Friday, December 6, 2019

நடிகையர் திலகம்

திரையில் தோன்றும் தங்களது ஆதர்ஷ நடிக , நடிகையைர் பிம்பங்களின் மேல் தோன்றும் தீராக்காதல் நடிப்பையும் மீறி அவர்கள் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளிலும் ஒன்றிட அதிதீவிர ரசிகர்களால் மட்டுமே முடியும். சிவாஜி, எம். ஜி.ஆர் காலந்தொட்டு நடிகர்களைப் பற்றின தகவல்களை அறிந்து கொள்வதில் இருந்த நாட்டம் இன்று வரை தொடருவதும் இன்றைய சமூக வலைதளங்களில் ஒத்த ரசனையுடையவர்கள் எதிராளியைக் கலாய்த்து காய்ச்சு எடுக்கும் வரை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆண்களின் திரை உலக ராஜ்ஜியத்தில் சில பெண் நடிகைகளும் கோலோச்சிய காலத்தில் தெலுங்கு, தமிழ் என இரு மாநிலங்களிலும் தனது இயல்பான வசீகர நடிப்பால் பலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைத் திரைப்படமாக தெலுங்கில் 'மகாநடி' என்ற பெயரிலும் தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் வெளிவரப் போவதாக வந்த செய்தி அறிந்த நாளில் இருந்து அந்தப் படத்தைக் காண ஆவலுடன் இருந்தவர்கள் பலர். அதனைத் தொடர்ந்து வந்த செய்திகளும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளும் இத்திரைப்படத்தினைப் பார்க்கும் ஆவலைத் தூண்ட, நடிகையர் திலகம் திரையிடப்படாத இடங்களில் தெலுங்கு மகாநடியையாவது பார்த்து ஜென்ம சாபல்யம் அடைந்தோரில் நானும் ஒருத்தி.

நமக்குத் பிடித்த ஒருவரை நினைத்தவுடன் அவர் நம்முள் ஏற்படுத்திய பாதிப்புகளின் பிரதிபலிப்புகள் நம்மை அறியாமலேயே நினைவிற்கு வரும். சாவித்திரி என்றவுடன் பலருக்கும் பாச மலரில் வந்த அன்புத் தங்கையாக, களத்தூர் கண்ணம்மாவின் தவிக்கும் தாயாக, பாத காணிக்கையின் அன்பின் திருவுருவமாக, மஹாதேவியின் அரசியாக, மாயாபஜாரின் அழகு காதலியாக, நவராத்திரியில் நடிகர் திலகத்திற்கு இணையாக, ஜெமினி கணேசனின் ரீல் காதலியாக  நடித்த படங்களில்  பலவித உணர்ச்சிகளை அழகாக வெளிக்காட்டி அருமையாக நடித்து மக்களின் மனதில் இன்றும் குடியிருப்பவர் நடிகை சாவித்திரி .

வீட்டுக்கருகில் இருந்த  திரையரங்குகளில் பார்த்த பழைய படங்களில் அதிகம் சாவித்திரி நடித்த படங்களே. மாயா பஜாரில் பெண் உடலில் புகுந்த ரெங்காராவாக அதகளம் பண்ணி இருந்த காட்சிகள், பாச மலரில் அண்ணன் மேல் அதிக அளவில் பாசம் கொண்ட தங்கையாக அந்த ஒரு  பாடலில் அவர் தேம்பி அழுது  பல அக்கா, தங்கைகளுக்குத்  தங்கள் அண்ணன் தம்பிகளை  நினைத்து  கண்ணீர் வர,  உடல் பெருத்திருந்தாலும் திருவிளையாடலில் பார்வதியாக , மகாதேவியில் எம்ஜியாருடன் அரசியாக, பாத காணிக்கையில் அமைதியான குணவதியாக, களத்தூர் கண்ணம்மா, கற்பகம், பாவ மன்னிப்பு  என்று அவர் படங்கள் நீண்டு அவர் கோமாவில் மரணித்த செய்தி வரை நினைவிலாட,

தமிழில் 'நடிகையர் திலகம்' படத்தைக் காண ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்து தெலுங்கில் வெளியான 'மகாநடி'யைப்  பார்க்க வேண்டிய துரதிர்ஷ்ட நிலை. அம்மா காலத்திய நடிகை என்றாலும் எங்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகை. அதனால் சாவித்திரியின் வாழ்க்கையை எப்படிப் படமாக எடுத்திருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகம். சப்டைட்டிலுடன் படத்தைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை. தாய் பாஷையில் பேசும் பல சொற்கள் தெலுங்கிலிருந்து வந்திருக்கிறதெனவும் அறிந்து கொண்டேன்.

படத்தின் டைட்டில் காட்சிகளும்  பின்னணி இசையும் பழைய படத்தினைக் காணப் போகும் சூழலுடன் ஆரம்பிக்க, முதற் காட்சியே அவரை யார் என்று தெரியாமல் மருத்துவமனையில் தரையில் கிடத்தும் காட்சியில் 'உச்' கொட்ட வைத்து ஆரம்பித்தது. துள்ளித்திரியும் குழந்தைப்பருவ காட்சிகளில் தந்தையை நினைத்து ஏங்கும் குழந்தையாகவும், துறுதுறுவென பேசிக்கொண்டே இருக்கும் இளம்பெண்ணாக நடனம், நாட்டியம், நாடகம் என வசீகரமான  வெகுளிப்பெண்ணாக இருந்திருப்பதாக தெரிகிறது. பட வாய்ப்புகளுக்காக சென்னைக்கு வருபவரின் முகத்தில் தெரியும் ஆச்சரியங்கள், ஜெமினி கணேசனின் அறிமுகம், அவர் எடுத்த படம் ஒன்று பத்திரிகையில் வெளியாகி அதன் மூலம் எல்.வி.பிரசாத் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வசனம் சரியாக பேசத்தெரியாத பெண் நடிக்க லாயக்கில்லை என்று அவரை நீக்கி பின் வேறொரு படத்தில் அப்படிச் சொன்னவரே இவரை வைத்துப் படம் எடுக்க, வசனங்களில் அதன் உச்சரிப்புகளில் நடிப்பில் அவர் செலுத்தும் அக்கறையில் அவர் ஒரு பெரிய நடிகையாக நட்சத்திரமாக உலா வருவார் என பெரிய திரைப்பட ஜாம்பவான்கள்  ஆருடம் சொல்லியது அவர் உழைப்புக்கும் நடிப்பிற்கும் கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரம்!


தந்தையின் அன்பிற்கு ஏங்கியவருக்கு நடிக்க, பேச, கார், குதிரை ஓட்ட என்று ஜெமினிகணேசனின் நெருக்கத்தில் அவருடன் காதலாகிப் போனாலும் ஏற்கெனவே திருமணமானவர் என்ற செய்தி கேட்டு கலங்கி நிற்க, யாருக்கும் தெரியாமல் ஜெமினி கட்டிய தாலியுடன் சில நாட்கள், பின் தன் அன்னை, வளர்த்த தந்தை, பெரியம்மா சொந்தங்களை விட்டு ஜெமினியின் முதல் மனைவி வீட்டில் ஓரிரவில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து அவருக்கான வளர்ச்சியில் பங்களா, நகைகள் என்று ஆடம்பரமாக வாழ்ந்தாலும் பிறருக்கு உதவுவதில் தயங்காத குணம் என்பதற்கு சாவித்திரியும், மகளும் அணிந்திருந்த நகைகளை இந்திய அரசாங்கத்திற்கு அளித்து தன்னுடைய பரந்த மனப்பான்மையையும் தாய்நாட்டின் மேல் கொண்டிருந்த அக்கறையையும் தன்னுடன் பணிபுரியும் தொழிலார்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று அனைவரையும் நம்பி தன் சொத்துக்களை இழந்தது என்று அவருடைய தயாள குணத்தைப் படத்தில் காட்டி இருந்தார்கள்.

காதலாகி கசிந்துருகி ஜெமினி கணேசனுடனான வாழ்க்கை செல்வச்செழிப்புடன் வளர, தமிழ் தெலுங்குப் பட உலகில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக போட்டிப் போட்டுக் கொண்டு நடித்து வெற்றி பெற்று அதே பிரபலத்தால் ஏற்படும் மனத்தாங்கலில் தொடங்கி ஜெமினி கணேசனின் பெண் சபலத்தால் பிரிய நேர்ந்து அத்துயரை கடக்க அவரிடம் சேரும் குடிப்பழக்கம் மெல்ல மெல்ல அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட...

நாற்பத்தைந்தாவது வயதில் செல்வங்களையும் இழந்து உறவுகளின் போர்வையில் வலம் வந்து தன்னை ஏமாற்றியவர்களின் துரோகத்தையும் ஜீரணிக்க முடியாமல் தன்னை அழித்துக் கொண்டே தன்னுடைய முடிவை நோக்கிச் சென்று  பத்தொன்பது மாத காலம்   மீண்டு வர முடியா கோமாவில் முடிந்த அவருடைய வாழ்க்கை...பலரையும் கண்கலங்க வைக்கிறது!

திரைத்துறையின் பல உயரிய விருதுகளைப் பெற்றிருந்தாலும் ரசிகர்களின்  உள்ளங்களில் இன்றும் கொலு வீற்றிருக்கும் நடிகையர் திலகம் சாவித்திரியின் பிறந்தநாளாம் இன்று. ம்ம்ம்ம்ம்... பெயரைக் கேட்டாலே நிழலாடும் அந்த அழகிய பாந்தமான முகம்...

"பெயரில் என்ன இருக்கிறது? பெயரில் தான் எல்லாமுமே இருக்கிறது!"

தண்ணிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர்தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்...


















Thursday, October 10, 2019

World Mental Health Day 2019


ஐந்தில் ஒரு நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலரும் அதற்கான மருத்துவத்தையோ ஆலோசனைகளையோ முறையாக பெறுவதில்லை என்றும் அதனைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10 அன்று உலக மனநல விழிப்புணர்வு தினமாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்நாளில் மக்களிடையே கருத்தரங்குகளும் மருத்துவர்களின் ஆலோசனைகளும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகளும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசாங்கம் பல நிகழ்ச்சிகளையும் விளம்பரங்களையும் செய்து வருகிறது.

இன்று பலரும் மன அமைதியின்றி சோகங்களையும் துக்கங்களையும் யாருக்கும் தெரியாதவாறு சுமந்து கொண்டு விரக்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்துவிடுவார்களோ என்ற அச்சமும், சமூகத்தின் நிராகரிப்பும், கிண்டல் கேலிகளை நினைத்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத சோகங்கள் மன அழுத்தத்தில் வந்து முடிகிறது. குழந்தைகளின் படிப்பு, கணவரின் வருமானம், உடல்நலம், குடும்பப்பிரச்னைகள், வேலையிடத்து நிர்பந்தங்கள், ஏற்றத்தாழ்வுகள், சமூகவலைத்தளத்தின் கணிசமான பங்குகள், தன்னைத் தவிர மற்றவர் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்ற தாழ்வுமனப்பான்மையில் தொடங்கும் மன அழுத்தம் நிம்மதியற்ற குடும்பத்தை உருவாக்குகிறது. இதில் அந்த குடும்பமே பாதிக்கப்பட்டாலும் அதற்கான தீர்வை நோக்கி யாரும் செல்வதில்லை. மேலும் மேலும் பிரச்னைகளை வளர்த்து ஏதோ பிறந்து விட்டோம் வாழ்கிறோம் என்ற ரீதியில் தான் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தீவிர மனஅழுத்தம் தற்கொலைக்கும் வித்திடுகிறது. இந்நாளில் தற்கொலை எண்ணத்திலிருந்து வெளிவருவது பற்றின விழிப்புணர்வு பிரச்சாரங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்கொலையால் பாதிக்கப்படப்போவது அவரின் நெருங்கிய குடும்பம் தான். அதிலிருந்து மீள அவர்கள் போராடுவதைப் பார்ப்பதற்கு தான் அவர்கள் இருப்பதில்லை. எந்த பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்று நம்புபவர்களும் அத்தீர்வினை நோக்கிச் சிந்திப்பவர்களும் தான் மன வியாதியிலிருந்து வெளிவருகிறார்கள்.

அமெரிக்கா வந்த பிறகு தான் வெளிபப்டையாக பாதிக்கப்பட்டவர்களையும் அதற்கான தீர்வுகளையும் அறிந்து கொண்டேன். இந்தியாவில் நான் இருந்தவரையில் மனநல மருத்துவரிடம் செல்வதை தவிர்த்தவர்களே அதிகம். இன்று அதில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. உடல்நலத்திற்கான மருத்துவ ஆலோசனை போலவே மனநலத்திற்கான ஆலோசனைகளும், மருத்துவமும், மருந்துகளும். புரிந்து கொண்டால் யாவருக்கும் நலம்.

மன அழுத்ததிலிருந்து வெளிவர தடையாக இருப்பது பாதிக்கப்பட்ட நபர் வெளிப்படையாக பேசாததும் புரிந்து கொள்ளாத சுற்றமுமே! தன்னுடைய மனஅமைதியையும் குலைத்து தான் செய்வது தவறு தன்னைச் சுற்றி இருப்பவர்கள் காயப்படுகிறார்கள் என்று தெரிந்தும் மென்மேலும் வார்த்தைகளாலும் செயல்களாலும் சாடுபவர்களைத் தக்க மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று அந்நோயிலிருந்து மீள வழி செய்ய வேண்டும்.

இன்று பலருக்கும் மன அழுத்தம் பல்வேறு காரணங்களால் அதிகரித்து இருக்கிறது. கணவரால் 46% பெண்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாகவும் , 75% குடும்ப பொறுப்புகளைப் பெண்கள் கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் இதைத்தவிர பணிச்சுமை , நண்பர்களின் போர்வையில் வருபவர்கள் தரும் துன்பங்கள் தங்களைத் துயரப்படுத்துகிறதென ஆய்வில் கூறியிருப்பதாக வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். முடிவில், மனச்சோர்வுடன் இருப்பது குற்றமல்ல. அக்குறையை போக்கிக் கொள்ள தகுந்த மருத்துவ ஆலோசனையும்,மருந்துகளும், உடனிருப்பவர்களின் அன்பும், கரிசனமும் இருந்தால் போதும். தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அது உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளோரையும் மிகவும் பாதிக்கும். மனவருத்தத்துடன் இருப்பவர்களுக்காக பல ஹெல்ப்லைன்களை அணுகி ஆலோசிக்கவும் என்று கூறி பேச்சை முடித்தார்கள்.

வீட்டில் போதிய ஆதரவும் புரிந்து கொள்ளலும் கிடைக்காத பள்ளிகளில் தடுமாறும் குழந்தைகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பள்ளிகளும் பெற்றோர்களும் அதிக கவனம் எடுத்து வழிநடத்திச் செல்ல வேண்டிய பருவம் இது. இங்கு பள்ளிகளில் கூட தகுந்த மன ஆலோசகர்கள் மாணவர்களை கண்காணித்து வழிநடத்துகிறார்கள். இருந்தும் பல வேதனை மிகுந்த சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது. பள்ளியிலிருந்து ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் குழந்தைகளுக்குத் தியானம், யோகா போன்றவற்றை அறிமுகப்படுத்தி மனதை ஒருமைப்படுத்தும் வழிகளைப் பள்ளிகளில் ஆரம்பிக்க வேண்டும். சில பள்ளிகளில் வெற்றிகரமாக செய்தும் விட்டார்கள் என்று கூறினார்.

இன்றைய அவசர உலகில் நமக்கான நேரத்தை ஒதுக்கி நம்மை பல வழிகளில் மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. மனம் வாடி வருந்தி இருப்போருக்குத் தேவை ஆறுதலும், மனம் விட்டுப்பேச மனிதர்களும், நல்வழிகாட்டுதலும் தான். நமக்குள் இருக்கும் மனநோயை கண்டறிவோம். துன்புறும் நம் நண்பர்களுக்குத் தோள் கொடுத்து உதவுவோம்.

செவி சாய்த்து ஆறுதல் அளிக்கும் மனிதர்களாவோம்.

