கூட்டுக்குடும்பங்களில் வளர்ந்த, வளரும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவுகள் இருப்பினும் பள்ளிகள் கற்றுத்தராத பல விஷயங்களை அவர்கள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிட்டிருக்கும்/கிட்டும். பிரச்சினைகளைப் பேச, பகிர்ந்து கொள்ள என்று வீட்டில் யாராவது ஒரு நெருங்கிய நபர் இருப்பார். குழந்தைகளும் சொந்தங்களுடன் வளர்கையில் பந்தங்களும் அன்பும் பெருகும். ஒரு சில வீடுகளில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். இப்பொழுது 'நியூக்ளியர்' குடும்பங்கள் பெருகி விட்ட நிலையில் 'ஒண்ணே ஒன்னு. கண்ணே கண்ணு' என்று வாழ்கிறார்கள் அல்லது வாழ வேண்டியிருக்கிற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். கணவன், மனைவி என்று இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். நன்றாகவே சம்பாதித்தாலும் குழந்தை வளர்ப்பு என்பது நாளுக்கு நாள் ஒரு கடினமான பொறுப்பாக மாறி வருகிறது. பக்கத்து வீடு, பாட்டி வீடு என்று யாரையும் நம்பி குழந்தைகளை வெளியில் விடவே அச்சப்படும் நிலைமையில் தான் உலகம் சென்று கொண்டிருக்கிறது. அதற்காக, எந்நேரமும் குழந்தைகளின் மீதே கவனத்தை வைத்துக் கொண்டிருக்க முடியுமா?
அப்படியே வைத்துக் கொண்டாலும் குழந்தைகளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதைப் பெற்றோர்கள் பலராலும் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதே ஆய்வுகள் கூறுகிறது. அதுவும் மனநெருக்கடியில் குழந்தைகள் கூட தவிக்கும் காலகட்டங்கள் அதிகரித்து விட்டது என்பதே நிதர்சனமாக இருக்கிறது. குழந்தை மற்றும் குடும்ப நல நிபுணர்கள் அதற்குப் பல காரணங்களைக் கூறுகிறார்கள்.
"குழந்தைகள் பள்ளிகளில் அனைவராலும் விரும்பப்பட வேண்டும் என்று தங்களை நண்பர்களுடன் பொருத்திக் கொள்வதில் சிரமங்களை மேற்கொள்கிறார்கள். தங்களுடைய தோற்றம், பண வசதி, இனம், மொழி, கலாச்சாரத்தால் மற்றவர்களால் வேறுவிதமாக நடத்தப்படும் பொழுது மனதளவில் நிறையவே பாதிக்கப்படுகிறார்கள்.
புதிய வீடு, பள்ளி, ஊர், நாடு மாறும் பொழுது எதிர்பார்ப்புகள் இருந்தாலும் ஏமாற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புகளும் ஏற்படுகிறது. பழகிய நண்பர்களை இழந்து தவிக்கிறார்கள். அதுவும், மேலைநாடுகளுக்குப் புலம்பெயர்பவர்களின் குழந்தைகள் மிக அதிக அளவிலேயே பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதனாலேயே கேலிக்கும் கிண்டலுக்கும் தாக்குதலுக்கும் ஆளாகிறார்கள்.
போதாக்குறைக்கு சமூக வலைதளங்கள் பெரியவர்களிடையே அத்தனை மன உளைச்சலை ஏற்படுத்தும் பொழுது குழந்தைகளைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? 'ரீல்ஸ் ரீல்ஸ்' என்று தொடர்ந்து பார்த்துக் கொண்டு தன்னைத்தவிர,மற்றவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் வசதிகளுடனும் இருப்பதாகத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள்.
காலை முதல் இரவு வரை "படி, படி" என்று படுத்தும் பெற்றோர்கள் இருக்கும் வீடுகளிலோ பல குழந்தைகளும் முறையான ஓய்வின்றி நிரந்தர மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
பெற்றோர்களின் வேலைப்பளுவினால் வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் மாற்றங்களைப் பல குழந்தைகளால் உடனே ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. பல பெற்றோர்களும் தாங்கள் குழந்தைகளுக்கு வாக்குறுதி அளித்தபடி நடந்து கொள்வதில்லை. அந்த ஏமாற்றங்களையும் குழந்தைகள் எதிர்கொள்வதில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. பெற்றோர்கள் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள்.
சிறு வயதில் குழந்தைகள் வாழ்வில் நடக்கும் சிறு அசம்பாவிதங்கள், இழப்புகள் கூட மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி பெரியவர்களான பின்னும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது. இதனால் எப்பொழுதும் ஒருவித மனஅழுத்தத்திலேயே இருக்கிறார்கள்" என்று குழந்தைகள், குடும்ப மன நல சிகிச்சையாளர்கள் பட்டியலிடுகிறார்கள்.
எவ்வாறு குழந்தைகளின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு உதவுவது?
"முதலில் குழந்தைகளிடம் கவலைகள், மன வருத்தங்களை மறைக்கக் கூடாது. நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது நம்பிக்கையான மனிதர்களிடம் பகிர்ந்து கொள்வதால் மன அழுத்தங்களிலிருந்து விடுதலை பெறலாம் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும். குழந்தைகள் மனதில் உள்ளவற்றை வெளியே பகிர்ந்து கொள்ளும் சூழலை குடும்பங்கள் ஏற்படுத்த வேண்டும். இங்கு தான் பெற்றோர்கள் தவறுகிறார்கள். "உனக்கு ஒன்றும் தெரியாது" என்று ஒரே வாக்கியத்தில் குழந்தைகளைப் புறம் தள்ளி விடுகிறோம். தங்களுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பேச வரும் குழந்தைகளிடம் ஆதரவாக அனுசரணையாகப் பேசி அவர்கள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். இவர்களிடம் பேசினால் நமக்குத் தீர்வு கிடைக்கும் என்று குழந்தைகள் நம்ப வேண்டும். அவர்களுடைய நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. அது தவறும் பொழுது தான் தடம் மாறுகிறார்கள் குழந்தைகள்.
எத்தனை பெரிய பிரச்சினையாக இருந்தாலும் தீர்வு என்று ஒன்று இருக்கும். கடப்பது சிரமம் என்றாலும் இன்று பூதாகரமாக இருப்பது நாளை ஒன்றுமில்லாதது போலாகி விடும் என்று கூறி நேர்மறை எண்ணங்களுடன் வாழ கற்றுக் கொடுக்க வேண்டும்.
பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்வது எப்படி என்று அவர்கள் வழிக்கே சென்று அறிவுறுத்த வேண்டும். அதற்கு அவர்களுடன் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு மூச்சுப் பயிற்சி கற்றுக் கொடுப்பது நல்லது." சிகிச்சையானார்கள் இவ்வாறாக சில வழிகளைக் கூறுகிறார்கள்.
ஆக, முதலில் பெற்றோர்களாகிய நாம் தான் முதலில் குழந்தைகளைப் புரிந்து கொண்டு வளர்ப்பது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளை அவர்கள் நிலையிலிருந்து பார்க்க ஆரம்பித்தால் மனச்சோர்விலிருந்து அவர்களைக் காப்பாற்றி எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை உள்ள மனிதர்களாக மாற்ற முடியும்.
குழந்தைகளை வளர்ப்பது ஒரு பொறுப்பு மட்டுமல்ல, ஒரு தலைமுறையை வடிவமைக்கும் புனித பணியும் என்பதால் வாழ்ந்து காட்டுவோம் என்று அவர்களுக்கு ஊக்கமளித்து நாமும் நலமுடன் வாழ்வோம்.
மனநலத்தின் மீது கவனம் செலுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 'தேசிய மனநல விழிப்புணர்வு' மாதமாக அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அமைதியின்மை, புவிசார் அரசியல் மோதல்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மனச்சோர்வு, பதட்டம், அதிர்ச்சி, ஏமாற்றம், தனிமை என பல்வேறு காரணிகளால் மில்லியன் கணக்கான மக்கள் உலகெங்கும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அமெரிக்காவில் மட்டும் 5 பெரியவர்களில் ஒருவர் மன நல பாதிப்புக்கு உள்ளாகிறார் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. இருந்தபோதிலும், வெளியில் சொல்ல அச்சப்பட்டு பலர் இன்னும் அமைதியாக அவதிப்படுகிறார்கள். ஏன்?
"மனநலம் பற்றிப் பேசுவது பிறரின் கிண்டலுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டியிருக்கும்" என்ற எண்ணமே காரணமாக இருப்பதால் அதனை உடைத்தெறிய 'மனநல விழிப்புணர்வு மாதம்' அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சமீபத்திய நவீன போக்கா? இல்லை. 1949-ஆம் ஆண்டு, 'Mental Health America' எனும் அமைப்பால் தொடங்கப்பட்டது. மனநல கோளாறுகள், மன அழுத்தங்களைப் பற்றிய பொது அறிவு, சிகிச்சையின் மேன்மைகள், உதவிக்கான அணுகல்களை மக்களிடையே பேசி “மனநலம் என்பது உடல்நலத்தின் ஒரு அங்கம்” என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயக்கமாக தற்பொழுது மாறியுள்ளது.
உறவுகள், வேலைத்திறன், உடல் ஆரோக்கியம், வாழ்க்கைத் தேர்வுகள் இவை அனைத்தும் மனநலத்துடன் நேரடியாக இணைந்துள்ளதால் விழிப்புணர்வு அவசியமாகிறது.
பெரியவர்கள் மட்டுமன்றி இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் அதிக மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள். சமூக ஊடக அழுத்தம், எதிர்பார்ப்புகள், அடையாள தேடல்கள் பெரும்பாலோனரைப் பாதிக்கின்றன. தற்கொலை எண்ணங்களும் அதிகரித்துள்ளன.
மன அழுத்தத்துடன் இருப்பவர்கள் உதவி கேட்க அஞ்சுகிறார்கள். இந்த மாதம் அவர்களுக்கான மாதம். "நீங்கள் தனியாக இல்லை. உங்களுக்கான இடம் இந்த உலகில் இருக்கிறது" என்று கூறி ஆரோக்கியமான உரையாடல்கள் மூலம் அணுகி ஆதரவை வழங்குவதே இதன் நோக்கம். வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள், பள்ளிகள், வேலை இடங்களில் மனநல ஆதரவு பற்றிய தகவல்களைப் பகிர்வதும் “மன உளைச்சலால் துன்புறுவது தவறில்லை. உதவி கேட்பது தான் தைரியமான செயல்” என்று பாதிக்கப்பட்டிருப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக செய்திகளைப் பரப்புகிறார்கள்.
துயர் உணர்வுகள், ஓய்வு, உடற்பயிற்சி, தூக்கம் இவை அனைத்தும் மனநல பராமரிப்பில் முக்கியமானவை. தற்பொழுது பிரபலங்கள் பலரும் தாங்கள் மன நல நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்வதை/ கொண்டதைப் பற்றி வெளிப்படையாகப் பேசி வருவதும் நல்ல தொடக்கம். சாமானியர்களுக்கு இருக்கும் அச்சமும் மெல்ல விலகி வருகிறது.
இந்த விழிப்புணர்வின் பலம் மனநலம் என்பது ஒவ்வொருவருக்கும் உரியது. நம் அன்றாட வாழ்வின் அடிப்படை. பற்களைத் துலக்குவது போலவே மனம் மீதும் கவனம் செலுத்துவது அவசியம். சமூகத்தின் பங்கும் அதிகமாக இருப்பதால் மன நலச் சட்டத்தை ஆதரிப்பதும் நம் கடமையாகும்.
இந்த விழிப்புணர்வு மாதம் அமெரிக்காவில் துவங்கினாலும், மனநலம் என்பது உலகளாவிய பிரச்சினையாகும். ஜப்பானில் அதிகரித்து வரும் தற்கொலை வீதங்கள், போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் மனநல பாதிப்புகள் என்று உலகளவில் இதன் தேவை அதிகரித்துள்ளது. "மனநலம் இல்லை என்றால் சுகாதாரம் இல்லை" என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. மனிதம் தழைக்க, மன நலத்தின் அவசியத்தை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்பதே நம் கடமையாகும். அதற்கு உறுதுணையாக நம்மால் இயன்ற அளவில் அவர்களுக்கு அனுசரணையாக இருந்து வழிநடத்துவோம்.
சொல்வனம் இதழ் 343ல் வெளிவந்த முதல் நூறு நாட்களில் அதிபர் ட்ரம்பின் சாதனை/வேதனை-கள் கட்டுரை அவருடைய 100 நாட்கள் ஆட்சியின் நிறைகுறைகளை அலசுகிறது. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று கடந்து செல்லவும் முடியவில்லை. குறைகளைத் தீர்க்கும் நாள் வருமோ என்று தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.
பதவியேற்ற முதல் 100 நாட்களைக் கொண்டு அதிபரின் ஆட்சியையும் ஆளுமையையும் அளவிடுவது அமெரிக்காவிற்குப் புதிதல்ல. 1933ம் ஆண்டு ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் அதிபரான காலத்தில் தான் முதன் முதலில் இந்த வழக்கம் நடைமுறையானது. அப்பொழுது “தி கிரேட் டிப்ரெஷன்”ல் அமெரிக்கா தத்தளித்துக் கொண்டிருந்த நேரம். பொருளாதார மந்தநிலையை எதிர்த்துப் போராட துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் அதிபர் இருந்தார். அவரும் உடனடியாக தனது முதல் 100 நாட்களில் 15 முக்கிய சட்டங்களை இயற்றினார்.
அன்றிலிருந்து, பதவியேற்ற முதல் 100 நாட்கள் என்பது ஒவ்வொரு அதிபரும் எத்தனை விரைவாக தீர்க்கமாகச் சட்டங்களை இயற்றி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்கள் என்ற மதிப்பீட்டுக்கான அளவுகோலானது. ஆரம்பகால நடவடிக்கைகள் என்பது அதிபர் ஆட்சியின் முன்னுரிமைகள், தலைமைத்துவ பாணி, அரசியல் போக்கை அமெரிக்கர்களுக்கு மட்டுமில்லாமல் சர்வதேச சமூகத்திற்கும் உணர்த்துவதால் தற்பொழுது பேசுபொருளாகி விட்டது.
அதுவும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இரு அவைகளிலும் பெரும்பான்மையும் கிடைத்து முந்தைய அரசை வீழ்த்திவிட்ட வெற்றிக்களிப்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் காலம் கிடைத்தால் சும்மா விடுவாரா அதிபர் ட்ரம்ப்? கடந்த ஏப்ரல் 29, 2025 அன்று அவர் அதிபராகப் பொறுப்பேற்று 100 நாட்களாகி விட்டது. அவரது ஆதரவாளர்கள் இந்தக் காலகட்டத்தை மாற்றங்கள் நிறைந்த முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் நாட்களாகவும் எதிர்கட்சிகள் அவருடைய நகர்வுகளுக்கு எதிராக எதிர்ப்பைத் திரட்டவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் வெளிவந்த நிர்வாக உத்தரவுகள், முன்மொழியப்பட்ட வரி மாற்றங்கள், கட்டணங்கள், ஒழுங்குமுறை மாற்றங்கள் பலவும் சந்தைகள், வணிகங்கள், முதலீட்டாளர்களைப் பாதித்தன என்பதைப் பொருளாதார குறியீடுகளின் மூலம் உலகமே உணர்ந்து வருவதைக் காண்கிறோம். கல்வி, சுகாதாரம், குடியேற்றம், சிவில் உரிமைகள் மீதான கொள்கைகள் மக்களின் வாழ்க்கையில் உடனடி விளைவுகளை ஏற்படுத்தி வருவதும் கண்கூடு.
‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என்ற தாரக மந்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தினம் ஒரு அஸ்திரத்தை ஏவி முதல் 100 நாட்களில் “கண்ல மரண பயத்தை காமிச்சிட்டான் பரமா” என்று ‘வால்ஸ்ட்ரீட்’டை மிரட்டி வருவதால் அதிபரின் இரண்டாவது ஆட்சிக்காலம் உலகளவிலும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. அதுவும், அங்கிள்சாமின் ராணுவ நிலைப்பாடு, வர்த்தக கூட்டணிகள், சர்வதேச ஒப்பந்தங்கள் உள்ளிட்ட வெளியுறவுக் கொள்கைகளைப் பற்றின நிர்வாக உத்தரவுகள் கூட்டாளிகளுக்கும் எதிரிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருப்பதால் விவாதங்களும் அதிகரித்து வருகிறது.
முதல் 100 நாட்களில் 99 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்ட ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்டின் முந்தைய சாதனையை 143 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டு முறியடித்துள்ளார் ட்ரம்ப். இந்த உத்தரவுகள் பெரும்பாலும் குடியேற்றம், வர்த்தகம், அரசாங்க மறுசீரமைப்புகளுக்காக இயற்றப்பட்டது. இதன் மூலம் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா, நிறைவேற்றுவாரா, நிறைவேற்ற முடியுமா என்பது தான் தற்போதைய கேள்வி. அவருடைய தேர்தல் நேரத்து வாக்குறுதிகளும் தற்போதைய நிலவரங்களையும் பார்க்கலாம்.
1. விலைவாசி குறைவு
தான் பதவியேற்றவுடன் “உடனடியாக” மளிகைப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தாலும் நடைமுறையில், விலைகள் குறையவில்லை. பணவீக்கத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, குடியேற்ற அமலாக்கம், ஜனவரி 6 போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்குதல் போன்ற பிற முன்னுரிமைகளில் நிர்வாகம் கவனம் செலுத்துவதாக ஜனநாயக சட்டமன்ற உறுப்பினர்கள் விமர்சிக்கின்றனர்.
தேர்தலுக்குப் பிறகு, விலைகளைக் குறைப்பதில் உள்ள சிரமத்தை ஒப்புக்கொண்டு, டைம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “விலைகள் உயர்ந்தவுடன் அவற்றைக் குறைப்பது கடினம்” என்று கூறி தனது டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்-ம் “விலை குறைப்புகளுக்கு நேரம் எடுக்கும். அதற்கான மூலதன முதலீட்டை அதிகரிக்க வேண்டும்” என்று பரிந்துரைத்துள்ளார்.
வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் கட்டணத் திட்ட கொள்கைகள் அமெரிக்கர்கள் பொருட்களை அதிக விலைக்கு வாங்க வழிவகுக்கும் என ஃபெடரல் ரிசர்வ் எச்சரித்தது. வரி குறைப்பு மாற்றங்களால் அரசின் வருவாய் குறையும். இதற்கு முன்பு 2016ல் இதேபோன்ற உறுதிமொழியை அளித்து நடைமுறைப்படுத்த, தேசிய கடன் தான் அதிகரித்தது என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
2. சட்டவிரோத குடியேற்றம்
ட்ரம்ப் வெற்றி பெற முக்கிய காரணியாக இருந்ததில் அவரின் சட்டவிரோத குடியேற்றக் கொள்கைகளும் ஒன்று. ஜனவரி 2025ல் பதவியேற்றதிலிருந்து, அவரது நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க, சட்டங்களை மேலும் கடுமையாக்கி பல தீவிரமான நடவடிக்கைகளைச் செயல்படுத்தி எல்லையைக் கட்டுப்படுத்துவதற்கான வாக்குறுதியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும் பல சட்ட சவால்களையும் பொது சர்ச்சையையும் எதிர்கொண்டுள்ளார் ட்ரம்ப்.
மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிபர் ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தில் டிசம்பர் 2023ல் 249,740 ஆக இருந்தது பின் டிசம்பர் 2024ல் 47,324 வெகுவாக குறைந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியில் பிப்ரவரியில் 8,346 ஆகவும் மார்ச் மாதத்தில் 7,181 ஆகவும் மட்டுமே குறைந்துள்ளது. இதன் தொடர்பில் வெளிவந்த சட்டங்கள்:
குற்றம் சாட்டப்பட்ட, தண்டிக்கப்பட்ட ஆவணமற்ற குடியேறிகளைக் காவலில் வைக்க உத்தரவிடுகிறது ஜனவரி 29, 2025 அன்று கையெழுத்திடப்பட்ட ‘லேக்கன் ரிலே சட்டம்’. குடியேற்ற அமலாக்கத்துறை தனது கடமையைச் செய்யவில்லையென்றால் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) மீது வழக்குத் தொடரவும் மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது இச்சட்டம்.
ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை, குறிப்பாக வன்முறை குற்றவியல் வரலாற்றைக் கொண்டவர்களை நகர்ப்புறங்களில் இருந்து விரைவாக கைது செய்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது 2025ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் சேஃப்கார்ட்’. மார்ச் 2025 நிலவரப்படி, இந்த நடவடிக்கையின் கீழ் 23,000 கைதுகள் நடந்ததாகவும் 18,000 பேர் நாடுகடத்தப்பட்டதாகவும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கம்(ICE) தெரிவித்துள்ளது.
தீவிர குற்றவாளிகளாகக் கருதப்படும் 30,000 புலம்பெயர்ந்தோரைத் தடுத்து வைக்க ‘குவாண்டனாமோ புலம்பெயர்ந்தோர் செயல்பாட்டு மைய’த்தை விரிவுபடுத்தும் ஒரு குறிப்பாணையை ஜனவரி 29, 2025 அன்று வெளியிட்டார் அதிபர் ட்ரம்ப். இந்த முயற்சி சட்ட நிச்சயமற்ற தன்மைகள், மனித உரிமை மீறல்கள் குறித்த விமர்சனங்களை எதிர்கொண்டது.
கியூபா, ஹைட்டி, நிகரகுவா, வெனிசுலா நாட்டினருக்கும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட மனிதாபிமான பரோல் திட்டங்களை ஏப்ரல் 24, 2025 முதல் நிறுத்துவதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்துள்ளது. புகலிடம், நாட்டில் தங்குவதற்கான வேறு சட்டபூர்வ வழிக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அனைத்து செயலில் உள்ள பரோல் அனுமதிகளும் நிறுத்தப்பட்டதாகக் கருதப்படும். ஒரு கூட்டாட்சி நீதிபதி இந்த நடவடிக்கையைத் தடுத்த பிறகு, ட்ரம்ப் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அரசின் பரந்த சட்டவிரோத குடியேற்ற ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக விரைவான நாடுகடத்தலுக்காக வாதிட்டது.
இதற்கிடையில், ICE நாடு முழுவதும் ஏராளமான மக்களைக் கைது செய்து வருகிறது. தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறும் பலரும் உரிய நடைமுறை இல்லாமல் நாடு கடத்தப்பட்டுள்ளனர். எவ்வித குற்றவியல் பதிவு இல்லாத போதிலும் 14 வருடங்களாக அமெரிக்காவில் தங்கி மனைவி, மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ‘கில்மர் அப்ரிகோ கார்சியா’ மீது குற்றம் சாட்டி விசாரணையும் செய்யாமல் சால்வடோர் சிறைக்கு நாடு கடத்தப்பட்டார். அவரின் வழக்கும் நிலுவையில் உள்ள பல வழக்குகளில் ஒன்றாகும். இப்படி பல நிர்வாக குளறுபடிகள் சட்டவிரோத குடியேற்றம் என்ற பெயரில் நடந்து கொண்டிருக்கிறது.
பிறப்புரிமை குடியுரிமை
ஆவணமற்ற குடியேறிகளின் குழந்தைகள், அமெரிக்காவில் தற்காலிகமாக இருப்பவர்களின் பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிர்வாக ஆணையையும் பிறப்பித்துள்ளார். பல கூட்டாட்சி நீதிபதிகள் அதன் அமலாக்கத்தைத் தடுக்க தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
இவற்றையெல்லாம் செய்வேன் என்று முழங்கித் தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் தான் அரசின் செயல்களைக் கட்டுப்படுத்துவதாக நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் கூட கண்டித்திருக்கிறார் அதிபர் ட்ரம்ப்!
3. எரிசக்தி கட்டணக்குறைவு
பதவியேற்ற 12 முதல் 18 மாதங்களில் வாக்காளர்களின் எரிசக்தி செலவுகளைப் பாதியாகவோ அல்லது முக்கால் பங்காகவோ குறைப்பதாக ட்ரம்ப் உறுதியளித்திருந்தார். ஆனால் அவர் முன்மொழிந்த தூய்மையான எரிசக்தி வரிச் சலுகைகளை ரத்து செய்யும் திட்டங்கள் வீடுகளுக்கான எரிசக்தி கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என்று ஒரு புதிய அறிக்கை சுட்டுகிறது. முன்னுக்குப் பின் முரண் என்பது இதுதானோ?
இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், உபகரணங்களுக்கான புதிய கட்டணங்கள், எரிசக்தி உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. இது புதுப்பிக்கத்தக்க மற்றும் பாரம்பரிய எரிசக்தி துறைகளை பாதிக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான மானியங்கள் நிதிநிலை அறிக்கையில் குறைக்கப்பட்டிருப்பதும் மற்றொரு முக்கிய காரணமாகும்.
நுகர்வோருக்கு எரிசக்தி செலவுகளைச் சேமிக்க உதவிய ‘எனர்ஜி ஸ்டார்’ போன்ற திட்டங்களை அகற்றுவதற்கான அரசின் முயற்சிகள் அதிக வீட்டுச் செலவுகளுக்கு வழிவகுக்கும்.
நிர்வாகத்தின் எரிசக்தி கொள்கைகள் அரசுக்கும், சட்டமியற்றுபவர்கள், தொழில்துறை பங்குதாரர்களுக்கும் இடையே விவாதத்தைத் தூண்டியுள்ளன. சில குடியரசுக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சுத்தமான எரிசக்தி மற்றும் குறைந்த வருமான குடும்பங்களை ஆதரிக்கும் திட்டங்களுக்கு முன்மொழியப்பட்ட நிதி குறைப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இவை தங்களது தொகுதிகள், பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றனர்.
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதிகளை அமெரிக்காவால் கட்டப்பட்ட கப்பல்களில் கொண்டு செல்ல வேண்டும் என்ற புதிய கொள்கையினால் சாத்தியமான செலவு அதிகரிக்கும் என்பதால் எரிசக்தி நிறுவனங்கள் விலக்கு கோருகின்றன. இதன் விளைவாக, எரிசக்தி கட்டணங்களைக் குறைப்பதாகச் சொன்ன வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது.
4. சுங்க வரி விதிப்பு
அமெரிக்கத் தொழில்களைப் பாதுகாப்பதையும் வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட சுங்க வரிகளை அமல்படுத்துவதாகப் பிரச்சாரங்களின் பொழுது வாக்களித்திருந்தார் ட்ரம்ப். “சர்வதேச வர்த்தகத்தில் மற்ற நாடுகள் அமெரிக்காவை ஏமாற்றுகின்றன. நலிந்திருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இறக்குமதிப் பொருட்களுக்கு வரிகளை விதிப்பேன். ஐ லவ் டாரிஃப்ஸ்” என்று தொடர்ந்து பேசி வந்தார். “டாரிஃப் மேன்” என்று தனக்குத் தானே பட்டத்தை வேறு சூட்டிக்கொண்டார். பதவியேற்றதிலிருந்து அவரது நிர்வாகம் பல குறிப்பிடத்தக்க வரி நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது. பேசியதோடு இல்லாமல் வரிகளை விதிப்பதும் பின் அதை மாற்றுவதும் மேலும் அதிக வரி, மாற்றங்கள் என்று தானும் குழம்பி மற்ற நாடுகளையும் குழப்பி அவர்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார். அதன் எதிர்மறை தாக்கம் சிக்கலான பொருளாதாரத்திற்கு வழிவகுத்து விட்டது .
அமெரிக்காவில் ஃபெண்டானிலை அனுமதித்ததற்கான தண்டனையாக கனடா, மெக்சிகோ, சீனா மீதான வரிகளை அதிகரித்தார். ஏப்ரல் 2 அன்று வெளிநாட்டு இறக்குமதிகள் மீது இன்னும் பரவலான வரிகளை விதித்து “விடுதலை தினம்” என்று அறிவித்தார். பின், அந்தத் திட்டத்தின் சில பகுதிகளிலிருந்து பின்வாங்கினார். சில நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தார். ஆனால் சீனா மீதான வரிகளை மட்டும் 145 சதவீதம் வரை வைத்திருந்தார். அமெரிக்கச் சந்தையை நம்பித்தான் உலக நாடுகள் பலவும் இருக்கின்றன. அதனால் தன்னுடைய வரிகளை, நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வார்கள் அல்லது ஒப்பந்த பேச்சிற்கு வருவார்கள் என்று தீவிரமாக நம்புகிறார். அவருடைய தீவிர ஆதரவாளர்களும் நம்புகிறார்கள். ஆனால், நடைமுறையில் பொருட்களின் விலை ஏறிக்கொண்டே செல்வது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கிக் கொண்டு வருகிறது.
பங்குச்சந்தையும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. “வர்த்தகக் கொள்கைகளை மாற்றும் பொழுது இதைப் போன்ற “சிறு”சறுக்கல்கள் வருவது இயல்பு தான். இதிலிருந்து மீண்டு அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும். இங்கிருந்து வெளியே சென்ற வேலைகளும் வேறு பல புது நிறுவனங்களும் அமெரிக்காவிற்கே திரும்பி வரும். வேலையில்லா திண்டாட்டம் குறையும்” என்று பேட்டிகளில் கூறி வருகிறார். அதுவரையில் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை தொடர்ந்தால் தாக்குப்பிடிக்க முடியுமா? மில்லியன் டாலர் கேள்வி.
உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதே இந்த வரி விதிப்புகளின் நோக்கமாக இருந்தாலும், அவை நீண்டகால பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிலர் வாதிடுகின்றனர். மற்றவர்கள் தேசிய பொருளாதார பாதுகாப்பிற்கு அவை அவசியம் என்று நம்புகின்றனர். மே 2025 நிலவரப்படி, வர்த்தக பதட்டங்களைத் தணிக்கவும் உள்நாட்டுப் பொருளாதார கவலைகளை நிவர்த்தி செய்யவும் சீன இறக்குமதி மீதான வரிகளை 50% முதல் 54% வரை குறைக்க நிர்வாகம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
5. போர் நிறுத்தம்
வெற்றி பெற்றவுடன் தான் பதவிக்கு வருவதற்கு முன்பே இஸ்ரேல்-பாலஸ்தீனம், ரஷ்யா-உக்ரைன் போர்களை நிறுத்தி விடுவேன் என்று கூறியிருந்தார் ட்ரம்ப். நிறுத்துவது போல நிறுத்தி மீண்டும் தொடர்கிறது போர்கள். ஆனால் அமெரிக்கா தானாக எந்தப் போரிலும் பங்கெடுக்காது என்று சொல்லியிருப்பதால் கொஞ்சம் நிம்மதி. பாலஸ்தீனத்தின் கடலோரப்பகுதியான காசாவை ஆக்கிரமித்து அப்பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப அமெரிக்கா உதவி செய்யும் என்று சொல்வதும் அங்கிருக்கும் மக்களை அண்டை நாடுகளுக்குச் செல்லுமாறு கூறுவதும் எதுவரையில் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரியவில்லை.
