Saturday, August 15, 2020

குறைந்த தண்டனை, அதிக நீதி

இன்னும் மூன்று மாதங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தொற்று நோய்ப் பரவல், வேலையில்லா திண்டாட்டம் , பொருளாதார பாதிப்புகளுடன் “Black Lives Matter” இயக்கமும் அரசிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டங்களையும் போராளிகளையும் தீவிரமாக எதிர்த்து முடக்குவதில் இருக்கும் அரசியலின் அடக்குமுறை மக்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.


மே 25, 2020 அன்று மினியாபொலிஸ் நகரில் கருப்பர் இனத்தைச் சார்ந்த ஜார்ஜ் ஃப்லாய்டின் மரணம் காவல்துறையினரின் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நானூறு ஆண்டுகளாய் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இந்த பாதகச் செயலுக்கெதிரான போராட்டத்தில் கருப்பர்கள் பாதிப்புக்குள்ளாகுவதும் அதனை ஆளும் அரசு கண்டுகொள்ளாமல் செல்வதும் பல வருடங்களாக நடந்து கொண்டிருந்தாலும் இம்முறை சம்பவத்தை நேரில் கண்ட மனிதர்களின் காணொளி வைரலாகப் பரவி மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. ‘Black Lives Matter’ கோஷங்கள் நகர வீதிகளில் முழங்க, இன்றைய தலைமுறையினரின் பேராதரவும் ஒருங்கிணைந்த மக்கள் கூட்டமும் அமெரிக்க காவல்துறையின் கோரமுகத்தை மீண்டும் ஒரு முறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

பதினாறாம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்ட கருப்பர்கள் இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றிருந்தாலும் இனவாதமும் நிறபேதமும் அவர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே இன்று வரையில் நடத்திக் கொண்டிருக்கிறது.

அதிபராக ஒபாமா இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டதும் நாட்டில் சமத்துவம் நிலவுவதைப் போல தோன்றினாலும் நிறபேதம் என்பது அனைத்து துறைகளிலும் ஊடுருவியுள்ளது. “KKK” (Ku Klux Klan) போன்ற வெள்ளையின ஆதிக்க குழுக்களின் வெறுப்பரசியல் இன்று வெளிப்படையாக இல்லாவிட்டாலும் தினசரி வாழ்வில் இனவெறியுடன் நடக்கும் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டு தானிருக்கிறது . அதுவும் டொனால்ட் ட்ரம்ப் அதிபரான பின் சிறுபான்மையினருக்கு எதிரான ஆதிக்க மனோபாவ அமெரிக்கர்களின் குற்றங்கள் பெருகியிருக்கிறது. இதற்கான இரு அடிப்படை காரணிகள் ‘சிஸ்டெமிக் ரேஸிசம்’ மற்றும் ‘சிஸ்டமேட்டிக் ரேஸிசம்’ என்பதாகும்.

தனி மனிதரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தையோ நிற பேத அடிப்படையில் தாழ்வாகப் பார்ப்பதும் அவர்களைக் குறித்த தவறான கண்ணோட்டத்தில் பிரிவினையை உருவாக்கிக் கொள்ளுதலே ‘சிஸ்டெமிக் ரேஸிசம்’.

“இந்த நாட்டில் இருக்க விரும்பாவதர்கள் , இந்நாட்டை வெறுப்பவர்கள் தாராளமாக அவரவர் சொந்த ஊருக்கே கிளம்பலாம்.” அமெரிக்க அதிபரின் ட்வீட் இது. அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் சபையின் நான்கு சிறுபான்மை உறுப்பினர்களைப் பார்த்துச் சொல்லி இருக்கிறார் இந்த உலகத்தலைவர். ஏதோ இவர் ஒருவர் மட்டுமே இப்படிப் பேசவில்லை. அமெரிக்காவில் இனவெறியும் நிறவெறியும் எப்பொழுதுமே இருந்து கொண்டிருந்தாலும் இப்பொழுது முற்றிலும் மாறிய சந்திரமுகியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

நினா தவுளுரி என்ற இந்திய வம்சாவளிப்பெண் 2014ல் ‘மிஸ் அமெரிக்கா’ பட்டம் வாங்கியதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவள் மீதும் இந்தியர்கள் மீதும் இனவெறியர்கள் வன்மத்துடன் வசைபாடிக் கொண்டிருந்தார்கள்.

அடிமைகளாக இருந்த கருப்பர்களைக் குறிக்க வெள்ளையர்கள் பயன்படுத்திய “நிக்கர்” என்ற வார்த்தை சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால் வயதான ஒரு வெள்ளை அமெரிக்கப் பெண்மணி கருப்பினத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் விதத்தில் பேச, காவல்துறையினரின் தலையீட்டால் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டார் வெள்ளையினத்தவர். சமீபத்திய நாட்களிலும் நாட்டின் பல நகரங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடந்தது.

கூடைப்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரு கருப்பின பள்ளி மாணவர்களின் பைகளைச் சோதனை செய்து போதைப்பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என சட்டத்திற்குப் புறம்பாக காவல்துறையினர் நடந்து கொண்டதும் கூட சிஸ்டெமிக் ரேஸிசமே. இன்று கருப்பின குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்பத் தயங்குவதும் காவலர்களைக் கண்டு அஞ்சும் நிலைமையும் ஏற்பட்டிருப்பது நிறவெறியால் தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடிய நேரத்திலும் , இரட்டைக்கோபுர தாக்குதலின் போதும் இந்தியர்களை “கோ பேக் டு யுவர் கண்ட்ரி” என்று சொன்னவர்கள் இன்று சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸுக்காக ஆசியர்களை வசை பாடிக்கொண்டிருப்பதற்கும் இனவெறியே காரணம்.

பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் பல நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வாழும் நியூயார்க் போன்ற பெருநகரங்களிலேயே இப்படியென்றால், மிட் வெஸ்ட்ல் இவர்கள் ஆதிக்கம் கொண்டுள்ள சிறுநகரங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அமெரிக்கர்கள் பலரும் இணக்கத்துடன் வாழ வேண்டுமென விருப்பப்பட்டாலும் ஆதிக்க மனோபாவம் கொண்ட சிலரால் வன்முறைகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

வெளித்தோற்றத்தில் எல்லாம் இயல்பாகத் தெரிந்தாலும் அமெரிக்கச் சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறவெறி ஊறிக் கிடக்கிறது.

அமெரிக்காவில் வேலையில்லாதவர்களில் பெரும்பான்மையினர் கருப்பர்கள், லட்டினோ மற்றும் சிகப்பிந்தியர். கல்லூரிப்பட்டம் பெற்றிருந்தாலும் வேலைவாய்ப்புகளில் வெள்ளையர்களுக்கே முன்னுரிமைகளும் அளிக்கப்படுகிறது. அலுவலகங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும் உயர்பதவிகளில் இருப்பவர்களும் வெள்ளையர்களே.

நாட்டின் மக்கள் தொகையில் 13% கருப்பர்கள் இருந்தாலும் சிறைக்கைதிகளில் 40% இருப்பதும், ஒரே குற்றத்திற்கு வெள்ளையர்களுக்கு குறைவாகவும் கருப்பர்களுக்கு அதிக தண்டனையும் நீண்ட சிறைக்காலமும் வழங்கி நீதிமன்றங்களும் பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறது. செய்யாத குற்றங்களுக்காக கருப்பர்கள் அதிக அளவில் தண்டனைகளை அனுபவிப்பதாக மிஷிகன் மாநில சட்டக்கல்லூரிப் பேராசிரியர் பார்பரா ஓ ப்ரையன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் அவசர மருத்துவ சேவை, மருத்துவமனைகளில் வசதி வாய்ப்புகள் குறைவாகவும் 67% மருத்துவர்கள் கருப்பின நோயாளிகளிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், ஒரே கல்வித்தகுதி இருந்தாலும் கருப்பின மருத்துவர்களுக்கு அதிக அளவில் ஆராய்ச்சி மானியங்கள் மறுக்கப்படுவதாகவும் ‘தேசிய சுகாதார ஏற்றத்தாழ்வுகள் அறிக்கை’ சுட்டுவதும் ஸிஸ்டெமிக் ரேஸிசத்தின் அங்கமே.

வண்டி ஓட்டுபவர்களில் வெள்ளையர்களை விட கருப்பர்கள் அதிகமாக காவல் துறையினரால் நிறுத்தப்படுவதாகவும் பாதசாரிகளின் மரணங்களில் கூட கருப்பர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதாக 2017ல் நெவாடா பல்கலை நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது. சமீபத்திய ஜார்ஜ் ஃப்லாய்ட்ன் மரணமும் அதனைப் போன்ற பல மரணங்களும் காவல்துறையினர் சிறுபான்மையினரிடம் நடந்து கொள்ளும் அராஜகத்தால் தொடருவது.