#worldmentalhealthday

Tuesday, October 8, 2019

இலையுதிர்கால பயணம் - லேக் ஜார்ஜ்


அதிகாலைப்பயணங்கள் ஆனந்தமானவை. அதிலும் குளிர் சேர்ந்து கொண்டால் நடுக்கத்துடன் பயணிப்பதும் சுகம். வார இறுதியில் குழந்தைகள் இல்லாமல் இலையுதிர்கால அழகைக் காண ஆரம்பித்த முதல் பயணம். அவர்கள் இருந்திருந்தால் சொன்ன நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டிருப்போம். அவர்களுக்கு வேண்டியததை மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டேனா, மருந்துகள், வழியில் கொறிக்க தின்பண்டங்கள் என்று பார்த்து பார்த்து யோசித்துப் புறப்பட வேண்டிய அவசியமில்லாத பயணம். வெயில், மழை, குளிர் என்று அனைத்துக்கும் தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு குறித்த நேரத்தில் கிளம்ப முடிந்தது.


விடியாத விடியலில் லேக் ஜார்ஜ் நோக்கிப் பயணம். கிழக்கில் வான் வசீகரன் செந்நிறக்கதிர்களுடன் வலம் வர, விண்ணில் ஒரு மாயாஜாலமாய் மூடு பனி. வழியெங்கும் நீர்நிலைகளில் குளிர் பனியின் கைங்கரியம். புற்களில் வெண்ணிறத்தில் பனி படர்ந்திருக்க உறைநிலைக்கும் கீழே வெப்பம் சென்று கொண்டிருந்ததை வண்டியில் இருந்து இறங்கியவுடன் உடலைத் தழுவிய குளிர் ஜில்லென்று உரைத்தது.



ஓரிருவர் நடந்து கொண்டிருக்க, அமைதியான ஏரியை அதுவும் காலைப்பனியுடன் வலம் வரும் ஏரியைக் காண அழகோ அழகு. அந்த ஜில்ல்ல்ல்ல்ல் ஏரியில் ஒருவர் மெதுவாக உள்ளிறங்கி மீன் பிடிக்க ஆரம்பித்தார். பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குத் தான் குளிர ஆரம்பித்தது. பனிக்காற்றும் வீச, நிற்க முடியாமல் வண்டிக்குள் தஞ்சமடைந்தோம்.

புத்தம் புது காலை
பனிபொழியும் வேளை
என் வானிலே ...


Thursday, October 3, 2019

Growing Up Wild



அலாஸ்காவில் ஆரம்பித்து ஆப்பிரிக்கா ஸ்ரீலங்காவில் பயணிக்கும் அழகிய ஆவணப்படம் Growing Up Wild. கண்கவர் இயற்கைச்சூழலில் ஐந்து விலங்குகள்  தங்கள் குட்டிகளை வளர்க்கப் போராடும் கணங்களில் எதிர்கொள்ளும் அபாயங்களை  அருமையாக எடுத்துளார்கள்.

பனிசூழ் குகையிலிருந்து நீண்ட உறக்கம் கலைந்து தாய்க்கரடி பல மைல்கள் தன் குட்டிகளுடன் அலைந்து பசியுடன் உணவுக்காகப் போராடுவதையும், மற்ற கரடிகளிடமிருந்து குட்டிகளைக் காப்பாற்றுவதையும், உணவு தேடும் வித்தையை குட்டிக்கரடிகள் கற்றுக் கொள்வதையும் அலாஸ்காவில் அழகாகப் படம் பிடித்துள்ளார்கள்.

ஆப்பிரிக்காவில் தன் சிங்கக்குட்டிகளுடன் தாய் சிங்கம் வேட்டையாடி உணவளித்து அவர்களைப் பாதுகாக்கப் போராடுவதும் சோம்பேறி ஆண் சிங்கங்கள் பெண் சிங்கங்கள் வேட்டையாடியதை உண்டு களித்து, வளரும் இளம் ஆண் சிங்கங்களைத் தங்கள் எல்லையிலிருந்து விரட்டி அடிப்பதும், அவர்களும் கூட்டாக அலைந்து பருவம் வந்தவுடன் மீண்டும் திரும்பி வருவதும் காடுகளின் ராஜா, ராணி வாழ்க்கையை அற்புதமாகக் காட்சிப்படுத்தி இருந்தார்கள்.

தன் மூன்று குட்டிகளைக் குழுவாக வேட்டையாட வரும் கழுதைப்புலி (hyena)களிடமிருந்து பாதுகாக்க தாய் சிறுத்தை பதறுவதும் கண்முன்னே குட்டிகளை இழப்பதும், எதிரி விலங்குகளிடமிருந்து குட்டிகளைப் பதுக்கி வைப்பதும், உணவுக்காக அலைவதும் சிறுத்தையின் ஓட்டம் போலவே மனமும் பதைபதைத்துப் போய் விடுகிறது.

மனித குழந்தைகள் போலவே சிம்பன்சி குட்டிகளின் சேட்டைகளும், உணவைத் தேடும் வித்தையையும் எவ்வாறு உண்பதென்பதையும் பெரியவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதும் பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது.

ஸ்ரீலங்கா காட்டில் பாழடைந்த கோவில் மண்டபங்களில் வாழும் குரங்கினங்களைப் பற்றிய பகுதியில் மனிதர்களைப் போலவே குரங்கினத்திலும் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்ற சமூக வரிசை முறை இருக்கிறதென்று ஆவணப்படத்தில் கண்டு கொண்டேன். தங்களுக்கு வேண்டிய உணவுகளைத் தேடிச் சென்று உண்பதும், குட்டிக் குரங்குகள் தாயிடமிருந்து உணவைத் தேடும் முறையை கற்றுக் கொள்வதும் குடும்பங்களாக காட்டில் அலைவதும் அழகாகப் படமெடுக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் ஒதுக்கப்பட்ட குட்டிக் குரங்கு ஒன்று மரத்தில் கூட ஏறாமல் தனியாக உட்கார்ந்து அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்க, மரக்கிளை மேல் அமர்ந்து பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த உயர் இன குரங்குகள் தூக்கியெறிந்த மிச்ச மீதிகளைப் பயத்துடன் பொறுக்கிச் சாப்பிடுவதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. மழையில் தனியாக நனைந்தபடி அமர்ந்திருக்க அதனுடன் சண்டையிட்டுக் காயப்படுத்தும் மற்ற குரங்குகள் வெறுத்து ஒதுக்கும் பொழுது குரங்கினத்தலைவன் ஆதரவாக அரவணைத்துச் செல்ல அப்பாடா என்றிருந்தது. அந்த தலைவன் குரங்கும் சண்டையில் இறந்து விட, மீண்டும் அனாதையாகிப் பாவப்பட்டு... வேறொரு குரங்கிடம் தஞ்சம் புகும் வரை..

வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது!
மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும்!

குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் பங்கு அதிகமாகவும், பொறுப்புள்ளதாகவும் விலங்குகளின் உலகிலும் இருக்க ஹாயாக உலா வரும் ஆணினம் மேல் கோபம் வருவது இயற்கை 😡குழுவாக வாழும் குரங்கு, சிங்கம், சிம்பன்சிகள் குட்டிகளுக்கு ஒன்று என்றால் திரள்வதும், தாயின் அரவணைப்பில் மட்டுமே வாழும் விலங்குகளின் பரிதவிப்பையும் விளக்கும் அருமையான காட்சிகளுடன் காடுகளில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் 'Growing Up Wild'.

நெட்ஃப்ளிக்ஸ்ல் காணக் கிடைக்கிறது.

Sunday, September 1, 2019

பெத்த மனம் பித்து



வருடங்கள் உருண்டோடி விட்டது! கைகளில் ஏந்திய நாள் முதல் பள்ளிப்படிப்பு முடியும் வரை எத்தனை சீண்டல்கள், கேலி கிண்டல்கள், கோபங்கள், சிரிப்புகள், செல்ல சண்டை சச்சரவுகள்! ஒவ்வொரு வயதையும் தன் குழந்தைத்தனத்தால் எங்களை மட்டுமல்ல அவன் நண்பர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கவர்ந்திருந்தான் சுப்பிரமணி. பிறந்த சில மாதங்களில் அவனால் ஏற்பட்ட மனவேதனை மறக்க நினைக்கையில் பதினாறாவது வயதில் உயிர் பயத்தையும் கூட்டி இன்று வரை அவனைப் பற்றிய சிந்தனையே என்றும் எந்நாளும் எந்நேரமும்! அம்மாவுக்கு உன்னைய விட என்னைய தான் நிறையப் பிடிக்கும் என்று அக்காவைச் சீண்டுவதிலிருந்து நான் பொறுப்புள்ளவனா இருப்பேன். நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லியபடியே அந்த நாளும் வந்தே விட்டது!

அமெரிக்காவில் பெரும்பான்மையான மாணவர்கள் கல்லூரிப் படிப்பிற்காக வீட்டை விட்டு செல்லும் நிலை தான். மேல்நிலைப்பள்ளி முடிக்கும் பொழுதே அவர்களின் தன்னம்பிக்கையும் சுயமாக முடிவெடுக்கும் திறமையும் கூடி விடுகிறது.அவன் கல்லூரிக்குச் செல்லும் நாளை எண்ணி மனம் விரும்பினாலும் என்னை விட்டுத் தூரச் சென்று விடுவான் என்ற வாதை தான் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருந்தது. ஷாப்பிங் எல்லாம் முடிந்ததா?
என்று அக்கா கேட்கும் பொழுது கூட அம்மா பார்த்துக் கொள்வாள் என்ற பதிலில், என்னம்மா இவன் இன்னமும் இப்படியே இருக்கிறான்? கடைசி நாள் வரை நண்பர்களுடன் விளையாடுவதிலும் வெளியில் சென்று சாப்பிடுவதிலும் நாளை கல்லூரிக்குச் செல்ல வேண்டுமே என்ற சிறு பதட்டம் கூட இல்லாமல் நான் தான் அதிக படபடப்புடன் இருந்தேன்.

கிடைக்கும் நேரங்களில் அவன் செய்த சேட்டைகளைச் சொல்லிக் குதூகலித்து அவன் இல்லாத வெறுமையான நாட்களை எப்படி கடக்கப் போகிறேனோ... வருந்தும் பொழுது ஜாஸ் கிளாசிக்கல் மியூசிக் கேளும்மா. அமைதியாயிடுவ. நாய்க்குட்டி வாங்கிக் கொடுக்கவா? பிஸியா இருக்கலாம். ஜிம்முக்குப் போய் நல்லா ஃபிட்டா இரும்மா, உனக்குப் பிடிச்ச விஷயங்களைப் பண்ணு. அப்பாவும் நீயும் நல்லா டூர் போங்க... சொல்லிக்கொண்டே போனான். எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டான்? மகள் கல்லூரிக்குப் போன பொழுது இதே போல் வருந்தினாலும் இவன் எவ்வளவு ஆறுதலாக இருந்தான். இப்பொழுது இருவரும் இல்லாத வாழ்க்கையை நினைக்கவே பயமாகவும் வருத்தமாகவும் கவலையாகவும் இருக்கிறதே!

ஏதோ சமீபகாலத்தில் தான் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தது போல் இருக்கிறது. ஆரம்பப் பள்ளியில் சேருவதற்கான படிவங்களையும், பெற்றோர்களின் வேலை, சம்பளம் இன்ன பிற ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு முதன்முதலாக சுப்பிரமணி படிக்கவிருக்கும் பள்ளிக்குச் சென்றோம். ஒவ்வொரு குழந்தையையும் தனியே அழைத்துக் கொண்டு சென்றார்கள். சுப்பிரமணியின் பெயரை அழைத்தவுடன் சமர்த்தா பேசிட்டு வாடா என்று அனுப்பி விட்டுக் காத்திருந்தோம். டே கேர், ப்ரீ ஸ்கூல் சென்று வந்ததால் எளிதில் யாரிடமும் பழகுவதிலும் பேசுவதிலும் பிரச்சினைகள் இருந்ததில்லை. அவனை அழைத்துச் சென்ற ஆசிரியை ஐந்து வயதுக் குழந்தையிடம் எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசி பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்து, நன்றாக வரைகிறான் என்று அவன் வரைந்திருந்த தாமஸ் தி டேங்க் என்ஜின் படத்தை எங்களிடம் கொடுத்தார். நல்ல ஓவியராக வருவான். நன்றாகத் தெளிவாகப் பேசுகிறான். பள்ளி திறக்கும் நாளைச் சொல்லி விட்டு மற்ற தகவல்கள் பள்ளியிலிருந்து வரும் என்று கூறி விட்டு பை என்று குழந்தையிடம் சிரித்த முகமாகப் பேசி விட்டுச் சென்றார். முகத்தில் கடுமை இல்லை. பெற்றோரையோ குழந்தையோ மிரட்டும் தொனியில்லை. எவ்வளவு பணம் கட்ட வேண்டுமோ என்ற ஐயம் இல்லை. பள்ளிக்குச் செல்ல ஆசையுடன் காத்திருந்தான். காத்திருந்தோம்.

அவன் வயது சுட்டிப்பையன்களுடன் இனிமையாகக் கழிந்தது அவனுடைய கிண்டர்கார்ட்டன்! சேட்டை சேட்டை அவ்வளவு சேட்டை! சிரித்துக் கொண்டே வகுப்பறையில் அடித்த லூட்டிகளைக் கேட்க ஆனந்தமாக இருக்கும்.

ஒன்றாம் வகுப்பில் அப்பொழுது தான் கல்லூரி முடித்து வந்த இளம் ஆசிரியரிடம் பேச சுப்பிரமணிக்கு அப்படியொரு கூச்சம். கவலைப்படாதீர்கள்! நீங்கள் நிறுத்தச் சொல்கிற வரை பேசும் காலமும் வரும் என்று சொல்லி இருந்தேன். Facts Vs Opinions பற்றி வகுப்பெடுத்தவரிடம்

All schools have doors is a fact.
Ms.Albanese is beautiful is an opinion

என்று எழுதியதை அவர் பள்ளி முழுவதும் ஆசிரியர்களிடம் காண்பித்து, நான் சுப்பிரமணியை அழைத்து வரச் சென்ற பொழுது கண்ணீர் வர சிரித்துக் கொண்டே சொன்ன அதே நாளில் பள்ளியில் பிரபலமாகியிருந்தான். எங்கிருந்து தான் இப்படியெல்லாம் இவனுக்கு யோசனைகள் வருகிறதோ...

பள்ளியில் நடக்கும் பிரத்தியேக தின கொண்டாட்டங்களில் அவனுக்குத் தெரியாமல் வகுப்பு ஆசிரியருக்கு உதவி செய்யச் சென்றால் அவன் நண்பர்களிடம் 'மை மாம் இஸ் ஹியர்' என்று அறிமுகப்படுத்தி ஆனந்திப்பான். எப்படிம்மா வந்தே? என்கிட்டே சொல்லவே இல்லை? அன்று முழுவதும் குஷியாக வளைய வருவான்.

புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த பிறகு அதில் மூழ்கி வகுப்புகளுக்குத் தாமதமாகச் செல்வது, வீட்டிற்குச் செல்லும் பேருந்தைத் தவற விடுவது, சண்டைன்னு வந்துட்டா களத்தில் இறங்க... பள்ளித்தலைமை ஆசிரியருடன் இவனுக்காக நாங்கள் சண்டை போட்டு ஆரம்பப்பள்ளி நாட்கள் அதகளமாக தான் சென்றது. அவனுடைய நண்பர்கள் அனைவரும் ஒத்த குணமுள்ள வால் பையன்கள்.

