Saturday, May 9, 2020

சான்ஃப்ரான்சிஸ்கோ 3 - Conservatory of Flowers & Botanical Gardens

SFO 1
SFO 2

கலிஃபோர்னியா நேரத்துக்கு தூங்கி நியூயார்க் நேரத்துக்கு பளிச்சென்று தூக்கம் கலைந்து விட்டது. வீடோ அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆறு பேர் குடியிருக்கும் இரண்டு மாடி வீடு. வீட்டின் பின்புறம் சிறிய தோட்டம். மெதுவாக பால்கனி கதவைத் திறந்து சிறகுகள் படபடக்க ஓடி விளையாடும் வண்ண வண்ண தேன் சிட்டுகளை ரசித்துக் கொண்டிருந்தேன். இந்த ஊர் தேன் சிட்டுகள் உருவத்தில் கொஞ்சம் பெரியதாக பல வண்ணங்களுடன் இருந்தது. அவர்களின் காதல் பருவம் போல! வசந்த காலம் தான் எத்தனை அழகு! ஆல்பனியில் மே மாதம் வருகை தரும் தேன் சிட்டுகள் இனப்பெருக்கத்திற்குப் பின் இலையுதிர்காலம் வரை தங்கியிருக்கும். நிவியிடம் சர்க்கரைத்தண்ணீரை வைக்கச் சொல்ல வேண்டும். ஆனந்தமாக இப்பறவைகள் குடிக்கும் அழகை ரசிக்கலாம்.
ஆல்பனியை விட்டு விட்டு வந்தாலும் துரத்தும் சில்ல் குளிர். சான்ஃப்ரான்சிஸ்கோ நகருக்கே உரித்தான மேக மூட்டம்! வெளியே வரவா வேண்டாமா என்று சூரிய பகவான் அங்கும் யோசித்துக் கொண்டிருந்தார். ஈஷ்வருக்குப் ஃபோன் செய்து பேசிக்கொண்டிருக்கையில் டீயுடன் வந்து நின்றாள் நிவி.

"ஏம்மா இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சுட்டே?"

"நீ போய் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு நிவி. நான் அப்பா கூட பேசிட்டு வர்றேன்."

ஒரு நாள் நிகழ்வுகளை கணவரிடம் சொல்லி விட்டு சில படங்களையும் அனுப்பி வைத்தேன். நீ இல்லாம பயங்கரமா போரடிக்குது. நேத்து கோவிலுக்குப் போனா எல்லாரும் நீ எங்கன்னு கேட்கிறாங்க என்றார்.
அட ராமா! ஒரு மனுஷி நிம்மதியா எங்கேயாவது போக முடியுதா? அதுக்குள்ள எல்லார்கிட்டேயும் புலம்பி முடிச்சாச்சா?

பொண்ணோட நல்லா என்ஜாய் பண்ணு. அப்பப்ப ஃபோன் பண்ணிக்கிட்டே இருங்க.

ஓகே. நானும் வெளியில் கிளம்ப தயாராக, மகளும் தண்ணீர் பாட்டில், நொறுக்குத் தீனிகளையும் எடுத்துக் கொள்ள, ஊபரில் கிளம்பினோம்.
உனக்குப் பிடிச்ச இடம் இருந்தா சொல்லும்மா அங்கே போகலாம்.
நீ எங்க கூட்டிட்டுப் போனாலும் எனக்கு ஓகே. உன்னோட இருக்கணும் அவ்வளவு தான்.

நான் வருவதற்கு முன்பே எங்கெல்லாம் செல்வது எங்கு சாப்பிடுவது அட்டவணை எல்லாம் போட்டு விட்டிருந்தாள் நிவி. என் செல்லம் அப்படியே என்னை மாதிரியே முன்திட்டமிடுதலில்! இந்த சுப்பிரமணி தான் ஏனோ தானோவென்று இருக்கிறான். அப்படியே...

வழியில் வரும் பூங்காவைக் காட்டி நண்பர்கள் நாங்கள் இங்கு தான் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். கோடையில் பிரபல இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இங்கு தான் நடக்கும்மா. நகரில் பூங்காக்களுக்கு பஞ்சமே இல்லை. அந்த பசுமையும், செடிகளும், உயர்ந்த மரங்களும் உறைக்காத வெயிலும் உடலைத்தழுவும் தென்றலும் அமைதியாக அமர்ந்திருந்தாலே போதும் மன நிம்மதிக்கு. புல்தரையில் படுத்திருந்தவர்கள், யோகா செய்பவர்கள், நாய்களுடன், குழந்தைகளுடன் நடை போடுபவர்கள், பாட்டு கேட்டுக் கொண்டே ஓடுபவர்கள், மிதிவண்டியில் செல்பவர்கள் என்று இளமைத் துள்ளலான காட்சி அங்கே! அன்று மிதமான வெயில். எப்படா இப்படியொரு நாள் கிடைக்கும் என்று காத்திருந்தார்களோ என்னவோ? தெருக்களில் மக்கள் கூட்டம்.

