SFO 1
தொலைதூர பசிபிக் பெருங்கடல் நீலவானை பிரதிபலிக்க, விமானம் கீழே இறங்க இறங்க சிற்றெறும்புகளாய் தெரிந்த வீடுகள், ஊர்ந்து சென்று கொண்டிருந்த வண்டிகள், நீண்ட சாலைகள் பெரிதாகிக் கொண்டே வர, விமானியின் அறிவிப்பில் உள்ளூர் தட்பவெப்பநிலையும் பயணித்தற்கு நன்றிகளும் தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி விட்டது. சிறகுகளை இடமும் வலமும் சாய்த்து குலுங்கி குலுங்கி தரையைத் தொட்டு விட்ட நேரத்தில் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட, வந்தே விட்டது சான்ஃப்ரான்சிஸ்கோ. அதுவரையில் இருந்த களைப்பும் மறைந்தே விட்டது. ஓடுபாதையில் மெதுவாக அன்ன நடையிட்டு விமானம் செல்ல, விழித்தெழுந்த மக்கள் தலைக்கு மேல் வைத்திருந்த பெட்டிகளை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இன்னும் வண்டியே நிற்கவில்லை. என்ன அவசரம் வேண்டியிருக்கு? இந்த மனிதர்களோடு பெரிய அக்கப்போரா இருக்கு. ஹ்ம்ம்... பின் வரிசையில் இளம் மெக்ஸிகன் தம்பதியினர். அப்பாவின் தோளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கொள்ளை அழகு! விமானத்தில் எறியதிலிருந்து அப்பாவிடமே இருந்தாள். அவரும் பாந்தமாக அவளை அரவணைத்து கைகளில், தோளில் சாய்த்து பேசியபடியே தூங்க வைத்தது பேரழகு. அம்மாவின் மடியும், அப்பாவின் தோளும் தான் எத்தனை ஆதுரமானவை இந்தக் குழந்தைகளுக்கு! என் குழந்தைகளை நினைத்துக் கொண்டேன். பயணிகளில் பெரும்பாலும் மெக்ஸிகன் , சீனர்கள். நடுநடுவில் இந்தியர்கள்,அமெரிக்கர்கள். போகுமிடத்திற்கு ஏற்றார் போல் கூட்டம்!
என் பெட்டியை எடுக்க உதவிய உயர்ந்த இளைஞனுக்கு நன்றி கூறி மகளுக்கும் வந்து சேர்ந்து விட்ட செய்தியைச் சொல்லி விட்டு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த வரிசையில் ஐக்கியமாகி வணக்கத்தையும் நன்றிகளையும் இயந்திரத்தனமாக பிளாஸ்டிக் புன்னகையுடன் சொல்லிக் கொண்டிருந்த பணிப்பெண்களையும் கடந்து வெளியில் வந்தவுடன் தான் நிம்மதியாக இருந்தது. அப்பாடா! ஒருவழியாக வந்து சேர்ந்து விட்டேன்.
அதற்குள் நிவியிடமிருந்து ஃபோன்.
அம்மா, வெளியில வந்துடு. அங்கேயே பிக்கப் பண்ணிடறேன். கவனமா இரும்மா. எங்கேயும் போயிடாதே! நான் கிளம்பிட்டேன்.
நீ மெதுவா பதட்டப்படாம வா . என்னை யாரும் எங்கேயும் கடத்திட மாட்டாங்க. சிரிப்புச் சத்தம் கேட்டது எதிர்முனையில்
ஆஆ! என்னடா லதாவுக்கு வந்த சோதனை. என்னைப் பெற்றவள் நான் ஏதோ சாதனைக்காரி ரேஞ்சில் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாள். என் செல்ல மகளோ, பத்திரம்மா. நான் இப்போ வந்துடுவேன்னு சின்னக் குழந்தைக்குச் சொல்வது போல்...ம்ம்ம்ம் ...இதுவும் நல்லா தான் இருக்கு.