நடுநிலைப்பள்ளிக்குச் சென்ற பிறகு வாசிப்பில் நாட்டம் குறைய ஆரம்பித்தது. ஏனோ தானோவென்று தான் படிப்பும். மேல்நிலைப்பள்ளியில் எப்படி இருப்பானோ என்ற கவலை அப்பொழுதே வந்து விட்டது.
மேல்நிலைப்பள்ளியிலும் படிப்பைத்தவிர எல்லாமும் பிடித்திருந்தது. ஜாஸ் இசையில் நாட்டம் கொள்ள, விளையாட்டிலும் ஆர்வம் அதிகமானது. படிக்கிறதிலையும் கவனமா இருடா என்று சொன்னது வருடக்கடைசியில் தான் உறைத்தது அவனுக்கு. மொத்தமாக அட்வான்ஸ்டு பாடங்கள் நான்கை எடுத்து எங்களையும் திணறடித்தான். இதில் கல்லூரி சேர்வதற்கான SAT தேர்வுகளும் வந்து சேர... கவலையே படாமல் வெளிமாநிலங்கள் சென்று படிக்க மாட்டேன். இந்த மதிப்பெண்கள் போதும் என்று நிம்மதியாக இருந்தான். என்னுடைய வற்புறுத்தலுக்காகப் போனால் போகிறதென்று ஒரே ஒரு கல்லூரியைப் பார்க்கச் சென்றோம். அங்கும் நான் தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன். கடனுக்கே என்று வந்தான். இந்த கல்லூரி அந்த கல்லூரி என்று விண்ணப்பிக்காமல் இது போதும் என்று அவன் தேர்ந்தெடுத்த கல்லூரிகள் இரண்டு மட்டுமே. இவனுக்குப் பிடித்த கல்லூரியில் கிடைத்து விட்ட செய்தி அறிந்த நாளிலிருந்து ஹாப்பி...இன்று முதல் ஹாப்பி மனநிலை தான்!

தேர்வுகள் முடிந்து விட்டது. இனி பள்ளிக்குச் செல்ல தேவையில்லை என்று நன்றாகத் தூங்கியும் நண்பர்களுடன் பொழுதையும் கழித்துக் கொண்டிருந்தான். பள்ளி மூட இரண்டே நாட்கள் இருந்த நிலையில் அவனுடைய ஆங்கில பேராசிரியரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு. உங்கள் மகன் இன்னும் ப்ராஜெக்ட் ஒர்க் முடிக்கவில்லை. அவனைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. வந்ததே கோபம்! தூங்கிக் கொண்டிருந்தவனை உலுக்கி எழுப்பினால் நான் அனுப்பி விட்டேன் என்றான். இல்லை இதோ அனுப்பி விடுகிறேன் என்று அப்பொழுது தான் எழுத ஆரம்பித்தான். கோபம் வந்தாலும் என்ன செய்ய முடிகிறது? தலையில் அடித்துக் கொள்வதைத்தவிர. அறிவுரை கூறினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான். இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறானே எப்படித்தான் கல்லூரியில் குப்பை கொட்டப் போகிறானோ? இன்னும் ஒரு வாரத்தில் பட்டமளிப்பு விழா. மதிப்பெண் குறைந்தால் என்ன ஆகுமோ என்ற கவலை எனக்கு. வழக்கம் போல்... எனக்கென்ன மனக்கவலை. என் தாய்க்கன்றோ தினம்தினம் என் கவலை மனநிலையில் சுப்பிரமணி.

பள்ளிபடிப்பு முடியும் வரை வீட்டுப்பாடங்கள் ஒழுங்காக செய்கிறானா, தேர்வுகளில் மதிப்பெண்களை தக்க வைத்துக் கொள்கிறானா என்று உடனுக்குடன் பள்ளி ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு அவனைக் கண்காணிக்க முடிந்தது. இனி கல்லூரியில் என்ன நடக்கிறதென்று சுப்பிரமணி சொன்னால் தான் உண்டு. மாணவர்களுக்குத் தங்கள் படிப்பில் அக்கறை வரவேண்டும் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பும் வர வேண்டும் என்பதற்காக கல்லூரியில் பெற்றோர்களின் தலையீட்டை விரும்புவதில்லை. மாணவர்களும் தங்கள் கடமையை உணர்ந்து நடந்தாலும் அவர்களின் கல்லூரிப்படிப்பு முடியும் வரை பெற்றோர்களுக்கு படபடப்பு தான்!

கல்லூரிக்குக் கிளம்பும் நாளில் கவலை, அச்சம், அழுகையென குழப்பமான மனநிலை எனக்கு. அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பொருட்களை அடுக்கி வைத்து விட்டு பத்திரமா இருடா. நேரத்துக்குச் சாப்பிடு. ஒழுங்கா வகுப்புகளுக்குப் போ, உடம்ப பத்திரமா பார்த்துக்க ...சொல்லி முடிப்பதற்குள்... அவனும் அழுகையைக் கட்டுப்படுத்த சிரமப்பட...தினமும் ஃபேஸ்டைம் செய்கிறேன் கவலைப்படாதேம்மா என்ற ஒற்றை ஆறுதலில் தான் இனி எல்லாம். பதினெட்டு வருடமாகப் பொத்தி பொத்தி வளர்த்த குழந்தையைத் தனியே தவிக்க விட்டுவிட்டு வந்த மனவருத்தத்துடனும் கண்ணீருடனும் வீட்டிற்குத் திரும்பினோம்.

மகளும் மகனும் இல்லாத வீடு வெறிச்சோடி சோகையாய்! வாழ்க்கையில் முதன்முதலாக ஏதோ ஒன்றை இழந்தது போல உணர்ந்தோம் நானும் கணவரும்!

வகுப்புகள், தேர்வுகள், நண்பர்களென இனி நாட்கள் வெகு விரைவாகச் சென்று விடும் அவனுக்கு! நீ நினைக்கிற மாதிரி அவன் ஒன்றும் சின்ன பையன் இல்லை. வகுப்புகள் ஆரம்பித்து அவனுக்கென்று நண்பர்கள் வந்தால் எல்லாம் சரியாகிடும். கவலைப்படாதே என்று இவர் சொன்னாலும் குழந்தைகள் வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டே நகரும் எதிர்வரும் நாட்கள்.

கல்லூரிக்குச் செல்லும் தங்கள் குழந்தைகளை வழியனுப்பும் பெற்றோருக்கு ஆகஸ்ட் மாத இறுதி நாட்கள் மிகவும் உணர்ச்சிகரமான மாதம். நல்ல நண்பர்கள் அமைய, ஒரே அறையில் தங்கி இருப்பவருடன் அணுக்கமாக , சுயமாக எடுக்கும் முடிவுகள் சரியானதாக, ஒழுங்காக வகுப்புகளுக்குச் செல்ல, தேர்வுகள் நல்ல முறையில் எழுத, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே ... நீண்டு கொண்டே செல்லும் கேள்விகள் பெற்றோரை அலைக்கழிப்பது போல, புதுச்சூழலில் தன்னைப் பொருத்திக் கொள்ள மாணவ, மாணவிகளுக்குள்ளும் போராட்டங்கள் இருக்கும். பலரும் முதன்முறையாக வீட்டை விட்டுத் தனியாக வந்தவர்களாகவே இருப்பார்கள். பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து கடக்க வேண்டிய பருவம்! மகள் கல்லூரிக்குச் சென்ற நாளில் இருந்து கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம். அவளின் வழிக்காட்டுதலில் சுப்பிரமணிக்குச் சிரமங்கள் குறைவு தான் என்றாலும் அவன் தனித்திருந்து எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை நல்ல முறையில் கடந்து வர வேண்டும் என்பதைத் தவிர எனக்கு வேறு என்ன பிரார்த்தனை இருந்து விட முடியும்?

சிறகுகளின் அரவணைப்பில்
ஆனந்தித்திருந்தவர்கள்
புதுசிறகு முளைத்து
பறந்து செல்கையில்
கனத்துத்தான் போகிறது
கூடுதிரும்புதலுக்கான
காத்திருப்புகளே
இனி
இயல்பாகிப்போகும்ம்ம்ம்



Wednesday, July 10, 2019

Utrecht, Netherlands


மதுரையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கொண்டாட்டங்கள் புதிதல்ல. அமெரிக்காவிலும் விடுமுறை நாட்களைக் கோலாகலமாக கொண்டாடுவார்கள். தேங்க்ஸ்கிவிங் நாளில் திகட்டத் திகட்ட உணவு வகைகளும் திராட்சைப் பழரசமும் உறவினர்களின் வருகையும், கிறிஸ்துமஸ் நாளில் பரிசுப்பொருட்களும் குழந்தைகளின் ஆரவாரச் சிரிப்பும் என்று கலகலவென இருக்கும் வீடுகளின் உற்சாகம் ஒவ்வொரு மக்களின் சந்திப்பிலும் தொற்றிக்கொள்ள எங்கும் மகிழ்ச்சி ததும்பும் முகங்கள்! கோடையில் வரும் சுதந்திர தினத்தன்று நாடே அவரவர் வசதிக்கேற்ப குடும்பங்களுடன் கொண்டாடி மகிழ்வர்.
 
இந்த கொண்டாட்டங்களையெல்லாம் மிஞ்சும் வகையிலிருந்தது நெதர்லாந்து மக்கள் கொண்டாடிய 'கிங்ஸ் டே'! அப்பொழுது தான் புரிந்தது ஆம்ஸ்டர்டாமில் ஏன் அந்த வாரத்தில் தங்குமிடங்களின் வாடகை அதிகமாகவும் பல இடங்களில் அதுவும் கிடைக்கவில்லை என்று! நகர வீதிகளும் கடைகளும் ஆரஞ்சு நிற பலூன் அலங்காரங்களுடன். கழுத்தில், காதில், தொப்பிகளில் மக்களும் ஆரஞ்சு நிற உடைகளில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் ஆரஞ்சு வண்ணமும் அந்நாட்டின் கொடியும் தான் பிரதானமாக இருந்தது! அந்தச் சூழலும் சிரிப்பும், கும்மாளமுமாய் நகரும் மக்கள் கூட்டமும் அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியையும் கொண்டாடத் தூண்டியது.

நெதர்லாந்தில் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர்கள் 'கிங்ஸ் டே' அன்று நாடே "உற்சாக மனநிலையில்" இருக்கும். அதுவும் ஆம்ஸ்டர்டாம் பற்றிக் கேட்கவே வேண்டாம். நடந்து செல்வதும் மிகக் கடினம் என்று எச்சரிக்கவே வேறு சிறுநகரங்களுக்குச் சென்று வரலாமென முடிவெடுத்துச் சென்ற முதல் ஊர் தான் 'Utrecht'(ஊத்ரெட்ட்). நெதர்லாந்தின் நான்காவது பெரிய நகரம். கூகுளாண்டவர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் என்று சொல்ல... இந்தப் பெயரை எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதே என்று யோசித்து....ஓ! மார்ச் மாதத்தில் அங்கே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நினைவிற்கு வர, கொஞ்சம் பயமும் தொற்றிக் கொண்டது. ஆனாலும் சென்று தான் பார்ப்போமே என்று அதிகாலையிலேயே கிளம்பி விட்டோம்.
நாங்கள் தங்கியிருந்த Purmerand ஊரிலிருந்து ஒரு மணி நேரத்தில் ஊத்ரெட்ட் வந்தடைந்தோம். அப்பொழுது தான் சோம்பல் முறித்து விழித்துக் கொண்டிருந்தது நகரம். விடுமுறை என்பதால் அமைதியாக வேறு இருந்தது. ஆங்காங்கே காவல்துறையினர் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு கூட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். தெருக்களைக் கடந்து எங்கு வண்டியை நிறுத்துவதென யோசித்துக் கொண்டிருந்த வேளையில் கடந்து சென்ற கல்லூரி மாணவன் போலத் தோற்றம் கொண்டவரிடம் கேட்டதற்கு அங்கு நிறுத்தலாம். கிங்ஸ் டேயை முன்னிட்டு வாகன நிறுத்துமிடம் இலவசம். சிரித்துக் கொண்டே சென்றார். அவரின் ஆங்கில உச்சரிப்பில் ஒரு கவர்ச்சி இருந்தது 😃 எதிரில் ஒரு பள்ளிக்கூடம்! அதை நினைவில் கொண்டு காமெரா சகிதம் நகர்வலம் செல்ல கிளம்பி விட்டோம்.

நெதர்லாண்ட்ஸ்ல் மழை இல்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது! வெயில் வந்தால் அப்படிக் கொண்டாடுகிறார்கள்! அன்று மழை நாள் வேறு! கையில் குடையுடன், சிறு குழந்தைகளுடன் குடும்பங்களாக, கைகோர்த்துக் கொண்டு கணவன் மனைவியாக, காதலன் காதலியாக, நண்பர்களுடன் செல்பவர்களைக் கவனித்தோம். அரைமைல் தொலைவில் மார்க்கெட் சதுக்கம் நோக்கிப் படையெடுக்கும் கூட்டத்துடன் நாங்களும் ஐக்கியமாகி நடக்க,


நகரின் மையத்தில் ஓடும் கால்வாய். இருபுறமும் வீடுகள். உருளைக்கற்களாலான நடைபாதைகள்! நடுநடுவே அழகிய பாலங்கள். கால்வாய் கரையோரம் பெரிய பெரிய மரங்கள். அவ்வப்போது சிறு தூறல். மழையை ரசித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தோம்.

நகரில் இருக்கும் மக்கள் பலரும் அங்கே கடை விரித்து தேவையற்ற பொருட்களை மலிவு விலையில் விற்றுக் கொண்டிருந்தார்கள்! அமெரிக்காவில் மழைக்காலம் முதல் கோடை வரை கராஜ் சேல் (garage sale) என்று தத்தம் வீட்டின் முன் அல்லது வண்டி நிறுத்தும் கராஜில் வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை விற்பார்கள். தேவையுள்ளவர்கள் வாங்கிச் செல்வார்கள். மிக அழகான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். துணிகளில் இருந்து சமையல் பொருட்கள், மேஜை, நாற்காலிகள் என்று நல்ல நிலையில் இருக்கும் அனைத்தையும் விற்பார்கள். ஆனால் இங்கே பொருட்கள் பார்ப்பதற்கு அப்படி ஒன்றும் நன்றாக இல்லாவிட்டாலும் அதையும் வாங்கிக் கொண்டுச் செல்ல ஒரு கூட்டம் இருந்தது.

தலை முதல் கால் வரை போர்த்திக்கொண்டு நெதர்லாந்து மக்களோடு மக்களாகக் கடைகள் போட்டுக் கொண்டு பல புலம்பெயர்ந்த குடும்பங்களைக் கண்டோம். அவர்களிடம் யாரும் வித்தியாசமாகப் பழகுவது போல் தோன்றவில்லை. அடைக்கலம் தேடி தங்கள் நாட்டிற்கு வந்தவர்களோடு சரிசமமாகப் பழகும் மக்களை எப்படிக் கொல்ல மனம் வருகிறது? எப்படி இவர்களால் உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்க முடிகிறது? கேள்விகளுடன் அவர்களையும் கடந்து வந்தோம்.

