனியறை எடுத்துத் தங்கி இருந்தார்கள். அங்கேயே சாப்பிடும் வசதியும் இருக்கிறது. ஊரைச் சுற்றிப்பார்க்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கிறார்கள்.குறைந்த கட்டணத்தில் தங்கவும் சாப்பிடவும் முடிவதால் தமிழர்கள் பலரும் அங்கே தங்குகிறார்கள்.

நகரத்தார் சார்பில் காசி விஸ்வநாதர் கோவிலின் பூஜைக்கான பால் மேள தாளத்துடன் தினமும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. சென்ற வருடம் தான் இவர்களின் ரூ.240 கோடி மதிப்புள்ள நிலத்தை சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களிடம் இருந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு மீட்டுக்கொடுத்துள்ளது.

காசியில் வெயில் அடித்தால் எனக்கென்ன உனக்கென்ன என்று சாத்துகிறது. மதுரை வெயில் எல்லாம் வெயிலே அல்ல. இங்கு உஷ்ணம் வேறு மாதிரி இருக்கிறது. எப்படித்தான் கோடையை சமாளிக்கிறார்களோ😨குளிரும் அப்படிதான் இருக்குமோ? மழை பெய்தால் தெருக்களில் தண்ணீர் ஓடி சாணி , நாய் ‘ஆய்’ என்று களேபரமாக உள்ளது😑 மழையும் வெயிலும் இல்லாத பட்சத்தில் இவைகளைக் கடந்து சென்று விட முடிகிறது. இது ஒன்று தான் காசியில் எனக்கு நெருடலாக இருந்தது. மற்றபடி படித்துறைகள் எல்லாம் சுத்தமாக இருந்தது. ஆற்றுத்தண்ணீரின் சுத்தத்தை அரசு அதிகாரி ஒருவர் தினமும் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அரசு ஓரளவிற்குத் தான் சுத்தத்தைப் பேணிக் காக்க முடியும். நான் பார்த்தவரையில் தெருக்கள், படிகளைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். குடிமக்கள் நாமும் ஒத்துழைத்தால் தான் இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.

கங்காவில் குளித்தால் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. மகாபாரதப் போருக்குப் பின் திருதிராஷ்ட்ரன், காந்தாரி, குந்திதேவி மூவரும் இங்கு குளித்துப் பின் இறுதிப்பயணத்தைத் தொடர்ந்தார்கள். பாண்டவர்களும் தங்கள் பாவங்கள் தீர, சிவனை நோக்கித் தவம் புரிவதற்கு முன் கங்கையில் குளித்தார்கள் என்பது ஐதீகம். இமயத்தில் கௌமுக் பனிமலையில் உற்பத்தியாகி பாகீரதியாக கங்கோத்ரியில் இருந்து 120மைல்கள் தெற்கே பயணித்து ரிஷிகேஷில் சமவெளியில் ஓடி வரும் நதியை உலகைக் காக்கும் அன்னையாக இந்துக்கள் வழிபடுவதால் ‘மா கங்கா’ புண்ணிய நதியாகிறாள். அவள் வரும் வழிதோறும் ‘தேவபூமி’ ஆனது.

கங்கையை நோக்கிய எங்கள் பயணம் ஹரித்துவாரில் தொடங்கியது. நல்லவேளையாக தடங்கல்கள் ஏதுமின்றி ‘சார்தாம்’ பயணம் இனிமையாக நினைத்தபடி முடிந்து விட்டது. மழையும், கூட்டமும் இருக்காது என்று நம்பித்தான் செப்டம்பர் மாத இறுதியில் பயணத்தை நாங்கள் திட்டமிட்டிருந்தோம். எங்கள் ராசிக்கு தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேல் மழை பொழிந்து காட்டாற்று வெள்ளத்தை யமுனை, கங்கா ஆறுகளில் பார்த்து அரண்டு போனோம். வழியில் மலைச்சரிவு, சாலைகள் பிளந்து இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை😞 செப்டம்பர்-அக்டோபரில் வந்தால் இவற்றையெல்லாம் எதிர்பார்த்து வர வேண்டும். ரிஷிகேஷில் சிறிது நேர மதிய வெயிலே தாங்கிக் கொள்ள முடியாதபடி இருந்தது. சுற்றிலும் மலைகள் இருக்கே! நன்றாக ‘குளுகுளு’வென்று இருக்கும் என்று நினைத்தது அங்கே நடக்கவில்லை. இப்பவே இப்படி மண்டைய பொளக்குதே கோடையில் வந்தால் வெந்து சாம்பலாக வேண்டியது தான். அதுவுமில்லாமல் கோடையில் ‘சார்தாம்’ கோவில்களில் நீண்ட வரிசையும் காத்திருப்புகளும் இருக்கும் என்று கேள்விப்பட்டோம். ஆனாலும் மழையில் நனைந்த இமயமலை, சாலைகள், வண்டல் மண்ணைச் சுமந்து ஓடி வரும் ஆறுகள், ஆயிரம் வருடங்களுக்கும் மேலான புராதனக் கோவில்களைக் கண்டதில் நிறைவான பயணமாக அமைந்து விட்டதில் எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி. 

‘கங்கையை நோக்கிய’ இந்தப் பயணம் வாழ்நாள் முழுவதும் நினைத்து மகிழும் பேரனுபவமாக அவன் அருளால் இனிதே அமைந்தததற்கு நன்றி கூறி தொடரை முடித்துக் கொள்கிறேன். 

தொடர் முழுவதையும் பொறுமையாக வாசித்த அன்பர்களுக்கு என் நன்றிகள்!

ஹர ஹர மஹாதேவ!

***

No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...