Saturday, May 9, 2020

சான்ஃப்ரான்சிஸ்கோ 1

இரு மாதங்களுக்கு முன் இதே நாட்களில் சான்பிரான்சிஸ்கோ நகரைச் சுற்றிக் கொண்டிருந்தோம் நானும் செல்ல மகளும். அன்று கோவிட்19 பற்றின தீவிர அச்சுறுத்தல் இல்லாதிருந்தாலும் சீனர்கள் பலரும் மாஸ்க் போட்டுக்கொண்டு விமானத்தில் பயணித்தது கொஞ்சம் கலக்கமாக தான் இருந்தது. ஆல்பனியிலிருந்து சரியான நேரத்திற்குப் புறப்பட வேண்டிய விமானம் எந்திரக் கோளாறு காரணமாக இந்தா அந்தா என்று மூன்று மணிநேர தாமதமாக புறப்பட்டதில் டெட்ராய்ட்ல் அடுத்த விமானத்தையும் தவற விட்டாயிற்று.

என்னடா லதாவுக்கு வந்த பெருஞ்சோதனை! நிம்மதியாக போனோம் என்று இருக்கிறதா? எப்படியாவது ஒரு தடங்கல்! ஹ்ம்ம்...

வீட்டுக்கு வந்துடு. நாளைக்குப் போகலாம். எப்படா கேன்சல் ஆகும்னு காத்திருந்தாரோ என்னவோ! டிக்கெட் வாங்கிய நாளிலிருந்து ஏண்டா வாங்கினோம் என்று புலம்பிக்கொண்டே இருந்தார். நீ பாட்டுக்குப் போயிடுவ. நான் மட்டும் இங்க தனியா என்ன பண்ணிட்டு இருக்கப் போறேனோ? சுப்பிரமணி கூட இல்ல.

தனியா இருக்கணும்னு ஆசைப்பட்டிங்கள்ல? நல்லா அனுபவிங்க. நிறைய சமைச்சு வச்சிருக்கேன். ஜாலியா இருங்க. முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேனாக்கும். வர மாட்டேன்.

டெட்ராய்ட்ல் தங்கி மறுநாள் காலையில் SFO செல்லும் விமானத்திற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொண்டேன். அதற்குள் பயணிகளிடையே சிறு கலவரமே நடந்து விட்டது. ஆறடி ஃப்ரெஞ்ச் அழகி வேலை நிமித்தமாக அடிக்கடி பறந்து வருவதால் இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா பாணியில் பாரிஸ் செல்ல வேண்டிய விமானத்தைத் தவற விட்ட சோகத்தில் புலம்பிக்கொண்டிருந்தார். இது அடிக்கடி நடக்கிறது என்று கையில் கதைப்புத்தகத்துடனும் காதில் பாட்டும் கேட்டுக் கொண்டே... அழகாய் இருக்கிறாய். ம்ம்ம்ம் ...இந்தப் பெண்கள் தான் எத்தனை அழகு! என்ன உயரம்! உடல்வாகு! அப்ப்ப்ப்ப்ப்பா!

கவுண்டரில் எனது முறை வந்து விமான நேரத்தை மாற்றிக் கொண்டிருந்த பொழுது சீன அமெரிக்கர் ஒருவர் உயரமாக தாட்டியாக ....ம்ம்ம்...இவங்க ஆளுங்க குட்டையா ஒல்லியா இருப்பாங்களே! இவர் ஒருவேளை இங்கு வந்து செட்டிலான அடுத்த தலைமுறையோன்னு தேவையில்லாத கேள்விகள் மண்டைக்குள் ஓட... அவரும் சினேகமாக சிரித்து வைக்க...

அலுவலக நிமித்தமாக வந்த இடத்துல இப்படி ஆயிடுச்சு. SFOல தான் இருக்கேன்.

பரஸ்பரம் பொதுவான விஷயங்கள் பேசி விட்டு விமானம் புறப்பட , டெட்ராய்ட்ல் டெல்டா அலுவலகத்தை நோக்கி நடந்தோம். பெரிய்ய்யய்யய்ய விமான நிலையம் தான்! இரவு தங்க ஹோட்டலுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள் . டாக்ஸி பிடித்துக் கொண்டு செல்லலாம். வவுச்சர் கொடுக்கிறேன் என்றார்கள். இரவு பதினோரு மணிக்கு பழக்கமில்லாத ஊர். அதுவும் டெட்ராய்ட்! தனியாக போக பயந்து ஹோட்டலில் இருந்து பிக்கப் செய்து கொள்ளும் வண்டிகள் இருந்தால் அதில் போகிறேன் என்றவுடன் தங்குமிடத்தை மாற்றினார்கள். சீனரும் சேர்ந்து கொண்டார். அப்பாடா! துணைக்கும் ஒரு ஆள் இருக்கிறார். பதினைந்து வயதிருக்குமோ ? அந்த சீனப் பெண்ணுக்கு! தயக்கத்துடன் அருகே வந்து நானும் SFO போகணும். உங்க கூட வரவா?

