நவோதயா பள்ளிகள் பற்றி சொல்வனத்தில் வெளிவந்த என் கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும். இந்திய மறுமலர்ச்சியைக் கொணரும் நவோதயா பள்ளிகள்
கற்றவருக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பதை அறிந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்பாடுபட்டாவது நல்ல கல்வியைப் பெற்றுத் தர போராடி வருகிறார்கள். இன்றைய சூழலில் அன்றாட வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான அறிவையும், திறன்களையும் வழங்கும் தரமான அடிப்படைக் கல்வி குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டியது அவசியம். காலத்தின் கட்டாயமும் கூட. இது வறுமையைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, பாலின சமத்துவத்தை அடைவதற்கும் சமூக மேம்பாட்டிற்கும் முக்கிய உந்துதலாக இருக்கும். எந்தவொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமான காரணியாக இருப்பதால் தான் உலகெங்கிலும் இயங்கும் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி கிடைத்திட பல நாட்டு அரசுகளும் முனைப்புள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே எழுத்தறிவு பெற்றோரின் விகிதத்தை மேம்படுத்துவதில் இந்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டே பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகளில் பயிலும் பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த கிராமப்புற மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் “மாதிரி பள்ளிகள்” எனப்படும் இணை கல்வி நிறுவனங்களை அமைக்க 1985ல் மத்திய அரசு தீர்மானித்தது. அன்றைய பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி, “ஜவஹர் நவோதயா வித்யாலயா(ஜேஎன்வி)” எனப்படும் பள்ளிகளை, இருபாலாருக்குமான ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான இலவச குடியிருப்புப் பள்ளிகள் திட்டமாக, 1986ல் தொடங்கி வைத்தார். கல்வி அமைச்சகத்தின் கீழ் “நவோதயா வித்யாலயா சமிதி” எனும் ஒரு தன்னாட்சி அமைப்பு இப்பள்ளிகளை நிர்வகிக்கிறது. பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த திறமையான கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்வதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களும் தங்கள் நகர்ப்புற சக மாணவர்களுடன் சம நிலையில் போட்டியிடவும் முன்னேறும் வாய்ப்புகள் பெற்றிடவும் உதவும் வண்ணம் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டங்கள் இத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தரமான நவீன கல்வி, கலாச்சாரத்தின் வலுவான அம்சங்கள், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு, சாகசச் செயல்பாடுகள், உடற்கல்வி என அனைத்தையும் வழங்கும் அம்சங்களைக் கொண்டது இத்திட்டம்.
இப்பள்ளிகளில் சேர விரும்பும் அரசுப் பள்ளி கிராமப்புற மாணவர்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஜவஹர் நவோதயா வித்யாலயா தேர்வுத் தேர்வில் (JNVST) தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே அந்த மாவட்டத்தில் உள்ள ஜேஎன்வி பள்ளிகளில் கல்வி கற்க இயலும். கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சிப் பெறும் வகையில் தேர்வு வடிவமைக்கப்பட்டு தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் எந்தவித சிரமமும் இன்றி இலவசமாக சேர்க்கைப் படிவங்களைப் பெறுவதை உறுதி செய்யவும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, உள்ளூர் செய்தித்தாள்கள், துண்டுப் பிரசுரங்கள், வித்யாலயா இணையதளங்கள் மற்றும் மாவட்டத்தின் உள்ளூர் பள்ளிகளுக்கு நவோதயா வித்யாலயா அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைகள் மூலம் போதுமான விளம்பரங்களும் செய்யப்படுகிறது. ஜேஎன்வி அமைந்துள்ள மாவட்டத்தின் அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது தேசிய திறந்தநிலைப் பள்ளியின் ‘பி’ சான்றிதழ் திறன் பெற்ற ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மட்டுமே இத்தேர்வுக்காக விண்ணப்பிக்க இயலும்.