ரஷ்யா-உக்ரைன் மோதலில் மத்தியஸ்தம் செய்ய ட்ரம்ப் தீவிரமாக முயன்றார். மே 8, 2025 அன்று, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் 30 நாள் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். மீறப்பட்டால் கூடுதல் தடைகள் ஏற்படும் என்று உக்ரைனை எச்சரித்தார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டார். அமெரிக்காவின் ஆதரவைத் தொடர்ந்து பெற, உக்ரைனின் கனிம வளங்களுக்கு அமெரிக்காவிற்கு முன்னுரிமை வழங்கும் கனிம ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்திட்டிருக்கிறது.
தற்பொழுது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அமெரிக்கா ராணுவ ரீதியாக தலையிடாது என்று கூறியிருப்பது வெளிநாட்டு மோதல்களில் அமெரிக்காவின் குறைவான ஈடுபாட்டை வலியுறுத்துகிறது.
ஆனால் ஏமனில் ஹௌதிகளுடனும் சிரியாவில் அல்குவைதாவுடனும் வான் தாக்குதலை நடத்தி தற்பொழுது நிறுத்தி வைத்துள்ளது. புதிய அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரானுக்கு எதிரான “அதிகபட்ச அழுத்த” பிரச்சாரத்தை ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் சாத்தியமான ராணுவ நடவடிக்கை குறித்தும் எச்சரித்துள்ளது தேர்தல் வாக்குறுதியைக் கேள்விக்குறியாக்குகிறது.
முன்மொழியப்பட்ட உக்ரைன், ஏமன் போர் நிறுத்த ஒப்பந்த முயற்சிகள் அவரது பிரச்சார வாக்குறுதிகளுடன் ஒத்துப்போகின்றன என்றாலும் இந்தப் பிராந்தியங்களில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதில் இருக்கும் சவால்களை எப்படி கையாளப் போகிறார் என்பது இனி தான் தெரியவரும்.
6. வரி குறைப்பு
அதிக வரிவிதிக்கும் மாநிலங்களில் வரி செலுத்துவோருக்குப் பயனளிக்கும் வகையில், மாநில, உள்ளூர் வரி (SALT) விலக்குகளுக்கான வரம்பை $10,000லிருந்து $30,000 ஆக உயர்த்தவும் பணி நேரம் நீங்கலாக கூடுதல் நேரம் வேலைபார்ப்பதற்கான சம்பளம், சேவைத்துறையில் பணியாற்றுபவர்கள் பெறும் டிப்ஸ், சோஷியல் செக்கியூரிட்டி வருமானங்களின் மீதான வரிகளை நீக்குவதாகவும் உறுதியளித்திருந்தார். மேலும் தனது முதல் பதவிக்காலத்தில் கொண்டு வந்த வரி குறைப்புகள் தற்பொழுது காலாவதியாகும் நிலையில் இருப்பதை நிரந்தரமாக்குவதாகவும் கூறினார்.இந்த ஆண்டின் இறுதியில் காலாவதியாகவுள்ள TCJA சட்டத்தின் நிரந்தர நீட்டிப்புக்கு நிர்வாகம் வாதிட்டு வருகிறது. அப்படி நீட்டித்தால் பத்தாண்டுகளில் கூட்டாட்சி வரி வருவாய் தோராயமாக $4.5 டிரில்லியன் குறையக்கூடும். திட்டமிடப்பட்ட பொருளாதார வளர்ச்சியால் சுமார் 16% மட்டுமே ஈடுசெய்யப்படும் என்று பகுப்பாய்வுகள் குறிப்பிடுகின்றன.
மே 2025 நிலவரப்படி, இந்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் உட்கட்சிப்பிளவுகள், நிதி வழிமுறைகள் குறித்த விவாதங்களால் முன்னேற்றம் தடைபட்டுள்ளது. இதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும். இதுவரையில் ஒன்றும் நடக்கவில்லை. தன்னுடைய பாணியில் இது “அழகான மசோதா. மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று காங்கிரசில் உள்ள குடியரசுக் கட்சியினருடன் இணைந்து சட்டத்தை இயற்ற முயற்சிக்கிறார். இதன் தொடர்பில் கட்சிக்குள் ஒருமித்த ஆதரவைப் பெறுவது கடினமாக இருக்கலாம்.
தன்னுடைய அதிகாரத்தின் மூலம் மக்களுக்குப் பல வரி குறைப்புகளைச் செய்வதாகத் தேர்தல் நேரத்தில் வாக்களித்திருந்தாலும் அதற்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவை என்பதை தற்போது புரிந்து கொண்டு இரு அவைகளிலும் அதற்கான ஆதரவைத் திரட்டிக் கொண்டிருக்கிறார். இது அவருடைய தலைமைப்பண்பை நிர்ணயிக்கும் களமாக இருக்கும்.
7. கல்வி நிலையங்களில் அரசாங்க ஊடுருவல்
தற்போதைய அரசின் கல்விக் கொள்கைகள், கல்வித்துறையில் மத்திய அரசின் பங்கை கணிசமாக மாற்றுவதாக உள்ளன. கல்வி மீதான அதிகாரத்தை மாநிலங்களுக்கும் உள்ளூர் அரசுகளுக்கும் மாற்றிவிடும் நோக்கில் மார்ச் 2025ல் ஃபெடரல் அரசின் கல்வித் துறையை மூடுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப். துறையின் மூடலுக்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்பட்டாலும், அதன் செல்வாக்கைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது ட்ரம்ப் நிர்வாகம். இதில் ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வுச் சலுகைகளை வழங்குவது, அதன் பணியாளர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கத் திட்டமிடுவது அடங்கும்.
2026 நிதி அறிக்கையில் கல்விக்கான கணிசமான நிதியை 15% வரை குறைத்துள்ளது. இதனால் குறைந்த வருமானம், முதல் தலைமுறை கல்லூரி மாணவர்களை ஆதரிக்கும் TRIO மற்றும் கூட்டாட்சி வேலை-படிப்பு போன்ற திட்டங்கள் நீக்கப்படும்.18 K-12 மானியத் திட்டங்களை ஒற்றைத் தொகுதி மானியமாக ஒருங்கிணைத்து மாநிலங்களுக்கு அதிகாரங்களைக் கூடுதலாக வழங்கி கூட்டாட்சி அரசின் மேற்பார்வையைக் குறைப்பது தான் நோக்கம். இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் பொது பள்ளிகளும் தான்.
மேலும், பள்ளிகளில் பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்கம் (DEI) தொடர்பான திட்டங்களை நீக்கவும் இணங்காத கல்வி நிறுவனங்களிலிருந்து கூட்டாட்சி நிதியைத் திரும்பப் பெறவும் சில நடவடிக்கைகளைச் செயல்படுத்தி அதிருப்திக்குள்ளாகியுள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வரி விதிப்பதன் மூலம் பெறப்படும் நிதியில் ஆன்லைன் தளமான “அமெரிக்கன் அகாடமி” வாயிலாக கல்வி கற்கும் வாய்ப்பினை முன்மொழிகிறது. இவை பல்கலைகளில் தற்பொழுது நடக்கும் முற்போக்குத் தாக்கங்களைக் குறைக்க ட்ரம்ப் அரசு முயல்வதைப் பிரதிபலிக்கின்றன. ஆனால், கல்வி சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்து தொழில்முறை மேம்பாட்டுத் திட்டங்களை நீக்குவது குறித்து ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உயர்கல்வி நிறுவன வளாகங்களில் நடக்கும் யூத எதிர்ப்பு போராட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்டி வருகிறது அரசு நிர்வாகம். அதனால், பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்கிய திட்டங்களை நீக்குவது, அமெரிக்க மதிப்புகளுக்கு எதிராக நடக்கும் வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்ற ஒப்புக்கொள்ளாவிடில் கல்வி நிலையங்கள் பெற்று வரும் பில்லியன் கணக்கான மக்களின் வரிப்பணத்தை நிறுத்திவிடுவதாகப் பிரச்சாரத்தில் கூறியபடியே ஆட்சிக்கு வந்ததும் அச்சுறுத்தி வருகிறார். பல முக்கிய கல்வி நிறுவனங்கள் ட்ரம்ப்பின் கோரிக்கைகளுக்கு இணங்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மட்டும் இவற்றை எதிர்த்து உறுதியாக நின்றது.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஹார்வர்டின் வரி விலக்கு நிலையைத் திரும்பப் பெறவும் கால் பங்கிற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கையைத் தடுப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளார் அதிபர். மேலும் $2பில்லியனுக்கும் அதிகமான மானியங்களையும் ஒப்பந்தங்களையும் முடக்கியுள்ளார்.
ஹார்வர்ட் மட்டுமில்லாது ட்ரம்ப் நிர்வாகம் மற்ற பல்கலைக்கழகங்களையும் நிர்பந்தித்துக் கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பல வெளிநாட்டு மாணவர்களின் சட்டப்பூர்வ நிலையை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இதற்குப் பயந்து இந்திய மாணவர்கள் பலரும் ஊருக்குச் செல்ல அஞ்சும் நிலையில் தான் இருக்கிறது தற்போதைய நிலைமை.
ட்ரம்ப்பின் கல்விக் கொள்கைகள் ஃபெடரல் அரசின் கட்டுப்பாட்டை மாநிலங்களுக்கு வழங்கி கூட்டாட்சி செலவினங்களைக் குறைத்தலையும் கல்வி உள்ளடக்கத்தை பழமைவாத மதிப்புகளுடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் உள்ளூர் அதிகாரத்தை மீட்டெடுப்பதாகவும், முக்கிய கல்விப் பாடங்களில் கவனம் செலுத்துவதாகவும் ஆதரவாளர்கள் வாதிடுகையில், கல்வி சமத்துவம், கல்வி சுதந்திரம், பின்தங்கிய மாணவர்களுக்கான ஆதரவு ஆகியவற்றில் ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கங்கள் குறித்து விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். இந்தக் கொள்கைகளின் நீண்டகால விளைவுகள் சட்டமன்ற நடவடிக்கைகள், கல்வி நிறுவனங்கள், சமூகங்களின் பதில்களைப் பொறுத்திருக்கிறது.
8. திருநங்கைகள் மீதான தடை
விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதற்கு எதிராகவும், பாலினம் என்பது இயல்பாகவே ஆண், பெண் மட்டுமல்ல என்ற கருத்துக்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தார்.
அதன்படி, பெண்கள் அணிகளிலிருந்து திருநங்கைகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். ராணுவத்தில் பணிபுரியும் திருநங்கைகளை நீக்குவதற்கான தனது முயற்சியைத் தடுத்த கீழ் நீதிமன்றங்களுக்கு எதிராக தீர்ப்பளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தைக் கோரியுள்ளார். வழக்குகள் நிலுவையில் உள்ளன.
9. கலவரக்காரர்களின் மன்னிப்பு
ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்கத் தலைநகரில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த தவறி, அவர்களுடைய “கொடூரமான தாக்குதலை” கண்டித்து, “வன்முறை, சட்டவிரோதம், கலவரத்தால் தான் கோபமடைந்ததாக” அறிவித்தார். விரைவிலேயே அவர்களை “தேசபக்தர்கள்”, நீதி அமைப்பின் “பணயக்கைதிகள்” என்று கொண்டாடினார். அதிபரானதுடன் அவர்களை மன்னிக்க உத்தரவிடுவேன் என்று உறுதியளித்தார். அதையே செய்தார். இதனால் அன்று காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியவர்கள் உட்பட சுமார் 1,500 பேர் மன்னிப்பு பெற்றனர். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களைக் காக்க, கலவரக்காரர்களால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு நீதியாவது, நியாயமாவது!
10. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி மீறல்
எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி உற்பத்தியை ஆதரிப்பதாக அவர் உறுதியளித்த முயற்சியின் ஒரு பகுதியாக, அந்த இலக்கை நோக்கி நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். பைடன் சகாப்த “மின்சார வாகன ஆணை” யை ரத்து செய்ததாகக் கூறினார். ஆனால் ரத்து செய்ய அங்கே ஒன்றும் இல்லை என்பது தான் உண்மை. 2030ம் ஆண்டுக்குள் விற்கப்படும் புதிய கார்களில் பாதி மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என்ற பைடனின் கட்டுப்பாடற்ற இலக்கிலிருந்து விலகிவிட்டார். அவ்வளவு தான்.
கலிஃபோர்னியாவில் 2035க்குள் படிப்படியாக எரிவாயு மூலம் இயங்கும் கார்களின் விற்பனையை நிறுத்த அனுமதிக்கும் கூட்டாட்சி விலக்கை முடிவுக்குக் கொண்டு வரும் பொறுப்பை காங்கிரஸிடம் ஒப்படைத்திருக்கிறார்.
ஆம், டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்கச் சுற்றுச்சூழல் கொள்கையில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது..
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA), 30க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை: மின் உற்பத்தி நிலையங்கள், வாகனங்களுக்கான உமிழ்வு தரநிலைகளைத் தளர்த்துதல், நிலக்கரி, எண்ணெய், எரிவாயு உற்பத்தி மீதான விதிமுறைகளைக் குறைத்தல், பசுமை இல்ல வாயு உமிழ்வை பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக வகைப்படுத்தும் கண்டுபிடிப்புகளை மறு மதிப்பீடு செய்தல் அடங்கும். இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்து பாதகமான சுகாதார விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் உட்பட கூட்டாட்சி பொது நிலங்களை தனியார்மயமாக்குவதற்கும் நிர்வாகம் பல கொள்கை மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. சுரங்கம், மரம் வெட்டுதல், ட்ரில்லிங் நடவடிக்கைகளை அதிகரித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களைப் பலவீனப்படுத்துதல், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை ஆக்கிரமித்து நிலங்களை அரசு மற்றும் தனியார் கட்டுப்பாட்டிற்கு விற்பனை செய்தல் அல்லது மாற்றுதல் போன்ற முயற்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகளை அச்சுறுத்துவதாக வாதிடும் பாதுகாவலர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் பலத்த எதிர்ப்பை எதிர்கொண்டன.
2026 கூட்டாட்சி நிதி அறிக்கையில், EPA ன் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 55% குறைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கார்பன் பிடிப்பு திட்டங்களுக்கான $15 பில்லியனுக்கும் அதிகமான நிதியை நீக்கியிருப்பது, 2021 இரு கட்சி உள்கட்டமைப்பு சட்டத்திலிருந்து மின்சார வாகன உள்கட்டமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட $6 பில்லியனை நிறுத்தியிருப்பது, கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களைப் பாதிக்கும் வேளாண்மைத் துறைக்கு வெட்டுக்கள் என்று சுற்றுச்சூழல் நிதியில் குறிப்பிடத்தக்க குறைப்புகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.இதன்மூலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
மேலும், பாரிஸ் ஒப்பந்தம், பிற சர்வதேச காலநிலை உறுதிமொழிகளில் இருந்து அமெரிக்கா உடனடியாக விலக வேண்டும் என்று கட்டளையிடும் நிர்வாக ஆணையையும் பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை ட்ரம்ப்பின் தலைமையின் கீழ் அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய இரண்டாவது முறையாகும்.
