அமெரிக்காவில் தினம் ஒரு நாளை யாருக்காவது அர்ப்பணித்துக் கொண்டாடினாலும் சில நாட்கள் மிகுந்த அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது. இந்த வருடம் மே மாதம் 6ந் தேதி செவிலியர் தினம். மே 12 வரை செவிலியர் வாரமாக நாட்டில் கொண்டாடுகிறார்கள். மருத்துவர்களைப் போலவே செவிலியர்களின் பங்கும் மருத்துவத்துறையில் அளப்பரியது. அதுவும் இந்த தொற்றுப்பரவல் காலகட்டத்தில் பெற்றோர், உற்றார்களை விட நோயாளிகளின் அருகில் இருந்தவர்கள் இவர்கள் தான். இதற்கு முன் என்னுடைய தனிப்பட்ட மருத்துவ விடுதி அனுபவத்திலும் இதை நேரில் கண்டிருக்கிறேன். என்ன தான் அவர்களுடைய பணியாக இருந்தாலும் பெரும்பான்மையோர் அதை கடமைக்காக மட்டும் செய்யாமல் அன்பாக நோயாளிகளைப் பராமரிப்பதால் தான் அவர்களின் செயலும் புனிதமாக போற்றப்படுகிறது. தேசிய செவிலியர் வாரத்தின் புதன்கிழமையன்று "தேசிய பள்ளி செவிலியர் தினம்" கொண்டாடப்படுகிறது என்று இன்று தெரிந்து கொண்டேன். பள்ளிகளில் குழந்தைகளைப் பராமரிக்கும் அனைத்துப் பள்ளி செவிலியர்களையும் கௌரவிக்கிறது இந்நாள்.
மகளின் ஆரம்பப்பள்ளி வயதில் ஒருநாள் "உங்கள் மகளுக்கு காய்ச்சல் இருக்கிறது. வந்து அழைத்துச் செல்லுங்கள்" என்று தொலைபேசியில் அழைப்பு.
அவளிடம் நான் பேசமுடியுமா என்று கேட்டு
"என்னாச்சு? காலையில நல்லா தான இருந்த?"
"திடீர்னு தலை வலிச்சது. ஸ்கூல் நர்ஸ் தான் காய்ச்சல் இருக்குன்னு சொல்லி அவங்க ரூம்ல இருக்கச் சொல்லிட்டாங்க."
"சரி நான் வர்றேன்."
அன்று தான் தெரிந்தது அனைத்துப் பள்ளிகளிலும் ஒரு செவிலியர் இருப்பார் என்று. சுகமில்லாத குழந்தைகளைப் பரிசோதித்துப் பெற்றோர்களுக்குத் தகவல் தருவது மட்டுமில்லாமல், பள்ளிக் குழந்தைகளுக்கும் சத்தான உணவு, ஆரோக்கியம் பற்றி வகுப்புகள் எடுப்பார் என்றும் தெரிந்து கொண்டேன். தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்ளும் குழந்தைகளின் மருந்துகளைப் பள்ளி நேரத்தில் அவருடைய கண்காணிப்பில் தான் கொடுக்கிறார்கள். பள்ளியில் யாருக்காவது தொற்றுப்பரவல், நோய்களின் அறிகுறி இருந்தால் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவிக்க வேண்டியது அவருடைய கடமை.
மதுரையில் நான் படித்த பள்ளியில் முதலுதவிப் பெட்டியில் காயங்களுக்குப் போடும் மருந்துகள் இருக்கும். அவ்வளவு தான். தகுதி வாய்ந்த செவிலியரோ அவருக்கென தனிஅறையோ எதுவும் இருந்ததில்லை. கண்டிப்பாக பள்ளிகளில் ஒரு செவிலியர், மாணவர்களை நல்வழிப்படுத்தும் கவுன்சிலர் அவசியம் இருப்பதும் நல்லது என அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.
செவிலியர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
Wednesday, May 11, 2022
National School Nurse Day
எங்கே நிம்மதி?
"ஏண்டா, அலுவலகத்திற்கு வருகிறோம் என்றிருக்கிறது. யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை. பேசவே பிடிக்கவில்லை. வேறு வழியின்றி வந்து தொலைய வேண்டியிருக்கிறது" புலம்பித் தள்ளி விட்டார்.
பல வருடங்களாக எனக்கு அறிமுகம். வயதும் முப்பதுக்குள் தான் இருக்கும். வேலையின் நெளிவு சுளிவுகளை நன்கு அறிந்த அறிவாளி. அரைத்தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் அரசின் புதிய கொள்கைகளை ஒப்பிக்கும் அளவுக்கு வேலையில் அத்தனை ஈடுபாடு!
"என்னாச்சு?" என கேட்டேன்.
இத்தனை வருடங்களாக உயிரைக் கொடுத்து வேலை பார்க்கிறேன். பதவி உயர்வுக்கான அத்தனை தகுதிகள் இருந்தும் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று வருத்ததுடன் சொன்னார்.
"வேறு அலுவலகத்திற்குப் போகலாமே"?
"அதையும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நேற்று வந்தவர்கள் எல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். யாரையும் பிடிக்கவில்லை."
"சீக்கிரம் உங்கள் விருப்பப்படி நடக்கட்டும். பை" சொல்லி என்னுடைய தளத்தில் இறங்கிக் கொண்டேன்.
நேர்மையாக தானுண்டு தன் வேலையுண்டு என்று கர்மசிரத்தையாக வேலை செய்பவர்களை விட உயர் அதிகரிகளுடன் வலிந்து பேசி சோப்பு போடுபவர்கள் விரைவில் அதிகாரப்பதவிகள் பெற்று முன்னேறுகிறார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது. அதில் வந்த எரிச்சல் தான் நண்பரை இப்படி புலம்ப வைத்திருக்கிறது என்று தெரிந்தது. இப்படி புலம்புவர்களிடம் நான் சொல்வது "நீங்கள் உங்கள் அலுவலகத்தில் அடைந்து கிடக்காமல் உயர் அதிகாரிகளுடன் பேசுங்கள், நட்பு பாராட்டுங்கள். அப்பொழுது தானே அவர்களுக்கும் உங்களைப் பற்றித் தெரிய வரும்."
"அந்த மாதிரி அவர்கள் காலை நக்க வேண்டிய அவசியம் இல்லை. பழக்கமுமில்லை." என்று இயலாமையுடன் கூறுவார்கள். பணியிடத்தில் நன்கு வேலை செய்வது மட்டும் முக்கியம் அல்ல. மேலதிகாரிகளுடன் கலந்துரையாடுவதும் முக்கியம்.
அடிக்கடி நண்பரைச் சந்திக்கும் போதெல்லாம் அய்யோயோ இன்னிக்கு என்னத்த சொல்லிப் புலம்ப போகிறாரோ என்றிருக்கும்.
இன்று மீண்டும் சந்திக்கையில் சிரித்துக் கொண்டே "எனக்குப் பதவி உயர்வு கிடைத்து விட்டது. என்ன, காலையிலிருந்து மாலை வரை ஒரே மீட்டிங். அப்புறம் வழக்கமான வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கிறது."
ம்ம்ம்ம்...அடுத்த புலம்பலா?
"நீ கேட்டது உனக்கு கிடைச்சிருக்கு." என்றேன்.
"ஆமாம். நானே வலிய போய் வம்ப வாங்கிக்கிட்டேன்." சிரித்துக் கொண்டே சொன்னவர், "இன்னும் சில வாரங்களில் என்னுடைய வேலைகளைப் பங்குகொள்ள இருவரைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன். கொடுமை என்னவென்றால் ஆட்களே கிடைக்க மாட்றாங்க!"
"ரியலி?"
"ஆமா. ஒருத்தன் வீட்ல இருந்து வேலை பார்க்க அனுமதிப்பீங்களான்னு கேட்டான். இன்னொருத்தன் குறைந்தது 50% வீட்ல இருந்து வேலை பார்க்க அனுமதி கொடுத்தா வர்றேன்ன்னு சொல்லிட்டான்."
அடப்பாவிங்களா! வேலை இல்லைன்னு நாயா பேயா அலைய வேண்டியது. வேலை இருந்தா இப்படி வெட்டி நாயம் பேசிட்டுத் திரியறது. ஆனாலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள் பெருகி விட்டதும் இவர்கள் இப்படியெல்லாம் கேட்பதற்கு ஒரு காரணம்.
"சீக்கிரம் ஆட்கள் கிடைக்கட்டும்.பை" சொல்லிவிட்டு வந்தேன்.
அடேய் கொரோனா ! எப்படி மக்களை மாற்றி வைத்திருக்கிறாய் ?
இனி ஆட்கள் கிடைக்கும் வரை சின்னத்தம்பி புலம்பிட்டு இருப்பானேன்னு நினைச்சாத்தான்...
Tuesday, May 10, 2022
இந்திய மறுமலர்ச்சியைக் கொணரும் நவோதயா பள்ளிகள்
இந்திய மறுமலர்ச்சியைக் கொணரும் நவோதயா பள்ளிகள்
கற்றவருக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பதை அறிந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்பாடுபட்டாவது நல்ல கல்வியைப் பெற்றுத் தர போராடி வருகிறார்கள். இன்றைய சூழலில் அன்றாட வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான அறிவையும், திறன்களையும் வழங்கும் தரமான அடிப்படைக் கல்வி குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டியது அவசியம். காலத்தின் கட்டாயமும் கூட. இது வறுமையைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, பாலின சமத்துவத்தை அடைவதற்கும் சமூக மேம்பாட்டிற்கும் முக்கிய உந்துதலாக இருக்கும். எந்தவொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி மிக முக்கியமான காரணியாக இருப்பதால் தான் உலகெங்கிலும் இயங்கும் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி கிடைத்திட பல நாட்டு அரசுகளும் முனைப்புள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே எழுத்தறிவு பெற்றோரின் விகிதத்தை மேம்படுத்துவதில் இந்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டே பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகளில் பயிலும் பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த கிராமப்புற மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் “மாதிரி பள்ளிகள்” எனப்படும் இணை கல்வி நிறுவனங்களை அமைக்க 1985ல் மத்திய அரசு தீர்மானித்தது. அன்றைய பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி, “ஜவஹர் நவோதயா வித்யாலயா(ஜேஎன்வி)” எனப்படும் பள்ளிகளை, இருபாலாருக்குமான ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான இலவச குடியிருப்புப் பள்ளிகள் திட்டமாக, 1986ல் தொடங்கி வைத்தார். கல்வி அமைச்சகத்தின் கீழ் “நவோதயா வித்யாலயா சமிதி” எனும் ஒரு தன்னாட்சி அமைப்பு இப்பள்ளிகளை நிர்வகிக்கிறது. பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த திறமையான கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்வதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களும் தங்கள் நகர்ப்புற சக மாணவர்களுடன் சம நிலையில் போட்டியிடவும் முன்னேறும் வாய்ப்புகள் பெற்றிடவும் உதவும் வண்ணம் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டங்கள் இத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தரமான நவீன கல்வி, கலாச்சாரத்தின் வலுவான அம்சங்கள், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு, சாகசச் செயல்பாடுகள், உடற்கல்வி என அனைத்தையும் வழங்கும் அம்சங்களைக் கொண்டது இத்திட்டம்.
