Wednesday, May 13, 2020

நன்மாறன் கோட்டைக் கதை





 "நன்மாறன் கோட்டைக்கதை"  ஒன்பது சிறுகதைகளைக் கொண்ட சிறுகதை தொகுப்பு. இமையம் எழுதிய இத்தொகுப்பில்  சமூக ஏற்றத்தாழ்வுகள், சாதீய தீண்டாமை,  சமகால அரசியல் அவலங்களை அழகாக கதையினூடே காட்சிப்படுத்துகிறார். காலனிவாசிகள் என்று ஒரு சமூகம் அடையாளப்பட்டிருப்பதும் அவர்களை அண்ட விடாமல் ஆதிக்கம் செலுத்துபவர்களின் மனப்பான்மையும் செய்திகளில் பார்த்து கேட்டறிந்ததை இத்தொகுப்பில் வாசிக்கையில் கதைகள் என்று ஒதுக்கி விட முடியவில்லை. சாதிகளை அழித்திடாமல் வெறுப்புடன் வளர்த்துக் கொண்டு வரும் அரசியல் மனப்பான்மை இந்த யுகத்திலும் அதிகரித்திருப்பது படிக்கும் பொழுது வருத்தமாகத்தான் இருக்கிறது. பெண்களை மையப்படுத்திய கதைகளில் வரும் மகளிரைப் போலவே  இந்த நூற்றாண்டிலும் பெண்கள் அவலங்களைச் சந்தித்துக் கொண்டு இருப்பது தான் இத்தொகுப்பை படித்து முடிக்கையில் எண்ணத் தோன்றியது.

நன்மாறன் கோட்டைக்கதையில்  தானுண்டு தன் வாழ்க்கையுண்டு என்றிருந்தவரை வலுக்கட்டாயமாக சல்லிக்கட்டில் அவருடைய மாட்டையும் கலந்து கொள்ள வைத்து வெற்றி பெற்றவுடன் வெறி பிடித்த மனித மிருகங்கள் மனைவி, குழந்தைகள் முன் மாட்டையும் உரிமையாளரையும் கொலை செய்வது சாதீய வெறியின் உச்சம். இப்படியெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை என்று கடந்து விட முடியாது. கல்லூரியில் படித்த காலத்தில் ஒரு குழுவாக வகுப்பிற்கு வந்து தலைநிமிர்ந்து யாரிடமும் பேசாமல் பழகாமல் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டிருந்த மாணவர்களை ஆச்சரியத்துடன் கடந்திருக்கிறேன். வங்கியின் உயர் பதவியில் இருந்தவர் கூட தயக்கத்துடன் தான் பேசுவார். இவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறவர் ஏன் இப்படி இருக்கிறார் என்றெல்லாம் நினைத்ததுண்டு!  அவர்களும் படித்து தகுதிகளை வளர்த்துக் கொண்டு வந்தாலும் காலம் காலமாக அடங்கிச் சென்று உளவியல் ரீதியாக ஆதிக்க சாதியினரை எதிர் கொள்ளத் தயங்கியதன் விளைவால் அன்று அப்படி இருந்தார்கள். இன்று மாறிக் கொண்டு வருகிறார்கள்!  சமூகத்தில் முன்னேற மற்ற சாதியினரின் ஆதரவும் வேண்டும். இன்றைய நிலையில் இவ்வாறு எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில் அரசியல்கட்சிகள் தெளிவாகவே இருக்கிறது.

போலீஸ் கதையில் தன்னை விட தாழ்ந்த சாதியினரின் இறந்த உடலைத் தொட்டுத் தூக்கி மயானம் வரை கொண்டு சென்றது தனக்கும், தன் குடும்பத்தினருக்கும், தான் சார்ந்த சமூகத்திற்கும் எத்தனை கேவலமென புலம்பும் மனித அவலம்! பரியேறும் பெருமாள் படம் கண்முன்னே வந்து சென்றது! இரட்டைக்குவளை இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பதும் சாட்சி தான். ஆதிக்க சாதியினர் தெருவைக் கடந்து செல்லும் பொழுது காலணியின்றி நடக்க வேண்டும், இறந்த உடலை அவர்கள் குடியிருக்கும் வீடுகள் வழியே எடுத்துச் செல்லக் கூடாது, பொதுக்கிணற்றில் மற்றவர்களுடன் தண்ணீர் எடுக்கக் கூடாது, பள்ளிகளில், பொது இடங்களில் என்று இன்று வரையிலும் தொடரும் வன்மங்களென இக்கதையின் வாயிலாக இன்றைய நிகழ்வுகள் நிழலாடுகிறது!