அங்கிருந்த எல்லோரும் போனில் பேசியபடி. இல்லையென்றால் எதையோ எழுதியபடி, வாசித்தபடி குனிந்த தலை நிமிராமல்! வண்டிகள் பயணிகளை இறக்குவதும் ஆட்களை ஏற்றுவதுமாய். இளம்பெண் ஒட்டி வந்த காரிலிருந்து இறங்கிய இளம்பெண்கள் இருவர் தோழியைச் சந்தித்த குதூகலத்தில் கத்தி ஆர்ப்பரித்து அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார்கள். சுற்றம் மறந்து தங்கள் உலகில் குதூகலிக்கும் பெண்கள் தான் எவ்வளவு அழகு? பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.
அம்மா, நான் இங்க வந்துட்டேன். நீ எங்க இருக்க?
நீ சொன்ன மாதிரி வெளியில வாடகை வண்டிகள் வரும் பாதையில் உனக்காக காத்துக்கிட்டு இருக்கேன்.
தேடிப்பிடித்து வந்து விட்டாள். செல்ஃபோன் இல்லாத காலங்கள் மறந்தே போய் விட்டிருக்கிறது!
அம்மா! வெல்கம் டு சான்ஃப்ரான்சிஸ்கோ. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?
எனக்கும் தான். செல்ல மகளுடன் இருக்கிறேன். சில நாட்கள் இருக்கப்போகிறேன் என்பதே பேரானந்தமாக இருந்தது.
வந்தவுடன் ஊபருக்குச் சொல்லி விட்டு இன்னிக்கு உன் ஃபிரெண்ட்ஸ பார்க்குறது மட்டும் தான்மா. நல்ல ரிலாக்ஸ் பண்ணிப்போம். நாளையிலருந்து ஊர சுத்திப் பார்க்கலாம். நிறைய நடக்கணும். நல்ல ஷூஸ் போட்டிருக்கல்ல? சிந்திய மணிகள் போல கலகலவென பேசிக் கொண்டிருந்தாள். எனக்கா மகளானாள் நான் அவளுக்கு மகளானேன் பின்னணியில் ஓடிக்கொண்டிருந்தது.
ஊபர் வந்தவுடன் வண்டி எண்ணைச் சரிபார்த்து, ஓட்டுநர் பெயரைச் சொன்னவுடன் இந்த வண்டி தான்மா. ஏறிக்கொண்டோம்.
வழியில் இளைஞனும் இளைஞியும் ஏறிக்கொண்டார்கள். ஏறி அமர்ந்தவுடன் விதவிதமாக போஸ்கள் கொடுக்க அவளைப் படம்பிடித்தான் அவன். உடனே இன்ஸ்டாகிராமில் போடணும் என்றவளை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். நம்மள விட இன்ஸ்டா பைத்தியமா இருக்கும் போலயே!
இன்னொரு இடத்தில் களைத்துப் போயிருந்த பெண்மணி ஏறி முன்னிருக்கையில் அமர்ந்து வண்டி நகர ஆரம்பித்தவுடன் தூங்கி விட்டாள்.
நெரிசல்களைத் தாண்டி வளைந்து வளைந்து மேட்டுச்சாலைகளில் இது தான் சான்ஃப்ரான்சிஸ்கோவின் அழகு. மலையுச்சிகளில் பெரிய வீடுகள். தெருக்களில் நெருக்கியடித்துக் கொண்டு சிறு வீடுகள். ஆல்பனி வீடுகளின் முன் இருக்கும் பரந்த பச்சை புல்வெளிகள் மிஸ்ஸிங்! ஹ்ம்ம்! நிலத்தின் மதிப்பு அதிகமான உலக இடங்களில் இதுவும் ஒன்று. அவ்வளவு எளிதில் வீடு வாங்கிட முடியாத நகரம். கடல் மூன்று பக்கம் சூழ வாழுமிடம் குறைந்த இடம் என்பதால் குட்டி குட்டி வீடுகள். நியூயார்க்கிற்கும் இந்த ஊருக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள்! வழியெங்கிலும் உயர்ந்த மரங்கள்! மழைக்காலத்தின் முடிவில் இலைகளுடன் அழகாக இருக்கும்! சுள்ளென்று மதிய வெயில் ஆனாலும் குளிர். குளுகுளுவென்றிருந்தது.