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக தளம் (NOAA) காலநிலை தொடர்பான பேரிடர்களின் பொருளாதார தாக்கங்களை மதிப்பிடுவதற்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனால், அதன் பில்லியன் டாலர் வானிலை மற்றும் காலநிலை பேரிடர் தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதை நிறுத்தப்போவதாக அறிவித்திருப்பது அரசின் காலநிலை மாற்றம் குறித்த கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது.
ட்ரம்ப்பின் சுற்றுச்சூழல் கொள்கைகள், காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் முந்தைய கூட்டாட்சி முயற்சிகளிலிருந்து குறிப்பிடத்தக்க விலகலைக் குறிக்கின்றன. இந்த நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியையும் எரிசக்தி சுதந்திரத்தையும் ஊக்குவிப்பதாக ஆதரவாளர்கள் வாதிடுகையில், அவை சுற்றுச்சூழல் சீரழிவிற்கும் பொதுச் சுகாதார அபாயங்களை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
11. அரசாங்க செயல்திறன் துறை நிறுவுதல்
2024ம் ஆண்டு மஸ்க், ட்ரம்ப் இடையேயான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, ஜனவரி 20, 2025 அன்று நிர்வாக உத்தரவின் மூலம் அரசாங்க செயல்திறன் துறை (DOGE) உருவாக்கப்பட்டது. அரசாங்க செயல்திறன், உற்பத்தித்திறனை அதிகரிக்க கூட்டாட்சி தொழில்நுட்பத்தை நவீனமயமாக்குதல், செயல்பாடுகளை நெறிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு DOGE ஐ வழிநடத்த மஸ்க் நியமிக்கப்பட்டார். மஸ்க்கின் தலைமையின் கீழ் DOGE பல முயற்சிகளை மேற்கொண்டது.
தோராயமாக 400 கூட்டாட்சி நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. “99 நிறுவனங்களே போதுமானதை விட அதிகம்” என்று பரிந்துரைத்தார் மஸ்க். திறமையின்மையினரை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு கூட்டாட்சி பணியாளர்களை 75% வரை குறைக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. செயல்திறன் நடவடிக்கைகள் மூலம் அரசிற்கு $2 டிரில்லியன் சேமிப்பை கணித்திருந்தார் மஸ்க். ஏப்ரல் 2025ல், சேமிக்கப்பட்ட தொகை தோராயமாக $150பில்லியனாக மட்டுமே இருந்தது. அதைத்தவிர, DOGEல் மஸ்க்கின் பதவிக்காலம் பல சர்ச்சைகளை எழுப்பியது. அதன் விரைவான நடவடிக்கைகள், வெகுஜன பணிநீக்கங்கள், நிறுவன நீக்கங்கள், நிர்வாக அதிகாரத்தின் சட்ட எல்லைகளையும் கூட்டாட்சி அதிகாரத்துவத்தின் அரசியல்மயமாக்கல் குறித்த கேள்விகளையும் எழுப்பின.
குறிப்பாக, அவரது வணிக முயற்சிகளுக்குப் பயனளிக்கும் விதமாக அரசின் தரவுகளை கையாண்டது அரசாங்க அதிகாரியாகவும் தனியார் தொழில்முனைவோராகவும் மஸ்க்கின் இரட்டை வேடம் மோதல்களுக்கு வழிவகுத்தது. $5மில்லியன் முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுத் தரும் திட்டமான “ட்ரம்ப் கார்டு விசா” DOGEஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. முறையான அறிவிப்பு இல்லாத இந்த முயற்சி தெளிவற்ற சட்ட அதிகாரம், பணக்கார நபர்களுக்குச் சாதகமாக இருக்கும் திறன் ஆகியவற்றிற்காக விமர்சனங்களை எதிர்கொண்டது.
DOGE-ல் எலான் மஸ்க்கின் தலைமை குறிப்பிடத்தக்க மாற்றங்களைத் தொடங்கிய போதிலும் விளைவுகள் கலவையாக இருந்தன. நிர்ணயிக்கப்பட்ட லட்சிய இலக்குகள் ஓரளவு மட்டுமே அடையப்பட்டன. சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்பட்டு ஏராளமான திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் போன்ற நபர்கள் வெளிநாட்டு உதவிக்கான நிதி குறைப்பை விமர்சித்துள்ளனர். கண்மூடித்தனமாக பணிநீக்கங்கள் செய்ததன் மூலம் முன்னாள் படைவீரர்களின் சுகாதாரப் பராமரிப்பு, சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய பொதுச் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புத் துறையைக் குறிவைத்து நடந்த கூடுதல் நிதி குறைப்புகளைச் செயல்படுத்த DOGE மேற்கொண்ட முயற்சிகள் எதிர்ப்புகளையும் சட்ட சவால்களையும் சந்தித்துள்ளன. தொடர் எதிர்ப்புகளால் ஏப்ரல் 2025 இறுதியில் எலன் மஸ்க் DOGEலிருந்து விலகத் தொடங்கினார். இத்துறையின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. அதன் பல முயற்சிகள் ஸ்தம்பிதமடைந்து அதன் நீண்டகால தாக்கம் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.
நிர்வாக கொள்கை குற்றச்சாட்டுகளால் ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஒப்புதல் மதிப்பீடுகள் வெகுவாக குறைந்துவிட்டன என்று கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. CNN/SSRS கருத்துக் கணிப்பு ஒப்புதல் மதிப்பீட்டை 41% ஆகக் கண்டறிந்து அவரின் அரசியல் நிலைப்பாடு சரிந்து வருவதைச் சுட்டிக் காட்டியுள்ளது. ஏழு தசாப்தங்களில் இந்தக் கட்டத்தில் எந்தவொரு ஜனாதிபதியும் இத்தனை குறைவான மதிப்பீடைப் பெற்றிருக்கவில்லை.
மக்களைப் பொறுத்தவரை அதிக வரிகளை அமல்படுத்தி பொருளாதார மந்தநிலை குறித்த அச்சங்களுக்கு வழிவகுத்தது, தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்து எல்லை சவால்களைக் குறைத்திருந்தாலும், சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் முயற்சிகள் கவலைகளை எழுப்பியுள்ளன. ஒப்பீட்டளவில் கள்ள குடியேற்றத்தை அவர் கையாளும் பாணியை பெரும்பான்மையானவர்கள் இப்போதும் ஏற்கவில்லை. கல்வி, ஊடகம், கூட்டாட்சி அதிகாரத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைக் குறிவைத்து தனது முதல் 100 நாட்களில் 140க்கும் மேற்பட்ட நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்தது அதிபரின் அதிகாரத்தை மீறுவதாக அரசியல் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
பரவலான விமர்சனங்களும் வரலாற்று ரீதியாக குறைந்த ஒப்புதல் மதிப்பீடுகளும் இருந்தபோதிலும் ட்ரம்ப் தனது பிரச்சார வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும் பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதையும் பாராட்டி, அவரது வாக்காளர்களிடமிருந்து தொடர்ந்து அசைக்க முடியாத ஆதரவைப் பெறுகிறார் என்பதே உண்மை. அவரது முக்கிய ஆதரவாளர்கள் உறுதியாக இருந்தாலும், இரண்டாவது பதவிக்காலத்தில் அவரது ஆரம்பகால செயல்திறன், குறிப்பாக பொருளாதாரம், குடியேற்றக் கொள்கைகள் குறித்து குறிப்பிடத்தக்க அதிருப்தியே காணப்படுகிறது. அவரது தலைமைத்துவ அணுகுமுறை, ஆழமான கட்சி வேறுபாடு, வளர்ந்து வரும் கவலைகள் அவரது நிர்வாகத்திற்கு முன்னால் உள்ள சாத்தியமான சவால்களைப் பரிந்துரைக்கின்றன.
பல தரப்பினரும் அவரது முதல் 100 நாட்களுக்கு “F” மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். இந்த முடிவுகளால் ஜனநாயக கட்சியினர் மகிழ்ச்சியாக இருந்த போதிலும் இன்னும் ட்ரம்ப்பை எதிர்த்து களமிறங்கும் தகுந்த வேட்பாளர்கள் இல்லாத நிலை அங்கு தொடர்வது தான் வேதனை.
யார் மீதும் பழிகளைப் போடாமல், பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால், வாக்குறுதிகளை நிறைவேற்றினால் இடைத்தேர்தலுக்குள் நிலைமை மாறும் வாய்ப்பிருக்கிறதா? ட்ரம்ப் தேறிவிடுவாரா?
நேற்று ஆல்பனி இந்து கோவிலின் சார்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஹல்காமில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் மனைவி, குழந்தைகள், உற்றார், உறவினர் முன் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்பொழுது காஷ்மீரிலிருந்து தப்பிப் பிழைத்த பண்டிட் குடும்பத்திலிருந்து ஒருவர் பேசினார். 1990களில் தான் இளைஞனாக இருந்த பொழுது அங்கு நடந்த கலவரங்கள், இந்துக்கள் மீதான வன்முறைகள், அவர்கள் குடும்பத்தினரை ஒரே இரவில் ஓட வைத்த சம்பவங்கள் என்று கேட்க, மனம் கனத்துப் போயிற்று.
'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தில் காண்பித்த காட்சிகளை விட பல மடங்கு கொடுமைகள் அரங்கேறின என அவர் கூறுவதைக் கேட்டதும் கலங்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால் அவர் தாங்கள் விரட்டியடிக்கப்பட்டோம் என்று வருந்தினாரே ஒழிய, தங்களை விரட்டி விட்ட, நண்பர்களாகப் பழகிய இஸ்லாமிய துரோகிகள் மீது வெறுப்பைக் கக்கவில்லை. பழிக்குப் பழி என்று துப்பாக்கியை எடுத்துக் கொண்டு காஷ்மீர் பண்டிட்கள் யாரும்ஒரு இஸ்லாமியரைக் கூட இதுவரையில் தாக்கவில்லை. தங்கள் நிலங்களையும், உடைமைகளையும், குடும்பத்தினரையும் இழந்து துரத்தப்பட்ட மனிதர்கள்.
இங்கு தான் இருக்கிறது மனிதமும் மதமும். "தீவிரவாதத்திற்கு மதமில்லை" என்று சொல்பவர்கள் அனைவரும் தங்களைத் தானே ஏமாற்றிக் கொள்பவர்கள். அதற்கு மதம் இருக்கிறது. என்று "மதம் பிடித்தவர்களை" வெறுத்து ஒதுக்குகிறார்களோ அப்பொழுது தான் தாங்கள் கூறிக்கொண்டு திரிவது போல அமைதி மார்க்கத்தினராக இருக்க முடியும். இல்லையென்றால் மதம் பிடித்துக் கொண்டு அலைய வேண்டியது தான். கொடுமை என்னவென்றால் காஷ்மீர் படுகொலைகள் நடக்கவே இல்லை. இது இந்துக்களின் பொய்க்கூற்று என்று வாதிடுபவர்கள் தான். என்னே முரண்😡ஒரு இனத்தையே படுகொலை செய்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அதை மக்களிடமிருந்து மறைத்த காங்கிரஸ் களவாணிகளும் கூட்டணிக்கட்சிகளும் வெட்கி தலைகுனிய வேண்டும். மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் "இண்டிகூட்டணி" இந்தியாவின் சாபக்கேடு.
இந்தியாவிற்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிராகப் பேசிவரும் தமிழக ஊடக கொத்தடிமை கூட்டங்கள் இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைத்துக் கொண்டு வருகிறது. அதை இந்த தமிழக அரசும் காவல்துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தான் வேதனை.
காஷ்மீரில் இந்துக்களுக்கு எதிராக நடந்த படுகொலை, வன்முறைகளை மறுத்தவர்கள் நேற்று(ஏப்ரல் 22,2025) பஹல்காம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலா சென்றிருந்த இந்துக்கள் மீதான தீவிரவாத தாக்குதலையும் மறுக்கப் போகிறார்களா? அல்லது மேற்கு வங்கத்தில் முஷராபாத்தில் நடந்து கொண்டிருக்கும் இனவாதத்தைக் கண்டும் காணாமல் போகப்போகிறார்களா? 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் காஷ்மீர் இந்துக்களுக்கு நடந்த அநீதிகளை, வன்முறைகளை வெட்ட வெளிச்சமாக்கியது. நாம் வாழும் காலத்தில் நடந்த இனப்படுகொலை. அப்போதைய காங்கிரஸ் களவாணிகளின் ஆட்சி ஓட்டுப்பிச்சைக்காக மக்களிடமிருந்து அதனை மறைத்திருந்தது. படக்காட்சிகள் ஒவ்வொன்றும் ரத்தத்தை உறையவைக்க, இதெல்லாம் பாஜக-வின் சதி என்று கொக்கரித்த கூட்டம் ஏனோ மேற்கு வங்காளத்தில் இந்துக்களின் வீடுகள், பெண்களைக் குறி வைத்துத் தாக்கியதையும் கண்டு அமைதி காக்கிறது. நேற்று வரை நண்பர்களாக அருகருகே வசித்துப் பழகி வந்தவர்கள் தான் இந்துக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதிகளை அடக்க வேண்டிய மம்தா பானர்ஜியோ அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று நாடகமாடுகிறார். 'இண்டிகூட்டணி' கட்சிகள் 'கப்சிப்'. பாதிக்கப்படுபவர்கள் இந்துக்கள் என்றால் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்துபவர்கள் கூட காணாமல் போய்விடுவார்கள்.
மணிப்பூரில் காங்கிரஸ் வளர்த்து வந்த நச்சுப்பாம்புகளின் ஆட்டத்தை மக்களுக்கு/இந்துக்களுக்கு எதிராகத் திருப்புகிறார்கள். அங்குப் படையெடுத்துச் சென்ற காங்கிரஸும் கூட்டணிக்கட்சியினரும் ஏன் மேற்கு வங்காளத்திற்குச் செல்லவில்லை என்பதில் இருக்கிறது இந்துக்களுக்கு எதிரான இந்த நச்சுப்பாம்புகளின் வேஷம். புரிந்து கொள்ள வேண்டிய இந்துக்களோ நடுநிலைமையில் இருக்கிறேன் என்று தங்களுக்கான சவக்குழியை மட்டுமில்லாமல் எதிர்க்கும் இந்துக்களுக்கும் சேர்த்து வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
காஷ்மீரில் அமைதி திரும்ப அங்குள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுற்றுலாத்துறை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் இப்பொழுது தோல்வியில் முடிவடைந்துள்ளது. காரணம், தீவிரவாதத்திற்கு இன்றும் துணையாக நின்று அப்பாவியாக நடித்துக் கொண்டிருக்கும் சில உள்ளூர்வாசிகள்.
"தீவிரவாதம்" என்பது மதத்தைச் சார்ந்தது அல்ல என்று கபட நாடகம் ஆடும் கூத்தாடி அரசியல்வாதிகள் நேற்று இறந்தவர்கள் அனைவரும் இந்துக்களா என்று சோதித்து மனைவி, குழந்தைகள் கண்முன்னே கொன்று குவித்ததை என்னவென்று சொல்வார்கள்?
