Saturday, May 9, 2020

சான்ஃப்ரான்சிஸ்கோ 4 - Grand View Park & Labyrinth Lookout

SFO 1
SFO 2
SFO 3

"கிங்டம் ஆஃப் நூடுல்ஸ்னு ரொம்ப பிரபலம் இங்க. உனக்கும் பிடிக்கும்மா".

அங்கே சென்றால் பெரிய வரிசை காத்திருந்தது.
எப்பவுமே இப்படித்தான். நாங்கள் அடிக்கடி இங்கு வருவோம்.

"இவ்வளவு சாப்பாட்டுக் கடைகள் இருக்குல்ல இந்த ஏரியாவுல?"

இங்கு இருக்கிறவர்கள் பெரும்பாலும் வெளியே சாப்பிடுபவர்கள் போல. வேலை முடித்து சாப்பிட்டு வீட்டுக்கு வந்து சேருவார்களோ. நீண்ட நாள் வேலை, நல்ல சம்பளம். பிறகென்ன? எங்கும் கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்தவர்கள் கூட்டம். நம்மூர் இளைஞர்கள், இளைஞிகள் நிறைய!

எங்களை அழைத்தவுடன் உள்ளே சென்றோம். இருபது பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் இருந்தது. நிறைய சப்பை மூக்குக்காரர்களும் சில இந்தியர்களும் போனால் போகிறதென்று ஓரிரு அமெரிக்கர்களும்!

"இங்க ஸ்கேலியன் பேன்கேக் நல்லா இருக்கும். ஒரு சிக்கன் டிஷ் டம்ப்ளிங்ஸ் ஆர்டர் பண்ணலாம். வேற ஏதாவது வேணுமாம்மா? சூப் சாப்பிடறியா? நல்லா இருக்கும்."

"ஓ நோ! இதுவே ஜாஸ்தி தான்."

அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் பெரிய கிண்ணம் நிறைய சூப், தட்டு நிறைய காய்கறிகள், கோழி என்று வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார்கள்.

எண்ணையில் பொரித்த ஸ்கேலியன் பேன்கேக் மொறுமொறு என்று நன்றாக இருந்தது. கூடவே சைனீஸ் டீ.

படிக்கிற மாணவ மாணவிகளோ வேலைக்குச் செல்பவர்களோ இந்தியர்கள் ஏழு எட்டு பேர் சத்தம் போட்டுக் கொண்டே அமர்ந்து பல உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கூடவே ஒருவனின் அமெரிக்கத் தோழி. விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தான். 🙂

முடிந்தவரை சாப்பிட்டு விட்டு மீதியைக் கட்டிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டு நாங்களும் நடையைக் கட்டினோம். வெளியில் இன்னும் பலர் காத்துக் கொண்டிருந்தார்கள்.

"இப்ப எங்க போறோம் நிவி? ரொம்ப தூரம் நடக்கணுமா?" வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு நடக்க வேண்டுமே என்று நினைத்தாலே... 

"மெதுவா நடப்போம்மா. ஒன்னும் அவசரமில்லை."

செல்ஃபோனில் GPS போட்டுக் கொண்டாள். அரைமணி நேரம் நடக்கணுமா! கிழிஞ்சது கிருஷ்ணகிரி! ஏற்கெனவே 13000 ஸ்டெப்ஸ் நடந்துருக்கோம்.

ம்ம்ம்ம்... ஊர சுத்திப்பார்க்க நடந்து தானே ஆகணும்.

இருவரும் பேசிக்கொண்டே Inner Sunset தெருமுனைக்கு வந்து சேர்ந்தோம். அதோ அங்கே போகணும்.

"ஐயோ! அது ஏதோ மருதமலை மாதிரி உச்சியிலே இருக்கு. 60 டிகிரி சாய்வுல வேற இருக்கே!"

"எல்லாம் உன்னால முடியும் வாம்மா."

அபிராமி! அபிராமி!