மதுபான விடுதிகளில் இளம்வயதினரின் இரைச்சலான பாடல்களும் ஆட்டமும். யாரும் யாரையும் தொந்தரவு செய்யாமல் அவரவர் உலகில் ஆனந்தமாக இருந்தார்கள். அந்நாட்டின் பிரபல பியர் ஹெயினேகென் ஆறாய் ஓடிக் கொண்டிருந்தது. ஐரோப்பியர்கள் எங்கும் புகை பிடிக்கிறார்கள் :( காவல் துறையினர் கூட்டத்தினரிடையே நடந்தும் கண்காணித்துக் கொண்டும் இருக்க,

அருகிலுள்ள கடையில் சுடச்சுட பிரபல டட்ச் வாஃப்ல்ஸ் Stroopwafel வாங்கிச் சுவைத்துக் கொண்டிருக்கையில் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் படகுகளில் ஆரஞ்சு வண்ண உடைகளை அணிந்து கொண்டு "கிங்ஸ் டே" கொண்டாடும் மக்களைப் பார்க்க ஆனந்தமாக இருந்தது. ஒருவர் முகத்திலும் கவலைகளோ, வருத்தங்களோ இல்லை.தங்கள் மன்னரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் மட்டும் தான் நாட்டம் இருந்தது! அவர்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்ள வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்தோம் நடந்தோம் நடந்து கொண்டே இருந்தோம். அழகான கற்கள் பதித்த குறுகிய தெருக்கள். சிறிய நேர்த்தியான வீடுகள். உற்சாகத்துடன் வளைய வரும் அனைத்து வயதினர்! மேடைப்பாடகர்கள் பாட, நடனமாடிக் கொண்டே மேடையைச் சுற்றிச் சிறு கூட்டம்! துரித உணவுக்கடைகளிலும் தற்காலிக மதுபான கடைகளிலும் 'விறுவிறு' வியாபாரம்!
உருளைக்கிழங்கை தோலுரித்து ஒரே அளவில் வெட்டி எண்ணையில் பொரித்துச் சுடும் வறுவல் வாசம் அழைக்க, அதையும் ஏன் விடுவானேன்? வாங்கிச் சுவைத்துக் கொண்டே ஆற்றங்கரைப் படியில் அமர்ந்து கொண்டு படகுகளில் செல்லும் மக்களையும் புன்னகையுடன் கடந்து செல்வோரையும் காண சுகமாக இருந்தது. அங்கிருந்த இரு இந்தியர்கள் நாங்கள் மட்டுமே ☺



அந்த ஊரின் பிரபலமான செயின்ட் மார்ட்டின் தேவாலயத்திற்குச் செல்ல மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். நுழைவாயிலில் மௌனமாகப் பதாகையை ஏந்தி மிருகவதை எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தவர்கள் ஆர்வமுடன் அவர்களுடைய கொள்கைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்! பண்ணைகளில் கால்நடைகளை நடத்தும் விதம், மீண்டும் வெஜிடேரியனாகி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்! அழகிய பேராலயம் அன்று மூடி இருந்ததால் அதைச் சுற்றிப் பார்க்க மட்டுமே முடிந்தது. தெருக்களில் சுற்றுலாவினர் படங்களை எடுத்துக் கொண்டே தேவாலயத்தின் பிரமமாண்டத்தை வியந்து கொண்டிருக்க, நாங்களும் சில பல படங்களை எடுத்துக் கொண்டோம்.அழகிய கலை நயத்துடன் இருந்த வெளிப்புறமே மனதைக் கொள்ளை கொண்டதென்றால் உட்புறம் இன்னும் அழகாக இருந்திருக்கக் கூடும். வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயத்தைக் காண முடியாத ஏமாற்றத்துடன் அருகிலிருந்த அந்நாட்டின் உயர்ந்த தேவாலய கோபுரத்தைக் காண விரைந்தோம். அப்பகுதியிலும் கிங்ஸ் டே கொண்டாட்டங்களுக்காக அலங்காரங்களும் குழந்தைகள் விளையாட மைதானம் முழுவதும் ராட்டினங்களும் என்று அந்த சூழலே புது உருவம் கொண்டிருந்ததில் கோபுரத்தின் அழகு காணாமல் தான் போயிருந்தது. அண்ணாந்து வான் முட்டிய கோபுரத்தைப் பார்த்து வியந்து கொண்டே வந்த வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தோம்.

மதிய நேரம் நெருங்க, வழியில் பர்கர் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே அடுத்து எந்த ஊருக்குச் செல்லலாம் என்று வரைபடத்தைத் தேடி வண்டி நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

டட்ச் மனிதர்கள் அழகானவர்கள் மட்டுமல்ல 😍வேற்று நாட்டினரையும் தங்களில் ஒருவராக மதித்து நடக்கும் மனிதநேயம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். தங்கள் நாட்டு மன்னரின் பிறந்தநாளை நாடு முழுவதும் குதூகலமாக கொண்டாடுவதையும் ஊத்ரெட்ட் நகரத்தின் அழகையும் நேரில் பார்த்தது புது அனுபவமாக இருந்தது.

கொண்டாட்ட உலகில் எதுவும் சாத்தியம். மலரட்டும் மனித நேயம்! 





Click here to see more  Utrecht photos




































Saturday, July 6, 2019

When They See Us


ஏப்ரல் 19, 1989ல் நியூயார்க் நகர சென்ட்ரல் பார்க்கிற்கு  ஜாகிங் சென்ற ட்ரிஷா மெய்லிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு 'சென்ட்ரல் பார்க் ஜாக்கர்  கேஸ்'.  அமெரிக்காவை உலுக்கிய இச்சம்பவத்தை அடிப்படையாகக்  கொண்டு "When They See Us" தலைப்பில் நான்கு பாகங்கள் கொண்ட தொடர்  நெட்ஃப்ளிக்ஸ்ல் சமீபத்தில் வெளியானது.

வழக்கம் போல் இரவில்  ஜாகிங் சென்ற  ட்ரிஷா மெய்லி வன்கொடுமைக்கு ஆளாகி உருக்குலைந்து குற்றுயிராய் அபாயகரமான கட்டத்தில் உயிர் பிழைப்பாரா என்ற நிலையில்,  அப்பெண்ணிற்கு நீதி கிடைக்க பலரும் நியூயார்க் நீதிமன்றம் முன் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். இவ்வன்முறைக்கு காரணமானவர்களை கொலை செய்ய வேண்டும். அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்  என்ற கோபமும் மக்களுக்கு இருந்திருக்கிறது. சில நாட்கள் கோமாவில் இருந்த அப்பெண்ணிற்கு அன்று நடந்த சம்பவங்கள் ஏதும் நினைவில் இருந்திருக்கவில்லை.

இவ்வழக்கில் பதினாறு வயதிற்கும் குறைவான நான்கு சிறுவர்களும்  காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தன் நண்பனுக்குத் துணையாக எந்த குற்றமும் புரியாத வழக்கிற்குச் சம்பந்தமே இல்லாத பதினாறு வயதான கோரி வைஸ் என்ற இளைஞனும் அநியாயமாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இத்தொடர் வந்த பிறகு தான் அமெரிக்க மக்கள் பலருக்கும் உண்மைகள் தெரிந்து ஊடகங்களில் அன்று பாதிக்கப்பட்டவர்கள் பேச, பலருக்கும் உண்மை தெரிந்திருக்கிறது! அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை இயக்குனரிடம் வெளிப்படையாக பேசி இத்தொடரைக் கொண்டு வந்ததன் மூலம் இன்று வரை தொடரும் இந்நாட்டின் நிறவெறியையும், காவல் துறையினரின் அதிகார துஷ்பிரயோகத்தையும், நீதித்துறையின் அலட்சியத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

கறுப்பர்கள் அதுவும் பதின் பருவ இளைஞர்களும் சிறுவர்களும் கூச்சலிட்டுக் கொண்டே சென்ட்ரல் பார்க்கிற்கு கூட்டமாக நண்பர்களுடன் சென்று அவர்களைக் கடந்து செல்பவர்களைச் சீண்டுவது, சண்டையிடுவதென ஆரம்பித்து, இவர்களைப் பற்றின தகவல் அறிந்து வரும் போலீசார் சில இளைஞர்களை விரட்டிப் பிடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் விடிய விடிய விசாரணை என்கிற பெயரில் மன உளைச்சலைத் தந்து பொய்யான ஆதாரங்களையும் அறிக்கைகளையும் அவர்களையே சொல்ல வைத்து, பிரபலமான சென்ட்ரல் பார்க் ஜாக்கர் வழக்கில் (Central park jogger case ) முன்தீர்மானமாக குற்றவாளிகளாக்கி  அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். எந்த ஆதாரமும் சிறுவர்களை குற்றவாளிகளாக நிரூபணம் செய்ய முடியாத நிலையிலும் அவர்கள் கொடுத்த வாக்குமூலமே அவர்களின் வாழ்க்கையைக்  களவு கொண்டு விடுவது தான் சோகம்.

முன்னேறிய நாடு என்று தன்னைப் பிரகனப்படுத்திக் கொண்டு அடுத்த நாட்டினரின் சாதி, சமய விஷயங்களில் தலையிட்டு உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டும் அமெரிக்கா இன்று வரை சிறுபான்மையினரை, குறிப்பாக கறுப்பர்களை நடத்தும் விதம் உலகமே அறிந்திருந்தாலும் இவ்வழக்கில் அது வெளிப்படையாகவே தெரிகிறது. குற்றம் நடந்த இடத்தில் இருந்த ஒரே காரணத்திற்காகவும் பலியினை யார் மீதாவது சுமத்த வேண்டிய நிர்பந்தத்தில், பாதிக்கப்பட்ட பெண் வெள்ளையின அமெரிக்கனாக இருக்க, மாட்டிக் கொண்டவர்கள் பள்ளி செல்லும் நான்கு கறுப்பின சிறுவர்களும் ஒரு லேட்டினோவும்.

பதினாறு வயதிற்குட்பட்ட குழந்தைகளை விசாரணை செய்ய அவர்கள் குடும்பத்தினர் உடனிருக்க வேண்டும் என்ற சட்டத்தினைக் கூட மீறியிருக்கிறார்கள் காவல் துறையினரும் விசாரணை அதிகாரிகளும். செய்யாத குற்றத்தை பெற்றோர்கள் மூலமாக குழந்தைகளைச் சம்மதிக்க வைத்து, அவர்களும் குழந்தைகள் உயிருடன் திரும்பி வீட்டிற்கு வந்தால் போதும் என்று அதிகாரிகளுடன் ஓத்துழைக்க தங்கள் குழந்தைகளை நிர்பந்திக்க,  சிறையிலிருந்தும் போலீஸ் பிடியிலிருந்தும் காத்துக் கொள்ள தாங்கள் செய்யாத தவறை அப்பெண்ணிற்குச் செய்ததாகச் சொல்ல வைக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.

அதில் பதினாறு வயதுச் சிறுவனை மட்டும் சிறார் சிறையில் அடைக்காமல் பெரியவர்களுக்கான சிறையில் அடைக்கிறார்கள். சிறைகளில் நடக்கும் அநியாயங்களை நிச்சயம் இவர்களும் கடந்து வந்திருக்க கூடும். இலைமறைகாயாக தொடரில் வரும் காட்சிகளுக்கே மனம் பதைபதைக்கிறது!


ஐவரில், மனதாலும் உடலாலும் இன்று வரை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார் நண்பனுக்காக காவல்நிலையத்திற்குத் துணையாக சென்ற கோரி வைஸ்! கடைசி வரை தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால் ஜாமீன் மறுக்கப்பட்டு தனிமைச்சிறையில் படும் கொடுமைகள் ஏராளம். சிறார் சிறையில் இருந்து மற்ற நான்கு பேரும் தண்டனைக்காலம் (பத்து வருடங்கள்) முடிந்து வெளியில் வந்த போதும் கோரி மட்டும் தண்டனையை அனுபவித்துக் கொண்டே வேறோர் சிறையில்.

இச்சம்பவத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளி வேறு சில பெண்களுக்கும்  அதே பார்க்கில் இதே போன்ற கொடுமையை இழைத்து தண்டனை பெற்று கோரி வைஸ் இருந்த சிறையில் சந்திக்க, கோரியின் நிலைமைக்குத் தான் தான் காரணம் என்றுணர்ந்து 2001ல் அதிகாரிகளிடம் குற்றத்தை ஒப்புக் கொள்ள, அப்பொழுது தான் நீதித்துறையும் காவல்துறையும் ஐவரையும் தவறாக தண்டித்து விட்டார்கள் என்று தெரிய வருகிறது.  1989ல் அவ்வழக்கை விசாரணை செய்த அதிகாரிகள் தங்கள் தவறுகளை மறுப்பதுடன் அந்தக் கொடுமையைச் செய்தவர்கள் அன்று சிறுவர்களாக இருந்தவர்களும்  அவர்களோடு ஆறாவதாக ஒருவனும் இருந்திருக்கிறான். அதனால் சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானதே என்று வாதிடுவது மட்டுமில்லாமல் இன்று வரையில் மன்னிப்பும் கேட்காதது தான் அராஜகத்தின் உச்சகட்டம்!

உண்மையான குற்றவாளியின் வாக்குமூலமும் சாட்சிகளும் 2002ல் உறுதிப்படுத்தப்பட்டு வழக்கிற்கு சம்பந்தமே இல்லாமல் தண்டனை அனுபவித்து வந்த கோரியை விடுவித்து, ஐவரின் மேல் இருந்த கற்பழிப்பு மற்றும் வன்முறை பழியிலிருந்தும் நீதிமன்றம் விடுவித்திருக்கிறது.

குற்றமே செய்யாமல் இளம்பருவத்தை சிறையில் கழிக்க வைத்து தங்களையும் குடும்பத்தினரையும் இம்சித்த வகையில் ஐவரும் அரசாங்கத்திற்கு எதிராக 2003ல்தொடுத்த வழக்கு, விசாரணைகள் முடிந்து 2014ல் ஐவருக்கும் சேர்ந்து நாற்பத்தியொரு மில்லியன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறது நியூயார்க் மாநில அரசு. அதில் இத்தனை வருடங்கள் நடந்த விசாரணைக்காக வக்கீல்கள் செலவு போக மிகக் குறைந்த அளவே தங்களுக்கு கிடைத்ததாகவும் அவர்களைப் போன்று குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கவும், இத்தகைய தவறுகள் மீண்டும் நடக்கா வண்ணம் செயல்படும் இன்னொசென்ஸ் ப்ராஜெக்ட்டுக்காக அப்பணத்தை நல்வழியில் பயன்படுத்துவதாகவும் இன்று வரை அநியாயங்களுக்கு குரல் கொடுக்கவும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருப்பதாகவும் ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் ஐவரும் இத்தொடரை எடுத்த டைரக்டர் அவா டுவெர்னேயுடன் பேசியது மிகவும் நெகிழ்வாக இருந்தது.

இருபத்தைந்து வருட போராட்டத்திற்குப் பிறகு அவர்களுக்கு கிடைத்த சொற்ப பணம்,  தொலைத்த வருடங்களைக் மீண்டும் கொண்டு வருமா? அவர்களின் உடல், மன பாதிப்பிலிருந்து அவர்களை மீட்குமா? அவர்களுக்கு இந்த நிவாரணம் அளித்திருக்க கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியிருக்கிறார்! 


விசாரணை அதிகாரிகளின் அலட்சியத்தால் தகுந்த ஆதாரங்கள் இல்லையென்ற போதும் தண்டனை அனுபவித்த சிறுவர்களும், அவர்கள் குடும்பத்தினர்  அனுபவித்த மன உளைச்சல்களும் , அவர்களைக் கொல்ல நினைத்து வெறுப்புடன் திரிந்த, இன்று வரை திரியும் மனிதர்களும் வெட்கித் தலை குனிய வேண்டும். அதில் இந்நாட்டின் அதிபரும் இருக்கிறார் என்பதும் அவர்கள் மீது தவறு இல்லை என்று நிரூபணமான போதும் தன் கருத்தில் எந்த மாற்றமுமில்லை என்பதில் இருக்கும் திமிர் நிறவெறியின் உச்சம்!

"சென்ட்ரல் பார்க் ஃபைவ்"  சிறுவர்களாக சிறைக்குச் சென்றவர்கள் இளைஞர்களாக அதிகபட்ச தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது அமெரிக்க வரலாற்றில் சிறுபான்மையினருக்கு இழைத்த அநீதி இன்றும் தொடர்வதைத் தான் சுட்டிக் காட்டுகிறது!


Friday, June 14, 2019

India's Frontier Railways


'India's Frontier Railways' நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ஒன்றை மூன்று பாகங்களாக பிபிசி நியூஸ் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து நேபால், பங்களாதேஷ் , பாகிஸ்தான் என்று எல்லையைத் தாண்டிச் சென்று வரும் இந்த மூன்று ரயில் பயணங்களின் வாயிலாக அந்நாட்டு எளிய விளிம்பு நிலை மனிதர்களையும், அவர்களின் வாழ்வாதாரங்களையும், நிலப்பரப்பையும் மிக அழகாக மிகைப்படுத்தாமல் வழங்கியதற்கு இத்தொடரை எடுத்த குழுவினரை மனதார வாழ்த்தலாம். சிறு சிறு இடைஞ்சல்களும் வசதிக்குறைவுகள் இருந்தாலும் பேருந்து, விமான பயணங்களில் கிடைக்காத ஒரு சுகம் ரயிலின் ஆட்டத்தில் தன்னை மறந்து பயணம் செய்ய, பலருக்கும் ரயில் பயணம் ஒரு சுக அனுபவமே!