வீடு வந்துடுச்சும்மா. இறக்கமான தெருவின் மேட்டுப்பகுதியில் அய்யோ ! அழகா இருக்கு இந்த தெரு
இங்க எல்லாமே இப்படித்தான்மா இருக்கும். நாளைக்கு நாம நடக்கறப்ப இன்னும் நிறைய தெருக்களைப் பார்க்கலாம்.
ஆஆ! கிடுகிடுன்னு இறங்கிடுவேன். ஏறணும்மேன்னு நினைச்சா தான்... கண்ணுல இப்பவே வேர்க்குதே!
இரும்மா. டீ போட்டுட்டு எடுத்துட்டு வர்றேன்.
பால்கனியில் இருந்து எதிரே மலைகள். கொத்துக்கொத்தாக வீடுகள். எங்கேயோ பெங்களூரு வந்த மாதிரி இருக்கு! கொஞ்சம் அழுக்கா இருக்குல்ல?
அதற்குள் நண்பனிடமிருந்து ஃபோன்.
எப்ப கிளம்பறீங்க?
நிவியும் எங்கு சந்திப்பது என்று சொல்லிய பிறகு புறப்பட தயாரானோம்.
எனக்குப் பிடித்த ஸ்மூதியும் செய்து வைத்திருந்தாள். குடித்து விட்டு SFO சுத்திப் பார்க்க போறேன் என்று கிளம்பினோம்.
இங்க தான்மா நான் வழக்கமா காஃபி குடிப்பேன். இங்க தான் பலசரக்கு சாமான்களை வாங்குவேன். இந்த மெக்ஸிகன் கடையில பழங்கள் நல்லா இருக்கும். இதுதான் லைப்ரரி.
நல்ல வேளை! நடந்து வர்ற தூரத்துல இருக்கு.
நிறைய மெக்ஸிகன் மக்கள் வாழும் பகுதி அது. தி நகர் போல சாலையோர தள்ளு வண்டிக்கடைகள் நிறைய. பல பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். சப்பை மூஞ்சி, பழுப்பு நிறம், அதிகம் படிக்காதவர்கள் போல இருந்தார்கள். பேசிக்கொண்டே சப்வே வந்து சேர்ந்தோம். எனக்கு ரயில் பயணங்கள் என்றுமே மிகவும் பிடித்த ஒன்று. இங்க இறங்கிப் போகணும்மா.
அறிவிப்புகளுடன் சர்ர்ரென்று குளிர்காற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு ரயில் வந்து நிற்க, தப்பித்தால் போதும் என்று இறங்கியது ஒரு கூட்டம். கூட்டமில்லாத நேரம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்கள். அழுக்கு மூட்டையுடன் குளியல் காணாத உடல் . பார்த்தாலே ஏழ்மை விரித்தாடும் முகம். பார்க்க கொஞ்சம் பரிதாபமாகவும் கோரமாகவும் இருந்தவரை அனைவருமே கடந்து சென்றார்கள். கொஞ்சம் திகிலான மனிதர்களும் அந்தப் பெட்டியில் இருந்தார்கள்.
இப்படித்தான் நீ போற வண்டியிலேயும் வருவாங்களா ?
இதெல்லாம் இங்க சகஜம்மா. பயப்படாத.
ம்ம்ம்... எத்தனை எளிதாக சொல்லி விட்டாள் ?
நான் பயப்படுவதை ரசித்துக் கொண்டே வழியில் வரும் இடங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தாள்.
ஒருமணிநேர பயணத்திற்குப் பிறகு நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வர, நண்பனும் காத்திருந்தான்.
இப்பொழுதுதான் பார்த்த மாதிரி இருக்கிறது. அதற்குள் நான்கு வருடங்கள் ஓடிவிட்டிருக்கிறது !