"இஸ்லாமிய பயங்கரவாதம்" என்று சொல்வதற்குக் கூட அஞ்சும் தறுதலை அரசியல்வாதிகள் தான் தீவிரவாதத்தை வளர்க்கிறார்கள். "போய் மோடியிடம் சொல்" என்று இந்திய ராணுவ உடை அணிந்த தீவிரவாதிகள் சொல்லுமளவிற்கு அவர்களுக்கு உதவுபவர்களும் இந்தக் கொடிய படுகொலைகளை எதிர்த்துப் பேசாத இந்திய இஸ்லாமியர்களும் இந்துக்களுக்கு அச்சுறுத்தலே.
வாழ வழியில்லாமல் பஞ்சத்தில் உழன்றாலும் பங்களாதேஷும் பாகிஸ்தானும், உள்நாட்டுத் தீவிரவாதிகளும் இந்துக்களுக்கு, இந்தியாவிற்கு எதிராகவே இருக்கின்றனர். கோயம்புத்தூரில் நடந்த குண்டு வெடித்தாக்குதலை குக்கர் வெடித்தாகக் கூறி தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அரசும் இந்துக்களுக்கு எதிரானதே.
என்று இந்துக்கள் நாம் இதைப் புரிந்து கொள்ளப்போகிறோம். ஓசி பிரியாணி இன்று கிடைக்கும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள். நாளை நீ வசிக்கும் இடத்திலிருந்து உன் வீட்டுப் பெண்கள் வரை இல்லாது போகும் பொழுது தான் உறைக்குமா இந்துக்களே? கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருபவர்கள் யார் என்று பாருங்கள். புரியும். நடப்பது அநீதி என்று தெரிந்தும் அமைதி காக்கும் இந்திய இஸ்லாமியர்களும் ஆபத்தானவர்களே! என்று இவர்கள் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்கப் போகிறார்கள்? அமைதியாக இருப்பதும் தீவிரவாதத்திற்கு ஆதரவு கொடுப்பது என்று தெரியாத அவர்களுக்கு?
ஈவு, இரக்கமின்றி இந்துக்களுக்கு எதிரான தீவிரவாதத்தை மேற்கொள்பவர்கள் மீது அரசும், நீதிமன்றங்களும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு தீவிரவாத அண்டை நாடுகளுடன் இந்திய அரசு இஸ்ரேல் போல செயல்படவேண்டும்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டிய நேரத்தில் அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாம்புகளுக்குப் பால் வார்க்கும் அரசியல் கட்சிகளை இந்துக்கள் புறந்தள்ள வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளைப் போல, நாட்டின் மீது நடத்தும் பயங்கரவாதத்தை மக்களும் அரசும் கட்சிகளும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.
இந்த ஒரு காட்சி உண்மையான இந்துக்களின் மனதில் தீயாய் கனன்று கொண்டிருக்கிறது.
நேற்று காஷ்மீரில் கொல்லப்பட்டவர்களில் விடுமுறையில் சென்ற ராணுவத்தைச் சேர்ந்தவர்களும் இருந்திருக்கின்றனர். மேற்குவங்காளத்திலும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஆத்மாக்கள் சாந்தி பெறட்டும். அவர்களின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். பாதிப்பிலிருந்து அவர்கள் வெளிவர ஆண்டவன் அருளட்டும்.
இருநாடுகளுக்கிடையே வர்த்தகம் என்பது மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு காலம்காலமாக நடைபெற்று வரும் செயலாகும். இருப்பினும், வர்த்தக கூட்டாளர்களிடையே எப்போதும் இணக்கமான முறையில் வர்த்தகங்கள் நடத்தப்படுவதில்லை. கொள்கைகள், புவிசார் அரசியல், போட்டி மற்றும் பல காரணிகள் வர்த்தக கூட்டாளர்களை மகிழ்ச்சியற்றவர்களாக மாற்றக்கூடும். அப்படியொரு சூழலைத் தான் இன்று தன்னுடைய அதிரடி நடவடிக்கையால் பேசுபொருளாக்கியிருக்கிறார் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்.
அரசாங்கங்கள் தங்களுடன் உடன்படாத வர்த்தக கூட்டாளர்களைக் கையாளும் வழிகளில் ஒன்று தான் ‘சுங்கவரி’. ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என்று 2020ல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மீதான வரியை ஏற்றினார் அப்போதைய அதிபர் ட்ரம்ப். அதை அன்றைய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எதிர்த்தாலும் ஆட்சிக்கு வந்த பைடன் அரசும் அதையே தொடர்ந்தது தான் முரண்! தற்பொழுது அதே பாணியில் கனடா, மெக்சிகோ நாடுகளும் ட்ரம்ப்பின் இறக்குமதி வரி அதிரடியை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி தான் ‘இறக்குமதி வரி’/ ‘டாரிஃப்’/’சுங்கவரி’ எனப்படுவது. அதே போல, ஒரு நாடு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மீதான ஏற்றுமதி வரிகளும் உள்ளன. இருப்பினும் இவை அரிதானவை. அமெரிக்கா ஏற்றுமதி வரிகளை அனுமதிப்பதில்லை; அரசியலமைப்பு (பிரிவு I, பிரிவு 9) அவற்றைத் தடை செய்கிறது.
வரிகள் பொதுவாக ஒரு நாட்டின் வருவாயை அதிகரிக்கவும், உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கவும், மற்றொரு நாட்டின் மீது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தவும் விதிக்கப்படுகின்றன. வர்த்தக கூட்டாளியின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகள், பொருளாதாரத் தாக்குதலைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படலாம் என்பதால், வெளியுறவுக் கொள்கையின் நீட்டிப்பாகவும் சுங்க வரிகள் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தபோது, உலகின் பெரும்பகுதி ரஷ்யப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலமாகவும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலமாகவும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஜூன் 2022ல் ரஷ்ய இறக்குமதிகள் மீதான வரியை 35% ஆக உயர்த்தினார் அதிபர் பைடன். வரிகளைப் பயன்படுத்தி ஒரு போட்டி நாட்டை அழுத்தம் கொடுக்கும் முயற்சி, ‘வர்த்தகப் போர்’ என்று அழைக்கப்படும் பழிவாங்கும் யுத்தி. பல நூற்றாண்டுகளாக ஏதேனும் ஒரு வடிவத்தில் வரிகள் இருந்து கொண்டுதான் வருகின்றன.
அதன் அடிப்படையில் தான் அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டுப் பொருட்கள் மீது புதிய வரிகளை விதிப்பதே நாட்டைப் பாதிக்கும் விஷயங்களுக்கு ஒரு முழுமையான தீர்வாக இருக்கும் என்று ட்ரம்ப் கருதி அதைச் செயல்படுத்தியுள்ளார். “வரிகள் உலக அமைதியை ஊக்குவிக்கும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப்பெரிய விஷயம் இது தான்” என்று தேர்தல் களத்திலும் கூறியிருந்தார். பிரச்சாரத்தின் போது, ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர், போதைப்பொருள் சந்தை , குறிப்பாக ‘ஃபெண்டானில்’ ஆகியவற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகள் மீது வரிகளை விதிப்பதாக அவர் உறுதியளித்திருந்தார்.
மேலும், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், அமெரிக்க எல்லைக்குள் தொழிற்சாலைகளை நிறுவ வெளிநாட்டு வணிகங்களை ஊக்குவிப்பதற்கும் ஒரு வழிமுறையாக வரிகளைப் பயன்படுத்துவதை ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து வரும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவீத வரிகளையும், கனேடிய எண்ணெய் மீது 10 சதவீத வரியையும், சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியையும் விதிக்கும் மூன்று நிர்வாக உத்தரவுகளில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதற்குப் பதிலடியாக கனடா, மெக்சிகோ, சீனாவும் எதிர் வரிகளுடன் எதிர்வினையாற்றுவதாகக் கூறின. இதனால் அந்நாடுகளிலிருந்து அமெரிக்கா அதிகம் இறக்குமதி செய்யும் கார்கள், எரிபொருள், கணினிகள், மின் சாதனங்கள், உணவுப்பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
கனடாவின் பிரதம மந்திரி ட்ரூடோ, அமெரிக்க இறக்குமதிகள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூறி தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் கூறியிருக்கிறார். பெய்ஜிங் சமீபத்திய வரியை விமர்சித்தது. பிப்ரவரி 10 முதல் இறக்குமதி செய்யும் அமெரிக்கப் பொருட்களின் மீது சீனா எதிர் வரிகளை விதித்துள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளதும் வர்த்தகப் போருக்கு இட்டுச்செல்லுமோ? பணவீக்க அழுத்தங்களுக்கு வழிவகுக்குமோ என்ற விவாதமும் எழுந்துள்ளது.
அமெரிக்க இறக்குமதிகளில் கிட்டத்தட்ட $1.3டிரில்லியனுக்கும் அதிகமானவை, கனடா, சீனா மற்றும் மெக்சிகோவிலிருந்து வருகின்றன. ப்ளூம்பெர்க் பொருளாதார பகுப்பாய்வின்படி, புதிய வரிகள் ஒட்டுமொத்த அமெரிக்க இறக்குமதியை 15 சதவீதம் குறைக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
வாஷிங்டன், டி.சி.யை தளமாகக் கொண்ட ‘வரி அறக்கட்டளை’ ஒன்று, இறக்குமதி வரிகளால் அரசிற்கு ஆண்டுக்கு சுமார் $100 பில்லியன் கிடைக்கும் என்று மதிப்பிட்டாலும், விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைக்கும் அபாயமும், வணிகங்களுக்கான செலவுகள் அதிகரித்துப் பலரும் பணிகளை இழக்கவும், நுகர்வோர் அதிக விலைகளைக் கொடுக்கும் நிலைமையும் உருவாகும். இது அரசின் மீது குறிப்பிடத்தக்கச் செலவுகளையும் சுமத்தக்கூடும் என்று கணித்திருக்கிறது.
இப்புதிய வரிச்சுமைகளால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் சில துறைகளான ஆட்டோமோட்டிவ், எரிசக்தி, உணவுத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும். கனடாவும் மெக்சிகோவும் 70 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெயை அமெரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்குவதால், எரிவாயு விலைகள் ஒரு கேலனுக்கு 50 சென்ட் வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளிலிருந்தும் ஆட்டோ பாகங்களை இறக்குமதி செய்வதால், கார்கள் மற்றும் பிற வாகன உற்பத்திகளும் பாதிக்கப்படும். கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்டால், அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களின் உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும். இதனால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் விற்கப்படும் சுமார் பதினாறு மில்லியன் கார்களில் சிலவற்றின் விலையில் $3,000 வரை அதிகரிக்கலாம்.
அமெரிக்க காய்கறி இறக்குமதியில் 60 சதவீதத்திற்கும் மேலாகவும், அனைத்துப் பழங்கள் மற்றும் கொட்டைகள் இறக்குமதியில் கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கு மேலாகவும் மெக்சிகோவிலிருந்து வருவதால் மளிகைப் பொருட்களின் விலையும் உயரக்கூடும்.
இருப்பினும், ஜெர்மனி, ஜப்பான், யுனைடெட் கிங்டம் உள்ளிட்ட பல தொழில் மயமான பொருளாதாரங்களை விட அமெரிக்கா வெளிநாட்டு வர்த்தகத்தை குறைவாகவே நம்பியுள்ளது. நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கால் பங்கு மட்டுமே உள்ளது. ஆனால் கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வர்த்தகம் சுமார் 70 சதவீதத்தை ஈர்ப்பதால், ட்ரம்ப்பின் சமீபத்திய இறக்குமதி வரிகள் இருநாடுகளையும் மிகவும் கடுமையாகவே பாதிக்கும்.
கார்கள், இயந்திரங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உட்பட மெக்சிகோவின் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை வடக்கு நோக்கிச் செல்கின்றன. மெக்சிகோவின் வடக்கு எல்லையில் உள்ள தொழில்துறை மாநிலங்களான சிவாவா, கோஹுயிலா, நியூவோ லியோன் மற்றும் பஜா கலிஃபோர்னியா ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் $200 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கணினிகள், மின்னணுவியல், போக்குவரத்து உபகரணங்கள் மற்றும் பிற தயாரிப்புகளை அனுப்புகின்றன.
இந்தப் பொருட்களுக்கு ஒருதலைபட்சமாக 25 சதவீத வரி விதிப்பது மெக்சிகோவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை சுமார் 16 சதவீதம் குறைக்கக்கூடும் என்று ‘ப்ளூம்பெர்க்’ பொருளாதாரம் தெரிவித்துள்ளது. மெக்சிகோ தான் உற்பத்தி செய்யும் கார்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை அமெரிக்காவிற்கு மட்டுமே அனுப்புகிறது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.5 மில்லியன் வாகனங்களை ஏற்றுமதி செய்வதால் மெக்சிகோவின் ஆட்டோமொபைல் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.
இறக்குமதி வரிகள் மெக்சிகோவின் எரிசக்தித் துறையையும் அச்சுறுத்துகிறது. மெக்சிகோவின் பெட்ரோலிய ஏற்றுமதியில் சுமார் 60 சதவீதத்தை அமெரிக்கா பெறுகிறது. இதில் பெரும்பாலானவை அமெரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும் கச்சா எண்ணெய் ஆகும். அதே நேரத்தில், அமெரிக்க சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதியில் மெக்சிகோ முதலிடத்தில் இருக்கிறது. அதன் உள்நாட்டுத் தேவையில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இதனை நம்பி உள்ளதால் எரிபொருள் விலை ஏறி மெக்சிகோவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
கனடாவும் இதேபோன்ற சவாலை எதிர்கொள்கிறது. கனடாவின் ஏற்றுமதியில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்களை அமெரிக்கா வாங்குகிறது. புதிய கட்டணங்களின் கீழ், கனடாவின் எரிசக்தித் துறை மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும்.
இதன் காரணமாகவே ‘அங்கிள்சாமி’ன் கை மேலோங்கியுள்ளது.
இந்த இருநாடுகளை ஒப்பிடுகையில் சீனா அமெரிக்காவைச் சார்ந்திருப்பது குறைவாக உள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக, பெய்ஜிங் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்துள்ளதால், அதன் பொருளாதாரத்தில் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை படிப்படியாகக் குறைத்துள்ளது. முந்தைய வரிகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்க-சீன வர்த்தகம் குறைந்துள்ளது.
அடுத்து என்ன நடக்கலாம்?
ஒவ்வொரு நாட்டின் நாணய மதிப்பும் மேலும் பலவீனமடையக்கூடும். அமெரிக்க ஏற்றுமதிகளின் விலை உயரும். பலவீனமான ‘யுவான்’ ஏற்கனவே சீன உற்பத்தியாளர்களுக்கு பலமான அடியைத் தந்துள்ளது. பெசோவும் கனேடிய டாலரின் மதிப்பும் சரிவைச் சந்திக்கும்.
கூடுதலாக, கனடா, சீனா, மெக்சிகோ மூன்றும் அமெரிக்கா மீது சமமான வரிகளை விதிக்கலாம். மெக்சிகன் அதிபர் ‘கிளாடியா ஷீன்பாம்’ மெக்சிகோவும் அமெரிக்காவிற்கு இறக்குமதி வரிகளை விதிக்கும் என்று கூறியுள்ளார்.