நியூயார்க்கில் பார்க்காத ஸ்டைலில் வீடுகள் எல்லாம் நெருக்கமாக இருந்தது. பெரிய பெரிய கிரில் கதவுகள். நிறைய திருட்டுப்பயமோ? மருந்துக்கு கூட வீட்டின் முன் புல்வெளிகள் இல்லை. சிறுசிறு பூந்தொட்டிகள், செடிகள் வைத்திருக்கிறார்கள். நகரை விட்டுத் தொலைவில் இருப்பதால் குடும்பங்கள் வாழ ஏதுவான இடம். ஆனாலும் விலை கூடுதலாக தான் இருக்கும் என்றாள் நிவி. ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு விதமாக இருந்தது. ஆல்பனியில் ஒரே மாதிரியாக பார்த்து பார்த்து இது வித்தியாசமாக தெரிந்தது. 

"வந்து சேர்ந்துட்டோம்மா. இப்ப இந்த படிகள்ல ஏறணும்."

"என்னது? படியா? இன்னுமா?"
 இப்பவே கண்ண கட்டுதே! முருகா! நன்றாக காரில் உட்கார்ந்து பழகி விட்டிருக்கிறது உடம்பிற்கு. நடக்க வேண்டும் என்றால் யோசிக்கிறது 😞

"அப்பாவும் நானும் இங்க வந்தோம்."

"அவர் கார்ல தான கூட்டிட்டு வந்தார்?"

"வாம்மா. ஜிலேபி சாப்பிட்டுட்டே மெதுவா ஏறிப் போகலாம். இங்க வந்திருந்தப்ப அப்பா உன்னைய ரொம்ப மிஸ் பண்ணினார். அம்மா இருந்திருந்தா நல்லா என்ஜாய் பண்ணி இருந்துருப்பான்னு உன்னைய பத்தியே பேசிட்டு இருந்தார்."

ம்ம்ம்ம்.

"இங்க 150 படிகள் வரை இருக்கும். மூன்றோ நான்கோ வழிகள் இருக்கிறது. இதுக்குப் பேரு தான் Hidden Garden Steps. வழியில் நிறைய செடிகள், பூக்கள், மரங்கள் பார்க்கலாம்."

 கீழிருந்து பார்த்தால் ஒவ்வொரு படிக்கட்டிலும் வன்ணங்கள் தீட்டியிருக்கிறார்கள். பார்க்க அழகாக இருந்தது.

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை நினைவில் ஓட, நூறாவது படி அருகில் மூச்சு வாங்க... கொஞ்சம் இளைப்பாறி விட்டு மீண்டும் தொடர்ந்தோம். காட்டுச்செடிகள் நிறைய. பூக்கள் இப்பொழுது தான் மொட்டு விட்டிருந்தது.

"அவ்வளவு தாம்மா! வந்துட்டோம் பாரு!"

எனக்கே பெருமையாக இருந்தது. ஏறிவிட்டேனே! வளைந்து செல்லும் மேடுகளில் வீடுகள்! 
"இன்னும் கொஞ்சம் தூரம் மலை ஏறினா நல்ல வியூ கிடைக்கும்."

என்னது? இன்னுமா? ஷ்ப்ப்ப்ப்ப்பா! தண்ணிய கொண்டா."

ஆளைத் தள்ளிவிடும் போல் நல்ல காற்று.ம்ம்ம். அப்படியே மேலே கூட்டிட்டுப் போனா நல்லா இருக்கும். இப்படி பக்கவாட்டுல தள்ளி விடுதே! மீண்டும் படிகள். ஆக மொத்தம் 200 படிகளாவது ஏறியிருப்பேன் அன்று.

மேலே சென்றால் அவ்வளவு கூட்டம். பெரிய பெரிய மரங்களின் நிழலில் ஒரு சிறு மலை. இதுதான் Grand View park .

அங்கிருந்து சான்ஃப்ரான்சிஸ்கோ நகரின் கடல் எல்லை வரை தெரிகிறது. சீரான தெருக்கள், வீடுகள். பளிச்சென்று கண்ணைக் கூச வைக்கும் பகல் வெளிச்சம். சுற்றி சுற்றி வந்து படங்கள் வீடியோக்கள் எடுத்துக் கொண்டோம். அங்கும் பல இந்தியர்கள். எங்கெங்கு காணினும் நம் மக்களடா!

