அட நம்ம "Crash Landing on you" கதாநாயகி. இத்தொடரில் முப்பது ப்ளஸ் கதாபாத்திரம். அவரின் தோற்றம் "Crash Landing on you" போல பளிச்சென்று இல்லை. ஆனால் அதே அழகு😊
தன் சகோதரியின் தோழியை காதலிக்கும் இளைஞன். நட்புடன் ஆரம்பித்து தன்னையறியாமல் அவனின் காதலில் கரையும் நாயகி. வயது வித்தியாசம் இங்குள்ள பிரச்னை. அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.
இத்தொடரிலும் ஆண்களால் வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் அவமானங்கள், வேறு வழியின்றி அவ்வலியுடனே வாழும் பெண்கள், அதிகராத்தில் இருப்பவர்கள் நடத்தும் கண்துடைப்பு நாடகம் என்று நாம் கேட்கும், படிக்கும் பல விஷயங்களும் காட்சிகளாக. அம்மாவாக வருபவரின் கோபமும் சுடு வார்த்தைகளும் ஊர் பேச்சுக்குப் பயந்து மகளை கண்டிப்பதும் தமிழ்த்தொடர்களை நினைவூட்டும். நகர வாழ்க்கை, குடியிருப்பு வீடுகள், அழகிய தெருக்கள், சவுத் கொரியாவின் அழகையும் ரசிக்க முடிகிறது.
கண்கள் இடுங்க அழகிய சிரிப்புடன் ஸ்டைலாக சைக்கிளில் வரும் நாயகன். "அலைபாயுதே" மாதவனைப் போல் சோ க்யூட் :) அக்காவின் நெருங்கிய தோழி. நண்பனின் அக்கா என்று தெரிந்திருந்தும் அவள் மேல் வரும் காதல். அவளுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக! அப்படி ஒரு தீவிர காதல்! வீட்டில் அப்பாவும் தம்பியும் வேறு வழியின்றி காதலுக்குப் பச்சைக்கொடி காட்டினாலும் அம்மாவின் பிடிவாதம். மகளை வார்த்தைகளால் சாட, பெற்றோர்கள் விருப்பமின்றி திருமண முடிவைத் தள்ளிப்போடும் நாயகி. நமக்கு வெயில் எப்படியோ அப்படி மழை முக்கிய அங்கமாக கொரியன் நாடகங்களில் வருகிறது.
"சிக்"கென்று இருக்கிறார்கள் கொரியப் பெண்கள்! சூப்பும் கிம்ச்சியும் செய்யும் மாயம் போல. தயிர் சாதத்திற்கு மாங்காய் ஊறுகாய் போல் ரேமன் நூடுல்ஸுக்கு கிம்ச்சி. நண்பர்களின் வீட்டிற்கு கிம்ச்சி கொடுத்து அனுப்புகிறார் அம்மா. என்ன அழகாக உணவுகளை கிண்ணங்களில் வைத்து மேஜையைச் சுற்றி அமர்ந்து சாப்பிடுகிறார்கள்! நம் ஊர் நாடகங்களில் ரசித்து ருசித்து சாப்பிடுவது போல எந்தவொரு காட்சியும் நினைவில் வரவில்லை. நமக்குத்தான் அடுத்தவனைப் பழி வாங்கவே நேரம் சரியாக இருக்கிறதே!
இத்தொடரில் என்னை மிகவும் கவர்ந்த மற்றொரு அம்சம் காட்சிகளுக்கு ஏற்றவாறு பின்னணியில் வரும் பாடல்கள் தான். மைக்கேல் பூப்லேயின் பிரபலமான பாடலை கொரிய ரசிகர்களுக்காக சிறிது மாற்றி இருந்தாலும் கேட்க இனிமை.
கொரியன் மாதவனுக்காக அடுத்த சீரியலும் பார்த்து முடிச்ச்ச்சாச்சு😍😍😍
இனி எண்ட தேசம் சவுத் கொரியா
எண்ட ஹீரோ....💓💓💓
.
No comments:
Post a Comment