கிராமப்புற ஒதுக்கீட்டில் சேர்க்கை கோரும் மாணவர்கள், அரசுப் பள்ளியிலிருந்து 3,4,5ம் வகுப்புகளைப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டுமே இந்த தகுதித் தேர்வு எழுத முடியும். ஒரு மாவட்ட பள்ளியில் குறைந்தபட்சம் 75 சதவிகித இடங்கள் கிராமப்புறங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களாலும் மீதமுள்ள இடங்கள் நகர்ப்புற பள்ளி மாணவர்களாலும் மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு மாணவிகளாலும் நிரப்பப்படுகின்றன. எந்த மாவட்டத்திலும் தேசிய சராசரியை விட (எஸ்சி 15% ,எஸ்டி 7.5% , ஓபிசி 27%) இடஒதுக்கீடு குறைவாக இருக்கக் கூடாது என்பது தான் சட்டம். இதைத்தவிர உடற்குறைபாடு உள்ளவர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளது. JNVST அறிவித்துள்ள மாநில மொழிகளிலும் (தமிழும் இதில் அடங்கும்) ஆங்கிலத்திலும் தேர்வு எழுதும் வசதிகளும் உள்ளது சிறப்பு.
ஒவ்வொரு நவோதயா வித்யாலயாவும் மாணவர்களுக்குத் தங்கும் விடுதி, பள்ளிச் சீருடைகள், பாடப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், தினசரி உபயோகப் பொருட்கள், மருத்துவச் செலவு, சிபிஎஸ்இ , ரயில் மற்றும் பேருந்து கட்டணங்களை இலவசமாக வழங்குகிறது. இருப்பினும், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடமிருந்து வித்யாலயா விகாஸ் நிதியாக மாதம் ரூபாய் 600/- வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் குழந்தைகள் இந்தக் கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் மாதந்தோறும் ரூ.1500 செலுத்த வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பிற்கும் அதிக செலவுகள் செய்யப்படுகிறது. இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க ஆறு சிறப்புப் பயிற்சி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நவோதயா வித்யாலயா சமிதியின் திட்டங்களுக்கான நிதியை பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் மத்திய அரசாங்கத்தால் வழங்குகின்றன.
நவோதயா வித்யாலயா திட்டத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மக்களின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட மொழிவாரி பிராந்தியத்தில் உள்ள ஒரு நவோதயா வித்யாலயாவிலிருந்து மற்றொரு மொழிவாரி பிராந்தியத்தில் உள்ள வித்யாலயாவிற்கு மாணவர்கள் இடம்பெயர்வது ஆகும். இத்திட்டத்தின்படி, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 30% குழந்தைகள் ஒரு ஜேஎன்வி-யில் இருந்து மற்றொரு ஜேஎன்வி-க்கு ஒரு கல்வியாண்டுக்கு இடம்பெயர்கின்றனர். பொதுவாக இந்தி பேசும் மற்றும் இந்தி பேசாத மாவட்டங்களுக்கு இடையே நடைபெறும் இடப்பெயர்வு தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான சமிதியின் முக்கிய அம்சமாகும். நவோதயா வித்யாலயாக்கள் சிபிஎஸ்இ-ன் மும்மொழிக் கொள்கையைப் (பிராந்திய மொழி, இந்தி, ஆங்கிலம்) பின்பற்றுகின்றன.
சிபிஎஸ்இ நடத்தும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஜேஎன்வி மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்த சிபிஎஸ்இ தேசிய சராசரியை விட தொடர்ந்து சிறப்பாக இருப்பது சமிதி சரியான திசையில் நகர்வதைக் காட்டுகின்றன. கற்பித்தல், கற்றல் செயல்பாட்டில் புதுமைகள், சோதனைகள், சமீபத்திய கல்வித் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற ஆசிரியர்களின் பயிற்சி, வித்யாலயா ஆய்வகங்கள், நூலகம், கணிதம், அறிவியல் ஆய்வகங்களின் பயன்பாடு, வகுப்பறை பரிவர்த்தனை, பயனுள்ள தகவல் தொடர்பு, கணக்கீட்டு திறன், தொழில் ஆலோசனை மற்றும் ஊக்கமளிக்கும் அமர்வுகள் என ஒவ்வொன்றும் திட்டமிட்டு செய்யப்படுவதால் கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்ற பிற பள்ளி அமைப்புகளின் சராசரி தேர்ச்சி சதவீதங்களை ஒப்பிடுகையில் நவோதயா வித்யாலயா சமிதிப் பள்ளி மாணவர்களின் படிப்பறிவு சிறந்து விளங்குகிறது.