ரயில் நிலையங்களில் வேலை செய்பவர்கள், ரயிலுக்குள் வியாபாரம் செய்பவர்கள், பயணிகள், அவர்களின் கதைகள் என்று ரயிலோடு காடு, மலை, ஆறு, நதிகளென அருமையான ஒரு பயணம். நாடுகளுக்கிடையே இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகள், மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் விதம், அவர்களின் ஏக்கங்கள், கனவுகள் , ஏழை நாடுகளில் மக்களின் அன்றாட வாழ்க்கையைக் காணும் பொழுது தான் நாம் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்று தோன்றும். ரயில் பயணத்தை விரும்புபவர்களுக்கு இத்தொடரும் மிகவும் பிடிக்கும் ☺



பாகிஸ்தானிலிருந்து மகனின் கண் அறுவை சிகிச்சைக்காக பல நாட்கள் காத்திருந்து சம்ஹுதா எக்ஸ்பிரஸ்சில் டெல்லி வந்து சேருபவரின் அனுபவங்களும், இரு நாடுகளின் பிரிவினைக்குப் பிறகு பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேரும் கணங்களும், பிரிவினைக்குப் பின்னான பங்களாதேஷில் இருந்தாலும் கல்கத்தாவிற்கு மைத்ரீ எக்ஸ்பிரஸ்சில் வந்து செல்லும் இந்தியராகவே உணரும் பெண்ணின் வாழ்க்கைப் பயண அனுபவங்களும் , பாகிஸ்தான்-பங்களாதேஷ் போர்க்காலத்தில் வானொலி ஒன்றே இருந்த நாட்களில் வறுமையின் கோரப்பிடியில் எதிர்கொண்ட வாழ்க்கையினை விளக்குபவர் என்று பலதரப்பட்ட மக்களின் நேர்காணல் அவர்களின் பின்னணியிலிருந்து அழகாக எடுத்திருந்தார்கள். இந்த ஏழ்மையிலும் குறைவில்லாத திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் என்று பார்ப்போரையும் உற்சாகமாகபடுத்துகிறது இந்த தொடர். ஜனக்பூரிலிருந்து இருபது மைல் தொலைவில் நேபால் செல்லும் ரயில் மட்டும் விரைவிலேயே மூடப்படும் நிலையில் இருக்கிறது. போதுமான நிதி மற்றும் பராமரிப்பு இல்லாததாலும் நடுநடுவே நின்று விடும் ரயில் செல்ல, மக்களே களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள்! இந்த ரயில்களில் வேலை பார்க்கும் பயணச்சீட்டு பரிசோதகர் முதல் வண்டி இயக்குபவர் வரை மிகவும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதையும் , அவர்களின் வெகுளித்தனமான பேச்சுகளையும் அழகாக எடுத்திருக்கிறார்கள்.


தீவிரவாதத்திற்குப் பெயர் போன நாடுகளின் எல்லை தாண்டிய பயணங்களில் பாதுகாப்பு அவசியம் என்பதால் இந்திய அலுவலகங்களும், பாதுகாப்புத்துறையினரும் கவனமுடன் இருக்கிறார்கள். இந்திய அரசாங்கத்தின் கருணையால் தான் இந்த ரயில்கள் இன்று வரை இந்நாடுக்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது. எளிய மக்களிடையே பேதங்கள் இல்லாவிட்டாலும் எல்லைக்கோடுகள் தீர்மானித்து வளர்த்து விடுகிறது தீவிரவாதத்தையும்.

Tuesday, June 11, 2019

வளரட்டும் கொடையுள்ளங்கள்

ஒவ்வொரு சமூகமும் தனக்கென ஒரு தொழில் அடையாளத்தைக் கொண்டிருந்தது போல நான் பிறந்த சௌராஷ்ட்ரா சமூகமும் நெசவுத் தொழிலையும் நூல் விற்பனை செய்வதையும் தொழிலாகக் கொண்டிருந்தது. இன்று வரை அது தொடர்ந்தும் கொண்டிருக்கிறது. சோம்நாத் கோவிலின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கொடூர இஸ்லாமியர்களிடமிருந்து தப்பித்து பல்லாண்டுகளுக்கு முன்னால் குஜராத்திலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்களில் சிலர் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தங்கி விட, திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை, பரமக்குடி, திண்டுக்கல், சேலம், தஞ்சாவூர் பகுதிகளுக்குப் பலரும் புலம்பெயர்ந்தார்கள்.

இச்சமூகத்து மக்களுக்கு கல்வியறிவை வளர்க்க 1886ல் ஆரம்ப பள்ளி ஒன்று சமூக ஆர்வலர் திரு. L.K. துளசிராம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.1904ல் அரசின் உதவியுடன் மேல்நிலைப்பள்ளி ஒன்றையும் தொடங்கினார். நூற்றாண்டுகளுக்கும் மேலாக உயர்ந்து நிற்கும் கற்கட்டிடம் இன்று பல்வேறு துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் பல மாணவர்களுக்கு கல்வியறிவை ஊட்டிய இடம். கலையுணர்வுடன் கட்டப்பட்டிருக்கும் இப்பள்ளியின் கற்கட்டிடத்தை பாராட்டாதவர்களே கிடையாது. எம்முன்னோர்களால் அக்காலத்திலேயே வழங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடிய இப்பள்ளியின் பெருமைகளுள் ஒன்று. உணவிற்காக வேலை செய்ய வேண்டிய நிலையில் இருந்த பல குடும்பங்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர வைக்கப் பெரியோர்களால் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் பின்னாளில் தமிழக முதலமைச்சர் காமராஜரைக் கவர்ந்து அவர் தமிழக அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அவருக்குப் பின் MGR அவர்களும் நெறிப்படுத்தினார். இன்று வரை இம்மதிய உண்வுத் திட்டத்தால் பல ஏழை மாணவர்களும் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். இப்பள்ளியில் படித்த மாணவர்கள் மேலை நாடுகளில் இருந்தும்  இத்திட்டத்திற்கு இன்று வரை பணஉதவி செய்தும் வருகிறார்கள்.


பெண்கல்வியின் அவசியத்தையும் உணர்ந்த முன்னோர்கள் பெண்களுக்காக 1947ல் ஆரம்பப் பள்ளி ஒன்றையும் பிறகு முதல்வர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் மேல்நிலைப்பள்ளி ஒன்றையும் துவங்கி இன்று வரை பல பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளார்கள்.

மேற்படிப்பிற்காக வேறு கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில் 1967ம் வருடம் சமூக ஆர்வலர்களாலும் நன்கொடையாளர்களாலும் மதுரை விளாச்சேரியில் சௌராஷ்ட்ரா கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. அக்கல்லூரியில் படித்த பல மாணவர்களும் தாங்கள் உயர்ந்தது மட்டுமில்லாமல் தங்கள் குடும்பத்தையும் உயர்த்தினார்கள். பயன் பெற்றோர் எண்ணற்றோர்!

எப்பேர்ப்பட்ட தொலைநோக்கு பார்வையுடன் சுயநலமற்ற எம்முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள்! இன்று வாழ்க்கையில், பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கும் பலரும் உயர் அந்தஸ்து பதவிகளில் இருப்பவர்களும் கல்விக்கூடங்களை அமைத்த பெரியவர்களை நன்றியுடன் நினைவு கூறுவார்கள் என்றே நம்புகிறேன். எட்டு வருடங்கள் இக்கல்லூரியில் கணினியியல் துறையில் விரிவுரையாளராக வேலை பார்த்த பெருமிதமும் எனக்கு உண்டு.

மக்களுக்கு குறைந்த செலவில் நிறைவான மருத்துவம் வழங்க சமீபத்தில் 'பாதே' குடும்பத்தினர்(ரமோலா பெய் & விவேக் பாவா) மதுரையிலிருக்கும் தங்கள் இடத்தை நன்கொடையாக வழங்கி இருப்பதை அறிந்தேன். இதனால் பலரும் பயனடைவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. உதவும் உள்ளங்கள் இருக்கும் வரை சமூகத்திற்கு நன்மையே! 

தற்பொழுது பொறியியல், நர்சிங், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பெண்கள் கலைக்கல்லூரி என்று வளர்ந்து கொண்டே இருக்கிறது. இவையெல்லாம் சமூக மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல நன்கொடையாளர்களாலும், ஆர்வலர்களாலும் சாத்தியப்படுகிறது. சமூகத்திலிருந்து பெற்ற பலன்களைச் சிறிதேனும் சமூகத்திற்குத் திருப்பிச் செலுத்த நாம் எல்லோருமே கடமைப்பட்டிருக்கிறோம். முடிந்தவரையில் அடுத்தவருக்கு உதவும் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வோம். பெரியவர்கள் நமக்காக விட்டுச் சென்றுள்ள கல்வி நிலையங்களை மேலும் வளர்த்து நல்வழியில் செலுத்திடவும் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுத்திடவும் இணைந்து செயல்படுவோம்.

கொடையுள்ளங்களை வாழ்த்துவோம்! வணங்குவோம்! நன்றியுடன் இருப்போம்!


Thursday, May 30, 2019

Prom night


மே மாதம் என்றாலே மேல்நிலைப்பள்ளிகளில் பதினொன்று (ஜூனியர் வருடம்) மற்றும் பன்னிரண்டாம் (சீனியர் வருடம்) வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு கொண்டாட்டமான மாதம். இம்மாதத்தில் தான் ஒரு மாலையில் ஜூனியர் ப்ராம் மற்றும் சீனியர் ப்ராம் கொண்டாடுகிறார்கள். நண்பர்களுடன் கூடி ஆடி மகிழும் சில மணிநேர குதூகலமான நிகழ்ச்சி இது. மறக்க முடியாத தருணங்களும் கூட! கல்லூரி இறுதியாண்டில் நடந்து கொண்டிருந்த இந்நிகழ்ச்சி பள்ளி இறுதி ஆண்டிலும் ஆரம்பித்துப் பல வருடங்களாக சிறப்பாக நடந்து வருகிறது.

மேல்நிலைப்பள்ளிகளில் "டான்ஸ் நைட்" என்று வருட இறுதியில் நடைபெறும் நிகழ்ச்சியின் ஸ்டைலிஷ் வெர்ஷன் தான் இந்த "ப்ராம் நைட்". மாணவிகள் அழகழகு உடைகளில் வலம் வர, மாணவர்கள் அந்த இரவுக்கென்றே பிரத்தியேகமான tuxedo அணிந்து கொண்டு தங்களுடைய நண்பர்களுடன் உண்டு ஆடி மகிழும் நாள். உடைகள் வாங்குவதில், தலையலங்காரம் செய்து கொள்வதில் என்று படிப்புடன் இதற்காகவும் நேரத்தைச் செலவழிக்கும் குழந்தைகளுக்காக கையிருப்புகளைச் செலவழிப்பார்கள் பெற்றோர்கள். வேறு வழியில்லை என்பது தான் நிதர்சனம்.

மகளின் ப்ராம் நைட் அன்று லிமோசின் வண்டியை ஒரு மணிநேரத்திற்கு வாடகை எடுத்துக் கொண்டு அதில் அவள் தோழிகள் நால்வருடன் நகரை வலம் வந்து நடன நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று ஆடிப்பாடி உண்டு மகிழ்ந்து இனிய நினைவுகளுடன் வந்தார்கள். அவளுடைய தோழிகளில் ஒருவர் 500 டாலருக்கு உடை வாங்கியது கண்டு பெருத்த அதிர்ச்சி எனக்கு! மகளும் அவளுக்குப் பிடித்த உடையை 100 டாலருக்குள் வாங்கிக் கொண்டாள். நிகழ்ச்சி நாளன்று தலையலங்காரத்துக்கென தனி செலவு! அங்கு வந்திருந்த மாணவிகளைப் பார்த்த பொழுது ஏதோ ஆஸ்கார் விருது நிகழ்ச்சிக்குச் செல்வது போல் அத்தனை அலங்காரம்! விலையுர்ந்த ஆடைகள்! பிரமிப்பாகத் தான் இருந்தது!

சென்ற வாரம் சுப்பிரமணியும் அவன் நண்பர்களுடன் சென்று வந்தான். மகளுக்குச் செய்த செலவுகளை விட அதிகமாக செலவழிக்க வேண்டியிருந்தது!

இந்த ஓரிரவுக்காக பெண்கள் உடைகளுக்காகவும் அலங்காரங்களுக்காகவும் குறைந்தபட்சம் $150 வரை செலவு செய்கிறார்கள். அமெரிக்கர்கள் இதில் கொஞ்சம் தாராளம். அதிக செலவுகள் செய்வோரும் உண்டு! செலவிற்குப் பயந்தும் இதெல்லாம் ஹராம் என்று நினைப்பவர்களும் தங்கள் குழந்தைகளை இதில் பங்கேற்க அனுமதிப்பதில்லை. வாழ்வில் ஒரு அங்கமாக நண்பர்களுடன் இனிமையாக கழியும் பொழுதுகள். இதில் ஒன்றும் தவறு இல்லை. அவர்களே வேண்டாம் என்றால் ஒகே. அமெரிக்கா வந்த பிறகு இது நம் கலாச்சாரம் பண்பாடு இல்லை என்று கூச்சல் போட்டு தவறு செய்து விடுவார்களோ என்று அஞ்சுபவர்கள் தங்கள் குழந்தைகளின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள். அதிக ஆசையுடன் தத்தம் நண்பர்களுடன் இந்நிகழ்ச்சிக்குச் செல்ல ஆசைப்படும் குழந்தைகளைத் தடுப்பதால் வருத்தம் மட்டுமல்ல பெற்றோர்கள் சொல்லும் காரணங்களின் மீதும் வெறுப்பு ஏற்பட்டு இந்த அனுபவத்தைத் தவற விடும் குழந்தைகள் பின்னாளில் பெற்றோர்கள் மேல் கோபபப்படவும் செய்யலாம்.

இந்நிகழ்ச்சிக்குச் செல்ல அனுமதிச்சீட்டின் விலை $85. இது அரங்கம், உணவு, டிஜேக்கான செலவிற்காக. இது மட்டுமா? மாணவன் ஒருவன் மாணவியை தன்னுடைய "ப்ராம் டேட்" ஆக அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் அவளுக்கும் சேர்த்தே அனுமதிச்சீட்டு வாங்க வேண்டும். பூங்கொத்து செலவு வேறு தனி! இதற்காக முறையாக அவளின் அனுமதி பெற வேண்டும். சில மாணவிகள் மாணவர்களை நிராகரிப்பதும் நடக்கிறது. அதற்காக ஆசிட் வீச்சு என்று வன்முறையில் எல்லாம் இறங்குவதில்லை. பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்கிறார்கள் மாணவர்கள். இந்த மனமுதிர்ச்சியில் தான் நாம் பின் தங்கியிருக்கிறோமோ? இங்கு தான் வேறுபடுகிறோமோ?

சுப்பிரமணியிடம் நிகழ்ச்சியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் இது ஒரு நல்ல நிகழ்ச்சி தான். ஆனால் இந்த பகட்டும் ஆடம்பரமும் தேவையில்லாத ஒன்று என்று தெரிந்து கொண்டதாக கூறினான். தன்னுடன் படிக்கும் இந்திய மாணவி ஒருத்தி மட்டும் சேலையில் வந்திருந்தாள். "I respect you." என்று அவளை பாராட்டியதாகச் சொல்லி, ஏன் இத்தனை செலவு செய்து உடைகள், அதுவும் சில மணிநேரங்களுக்காக கிரிமினல் வேஸ்ட் என்று செலவு செய்ததை எண்ணி வருத்தப்பட்டான். இந்நிகழ்ச்சியை வைத்து எப்படி வியாபாரம் செய்கிறார்கள்? மக்களை எப்படி மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள் என்றும் ஆச்சரியப்பட்டான்! 

பூக்கள், உடைகள், அலங்காரப் பொருட்கள், வாடகை லிமோசின் வண்டிகள், நிகழ்ச்சிக்குப் பின்னான பார்ட்டிகள், உணவுகள், நிகழ்ச்சி நடக்கும் இடங்கள் என்று ஒரு பெரிய தொழிலாகவே மாறி பலதரப்பட்ட நிறுவனங்களுக்கும் லாபகரமான மாதம் இது.