நாடுகள் பதிலடி கொடுப்பது இது முதல் முறை அல்ல. 2018ஆம் ஆண்டில், எஃகு மற்றும் அலுமினியத்தின் மீது ட்ரம்ப் வரிகளை விதித்த பிறகு மெக்சிகோவும் கனடாவும் $15 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு வரிகளை விதித்து எதிர்ப்பு காட்டியது. அதேபோல், 2018 முதல் 2019 வரை சீனா, அமெரிக்காவின் வரிகளை கடுமையாக எதிர்த்தபோது அமெரிக்கா ஆண்டுக்கு $20 பில்லியன் விவசாய ஏற்றுமதியை இழந்தது.
கனடா அல்லது மெக்சிகோ தற்பொழுது பதிலடி கொடுத்தால், அதிகம் பாதிக்கப்படப் போவது அமெரிக்க எரிபொருள் ஏற்றுமதியாளர்கள், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் மருந்து உற்பத்தியாளர்கள். மெக்சிகோவில் தயாராகும் மின்சாதனங்கள், வண்டிகளில் பயன்படுத்தப்படும் பில்லியன் டாலர் மதிப்புள்ள செமிகண்டக்டர் சில்லுகள், மின் கூறுகள் நியூ மெக்சிகோவிலிருந்து மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதே போல், டெக்சாஸ் மாநிலம் மெக்சிகோவிற்கு 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான சில்லுகள், ஆட்டோ பாகங்கள் மற்றும் மின் உபகரணங்களை அனுப்புகிறது. ஓஹையோவின் $5 பில்லியன் மதிப்புள்ள ஆட்டோ மற்றும் உலோக ஏற்றுமதியும், ‘மெயின்’ மாநிலத்தின் $320 மில்லியன் மரங்கள் மற்றும் காகித ஏற்றுமதியும் பாதிக்கப்படும்.
தற்பொழுது எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க இரு நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து, மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரியை அமல்படுத்துவதை அமெரிக்கா 30 நாட்களுக்கு ஒத்தி வைத்திருக்கிறது. இதற்கிடையில், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10 சதவீத வரி பிப்ரவரி 4 முதல் அமலுக்கு வந்துள்ளது. அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், பொம்மைகள், ஆடைகள், வீட்டு உபகரணங்கள், செல்போன்கள் மற்றும் கணினிகள் போன்றவற்றின் விலை உயர்வை அமெரிக்க நுகர்வோர் எதிர்கொள்ள வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது, தனது ‘கட்டணத் திட்டம்’ பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதை ட்ரம்ப் மீண்டும் மீண்டும் மறுத்தார். அமெரிக்க நுகர்வோர் அதிக விலைகளைக் கொடுத்துப் பொருட்களை வாங்க முடியுமா என்று 2024 செப்டம்பரில் ஏபிசி நியூஸ் அவரிடம் கேட்டபோது, “பல ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி வரும் சீனாவும் அனைத்து நாடுகளும் தான் வரிச்சுமையை ஏற்றுக் கொள்ளும்” என்று பதிலளித்தது அனைவரும் அறிந்ததே.
ஆனால், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதாரப் பேராசிரியரும் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் ரொனால்ட் ரீகனின் பொருளாதார ஆலோசகருமான ஸ்டீவ் ஹான்கி, முழு வரி/கட்டணச் செலவையும் வணிக நிறுவனங்களும் நுகர்வோரும் தான் ஏற்றுக்கொள்கிறார்கள். வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் அல்ல. “கட்டணங்கள்/வரிகள் என்பது அமெரிக்கர்கள் மீது சுமத்தப்படும் ஒரு மறைமுக வரி” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இறக்குமதி வரி வட அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிப்பது மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வளர்ச்சி, பணவீக்கம், முதலீட்டாளர் மற்றும் வணிக நம்பிக்கையை அச்சுறுத்துகின்றன” என்று ‘பீல் ஹன்ட்’ பொருளாதார வல்லுநர்கள் ஒரு ஆராய்ச்சிக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதியைக் கட்டுப்படுத்தவே சுங்க வரிகள் பயன்படுத்தப்படுகின்றன என்று கூறப்பட்டாலும் பாதிக்கப்படுவது நுகர்வோர் தான் என்பது கண்கூடு. இதற்கு முன்பு 18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் தொழில்கள் மற்றும் பொருளாதாரங்களைப் பாதுகாக்க இத்தகைய வரிகள் பயன்படுத்தப்பட்டன. தற்போதைய கட்டணப் போரால் தூண்டப்படும் பணவீக்க அழுத்தத்திலிருந்து முழுமையாகத் தப்ப முடியாது என்பது தான் இன்றைய யதார்த்தமான நிலைமை.
கோட்பாட்டளவில், வரிகளை விதிப்பது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும். இதேபோல், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமெரிக்காவிற்கு கொண்டு வர ஊக்குவிக்கப்பட்டால், அது வேலைவாய்ப்பை அதிகரிக்கும். உதாரணமாக, சலவை இயந்திரங்கள் மீது 20-50 சதவீத வரிகளை விதித்த பிறகு, முன்னர் உபகரணங்கள் உற்பத்தி செய்யப்படாத ‘டென்னசி’யில் உள்ள ‘கிளார்க்ஸ்வில்’ மற்றும் ‘சவுத் கரோலினா’வில் உள்ள ‘நியூபெர்ரி’ பகுதிகளுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கொண்டு வரப்பட்டன. சமீபத்திய சுங்க வரி கொள்கையும் அமெரிக்காவில் அதிக தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்களை அமைக்க ஊக்குவிக்கும் என்று அமெரிக்க நிர்வாகம் நம்புகிறது.
தற்போதைய கேள்வி வரிகள் உள்ளதா இல்லையா என்பது அல்ல. ஆனால் இந்த வரிகளால் யார் பயனடைகிறார்கள் என்பதுதான். ட்ரம்ப் போட்டியிட்டபோது, அவர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் ஜனநாயகக் கட்சியினர் அவர்களைக் கைவிட்டுவிட்டதாகவும் கூறினார். ஜனநாயகக் கட்சியினர் ஒரு தலைமுறை அல்லது இரண்டு தலைமுறைகளாக அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என்று சொல்வது நியாயமான வாதம் (வருமான விநியோகம் மற்றும் ஊதியம் போன்ற அடிப்படை நடவடிக்கைகளின் அடிப்படையில்) என்று மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள அரசியல் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் பொருளாதாரப் பேராசிரியரும் இணை இயக்குநருமான ராபர்ட் போலின் கூறியுள்ளார்.
மேலும் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு கொள்கைகள் தொழிலாளர்களை ஆதரிக்கும் வழியாகுமா என்றால் அப்படி இல்லை என்றும் கூறுகிறார். “ட்ரம்ப்பின் அணுகுமுறை முதலாளித்துவ சார்புடையது. வரிகளை அமல்படுத்துவதின் நோக்கம், தொழிலாள வர்க்கத்தை ஆதரிப்பதற்காக அல்ல. அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவைப் பாதுகாப்பதற்காகத் தான். வர்த்தகம், குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு அமெரிக்க முதலாளிகள் வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து சவால்களை எதிர்கொள்ளாத சூழலை நிறுவுதல் ஆகியவற்றின் கட்டமைப்பிற்குள் இது முதலாளித்துவ சார்புடையதாகிறது” என்று ராபர்ட் போலின் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
இது எவ்விதத்தில் அமெரிக்க தொழிலாளர்களுக்கு அனுகூலமாக இருக்கும்?
“அதிக வருமானம் உள்ளவர்கள், நிறுவனங்களின் மீதான வரிகளைக் குறைப்பது,விதிமுறைகளை நீக்குவது தான் ட்ரம்ப் அரசின் முக்கிய கொள்கையாகும். “நாங்கள் கட்டணத் தடைகளை அமைத்து அமெரிக்கச் சந்தைக்கான அணுகலைக் கட்டுப்படுத்தப் போகிறோம். இதனால் அமெரிக்கத் தொழிலாளர்களின் நிலை உயரும்” என்று கூறி, மறுபுறம், “நாங்கள் தொழிற்சங்கத்திற்கு எதிராக இருக்கிறோம். அதிக வருமானம் உள்ளவர்கள் மீதான வரிகளைக் குறைத்து, உழைக்கும் மக்களை ஆதரிக்கும் மற்றும் வருமானத்தை மறுபகிர்வு செய்யும் அரசாங்கத் திட்டங்களைக் குறைக்கப் போகிறோம்” என்று கூறி தொழிலாளர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது இந்த அரசு.
ஆக,கட்டணங்கள்/வரிகள் என்பது மிகவும் பரந்த தொகுப்பிற்குள் உள்ள ஒரு கொள்கை கருவியாக மட்டுமே புரிந்து கொள்ளப்பட வேண்டும். நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்குள் கூட, கட்டணங்கள் மட்டுமே ஒருவர் பயன்படுத்தக்கூடிய கொள்கை கருவி அல்ல. உதாரணமாக, பைடன் நிர்வாகம் அமெரிக்க உற்பத்தி, பசுமை முதலீடுகள் மற்றும் பசுமை தொழில்களை ஊக்குவிக்க பயனுள்ள சில தொழில்துறை கொள்கைகளை இயற்றியது. அவை கட்டணங்கள் அல்ல. ஆனால் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கான மானியங்கள். ‘பணவீக்கக் குறைப்புச் சட்டம்’ பைடன் நிர்வாகம் ஆரம்பத்தில் முன்மொழிந்த ‘பில்ட் பேக் பெட்டர்’ திட்டத்தின் வேறு பதிப்பாகும். அதன் ஒரு பகுதியாக நிறுவனங்கள் மானியங்களைப் பெற விரும்பினால் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்கவும், பயிற்சித் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும் பயிற்சி அளிக்கவும் நிர்பந்திக்கப்பட்டது. அமெரிக்காவிற்கும் பிற வர்த்தக கூட்டாளிகளுக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மற்றொரு வழி இது. இதுவரையில் ட்ரம்ப் அரசு அதற்கான முன்னெடுப்பைத் தொடங்கவில்லை. தொடங்குமா? இந்த அரசு தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!
பில் கிளிண்டனின் அரசில் தொழிலாளர் செயலாளராக இருந்த காலத்தில் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (NAFTA) ஆதரித்த ராபர்ட் ரெய்ச், “ட்ரம்ப் தனது அதிகாரத்தையும் கணிக்க முடியாத தன்மையையும் நிரூபிக்க இறக்குமதி வரிகளைப் பயன்படுத்துகிறார். அமெரிக்கத் தொழிலாளர்களுக்காக இதைச் செய்வதாகக் கூறுவதில் உண்மையில்லை. அவர் தனக்காகவும், உலகின் செல்வத்தைச் சூறையாடும் தன்னலக்குழுவுக்காகவும் மட்டுமே செய்கிறார்” என்று கூறியுள்ளார்.
பணமும் அதிகாரமும் கட்டண வரிகளும் தொழிலாளர் நலனை கருத்தில் கொள்ளுமா?
நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தாலும் பழைய நினைவுகளைக் கிளறும் படங்களைப் பார்த்தால் மீண்டும் பால்ய காலத்திற்கே கொண்டு செல்லும் வலிமை படங்களுக்கு உண்டு. அப்படித்தான் திரு.மனோகர் தேவதாஸ்-ன் 'Mulitple Facets of Madurai' புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும் என்னை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
அவர் கோரிப்பாளையம் என்ற பகுதியில் சிறிது காலம் வசித்திருக்கிறார். மேம்பாலம் ஏறுவதற்கு முன்பே மசூதி ஒன்று இருக்கும். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி அது. அங்குள்ள இறைச்சி சந்தை கழிவுகளை ஆற்றில் கொட்டி தண்ணீர் வராத வைகையை மாசுபடுத்தி வருகிறார்கள் பொறுப்பற்ற மக்களும் கண்டுகொள்ளாத மாநகராட்சியும். அப்பகுதியில் நடமாட முடியாதபடி நாஸ்தி பண்ணி வைத்திருக்கிறார்கள். யாருக்கும் எதைப்பற்றியும் அக்கறையில்லை. கவலையுமில்லை. வருங்கால சந்ததிகளுக்கு நாம் செய்யும் துரோகம் என்ற நினைவு அறவே இல்லை. சுரணை கெட்டுத்தான் போயிருக்கிறோம்.
அவருடைய குறிப்புகளில் இருந்து அப்பகுதி இப்பொழுது நிறையவே மாறிவிட்டிருக்கிறது என்பது மட்டும் நன்கு தெரிகிறது. மேம்பாலம் (ஆல்பர்ட் விக்டர் ஓவர் பிரிட்ஜ் ) பாரம் தாங்காது என்று கீழ்பாலத்தை அதிகமாக பயன்படுத்தவேண்டிய நிலை தற்பொழுது. போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வைகையின் இருகரைகளையும் இணைக்கும் பாலங்கள் வரிசையாகக் காட்சி தருகிறது. ஆனாலும் மதுரையிலிருந்து கோரிப்பாளையம், செல்லூர் செல்பவர்கள் கீழ்பாலம் வழியாகத் தான் செல்ல வேண்டும்.
புழுதி பறக்க வாகனங்கள் செல்லூர் செல்ல கண்மாயை கடந்து செல்ல வேண்டும். பாவம் அதன் எதிர்புறத்தில் வாழும் மக்கள். கடந்து செல்லும் பொழுதே மூக்கை மூடிக்கொண்டு தான் செல்ல வேண்டியிருக்கிறது. சாக்கடையாக்கி வைத்திருக்கிறார்கள். கண்மாய் முழுவதும் குப்பைகளைக் கொட்டி நீரின் நிறம் மாறி பார்க்கவே படுபயங்கரமாக இருக்கிறது. மழைக்காலங்களில் கேட்கவே வேண்டாம். சாக்கடை தண்ணீர் சாலையெங்கும் ஓடி வாகனங்களின் சக்கரங்களில் சுற்றி ஊரெங்கும்...ச்சை! தீராத கொசுத்தொல்லை வேறு. ப்ளீச்சிங் பவுடர் "விலை என்ன தெரியும்ல" என்று மைதா/கோதுமை மாவைத் தூவி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அறிவுக்கழகம். மதுரையின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் கூட அக்கறை கிடையாது. கைநீட்டி காசு வாங்கி ஓட்டுப்போடும் கும்பல் இதைப்பற்றிக் கேட்கவே கூடாது. முடியாது. பெருமைக்கு நாம் வேண்டுமென்றால் 'தூங்கா நகரம்', 'உணவு நகரம்' என்று பீற்றிக் கொள்ளலாம். அதனுடன் இப்பொழுது 'துர்நாற்ற நகரம்', 'குப்பை நகரம்' என்ற அடைமொழிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
நல்லவேளை, இந்த மனிதர் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்க்கவில்லை. அவருடைய நினைவுகளில் இருந்து 2004ல் வரைந்த பாடத்தைப் பார்த்தால் ஏக்கமாக இருக்கிறது!
ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ‘சிரியா’வை ஒரு குடும்பம் மட்டுமே ஆண்டு வந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்குள் ஆட்சி ஆட்டம் கண்டு தப்பியோடும் நிலைக்கு ஆளானார் அதிபர் ‘பஷார் அல் அசாத்’. டிசம்பர் 8, 2024 அன்று சிரியாவை அசாத்தின் ஆட்சியில் இருந்து விடுவித்ததாக எதிர்க்கட்சிப் படைகள் அறிவித்த நேரத்தில் முன்னாள் அதிபர் டமாஸ்கஸிலிருந்து தப்பி ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
அசாத்தின் குடும்ப அதிகார ஆட்சியின் அதிர்ச்சியூட்டும் சரிவு ஒரு வரலாற்றுத் தருணம் என்றே கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக சிரியர்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசோ, அவர்களை வன்முறையால் அடக்க முயற்சிக்க, உள்நாட்டுப் போர் வெடித்தது. கடைசி நாட்கள் வரை நாட்டின் கணிசமான பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் அரசு வைத்திருந்தும், இத்தனை விரைவில் எப்படி ஆட்சி கவிழ்ந்தது? யார் இதைச் செய்தார்கள்? எப்படி சாத்தியமாயிற்று என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி!
‘வன்முறை தடுப்பு நடவடிக்கை’ என்று பெயரிடப்பட்டு இந்தத் தாக்குதலை நடத்தியது ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ (HTS) தலைமையிலான ஆயுதமேந்திய பல சிரிய எதிர்ப்புக் குழுக்கள். HTS, சிரிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள சன்னி இஸ்லாமிய ராணுவ அமைப்பாகும். இதற்கு துருக்கிய படைகளின் ஆதரவும் உண்டு.
யார் இவர்கள் என்று பார்ப்பதற்கு முன்னால் சிரியாவைப் பற்றின சிறிய அறிமுகம்.
‘சிரிய அரபு குடியரசு’ ஆசியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு. லெபனான், ஈராக், இஸ்ரேல், துருக்கி, ஜோர்டன் என ஐந்து நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மேற்குப் பகுதியில் மத்தியதரைக்கடலும் எல்லையாக உள்ளது. எல்லை நாடுகளிலும் கலவரங்களும் போர்களும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வீழ்ச்சி அப்பகுதியின் ஸ்திரமற்ற தன்மையை மேலும் அதிகரித்துள்ளது. அது மட்டுமில்லாமல் பல்வேறு போராட்டக்குழுக்களால் சிரியாவும் துண்டாடப்பட்டுள்ளதைத் தான் உலகம் கண்கொத்திப்பாம்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. சிரியாவின் வரலாறு முழுவதும் போர்களும் போராட்டங்களும் நிறைந்ததாகவே இருக்கிறது.
1918ல் பிரிட்டிஷ் ராணுவ உதவியுடன் 400 வருட ‘ஆட்டமன்’ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற சிரியா, பின், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளிடம் சிக்கியது. 1947ல் ‘மைக்கேல் அஃப்லாக்’, ‘சலா-அல்-தின் அல்-பிதார்’ ஆகியோர் ‘அரபு சோசலிச பாத்’ கட்சியைத் தொடங்கினர். பல வருடப் போராட்டங்களுக்குப் பிறகு சிரியாவும் எகிப்தும் இணைந்து ‘ஐக்கிய அரபு குடியரசு’ ஆனது. எகிப்து அதிபர் ‘கமல் அப்தெல் நாசர்’ புதிய அரசுக்குத் தலைமை ஏற்றார். உடனே, சிரியாவில் இருந்த அரசியல் கட்சிகளைக் கலைக்க உத்தரவிட்டார். இதில் ‘ஐக்கிய அரபு குடியரசு’ அமைய காரணமாக இருந்த ‘பாத்’ கட்சியும் கலைக்கப்பட்டது. எகிப்திய மேலாதிக்கத்தின் மீதான அதிருப்தியால் 1961ல் சிரிய ராணுவ அதிகாரிகள் குழு டமாஸ்கஸில் அதிகாரத்தைக் கைப்பற்றி ஐக்கிய அரபு குடியரசிலிருந்து வெளியேறியது சிரியா.
1963ல் ‘பாத்’ கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1966ல் பாத் கட்சியை எதிர்த்து ‘சலாஹ் ஜாடிட்’ ஆட்சி பொறுப்பேற்க, ‘ஹபீஸ் அல் அசாத்’ பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றார். இவர் ‘அலவிஸ்’ இனக்குழுவைச் சார்ந்தவர். 1967ல் எகிப்து, ஜோர்டன் மற்றும் சிரியாவுடனான ஆறு நாள் போரில் இஸ்ரேலியப் படைகள் சிரியாவிடமிருந்து ‘கோலன் ஹயிட்ஸ்’ஐ கைப்பற்றி, சிரியாவின் விமானப்படையின் பெரும்பகுதியை அழித்தது.
1970ல் ராணுவ அமைச்சர் ‘ஹபீஸ் அல் அசாத்’, அதிபர் ‘சலாஹ் ஜாடிட்’டை சிறையில் அடைத்தார். அதுமட்டுமில்லாமல், 1973ல், தனக்குச் சாதகமாக, அதிபராகப் பொறுப்பேற்பவர் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைத்தார். அதன் மூலம் முஸ்லீம் அல்லாதவரும் அதிபராகலாம் என்று சட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இதனால் ‘ஷியா’ பிரிவினர் அதிகம் வசிக்கும் சிரியாவில் கலவரம் வெடித்தது. அதை ராணுவத்தைக் கொண்டு அடக்கினார் அசாத். பின், சிரியாவும் எகிப்தும் இஸ்ரேலுடன் போரிட்டாலும் இஸ்ரேல் கைப்பற்றிய ‘கோலன் ஹயிட்ஸ்’ஐ மீட்க முடியாமல் தோற்றுப் போயின. அதற்குப் பிறகு, அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட அரபு நிலங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேறினால் அதனுடன் சமாதான உடன்படிக்கை செய்யத் தயாராக இருப்பதாக அசாத் கூறினார். இஸ்ரேல் இணங்கவில்லை.
1980ல் ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, ‘அலெப்போ’, ‘ஹோம்ஸ்’, ‘ஹமா’வில் ‘முஸ்லிம் சகோதரத்துவ குழுக்கள்'(ஷியா பிரிவினர்) போராட்டங்களில் ஈடுபட்டன. ஈரான்-ஈராக் போர் ஆரம்பமாக, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ‘பாத்திஸ்ட்’ தலைமைகளுக்கு இடையிலான பாரம்பரிய போட்டிக்கு ஏற்ப, சிரியா ஈரானை ஆதரித்தது. 1981ல் ‘கோலன் ஹயிட்ஸ்’ஐ இஸ்ரேல் முறையாக இணைத்துக் கொண்டது.
1982ல் ஹமா நகரில் ‘முஸ்லிம் சகோதரத்துவ எழுச்சி இயக்கம்’ சிரிய ராணுவத்தால் ஒடுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதே வருடம் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்து சிரிய ராணுவத்தைத் தாக்கி அங்கிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது. 1983ல் லெபனானும் இஸ்ரேலும் போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்து சிரிய படைகள் லெபனானில் தங்க அனுமதித்துள்ளது.
1984ல் அசாத்தின் சகோதரர் ‘ரிஃபாத்’ துணை அதிபராக பதவி உயர்வு பெற்றார். 1990ல் ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தது. ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் சிரியா இணைந்தது. 1991ல் மத்திய கிழக்கு அமைதி மாநாட்டில் பங்கேற்ற சிரியா, ‘கோலன் ஹைட்ஸ்’ பிரச்சினை தொடர்பாக இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 1994ல் அதிபர் அசாத்தின் மகன் பசில், அவரது தந்தைக்குப் பின் ஆட்சிக்கு வரவேண்டியவர் கார் விபத்தில் இறந்து போகிறார். 1998ல் அசாத்தின் சகோதரர் ‘ரிஃபாத்’ துணை அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
2000ம் வருடம் அதிபர் அசாத்தின் மறைவிற்குப் பிறகு அவரது இரண்டாவது மகன் ‘பஷார்’ பதவியேற்றார். புதிய அதிபர் 600 அரசியல் கைதிகளை விடுதலை செய்து எதிர்கட்சித் தலைவர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேற நிர்பந்தித்தார். ஆனாலும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தடை செய்யப்பட்ட ‘முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு’ மீண்டும் அரசியல் போராட்டங்களைத் தொடங்குவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து எம்.பி.க்கள், சீர்திருத்த ஆதரவாளர்களைச் சிறை பிடித்து கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கி தந்தையின் வழியிலேயே கொடுங்கோல் ஆட்சி செய்தார் பஷார்.
2004ல் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து, ஈராக்கிற்குள் நுழையும் போராளிகளைத் தடுக்கத் தவறியதற்காக சிரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. 2005ல் லெபனான் பிரதமர் ‘ரஃபிக் ஹரிரி’ கொல்லப்பட்டதை அடுத்து பெய்ரூட்டில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள சிரியாவை வலியுறுத்தியது அமெரிக்கா. சிரியாவும் லெபனானிலிருந்து வெளியேறியது. மேற்கு நாடுகள் சிரியாவுடனான தங்கள் உறவை முறித்துக் கொண்டன.
ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பிறகு 2006ல் ஈராக்குடன் சமாதான பேச்சுவார்த்தையில் இறங்கியது சிரியா. 2007ல் ஐரோப்பிய ஒன்றியம் சிரியாவுடன் மீண்டும் உரையாடலைத் தொடங்கியது. அன்றைய அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ‘நான்சி பெலோசி’, டமாஸ்கஸில் அதிபர் அசாத்தை சந்தித்தார். முதன்முதலாக சிரியாவிற்கு விஜயம் செய்த உயர்நிலை அமெரிக்க அரசியல்வாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வருடம், ‘அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு’, சிரியாவின் ரகசிய அணுசக்தி உலை திட்டத்தை ஐ.நாவில் சமர்ப்பிக்க, வடக்கு சிரியாவில் கட்டுமானத்தில் இருக்கும் அணுமின் நிலையத்திற்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
2008ல் அதிபர் அசாத் பாரீஸில் ஃபிரெஞ்சு அதிபர் ‘நிக்கோலா சார்க்கோசி’யை சந்தித்தார். முன்னாள் லெபனான் பிரதமர் ‘ரஃபிக் ஹரிரி’ படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளின் ராஜதந்திர தனிமைப்படுத்தல் முடிவுக்கு வந்ததை இந்த விஜயம் ஊர்ஜிதப்படுத்தியது. முதல் முறையாக லெபனானுடன் சிரியா நட்புறவைப் பேண பேச்சுவார்த்தை நடத்தியது.
2010ல் பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பதாகவும், பேரழிவு ஆயுதங்களைக் குவிப்பதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மீறி லெபனானின் ஹெஸ்பொல்லாவுக்கு ‘ஸ்கட்’ ஏவுகணைகளை வழங்குவதாகவும் கூறி, சிரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா புதுப்பித்தது.
2011ம் ஆண்டின் முற்பகுதியில் மத்திய கிழக்கு முழுவதும் “Arab Springs” என்ற பெயரில் அடக்குமுறை ஆட்சியாளர்களை எதிர்த்துத் தீவிர போராட்டம் நடந்தது. அரபு எழுச்சிகளால் ஈர்க்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட சிரிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டு, பல நாட்கள் சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய அமைதியான போராட்டங்கள் சிரியா முழுவதும் வேகமாகப் பரவின. பஷாரின் ராணுவம் போராட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடுகளைக் கட்டவிழ்த்து விட்டது. ‘அலெப்போ’வில் ஏற்பட்ட தீ, வரலாற்றுச் சந்தையின் பெரும்பகுதியை அழித்தது. சிரியா உலகத்தாரின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது.
2012ல் கத்தாரில் உருவாக்கப்பட்ட ‘சிரிய புரட்சிகர மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கான தேசிய கூட்டணி’, ‘இஸ்லாமிய போராளிகளை'(ஐசிஸ்) அங்கீகரிக்கவில்லை. அதனால், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி, வளைகுடா நாடுகள் எதிர்க்கட்சியான தேசிய கூட்டணியை சிரிய மக்களின் “சட்டப்பூர்வமான பிரதிநிதியாக” முறையாக அங்கீகரித்தன.
அரசுக்கு எதிரான எதிர்ப்புக் குழுக்களின் படைகள், ஆயுதமேந்திய கிளர்ச்சியினைத் தொடங்க, சிரியா முழு அளவிலான உள்நாட்டுப் போரில் இறங்கியது. நாட்டின் மிகப்பெரிய நகரமான ‘அலெப்போ’வின் சில பகுதிகள் உட்பட வடக்கின் முக்கிய நகரங்களை போராளிக்குழுக்கள் கைப்பற்றின. 2013ல் பஷார் அரசுக்கு உதவ, லெபனானின் ‘ஹெஸ்பொல்லா’வும் ஈரானிய புரட்சிகர காவல்படை(IRGC)யும் வெளிப்படையாக அதன் போராளிகளை சிரியாவிற்கு அனுப்பியது.
அதே காலகட்டத்தில் ஐசிஸ்-ன் வளர்ச்சியும் சிரியாவில் ஏற்பட்டு, 2014ல், ‘ரக்கா’வை தலைநகராகக் கொண்டு, ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு சிரியாவை உரிமை கொண்டாடியது. இது அமெரிக்க ராணுவத்தின் நேரடித் தலையீட்டிற்கும் காரணமாக அமைந்தது. 2013ல் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ‘ஹெஸ்பொல்லா’ கட்டமைப்பதாகச் சந்தேகித்து ‘டமாஸ்கஸ்’ அருகே ராணுவ தளத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதாக சிரியா குற்றம் சாட்டியது. அதைத்தொடர்ந்து டமாஸ்கஸின் ‘கௌடா’ பகுதியில் 300 பேரைக் கொன்ற தாக்குதலில் சிரிய ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக ஐ.நா ஆயுத ஆய்வாளர்கள் அறிவித்தனர். 2014க்குள் ரசாயன ஆயுத இருப்புக்களை அழிக்க ஐ.நா.வை சிரிய அரசாங்கம் அனுமதித்தது. மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற ‘சுதந்திர சிரிய ராணுவ’த்தின் தளங்களை இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாகக் கூறப்பட்டதை அடுத்து, வடக்கு சிரியாவில் போராளிகளுக்கான ஆதரவை அமெரிக்காவும் பிரிட்டனும் நிறுத்தியது.
2015ல் ‘குர்திஷ் படைகள்’ நான்கு மாதப் போருக்குப் பிறகு துருக்கிய எல்லையில் உள்ள கோபானில் இருந்து ‘இஸ்லாமிய அரசை’ வெளியேற்றின. ‘இஸ்லாமிய அரசு’ போராளிகள் மத்திய சிரியாவில் உள்ள பழங்கால நகரமான ‘பல்மைரா’வைக் கைப்பற்றினர். இஸ்லாமியத்திற்கு முந்தைய உலக பாரம்பரிய தளங்களில் உள்ள பல நினைவுச்சின்னங்களை அழிக்கத் தொடங்கினர்.
‘ஜெய்ஷ் அல்-ஃபதாஹ்’, இஸ்லாமிய கிளர்ச்சிக் கூட்டணி ‘இட்லிப்’ மாகாணத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது.