இப்பள்ளிகளில் சேர விரும்பும் அரசுப் பள்ளி கிராமப்புற மாணவர்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) வடிவமைக்கப்பட்டு நடத்தப்படும் ஜவஹர் நவோதயா வித்யாலயா தேர்வுத் தேர்வில் (JNVST) தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே அந்த மாவட்டத்தில் உள்ள ஜேஎன்வி பள்ளிகளில் கல்வி கற்க இயலும். கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சிப் பெறும் வகையில் தேர்வு வடிவமைக்கப்பட்டு தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் குழந்தைகள் எந்தவித சிரமமும் இன்றி இலவசமாக சேர்க்கைப் படிவங்களைப் பெறுவதை உறுதி செய்யவும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, உள்ளூர் செய்தித்தாள்கள், துண்டுப் பிரசுரங்கள், வித்யாலயா இணையதளங்கள் மற்றும் மாவட்டத்தின் உள்ளூர் பள்ளிகளுக்கு நவோதயா வித்யாலயா அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைகள் மூலம் போதுமான விளம்பரங்களும் செய்யப்படுகிறது. ஜேஎன்வி அமைந்துள்ள மாவட்டத்தின் அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது தேசிய திறந்தநிலைப் பள்ளியின் ‘பி’ சான்றிதழ் திறன் பெற்ற ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மட்டுமே இத்தேர்வுக்காக விண்ணப்பிக்க இயலும்.
கிராமப்புற ஒதுக்கீட்டில் சேர்க்கை கோரும் மாணவர்கள், அரசுப் பள்ளியிலிருந்து 3,4,5ம் வகுப்புகளைப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டுமே இந்த தகுதித் தேர்வு எழுத முடியும். ஒரு மாவட்ட பள்ளியில் குறைந்தபட்சம் 75 சதவிகித இடங்கள் கிராமப்புறங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களாலும் மீதமுள்ள இடங்கள் நகர்ப்புற பள்ளி மாணவர்களாலும் மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு மாணவிகளாலும் நிரப்பப்படுகின்றன. எந்த மாவட்டத்திலும் தேசிய சராசரியை விட (எஸ்சி 15% ,எஸ்டி 7.5% , ஓபிசி 27%) இடஒதுக்கீடு குறைவாக இருக்கக் கூடாது என்பது தான் சட்டம். இதைத்தவிர உடற்குறைபாடு உள்ளவர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளது. JNVST அறிவித்துள்ள மாநில மொழிகளிலும் (தமிழும் இதில் அடங்கும்) ஆங்கிலத்திலும் தேர்வு எழுதும் வசதிகளும் உள்ளது சிறப்பு.
ஒவ்வொரு நவோதயா வித்யாலயாவும் மாணவர்களுக்குத் தங்கும் விடுதி, பள்ளிச் சீருடைகள், பாடப் புத்தகங்கள், எழுதுபொருட்கள், தினசரி உபயோகப் பொருட்கள், மருத்துவச் செலவு, சிபிஎஸ்இ , ரயில் மற்றும் பேருந்து கட்டணங்களை இலவசமாக வழங்குகிறது. இருப்பினும், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடமிருந்து வித்யாலயா விகாஸ் நிதியாக மாதம் ரூபாய் 600/- வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் குழந்தைகள் இந்தக் கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் மாதந்தோறும் ரூ.1500 செலுத்த வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பிற்கும் அதிக செலவுகள் செய்யப்படுகிறது. இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க ஆறு சிறப்புப் பயிற்சி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நவோதயா வித்யாலயா சமிதியின் திட்டங்களுக்கான நிதியை பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் மத்திய அரசாங்கத்தால் வழங்குகின்றன.
நவோதயா வித்யாலயா திட்டத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மக்களின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட மொழிவாரி பிராந்தியத்தில் உள்ள ஒரு நவோதயா வித்யாலயாவிலிருந்து மற்றொரு மொழிவாரி பிராந்தியத்தில் உள்ள வித்யாலயாவிற்கு மாணவர்கள் இடம்பெயர்வது ஆகும். இத்திட்டத்தின்படி, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 30% குழந்தைகள் ஒரு ஜேஎன்வி-யில் இருந்து மற்றொரு ஜேஎன்வி-க்கு ஒரு கல்வியாண்டுக்கு இடம்பெயர்கின்றனர். பொதுவாக இந்தி பேசும் மற்றும் இந்தி பேசாத மாவட்டங்களுக்கு இடையே நடைபெறும் இடப்பெயர்வு தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான சமிதியின் முக்கிய அம்சமாகும். நவோதயா வித்யாலயாக்கள் சிபிஎஸ்இ-ன் மும்மொழிக் கொள்கையைப் (பிராந்திய மொழி, இந்தி, ஆங்கிலம்) பின்பற்றுகின்றன.
சிபிஎஸ்இ நடத்தும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஜேஎன்வி மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்த சிபிஎஸ்இ தேசிய சராசரியை விட தொடர்ந்து சிறப்பாக இருப்பது சமிதி சரியான திசையில் நகர்வதைக் காட்டுகின்றன. கற்பித்தல், கற்றல் செயல்பாட்டில் புதுமைகள், சோதனைகள், சமீபத்திய கல்வித் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற ஆசிரியர்களின் பயிற்சி, வித்யாலயா ஆய்வகங்கள், நூலகம், கணிதம், அறிவியல் ஆய்வகங்களின் பயன்பாடு, வகுப்பறை பரிவர்த்தனை, பயனுள்ள தகவல் தொடர்பு, கணக்கீட்டு திறன், தொழில் ஆலோசனை மற்றும் ஊக்கமளிக்கும் அமர்வுகள் என ஒவ்வொன்றும் திட்டமிட்டு செய்யப்படுவதால் கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் தனியார் பள்ளிகள் போன்ற பிற பள்ளி அமைப்புகளின் சராசரி தேர்ச்சி சதவீதங்களை ஒப்பிடுகையில் நவோதயா வித்யாலயா சமிதிப் பள்ளி மாணவர்களின் படிப்பறிவு சிறந்து விளங்குகிறது.
2020-21ல் 636 பள்ளிகளில் சேர பதிவு செய்த மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 25,43,459. தகுதித் தேர்வு எழுதியவர்கள் 19,27,354 பேர். தேர்ச்சி பெற்றவர்கள் 45,291.


சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்களும் தடையின்றி ஒருங்கிணைய ஒரு தனித்துவமான பரிசோதனையாகத் தொடங்கிய நவோதயா வித்யாலயா அமைப்பு, இன்று தமிழ்நாட்டைத் தவிர அனைத்து இந்திய மாநிலங்களில் நிறுவப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் மாநில அரசாங்கங்கள் பள்ளி வளாகத்திற்கான நிலங்களை மட்டுமே அளிக்கின்றன. மற்ற செலவுகள் அனைத்தும் மத்திய அரசு நிதியால் பராமரிக்கப்படுவதால் பிற மாநிலங்கள் இம்முயற்சிக்குப் பெரும் ஆதரவை அளித்து கிராமப்புற ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்திருக்கின்றன.
இந்தி எதிர்ப்புப் பிரச்சாரமும் தமிழ், ஆங்கிலம் எனும் “இரு மொழிக்கொள்கை” அரசியலால் லாபத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில் மட்டும் இன்று வரையில் ஆங்கிலம், மாநில/வேற்று நாட்டு மொழியுடன் ஹிந்தி மொழிப் பாடங்கள் என “மும்மொழிக்கொள்கை” வசதி வாய்ப்புள்ள மாணவர்களுக்கு மட்டும் தமிழ்நாட்டில் தொடர்வதும் ஒருவிதத் தீண்டாமை தான். ஜேஎன்வி பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு ஆங்கிலமும், மாநில மொழியும் தற்போது முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் இன்று வரையில் அரசியல் செய்யும் திராவிடக் கட்சிகளால் திறமையுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இலவச கல்வி வாய்ப்புகளைத் தமிழகம் இழந்து வருகிறது.
சமூக நீதிக்காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் தனியார் பள்ளிகளில் பயிலும் வசதி வாய்ப்புகள் நிறைந்த மாணவர்களுக்கு ஹிந்தி மொழி கற்கத் தடையேதும் விதிக்காமல் அதைக் காரணமாகக் காட்டி, ஜவஹர் நவோதயா பள்ளிகளை அனுமதிக்காமல் இருப்பதும் அரசியலே அன்றி வேறு எதுவும் இல்லை. அவர்களுடைய கூட்டணிக்கட்சிகளும் அமைதி காப்பது வாக்களித்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இவர்கள் செய்யும் அநீதியே.
இந்தியாவின் பிற மாநிலங்களில் 638 மாவட்டங்களில் 661 நவோதயா பள்ளிகள் இருப்பது போல் தமிழகத்திலும் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்கி வசதி வாய்ப்புகள் குறைந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை முன்னெடுக்க அரசு ஆதரவளிக்க வேண்டும்.
கல்வி என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமை ஆகும். நல்ல தரமான கல்வி நாகரீக நடத்தை கொண்ட சமூகத்தை உள்ளடக்கிய ஜனநாயகத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு பெறுகிறது. மேலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூக மேம்பாட்டிற்கும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவுகிறது.