இத்தனை செலவுகள் செய்து இந்த நிகழ்ச்சி தேவையில்லை. ஆடம்பரமில்லாமலும் நன்றாகவே கொண்டாட முடியும். ஆனால், அமெரிக்காவில் எல்லா நிகழ்வுகளுக்கும் பின்னால் மக்களைச் செலவு செய்ய வைக்கும் நிறுவனங்களின் தந்திரங்கள் நிறைய இருக்கிறது. இவர்களாகவே போலியான ஒரு பிம்பத்தை தோற்றுவித்து  விளம்பரங்கள் வாயிலாக மக்களின் மனதிலும்  அதனை நிறுவி  விற்பனைகள் மூலமாக  கொள்ளை லாபம் பார்ப்பதில் இவர்களை அடித்துக் கொள்ளவே முடியாது!








Sunday, May 26, 2019

இருண்ட காலத்தை நோக்கி ...



பெண்களைப் பாதிக்கும் வகையில் பல அமெரிக்க மாநிலங்களில் கொண்டு வரப்பட்டிருக்கும் சட்ட மாறுதல்கள் மக்களிடையே பெருங்கொந்தளிப்பை ஏற்பட்டுள்ள்ளது. ஜார்ஜியா மாநிலத்தில் மே 13ந் தேதி கருக்கலைப்பு தொடர்பாக இயற்றப்பட்ட சட்டத்தில் கருவுற்ற பெண் ஆறு வாரத்திற்குள் அதாவது கருவின் இதயத்துடிப்பு கேட்பதற்கு முன் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்ற சட்ட மாறுதலுக்கு கவர்னர் கையொப்பமிட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஒப்புதல் பெற்று விட்டால் 2020லிருந்து இச்சட்டம் அமலாக்கப்பட்டு விடும்.

இதனைத் தொடர்ந்து மிகவும் கடுமையான கருக்கலைப்புச் சட்டம் ஒன்றை 2019 மே மாதம் 15ந் தேதி அலபாமா மாநிலங்களவைக் கூட்டத்தில் 'Pro Life Law' என்று அமல்படுத்தியிருக்கிறார்கள். இச்சட்டத்தின் படி, கருவுற்ற நாளிலிருந்து எட்டு வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாது. கருக்கலைப்பை கொலைக் குற்றமாகவும் கருக்கலைப்பு செய்த குற்றத்திற்காக மருத்துவருக்கு 99 ஆண்டுகள் வரை தண்டனையும் இச்சட்டத்தால் வழங்க இயலும். கவனமற்ற முறையில் நடந்த கர்ப்பம், பிறந்த குழந்தையை வளர்க்க போதிய நிதி நிலைமை இல்லாத சூழல், குழந்தை தற்பொழுது வேண்டாம் என்று எடுக்கும் முடிவுகளால் இனி கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாது. இச்சட்டம் வன்புணர்வினால் கருவுறும் பெண்களையும் கூட கருத்தில் கொள்ளவில்லை என்பதே பலரின் எதிர்ப்பிற்கும் காரணம். கருவைச் சுமக்கும் பெண்ணின் உடல்நிலை அபாய நிலையில் இருக்கும் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே சட்டப்படி கருக்கலைப்பு செய்ய முடியும். இது பெண்களுக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதி என்று பலரும் கொந்தளிக்கும் நிலையில் வலது சாரி ஆளுங்கட்சியினரும் அவர்கள் சார்பு கொண்டவர்களும் உயிரைக் கொலை செய்வதைத் தடுக்கிறோம் என்று வாதிட்டு இச்சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

எட்டு வாரங்களுக்குப் பிறகான கருக்கலைப்பு என்பது மூளை, இதயம் வளர்ச்சியடைந்த நிலையில் ஒரு உயிரைக் கொலை செய்வது போலத்தான் என்கிறது இச்சட்டம். கருவைச் சுமக்கும் பெண்ணிற்கு இருக்கும் அதே வாழ்வுரிமை வளரும் கருவிற்கும் உண்டு. அதனால் கருக்கலைப்பைக் கொலைக்குற்றமாக கருத வேண்டும். மனிதர்கள் தவறு செய்கிறோம் என்பதைக் கூட மறந்து இத்தகைய கொலைபாதக செயலைச் செய்து வருவதை தடுப்பதாக இந்தச் சட்டம் அறிவுறுத்துகிறது என்று வாதிடுகிறார்கள் சட்டமியற்றியவர்கள்.

அலபாமாவில் குழந்தைகள் வேண்டாம் என்பவர்கள் அதற்கான பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். அதையும் மீறி கரு உண்டானால் தற்போதைய புதிய சட்டத்தின் படி கருக்கலைப்பு காலம் முடிந்த பின்னர் எதுவும் செய்து கொள்ள முடியாது. இதனால் கரு உருவானது அறியும் முன்னே சட்டப்படி கருக்கலைப்பிற்கான காலத்தையும் கடந்து விட்டிருக்கும் பெண்கள் குழந்தைப்பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கருவைச் சுமக்க போதிய உடல் வலிமை இல்லாத பெண்களின் இறப்பு விகிதமும் அதிகமாகும்.

வளர்ந்து வரும் நாடுகளில் வருடத்திற்கு 25 மில்லியன் கருக்கலைப்புகள் பெரும்பாலும் தவறான உறவுகளாலும் அல்லது கருக்கலைப்பு தடைவிதிக்கப்பட்டிருக்கிற காரணத்தினால் அபாயகரமான வழியில் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்புகளால் நடந்து வருவதாகவும் அதில் 7 மில்லியன் பெண்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் வாய்ப்புக்களே அதிகம்!

இப்புதிய சட்டம் வருமுன்னே 2014ம் ஆண்டிலேயே பல countyகளிலும் தொண்ணூறு சதவிகிதம் கருக்கலைப்பு மருத்துவமனைகள் மூடப்பட்டிருக்கிறது. டிரம்ப் ஆட்சியில் Planned Parenthood, கருத்தடை மற்றும் பாதுகாப்பான இனப்பெருக்க முறைக்காக ஒதுக்கப்பட்ட அரசாங்க நிதிகளையும் தடைசெய்ய முயல்கிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது போதிய ஊதியம் இல்லாத கல்வியறிவு குறைந்த வறுமையில் வாடும் புறநகர் மக்களே! அதிலும் பெரும்பான்மையினர் வெள்ளை அமெரிக்கர்கள் அல்லாதாவர்களாம். திட்டமிட்டே பெண்களின் மீதான வன்முறையை குழந்தைகளின் உயிரைக் காப்பதாக தங்கள் மத நம்பிக்கையினை திணிப்பதற்கும் இந்த அரசாங்கம் முயன்று வருகிறது. பெற்றவர்களால் வளர்க்க முடியாத சூழ்நிலையிலும் உண்டான கருவை பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறும் அரசோ, இச்சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களோ பிறந்த குழந்தையினை நல்முறையில் வளர்க்க உத்தரவாதம் தர முடியுமா?

குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு வறுமையிலோ, முறையான கல்வி பெற வழியில்லாமல் வேலையில்லாமல் தீய வழிகளில் ஈடுபட்டு அரசாங்கத்திற்குப் பாரமாய் இருப்பதை விட கருவில் அழிப்பதில் என்ன தவறு என்று வாதிடும் பெண்களுக்கு அரசாங்கத்தின் பதில் பெண்களை மட்டுமே பாதிக்கும் வகையில் இருப்பது தான் இன்று போராட்டங்கள் நடைபெற காரணமாகி இருக்கிறது. பெண்ணை கர்ப்பமாகிவிட்டு ஆண் விலகிச்செல்ல, அந்நிலையில் பிறக்கும் குழந்தைக்கு முழுப்பொறுப்பேற்க முடியாத நிலையில் பெண்ணால் கருக்கலைப்பு செய்து பிறக்கப் போகும் குழந்தை எதிர்கொள்ளப் போகும் அபாயங்களிலிருந்து காப்பாற்ற முடிவதை இப்பொழுது தடை விதித்திருக்கிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட ஆண் இத்தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். குழந்தைச்செலவிற்கு பணம் மட்டுமே கொடுத்து ஒதுங்கிக் கொள்ள முடியும். அதுவும் அவ்வளவு எளிதாக கொடுத்து விட மாட்டார்கள். முடிந்தவரை பெண்களை அலைக்கழிக்கவே பார்ப்பார்கள். குழந்தை வளர்க்கும் பொறுப்பும் இல்லை. சில இடங்களில் ஆணே கருக்கலைப்புக்கு ஒப்புதல் அளித்தாலும் இனி அதுவும் முடியாது. எப்படியும் பெண்ணே எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு இச்சட்டம் கொண்டு வந்துள்ளது.

"கருக்கலைப்பை முடிவு செய்யும் உரிமை கருவுற்றிருக்கும் பெண்ணிற்கே" என்று நாற்பத்தியாறு வருடங்களாக நிலவி வந்த அரசியலமைப்புச் சட்டத்தை 'Pro Life Law' மூலமாக மாநிலங்களில் தடை விதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.ஆளும் கட்சியினரின் அதிகார பலத்தால் உச்சநீதி மன்றத்திலும் ஒப்புதல் பெற்றுவிடும் சாத்தியக்கூறுகளே அதிகம். அலபாமா மாநிலத்தைத் தொடர்ந்து மிசௌரி, ஓஹையோ, யூட்டா மாநிலங்களும் இச்சட்டத்தை அமல்படுத்த முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் கட்சியினரின் அதிகாரத்தில் இருக்கும் வேறு பல மாநிலங்களிலும் சட்ட மாற்றங்கள் கொண்டு வர முனைகிறார்கள்.

பெண்களின் உரிமையைப் பாதுகாக்கும், பாதுகாக்க நினைக்கும் அதிபராக வருபவராலும் கட்சியினராலும்  மட்டுமே இச்சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர இயலும். அதுவும் அவர்கள் பெருமளவில் வெற்றி பெற்றால் மட்டுமே! மாநிலத்தில் இச்சட்டம் இருந்தாலும் மத்தியில் கொண்டு வரும் சட்டம் அதனை ரத்து செய்யும் வகையிலும் இப்புதிய சட்டத்தை எதிர்த்துப் பெண்களின் உரிமையைக் காப்போம் என்றும் பேட்டி அளித்துள்ளார்கள் ஜனநாயக கட்சியினர் சார்பில் அதிபராக போட்டியிடும் சிலர். சமீபத்திய கருத்துக்கணிப்பில் 71 சதவிகித மக்கள் புதிய சட்ட மாறுதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் 52 சதவிகித்தனர் குடியரசுக்கட்சியினர். பெண்களின் உரிமையைப் பாதுகாக்கும் சட்டத்தையும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ வசதிகளையும் அளிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு உள்ளது. அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்தால் சாத்தியப்படலாம். அது கிடைக்கும் வரை போராடித்தான் ஆக வேண்டும்.

மக்களிடையே கருத்தடை விழிப்புணர்வும்,  முறைகளும் இன்னும் அதிக அளவில் ஏற்படுத்துவது ஒன்று தான் தீர்வாக இருக்க முடியும். இச்சட்டங்கள் மென்மேலும் குற்றவாளிகளையும், மனநோயாளிகளையும், மன, உடல் வளர்ச்சிக்கு குன்றிய குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கவே செய்யும். மருத்துவமனைக்குச் செல்ல இயலாத சூழலில் கருக்கலைப்பைச்  செய்ய முனைய,  சிறை செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கூடும். அவர்களை கொலைகாரர்களாக பாவித்து சட்டங்கள் தண்டிக்கும். இதெல்லாம் எதற்காக?

பெண்ணின் உடலைக் கட்டுப்படுத்தும் ஆணின் சிந்தனைப்போக்கில் சிறிதளவிலும் மாற்றம் ஏற்படாத நிலையை ஒன்றே இச்சட்டம் பறைசாற்றுகிறது. கருவுறும் பெண்ணைக் குறைகூறும் சமுதாயம் ஆணை மட்டும் விட்டு விடுகிறது. முன்னேறிய நாடு என்று தன்னைப் பறைச்சாற்றிக்கொள்ளும் அமெரிக்காவில் இந்த நூற்றாண்டிலும் பெண்களுக்கெதிரான அநீதி தொடர்வதும் அதை எதிர்த்துப் பெண்கள் போராட வேண்டிய துரதிர்ஷ்ட நிலைமையும் வருந்தத்தக்கதே!

இப்போராட்டத்தில் பெண்களுக்கு ஆதரவாக நிற்கும் ஆண்கள் அனைவருக்கும் நன்றி.





































































































































































































































































































































































































































































































































































































































































































































Friday, May 24, 2019

மஹாயான புத்தர் கோவில்


ஆல்பனியிலிருந்து ஒரு மணி நேரத்தொலைவில் கெய்ரோ நகரில் உள்ள இரண்டு புத்த மடாலயங்களில் ஒன்று இந்த மஹாயான புத்தர் கோவில். பௌத்த மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான மஹாயான பௌத்த நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் புலம்பெயர்ந்த சீனர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள். அழகான மலைச்சூழலில் 166.5 ஏக்கர் பரப்பளவில் தியான மண்டபங்களுடன் அமைந்துள்ள இக்கோவில் மனதிற்கு அமைதியையும், கலையுணர்வுடன் கட்டப்பட்டிருக்கும் வெவ்வேறு கட்டடங்கள் கண்களுக்கு விருந்தாகவும் அமைந்திருக்கிறது. சிறு குளங்கள், தோட்டங்களென ரம்மியமான சூழ்நிலை.

நுழைவாயிலில் ஏழு மாடிகளுடன் உயர்ந்து நிற்கும் Jade Pagodaவில் தியான ரூபத்தில் அமைதி தவழும் புத்தரின் உருவச்சிலை ஒவ்வொரு மாடி அறையிலும். ஏழாவது மாடியிலிருந்து மற்ற ஐந்து கோவில் மணடபங்களையும் காண முடிகிறது.

விடுமுறை நாட்களில்  குழந்தைகளுக்கு புத்தரின் வரலாறு, போதனைகள், தியான வகுப்புகளும், சீன கொண்டாட்ட நாட்களில் மக்கள் கூடுமிடமாகவும், சிறப்பு வழிபாடுகளுமாக உள்ளது. புத்த துறவிகள் வகுப்பெடுத்தும் வழிபாடுகள் செய்தும் கொண்டிருந்தார்கள். நாங்கள் சென்றிருந்த நாளில் பெரும்பாலும் ஆங்கிலம் தெரியாத வயதான சீனர்களையே காண முடிந்தது.

ஒரு கோவில் மண்டபத்தில் புத்த மதக் கொள்கை, கோட்பாடுகளுடன் வாழ்ந்த போதிசத்வர்களின் ஐநூறு  சிலைகள் பார்க்கவே பிரமிக்க வைக்கும் வகையில் அமைத்திருக்கிறார்கள். கோவில் மண்டப வெளியில் ஆக்ரோஷமாக , சாந்தமாக என பலவித முகபாவனைகளுடன் போதிசத்வர் சிலைகள். மூலவர் போன்று பெரிய சிலைகள் கோவில்களின் உள்ளே. விவரங்கள் தான் தெரியவில்லை. அங்கிருந்தவர்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கிச் சொல்லவும் தெரியவில்லை. தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


1962ல் ஒரு கோவிலில் ஆரம்பித்து இன்று ஆறு கோவில்கள் அவ்வளாகத்தில் பரவி நிற்கிறது. இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், மறுபிறவியில் புத்தரின் பாதையைத் தேர்ந்தெடுத்து வழிநடக்கவும் , நன்றி நவிலழும்  அதற்கான சிறப்பு வழிபாடுகளும் இங்கு நடைபெறுகிறது.

நியூயார்க் மாநிலத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் பழமையான இக்கோவிலும் ஒன்று.


மஹாயான புத்தர் கோவில் படங்கள்...