‘ஃபெடரல் ரிசர்வ் ஆய்வு’ ஒன்று தேசிய அளவில் செல்வ வளங்கள் தொண்ணூறு சதவிகிதம் வெள்ளை அமெரிக்கர்களிடமும் 2.6 சதவிகிதம் மட்டுமே கருப்பர்களிடம் உள்ளதாகக் கண்டறிந்துள்ளது. சிறுபான்மையினரை விட வெள்ளை அமெரிக்கர்கள் அதிக அளவில் சொத்துக்கள் , குடும்ப வருமானம் கொண்டிருப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிக வருமான வசதி உள்ளவர்கள் குடியிருப்பு பகுதிகளில் கருப்பினத்தவரைக் காண்பதும் அரிது. இப்பாகுபாடுகளைக் களைவதன் மூலமே ஒன்றிணைந்த மக்கள் சமுதாயம் உருவாகும் என சமூக இயக்கங்கள் இன்று வரை போராடிக் கொண்டிருக்கின்றன.

சமூகத்தில் புரையோடியிருக்கும் இனவாதத்தை அரசு எந்திரங்கள் மூலமாக அரசியல் தலைவர்கள் இலைமறைகாய் போல் கருப்பர்களுக்கு எதிராக இயக்க உதவுவதே ‘சிஸ்டமேட்டிக் ரேஸிசம்’ . “War on Crime”, “War on drugs”, “Law and Order” போன்ற குறிப்பான பதங்கள் சிறுபான்மையினரைக் குறிவைத்தே உருவாக்கப்பட்ட வார்த்தைகள். குடியரசு மற்றும் ஜனநாயக அதிபர்கள் பலரும் அதை தாரக மந்திரமாகவே கருப்பர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். க்ளிண்டனும் ஒபாமாவும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. சிறுபான்மை மக்களின் நலனுக்காகச் செலவிடுவதைக் காட்டிலும் இருமடங்கு காவல்துறை, சிறைச்சாலை, நீதித்துறைகளுக்காக அரசு செலவிடுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் இமானுவேல் மற்றும் கேப்ரியல் குறிப்பிட்டுள்ளார்கள். இனப் பிரிவினையை அரசு அதிகாரங்கள் மூலமாக வெற்றிகரமாக மேற்கொள்ளும் அரசியல்வாதிகள் இன்று வரையிலும் தொடருவதும் பாகுபாட்டைக் குறைக்கும் வழிகளை மேற்கொள்வது போல் தெரிந்தாலும் மறைமுகமாக அடக்கியாள்வது தொடருவதும் கருப்பின மக்களின் தொடர் போராட்டத்திற்கு முக்கிய காரணமாகியிருக்கிறது.
தற்போது நடந்து கொண்டிருப்பது கருப்பர்களுக்கும் வெள்ளை அமெரிக்கர்களுக்குமான போராட்டம் மட்டுமல்ல. அனைத்து சிறுபான்மையினரும் இணைந்து ஆதிக்க மனோபாவ வெள்ளையினத்தவரை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டம். “Black Lives Matter” இயக்கம் பற்றிப் பேசவே அஞ்சும் இந்தியர்கள் ஏராளம். அது கருப்பர்களுக்கானபிரச்னை என்று எளிதில் கடந்து விடுவதும் முறையானதல்ல. நம் குழந்தைகளுக்காக, அவர்களின் வருங்கால சந்ததியினருக்காக நம்முடைய பங்களிப்பும் இப்போராட்டங்களில் அவசியமாகிறது. பல்வேறு துறைகளில் முன்னேறிக்கொண்டே இருபத்தியொன்றாம் நூற்றாண்டை நோக்கி வீறு நடை போடும் உலகில் நிற, இன பேதங்கள் தொடர்வதும், பணக்காரன் ஏழை என்ற பிரிவினையையும் மீறி நிறபேதம் கொண்டு வெறியுடன் அலையும் அவலமும் அதனால் மக்கள் பாதிக்கப்படுவதும் மனித இனத்திற்கே வெட்கக்கேடான விஷயம். இதிலிருந்து மீள்வது கடினமென்றாலும் அரசின் போக்கில், முடிவுகளில் மாற்றங்கள் வர வேண்டும். தற்போதைய தொற்றுநோயால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களும், வேலையிழந்தவர்களும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் சிஸ்டெமிக் மற்றும் சிஸ்டமேட்டிக் ரேஸிசத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது அவசியம். அதற்கு அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து பாதிக்கப்பட்ட மக்களின் புனரமைப்புத் திட்டங்களுக்காக நிதிகளை ஒதுக்கிட அரசு முன்வர வேண்டும் என சமூக மாற்றத் திட்டங்களை வரையறுக்கும் மையத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் டொரியன் வாரன் குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஆரம்பத் திட்டங்களை “Black Lives Matter” போராட்டத்திற்குப் பின் பல மாநிலங்களும் முன்மொழிந்துள்ளது வரவேற்கத்தக்கது. பேதங்களைக் குறைத்தாலே நாடு வளம் பெறும். நாட்டு மக்களும் முன்னேறுவர். குற்றவாளிகளுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்ட நிலை மாறி நாட்டின் பிரஜைகள் அனைவரும் பாரபட்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். 

பிரிவினையை ஒழித்து சமூக மாற்றங்களைக் கொண்டு வர ஒத்துழைக்கும் மாநகர, மாநில, தேசிய அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல் இக்கால கட்டத்தில் அவசியமாகிறது. 2020 நவம்பர் தேர்தலில் அதற்கான சாத்தியங்கள் இருக்கும் என்று நம்புவோம்.

Monday, August 3, 2020

விழித்தெழுந்த அமெரிக்க மக்கள்!

அமெரிக்க மக்களின் ‘ப்ளாக் லைவ்ஸ் மாட்டர்’ இயக்கத்தின் பெரும் பாய்ச்சல்



இவ்வருட துவக்கத்திலிருந்தே கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரியால் அச்சமும், பொருளாதாரச் சீர்குலைவும், வேலையில்லா திண்டாட்டமும், நாட்டை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. நவம்பர் மாத அதிபர் தேர்தல் எதிர்பார்ப்புகளைக் கூட மறந்து வைரஸுடன் போராடிக் கொண்டிருக்கையில் மினசோட்டா மாநிலம் மினியாபொலிஸ் நகரில் மே 25 அன்று நடந்த நிகழ்வு நாட்டைப் பிளவுபடுத்தியுள்ளது வேதனையானது.

அமெரிக்க கறுப்பர் இனத்தைச் சார்ந்த 46 வயதான ஜார்ஜ் ஃப்லாய்ட் $20 கள்ள நோட்டைக் கொடுத்ததாகக் கடையில் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைத்தும் மூச்சு விட முடியவில்லை என ஃப்லாய்ட் மன்றாடியும் மயங்கி விழும் ஃப்லாய்டுக்காக பாதசாரிகள் காவல்துறையினரிடம் கெஞ்சிய போதும் அவரின் கழுத்துப் பகுதியில் அழுத்தியபடி அமர்ந்திருந்த அதிகாரி டெரெக் ஷாவின் மற்றும் உடலை அழுத்திப் பிடித்திருந்த மற்ற மூன்று அதிகாரிகளும் 8 நிமிடம் 46 நொடிகள் வரை தங்கள் பிடியைத் தளர்த்திக் கொள்ளவே இல்லை. விசாரணையை நேரில் கண்டவர்கள் காவல்துறையினரின் அராஜக காணொளியை வைரலாக்க, மக்கள் கொதித்தெழுந்து விட்டார்கள். அவசர மருத்துவ உதவி ஊர்தி வருவதற்குள் ஃப்லாய்ட் மரணித்திருந்தார். கறுப்பர் மேல் வெள்ளை அமெரிக்க காவல்துறையினர் நடத்திய நிறவெறியின் கொலைத்தாக்குதலாக கறுப்பர்களும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் போராட, இன்று நாடே இரண்டுபட்டிருக்கிறது.

அராஜக முறையில் விசாரணை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மினியாபொலிஸ் நகரில் கடையடைப்புகளும் தாக்குதல்களும் தீ வைப்புகளும் தொடருவது செய்திகளில் வெளிவர, கறுப்பர்கள் அதிகமாக இருக்கும் மற்ற நகரங்களிலும் கலவரங்கள் தொடர்ந்து கோவிட்19 பிரச்னையை மறந்தே போனார்கள் மக்கள்.

சாலைகளில் போராட்டம் செய்பவர்களால் வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுமோ என்ற பதட்டமும் ஆவேசமான மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட, வேறு வழியின்றி காவல் அதிகாரி ஷாவின் மேல் கொலை வழக்கைப் பதிவு செய்து மற்ற மூன்று அதிகாரிகளையும் வேலையில் இருந்து நீக்கியது மினியாபொலிஸ் காவல்துறை.