36 வருடங்களாக மத்திய அரசு கொண்டு வந்த ஒரு நல்ல திட்டத்தை சுயலாப அரசியல் காரணமாக செயல்படுத்தாமல் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு திராவிடக் கட்சிகள் இழைக்கும் அநீதி இனியும் தொடராது என நம்புவோம். கேரளா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா முதல் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் நவோதயா பள்ளிகள் மூலம் உண்மையான சமூகநீதி உருவாகட்டும். பிற்படுத்தப்பட்ட ஏழை கிராமப்புற மாணவர்களின் வாழ்விலும் விடியல் பிறக்கட்டும்.
Tuesday, May 3, 2022
"பட"
1996ல் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட மலையாளப்படம் "பட". துவக்கத்தில் வெவ்வேறு இடங்களில் போராளிகளைக் காட்டினாலும் கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் அனைவரும் ஒன்றாக கூடும் பொழுது தான் ஏதோ நடக்கப் போகிறது என்று புரியும். படமும் அங்கிருந்து தான் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. ஆதிவாசிகளின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் "அய்யன்காளி படை"ப் போராளிகள் நான்கு பேர் இணைந்து அரசின் திட்டத்தை முறியடிக்க கலெக்டரை சிறைபிடிக்க, அவர்களுக்கும் அரசு தரப்பினருக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தை தான் கதை. அரசின் சட்டங்களை மதித்து நடக்கும் கலெக்டர் அவகாசம் கேட்க, முடிவை அப்பொழுதே சொல்ல வேண்டுமென நிர்பந்திக்கும் போராளிகள். அவர்களின் நிபந்தனையை ஏற்று அரசு அதிகாரியை மீட்கவும் எதிர் வரும் தேர்தலைக் கருத்தில் கொண்டும் கோரிக்கைகளுக்கு இசைகிறது அரசு.
உண்மையில் நில மீட்பு கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்று படித்தறிந்து கொண்டேன். அதுவும் கல்வியறிவு மிக்க கம்யூனிசம் பேசித்திரியும் மாநிலத்தில் ஆதிவாசி மக்களின் நிலையில் எந்த வித மாற்றமுமில்லை. சொந்த ஊரில் நிலத்தை இழந்து அகதிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் இடத்தைக் கைப்பற்றி செல்வாக்கு மிக்கவர்களிடம் அரசு ஒப்படைத்தது ஒப்படைத்தது தான். அதற்கான மாற்றுத்தீர்வு இல்லாத நிலை இன்று வரையில் தொடருவது தான் வேதனை.
உண்மைக்கதையை படமாக்கிய விதமும் நடித்தவர்களும் தான் இப்படத்தின் சிறப்பே. எவ்வித ஹீரோத்தனமும் இல்லாமல் நான் பெரிய நடிகன் என்ற வெற்றுகூச்சல் இல்லாமல் வேட்டியை மடித்துக் கொண்டு நடிக்க கிளப்பிவிடுகிறார்கள் இந்த சேட்டன்கள். மலையாளப்படம் என்பதாலோ என்னவோ பிரகாஷ்ராஜ் கூட அதிகம் சிலம்பாமல் அடக்கியே வாசித்திருந்தார். தீப்பொறி பறக்க கதாநாயகன் எண்ட்ரி, இரைச்சலான இசை, 'ஜோ'வென்று கூட்டத்தோடு கும்மாளம் போடும் நடனம், "பஞ்ச்" வசனங்கள், குடி, கூத்து என்று இல்லாமல் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு நல்ல படம்.
ஆளும் கட்சிக்கு ஜால்ராவாக மத்திய அரசை எதிர்த்து கோஷம் போட்டால் தான் படத்தைத் திரையிட முடியும் என்றிருக்கும் தமிழ் சினிமா உலகம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. தமிழக மக்களும் தான்.
Sunday, May 1, 2022
தொழிலாளர் தினம்
"தொழிலாளர் தினம்" என்றவுடன் ஒரு சில முகங்கள் நினைவில் வர தவறுவதில்லை. அப்படித்தான் கருப்பு என்ற கருப்பசாமி அண்ணன் முகமும். அரசமரத்தில் அப்பொழுது வரிசையாக ரிக்க்ஷா,மாட்டு வண்டிகள், கைவண்டிகள் நின்று கொண்டிருக்கும். அருகில் ஒரு செக்கு கூட இருந்தது. வீட்டில் சாயம் போட்ட நூல்களை முனிச்சாலையில் இருந்த அப்பாவின் நண்பரின் வீட்டில் காயப்போட கைவண்டியில் எடுத்துச் சென்றவர் தான் "கருப்பு அண்ணே".
"போய் கருப்ப வரச்சொல்லு." அப்பா சமயங்களில் கூறிய பொழுது அரசமரத்திற்குச் சென்று கைவண்டி இருக்கிறதா என்று பார்த்து அருகில் அமர்ந்திருப்பவரிடம்
"அண்ணே அப்பா வரச்சொன்னாங்க" என்றவுடன்
"நீ போடா நான் வர்றேன்" என்று உடனே கிளம்பி வருவார். சாப்பிட்டுக் கொண்டிருந்தால் "சாப்பிட்டு வர்றேம்மா." என்பார். இல்லையென்றால் வேறு யார் வீட்டு வேலைக்கோ சென்றிருப்பார்.
ஆள் நல்ல உயரமாக கருகருவென்று வெய்யிலில் வேலை செய்து கறுத்துப்போன ஆனால் திடமான உடல்வாகு. முட்டி கொஞ்சம் வளைந்து மெதுவாக நடப்பார். வயது அதிகம் இருந்திருக்கும்!
கைவண்டியிலிருந்து மாட்டு வண்டியாக மாறியவுடன் அதில் ஏறிச்செல்ல ஆசையாக இருக்கும். நல்ல உயரமான காளை. கண்கள் பெரிதாக பார்க்கவே பயங்கரமாக இருக்கும். அதனால் சேட்டை செய்யாமல் தூர நின்று நூல்களை ஏற்றுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்போம். வண்டி நகராமல் இருக்க சக்கரங்களுக்கு இடையில் செங்கற்களை வைத்து விட்டு படியேறி வீட்டிற்குள் சென்று தோள்களில் நூல்களை எடுத்துக் கொண்டு வரிசையாக அடுக்கி வைத்து முடித்தவுடன் வண்டியில் ஏறி அமர்ந்து கொள்ள, நாங்கள் செங்கல்களை எடுத்து வைப்போம். கூடவே சாயப்பட்டறையில் வேலை செய்த ஒருவரும் கிளம்பிப்போவார்.
திரும்பி வரும் பொழுது காய்ந்த நூல்களை கொண்டு வந்து பணத்தை வாங்கிச் செல்வார். தலையைச் சொரிந்து கொண்டே "கொஞ்சம் கூட கொடுங்க ஐயா" என்று அப்பாவிடம் கேட்பதை இன்று நினைத்தால் அவருடைய உடல் உழைப்பிற்கான ஊதியத்தை அளித்தோமோ என்று சந்தேகமாகவே இருக்கிறது.
மதுரையில் வெயிலுக்கா பஞ்சம்? வரும் பொழுதெல்லாம் தண்ணீர் வாங்கி குடிப்பார். சமயங்களில் அம்மா மீந்திருக்கும் சாப்பாட்டைக் கொடுத்தால் அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுப் போவார். இல்லையென்றால் அவருடைய வீட்டிலிருந்து பித்தளைப்பாத்திரத்தில் கொண்டு வந்திருக்கும் பழைய சோறும், ஊறுகாயும் தான். அவ்வப்போது தண்ணியும் அடித்து அப்பாவிடம் திட்டு வாங்கும் பொழுது பாவமாக இருக்கும். ஆனால் ஏன் இப்படி குடித்து விட்டு காசை வீணாக்குகிறார்கள் என்றும் தோன்றும். உடல் வலிக்கு மருந்தாக குடிக்கு இப்படித்தான் அடிமையாகிப் போகிறார்கள் தொழிலாளிகள்😞
எப்போதுகூப்பிட்டாலும் வீட்டில் உதவிக்கு கூப்பிட்டால் உடனே வந்து விடுவார். எப்போதும் அன்பாக பேசும் அந்த முகம் மட்டும் இன்னும் மறக்கவில்லை.
கடை நிலைத்தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம்இன்று வரையிலும் கிடைப்பதில்லை என்பது தான் துயரமே. அதைத்தான் இந்த நாட்கள் நமக்கு நினைவுறுத்துகிறது. அவர்களுக்காக உழைக்கிறேன் பேர்வழி என்று கட்சிகளும் சங்கங்களும் அவர்களை மேலும் சுரண்டிக் கொண்டிருப்பது தான் நிதர்சனம்.
தொழிலாளர்களுக்கு வாழ்த்துகள்.
பறந்தாலும் விட மாட்டேன் - 3
"ஹாலிவுட் படங்களை நெட்ஃபிளிக்ஸ்ல் பார்ப்பேன். எனக்குப் பிடிக்கும்" என்று ஏஞ்சலா கூறி விட்டு, என்னுடைய நெற்றிப் பொட்டைப் பற்றிக் கேட்டார்.
பிறகு பேச்சு அப்படியே ஸ்விட்சர்லாந்து, அயர்லாந்து, ஜெர்மனி என்று உலகநாடுகள் பற்றி அவரவர் அனுபவங்களைப் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். கார்லோஸ் தனது வேலை நிமித்தம் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர். கொலம்பியாவில் மருத்துவராக பணிபுரியும் ஓர்கேயும் நாடுகள் பல சென்று வந்திருக்கிறார். நான்கு குழந்தைகள் என்றவுடன்
"அப்படியா?" ஆச்சரியமாக இருந்தது எனக்கு! இரண்டு குழந்தைகள வளர்த்து ஆளாக்குறதுக்குள்ள நமக்கு நாக்கு தள்ளுது😅
அம்மணி 'சிக்'கென்று வேறு இருக்கிறார். இருவரும் இன்றும் இளங்காதலர்கள் போல கொஞ்சிக் குலாவுகிறார்கள். வாழ்க வளமுடன்!