2015ல் ரஷ்யா தனது முதல் வான்வழித் தாக்குதல்களை சிரியாவில் நடத்தியது. ‘இஸ்லாமிய அரசு’க் குழு(ஐசிஸ்)வை குறிவைத்ததாகக் கூறினாலும் அசாத்தின் எதிரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று எதிர்க்கட்சிகளும் போராளிகளும் கூறினர். கிளர்ச்சியாளர்கள் ‘ஹோம்ஸின்’ எஞ்சிய பகுதியை காலி செய்ய சிரிய ராணுவம் அனுமதித்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவின் மூன்றாவது பெரிய நகரம் அரசாங்க கட்டுப்பாட்டிற்குத் திரும்பியது.
2016ல் சிரிய அரசாங்கப் படைகள் ரஷ்ய வான் உதவியுடன் இஸ்லாமிய அரசிடமிருந்து பல்மைராவை மீட்டெடுத்தது. ஆனால் டிசம்பர் மாதத்தில் மீண்டும் ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ அதனை ஆக்கிரமித்து விட்டது. கிளர்ச்சிக் குழுக்களுக்கு உதவுவதற்காக துருக்கியப் படைகள் சிரியாவுக்குள் நுழைந்து அவர்களுடன் சேர்ந்து குர்திஷ் படைகளையும் இஸ்லாமிய அரசுப் படைகளையும் துருக்கி எல்லையை நெருங்காமல் பார்த்துக் கொண்டன. ரஷ்ய வான்படை மற்றும் ஈரானிய ஆதரவு ஹெஸ்பொல்லா போராளிகளின் உதவியுடன் அசாத்தின் ராணுவம் நாட்டின் மிகப்பெரிய நகரமான ‘அலெப்போ’வை போராளிகளிடமிருந்து மீண்டும் கைப்பற்றியது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஐ.நா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நடத்திய சமாதான உடன்படிக்கைகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தது. ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் தோல்விக்குப் பிறகு, ரஷ்யா, ஈரான், துருக்கியுடன் இணைந்து அமைதிப் பேச்சுவார்த்தையைத் துவங்கியது. 2017ல் கஜகஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ரஷ்யா, ஈரான், துருக்கி நாடுகள், அரசுக்கும் ஐசிஸ் அல்லாத கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டன. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ‘கான் ஷெய்கோன்’ நகரின் மீது சிரிய அரசாங்க விமானங்கள் ரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்தியதாகக் கூறி விமானத் தளத்தின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்த அன்றைய அமெரிக்க அதிபர் ‘டொனால்ட் ட்ரம்ப்’ உத்தரவிட்டார். ‘குர்திஷ் மக்கள் பாதுகாப்பு பிரிவு’களுக்கு ஆயுதம் வழங்க அமெரிக்கா முடிவு செய்தது. இப்பிரிவு, முக்கிய எதிர்க்கட்சியான ‘சிரிய ஜனநாயகப் படை’களுடன் இணைந்து ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ஐ எதிர்த்துப் போர் புரிந்தன.
2015 மற்றும் 2016ல், மிதவாத கிளர்ச்சிப் பிரிவுகளுக்கு எதிராக ரஷ்யா தனது அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளில் சிலவற்றைப் பயன்படுத்தியது. ரஷ்ய ராணுவத்தின் தலையீடும், ஹெஸ்பொல்லா மற்றும் ஈரானின் படைகளும் பஷாருக்கு ஆதரவாகவும் போராடும் மக்களுக்கு எதிராகவும் களமிறங்கியது. 2016ம் ஆண்டின் இறுதியில், ‘அலெப்போ’ உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் மேற்குப் பகுதியையும், ஜோர்டன் மற்றும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைகள் வரை நாட்டின் தெற்கே கிட்டத்தட்ட அனைத்தையும் சிரிய ராணுவம் தன் ஆதரவுப் படைகளுடன் மீண்டும் கைப்பற்றியது.
அசாத் அரசு, இழந்த சிரியாவின் பகுதிகளை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. 2018ல் ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக டமாஸ்கஸை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளையும் கைப்பற்றியது. அதன் பிறகு, எழுச்சியின் பிறப்பிடமான ‘டாரா’விற்கு தெற்கே தனது பார்வையைத் திருப்பியது. இஸ்லாமிய அரசின் தலைவர் ‘அபு பக்கர் அல்-பாக்தாதி’ ‘இட்லிப்’ மாகாணத்தில் உள்ள அவரது மறைவிடத்தில் அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்தார். 2019ல் வடக்கு சிரியாவிலிருந்து துருப்புக்களை அமெரிக்கா திரும்பப் பெற்றது.
எதிர்க்கட்சிகளின் கைவசம் இருந்த கடைசி மாகாணமான இட்லிப்பை சிரிய ராணுவ தாக்குதலில் இருந்து மீட்க, துருக்கி ஆயிரக்கணக்கான துருப்புக்களை எல்லைக்கு அப்பால் அனுப்பியது. தெற்கு சிரியாவில் வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கான எதிர்ப்புகள் காரணமாக பிரதம மந்திரி இமாத் காமிஸை பதவி நீக்கம் செய்தார் அசாத்.
குறைந்தது இரண்டு முறை அசாத்தின் ஆட்சி சரிந்தாலும் அதன் மறுபிரவேசம் நட்புநாடுகளால் அரங்கேறியது.
இருப்பினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடை மற்றும் உள்நாட்டுப்போர்களால் பொருளாதாரம் வீழ்ச்சியடைய, ‘கேப்டகன்’ என்ற உளவியல் போதைப்பொருளின் சட்டவிரோத வர்த்தகத்தால் ஊசலாடிக் கொண்டிருந்தது சிரியா. வாழ்க்கை கடினமாக, அசாத்தின் ராணுவ வீரர்களே ஒத்துழைக்க மறுக்கும் நிலைமைக்கு ஆளாகியது அரசு. ராணுவ ரீதியாகவும் பல ஆண்டுகளாக பலவீனமாக இருந்த நிலையில் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் ஈரானிய ராணுவ ஆதரவை வெகுவாக நம்பியிருந்தது பஷாரின் அரசு. இதற்கிடையில் ரஷ்யா, உக்ரைன் போரிலும் ஹெஸ்பொல்லவைக் காப்பாற்ற ஈரான், லெபனானுடன் சேர்ந்து இஸ்ரேலுடன் போரிட்டுக் கொண்டிருப்பதில் சிரியா ஆதரவற்று பலமிழந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சிரியாவில் பல்வேறு மதங்களும் பிரிவுகளும் இருப்பதால் நாட்டின் பல பகுதிகள் பல்வேறு குழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ‘சன்னி இஸ்லாம்’, ‘அலவிஸ்’, ‘ஷியா’, ‘பன்னிரண்டு ஷியா முஸ்லிம்கள்’ இனக்குழுவினர், ‘இஸ்மாயிலி முஸ்லிம்கள்’, ‘சிரியன் கிறிஸ்தவர்கள்’, ‘யசிடிஸ்’, ‘பஹாய்ஸ்’ இனத்தவர் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.
சிரியாவில் மிகவும் சக்திவாய்ந்த போராட்டக் குழு ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS)’. இக்குழு தான் முன்னாள் அதிபர் பஷார் அல்அசாத்திற்கு எதிரான மின்னல் தாக்குதலை வழிநடத்தி ரஷ்யாவிற்குத் தப்பி ஓடச் செய்தது.
நவம்பர் 27ல் ஆரம்பித்து சில நாட்களிலேயே சிரிய கிளர்ச்சியாளர்கள் வடமேற்கு நகரமான அலெப்போவைக் கைப்பற்றினர். பின்னர், ஹமா, ஹோம்ஸ் வழியாக தெற்கு நோக்கிச் சென்று தலைநகரான டமாஸ்கஸை கைப்பற்றினர்.
இவர்களைத் தவிர மற்ற எதிர்க்குழுக்கள் சிரியாவின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்துகின்றன.
அவற்றில் ஒன்று, ‘சிரிய தேசிய இராணுவம்’ (Syrian National Army, SNA). அது சிரியாவின் வடமேற்குப் பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது. HTS கிளர்ச்சியாளர்கள் மற்றும் SNA படைகள் சில சமயங்களில் கூட்டாளிகளாகவும், சமயங்களில் எதிரிகளாகவும் நேரத்திற்குத் தகுந்தாற்போல் மாறிக்கொள்கிறார்கள். அண்டை நாடான துருக்கியின் ஆதரவுடன் இருக்கும் SNA படைகள், சிரியாவின் ‘குர்திஷ்’ படைகளை துருக்கிய எல்லையிலிருந்து விலக்கி வைப்பதற்காக இடையக மண்டலத்தை(buffer zone) உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளது.
இரண்டாவது, துருக்கிக்கு ஒவ்வாத ‘குர்திஷ் குழு’ ஒரு சிறுபான்மை இனக்குழு. சிரியாவின் ஜனநாயகப் படைகள் (Syria’s Democratic Forces -SDF) என்று அழைக்கப்படுகிறது. துருக்கிய ஆதரவு SNA படைகள் மற்றும் குர்திஷ் SDF படைகள் அமெரிக்காவின் தலையீட்டில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்பு, வடக்கு சிரிய நகரமான ‘மன்பிஜின்’ கட்டுப்பாட்டிற்காக போராடிக் கொண்டிருந்தன.
மூன்றாவது, ‘இஸ்லாமிக் ஸ்டேட்(IS)’ பயங்கரவாதக் குழு சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் சிரியாவில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ரசாயன ஆயுதங்கள், நீண்ட தூர ஏவுகணைகள் “தீவிரவாதிகளிடம்” சேருவதைத் தடுக்க, சிரியா முழுவதும் உள்ள ராணுவ தளங்களில் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதற்கிடையில், சிரியாவில் பயங்கரவாதக் குழு(ISIS) மீண்டும் எழுவதைத் தடுக்க, அமெரிக்க துருப்புக்கள் கிழக்கு சிரியாவில் குர்திஷ்(SDF) படைகளுடன் இணைந்து இஸ்லாமிய அரசின் முகாம்கள், செயல்பாட்டாளர்கள் மீது தாக்குதல்களை நடத்திய நிலையில், ரஷ்யாவின் கடற்படை, விமான, ராணுவத் தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக போராளிக்குழுக்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
சிரியாவின் உள்நாட்டுப் போர் மத்திய கிழக்கு முழுவதும் அலை அலையான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பாவிலும் இது ஆழமாக எதிரொலித்தது. மில்லியன் கணக்கான அகதிகள் துருக்கி, ஜோர்டன், லெபனான், ஈராக், எகிப்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் குவிந்தனர். அங்கு அகதிகள் நெருக்கடி அரசியல் நிலப்பரப்பை மறுவரையறை செய்தது. உள்நாட்டில், சிரியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து அன்றாட வாழ்வாதாரத்திற்காக மனிதாபிமான உதவியை நம்பியிருகின்றனர். இத்தனைக்கால நீண்ட போரினால் வீடுகள், பள்ளிகள், வணிகங்கள், மருத்துவமனைகள், சாலைகள், உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அழிவு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களில் மதிப்பிடப்பட்டுள்ளது.
அசாத் குடும்ப ஆட்சியின் அதிர்ச்சியூட்டும் வீழ்ச்சி, 13 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் மற்றும் கொடூரமான சர்வாதிகாரத்தின் கீழ் வாழ்ந்த மில்லியன் கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இன்று டமாஸ்கஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உமையா மசூதியில் சிவப்பு, வெள்ளை, கருப்பு, பச்சை கொடி பறக்கிறது. சிரியாவின் தலைநகரின் மறுபுறம், முன்னாள் சிரிய அதிபர் பஷர் அல் அசாத்தின் அரண்மனை எரிகிறது. தெருக்களில், நூற்றுக்கணக்கான மக்கள் 50 ஆண்டு குடும்ப சர்வாதிகார ஆட்சியின் வீழ்ச்சியைக் கொண்டாடுகிறார்கள்.
உமையாத் மசூதியில் இருந்து ஆற்றிய உரையில், சிரியாவின் முக்கிய கிளர்ச்சிக் குழுவான ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ (HTS) தலைவரான அபு முகமது அல்-ஜோலானி, அசாத் வீழ்த்தப்பட்டதை, “முழு இஸ்லாமிய தேசத்திற்கும் கிடைத்த வெற்றி. இந்த தேசத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டால், அவை மீட்கப்படும் வரை தொடர்ந்து போராடி அவற்றைக் கோரும். அசாத் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்ட மக்களை HTS விடுவிக்கிறது” என்று கூறியுள்ளார். ‘HTS’ போராளிகள் புறநகரில் உள்ள சிறைக்குள் நுழைந்து, “செட்னயா சிறையில் கொடுங்கோன்மையின் சகாப்தம் முடிவுக்கு வந்ததாக” அறிவித்தனர். இங்கு தான் பஷாரின் அதிகார கொடூரங்கள் அரங்கேறியுள்ளது.
தலைநகருக்குள் போராளிகளின் விரைவான நகர்வு குடிமக்களையும் மற்ற உலக மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 2011ல் துவங்கிய அதிகார குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டம் 2024ல் வெற்றியடைந்துள்ளது. பல ஆண்டுகள் தொடர்ந்த போராட்டங்களால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி, பல லட்ச மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்.
அடுத்து என்ன நடக்கும்?
பல்வேறு தரப்பினரும் ஒத்துழைக்காவிட்டால் பல இடர்பாடுகள் ஏற்படும் பல வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்னாள் பிரதமர் ‘அல்-ஜலாலி’ ஒரு வீடியோ அறிக்கையில், தனது அமைச்சரவை, எதிர்க்கட்சிகளுக்கு “ஆதரவுக்கரம் நீட்ட” தயாராக இருப்பதாகவும், அதன் செயல்பாடுகளை ஒரு இடைநிலை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் தயாராக இருப்பதாகக் கூறினார்.
“இந்த நாடு அதன் அண்டை நாடுகளுடனும் உலகத்துடனும் நல்லுறவைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு சாதாரண நாடாக இருக்க முடியும். அது சிரிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தலைமையையும் சார்ந்தது” என்று அல்-ஜலாலி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட உரையில் கூறியுள்ளார்.மேலும், HTS தலைவர் ‘அபு முகமது அல்-கோலானி’க்கு அதிகாரத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
HTS தலைவர், “பொது நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் வரை பிரதமரின் மேற்பார்வையில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
விடுதலை பெற்ற பின்னரும் பல மத்திய கிழக்கு நாடுகளில் காலங்காலமாக புரட்சிகளும் போராட்டங்களும் போர்களும் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்கூடு. அமைதி என்றால் கிலோ என்ன விலை என்ற நிலையில் தான் இன்றும் அங்கே பல நாடுகளின் நிலைமை இருக்கிறது. அப்படியிருக்கையில் நீண்ட நெடிய அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு ஒரு அதிகார வெற்றிடம் உருவாகியுள்ளது. ஆபத்து என்னவென்றால், இந்த வெற்றிடத்தை நிரப்புபவர்கள் சமாதானத்திலும் நல்லிணக்கத்திலும் அக்கறை காட்டாமல் அதிகாரத்திலும் பழிவாங்கலிலும் ஆர்வம் காட்டுவார்கள். இந்தக் குழுக்களுக்குள் அதிகார போராட்டம் தொடரும்.
இஸ்லாமிய போராளியாக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார் அபு முகமது அல்-கோலானி. சிரியாவில் இனியாவது அமைதி திரும்புமா?