இதுதான்ம்மா கோல்டன் கேட் ஸ்டேட் பார்க். 1,017 ஏக்கர்களுக்கு பரந்து விரிந்து பாம்பு வால் போல் நீண்டு கொண்டே செல்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பசுமைத்தோட்டம் தான்! சாலையின் இருபுறங்களிலும் வண்டிகள். நடைபாதையில் கூட்டம். இளமையான நகரம் மிகவும் பிடித்துப் போயிற்று. நியூயார்க் நகர மக்களுக்கும் இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறதோ! கொஞ்சம் தன்மையான மனிதர்களாக இருப்பது போல் தோன்றியது.

வண்டி நிற்க, உனக்குப் பிடிச்ச பூந்தோட்டம்மா. Conservatory of Flowers. நுழைவாயிலே அழகோவியமாக இருந்தது. இங்கு உலகில் உள்ள மலர்களை அந்தந்த மலருக்குத் தேவையான தட்பவெப்பநிலையுடன் காட்சிப்படுத்தியிருந்தார்கள். அவ்வளவு அழகு. பார்த்தும் படங்கள் எடுத்தும் முடியவில்லை. உள்ளூர்வாசிகளுக்கு நுழைவாயில் டிக்கெட்டில் கணிசமான தள்ளுபடி இருக்கிறது. காலைவேளையிலும் நல்ல கூட்டம். எத்தனை விதமான மலர்கள்! ஒவ்வொன்றையும் ரசித்துக் கொண்டே வந்தோம். சிறிய இடத்தில் முடிந்தவரையில் மலர்ச்செடிகளுடன் அதன் பெயர்களையும், ஊர்களையும் குறிப்பிட்டிருந்தது சிறப்பு. பூச்சிகளைக் கவர, உணவாக்கிக்கொள்ள என எத்தனை விதமான வண்ண மலர்கள்! வெளியில் போடப்பட்டிருந்த மலர்கள் கலிஃபோர்னியாவுக்கு உரித்ததோ! நிறைய க்ளிக்குகள்!

தேங்க்ஸ் நிவி. ரொம்ப நல்லா இருந்தது.

எனக்குத் தெரியும். உனக்குப் பிடிக்கும்னு. அடுத்துப் போறது கூட உன்னுடைய ஃபேவரைட் இடம் தான். ஆவலைத் தூண்டினாள்.
நடந்து செல்லும் மனிதர்களையும் கடந்து செல்லும் வாகனங்களையும் வழியில் தென்பட்ட மரங்களையும் மலர்களையும் படமெடுத்துக்கொண்டே சாலையைக் கடந்தோம். வழியெங்கும் அழகழகாய் ரோஜாப்பூக்களும் , மக்னோலியா மலர்களும் மெல்ல இறங்கும் மூடுபனியும்! குளுகுளு சான் ஃப்ரான்சிஸ்கோ அழகு தான்! 

இன்னும் ரொம்ப தூரம் நடக்கணுமோ?

இல்ல இல்ல. இங்க தான். 

இந்த கலிஃபோர்னியா மக்களே இப்படித்தான். இங்க பக்கத்துலன்னு சொன்னா குறைந்தது அரைமணி நேரம்னு எடுத்துக்கணும்ம்ம்.
கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போவோமா?
புல்தரையில் அமர்ந்து போளியல் சாப்பிட்டோம். 

நல்லா இருக்கும்மா.

ம்ம்ம்ம்...

மீண்டும் நடக்க ஆரம்பித்து

இதுதான்மா நான் சொன்ன இடம். 

அட! பொட்டானிக்கல் கார்டன்ஸ்!
என் செல்லம்! எனக்கு எது பிடிக்கும்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கு
அதற்கும் நுழைவாயில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். உள்ளூர்வாசிகளுக்கு இலவசம்! அங்கும் உலகெங்கிலும் உள்ள 9000 தாவரங்களை வளர்த்திருக்கிறார்கள். பெரணிச்செடி மரம் மாதிரி வளர்ந்து நிற்கிறது. விதவிதமான வடிவங்களில் கள்ளிச்செடிகள்! விதவிதமான தோட்டங்கள்.சுற்றி சுற்றி நடந்து நடுநடுவே ஆசுவாசப்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியாக வளைய வந்தோம். 

மேல்நிலைப்பள்ளிப் பருவத்தில் வெவ்வேறு மர இலைகளைச் சேகரித்து நோட்டில் குறிப்புகள் எழுதுவது என்னுடைய பொழுதுபோக்காக இருந்தது. எப்படி இருந்த நான் எப்படி ஆகிவிட்டிருக்கிறேன் ஹ்ம்ம்ம்...
நிறைய நடந்தோம். மதியம் இரண்டு மணி! 

பசிக்கலையாம்மா? 

ம்ம்ம்... பசிக்கிற மாதிரி தான் இருக்கு.

SFO3Photos

SFO 4 Grand View Park & Labyrinth Lookout

No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...