இந்தியாவில் தான் ஒரு வயதிற்குப் பிறகு பொறுப்புகள் கூடி காதல் தூர சென்று விடுகிறதோ? "பார்றா! இந்த வயசுலயும் டூயட் பாடுறாங்க. இதெல்லாம் இந்த வயசுல தேவை தானா" என்று கேலி செய்யும் சமுதாயத்தில் வாழ்கிறோம். இவர்கள் எல்லாம் அப்படி இல்லை. குழந்தைகள் இருந்தாலும் வயதானாலும் கணவன் மனைவி உறவை நன்றாகவே பேணி கொண்டாடுகிறார்கள்😘
பேச்சு அப்படியே நெட்ஃபிளிக்ஸ்ல் வெற்றிகரமாக வலம் வந்த "நார்கோஸ்" தொடரில் வந்து நிற்க, கார்லோஸ்,
"இதுவரை நான் யாரிடமும் இத்தொடரைப் பற்றிப் பேசியதில்லை. அத்தொடரைப் பார்க்கவுமில்லை. அது தந்த கசப்பான அனுபவம் அப்படி. இன்றும் நினைவில் இருக்கிறது. நான் கல்லூரிக்குச் செல்லும் பேருந்து நிறுத்தத்திற்கு அன்று 15 நிமிடங்கள் தாமதமாகச் சென்றேன். வழியெங்கும் போலீஸ் வண்டிகள். கூச்சலும் குழப்பமாய் இருந்தது. பிறகு தான் தெரிந்தது அங்கு குண்டு வெடித்ததில் பலர் இறந்ததும் நான் அன்று தப்பித்ததும். இன்று நினைத்தாலும் அந்த பயங்கரத்தை மறக்க முடியவில்லை. எங்கு எப்பொழுது பார்த்தாலும் போலீஸ் எஸ்கோபாரைத் தேடுகிறேன் பேர்வழி என்று அவனும் இவர்களுக்குப் போக்கு காட்டியது என்று கொலம்பியாவின் கொடுமையான காலங்கள். இப்பொழுது மெக்ஸிகோவில் அப்படி நடந்து கொண்டிருக்கிறது." என்று வருத்ததுடன் பேசினார்.
அந்தக் காட்சி கூட தொடரில் இருக்கிறது. குடியிருப்புப் பகுதியில் போலீஸ் வேட்டையின் போது நடக்கும் அசம்பாவிதம். கார்லோஸ் அங்கிருந்து தப்பித்திருக்கிறார்.
மதுரை ரயில்வே தண்டவாளத்தில் தீவிரவாதிகள் வைத்திருந்த குண்டு ஒன்று அன்று வெடிக்காமல் நாங்கள் உயிர் தப்பிய நாள் நிழலாடிச் சென்றது😔
பிறகு கொலம்பியாவில் கொரோனா பற்றிப் பேசியதில் மீண்டும் கலகலப்புடன் பேச்சுக்கள் தொடர, ஏஞ்சலா, "எங்கள் ஊரில் பலரும் முருங்கைகீரைப் பவுடரை தினமும் எடுத்துக் கொண்டதால் கொரோனா வரவில்லை என்று நம்புகிறார்கள். நானும் எடுத்துக் கொள்வேன்" என்றார். தமிழகத்தில் முருங்கையின் பிரபலத்தைப் பற்றிப் பேசி நேரம் போவது தெரியாமல் சிரித்துக் கொண்டிருந்தோம்.
கிளம்பும் முன் கொலம்பியா வந்தால் தங்களுடன் வந்து தங்கி இருக்குமாறு ஏஞ்சலாவும் ஓர்கேயும் அழைப்பு விடுக்க, நாங்களும் அவர்களை ஆல்பனிக்கு வருமாறு கேட்டுக் கொண்டோம். பழகிய சில மணிநேரங்களில் நெருங்கி வரும் அபூர்வ மனிதர்கள் பட்டியலில் இவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.
ரிப்பப்ளிக் விமான நிலையத்தில் எங்களை இறக்கி விட்டு கைகுலுக்கி அரவணைத்து விடைபெற, நாங்கள் மீண்டுமொரு குலுக்கல் பயணத்திற்குத் தயாரானோம். காற்றின் வேகம் அதிகரித்து ஈரப்பதமும் கூடியிருந்ததில் குளிரவும் ஆரம்பித்திருந்தது.
"இப்ப நீ முன்னாடி உட்கார்ந்து வா. அந்த அனுபவமும் உனக்கு வேண்டும்."
"அய்யோயோ. எனக்குப் பயமா இருக்குப்பா."
"அதெல்லாம் ஒன்னுமிருக்காது. உனக்குப் பிடிக்கும்."
"இப்படித்தான் விமானத்தை நிறுத்த பிரேக் போட வேண்டும்."
மெதுவாக விமானம் நகர, "எங்க பிரேக் போடு பார்க்கலாம்." கார்லோஸ் சொல்ல,
நானும் காலை நீட்டி அமுக்கிப் பார்க்கிறேன். ம்ஹூம்!
இன்னும் நல்லா பலமா பெடலை அழுத்தணும்.
இப்பொழுது விமானம் நின்றது. "குட். எல்லாம் ஒரு அவசரத்துக்குத் தான்."
ஆரம்பமே கிலியா இருக்கே😨 "முருகா உசுரோட பத்திரமா என்னைய ஊருக்கு கொண்டு போய் சேர்த்திடுப்பா" வேண்டிக் கொண்டு சீட்பெல்ட் போட்டுக் கொண்டேன். கதவை மூடி லாக் பண்ணும் இடத்தில் நான் கை வைத்திருந்தேன். பறந்து கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக இதை அசைத்து கதவு திறந்து கொண்டால்...😱😱😱
ஈஷ்வர் ஜாலியாக பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு இது வசதியாக இருக்கிறது. முன்னாடி இடம் குறுகலாக கஷ்டமாக இருந்தது என்றார்.
"ஓ! இதுக்குத்தான் என்னைய இங்க உட்கார சொன்னீங்களா?😈"
"முன்னாடி உட்கார்ந்து வந்தா வேறு அனுபவமா இருக்கும். அதனால தான் சொன்னேன். என்ஜாய்"
கார்லோஸ் தகவல் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொண்டு பறக்க அனுமதி கேட்டுக் கொண்டிருந்தார். எனக்கு அங்கிருந்த விதவிதமான கண்ட்ரோல்களைத் திருகி விளையாட வேண்டும் போல ஆசையாக இருந்தது. எங்கே நான் திருகி விமானம் நின்று விடுமோன்னு நினைக்கையில் பயம் வந்து வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
செக்லிஸ்ட் வரிசைப்படி ஒவ்வொன்றையும் சரிபார்த்து முடிக்க, "நீங்கள் கிளம்பலாம்." உத்தரவு கிடைத்தவுடன் 'டடடடடடட' என்று காற்றாடி சுழல, விமானம் சிறிது தூரம் நடக்க, வீடியோ கேம் கன்சோல் போல் இருந்த திசைமாற்றியை அசைத்து சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே வேகத்தைக் கூட்டினார் கார்லோஸ். 3000 அடியில் ஆல்பனி நோக்கிப் பறக்கப் போவதாக தகவல் தர, கட்டுப்பாட்டு அறையிலிருந்து அவர் எந்த திசையில் எத்தனை அதிர்வெண்ணில் கிளம்பலாம் என்று கூற, இவர் எழுதிக் கொண்டார். தானியங்கி விமானத்தை விட இது போன்ற சிறு விமானங்களை ஓட்டுவது சிரமம் தான் போலும்! என் இருக்கையின் முன்னே கூட திசைமாற்றி இருந்தது. மறந்தும் கூட தொடவில்லையே நான்😝 நல்ல பிள்ளையாக கொஞ்சமே கொஞ்ஞ்ஞ்சம் பயத்துடன் உட்கார்ந்திருந்தேன்.
'ம்ம்ம்ம்ம்ம்ம்' என்ஜின் உறுமலுடன் மெல்ல மெல்ல வேகமெடுத்து 'சடக்'கென்று சக்கரம் தரையில் படாமல் விமானம் மேலெழும்பியது அழகு! சில நொடிகளில் மேலே பறக்க ஆரம்பித்திருந்தோம். உண்மையிலேயே முன்னாடி அமர்ந்திருந்தது கூடுதல் பயத்தைத் தந்தாலும் கண்ணெதிரே நீல வானில் தவழும் மேகக்கூட்டங்களைப் பார்க்க, "என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்..." மனம் பாட,
இத்தனை கண்ட்ரோல்களை நினைவில் வைத்திருக்க வேண்டும்! "எங்கு விமானம் ஓட்ட கற்றுக் கொண்டீர்கள்?" நான் கேட்க,
இல்லினாய் மாநிலத்தில் பல்கலையில் படிக்கும் பொழுது கொலம்பிய நாட்டைச் சேர்ந்த சீனியர் மாணவர் ஒருவருடன் விமானப்பயணம் சென்று அங்கேயே கற்று ஆல்பனியில் ஓட்டுநர் உரிமம் வாங்கியதாக கூறினார்.
திடீரென "உனக்கு நேர் எதிரே 12 மணி திசையில் இன்னொரு குட்டி விமானம் வந்து கொண்டிருக்கிறது" என்ற தகவல் வர,
நேர்கோட்டில் ஒரு குட்டி விமானம் பறந்து வந்து கொண்டிருந்தது. எனக்குத் தெளிவாக தெரிய, கார்லோஸிற்கு அவ்வளவாகத் தெரியவில்லை. உனக்குத் தெரிகிறதா என்று கேட்க, நான் ஆமாம். அது வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்று சுட்டிக் காட்ட, கார்லோஸ் தாழ பறக்க ஆயத்தமாவதற்குள் அந்த விமானம் கீழே பறந்து இடப்புறம் 'விர்'ரென எங்களைக் கடந்து சென்றது. சிறிது நேரத்தில் விமானம் ஆட்டம் கண்டது. இதெல்லாம் அரசியல்ல்ல சாதாரணமப்பா என்று கார்லோஸ் கூலாக இருந்தார். எனக்குத்தான்...😓😓😓
ஆகாயத்தில் தூரத்தில் இருப்பது போல தோன்றினாலும் சிறிது நிமிடங்களில் அருகே வந்து விடுகிறது விமானங்கள். அலட்சியமாக இருக்காமல் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு சில நொடிகளில் எதுவும் நடக்கும் சாத்தியம் அதிகமிருப்பதை உணர்ந்த போது முதுகெலும்பில் "சில்ல்ல்ல்ல்" உணர்வு 😓 திடீர் திடீரென அந்தரங்கத்தில் மிதப்பது போல் இருந்தது.
"ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ! ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ" வானில் ஆங்காங்கே மேகக்கூட்டங்கள்! தொலைவில் மழை பொழிகிறது. கருமேகக்கூட்டங்களைச் சுட்டிக் காட்டினார் கார்லோஸ். எதிரே பெரிய பஞ்சுப்பொதி மேகம். விமானம் மெதுவாக கொஞ்சம் கீழே இறங்கியது.
"இது பனிமேகம். இதற்குள் போனால் ஆட்டம் கண்டிடும்." அதான் கீழே இறக்கினேன்." இந்தியா செல்லும் பொழுது விமானி "சீட் பெல்ட் போடுங்கள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே குலுங்கும் விமான காட்சி கண் முன்னால் வந்து சென்றது.
கனெக்டிகட் மாநிலத்தின் மூன்று துறைமுகங்கள், சவுத்போர்ட், பிரிட்ஜ்போர்ட், வெஸ்ட்போர்ட் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் மேலிருந்து பார்க்க கொள்ளை அழகாக இருந்தது! அட்லான்டிக் கடலை விட்டு நிலப்பரப்பின் மீது விமானம் தற்போது பறக்க, இடப்புறம் ஹட்சன் ஆறு எங்களைத் தொடர்ந்தது. கேட்ஸ்கில்ஸ் மலைகளில் மழை பொழிந்து கொண்டிருந்தது. வரும் வழியெங்கும் மலைகள், ஆறுகள், குளங்கள், சிறுசிறு நகரங்கள், விளைநிலங்களுடன் பண்ணை வீடுகள், கால்நடைகள் மேய்ந்து கொண்டிருப்பதுமாய் அப்ஸ்டேட் நியூயார்க் தான் எத்தனை அழகாய் இயற்கை எழிலுடன் இருக்கிறது! கோடைக்காலத்தில் இந்தப் பயணம் பச்சைப்பசேலென மரங்களுடன் கண்ணுக்கும் விருந்தாக இருந்திருக்கும்.
"அதோ அங்கே இருப்பது ஒரு சிறிய விமான நிலையம். இப்பொழுது என்ஜின் பழுதானால் அங்கே தான் நிறுத்தியிருப்பேன்." சிரித்துக் கொண்டே கார்லோஸ்.
"அட ராமா! எல்லாம் நல்லா தானா போய்க்கிட்டு இருக்கு. ஏன்?" மொமெண்ட் 😔
பள்ளிக்கூடங்களில் வரிசையாக மஞ்சள் வண்ணப் பேருந்துகள். கால்பந்து, டென்னிஸ், ஓடுவதற்கு மைதானங்கள் என்று கனகச்சிதமாக. நீச்சல் குளங்களுடன் பெரிய பெரிய வீடுகளைக் கடந்து வந்தே விட்டது ஆல்பனி.
மீண்டும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விமானம் வருவதைத் தெரிவித்தவுடன் அவர்களும் இறங்குவதில் எந்தச் சிரமுமில்லை என்று பாதையைத் தெளிவாக குறிப்பிட, வீடு தெரிகிறதா என்று எட்டி எட்டிப் பார்த்தேன். எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கிறது. எங்கே என்று தேடுவேன்.
அதற்குள் அம்புக்குறியிட்ட ஓடுபாதை தெரிய கண்மூடி திறப்பதற்குள் 'ஜல்'லென்று அலுங்கல் குலுங்கல் இல்லாமல் தரையிறக்கிய விதம் சபாஷ் போட வைத்தது. கார்லோஸ் அனுபவமுள்ள விமானி தான்!
காரை நிறுத்துவது போல் விமானத்தை இலகுவாக நிறுத்தி விட்டு அலுவலகத்திற்குள் சென்று நாங்கள் திரும்பி வந்து விட்டதைச் சொல்லி விட்டு விமானத்தில் உள்ள தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டார் கார்லோஸ். நாங்களும் அவருடன் சேர்ந்து விமானத்தைத் துடைத்துக் கொடுத்து விட்டு வந்தோம்😦
காலையில் 9.45க்கு கிளம்பி மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தோம். இரவு உணவிற்கு வீட்டிற்கு வரலாமே என்றவுடன் யோசிக்காமல் வருகிறேன் என்று கார்லோஸ் சொன்னவுடன் எங்கள் காரில் நாங்கள் கிளம்பினோம். அங்கிருந்து ஆறேழு நிமிடங்களுக்குள் வீட்டிற்குச் சென்று விடலாம்.
அவருடைய பெண்கள் இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். மனைவி கொலம்பியாவில் தன்னுடைய பெற்றோர்களைக் கவனித்துக் கொள்ள சென்றிருக்கிறார். கார்லோஸ் உள்ளூர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக கணினியியல் துறையில் பணி செய்கிறார். அவருடைய இரு பெண்களும் தனியாக விமானத்தை ஒட்டும் பயிற்சியைப் பெற்றவர்கள். அடிக்கடி குடும்பத்துடன் சிறு விமானப் பயணம் செல்வது தனக்குப் பிடித்த ஒன்று என்றார். சமயங்களில் புற்றுநோயாளிகளை மருத்துவ சிகிச்சைக்காக விமானத்தில் நியூயார்க் நகரத்திலிருந்து அழைத்து வருவது, இங்கிருந்து அழைத்துச் செல்வது என்று சமூக உதவியும் செய்வதாக கூறியதைக் கேட்க, அவர் மீதான மதிப்பு இன்னும் கூடியது. நன்றாக செஸ் விளையாடுவார். மாலை நேரங்களில் நாங்கள் செல்லும் பூங்காவில் மாணவர்களுடன் கால்பந்து ஆடிக் கொண்டிருப்பார். இவரும் இவர் மனைவியும் அருமையாக சல்சா நடனம் ஆடுவார்கள். திறமையான குடும்பம்.
வீட்டில் என்ன இருக்கிறது? என்ன சமைக்கலாம் ? யோசித்துக்கொண்டே சப்பாத்தி,தோசை, இட்லி, சிக்கன் குருமா...சமாளித்து விடலாம்.
வந்தவுடன் 'கடகட' வென்று ஈஷ்வர் சப்பாத்தி போட, வீட்டைச் சுத்தம் செய்து வேலைகளை முடிப்பதற்குள் கார்லோஸும் வந்து சேர்ந்தார். நான் தோசை சுடுவதைப் படம் எடுத்து மனைவிக்கும் அனுப்பி விட்டார். எல்லாவற்றையும் திருப்தியாகச் சாப்பிட்டு விட்டு வெகு நேரம் பல கதைகளைப் பேசிக் கொண்டிருந்தோம். புலம் பெயர்ந்தவர்களுக்கு இருக்கும் அதே கவலைகள் அவருக்கும் இருந்தது. ஏற்கெனவே துறை சார்ந்த புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கொலம்பியா செல்லவிருப்பதாகவும் தென் அமெரிக்க நாடுகளில் தங்கி அடுத்த புத்தககம் எழுதும் வேலையை முடிக்க ஒரு வருடம் விடுமுறையில் செல்பவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வழியனுப்பி வைத்தோம்.
எதிர்பாராத குட்டி விமான அனுபவம் அன்றைய நாளை மேலும் இனிமையாக்கி கரைந்தது.
நியூயார்க்-ஆல்பனி பயணம்
Monday, April 25, 2022
பறந்தாலும் விட மாட்டேன் - 2
பரந்து விரிந்த நீல வானம். அன்று மேகங்கள் எல்லாம் தொலைவில் இருந்தது எங்கள் அதிர்ஷ்டம். நியூயார்க் நகரம் அருகே செல்ல செல்ல பல குட்டி விமானங்களும், பெரிய விமானங்களும் என வானில் சிறிது போக்குவரத்து. கார்லோஸ் விழிப்போடு கண்காணித்துக் கொண்டே வந்தார். பறவை ஒன்று மிக அருகே பறந்து சென்றது. நல்ல வேளை! தப்பித்தோம். குட்டி விமானம் ஓட்டுவது சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது என்பது நன்கு புரிந்தது😓 கட்டுப்பாட்டு அறையிலிருந்து எந்த திசையில் எத்தனை வேகத்தில் மற்ற விமானங்கள் பறந்து வருகிறது போன்ற தகவல்கள் வந்து கொண்டேஇருக்க, மற்ற விமானிகள் கேட்கும் தகவல்களும் நமக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது. நடுவே எங்களுடைய விமானத்தின் பெயரைக் கேட்டவுடன் என்ன சொல்ல வருகிறார்கள் என்று உன்னிப்பாக கேட்டுக் கொண்டே வந்தேன். என்ன ஒன்று? அத்தனை பெரிய ஹெட்ஃபோன் பெருஞ்சுமையாக காதில் உட்கார்ந்திருந்தது கொஞ்சம் கடியாகத் தான் இருந்தது எனக்கு. நகரை நெருங்கியவுடன் தாழ பறக்கத் தொடங்கியது எங்கள் விமானம்.
மாநிலத்தின் வடக்கில் அடிராண்டாக்ஸ் மலையில் துவங்கி தெற்கே அட்லாண்டிக் கடலைச் சேரும் வரை ஓடி வரும் நீண்ட ஆறு ஹட்சன். ஆற்றின் இரு கரைகளிலும் எழிலான கட்டடங்கள். அது கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது நியூயார்க் நகரம். அப்பர் மன்ஹாட்டன், மிட்-டவுன், லோயர் மன்ஹாட்டன் என்று மூன்று பகுதிகளிலும் ஓங்கி உயர்ந்த கட்டடங்கள். இங்கு தான் உலகளாவிய பல அலுவலகங்களும் செல்வந்தர்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்புகளும் விரவிக் கிடக்கிறது.டைம்ஸ் ஸ்கொயர், க்ரைஸ்லர், எம்பயர் ஸ்டேட் கட்டடங்கள் உயரத்திற்குப் பறந்து கொண்டிருந்தோம். கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது.