திட்டமிடாத கொலை(செகண்ட் டிகிரி மர்டர்) என்று ஷாவின் மேலும் அதற்கு உடந்தையாக இருந்த மற்ற மூன்று அதிகாரிகள் மீதும் கொலைவழக்குப் பதிவாகும் வரை நாடு முழுவதும் கலவரங்கள் தொடர்ந்தது. அமைதியான போராட்டங்களில் வன்முறையினரால் கடைகளையும் உடமைகளையும் இழந்தவர்கள் பொது மக்களே. இதனால் அதிருப்தியடைந்த மக்களின் கோபம் போராட்டக்காரர்களின் மீது திரும்பியது. மாநிலங்களில் வன்முறைப் போராட்டங்கள் தொடர்ந்தால் ராணுவத்தால் அடக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அரசின் அலட்சியப்போக்கும் எதிர்க்கட்சிகளின் ஆதரவும் அரசியலாக்கப்படுவதற்குள் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு எட்டு நாள் போராட்டமும் தற்காலிக முடிவுக்கு வந்திருக்கிறது.

வைரஸ் காரணமாக நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்னையுடன் அதிதீவிரமாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் இனவெறி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர நான்கு அதிகாரிகளின் மீதும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் காவல் துறையின் அடாவடித்தனத்தையும் நிற பேதத்தையும் மக்கள் உணர்ந்து கருப்பு அமெரிக்கர்களுக்கு அதிக அளவில் வெள்ளை அமெரிக்கர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவு பெருகியதும் இப்போராட்டத்தை வழிநடத்திய “Black Lives Matter” இயக்கத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகும். 2013ல் தொடங்கிய இவ்வியக்கம் ஆதிக்க வெள்ளையர்களால் பாதிக்கப்பட்ட கறுப்பர்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் இயங்கி வருகிறது.

இந்த ஒரு மரணம் மட்டுமே இன்று நாட்டைப் பிளவுப்படுத்தவில்லை. தொடர்ந்து கறுப்பர்களின் மேல் நடத்தப்படும் வன்முறைகளும் அநீதியும் இப்போராட்டங்களைத் தீவிரமாக்கியுள்ளது. நாணயத்தின் இருபக்கம் போலவே சிலர் காவல்துறைக்கு ஆதரவாகவும் பலர் எதிராகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நிறவெறியும் இனவெறியும் கொண்டு காவல் துறை செயல்படுகிறது என மக்கள் நினைப்பதை ஊர்ஜிதப்படுத்துவது போல கறுப்பர்களுக்கு எதிரான காவல்துறைக் குற்றங்கள் பெருகிக்கொண்டு வருவதும் இம்மாபெரும் ஊர்வலங்களுக்கு காரணமாயின.

பருத்தி, புகையிலைத் தோட்ட வேலைகளுக்காக 16ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்ட இருபது கருப்பர்கள் பரம்பரை அடிமைகளாக பல்வேறு இன்னல்களுடன் வெள்ளையர்களுக்குச் சேவகம் செய்திருக்கிறார்கள். பெண்கள் மீதான வன்முறைகளும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்ட குழந்தைகளும் ஆண்களும் அவர்களுக்கு எதிரான சட்டங்களும் பிணைக்கைதிகளாகவே வாழ வேண்டிய கட்டாயம். இவர்களால் தெற்கு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி அரசியல் ஆதிக்கமும் பெற்று வெள்ளையர்களுக்குச் சாதகமான சட்டங்களை அரசே இயற்றியுள்ளது.

1777ல் வெர்மாண்ட் மாநிலம் முதன் முதலாக அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை அளித்தது. 1863ல் ஆபிரகாம் லிங்கன் தென் மாநிலங்களில் வெள்ளையர்களிடம் அடிமைகளாக இருந்தவர்களுக்கு விடுதலைப் பிரகடனத்தை அறிவித்து 3.5 மில்லியன் கறுப்பர்கள் விடுவிக்கப்பட்டாலும் டெக்சாஸ் மாநில அடிமைகளுக்கு 1865ல் ஜூன் 19 அன்று தான் அதிகாரப்பூர்வமாக விடுதலை கிடைத்தது. வரலாற்று சிறப்பு மிக்க அந்நாளே “Juneteenth” என நாடு முழுவதும் கறுப்பர்கள் விடுதலை தினமாக கொண்டாடப்படுகிறது.

13th Amendement முற்றிலும் அடிமைத்தனத்தை ஒழித்தாலும் குற்றம் செய்தவர்களை அடிமைகளாகத் தொடர அனுமதித்தது. இதனால் செய்யாத குற்றங்களுக்காகவும் சிறு தவறுகளுக்காகவும் குற்றவாளிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதத்தினர் கறுப்பர்களே. இவர்களை மீண்டும் அடிமைகளாக நடத்தும் வகையில் சட்டங்களை இயற்றியதும் வெள்ளையர்களின் மேலாதிக்கமே.

விடுதலை பெற்றிருந்தாலும் 1865-1965 வரை “ஜிம் க்ரோ” சட்டங்கள் (கறுப்பர்களுக்கான குறியீடுகள்) பள்ளி, மருத்துவமனை, பேருந்து மற்றும் பொது இடங்களில் வெள்ளையர்களுக்கு முன்னிலையும் அதிகாரமும் தரும் வகையில் நிற பாகுபாடு தொடர்ந்தது. 1866ல் KKK (Ku Klux Klan) அமைப்பு கறுப்பர்களுக்கு எதிரான கொள்கைகளுடன் தென் மாநிலங்களில் நிறுவப்பட்டது. கறுப்பர்கள் வணிகம், நிலம் வாங்குவதை தடை செய்வதன் மூலம் அவர்களின் பொருளாதார நிலையை தங்களைச் சார்ந்திருக்குமாறு செய்ததும் குற்றவாளிகளை அடிமைகளாகப் பயன்படுத்தி கறுப்பர்களிடையே அச்சத்தை உருவாக்கிய இவ்வமைப்பினர் ஆண்டுகள் பல கடந்தும் இன்று வரை அதே காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதும் அரசியல் தலைவர்களின் ஆதரவு பெற்றிருப்பதும் ஃப்லாய்ட் மரணம் அதனைப் பறைச்சாற்றுவதாலேயே இந்தப் போராட்டம் அவசியமாகிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என 14th Amendmentல் கூறினாலும் பல வருடங்களாக காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்படுவதும் போதை மருந்து குற்றங்களுக்காக கைது செய்யப்படுவதும், அதிக அளவில் சிறைக்குச் செல்வோரும் கருப்பு அமெரிக்கர்களாக இருக்கிறார்கள். குற்றங்கள் ஒன்றாக இருப்பினும் கறுப்பர்களுக்கு கடுமையான தண்டனைகளும் வெள்ளை அமெரிக்கர்களுக்கு குறைவான தண்டனையும் என்றே நீதிமன்றங்களும் பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறது. செய்யாத குற்றங்களுக்காக கறுப்பர்கள் அதிக அளவில் தண்டனைகளை அனுபவிப்பதாக மிஷிகன் மாநில சட்டக்கல்லூரிப் பேராசிரியர் பார்பரா ஓ ப்ரையன் தனது அறிக்கையில் தெரிவித்துளளார். “நியூயார்க் சென்ட்ரல் பார்க்” வழக்கில் செய்யாத குற்றத்திற்காக பல ஆண்டுகள் சிறைத்தண்டனைகள் அனுபவித்த ஐந்து சிறுபான்மையின சிறுவர்களை உண்மையான குற்றவாளியை (வெள்ளை அமெரிக்கர்) கண்டறிந்த பிறகு தவறை உணர்ந்து நீதிமன்றம் விடுதலை செய்தது. இன்று வரை அதிபர் ட்ரம்ப் அவர்களை கொடூரமான கொலையாளிகள் என்றே கூறி வருவதும் வெள்ளை அமெரிக்க ஆதிக்க மனோபாவம் தான். நாட்டின் மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவரே நிறவெறியைத் தூண்டுபவராக இருப்பதும் மீண்டும் பழைய வரலாற்றை நினைவில் கொண்டு வருவதால் உருவாகிய அச்சத்தின் விளைவே இப்பெரும் போராட்டம்.

அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது என 15th Amendmentல் சொல்லப்பட்டாலும் கறுப்பின மக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதிகாரம் என்றும் வெள்ளையர்களிடமே இருக்கும் வகையில் அரசும் சட்டங்களும் சிறுபான்மையினருக்கு எதிராகவே இருந்துள்ளது. 89 ஆண்டுகளுக்குப் பிறகு 1954ல் பள்ளிகளில் இன பாகுபாடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்ற சட்டம் அமலாக்கப்பட்டது. பொது இடங்களில், கல்வி நிலையங்களில் கறுப்பின மக்களைப் பிரித்தாள்வது 1964ல் தான் முடிவுக்கே வந்திருக்கிறது. 1965ல் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் அலபாமா மாநிலத்தில் செல்மா நகரில் இருந்து மோன்ட்கமேரி வரை நடந்த போராட்டத்திற்குப் பிறகே அன்றைய அதிபர் ஜான்சன் கறுப்பர்களுக்கு வாக்களிக்கும் உரிமைச் சட்டத்தை இயற்றியுள்ளார். அதற்குப் பின்னும் இனவாதமும் நிறபேதமும் அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த , பல வருடப் போராட்டங்களின் வாயிலாகவே தங்கள் உரிமைகள் ஒவ்வொன்றையும் பெற்றிருக்கிறார்கள். சமூக உரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங், மால்கம் X மற்றும் பல தலைவர்களையும் படுகொலைகள் செய்ததும் கறுப்பினரை அச்சுறுத்தவே.

இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்ற கறுப்பின வீரர்களுக்கும் எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை. கல்வி, வணிகம், நிலம் மறுக்கப்பட்ட நிலையில் ஏழைகளாகவே பல ஆண்டுகள் தொழிற்சாலைகளில், தோட்டங்களில் வாழ்க்கையைத் தொடர, போதை மருந்து, கொலை, கொள்ளைக்குற்றங்கள் பெருகும் வாய்ப்புகளை மறைமுகமாக ஏற்படுத்தியதும் வெள்ளையர்களின் அரசே. அலுவலகங்களில் முக்கிய பொறுப்புகளில் இன்றும் இந்தியர்களும் ஆசியர்களும் அமெரிக்க கறுப்பினர்களை விட அதிக அளவில் இருக்கிறார்கள். இந்த தலைமுறையினர் பலரும் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து முன்னேறி வருவது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.

இன ஒடுக்குமுறைகள் தகர்க்கப்பட்டு வேற்று நிறத்தவரும் குடியுரிமைப் பெறுவதற்கும் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்படுவதற்கும் 1960களில் நடந்த சமூக உரிமைப் போராட்டங்களால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது. 1965ல் கொண்டு வரப்பட்ட “ஹார்ட் செல்லர் ஆக்ட்” ஆசியாவிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த மக்களுக்கு சட்டபூர்வ குடியேற்ற அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்தவர்கள் பலரும் குடியுரிமை பெற்றுள்ளோம்.

கறுப்பர்களுக்கு எதிரான அரசியல் நகர்வுகளை வெள்ளை அதிபர்கள் பலரும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் துல்லியமாகத் திட்டமிட்டு கையாண்டிருக்கிறார்கள். கறுப்பர்கள் என்றாலே கொள்ளையர்கள், கொலையாளிகள், தீங்கு விளைவிப்பவர்கள், படிப்பறிவு இல்லாத முரடர்கள் என்ற எண்ணத்தை அரசியல் வாயிலாக இன்று வரையில் எவ்வாறு வெற்றிகரமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை “13th” வரலாற்று ஆவண திரைப்படத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்.

கறுப்பினத்தவரின் உழைப்பால் எழுந்த வெள்ளை மாளிகையில் 2008ல் ஒபாமா அதிபராக பதவி ஏற்ற நாளில் கறுப்பின சமூகம் தங்களுக்கான அங்கீகாரமும் மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவும் நிறைவேறிவிட்டதாகவே கொண்டாடினார்கள். 1971ல் அதிபர் நிக்சனால் கொண்டு வரப்பட்ட “War on Drugs” சட்டம் ரீகன், (சீனியர்) புஷ், கிளிண்டன், (ஜூனியர்) புஷ் அதிபர்களைத் தொடர்ந்து ஒபாமா ஆட்சிக்காலத்திலும் கறுப்பின மக்கள் பாதிக்கப்பட்டார்கள். 2010ல் ஒபாமாவின் “Fair Sentencing Act” சிறு நிவாரணம் அளித்திருந்தாலும் தனியார் சிறைகள் இயங்க, சிறுபான்மையினரைக் கைது செய்வதும் சிறு குற்றங்களுக்கு பெருந்தண்டனையும் என சமூக அநீதி தொடர்கிறது.

2017ல் அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப் ஆதிக்க வெள்ளை அமெரிக்க மனோபாவத்துடன் நிற வெறியைத் தூண்டும் விதத்தில் அறிக்கைகள் விடுவதும் காவல்துறையினரின் வன்முறைகளுக்கு ஒத்துழைப்பதும் கறுப்பின மக்களின் வாழ்க்கையில் அச்சத்தை ஏற்படுத்தியதன் தாக்கமே மீண்டும் போராட்டங்களாக உருவெடுத்திருக்கிறது. அடிமைகளாக இந்நாட்டிற்கு வந்த நாட்களிலிருந்து தொடரும் தாக்குதல்களுக்கு நிவாரணமும் நீதியும் பாதுகாப்பும் கிடைப்பதற்காகப் போராடும் மக்களுடன் இன்றைய தலைமுறையினர் இணைந்து செயல்படுவது பாராட்டப்பட வேண்டியது.

சமீபத்திய போராட்டங்களின் தீவிரத்தையு ம் மக்களின் உணர்வுகளையும் கோபத்தையும் புரிந்து கொண்ட மாநில, உள்ளூர் அரசுகளும் காவல்துறையில் மாற்றங்களைக் கொண்டு வர தீர்மானித்திருக்கிறது. பல மாநிலங்களும் காவலர்கள் எதிராளியின் கழுத்தை நெரித்து விசாரணை நடத்துவதை தடை செய்திருக்கிறது. காவல்துறைக்கு ஒதுக்கும் வருடாந்திர நிதியில் சிறு பகுதியை அத்துறையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சமூக சேவைகளுக்காகவும் செலவிடப் போவதாக நியூயார்க் நகர மேயர் பில் டே பிளாசியோ உறுதி அளித்துள்ளார். கறுப்பர்களின் உணர்வுகளைப் புண்படுத்ததும் ஆதிக்க மனோபாவ வெள்ளை அமெரிக்கர்களின் சிலைகள் அலபாமா, டென்னெசீ, விர்ஜினியா மாநிலங்களில் இருந்து அகற்றப்படுகிறது. இன சார்பு கொண்டு தவறு செய்யும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கைகள், அவர்களை கண்காணிக்க தேசிய பதிவுச் சட்டங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது நாடு தழுவிய இப்போராட்டங்களுக்கு கிடைத்த சிறு வெற்றிகளாகும்.

தன்னுடைய ஆட்சியில் தான் கருப்பு அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் வன்முறைப் போராட்டம் செய்யும் குண்டர்களை காவல்துறை தண்டிக்கும் எனவும் அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளதில் பலருக்கும் அதிருப்தியே. இன்று வரையில் காவல்துறையினரின் அத்துமீறலையும் இனவெறியையும் கண்டிக்காததும் போராட்டங்கள் தொடர்வதற்கு காரணமாக உள்ளது. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் காவல்துறையில் மாற்றங்களைக் கொண்டு வருவேன் என்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக ஐம்பது நாடுகளில் நடந்த ஊர்வலங்களும் உள்நாட்டில் கருப்பு அமெரிக்கர்களின் கோரிக்கைகளைப் புரிந்து கொண்டு மக்கள் தரும் பேராதாரவும் நிச்சயமாக காவல்துறையில் மாறுதலைக் கொண்டு வரும் என்ற சிறு நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. இது கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் நடக்கும் போராட்டம் மட்டுமே அல்ல. சிறுபான்மையினருக்கும் வெள்ளையர்களுக்கும் நடக்கும் ஆதிக்க யுத்தம். குடியுரிமை பெற்ற அனைவரும் அமெரிக்க கறுப்பின வரலாற்றைத் தெரிந்து கொள்வதும் சமூக நீதிப் போராட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதும் அனைவரின் கடமை என்பதே என் எண்ணம்.

இன்று அரசியல், கல்வி, மருத்துவம், மற்றும் அரசுப்பணியிடங்களில் வெகு சில கறுப்பின மக்களே பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள். அரசின் கல்விச்சலுகைகள்

மூலம் படிப்பு, பொருளாதாரத்தில் முன்னேறி எதிர்கால தலைமுறையினரை போதைமருந்து, கொலை, கொள்ளை சமூக விரோதிகளிடமிருந்து காத்து நாட்டில் சம உரிமை பெற்ற குடிமக்களாக உயர்த்தும் நாளில் வரலாற்றுப் போராட்டங்களும் அர்த்தமுள்ளதாகும்.

மார்ட்டின் லூதர் கிங்-ன் கனவும் நிறைவேறும்.