வேலை, வீடு, குழந்தைகளைப் பற்றி பேசிக்கொண்டே... என்னய்யா உங்க ஊரு. இந்த நேரத்திலும் பிஸியா இருக்கு. அதிசயமா மலைகள் எல்லாம் பசுமையா இருக்கு.
எல்லாம் மழையின் கொடை. எங்க ஊரும் அழகு தான்.
மலையில் மேயும் ஆடு மாடுகள். ஸ்விட்ஸ்ர்லாண்ட் மாதிரி இருக்கு. மரங்களில் இலைகள் இருந்தால் கொள்ளை அழகாக இருந்திருக்கும். எப்படித்தான் வீடுகள் எல்லாம் இப்படி மலை மேல இருக்கோ?
சொல்லி முடிக்கவில்லை. மலை மேல் சென்று கொண்டிருந்தோம். வீடுகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக அழகான தோட்டங்களுடன் , மரம், செடி கொடி, பறவைகள், மான்களுடன். ஆஹா! இந்த மரங்கள் எல்லாம் ஆல்பனியில் இல்லை. வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தேன்.
வீடு வந்துடுச்சு. நாய் இருக்கு. கொஞ்ச நேரம் பழகினதுக்கப்புறம் சரியாயிடும். முன்னெச்சரிக்கையுடன் பயந்து கொண்டே உள்ளே நுழைய பாய்ந்து வர காத்திருந்தாள் "ஜிஞ்சர்". நண்பன் ராஜசேகரின் மனைவி அனிதா மருத்துவர். நாங்கள் சென்றதால் அவசரஅவசரமாக வேலையை முடித்துக் கொண்டு வந்திருந்தார். சிறிது நேரம் பேசி விட்டு அருமையான அடையைச் சாப்பிட்டு முடித்து தோட்டத்தில் ஜிஞ்சருடன் விளையாடிக் கொண்டிருந்தோம்.
அன்று மாலை நான்கு கல்லூரி நண்பர்களை மலர்விழி வீட்டில் சந்திப்பதாக திட்டம். சுவையான உணவுகளுடன் சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டு நேரம் போனதே தெரியவில்லை. நண்பர்கள் சந்திப்பு என்றுமே உற்சாகத்தைத் தரக்கூடியது. இரவு மணி பத்தரை ஆகிவிட்டது. இனி ஒரு மணிநேர ஊபர் பயணம். செல்ல மனமின்றி அங்கிருந்து கிளம்பினோம்.
வண்ண விளக்குகள் ஜொலிக்க போக்குவரத்து நெரிசலின்றி உறங்கச் செல்லும் நகரம் தான் எத்தனை அழகு!
எப்படிம்மா இருந்தது? நல்லா என்ஜாய் பண்ணினாயா? சிரிச்சுக்கிட்டே இருந்தீங்க?
ஆமாம்! ஜாலியா இருந்துச்சு. நிறைய பேசினோம்.
குட். எனக்கும் நீங்க பேசி சிரிக்கிறத பார்த்து சந்தோஷமா இருந்தது.
நாளைக்கு நாம நிறைய நடக்கணும். நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோம்மா. சொல்லும் பொழுது நியூயார்க் நேரப்படி காலை மூன்று மணி.
பெருநகரங்களில் வசிக்கும் நண்பர்கள் பலரும் வெளியூரிலிருந்து நண்பர்கள் வந்தால் மட்டுமே சந்தித்துக் கொள்ள முடிகிறது. பலரும் வீட்டிற்கு வந்த பின்னரும் வேலை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்கள்.
வீடு, வேலை, குழந்தைகள், பொது வாழ்க்கை என்று ஓடிக்கொண்டே இருக்கிறது அவர்கள் நிலைமை.
இனிது இனிது ஆல்பனி வாழ்க்கை இனிது.
களிப்பும், களைப்பும்... தூங்கிப்போனேன்.
SFO2 photos
SFO 3 Conservatory of Flowers & Botanical Gardens