"அதுதான் கொலம்பியா பல்கலைக்கழகம். அதற்கு அருகே தான் நாங்கள் குடியிருந்தோம். இந்த தெருக்களில் ஓடி இருக்கிறோம் என்று விமானத்தைச் சாய்த்து காண்பிக்கையில்,
" ராசா நீ வண்டிய நேரா ஒட்டுப்பா. இங்க நானே பயந்து போய் உசுர கையில பிடிச்சுக்கிட்டு இருக்கேன்" என்று சொல்லத் தோன்றியது😉
அங்கே தெரியுது "செண்ட்ரல் பார்க்". அவர் காட்டிய திசையில் பச்சைப்பசேலென துளிர் விட்ட மரங்கள் சூழ்ந்த இடம். எங்கு பார்த்தாலும் தெரியும் கட்டட குவியலுக்குள் முத்தாக இப்படி ஒரு பூங்கா! அதுவும் நகரின் மையத்தில் 843 ஏக்கரில் பரந்து விரிந்து செழிப்பாக! அதைப் பற்றி விரிவாக எழுதலாம். முழுவதையும் நானும் மகளும் நன்றாகச் சுற்றியிருக்கிறோம். அடிக்கடி குடும்பத்துடனும் அங்கு சென்று வந்திருக்கிறோம். ஆல்பனி இன்னும் பனிக்காலத்தை விடாமல் பிடித்துக் கொண்டு தொங்குகிற அதே வேளையில் நியூயார்க் நகரம் இளந்தளிர் பச்சை மரங்களுடன், மழைக்கால பூக்களுடன் அழகாக இருந்தது சிறப்பு.
லோயர் மன்ஹாட்டன்ல் தான் உலக வர்த்தக மையம் எனும் "இரட்டை கோபுரங்கள்" இருந்தன. 9/11 அன்று நடந்த கொடூர தாக்குதலுக்குப் பிறகு இன்று அதே இடத்தில் "ஒன் வேர்ல்ட் ட்ரேட் சென்டர்" கண்ணாடி ஜன்னல்களுடன் மின்னிக் கொண்டு அமெரிக்காவிலேயே உயர்ந்த கட்டடமாக வானளாவி வளர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதிகளில் 2001ல் நடையாய் நடந்து சுற்றிப் பார்த்திருக்கிறோம். அப்பொழுது தான் நியூயார்க் வந்திருந்த நேரம். வாழ்க்கையில் இப்படியொரு கட்டடங்களை அதுவும் இத்தனை நெருக்கமாக பார்த்ததில்லை. டொரோண்டா நகரம் தான் நான் பார்த்த மிகப்பெரிய மேற்கத்திய நகரம். அதையெல்லாம் ஒன்றும் இல்லை என்று உணர வைத்தது நியூயார்க் நகரம். இன்று மேலிருந்து பார்க்கும் பொழுது அதிக பிரமிப்பாக இருந்தது!
அப்படியே வலது பக்கம் பார்க்கையில் தனித்தீவில் 'சுதந்திர தேவி'! ஹாலிவுட் படங்களில் முழு கோணத்தில் ஹெலிகாப்டர்/விமான காட்சிகளில் பார்த்த ஞாபகம். அழகாக இருந்தது. இந்தக் குளிரிலும் சிலர் சுற்றிப்பார்க்க வந்திருந்தார்கள்! நியூயார்க் வருபவர்கள் தவறாமல் சென்று பார்க்கும் இடங்களுள் இதுவும் ஒன்று.
இது தான் 'கோனி ஐலண்ட்'. அவர் சுட்டிக்காட்டிய இடத்திற்குச் சென்றிருக்கிறோம். அங்கிருக்கும் "தீம் பார்க்" இந்த வட்டாரத்தில் பிரபலமானது. சுழற்ராட்டினங்கள் நன்றாகத் தெரிந்தது. இன்னும் சீசன் தொடங்கவில்லை என்பதால் ஆளரவம் இல்லை. கோடையில் குச்சியில் நறுக்கிய முழு மாம்பலத்தையும் விற்றுக் கொண்டிருப்பார்கள். யம் யம் யம்😍
"இது தான் லாங் ஐலண்ட்".
அதற்கு முன்தினம் தான் நாங்கள் இந்தப் பகுதிக்கு காரில் வந்திருந்தோம். அருகிலிருந்த கடற்கரைக்கும் சென்று வந்தோம்.'லாங் பீச்' , பெயருக்கேற்றார் போல் நீண்ட கடற்கரை. அதையொட்டி 'ஜோன்ஸ் பீச்'. ஒன்றிரண்டு மனிதர்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தார்கள். கடலோர வீடுகளுடன் அந்த இடத்தை மேலிருந்து பார்க்க அலையாடும் கடற்கரை அத்தனை அழகாக இருந்தது! கடலைப் பார்த்தாலே வரும் இன்பம் இந்த முறை மேலிருந்து மிக அருகில் பார்க்கையில் மேலும் உற்சாகம்!
"அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அழகே
என்னைத் தொடுவாய் மெதுவாய் என்றால்
நுரையாய் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்றாய்" மனம் இசைத்துக் கொண்டிருக்க...
"இங்கே ஃபார்மிங்டேலில் தான் நாம் இறங்க வேண்டிய விமான நிலையம் உள்ளது. இன்னும் சில நிமிடங்கள் தான்" கார்லோஸ் கூறவும் அப்பாடா என்றிருந்தது! இப்பொழுது காற்றின் வேகம் அதிகரித்திருந்ததில் திகிலாகி விட்டது. தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் ரயில் காட்சி தான் நினைவிற்கு வந்தது. அதில் பாலையாவின் வசனம் பிரபலம் ஆயிற்றே!
எங்களுக்கு முன் வேறொரு விமானம் படு வேகத்தில் 'ஜிவ்வ்'வென தரையிறங்கிய பின் ஓடுபாதையில் அழகாக விமானத்தைத் தரை இறக்கினார் கார்லோஸ். "குடுகுடு"வென ஓடி நாங்கள் நிறுத்த வேண்டிய இடத்தில் ஏதோ காரை நிறுத்துவது போல் மற்ற குட்டி விமானங்களுடன் நிறுத்தி விட்டு "ரிப்பப்ளிக் ஏர்போர்ட்" அலுவலகத்திற்குள் நுழைந்தோம். அங்கே கொலம்பியா நாட்டிலிருந்து வந்திருந்த கார்லோஸின் நண்பர்களைச் சந்தித்து விட்டு அவர்களை அழைத்துக் கொண்டு கார்லோஸ் புறப்பட, நாங்கள் சற்று இளைப்பாறினோம். யோசித்துப் பார்க்கையில் மேலிருந்து பார்த்த பல தெருக்களில் நடையாய் நடந்து நகரத்தைச் சுற்றி வலம் வந்திருக்கிறோம் என்று தோன்றியது. அதனால் தான் நகரத்தின் மேல் காதலாகிப் போயிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
காற்றின் வேகத்தில் விமானத்தின் ஆட்டத்தால் வீடியோ பல இடங்களில் மேலும் கீழும் ஆடியபடி இருக்கும். அப்பொழுதெல்லாம் "உயிர் பயம் காட்டிட்டான் பரமா" மொமெண்ட் தான் 😔😆
Wednesday, April 20, 2022
பறந்தாலும் விட மாட்டேன் - 1
அடுத்த நாள் காலை 'டான்' என்று விமான நிலையத்தில் நண்பர் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அப்பொழுதும் ஈஷ்வரிடம் சொன்னால்,
"இப்ப நீ சும்மா வர மாட்டியா? உனக்குப் பிடிக்கும்" என்று அதே பதில்.
"எனக்குப் பிடிக்கும் தான். ஆனா ..."
முறைப்பே பதிலாக வந்தது.
நண்பரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். கையில் வைத்திருந்த ஐபேட்- ல் ஆல்பனி-நியூயார்க் வழித்தட வரைபடம் ஓடிக்கொண்டிருந்தது.
"கிளம்புவதற்கு முன் ஒரு விமான ஓட்டியாக சில விஷயங்களைச் சொல்லணும். அசம்பாவிதமாக இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் அருகிலுள்ள இடத்தில் தரையிறக்கி விடுவேன். நாம் பெரும்பாலும் ஹட்சன் ஆற்றின் மேல் தான் பறக்கப் போகிறோம். அப்படி ஏதாவது நடந்தால் கரைக்கு அருகில் இறங்குமாறு பார்த்துக் கொள்வேன். சரியா? கடல் மேல் பறக்கும் பொழுது கரையில் இறங்குமாறு பார்த்துக் கொள்வேன். அங்கே நிறைய படகுகள் இருக்கும். அதனால் சீக்கிரமே காப்பாற்றிவிடுவார்கள்."
அடப்பாவி மனுஷா? இதெல்லாம் நேத்தே சொல்லிருக்கலாம்ல என நான் பேந்த பேந்த விழிப்பதைப் பார்த்து, 'லதா, நீச்சல் தெரியுமில்ல?"
நீச்சல் தொட்டியில ஓகே. ஆத்துல, கடல்ல நான் விழும் போதே என் உசுரு என்கிட்ட இருக்காதேன்னு நான் நினைத்துக் கொண்டே,
"பயமா இருக்கே கார்லோஸ்" என்றேன்.
ஈஷ்வரிடம், "வண்டி சாவிய குடுங்க. நான் உசுரோட வீட்டுக்கு கிளம்புறேன். இதென்ன புது வம்பா இருக்கு" என்றவுடன் அவரும் சற்று கலவரமாகத் தான் இருந்தார்.
"நான் 1000 மணிநேரங்கள் வானில் பறந்திருக்கிறேன். குடும்பத்துடன் கலிஃபோர்னியா வரை சென்றிருக்கிறேன். இது வரையிலும் எந்த வித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. யோசித்துக் கொள்." சொல்லிவிட்டு கார்லோஸ் என் பதிலை எதிர்பார்க்க ,
போற உசுரு பறந்து போய் ஹட்சன்ல தான் போகணும்னு இருந்தா யார் என்ன செய்ய முடியும். எனக்கு ஏதாவது நடந்தா எல்லா விபரங்களையும் இங்க எழுதி வச்சிருக்கேன்னு ஈஷ்வரிடம் சொல்லிவிட்டு நானும் வர்றேன் கார்லோஸ் என்றவுடன்,
"வெரி குட். அப்ப கிளம்புவோம்."