Saturday, June 27, 2020

Misaeng: Incomplete Life


முதல் முறையாக நான் பார்த்த காதல் கதையாக இல்லாத வேறொரு கதைக்களம் "Misaeng: Incomplete Life". அலுவலகத்தில் குழுக்களிடையே நடக்கும் அரசியல், பயிற்சிக்கு வந்த இளம்பட்டதாரிகள் பணிபுரியும் இடத்தில் பெரும் அனுபவங்கள், நிர்வாகத்தின் குளறுபடிகள், அறிவாளியாக, திறமைசாலியாக இருந்தாலும் பெண்களை மதிக்காத ஆண்கள் என்று நாம் காணும் நிகழ்வுகளைக் கொண்டு நகரும் மிக அழகான தொடர்.

கனவுகளுடன் இளம் கதாநாயகன். சாந்தமான எல்லோருக்கும் நல்லதையே நினைக்கும் புஜ்ஜி பாய். கியூட் 😍 கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான முகமும் நடிப்பும். மேலதிகாரியாக நடித்தவருக்கு நிஜமாகவே ரத்தக் கொதிப்பு வந்திருக்கும் அப்படியொரு நடிப்பு! பலரும் சபாஷ் போட வைக்கிறார்கள்.

நகரத்தில் நடக்கும் கதை. அலுவலகத்தின் பின்னால் இருக்கும் தோட்டமும் மாடியும் அழகு. பிரச்சினகள் வரும் பொழுது அங்கே தான் கூடுகிறார்கள். அனைத்துக் கதாபாத்திரங்களும் நன்றாக நடித்திருந்தார்கள்.

மேலிடத்து சிபாரிசின் மூலம் பயிற்சிப் பெற வந்த இளைஞனைத் தன்னை வேவு பார்க்க வந்ததாக தவறாகப் புரிந்து கொள்ளும் மேலதிகாரி அவனை அவமானப்படுத்த, பயிற்சி பெற வந்திருக்கும் சக பட்டதாரிகளின் கிண்டலுக்கும் கேலிக்குள்ளானாலும் அவர்களிடையே தோற்காமல் வெற்றிப் பெற வேண்டும் என்று முயற்சித்து இறுதியில் வெற்றியும் பெறுகிறான். நிறுவனத்தை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நெருக்கடியிலிருந்து மீட்டிருந்தாலும் கதாநாயகன் வேலையில் நிரந்தரமாக முடியாத நிலை. கடைசி நாள் வரை தன் வேலைகளைத் திறம்பட செய்து முடித்து 'உச்' கொட்ட வைத்து விடுகிறான். சக ஊழியர்களும் மேலதிகாரியும் தன்னை அங்கீகரித்து விட்டார்கள் என்பதே அவனுடைய வெற்றியாக இருக்கிறது.

கல்லூரி முடிந்த அடுத்த வாரமே சிபாரிசில் வேலைக்குச் சேர்ந்த என்னிடம் முசுடுத்தனமாகவே இருப்பார் அந்த மேலதிகாரி. வேலை எதுவும் சொல்லியும் கொடுக்காமல் கட்டுக்கட்டாக ஃபைல்களைக் கொடுத்து படிக்கச் சொன்னார். அங்கிருந்த ஐவரில் நான் மட்டுமே பெண். என்னோடு வேலை செய்த மற்றொரு இளைஞன் கல்லூரியில் என்னுடைய சீனியர் மாணவன். அன்று தான் அவரும் என் தாய்மொழி பேசுபவர் என்று அறிந்தேன்! வேலையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுத் தந்தது அவர் தான். ஆனால் என் மேலதிகாரி மட்டும் என் மேல் புகார் பட்டியல் வாசித்துக் கொண்டே இருந்தார். நானும் பொறுத்துப் பார்த்தேன். நேராக நிர்வாகத்தலைவரிடம் சென்று வேலையும் கொடுக்காமல் புகார் சொல்லும் அதிகாரியைப் பற்றி நான் புகார் செய்ய, அவர் வந்து கண்டித்த பிறகே கொஞ்சம் அடக்கி வாசித்தார். 50-60 பேர் வேலை செய்யும் அலுவலகத்தில் நான்கே பெண்கள் தான். என்னுடைய துறையில் நான் மட்டுமே. அலுவலக அரசியல் எனக்குப் புதிது. எதையும் கண்டு கொள்ளாமல் நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்தாலும் சிடுசிடு மனிதர்களைக் கண்டு வெறுத்திருக்கிறேன். காலம் செய்த கோலம்! சிலர் கணவரின் நெருங்கிய உறவினர்களாகி விட்டிருக்கிறார்கள்😊

இன்று வரை அந்த சிடுமூஞ்சி அதிகாரி ஏன் அப்படி நடந்து கொண்டார் என்றே தெரியவில்லை. பிறகு வேறு வேலைக்கு நான் மாறி விட்டேன். அங்கே பெண்களை வேலைக்குச் சேர்த்தால் திருமணம், குழந்தைகள் என்று அடிக்கடி லீவு போடுவார்கள் என்று இத்தொடரில் வரும் வசனத்தை நேரிலேயே கேட்டிருக்கிறேன். வேலைக்கு வரும் பெண்களை ஆண்களுக்குப் போட்டியாக நினைத்த காலம் அது! ஆண்களின் சிந்தனையில் இப்பொழுதாவது மாற்றங்கள் வந்திருக்கிறதா தெரியவில்லை.

அலுவலகத்தைச் சுற்றி நடக்கும் கதை என்றாலும் இத்தொடரில் அதிகமாக குடிக்கிறார்கள். கொரியன் தொடர்களில் கொஞ்சம் உயர ரக உணவகம் என்றால் தனியறையில் கதவு மூடியபடி பெரிய மேஜையில் பரப்பி வைத்திருக்கும் உணவு வகைகள் என்று நன்றாக இருக்கிறது. உணவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்காத தொடர் 😑 நிறைய காஃபி குடிக்கிறார்கள். கண்ணுக்கு உறுத்தாத வெள்ளை, நீல நிற சட்டைகளையே அலுவலகத்திற்குப் போட்டுச் செல்வார்கள் போலிருக்கு. நம்மூர் ராமராஜன் ஸ்டைல் அடர்வண்ணச் சட்டைகள் எல்லாம் பார்க்க முடியவில்லை. சிக்கென்று இருக்கிறார்கள் ஆண்கள்! தொடர்களிலும். குண்டான கொரியன் மக்களைப் பார்பபது அரிதோ?

அலுவலகம் என்பது நாம் கற்றுக் கொள்ளவும் கற்றுக் கொண்டதை வைத்து திறம்பட வேலை செய்து நம்மை நிரூபிக்கும் இடமும். அதற்கான தகுதியும் திறமையும் வளர்த்துக் கொள்ள சக அலுவலர்களும், நன்கு புரிந்து கொண்ட மேலதிகாரியும் அமைவது வரம். நமக்கான நண்பர்கள் அமைந்து விட்டால் சொர்க்கம் தான். கதாநாயகனைப் புரிந்து கொண்ட குழுவினரும், மேலதிகாரியும் தொடக்கத்தில் உதாசீனம் செய்தாலும் பின்பு நண்பர்கள் ஆவதும் என சில இடங்களில் கலங்க வைக்க்கிறது இத்தொடர்.

இருபது பாகங்கள் என்றாலும் பழைய நினைவுகளைக் கிளறியதாலோ என்னவோ ரசித்துப் பார்க்க முடிந்தது.

































Wednesday, June 24, 2020

Selma

Amazon.com: Watch Selma | Prime Video

கறுப்பின மக்கள் தங்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றிருந்தாலும் சமூகத்தில் அவர்களுக்கான உரிமைகள் அத்தனை எளிதாக கிடைத்து விடவில்லை. ஒவ்வொரு உரிமைகளையும் போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அவ்வகையில் ஓட்டுப் போடும் உரிமையை எவ்வாறு பெற்றார்கள் என்பதைத் தான் இப்படம் சொல்கிறது.

கறுப்பின மக்களின் சமூக உரிமைகளுக்காக குரல் கொடுத்த மார்ட்டின் லூதர் கிங் காந்தியின் அறவழிப் போராட்டங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார்.  அவருடைய தலைமையில் பல போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. அதில் ஒன்று அலபாமா மாநிலத்தில் செல்மா நகரில் இருந்து மாண்ட்காமெரியை நோக்கி நடைபெற்ற ஊர்வலம். இந்த ஊர்வலத்தின் மக்கள் சக்தியே ஆட்சி செய்பவர்களிடமிருந்து அவர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. வெள்ளை அமெரிக்கர்களின் அதிகார துஷ்பிரயோகங்களையும்  அடக்குமுறைகளையும் மீறி நடந்த மாபெரும் போராட்டத்திற்குப் பிறகே அன்றைய அதிபர் ஜான்சன் கறுப்பின மக்களின் ஓட்டுப்போடும் உரிமைக்கான சட்டத்தை இயற்றியுள்ளார்.