Thursday, May 16, 2019

திரும்பிப்பார்க்கிறேன் - போராட்ட வாழ்க்கை

மகளின் கல்லூரி இறுதியாண்டில் வகுப்புகள், தேர்வுகள், ஆராய்ச்சிக்கட்டுரைகள் என்று நேரமில்லாமல் அவள் ஓடிக்கொண்டிருந்த காலமது! மேற்படிப்பா அல்லது வேலைவாய்ப்பா என்று முடிவு செய்து வார இறுதிகளில் பாஸ்டன், வாஷிங்டன், நியூயார்க் என்று எங்கெங்கு வேலைவாய்ப்புக்காக நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ஜாப் ஃபேர் நடக்கிறதோ அதற்கும் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தாள். அங்கு அவளுடைய பயோடேட்டா கொடுத்து முதற்கட்ட இண்டர்வியூக்கள் முடிந்த நிறுவனங்களில் ஒன்று நேர்முகத்தேர்வுக்காக அவளை நார்த் கரோலினாவில் இருக்கும் அவர்களுடைய அலுவலகத்திற்கு வரச் சொல்லி அவளும் காலை வகுப்புகளை முடித்துக் கொண்டு மதிய உணவு எடுத்துக் கொள்ளக்கூட நேரமில்லாமல் கல்லூரியிலிருந்து ஒன்றரை மணிநேர ரயில் பயணத்தில் நியூயார்க் நகரம் சென்று அங்கிருந்து வேறொரு ரயிலில் 45 நிமிட பயணம் மேற்கொண்டு பிறகு ஏர்ட்ரெயின் மூலம் 15-20 நிமிடங்களில் விமான நிலையத்திற்குச் சென்றடையும் பொழுது மணி 4.30. அங்கு சென்றடையும் வரை எங்களுக்குத் தகவல்கள் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

சுப்பிரமணியை பள்ளியிலிருந்து அழைத்து வரும் பொழுதே இடியும் மின்னலுமாய் மழை கொட்டிக் கொண்டிருந்தது. தொலைக்காட்சிச் செய்திகளில் நியூயார்க் நகரத்திலும் அதிமழை, இடி, மின்னல் என்ற பொழுது தான் அடடா! இந்தச் சூழ்நிலையில்... நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மகளிடமிருந்து ஃபோன்.

அம்மா...இங்கே ஒரே கலவரமா இருக்கு. நான் போற விமானம் இப்போதைக்குப் போகாது லேட்டாகும்ங்கிறாங்க. ஒரே கூச்சலும் குழப்பமாவும் இருக்கு. அனேகமா எல்லா ஃப்ளைட்ஸ்ம் கான்சல் பண்ணிடுவாங்க போல!

அடுத்த ஃப்ளைட் எத்தனை மணிக்கு?

எட்டு மணிக்கு.

நீ ஊருக்குப் போய்ச் சேர லேட்டாய்டுமே! அங்க இருந்து தங்கப்போற ஹோட்டலுக்கு அரைமணி நேரமாவது ஆகும். ராத்திரி பத்து பத்தரை ஆயிடும். புது ஊர் வேற!

என்ன பண்ணலாம்மா? கேட்கும் பொழுதே அழுகைக்குத் தயாராகும் குரல்!

நான் இந்த இண்டர்வியூக்காக எதுவுமே தயார் பண்ண நேரமில்லை. புரஃபஸர் வேற அடிக்கடி க்ளாஸ் கட் பண்ணிட்டுப் போறே. ஃபெயில் பண்ணிடுவேன்னு சொல்லி இருக்கார். நேரத்துக்குப் போய் சேர்ந்துட்டு நைட் கொஞ்சம் பார்த்துக்கலாம்னு இருந்தேன். எனக்கு நம்பிக்கையே இல்லை. அந்த ஆஃபீஸ்ல வேற யாரையும் காண்டாக்ட் பண்ண முடியலை. இங்கே ஒரே தள்ளுமுள்ளா இருக்கு. எனக்கு மட்டும் ஏன் இப்படி?

பசி மயக்கம், எதிர்பாராத தடங்கல்கள், தயார் பண்ணிக்கொள்ளாத நேர்முகத்தேர்வினை எதிர்கொள்ளப் போகும் பதட்டம், வகுப்பில் ஆசிரியரின் கண்டிப்பு என்று நினைத்தபடி எதுவும் நடக்காத நிலையில் மொத்தமும் கனமாக அழுத்தியதில் அழ ஆரம்பித்து விட்டாள்.

சே! தனியாக மகளின் முதல் விமானப்பயணம்! இப்படியா இருக்க வேண்டும்? ஏன் தான் என் குழந்தைகளுக்கு மட்டும் இப்படி!

அழாதே! அப்பா வேணா வரட்டுமா? நீ போய்த்தான் ஆகணும்னா நாளைக்கு காலையில கிடைக்கிற முதல் ஃப்ளைட்ல போற மாதிரி கேளு.

சரிம்மா... அங்க கவுண்டர்ல ஏதோ சொல்றாங்க. கேட்டுட்டு வர்றேன்.

இப்ப என்ன பண்ணலாம்? நான் போயிட்டு வரவா? பாவம் இவ்வளவு கஷ்டப்படறா. கலக்கத்துடன் கணவர்.

நீங்க எப்படி இந்த மழையில நாலு மணிநேரம் அப்புறம் ராத்திரி முழுக்க ஓட்டினாலும் போய்ச்சேர காலையில பத்து மணியாயிடும்! ஒரு சமாதானத்துக்காகத் தான் சொன்னேன். நீங்க மட்டும் ஒட்டுறதும் கஷ்டம். போனா இவனையும் கூட்டிட்டு நாம எல்லாரும் சேர்ந்து தான் போகணும் இல்லைன்னா அந்த கம்பெனியை கூப்பிட்டு வேற நாள்ல இண்டர்வியூ வைக்கச் சொல்லணும். நானும் ஈமெயில் அனுப்பிட்டேன். ஃபோன்ல மெசேஜ் கூட விட்டுட்டேன். ஆஃபிஸ் நேரம் முடிஞ்சதனால யாரும் பார்த்திருக்க மாட்டாங்க. வெய்ட் பண்ணுவோம்.

அம்மா...நாளைக்கு காலையில ஆறு மணிக்கு ஒரு ஃப்ளைட் இருக்கு. டிக்கெட் கொடுத்துட்டாங்க. இப்ப என்ன பண்றது?

நீ திருப்பி காலேஜ்க்குப் போயிட்டு நாளைக்கு காலையில மூணு மணிக்கு கிளம்பி வர்றது நடக்கிற காரியம் இல்ல. பக்கத்துல ஹோட்டல் இருந்தா அங்க போய் தங்கிட்டு காலையில வந்திடலாம். ஏர்போர்ட்ல இருக்கிற ஹோட்டல் கவுண்டர்ல ஏதாவது ஒன்னை புக் பண்றியா இல்ல நான் பண்ணவா?

வேண்டாம் நானே பண்ணிடறேன் என்று சொல்லி விட்டுச் சென்றவள் மீண்டும்.... சே! இங்கேயும் கூட்டம்மா. நான் ஆன்லைன்ல பக்கத்துல இருக்கிற ஹோட்டல் ரூம் புக் பண்ணிடறேன்.

மொத்தமா ஃப்ளைட் எல்லாத்தையும் கான்சல் பண்ணியிருப்பாங்க. மழை கொட்டிக்கிட்டு இருக்கிறதால அவங்களும் வேற என்ன பண்ண முடியும்?

அப்படியே ஏர்போர்ட் டாக்ஸி புக் பண்ணிடு.

சரிம்மா.

ஹோட்டல் ரூம் கிடைத்து டாக்ஸி கிடைக்கவில்லை.

வெளியில் சென்று ஏதோ ஒரு டாக்ஸியில் ஏறி ஹோட்டலுக்குத் தான் போயிட்டு இருக்கேன். அங்க போய்ச் சேர்ந்தவுடன கூப்பிடவா?

வேண்டாம் வேண்டாம். நீ ஃபோன்லேயே இரு.

அம்மா, வண்டியில GPS இல்லையாம். ஃபோன் GPS வேணுமாம்.

GPS இல்லாதவன்லாம் எதுக்கு நியூயார்க்ல வண்டிய ஒட்டிக்கிட்டு இருக்கான். நீ ஸ்பீக்கர்ல போடு. அவன் வண்டியில இருக்கிற ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர், கார் நம்பர் டீடைல்ஸ்லாம் அவனுக்கும் கேட்குற மாதிரி சொல்லிட்டே வா. எந்த பக்கம் போகுதுன்னு அப்பப்ப அப்டேட் பண்ணிட்டே இரு.

அதற்குள் அந்த டிரைவரும் GPSல் வழியைப் போடச் சொல்ல...

ஒரே மழை! ஒண்ணுமே தெரியலை! எங்கே போகிறோம் என்று தெரியாமல் மகள். எந்த வண்டியில் ஏறியிருக்கிறாள் என்ற பதட்டம் எங்களுக்கு. பத்திரமாக போய்ச் சேர வேண்டுமே என்ற கவலை அதிகரிக்க...எரிச்சலாக வந்தது. இன்று பார்த்து ஏன் எல்லாமே இப்படி போய்க் கொண்டிருக்கிறது?

இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ஹோட்டல் போய்ச்சேர?

நடுவுல ஏதோ ஒரு வழிய மிஸ் பண்ணிட்டான் போல.

இவன் என்ன டிரைவர்? வழி கூட தெரியாம? நேரம் செல்லச்செல்ல பதட்டம் கூடிக்கொண்டே போனது.

டிரைவரிடமே எங்க இருக்கு அந்த ஹோட்டல் ? ஏன் இவ்வளவு லேட்டாகிறது என்று கேட்டு....

ஒரு வழியாக ... அம்மா... ஹோட்டலுக்கு வந்துட்டோம்.

அப்பாடா! முதல்ல இவனை அனுப்பு! GPS இல்லாம வழியும் தெரியாம இவன்லாம் ஒரு டிரைவர்!

அம்மா! இந்த ஹோட்டல்ல நான் ரூம் புக் பண்ணலையாம். இவங்க பிரான்ச் வேற ஒண்ணு. இங்க பக்கத்துல தானாம்.

ஐயோ! இன்னொரு டாக்ஸியா?

அவங்க ஷட்டில் கூப்பிட்டுருக்காங்க.

அப்ப சரி!

ஒருவழியாக ரூம் போட்டு அங்கே போனவுடன் சேர்த்து வைத்து ஓவென்று அழுகை!

முதல்ல சாப்பாடு ஆர்டர் பண்ணு.

பசியில்லை.

சாப்பிட்டா தான் கொஞ்சம் தெம்பா இருக்கும். தெளிவா யோசிக்க முடியும். சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. அப்புறம் இண்டர்வியூக்கு ரெடி பண்ணிக்கோ. சரியா என்றவுடன்

சரிப்பா. நான் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடறேன்.

பாவம்ங்க! முதல் முதல்ல தனியா போற பயணம் இவ்வளவு மோசமா இருந்திருக்கக் கூடாது. ஹ்ம்ம்...

சிறிது நேரம் கழித்துப் பேசுகையில் கொஞ்சம் தெளிவாக இருந்தது குரல். தூங்கலையா?

இல்லம்மா. கொஞ்ச நேரம் படிக்கிறேன். நாளைக்கு காலையில 3.30 மணிக்கு எழுப்பிடு. அஞ்சு மணிக்கு ஷட்டில் வந்திடும்.

குட்நைட் சொல்லி விட்டு என் மகளுக்கு ஏன் இப்படியொரு சோதனை என்று வருந்திக் கொண்டே வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து காலையில் நான் எழுப்பி விடுவதற்குள் அவளே எழுந்து விட்டிருந்தாள். ஏர்போர்ட் போனவுடன், விமானம் ஏறியவுடன் என்று ஊர் போய்ச் சேரும் வரை அப்டேட் செய்து கொண்டே இருந்தாள்.

கவலைப்படாதே! இதெல்லாம் அனுபவங்கள்! திரும்பிப் பார்க்கையில் இதையெல்லாம் நீ கடந்து வந்திருக்கிறாய் என்று பெருமையாகத் தான் இருக்கும். உன் வயதிற்கு இது அதிகம் தான் ஆனாலும் நீ என் மகள். இதையெல்லாம் எளிதில் கடந்து விடுவாய். நேர்முகத் தேர்வை நன்றாகச் செய். அத்தனை ஆர்வமுடன் அவர்கள் நிறுவனத்தில் சேர நீ எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறாய் என்பதையும் அழகாகச் சொல்லி விடு ஆல் தி பெஸ்ட் சொல்லி அனுப்பி விட்டு...கடவுளே! எல்லாம் சுபமாக முடிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு...

நானும் அந்த அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவள் வந்து சேரும் நேரத்தைச் சொல்லி அவர்களும் அதற்கேற்றவாறு நான்கு குழுக்களுடனான நேர்முகத் தேர்வினை மூன்று குழுக்களுடன் மட்டும் வைத்துக் கொண்டு வேறொரு நாளில் ஸ்கைப் மூலம் நான்காவது குழுவுடனும் இண்டர்வியூ என்று முடித்தார்கள்.

மீண்டும் விமானம் ஏறி நியூயார்க் வரும் பொழுது அம்மா, என்னோட ஷூ ஹீல்ஸ் உடைஞ்சு போச்சு தெரியுமா? அதோட தான் இண்டர்வியூக்குப் போனேன்! இந்த மாதிரி யாருக்கும் நடக்கக் கூடாது. ஒர்ஸ்ட் டே ஆஃப் மை லைஃப்!

கவலைப்படாதே! இந்த மாதிரி அனுபவங்கள் தான் உனக்குப் பலமாக இருக்கும். இனி உலகத்தில் எந்த விமான நிலையத்தில் எத்தனை குழப்பங்கள் வந்தாலும் உன்னால் எதிர் கொள்ள முடியும். இனி வரும் நாட்களிலும் இப்படி எதிர்பாராத ஏதாவது ஒன்று நடந்து கொண்டே தானிருக்கும். நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது நம்முடைய வெற்றியும் தோல்வியும். இனி கல்லூரித்தேர்வுகளில் கவனம் செலுத்து. எதைப் பற்றியும் கவலைப்படாதே.  இதை விட வேற ஏதாவது புதுசா வந்தா இதெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு தோணும். டேக் இட் ஈஸி! வேற வழியில்லைன்னு சொன்னாலும் மிகவும் வருத்தமாக இருந்தது.

பாவம் இதுக்கே இப்படி பயந்து நொந்து போய்விட்டாளே!

எது எப்படியோ எல்லாம் சுகமாக முடிந்து வேலைக்கான ஆர்டரும் கிடைத்து விட்டது. அனைத்துத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வேறு இரு நிறுவனங்களிலும் வேலை கிடைத்த பெருமையுடன் அவளுடைய ஆசிரியர்களும் பெருமிதம் கொள்ளும் வகையில் இனிதே நிறைவடைந்தது அவளுடைய கல்லூரி வாழ்க்கை.

வெளியில் இருந்து பார்ப்பவர்கள் யாருக்கும் இதெல்லாம் தெரிவதில்லை. கடந்து வந்த கடுமையான பாதைகளைக் கண்டுகொள்வதில்லை பலரும்! வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு கவலை என்பது ஒன்று இல்லவே இல்லை. சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் நம்மூரில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரச்னைகள், போராட்டங்கள் எல்லோருக்கும் எங்கேயும் இருக்கிறது.

சிலருக்கு வாழ்க்கையில் எளிதாக எல்லாம் அமைந்து விடுகிறது. பலருக்கும் அந்தக் கொடுப்பினை இருப்பதில்லை. அநேகமாக ஒவ்வொருவர் வாழ்விலும் பல தடைகள் எதிர்பாரா வருந்தத்தக்க தருணங்கள் இருந்திருக்கும். ஐயோ! எனக்கு மட்டும் ஏன் என்று புலம்பிக் கொண்டிராமல் எப்படி தகர்த்து வெளிவருவது என்று யோசிக்கும் மனம் தளர்ந்து போவதில்லை என்பது என் அனுபவத்தில் கண்டறிந்தது.