அவரைத் தொடர்ந்து நாங்கள் வெளியே நின்றிருந்த குட்டி விமானத்தை வலம் வந்தோம். என்னை விட சிறிது உயரம். விமானியுடன் மூன்று பேர் பறந்து செல்லும் வகையில் குட்டியோ குட்டி விமானம். வண்டிச் சக்கரமோ ஈஷ்வரின் பைக்கை விட சிறிதாக இருந்தது. முருகா! உசுரோட பத்திரமா கொண்டு வந்து சேர்த்திடப்பா என்று வேண்டிக்கொண்டு இரண்டு அங்குல படியில் கால் வைத்து உள்ளே போய் அமர்ந்து கொண்டேன். ஈஷ்வரும் கார்லோஸும் முன் இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள். இன்ஜின் சத்தம் கேட்காமல் இருக்க பெரிய ஹெட்ஃபோனை காதில் மாட்டியாயிற்று. இருக்கை பெல்ட் மட்டுமே இருந்ததது.
விமானியின் முன்னே அத்தனை பட்டன்கள். கார்லோஸ் சரிபார்ப்பு பட்டியல் பார்த்து ஒவ்வொரு பட்டன்களையும் தட்டி விட்டு வேகம், உயரம் என்று கணக்குப் போட்டுக் கொண்டு அதற்கான கண்ட்ரோல்களையும் சரிசெய்து கொண்டே ,"மேலெழும்பும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும். பறவைகளோ, தரை இறங்கும் விமானங்களோ எதுவும் கண்ணில் பட்டால் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு மேலெழும்ப உத்தரவு கேட்டுக் கொண்டிருந்தார்.
"கடகட"வென பேரிரைச்சலுடன் விமானத்தின் விசிறி சுழல, "ரைட், ரைட் போகலாம்" என்ற உத்தரவு கிடைத்தவுடன் "ரன்வே" பாதையில் "தடக்தடக்" என்று விமானம் அன்னநடை போட்டுச் சென்றது. சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே மெதுவாக சக்கரம் தரையை விட்டு மேலே மேலே மேலே பறந்து பறந்து பறந்து... கார்லோஸ் மிக அழகாக கையாண்டார். எனக்குத்தான் விமானம் ஒருபுறமாக சாயும் பொழுது அடிவயிறு சிறிது கலங்கியது போல் இருந்தது. பக்கத்தில் தானே வீடு. தெரிகிறதா என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கே நான் வேகமாக அசைந்தால் விமானமும் சாய்ந்து விடுமோ என்று பயந்தேன்😁 நல்ல வேளை! அப்படியெல்லாம் நடக்கவில்லை.
3500 அடியில் பறந்து கொண்டிருந்தோம். அதனால் சாலைகள், மலைகள், மரங்கள், குளங்கள், ஏரிகள் எல்லாம் தெரிந்தது. தூரத்தில் போகின்ற மேகங்களே. தூறல்கள் போடுங்கள் பூமியிலே" மனம் குதூகலித்தது.
அப்படியே ஆல்பனி டவுன்டௌன், வரிசையாக மஞ்சள் பேருந்துகள் நின்ற பள்ளிக்கூடத்தைப் பார்த்துக் கொண்டே உறைந்திருந்த குளங்கள், துளிர் விட காத்திருக்கும் மரங்கள் அடர்ந்த கேட்ஸ்கில்ஸ் மலைகள் மேலே பறந்து கொண்டிருந்தோம். 'பச்சைப்பசேல்' என்றிருந்தால் கொள்ளை அழகா இருந்திருக்கும்😊 நினைத்துக் கொண்டேன். திடீரென ஒரு குலுக்கல். ஆஆஆ! மீண்டும் அடிவயிறு பிசைவதைப் போல் கொஞ்சம் பயம்.
"இப்ப நாம ஹட்சன் ஆற்றின் மேல் பறந்து கொண்டிருக்கிறோம்" கார்லோஸ் சொல்ல, எட்டிப் பார்க்கலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பஞ்சாயத்து ஓட, மெ..து..வாக ஜன்னல் வழியே பார்த்தால் மழைநீர் கலந்த ஹட்சன் ஆறு பழுப்பு நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அது என்னவோ தெரியல, என்ன மாயமோ புரியல, தண்ணீரைக் கண்டால் ஜலகண்டம் இருப்பது போல் அத்தனை பயம் எனக்கு. ஒவ்வொரு முறை இந்தியா வர அட்லாண்டிக் மேல் பறக்கும் பொழுதும் ஒருவித இனம் புரியாத பயம் இருக்கும். சுற்றிலும் இருக்கும் மனிதர்கள் தான் நம்பிக்கையைத் தருவார்கள். இந்த குட்டி விமானத்தில் அவசரத்திற்கு ஆக்சிஜன் முகமூடியோ, உயிரைக்காக்கும் ஜாக்கெட்டோ எதுவும் இல்லை. நினைத்தாலே பயமாகத் தான் இருந்தது.
மனதை தேற்றிக் கொண்டு வந்தாச்சு. இனி எது வந்தால் என்ன? என்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன். நியூயார்க் மாநிலத்தில் சுரங்கங்கள் நிறைய இருக்கிறது. அதன் அருகே தொழிற்சாலைகளும் இருந்தது. பச்சைப்பசேல் என அழகாக பராமரிக்கப்பட்ட கோல்ஃப் மைதானங்கள், பெரிய பெரிய பண்ணை வீடுகள், கரையோரங்களில் பங்களாக்கள், தெருக்களில் வரிசையாக வீடுகள் என்று கண்களைக் கவரும் காட்சிகள்.
நீண்ட சரக்கு ரயில் ஒன்று 'ஜூக்கு ஜூக்கு ஜூக்கு" என்று செல்வதைக் காண அத்தனை அழகாக இருந்தது. "தூது போ ரயிலே ரயிலே துடிக்குதொரு குயிலே குயிலே என்னென்னவோ என் நெஞ்சிலே..." மனம் பாடிக் கொண்டிருக்கையில், சடாரென்று இறக்கைகள் வலப்புறம் சரிய, மீண்டும் 'திக் திக் திக்'😟
அது தான் "கிங்ஸ்டன்" என்று பாலத்தைக் கடக்கையில் சுட்டிக் காட்டினார் கார்லோஸ். அது ஒரு பழமையான வரலாற்று சிறப்பு மிக்க நகரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுப்பிரமணி செஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள ஓரிருமுறை சென்றிருக்கிறான். நியூயார்க் மாநிலத்தின் முதல் தலைநகரமாக இருந்தது பின் ஆல்பனி மாநில தலைநகரமாகி விட்டது. அதனைக் கடந்து பொக்கீப்சீ நகரத்தின் அழகிய பாலத்தையும் கடந்தோம். அதற்குப் பிறகு "பியர் மௌண்டைன்" கரடி போல் கருங்கல் மலை.
"நியூயார்க் நகரை நெருங்கி விட்டோம்" என்று கார்லோஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அனுப்பினார். 75மைல் தொலைவில்
"நியூயார்க் நகரம் தெரியும் நேரம்
கட்டடங்கள் அடர்ந்தது
அழகும் தெரிந்தது..."
Tuesday, April 5, 2022
திபெத் சுற்றுலா பயண நிகழ்ச்சி
தொலைக்காட்சி, யூடியூப்ல் வரும் பயண நிகழ்ச்சிகளை நான் விரும்பி பார்ப்பதுண்டு. இந்நிகழ்ச்சிகளில் வெறும் சுற்றுலாத்தலங்களை மட்டும் சிலர் காண்பிப்பார்கள். சிலரோ, மக்களின் உணவு, உடை, நாகரீகம், பண்பாடு என்று பல விஷயங்களைத் தெரிவிப்பார்கள். நாம் செல்ல முடியாத உலகை இவர்கள் விவரிப்பதால் பார்ப்பதற்கும் ஆவலாக, வெளிநாடுகளில் பார்க்க வேண்டிய இடங்களையும் தெரிந்து கொள்ள ஏதுவாகவும் இருக்கும். அப்படி ஒரு நிகழ்ச்சி தான் 'ஜம்யங்' என்ற திபெத்தியர் வழங்கும் "ட்ராவல் திபெத்" குறுந்தொடர்கள். அத்தனை பொறாமையையாக இருக்கிறது. அப்படிப்பட்ட இடங்களுக்குச் சென்று நம் கண்களுக்கு விருந்தாக பல அருமையான தொடர்களைச் சுவைபட அளித்திருக்கிறார் மனுஷர்! உயர்ந்த மலைகள், பனி உருகியோடும் நீண்ட ஆறுகள், வண்ண வண்ண குளங்கள், நதிகள், பசுமை போர்த்திய விளைநிலங்கள், கட்டடங்கள், காடுகள், அழகு மடாலயங்கள் என நம்மைச் சுண்டி இழுக்கும் வகையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார். ஜம்யங்கின் குரலும், தொகுத்து வழங்கும் விதமும் தொடரை மேலும் இனிமையாக்குகிறது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாலோ என்னவோ அருமையான சாலைகள் நாடு முழுவதும் போடப்பட்டிருக்கிறது. பெருநகரங்களைத் தவிர கிராமங்களில் மக்கள் கூட்டம் இல்லை. அத்தனை வெள்ளந்தி மனிதர்களாக தெரிகிறார்கள். அவர்களின் விடியலே எழுந்தவுடன் உலக நன்மைக்காக வேண்டிக் கொண்டு வாசனை மூலிகைகளை வீட்டு வாசலில் இருக்கும் அடுப்பில் தூபம் போடுவதில் துவங்குகிறது. தனக்காக, தன் குடும்பத்திற்காக கோவில் கோவிலாக வேண்டிக்கொண்டு அலையும் சுயநலம் பிடித்த உலகில் இவர்களின் எளிய வாழ்க்கையும் அணுகுமுறையும் மனதிற்கு இதமாக இருக்கிறது.
கிராமங்களில் வசிப்போர் கால்நடைகள், பார்லி, காய்கறி, மலர்த்தோட்டங்கள் சூழ வாழ்கிறார்கள். கிடைக்கும் பாலில் வெண்ணெய், பாலாடைக்கட்டியை அவர்களே தயாரித்து விடுகிறார்கள். பார்லி பவுடரில் ரொட்டி சுடுவதும், வெண்ணையில் தேனீர் போடுவதும், காட்டு எருமைகளின் இறைச்சி, காய்கறிகளைக் கொண்டு செய்த சூப் என கிடைப்பதைக் கொண்டு அவர்களுடைய அன்றாட உணவு எளிதாக முடிந்து விடுகிறது.