ஹோட்டலில் தங்க வவுச்சர் கொடுத்தார்களா?

இல்லை என்றவுடன் சீன ஆசாமி அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு கவுண்டரில் இருப்பவரிடம் விவரத்தைச் சொல்லி வாங்கி கொடுத்து விட்டார். அவளும் என்னுடன் வந்தமர்ந்தாள்.

எங்க படிக்கிற?

மேல்நிலைப்பள்ளியின் பெயரைச் சொன்னாள்.

சீனருக்கும் ஆச்சரியம்!

சீனாவிலிருந்து மேல்நிலைப்பள்ளிப் படிப்பிற்கு அனுப்பியிருக்கிறார்கள்! ம்ம்ம்ம்...

உங்கள் ஊரில் கொரோனா எப்படி இருக்கிறது?

அவள் அப்பா அம்மா பெய்ஜிங்ல் வீட்டுச் சிறையில் ஒரு மாதமாக இருக்கிறார்கள். போராடிக்கிறதாம். பாவம்! என்றாள்.

அமெரிக்காவில் கொரோனா வாசல் வரை வந்து விட்டிருந்த நேரம். அசட்டையாகத் தான் இருந்திருக்கிறோம்.

ஐபிஎம்மில் வேலை பார்க்கிறேன். எனக்கு அலுவலகத்திலிருந்து ஹோட்டல் புக் பண்ணச் சொல்லிவிட்டேன்.நாளை பார்க்கலாம் என்று குதிகால் செருப்பணிந்த அமெரிக்கப் பெண்மணி கிளம்பி விட்டார். இரண்டு மணிநேரத்தில் சிலரின் அறிமுகமும், பொழுது போகாமல் பேசிய பேச்சுகளும்... மனிதர்கள் அவ்வளவு மோசமில்லை தான் என்று புரிய வைக்கும் தருணங்கள்

டெட்ராய்ட்ல் வண்டி ஓட்டுபவர்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் போல. முரட்டுத்தனம் வண்டி ஓட்டுவதிலும்! பேச்சில் தன்மை இல்லை. அமெரிக்கர்களுக்கு முற்றிலும் கசப்பான அனுபவமாக இருந்திருக்க வேண்டும். முதன்முறையாக இப்படியொரு அனுபவம் எனக்கும். பத்திரமாக போய் சேர்ந்தவுடன் கம்பளைண்ட் செய்ய வேண்டுமென நினைத்துக் கொண்டேன். செய்தும் விட்டேன். என்னுடன் இருந்த சீனரும் ஆமோதித்தார்.

வழக்கம் போல், மன்னிப்பு கேட்டார்கள்.

22 வருடங்களுக்கு முன் தனியாக ஹோட்டலில் தங்கி இருந்த மனநிலையிலிருந்து முற்றிலும் மாறி இருக்கிறேன்! அன்று இரவு முழுவதும் டிவியை அலற விட்டு விளக்குகளை அணைக்காமல் பயந்து கொண்டு தூங்காமல் கண்விழித்திருந்தேன். சரியான பயந்தாக்கொள்ளி தான்! இன்று களைப்பு, நள்ளிரவு, குளிர். அறைக்குள் நுழைந்த சில நிமிடங்களில் தூங்கி விட்டேன்.

ஐந்தரை மணிக்கெல்லாம் சீனப்பெண் கதவைத் தட்ட, அதற்குள் நானும் தயாராகி இருந்தேன். இருவரும் சேர்ந்து வண்டியில் புறப்பட்டோம். ஆறு மணிக்கு -7 டிகிரி பனிக்குளிரில் மீண்டும் விமான நிலையப் பயணம். ஊர் போய் சேர்ந்தால் போதும் என்றிருந்தது.பனிக்கால சூரியோதயம் அற்புதமாக வானில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

யாராவது தங்கள் பயணத்தை ரத்து செய்து வேறு நேரத்திற்க்கு மாற்றிக் கொண்டால் $300 தருகிறோம் என்று கூவிக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு விமானத்தைத் தவற விட்டவர்கள் இந்த விமானத்தில் பயணிப்பதால் வந்த குழப்பமாக இருக்கலாம்.

விரைவில் விமானம் புறப்பட...அப்பாடா என்றிருந்தது. பனிபடர்ந்த ஏரிகளும், வீடுகளும் திடீரென்று மாறிய நிலப்பரப்பு. செந்நிற மலைக்குன்றுகள்... யூட்டா... நினைத்தாலே ஆனந்தமாக இருந்தது. கொலராடோ பனிமலைகள், வறண்ட நெவாடா... ஜோக்கர் படம் பார்த்து முடித்து எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. நடுநடுவே சில க்ளிக்குகள்!

ஆ! பச்சை நிறமே பச்சை நிறமே... வந்தே விட்டது சான் பிரான்சிஸ்கோ!

மெல்ல மெல்ல விமானம் இறங்க... காத்திருக்கும் என் செல்லத்தைத் தேடி மனம் பரபரக்க...





No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...