Sunday, May 17, 2020

தொழிலாளர் தினம்

மதுரையில் சில வருடங்கள் தியாகராஜர் குடியிருப்பு பகுதியில் குடியிருந்தோம். அங்கு இருந்தவர்கள் பலரும் தியாகராஜர் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள். அங்கு வாழ்ந்த காலத்தில் தான் கடைநிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கண்கூடாகப் பார்க்க நேரிட்டது.

அந்தக் குடியிருப்பு பகுதியை குறைந்த விலைக்குத் தொழிலாளர்களுக்குப் பத்திரம் போட்டுக் கொடுத்திருந்தார்கள். ரேஷன் கடை அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் என்று அங்கு கிடைப்பதை வைத்துத் தான் வீடுகளில் சமைப்பார்கள். பல வீடுகளிலும் மண்ணெண்ணெய் மற்றும் கரி அடுப்புகள் மட்டுமே இருந்தது. சிலர் சுற்றுப்புறத்திலிருந்து சுள்ளிகளைப் பொறுக்கி வருவார்கள். வீடுகளில் காய்கறி செடிகள், அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, பப்பாளி, தென்னை, வாழை மரங்கள் இருக்கும். இல்லாதவர்களுக்கும் கொடுத்துத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள். பல வீடுகளிலும் பால் கூட வாங்கிப் பார்த்ததில்லை. குறைந்த வருமானம் தான். சோறு பொங்குவார்கள். காய்கள் போட்டு ஒரு குழம்பு, கீரை என்று ஒரு வேளை உணவு தான் பெரும்பாலான வீடுகளில். குழந்தைகள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொள்வார்கள். பெரியவர்கள் பாட்டுக் கேட்டுக் கொண்டு வேப்ப மர நிழலில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு, அக்கம்பக்கத்து ஆட்களுடன் உறவு முறை பெயரைச் சொல்லி ஒரு குடும்பமாக அவர்களுடைய வாழ்க்கை மிகவும் சாதாரணமான ஒன்று. ஆண்கள், பெண்கள் இருவரும் ஷிஃப்ட் முறையில் வேலைக்குச் சென்று, குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.

என் தங்கை மருத்துவர் என்பதால் உடல்நிலை சரியில்லாதவர்கள் ஊசி போட்டுக்கொண்டு செல்வார்கள். அதற்கு கூட பணம் கொடுக்க முடியாத நிலையில் தான் பலரும் இருந்தனர். மருந்து மாத்திரைகளைக் கூட இலவசமாக கேட்டு வாங்கிச் செல்வார்கள். அன்றைய நிலையில் எங்களுக்கும் அது கூடுதல் செலவு தான். ஆனாலும் முடிந்தவரை உதவிகள் செய்தோம்.

ஒரேடியாக ஆலையை மூடியவுடன் அனைத்துக் குடும்பங்களும் தத்தளித்துப் போயின. தங்கள் குழந்தைகளாவது நன்கு படித்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்று பலரும் சிரமப்பட்டு அவர்களைப் பள்ளிக்கு அனுப்பி, இன்று அடுத்த தலைமுறை நல்ல உத்யோகத்தில் இருக்கிறார்கள். குடும்பங்களும் நன்கு வளர்ச்சியடைந்து வீடுகளும் மாடி வீடுகளாகி அந்தக் குடியிருப்பு பகுதியே உருமாறி விட்டிருக்கிறது.

ஒருவேளை உணவு உண்டு தங்கள் குழந்தைகளுக்காக உழைத்த அன்றைய தொழிலாளர்களின் வியர்வையில் இன்றைய தலைமுறை முன்னேறி இருக்கிறது. மகிழ்ச்சி.

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் அந்த ஏழ்மையிலும் சிரித்துக் கொண்டு வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைத்த மனிதர்கள்! இன்றும் நான் ஊருக்குச் சென்றால் தவறாமல் சந்திக்கும் பொழுது அதே பாசத்துடன் கரிசனத்துடன் மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள். மனிதம் ஜெயிப்பது இங்கு தான் என்று நினைத்துக் கொள்வேன்.





No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...