உரிமைக்கான போராட்டங்கள் வலி மிகுந்தது. பலரின் தியாகமும் தகுதியான தலைவனின் வழிநடத்தலும் போராட்டங்களின் வெற்றிகளுக்கு காரணியாக அமைகிறது. செல்மா ஊர்வலமும் அந்த வகையில் வரலாறு படைத்திருக்கிறது.

இன்று வரையில் தங்கள் சமூக நீதிக்காக போராடும் மக்களைப் புரிந்து கொள்ளவும் அமெரிக்காவின் குடிமக்களாக அதன் வரலாறைத் தெரிந்து கொள்ளவும் இத்தகைய படங்களின் அறிமுகம் நல்லது.  புலம்பெயர்ந்தவர்கள் கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படமும் கூட.

நெட்ஃப்ளிக்ஸ்ல் காணலாம்.

American Son


நான்கே நான்கு கதாபாத்திரங்களுடன் ஒரே ஒரு இடத்தில் நகரும் கதை. படம் முழுவதும் கொட்டும் மழையின் பின்னணி. இரவு மூன்று மணியிலிருந்து காலை விடியும் வரை நான்கைந்து மணி நேரத்திற்குள் நடக்கும் காட்சிகள்.

இன்றைய கால கட்டத்தில் நடக்கும் சமூக நிகழ்வுகளும், பெற்றோரின் பயமும், சொந்த வாழ்க்கையின் ஏமாற்றங்களும், குமுறல்களும், பொதுச்சேவையில் இருப்போரின் நிர்பந்தங்களும் என அழகான வசனங்களுடன் அற்புதமாக நடித்திருந்தார்கள் நான்கு நடிகர்களும்.

ஒரு திரைப்படத்துக்கு அடிப்படையே நல்ல திரைக்கதை. நடிப்பவர்கள் அதனைச் செம்மைப்படுத்துகிறார்கள். இன்று அமெரிக்காவில் நடந்து கொண்டு இருக்கும் நிறவெறிப் ப்ரச்னை அம்மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் பயமும் பதட்டமும் படம் முழுவதிலும் அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

“American Son” நெட்ஃப்ளிக்ஸில் காண கிடைக்கிறது.

Friday, June 5, 2020

சுற்றுப்புறச்சூழல் தினம்

சுற்றுப்புறச்சூலைப் பாதுகாக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஜூன் 5ம் நாள் சுற்றுப்புறச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தை முன்னிட்டு பல நாடுகளிலும் கருத்தரங்குகளும் விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் வாழும் பூமியை வாழ தகாத அளவிற்கு மாசடைய நாமும் காரணமாகிக் கொண்டிருக்கிறோம். மேலைநாடுகள் அதிக சிரத்தையுடன் மாசுக்கட்டுப்பாட்டை கட்டுக்குள் கொண்டு வர முயலும் வேளையில், நம் நாட்டில் அப்படியொரு துறை இருக்கிறதா என்ற கேள்வியும் அதன் அபாயங்களை அறிந்தும் மக்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே என்ற வருத்தமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

நாம் உண்ணும் உணவில், குடிக்கும் நீரிலிருந்து சுவாசிக்கும் காற்றில் கூட மாசு கலந்திருக்கிறது. சுவாசக்கோளாறுகள், நுரையீரல் தொற்றுநோய்கள், மூச்சு விட சிரமப்படுபவர்கள், தோல் வியாதியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிச்சென்று மருந்து, மாத்திரை உதவிகளுடன் உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறோம். காரணம் தெரிந்தாலும் கையறு நிலை தான். தொழிற்சாலைகள், கால்நடைகள், பெருகி வரும் வாகனங்கள், கழிவுப்பொருட்களால் வெளியேறும் புகைக்காற்றில் நச்சுத்தன்மை கூடி காற்று மணடலத்தை அசுத்தப்படுத்தி வருகிறதென்னவோ உண்மை. எப்படி கட்டுப்படுத்துவது என்பதைத் தான் மனிதர்களின் அறியாமையாலும் பேராசையாலும் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.

கழிவுகளைக் கொட்டி நீர்நிலைகளை மாசுப்படுத்தி அந்த நீரில் விளையும் காய்கறிகளை உண்டு அதனால் ஏற்படும் உடற்சீர்கேடுகள் பல. ஒரு பிளாஸ்டிக் தடையைக் கூட நம்மால் முறையாக செயல்படுத்த முடியவில்லை. ஆதரிக்க இயலவில்லை. அதன் ஆக்கிரமிப்புகள் நீர் நிலைகளில் ஆரம்பித்து விலங்குகளின் வயிற்றில் சென்று அவர்களின் உயிரைக் கொல்லும் வரை நீண்டிருக்கிறது.

அரசை மட்டுமே குறை கூறுவதால் பயனொன்றும் இல்லை. வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தினை முறையாக செய்கிறோமோ? அதுவும் இல்லை. இருக்கின்ற மரங்களையும் வெட்டிப் போட்டுக் கொண்டு பொட்டல் காட்டில் மழைக்காக ஏங்கி நின்று என்ன பயன்? நிலத்தடி நீரை உயர்த்த வேண்டிய அனைத்து வழிகளையும் அதிகரித்து வரும் வறட்சியும், நீளும் கோடையும், உஷ்ணக்காற்றும், பருவம் தவறிப் பொழியும் மாரியுமாக இயற்கை நம்மை எச்சரித்தாலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியமாக சுயலாப சிந்தனையுடன் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.

வட அமெரிக்கா வந்த புதிதில் பிளாஸ்டிக் கப்புகளில் தயிர், வெண்ணெய், ஜூஸ், பால் என்று கடைகளில் வரிசையாக அலங்காரமாக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து வியந்து போயிருக்கிறேன். மதுரையில் இருந்த வரையில் தயிர் வாங்குவதெல்லாம் பாத்திரத்தில் தான் அதுவும் அன்றன்று. இப்பொழுது தயிரை வீட்டிலேயே தோய்க்கிறார்கள். பால் கூட கண்ணாடி போத்தல்களில் வந்து கொண்டிருந்தது பிறகு பாக்கெட் பால் என்று பிளாஸ்டிக் பைகளில் வர ஆரம்பித்து விட்டிருந்தது. அம்மா காய்கறி வாங்கி வர மஞ்சள் பையும், வயர் கூடையும் தான் வைத்திருந்தார். நானும் கூட ஊரில் இருந்த வரை அப்படித்தான் இருந்தேன் . இங்கோ பெரிய பெரிய பிளாஸ்டிக் டப்பாக்களில் பால், தயிர்... என்று பிளாஸ்டிக் சகலத்திலும் வியாபித்திருக்கிறது. காய்கறிகளை, பழங்களை வாங்கி பிளாஸ்டிக் பையில் போட குறைந்தது ஐந்தாறு பைகள் தேறும். பால், தயிர், வெண்ணை, சீஸ், பிரட், முட்டை எல்லாமே பிளாஸ்டிக் உறைகளில். இவை எல்லாவற்றையும் போட்டு எடுத்துச் செல்ல மேலும் சில பிளாஸ்டிக் பைகள். ஒரு குடும்பம் மட்டுமே அத்தனை பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு வாரத்தில் குப்பையில் சேர்க்கிறதென்றால்...ஒரு தெரு, ஒரு நகரம், ஒரு மாநிலம், ஒரு நாடு??? தலையைச் சுற்றுகிறது.

ரத்தப் பரிசோதனைக்கூடங்களில், மருத்துவமனைகளில், விமான நிலையங்களில், உணவகங்களில் ... கேட்கவே வேண்டாம். அளவே இல்லாமல் பிளாஸ்டிக் பொருட்கள். இன்று கோவிட்19ஆல் முக கவசங்களும், கையுறைகளும் உலகம் முழுவதும் புழங்க, எங்கு தான் இல்லை? பார்க்கும் இடங்களில் எல்லாம் இந்த மக்காத குப்பைகள் தான்! எப்படி ஒழிப்பது என்று புரியாமல் விழித்துக் கொண்டு நம் பங்கிற்கு மேலும் மேலும் சேர்த்துக் கொண்டே இருக்கிறோம்.

ஒவ்வொருவரும் முனைப்போடு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தாலன்றி எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நம்மால் முயன்ற வரை சிறு சிறு விஷயங்களில் கவனம் கொண்டால் பிளாஸ்டிக் குப்பைகளை முடிந்தவரை தவிர்க்கலாம். முறையாக மறுசுழற்சி செய்யலாம்.