"இப்பொழுது வேறு வழியில் இறங்கிச் செல்வோம்ம்மா. இந்தப் பாதை உனக்கு ரொம்ப பிடிக்கும். 16th avenue Inner Sunset Moraga Steps னு சொல்வாங்க."

படிகளில் மொசைக் துண்டுகளைக் கொண்டு வடிவங்கள் அமைத்து வண்ணம் தீட்டியிருக்கிறார்கள் இரு கலைஞர்கள். இன்று மக்கள் விரும்பி வந்து பார்க்கும் இடமாகியிருக்கிறது.

அங்கே மக்கள் கூட்டமாக ஜோடிஜோடியாக நின்று படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எடுக்கும் விதத்திலேயே தெரிந்து விட்டது இது இன்ஸ்டாகிராம் கோஷ்டிகள் என்று, தாய் பாஷையில் வழியில் வரும் சிலரை கிண்டலடித்துக் கொண்டே மற்றவர்களுக்கு படங்கள் எடுக்க உதவிக்கொண்டே இறங்கி வந்தோம்.

படிகள் முழுவதும் ஒவ்வொரு தீம். உடைந்த சிப்பிகள் கொண்டு கடலிலிருந்து வான் நட்சத்திரம் வரை நீல் வண்ணத்தில் ஓவியமாக ! இரவு நேர வான் அழகை கருப்பு வண்ண பின்னணியில் , மலர்கள், கடல் விலங்குகள், பறவைகள் என்று. இந்நகருக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும் பொழுது கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்.

மலையுச்சியிலிருந்து அழகான நகரின் மொத்த வியூவும் ஏறிய களைப்பை போக்கி விட்டது. 163 படிகளைப் பார்த்துக் கொண்டே இறங்கியதில் நல்ல வேளை இந்த இடத்தை மிஸ் பண்ணவில்லை என்று தோன்றியது.

"உன் பையன் இந்த படிகள்ல ஏற எவ்வளவு கஷ்டப்பட்டான் தெரியுமா? சரியான சோம்பேறி. நீ பரவாயில்ல. ஏறிட்ட. அவன் இங்க வந்து தின்னுக்கிட்டே இருந்தான். இதை வாங்கிக்கொடு அத வாங்கிக்கொடுன்னு."

"அக்காகிட்ட தான உரிமையோட கேட்க முடியும். அதான்."

"நீ அவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டன்னு எவ்வளவு சந்தோஷமா இருந்தான். அப்பாவுக்கும் ஒரே சந்தோஷம். என் பொண்ணு என்னைய எப்படியெல்லாம் கவனமா பார்த்துக்கிட்டான்னு. யூ ஆர் எ குட் டாட்டர் ,எ கிரேட் சிஸ்டர் நிவி. வி ஆர் வெரி லக்கி."

சிரித்தாள், "உனக்குப் பண்ணாம யாருக்கும்மா பண்ண போறேன். நீ எங்களுக்குப் பண்றத விடவா? நீ இப்படி தனியா வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். யாரும் உன்னைய தொந்தரவு பண்ண மாட்டாங்க. நாம ரெண்டு பேர் மட்டும் தான்."

மகிழ்ச்சியாக இருந்தது.

"இங்கிருந்து கடலோரம் சென்று வருவோம். நான் ஊபருக்குச் சொல்லிட்டேன்ம்மா."

நல்ல வேளை! நடந்து போகலாம் என்று சொல்லாமல் விட்டாளே என்று சந்தோஷமாக இருந்தது.

"என்னம்மா, டயர்ட் ஆயிட்டியா? இப்ப நாம போற இடம் கூட உனக்கு ரொம்ப பிடிச்சது தான். நான் அப்பாவையும் அங்க கூட்டிட்டுப் போனேன். சன்செட் பார்க்கலாம்."

இப்பவே அலைகள் சத்தம் கேட்க ஆரம்பிச்சிடுச்சே!ஊ ல ல லா...

வழியில் ஒரு பெரிய Dutch Windmill. நெதர்லாண்ட்ஸ் ஞாபகம் வந்தது.

Lands End Lookoutல் வண்டி இறக்கி விட, அங்கிருந்து மீண்டும் நடை.