ஒவ்வொருவர் வீட்டிலும் புத்தர் வழிபாடு செய்ய ஒரு பூஜை அறை உள்ளது. தினமும் காலையில் எழுந்தவுடன் பூஜையறையில் கிண்ணங்களில் நீரை நிரப்பி வழிபடுகிறார்கள். அதற்காக நீரைப் பிடித்துக் கொண்டு வர காலையிலேயே கிளம்பி விடுகிறார்கள். வயதானவர்கள் கையில் ஒரு மாலையையோ உருளையோ வைத்து மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். வீட்டு வேலைகளைப் பெண்கள் தான் கவனித்துக் கொள்கிறார்கள். கடல் மட்டத்தில் இருந்து 3000 மீட்டருக்கு மேல் இருப்பதால் குளிருக்கும், பனிக்கும் பஞ்சமில்லை. ஹீட்டர் வசதிகள் இல்லாமல் கிராமப்புற மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று அதிசயமாக இருக்கிறது!
வீட்டிற்கு அருகே ஓடும் ஓடை, நதியிலிருந்து சுத்தமான நீரை எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். மர அடுப்புகள் தான் பல இடங்களிலும். பெரிய வீடுகள் முதல் சிறு குடிசைகள் வரை இருக்கிறது. எங்கு பார்த்தாலும் புத்த மடாலயங்கள் தான்! இயற்கையுடனும் இறைவழிபாடுடனும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் இமயமலை அடிவாரத்தில் வாழும் திபெத்தியர்.
ஜம்யங் உலகின் அரிய மடலாயங்களுக்கு அழைத்துச் செல்கிறார். ஒவ்வொரு தொடரும் கண்களில் ஒத்திக்கொள்ளலாம் போல கொள்ளை அழகு. மக்கள் மிகவும் சாத்வீகமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் புண்ணியத்தலங்களுக்கு குடும்பங்களுடன் செல்கிறார்கள். ஊர்கள் ஒவ்வொன்றும் அத்தனை நேர்த்தியாக , கட்டடங்கள் அழகிய வண்ணங்களில். படபடக்கும் கொடிகள் சூழ ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மடாலயங்கள், ஸ்தூபிகள், பொன்னால் செய்யப்பட்ட புத்தர்கள், பனிமலைகளுக்கிடையே எப்படி இவ்வளவு உயரமான மடாலயங்களை, தியான மண்டபங்களை கட்டினார்களோ என்று ஆச்சரியப்பட வைக்கிறது இத்தொடர் ஒவ்வொன்றும்.
இந்துக்கள் பலரும் தரிசிக்க நினைக்கும் கைலாச மலைக்கு கூட நம்மை அழைத்துச் செல்கிறார் ஜம்யங். முடிந்தால் நீங்களும் கண்டுகளியுங்கள்.
ஆல்பனியிலிருந்து ஒரு மணிநேரத்தொலைவில் கேட்ஸ்கில் மலையடிவாரத்தில் 'வுட்ஸ்டாக்' என்ற சிற்றூர் இருக்கிறது. 1969ல் இங்கு நடந்த இசைத் திருவிழாவால் பிரபலமான ஊர். வியட்நாம் போரில் அநியாயத்திற்கு மக்களையும் பொருளாதாரத்தையும் இழந்து இளைஞர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு நிம்மதியைத்தேடி புகை, போதை, இசை என்று அலைந்து கொண்டிருந்த நேரத்தில் இங்கு நடைபெற்ற இசைத்திருவிழா வரலாற்றையே புரட்டிப் போடும் அளவிற்கு வெற்றி பெற்றது. பிரபல இசைக்கலைஞர்கள் பங்கேற்றுக் கொண்டதும் கட்டுக்கடங்காத கூட்டமும் இன்று வரையில் 'வுட்ஸ்டாக்' என்றதும் மக்களுக்கு நினைவில் வரும் நிகழ்வாக நியூயார்க் வரலாற்றில் அமைந்து விட்டது. இன்று இசை, ஓவியக்கலைக்கூடங்கள் நிறைந்த அமைதியான ஊராக பல கடைகளுடனும் உணவகங்களுடனும் இயற்கை எழில் சூழ மக்கள் வந்து செல்லும் இடமாக மாறி விட்டிருக்கிறது. அங்கு முதல் முறை சென்றிருந்த பொழுது காபிக்கடையில் ஒருவர் இந்தியர்களா? எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டு விட்டு ஐந்து நிமிட மலைஏற்றதில் அருமையான திபெத்தியன் மடாலயம் ஒன்றுள்ளது. கண்டிப்பாக பார்த்து விட்டுச் செல்லுங்கள் என்று செல்ல வேண்டிய வழியையும் கூறினார். அவர் பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர். இந்தியா, நேபாளம், திபெத் சென்று வந்ததாக அவருடைய இனிய அனுபவங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அந்தக் கடையில் வுட்ஸ்டாக் இசைத்திருவிழா அன்று எடுத்த பல படங்களை வைத்திருந்தார்கள்.
அவர் சொன்ன மடாலயத்தைத் தேடி மலையேறிச் சென்ற எங்களுக்கு அப்படியொரு ஆச்சரியம். வண்ண வண்ண கொடிகளுடன் அந்த இடமே ரம்மியமாக இத்தனை பெரிய கட்டடத்தைக் கட்டி வைத்திருக்கிறார்களே என்ற பிரமிப்புடன் உள்ளே சென்றால் மிகப்பெரிய தங்கமுலாம் பூசிய புத்தரின் சிலை, சிகப்பு, மஞ்சள், ஊதா வண்ணங்களுடன் ஓவியங்கள் தீட்டப்பட்ட சுவர்கள், விளக்குகள் என்று அந்த இடமே ஜெகஜோதியாக மின்னிக் கொண்டிருந்தது. அந்தப் பெரிய அறையில் மக்கள் அமர்ந்து தியானிக்க வசதியாக இருக்கைகள் போடப்பட்டிருந்தன. அவர்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகளும் அங்கிருந்தன. அருகே தாரா சந்நிதானத்தில் பூஜை நடந்து கொண்டிருந்தது. தாளத்துடன் முரசு ஒலியும் இசைக்க துறவிகள் மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்தார்கள். அமைதியான சூழலில் அதனைக் கேட்பதற்கே அத்தனை ரம்மியமாக தியான நிலைக்கு அழைத்துச் சென்றது.
தலாய் லாமா ஆசியுடன் வட அமெரிக்காவில் அமைந்துள்ள மிகப்பெரிய புத்த மடாலயம். மூன்று வருடங்களுக்கு முன் தற்போதைய மடாலய தலைவர் புதிய ஸ்தூபிகளை நிர்மாணிக்க வந்திருந்தார். அவர்களுடைய கலாச்சாரப்படி ஆற்றை நோக்கிய மலை உச்சியில் இக்கோவில் அமைந்துள்ளது சிறப்பு. பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களும் அமெரிக்கர்கள் பலரும் இங்கு வந்து தியானித்து விட்டுச் செல்கிறார்கள்.
கோவிட் தொற்றுப்பரவல் காலத்தில் மூடப்பட்டிருந்த மடாலயம் இரு வருடங்களுக்குப் பிறகு சென்ற வாரம் திறக்கப்பட்டது.
மலர்களே மலர்களே இது என்ன கனவா?
நாங்கள் சென்றிருந்த நாளன்று உடலை ஊடுருவும் குளிர். நல்ல வேளை! வண்டிகளை நிறுத்த பூங்காவிற்குள் இடங்கள் இருந்தது பெரும் ஆசுவாசத்தைத் தந்தது. எதிரே பழமையான பிரபலமான அழகான ஃபோர்தாம் பல்கலைக்கழகம் உள்ளது.கண்காட்சி நடைபெற்ற இடத்தில் மிதமான வெட்பநிலையில் மலர்களைக் கண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் பூங்கா ப்ராங்க்ஸ் நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் உள்ளது. நியூயார்க் நகரத்தில் எங்கு தான் போக்குவரத்து நெரிசல் இல்லை😞
2020ல் சான்ஃபிரான்சிஸ்கோ தாவரவியல் பூங்காவில் உலகில் உள்ள அனைத்து தாவரங்களையும் மலர்களையும் கண்டு பிரமித்துப் போயிருந்தேன். 2021ல் புரூக்ளின் தாவரவியல் பூங்காவில் செர்ரி மலர்களின் அணிவகுப்பைக் கண்டு வியந்தோம். 2022ல் ப்ரான்க்ஸ் தாவரவியல் பூங்காவில் ஆர்க்கிட் மலர்கள் கண்காட்சியில் இத்தனை ஆர்க்கிட் வகைகளா என்று ஆச்சரியப்பட்டுப் போனோம். எல்லாம் மகளால் சாத்தியமானது💓 நியூயார்க் நகரில் இருக்கும் பிரபல பூங்காக்கள் அனைத்தும் மிக நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு பல அரிய வகைத் தாவரங்களையும் பொக்கிஷமாகப் பாதுகாக்குகிறார்கள். தலைமுறை தலைமுறையாக மக்களுக்கு இயற்கையின் அவசியத்தை உணர்த்தவும் தவறுவதில்லை இப்பூங்காக்கள்.
மழைக்காலம் தொடங்கி விட்டது. அனைத்துப் பூங்காக்களும் மலர்களால் பூத்துக் குலுங்கும் நேரம். மக்களும் இவற்றையெல்லாம் கண்டு களிக்க கிளம்பிவிடுவார்கள்.
"In nature, nothing is perfect and everything is perfect."
வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்
ஒரு அரசு வெற்றிகரமாக ஆட்சியை நடத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் அமைச்சரவை சகாக்களின் பங்குகளும் அதிகம். அதனால் தான் பொறுப்பான, தகுதியானவர...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
'வெட தௌரோ' என்று சௌராஷ்ட்ரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் மதுரையில் மிக பிரசித்தம். அதிலும் புரட்ட...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...




