கொரியன் நாடகங்கள் வரிசையில் அடுத்தது "Because this is my first life". இதுவும் காதலை மையப்படுத்திய நாடகம் தான். ஆனால் அரைத்த மாவையே அரைக்காமல் வேறு ஒரு கதைத்தளம். நாயகி ஒரு எழுத்தாளர். வளர்ந்து வரும் வேளையில் அவருடைய மேலாளர் ஒருவரின் தவறான அணுகுமுறையால் வேலையைத் துறக்கிறார். நகரில் வாடகை தர வசதியில்லாததால் ஒப்புதல் திருமணம் செய்து கொண்டு பேருக்கு மனைவியாக வீட்டில் வசித்து வருகிறார். உம்மண்ணாமூஞ்சி கதாநாயகனைத் தெரிந்து கொண்டு மெல்ல மெல்ல காதலிக்கவும் செய்கிறார். அந்த உணர்ச்சியே இல்லாத ஜடம் போல் வரும் கதாநாயகனுக்குள்ளும் இரண்டாம் முறையாக காதல் அரும்புகிறது. அவளுக்காக எதையும் செய்ய தயாராகிறான். மூன்று பெண்களின் வாழ்க்கையில் காதல் என்பது எதுவரை... இப்படித்தான் போகிறது கதை.
இதில் பல சுவாரசியமான விஷயங்கள் அப்படியே நம் ஊரை பிரதிபலிக்கிறது. குடும்பத்தில் ஆண் குழந்தைக்குத் தரப்படும் கவனம், அங்கீகாரம் பெண் குழந்தைக்கு கிடைப்பதில்லை. வேலையிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள்! முப்பது வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பெண்களை அவமானமாக உணரச் செய்வது, கணவனுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை அம்மா மகளுக்கு கொடுப்பது, இறந்த பெரியவர்களுக்கான சடங்குகள் இப்படி பல.
கதாநாயகியாக வருபவர் தொடர் முழுவதும் சிரித்துக்கொண்டே தன் வாழ்க்கையை எதிர்கொள்கிறார். அவருடைய தோழிகளாக வருபவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக என்று எதிர்மறை எண்ணங்களே நம்மிடத்தில் தோன்றாமல் பொழுதுபோக்காக பார்க்க முடிவதில் இருக்கிறது கொரியன் நாடகங்களின் சுவாரசியம்.
இத்தொடரிலும் நன்றாக சாப்பிடுகிறார்கள். குடிக்கிறார்கள். நாயகி காலை உணவை ரசித்து ருசித்து சாப்பிடுவதைப் பார்த்தால் ஆஹா இதுவல்லவோ வாழ்க்கை என்று தோணுகிறது.
பூனையும், மழையும், மலை வீடுகளும், நகரப்பேருந்தும், சாலைகளும் அழகான இலையுதிர்காலம், பஞ்சுப்பொதிகளாக உதிரும் பனிக்காலம் என பருவநிலை மாற்றங்களும் தொடர் முழுவதும் கூடவே பயணிப்பது மேலும் அழகு.
குடும்பம், வேலை, காதல் கதை என ஒரு தமிழ் தொடரை எதிர்பார்ப்பது முட்டாள்தனமோ? வெட்டி செண்டிமெண்ட், அழுகை, கூச்சல் என்று நம்மை நாமே தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறோம் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில். என்று தான் திருந்துவோமோ?
இனி எண்ட தேசம் சவுத் கொரியா 💓💓💓
No comments:
Post a Comment