எங்கிருந்து பார்த்தாலும் கோல்டன் கேட் ப்ரிட்ஜ் தெரிந்தது. அருகில் செல்ல செல்ல இன்னும் தெளிவாக. நல்ல வேளை மூடு பனி மேகங்கள் இல்லாத அழகான நாள். எங்கள் அதிர்ஷ்டம் தான்!

வழியில் கலிஃபோர்னியா பறவைகள்! க்ளிக் க்ளிக்...

Lands End Labyrinth வரை நடந்து சென்றோம். வழியெங்கும் பாறைகளில் நுரை பொங்க முட்டி மோதும் அலைகள் ! அமைதியான நீலக்கடல் கரையோரங்களில் ஆர்ப்பரிக்கும் ஓசை. இன்னிசை தான். அங்கும் நல்ல மக்கள் கூட்டம். ஜோடிஜோடியாக , குழந்தைகளுடன் கடலை நோக்கிச் செல்பவர்களுடன் நாங்களும் சேர்ந்து கொண்டோம். கட்டிப்பிடித்துக் கொண்டு, முத்தங்களைப் பரிமாறிக்கொண்டு காதல் ஜோடிகள் கூட்டம். உயர குதித்து அலைகளின் மேல் படம் எடுத்துக் கொள்பவர்கள், அலைகளைத் தொட முயன்ற குழந்தைகள், கரையை முத்தமிட்டுச் செல்லும் அலைகளை அமைதியாக வேடிக்கைப் பார்ப்பவர்கள் என்று பலவிதமான மக்கள். Labyrinth மலைக்குன்றின் மேல் நல்ல கூட்டம். பெரிய சரக்கு கப்பல் ஒன்று கடல் மேல் அழகாக அசைந்து கொண்டே சென்றது. கடற்கரையோர கல் மீது அமர்ந்து கையில் வைத்திருந்த மீதி பேன்கேக்கையும் சாப்பிட்டு முடித்தோம்.

கடலுக்குள் அஸ்தமனமாகும் சூரியன் கொள்ளை அழகு. அங்கிருந்து கிளம்ப மனமில்லை. குளிர் அதிகமாக, "கிளம்பலாம்மா. இப்ப போனா தான் சரியா இருக்கும். இல்லைன்னா இருட்டிடும்."

ஆஹா!வேகமாக குடுகுடுன்னு கீழிறங்கினேனே.. இப்ப மேலே ஏற வேண்டுமே! நல்ல வேளை! அவ்வளவு சிரமம் இருக்கவில்லை. கூட்டமும் மெல்ல மெல்ல கலைந்து சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்திலும் சிலர் கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். மாலையும் இரவும் சந்திக்கும் நேரம் அழகு தான் அதுவும் கடற்கரையோரம்.

வண்டி நிற்கும் இடத்திற்கு வருகையில் வானம் வர்ணஜாலத்தை இறைத்துக் கொண்டிருந்தது. இதுவரையில் இப்படியொரு அழகை நான் கண்டதில்லை. ஒவ்வொரு நிமிடமும் இறைவனின் கைவண்ணத்தில் புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டுக்கொண்டே இருந்தது கொள்ளை அழகு.காண கண்கோடி வேண்டும். கிளம்பிச் செல்ல மனமே இல்லாமல் கிளம்பி வந்தோம். அப்பா வந்திருந்தா இன்னும் இங்க இருந்திருப்போம்ல.

மறக்க முடியாத நாளும் இனிய மாலையுமாகிப் போனது அந்நாள்!

வீட்டிற்கு வந்து சேரும் பொழுது இரவு 7.30 மணி. அன்று மட்டும் 23,000 ஸ்டெப்ஸ் நடந்திருந்தோம். காலை முதல் இரவு வரை ஒவ்வொன்றும் மறக்க முடியாத காட்சிகள்.

நிவிக்கு நன்றி சொல்லி ஈஷ்வருக்கும் சுப்பிரமணிக்கும் படங்களை அனுப்பி விட்டு அந்நாள் தந்த சுகானுபவத்தை அசை போட்டுக் கொண்டே தூங்கிப் போனேன்.

SFO4Photos

SFO 5 Mission Street



No comments:

Post a Comment

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...