கன்னியாகுமரி, நாகர்கோவில் மாவட்டங்களில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்ததைக் கண்டு ஆறுதலாக இருந்தது. கண்டிப்பாக அனைத்து மாவட்டங்களும் முறைப்படுத்த வேண்டிய ஒன்று. இங்கும் கலிஃபோர்னியாவில் சிறிது முயற்சி செய்கிறார்கள். நியூயார்க்கிலும் தடை கொண்டு வந்த பிறகு நிம்மதியாக இருக்கிறது.

நாம் தான் சுற்றுப்புறச்சூழலை மாசுப்படுத்தி இயற்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையும் நம் வருங்கால சந்ததியினரைப் பற்றின கவலையும் ஏதுமின்றி பொறுப்பற்றுத் திரிகிறோம். தமிழ்நாட்டு அரசின் பிளாஸ்டிக் தடை உத்தரவு நடைமுறைக்கு வந்து செயல்படுத்துவதும் மக்கள் நம் கையில் தான் உள்ளது.

சமீபத்திய விமான பயணத்தின் பொழுது தான் எத்தனை நெகிழிப்பொருட்களை நம்மை அறியாமல் பயன்படுத்தி மக்காத குப்பைகளை உருவாக்க நாமும் காரணியாக இருக்கிறோம் என்பதை நினைக்கும் பொழுது குற்றவுணர்ச்சியாக இருந்தது. தண்ணீர் கேட்டால் ஒரு ப்ளாஸ்டிக் கப்பில் கொடுத்தார்கள். ஒவ்வொரு முறையும் புதுப்புது கப்பில். இல்லையென்றால் ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில். விமான நிலைய பாதுகாப்பு பரிசோதனைகள் முடிந்த பிறகு தண்ணீர் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொள்வதால் என்னால் இப்போதைக்கு இந்த ஓரிரு ப்ளாஸ்டிக் கப்களை மட்டுமே தவிர்க்க முடிகிறது.

அமெரிக்காவிற்குள் பயணிக்கும் பொழுது கடலை, ரொட்டி என்று பிளாஸ்டிக் உறைக்குள் இருக்கும் சிற்றுண்டி கொடுப்பார்கள். தண்ணீர் குடிக்க ஆளுக்கொரு ஒரு கப். வாய் துடைத்துக் கொள்ள சிறு பேப்பர் டவல். இந்த மூன்று குப்பைகளையும் அள்ள பெரிய பிளாஸ்டிக் குப்பை பை. இதைத்தவிர, பயணியர் வாங்கி குடித்த கோக், பெப்சி, மேற்படி ஐட்டங்களுக்கான அலுமினிய கேன்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள். கழிவறையில் பயன்படுத்தும் பேப்பர் பொருட்கள். பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக், பேப்பர் குப்பைகள். சில மணி நேர பயணங்களில் நம்மை அறியாமலே அத்தனை குப்பைகளைச் சேர்த்து விடுகிறோம்.

நீண்ட நெடுந்தூர பயணங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. விமானம் ஏறிய சில மணிநேரங்களில் குடிப்பதில் இருந்து உணவிற்காக வரும் ப்ளாஸ்டிக் டிரேயில் சிறிது சிறிதாக ஏகப்பட்ட நெகிழிப் பொருட்கள். உணவைச் சாப்பிடும் முள் கரண்டி, கத்தி, கரண்டி எல்லாம் மறு சுழற்சி செய்ய முடியாத பொருட்களே! உணவிற்குப் பின் சிற்றுண்டி, மீண்டும் காஃபி, டீ, மதுபானங்கள் என்று ஒரு விமானப் பயணத்தில் மட்டுமே எத்தனை குப்பைகளை நாமே உருவாக்குகிறோம்? ஒரு நாள் மட்டுமே எத்தனை விமானங்கள் பறக்கிறது? எத்தனை மனிதர்கள் பயணிக்கிறாரகள் உலகமெங்கும்? நினைத்தாலே குப்பை உலகம் கண்ணில் மிதக்கிறது :(

ஒவ்வொரு விமானப் பயணியும் சராசரியாக 1.4கிலோகிராம் குப்பைகளை தங்கள் பங்கிற்கு சேர்ப்பதாகவும், உள்ளூர் விமானக் குப்பைகள் சில மட்டுமே மறுசுழற்சிக்குச் செல்வதாகவும், வெளிநாட்டு விமானக் குப்பைகளை பாதுகாப்பு மட்டும் ஒழுங்குமுறைச் சட்டத்தின் அடிப்படையில் எரித்து விடுவதாகவும் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. எரிப்பதால் விளையும் தீமைகளையும் நாம் புறக்கணித்து விடுகிறோம் :( பல நாடுகளும் விமானத்தில் கொண்டு செல்லும் மீத உணவுகளையும் அதன் கொள்கலனைகளையும் கூட எரித்து விடுகிறதாம்.

குறைவான விலை, பயன்படுத்த எளிது, சுகாதாரம் போன்ற காரணங்களுக்காக நெகிழிப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும் அதன் பின்விளைவுகளை நாம் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக எவர்சில்வர் கரண்டி, முள்கரண்டி, கத்தியை பயன்படுத்த முடியாது. கனமான பொருட்களால் எடை அதிகமாக எரிச்செலவும் கூடி விடுவதால் விமான நிறுவனங்களுக்கு ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடே எளிதாக இருக்கிறது.

உலக வெப்பமயமாதல் பற்றின விழிப்புணர்வு காரணமாக மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தலாமே என சிலர் விமான நிறுவனங்களைக் கேட்க ஆரம்பித்துள்ளார்கள். பயன்படுத்திய கழிவுகளை அகற்றுவதும் அவ்வளவு எளிதல்ல. அதற்கும் விமான நிறுவனங்கள் அதிக விலையைக் கொடுக்கிறது.

இதற்கு என்ன தான் தீர்வு?

விமான நிறுவனங்களும் உலக வெப்பமயமாதலைக் கருத்தில் கொண்டு
சில நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டினைக் குறைக்கவோ, மறுசுழற்சி செய்யவோ முனையலாம். பயணிகளும் நிறுவனங்களிடம் முறையிடலாம். மாற்றம் எங்காவது ஓரிடத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். இயற்கையை அழிக்கும் நாம் தான் அதற்கான தீர்வையும் வருங்கால சந்ததியினருக்காக கண்டடைய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம்.

மக்காத குப்பைகளுடன் வாழ்ந்து வரும் நமக்கு அதன் அழிவுகள் ஏற்படுத்தும் அபாயங்கள் உணரும் காலமும் நெருங்கி விட்டதை அறிவோமா?

விழிப்புணர்வும் அடுத்த தலைமுறையின் மீது அக்கறையும் இருந்தால் மட்டுமே நம்மால் முடிந்தவரை இயற்கையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளையும் வாழ வைக்க முடியும்.

நம்மை அழிவிலிருந்து காத்து வந்தவைகளை அழித்துக்கொண்டே வருகிறோம் எந்தவொரு பிரக்ஞையில்லாமல்! கடமையை உணர்ந்து பொறுப்பாக செயல்பட வேண்டிய நேரமும் நெருங்கி விட்டது. கடக்க வேண்டிய தூரம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதுவரையிலும் காத்திருக்குமா இயற்கை?

மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளென பிரித்து மறுசுழற்சிக்கு உதவி இத்தினத்தை முன்னிட்டு பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதைக் குறைக்க முயலுவோம்.

நம் பங்கிற்கு நாமும் இப்பிரபஞ்சத்திற்கு உபகாரமாக இருக்க முயற்சிப்போம்.

Thursday, June 4, 2020

One Spring Night

கொரியன் டிராமா வரிசையில் அடுத்து நான் பார்த்து ரசித்தது "One Spring Night". சில தொடர்களைப் பார்க்க பார்க்க பிடிக்கும். சில தொடர்களைப் பார்த்தவுடன் பிடிக்கும். ஆரம்பக்காட்சியே வசந்தகால செர்ரி மலர்கள் அடர்ந்த சாலையில் பயணிக்கிறது. அதுவே போதுமானதாக இருந்தது இத்தொடரைக் காண.

குடும்பத்தோடு இணைந்த காதல் கதைக்களம். பெரும்பாலான இந்தியன் அப்பாக்கள் போல பெண்களுக்கு அவர் விருப்பப்படி திருமணம் செய்து வைக்க நினைக்கும் அப்பா கதாபாத்திரம். மனைவியிடமும் ஒரே அதிகாரம். பெண்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்காகப்  பேசும் அழகான அம்மா. மூன்று பெண்கள். ஒரு அழகான சுட்டிப்பையன். அவர்களைச் சுற்றி நடக்கும் வாழ்க்கை. இப்படிக்கூட அழகாக ஒரு தொடரை எடுக்க முடிகிறது. ஹ்ம்ம்...