பணியாரக்காரம்மா  கதையிலும் வெவ்வேறு சாதிக்காரர்கள். இளம்பருவத்தில் அறிந்த ஆனால் சொல்லிக்கொள்ளாத காதல் வயதான பிறகும் இலைமறைகாயாக தொடர்ந்து காமத்தில் முடிவதாய் சொல்லியதிலும் ஆதிக்க சாதியினரை அனுசரித்து செல்வது தான் தனக்கு நல்லது அது தான் முறை என்பது போலவே கதைநாயகியின் செயல்கள் இருப்பதும் அடிமைப்பட்ட மனது அப்படித்தான் இருக்கும் என்று சொல்கிறாரோ ஆசிரியர்? காதல் என்று அவள் நினைப்பதும் அத்தனை வருடங்களிலும் மனைவியுடன் கூட உறவு கொள்ளாமல் நாகம்மாவுடன் ஒரு நாள் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கும் அவனால் காதலை விட சாதி ஜனங்களுக்கு அஞ்சுவதும்  அவளுடன் ஓரிரவு இருந்து விட்டுத் தூர தேசம் செல்வதில் என்ன நியாயம் என்று சொல்லாமல் விட்டுவிட்டாரோ ஆசிரியர்?

நம்பாளு கதையில் சாதிக்கட்சிகளும் சாதிமக்களும் எப்படியெல்லாம் அரசியல் செய்கிறார்கள் என்பது கண்கூடாகவே நடந்தாலும் கதையாக படிக்கையில் உள்ளரசியல் தெளிவாக தெரிகிறது. இன்று நம்கண்முன்னே நடக்கும் அரசியல் கூத்துகளை மனதில் வைத்து ஆசிரியர் எழுதியுள்ளது போல் இருக்கிறது.

கடவுள் என்ற ஆதிசக்தியை வைத்து எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள், மக்களும் ஏமாறுகிறார்கள். ஏழைப்பெண்ணின் நம்பிக்கையை பணத்திற்காக ஏமாற்றுபவனை பிராது மனு கதை சொல்லாமல் சொல்கிறது  கடவுளின் பெயரால் சுரண்டல் செய்யும் இன்றைய ஏமாற்றுக்காரர்களை.

பெண் என்பவள் பிண்டமல்ல. அவளுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. அவளை இழிவாக நடத்தும் கணவனை அவள் நினைத்தால் கேவலப்படுத்த முடியும் என்று தலைக்கடன் கதையில் சொல்கிறாரோ ஆசிரியர்?

 ஏழை சித்தாள் பெண்ணை எப்படியும் இணங்க வைத்து விடலாம் என்று தப்புக்கணக்கு போடும் படித்தவனின் இறுமாப்பு.  சாந்தா கதையில் விளிம்புநிலைப் பெண்களின் அன்றாட அவஸ்தையை விளக்குகிறார்.  அலுவலகத்தில், வேலை செய்யும் இடங்களில் ஆண்களிடம் அகப்பட்டு அல்லல்படும் அநேகப் பெண்களைப்  பொருத்திக் கொள்ளலாம்.

பேருந்தில் பயணிக்கும் பல பெண்கள் அனுபவித்த, அனுபவிக்கும் சிரமங்களை ஆலடி பஸ் கதை கண்முன்னே நிறுத்துகிறது.

கட்சிக்காரன் கதை இன்றைய அரசியல் நிலவரத்தை தத்ரூபமாக விவரிக்கிறது. வாழ்நாள்  முழுவதும் தத்தம் குடும்பங்களை மறந்து கட்சிக்காக உழைப்பவனின் ரத்தத்தைச் சுரண்டும் கட்சிகள்.  தேர்தல் என்று வந்தால் வெற்றி பெற பணமும், அதிகார பலமும் , சாதி அதிகாரமும் மட்டுமே வேண்டியிருக்கிறது. கட்சிக்காக மாடாக உழைத்தவனைப் பொருட்படுத்தாத தலைவர்கள் , கட்சியை வளர்க்கவும், கோஷம் போடவுமே அவர்களுக்கு வேண்டிய மனிதர்களை எப்படி நடத்துகிறார்கள் என இக்கதை நடைமுறை அரசியலை கண்முன்னே நிறுத்துகிறது.

எளிமையாக  வாசிக்கத்தூண்டும் வகையில் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களத்தில். பல்வேறு சமூக அடுக்குப் பெண்களின் அவதிகளை நிதர்சனத்தை கதையின் வாயிலாக அம்பலப்படுத்துகிறார் ஆசிரியர்.

இன்று நகமும் சதையுமாய் கலந்து விட்டிருக்கிறது சாதீய வெறி. சாதிகளை ஒழிக்கிறோம் என்று நெய் வார்த்து அணையாமல் வளர்த்துக் கொண்டிருக்கிறது இன்றைய அரசியல். கைத்தேர்ந்த அரசியல்வாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் கற்ற கல்வியும் அவர்களை சாதீய மனப்பான்மையிலிருந்து விலகி வெளிவர வழிநடத்தவில்லை. எங்கு சென்று கொண்டிருக்கிறது மானிடம்? வெறும் பொருளாதார முன்னேற்றமே மனித முன்னேற்றமா? என்று உணரப்போகிறோம்  நம் தவறுகளை? அடுத்த தலைமுறையாவது விழித்துக் கொள்ளுமா?


No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...