2020-21ல் 636 பள்ளிகளில் சேர பதிவு செய்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 25,43,459. தகுதித் தேர்வு எழுதியவர்கள் 19,27,354 பேர். தேர்ச்சி பெற்றவர்கள் 45,291.
சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்களும் தடையின்றி ஒருங்கிணைய ஒரு தனித்துவமான பரிசோதனையாகத் தொடங்கிய நவோதயா வித்யாலயா அமைப்பு, இன்று தமிழ்நாட்டைத் தவிர அனைத்து இந்திய மாநிலங்களில் நிறுவப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் மாநில அரசாங்கங்கள் பள்ளி வளாகத்திற்கான நிலங்களை மட்டுமே அளிக்கின்றன. மற்ற செலவுகள் அனைத்தும் மத்திய அரசு நிதியால் பராமரிக்கப்படுவதால் பிற மாநிலங்கள் இம்முயற்சிக்குப் பெரும் ஆதரவை அளித்து கிராமப்புற ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்திருக்கின்றன.
இந்தி எதிர்ப்புப் பிரச்சாரமும் தமிழ், ஆங்கிலம் எனும் “இரு மொழிக்கொள்கை” அரசியலால் லாபத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில் மட்டும் இன்று வரையில் ஆங்கிலம், மாநில/வேற்று நாட்டு மொழியுடன் ஹிந்தி மொழிப் பாடங்கள் என “மும்மொழிக்கொள்கை” வசதி வாய்ப்புள்ள மாணவர்களுக்கு மட்டும் தமிழ்நாட்டில் தொடர்வதும் ஒருவிதத் தீண்டாமை தான். ஜேஎன்வி பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு ஆங்கிலமும், மாநில மொழியும் தற்போது முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் இன்று வரையில் அரசியல் செய்யும் திராவிடக் கட்சிகளால் திறமையுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இலவச கல்வி வாய்ப்புகளைத் தமிழகம் இழந்து வருகிறது.
சமூக நீதிக்காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் தனியார் பள்ளிகளில் பயிலும் வசதி வாய்ப்புகள் நிறைந்த மாணவர்களுக்கு ஹிந்தி மொழி கற்கத் தடையேதும் விதிக்காமல் அதைக் காரணமாகக் காட்டி, ஜவஹர் நவோதயா பள்ளிகளை அனுமதிக்காமல் இருப்பதும் அரசியலே அன்றி வேறு எதுவும் இல்லை. அவர்களுடைய கூட்டணிக்கட்சிகளும் அமைதி காப்பது வாக்களித்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இவர்கள் செய்யும் அநீதியே.
இந்தியாவின் பிற மாநிலங்களில் 638 மாவட்டங்களில் 661 நவோதயா பள்ளிகள் இருப்பது போல் தமிழகத்திலும் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்கி வசதி வாய்ப்புகள் குறைந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை முன்னெடுக்க அரசு ஆதரவளிக்க வேண்டும்.
கல்வி என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமை ஆகும். நல்ல தரமான கல்வி நாகரீக நடத்தை கொண்ட சமூகத்தை உள்ளடக்கிய ஜனநாயகத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு பெறுகிறது. மேலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூக மேம்பாட்டிற்கும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவுகிறது.
36 வருடங்களாக மத்திய அரசு கொண்டு வந்த ஒரு நல்ல திட்டத்தை சுயலாப அரசியல் காரணமாக செயல்படுத்தாமல் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு திராவிடக் கட்சிகள் இழைக்கும் அநீதி இனியும் தொடராது என நம்புவோம். கேரளா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா முதல் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் மூலம் உண்மையான சமூகநீதி உருவாகட்டும். பிற்படுத்தப்பட்ட ஏழை கிராமப்புற மாணவர்களின் வாழ்விலும் விடியல் பிறக்கட்டும்.
No comments:
Post a Comment