இன்று வரை அவளுக்கு எதுவுமே எளிதில் கிடைப்பதில்லை. ஒவ்வொரு விஷயத்தையும் போராடித்தான் பெறுகிறாள். என்னுடைய இருபது வயதில் இதை விட மிகப்பெரிய போராட்டங்களைக் கடந்து தான் வந்திருக்கிறேன் என்றாலும் இந்த விஷயத்தில் என்னைப்போலவே இருக்கிறாளே என்று வருத்தமும் மகிழ்ச்சியும்! சோர்வடைந்தாலும் துவண்டு விழாமல் மீண்டு வரும் இந்தப் போராட்ட குணம் இருந்தாலே போதும். வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம் என்று என் குழந்தைகளுக்குச் சொன்னேன், சொல்கிறேன், சொல்லிக் கொண்டே இருப்பேன்!

சரிதானே?






















































































Monday, May 6, 2019

Alone in Berlin


ஹிட்லரின் கொடுங்கோல ஆட்சிக்காலத்தில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் உட்கார்ந்து பார்க்கும்படிதான் இருக்கிறது. மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களுடைய குழந்தைகளை போர்முனைக்கு அனுப்புவதும் பெண்கள், ஆண்கள் அனைவரையும் போருக்குத் துணையாக வேலைகளைச் செய்ய வைத்தும், சந்தேகப்படும் நபர்களைக் கொன்று குவிப்பதும், யூதர்களின் பொருட்களைக் கொள்ளையடிப்பதும், ஹிட்லரைத் தெய்வமாகவும் அவர் செயலுக்கு ஆதரவாக மூளைச்சலவையும் செய்யப்பட்டிருப்பது போல் இயங்கியிருக்கிறார்கள் ஜெர்மானியர்கள். அவர்களிடையே பல நல்ல மனிதர்களும் யூதர்களுக்கு ஆதரவாக இருந்து பலரையும் காப்பாற்றியிருப்பதும் வரலாறு அறியும்.

ஃப்ரான்ஸ் நாட்டுடனான போரில் தங்கள் ஒரே மகனை இழந்த பெற்றோர்கள் ஹிட்லருக்கு எதிராக செய்யும் மௌன யுத்தமே கதை. அவர்களிருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் அரசுக்குத் துணையிருக்கிறார்கள் என்று தெரிந்தும் ஒரு சிலராவது ஹிட்லருடைய தவறுகளையும் அவரால் கொல்லப்படும் தங்கள் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள மாட்டார்களா என்ற ஆதங்கத்தில் செய்யும் செயலில் உண்மையை உணர்ந்தும் உதவி செய்ய இயலாத நிலையில் காவல்துறை அதிகாரியும், கொடுங்கோலனுக்குத் துணையாக கொடூர அரசு அதிகாரிகளும், நாஜிப்படைகளுக்குப் பயந்து வாழும் யூத மக்களும், அவர்களுக்கு உதவும் சில நல்லுள்ளங்களும் என்று படம் முழுவதும் வருகிறார்கள்.

ஒரு குடும்பத்தில் உயிரிழப்பு என்பது எப்படியெல்லாம் பாதிக்கும், எத்தகைய மனமாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை வெளிப்படுத்தியிருக்கும் படம். மெதுவாக நகர்ந்தாலும் பார்க்க வைக்கிறது.


முகநூல் பதிவு - மாறாத ஒரு இனம்

நேற்று கோவில் கலையரங்கத்தில் பன்னிரு ஆழ்வார்களைப் பற்றி குழந்தைகள் வில்லுப்பாட்டு, நாடகம், நாட்டியம், ஹரிகதா வாயிலாக இனிய தமிழில் வழங்கியது அருமையாக இருந்தது. அவர்களின் பாசுரங்களை நியூஜெர்சியிலிருந்து வந்திருந்த சுபா ஸ்ரீனிவாசன் கணீரென்ற குரலில் லயித்துப் பாடி கேட்போரை ஆனந்தப்படுத்திக் கொண்டிருந்தார். வயலின் வாசித்த ஸ்ரீநாத் என்ற இளைஞனும் மிருதங்கம் வாசித்த ஷங்கரும் அவரின் பாடலுக்கு இனிமையைக் கூட்டினார்கள். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஜானகிக்கு பாராட்டுகள்.

கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் நடந்த இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் பலரும் ஆரம்பத்தில் அமைதியாக இருந்து மெதுவாக ஊர்க்கதைகளை உரக்கப் பேசி, நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறதே என்ற நினைவு கூட இல்லாமல் நடந்து கொண்டது அநாகரீகம் என்றால் குழந்தைகள் ஓடியாடி கூப்பாடு போட்டுக் கொண்டிருந்ததை எந்த பெற்றோரும் கண்டு கொள்ளாதது அதை விட கொடுமையாக இருந்தது. தத்தம் குழந்தைகள் நிகழ்ச்சி முடிந்தவுடன் பலரும் சென்று விட்டார்கள். நடுவில் பத்து நிமிட இடைவெளியில் சுண்டல் சாப்பிடச் சென்ற பலரும் அங்கேயே தங்கி விட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக ஐம்பது குழந்தைகளை பல நாட்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்கள். அவர்களும் தமிழில் பேசியதைக் கேட்க அழகாக இருந்தது. அதுவும் தெள்ளத் தெளிவாக ஹரிகதா சொன்ன க்ருஷா அனைவரையும் வசீகரித்து விட்டாள். தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர்களும் பல நாட்கள் அலைந்திருக்கிறார்கள். அப்படி இருக்க, மற்ற குழந்தைகளின் நிகழ்ச்சியையும் பாடுவோரையும் கவுரவிக்கும் விதமாக நிகழ்ச்சி முடியும் வரையில் இருந்திருக்க வேண்டாமா?

இதே பெற்றோர்கள் தான் இரட்டை அர்த்தப்பாடல்களுக்கு டப்பாங்குத்து ஆட்டம் போடும் நடனங்களுக்கு கடைசி வரை இருந்து பார்த்து கைத்தட்டி விட்டுச் செல்கிறார்கள்.

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் மாறாத ஒரு இனம் உண்டெனில்...









Wednesday, May 1, 2019

தொழிலாளர் தினம்

எங்கள் வீட்டிலிருந்து இரண்டாவது தெருவில் காய்கறி, பழங்கள், வாழை இலை, பூக்கள் விற்பனை செய்யும் தெருவோர சந்தையில் வியாபாரம் செய்தவர்கள் பலரும் பெண்களே. காலையில் ஆறு மணிக்கே தலையில் கூடை நிறைய காய்களுடனும் தள்ளு வண்டியிலும் வருபவைகளை ஆண்கள் சிலர் ஒத்தாசை செய்ய இறக்கிக் கொண்டிருப்பார்கள். அவ்வளவு பெரிய வாழைத்தாரை ஒற்றை ஆளாய் வண்டியிலிருந்து தலையில் சுமந்து கீழே இறக்கி வைப்பதும், இலைகளைத் தரம் பார்த்து பிரித்து வைத்து கெட்டிகாரத்தனமாய் வாயாடி வியாபாரம் செய்வதும்,மார்போடு ஒட்டி பால் குடித்துக் கொண்டிருக்கும் குழந்தையை வைத்துக் கொண்டு வாழைத்தண்டை சீவும் இளம்பெண்ணை எப்படி இவ்வளவு சாமர்த்தியமாக, வலிமையாக இருக்கிறார் என்று ஆச்சரியமாய் பார்த்த நாட்களும் உண்டு.

அவர்களுக்குள்ளே பேசி சிரித்துக் கொண்டு அன்று கிடைத்த வருமானத்தை எண்ணிப் பார்த்து அடுத்த நாள் வியாபாரத்திற்குத் தயாராகும் அப்பெண்கள் பலருக்கும் குடும்பம், குழந்தைகள் என்று உண்டு. இவர்களின் சம்பாத்தியம் அவர்களுக்குத் தேவை. இப்படி குடும்பத்திற்காக, தனக்காக என்று சுயமாக உழைத்த பெண்களை என்னையறியாமல் மரியாதையுடன் கடந்து வந்திருக்கிறேன்.

முகம் நிறைய சுருக்கங்களுடன் தொங்கட்டான் பாட்டிகள் சுணங்காமல் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்து குடும்பத்தை கரையேற்றி வருவது காலம் காலமாக தொடர்கிறது. இவர்களுடன் மிகுந்த ஆர்வத்துடனும், வியப்புடனும் பழகியிருக்கிறேன். வெயில் சாயும் வரை கொண்டு வந்த பொருட்களை விற்று முடிக்கும் வரை அவர்களின் சாப்பாடும் அவ்விடத்தில் தான்! இயற்கை உபாதைகளை அதுவும் பெண்களின் மாதாந்திர பிரச்னைகளை எப்படி கையாண்டிருப்பார்கள் என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது! வசதியாக வீட்டில் இருந்து கொண்டே எத்தனை ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறோம்!

அனைவரும் தூக்குச்சட்டியில் பழைய சோறும், சின்ன தட்டில் ஊறுகாயும் கொண்டு வந்திருப்பார்கள். நடுநடுவே காஃபி, புகையிலை, வெத்திலை என்று வாயையும், வயிற்றையும் நிரப்பிக் கொண்டு வாரியர் டயட், இன்டெர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் என்று அலப்பறை செய்யாமல் இயற்கையாகவே இருக்க வேண்டிய சூழ்நிலையில் வெயிலில் வைட்டமின் டியும் கிடைத்து உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும்


இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள் !

Thursday, April 18, 2019

திரும்பிப்பார்க்கிறேன்


அழகா பொண்ணும் ஆசையா பைனும்னு கொஞ்சமே கொஞ்சம் சந்தோஷப்பட்டது எப்படியோ என்னுடைய கிரகங்களுக்கு கேட்டு விட்டது போல. மூன்று மாதமான குழந்தையின் தலையில் கட்டியும் சேர்ந்து வளர, மருத்துவர்கள் ஆளுக்கொன்றுச் சொல்ல, இந்தக் குழந்தை பிழைப்பது கடினம் என்று சொன்ன நொடியில் இதைக் கேட்கவா உயிரோடிருக்கிறேன். யாராவது நம்பிக்கையாக நல்லது சொல்லி விட மாட்டார்களா என்று வேண்டாத தெய்வங்கள் இல்லை. சிரிப்பைத் தொலைத்து வெறுமையைச் சுமந்து மனபாரத்துடன் துவண்டிருக்கையில் ஆறுதலாய் ஒரு மருத்துவர். வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைத்து விட்டது. எம்ஆர்ஐ, ஸ்கேன், ரத்தப்பரிசோதனை இத்யாதிகள் என்று குழந்தையைப் பாடாய்படுத்தினாலும் எல்லாம் அவன் நன்மைக்கே என்று அவனுடைய அழுகுரலை சமாதானப்படுத்த தெரியாமல் உறக்கம் தொலைத்த நாட்கள் அதிகம். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து விட்டு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி இனி பயப்படத்தேவையில்லை. கவனித்து வளர்க்க வேண்டுமென்று சொல்லி விட்டுச் சென்றார் தன்வந்திரியாய் வந்தவர். பரிதவிக்கும் பெற்றோரின் உளநிலையை அறிந்து பக்குவமாக பேசி விட்டுச் சென்ற மருத்துவர் தெய்வம் மானிட உருவில் வந்ததை மீண்டும் உணர்த்தியது அந்நாள்.

தலைமுழுவதும் கட்டுகளுடனும் வலி அறியாதிருக்க மருந்தின் கட்டுப்பாட்டில் இருந்த குழந்தையை அழாமல் பார்க்க முடியவில்லை. அப்பாடா! மீண்டு வந்து விட்டான் என்று மீண்டும் சிரிப்பொலி வீட்டில் கேட்க... அதற்கடுத்த நாட்களில் குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலும், பேதியுமென பொழுதுகள் கழிந்தாலும் கண்கொத்திப்பாம்பாய் அவனையே கவனித்துக் கொண்டு... ஒரு வருடம் ஓடி விட்டது.

ஒரு மாதத்திற்கு முன்பே பிறந்தநாள் திட்டமிடல்கள் ஆரம்பிக்க, நண்பர்களை அழைத்து விருந்துக்கு ஏற்பாடுகள் செய்து முடிக்க, இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில் எமர்ஜென்சிக்குத் தூக்கிக் கொண்டு ஓட... 103 டிகிரி காய்ச்சல். கண்விழிக்கவும் இல்லை. உண்ணவும் இல்லை. ஏதோ வைரல் காய்ச்சல். பொறுமையாக இருங்கள். நேரத்திற்கு மருந்து, தண்ணீர் கொடுங்கள். குழந்தையை வேறு யாரையாவது பார்த்துக்கச் சொல்லி நீங்கள் நன்றாக ரெஸ்ட் எடுங்கள். அந்த கோலத்தில் தான் நான் இருந்தேன் அன்று! பார்ட்டியைத் தள்ளி வைத்து விடலாமென்றால் அதற்கான முன்னேற்பாடுகள் செய்தாயிற்று. 103 டிகிரி மட்டும் குறையவே இல்லை. வேறு வழியின்றி முதல் பிறந்த நாளை தூங்கிக்கொண்டிருந்த குழந்தையுடன் கொண்டாடினோம்.

ஓரிரு பிறந்த நாட்கள் எந்த கவலையுமின்றி ஆனந்தமாக! ஆரம்பப்பள்ளி வயதில் மீண்டும் ஆரம்பித்தது. பிறந்த நாளன்று எங்கேயாவது மோதி கை காலைச் சிராய்த்து ரத்தம் வர... அழுகையுடனே பல நாட்கள்!

பதினாறாவது பிறந்த நாளுக்காக கனவுகளுடன் பெரிதாக திட்டங்கள் எல்லாம் போட்டு காத்திருந்தான். பள்ளியிலிருந்து பனிச்சறுக்கு விளையாடச் சென்றவனிடம் கவனமாக இரு. உறைந்த பனியின் மேல் பனிமழை. ஏனோ காலையிலிருந்தே மனக்கிலேசம். இன்னைக்குப் போகாதடா. இன்னைக்குத்தான்ம்மா போகணும். முன்னிரவிலிருந்து பெய்து கொண்டிருந்த பனிமழையில் உற்சாகமாக இருந்தான். எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா? ஃப்ரெஷ் ஸ்நோ! பார்த்துடா! அடிக்கடி ஃபோன் பண்ணு. காத்திருந்தேன் இரவில். அடித்தது தொலைபேசி. ஆசையுடன் எடுத்துப் பேசினால்... தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. ஐயோ! எப்படி இருக்கிறான் என் மகன்? நான் அவனோடு பேசணுமே! அம்மாஆஆஆ! அழுகுரல்! நெஞ்செல்லாம் வலிக்குது. பயம்மா இருக்கும்மா!

கடவுளே! மறக்க முடியாத இரவாகிப் போனது! வலிகளுடன் அவன்! வேதனையுடன் நாங்கள்! இரவு முழுவதும் விழித்திருந்து அருமை நண்பர்கள் ஆறுதலாக! இவன் பிழைத்ததே உங்கள் அதிர்ஷ்டம். கண்காணித்துக் கொண்டே இருங்கள் மீண்டும் தன்வந்திரியாய்!

இந்த வருடம் மைல்ஸ்டோன் பர்த்டே! ஆரம்பித்தான். அது வந்து போகட்டும். அப்புறம் பார்த்துக்கலாம். இப்பவே ஆரம்பிச்சிடாதடா! எனக்குப் பதட்டமா இருக்கு. சொன்னவுடன் புரிந்து கொண்டான்.

நாளைக்கு அவனை எப்படி சந்தோஷப்படுத்தலாம்? வழக்கமாக செய்வது போல் இருக்க கூடாது. ஸ்பெஷல் பிறந்த நாளாச்சே! யோசித்துப் பார்த்து கடைசியில் அவனுக்குப் பிடித்த pancakeல் பிறந்த நாள் வாழ்த்தினை எழுதிச் சமைத்து தூங்கியிருந்தவனை எழுப்பி ... இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. தேங்க் யூ மாம். யூ மெய்ட் இட் சோ ஸ்பெஷல்னு....மை வேலண்டைன் பேபி :)



Chanda hai tu, mera suraj hai tu
O meri aankhon ka taara hai tu...






'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...