கணவனால் சித்திரவதை செய்யப்படும் பெண் நன்கு படித்து நல்ல வேலையிலும் இருப்பவர். திருமண உறவிலிருந்து வெளிவர நம்மூர் பெண்களைப் போலவே அவருக்கும் அத்தனைப் பிரச்னைகள். மேலைநாடுகள், முன்னேறிய நாடுகளில் கூட பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகம் என்பதை இத்தொடரில் காண முடிகிறது.

பல வருடங்களாக டேட்டிங் செய்பவனிடமிருந்து சிறிது சிறிதாக விலகும் பெண். காதலியை இரண்டாம்பட்சமாக நடத்துவதும் அவள் விலகுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் வன்முறையில் இறங்குவதுமாய் அவளைக் காதலிக்கிறேன் என்று சொல்லியே காயப்படுத்திக் கொண்டே இருக்கும் முன்னாள் காதலன்.

பொறுப்பற்ற ஆனால் அன்பான மூன்றாவது பெண்.

இவர்களிடையே தென்றலாய் வருகிறான் கதாநாயகன். ஒரு பெண்ணிடம் தன் விருப்பத்தைச் சொல்லி அவள் விருப்பத்திற்காக காலத்திற்கும் தவமிருக்கும் கதாபாத்திரம். அந்த சிரிப்பழகனே தான் காதல் நாயகன். காதலிக்கு ஒன்று என்றால் எப்படி துடிதுடிக்கிறான்? ச்ச்சோ ஸ்வீட் பாய் 😍

ஒரு குழந்தைக்குத் தந்தை. அவனையா திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்? என்னிடம் இல்லாதது அப்படி என்ன தான் அவனிடம் இருக்கிறது என்று எகிறும் முன்னாள் காதலனிடம், அன்பு மட்டுமே அவனிடம் இருக்கிறது அது மட்டுமே போதும் என்று போராடும் நாயகி.  நாயகனிடம் சேர எத்தனை தடங்கல்கள்?

இத்தொடரிலும் நல்ல நண்பர்கள். அருமையான கதைக்களம். அழகான ஒளிப்பதிவு. செர்ரி மலர்கள், பச்சை மரங்கள், செடிகள், கொடிகள் என கண்களுக்கும் விருந்தாக காட்சிகள். பின்னணியில் வரும் பாடல்களும் தாலாட்டுகிறது.

எஸ். கிம்ச்சியும், நூடுல்ஸும் உண்டு😉 குடும்பத்தோடு உணவருந்துகிற காட்சிகள் இல்லாத தொடரகளே இல்லை. பார்க்கவும் நன்றாக இருக்கிறது.

குடும்பம், காதல், அழுகை, செண்டிமெண்ட் என இருந்தாலும்
எந்த விகல்பமுமில்லாமல் எவ்வித எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தாமல் இயல்பான காட்சிகளோடு ஆனந்தமாக ஒரு தொடரை அளிக்க முடிகிறது. ஹ்ம்ம்ம்...தமிழ்நாட்டில் தான் அந்த கொடுப்பினை இல்லை😞😞😞

இனி எண்ட தேசம்... சவுத் கொரியா 💖💗💕

Friday, May 22, 2020

Something in the rain


அட நம்ம "Crash Landing on you" கதாநாயகி. இத்தொடரில் முப்பது ப்ளஸ் கதாபாத்திரம். அவரின் தோற்றம் "Crash Landing on you" போல பளிச்சென்று இல்லை. ஆனால் அதே அழகு😊

தன் சகோதரியின் தோழியை காதலிக்கும் இளைஞன். நட்புடன் ஆரம்பித்து தன்னையறியாமல் அவனின் காதலில் கரையும் நாயகி. வயது வித்தியாசம் இங்குள்ள பிரச்னை. அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.

இத்தொடரிலும் ஆண்களால் வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் அவமானங்கள், வேறு வழியின்றி அவ்வலியுடனே வாழும் பெண்கள், அதிகராத்தில் இருப்பவர்கள் நடத்தும் கண்துடைப்பு நாடகம் என்று நாம் கேட்கும், படிக்கும் பல விஷயங்களும் காட்சிகளாக. அம்மாவாக வருபவரின் கோபமும் சுடு வார்த்தைகளும் ஊர் பேச்சுக்குப் பயந்து மகளை கண்டிப்பதும் தமிழ்த்தொடர்களை நினைவூட்டும்.  நகர வாழ்க்கை,  குடியிருப்பு வீடுகள், அழகிய தெருக்கள், சவுத் கொரியாவின் அழகையும் ரசிக்க முடிகிறது.

கண்கள் இடுங்க அழகிய சிரிப்புடன் ஸ்டைலாக சைக்கிளில் வரும் நாயகன். "அலைபாயுதே" மாதவனைப் போல் சோ க்யூட் :) அக்காவின் நெருங்கிய தோழி. நண்பனின் அக்கா என்று தெரிந்திருந்தும் அவள் மேல் வரும் காதல். அவளுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக! அப்படி ஒரு தீவிர காதல்! வீட்டில் அப்பாவும் தம்பியும் வேறு வழியின்றி காதலுக்குப் பச்சைக்கொடி காட்டினாலும் அம்மாவின் பிடிவாதம். மகளை வார்த்தைகளால் சாட, பெற்றோர்கள் விருப்பமின்றி திருமண முடிவைத் தள்ளிப்போடும் நாயகி. நமக்கு வெயில் எப்படியோ அப்படி மழை முக்கிய அங்கமாக கொரியன் நாடகங்களில் வருகிறது.

"சிக்"கென்று இருக்கிறார்கள் கொரியப் பெண்கள்! சூப்பும் கிம்ச்சியும் செய்யும் மாயம் போல. தயிர் சாதத்திற்கு மாங்காய் ஊறுகாய் போல் ரேமன் நூடுல்ஸுக்கு கிம்ச்சி. நண்பர்களின் வீட்டிற்கு கிம்ச்சி கொடுத்து அனுப்புகிறார் அம்மா. என்ன அழகாக உணவுகளை கிண்ணங்களில் வைத்து மேஜையைச் சுற்றி அமர்ந்து சாப்பிடுகிறார்கள்! நம் ஊர் நாடகங்களில் ரசித்து ருசித்து சாப்பிடுவது போல எந்தவொரு காட்சியும் நினைவில் வரவில்லை. நமக்குத்தான் அடுத்தவனைப் பழி வாங்கவே நேரம் சரியாக இருக்கிறதே!

இத்தொடரில் என்னை மிகவும் கவர்ந்த மற்றொரு அம்சம்   காட்சிகளுக்கு ஏற்றவாறு பின்னணியில் வரும் பாடல்கள் தான். மைக்கேல் பூப்லேயின் பிரபலமான பாடலை கொரிய ரசிகர்களுக்காக சிறிது மாற்றி இருந்தாலும் கேட்க இனிமை.

கொரியன் மாதவனுக்காக அடுத்த சீரியலும் பார்த்து முடிச்ச்ச்சாச்சு😍😍😍

இனி எண்ட தேசம் சவுத் கொரியா 
எண்ட ஹீரோ....💓💓💓





.

Sunday, May 17, 2020

Because this is my first life


கொரியன் நாடகங்கள் வரிசையில் அடுத்தது "Because this is my first life". இதுவும் காதலை மையப்படுத்திய நாடகம் தான். ஆனால் அரைத்த மாவையே அரைக்காமல் வேறு ஒரு கதைத்தளம். நாயகி ஒரு எழுத்தாளர். வளர்ந்து வரும் வேளையில் அவருடைய மேலாளர் ஒருவரின் தவறான அணுகுமுறையால் வேலையைத் துறக்கிறார். நகரில் வாடகை தர வசதியில்லாததால் ஒப்புதல் திருமணம் செய்து கொண்டு பேருக்கு மனைவியாக வீட்டில் வசித்து வருகிறார். உம்மண்ணாமூஞ்சி கதாநாயகனைத் தெரிந்து கொண்டு மெல்ல மெல்ல காதலிக்கவும் செய்கிறார். அந்த உணர்ச்சியே இல்லாத ஜடம் போல் வரும் கதாநாயகனுக்குள்ளும் இரண்டாம் முறையாக காதல் அரும்புகிறது. அவளுக்காக எதையும் செய்ய தயாராகிறான். மூன்று பெண்களின் வாழ்க்கையில் காதல் என்பது எதுவரை... இப்படித்தான் போகிறது கதை. 

இதில் பல சுவாரசியமான விஷயங்கள் அப்படியே நம் ஊரை பிரதிபலிக்கிறது. குடும்பத்தில் ஆண் குழந்தைக்குத் தரப்படும் கவனம், அங்கீகாரம் பெண் குழந்தைக்கு கிடைப்பதில்லை. வேலையிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள்! முப்பது வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பெண்களை அவமானமாக உணரச் செய்வது, கணவனுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை அம்மா மகளுக்கு கொடுப்பது, இறந்த பெரியவர்களுக்கான சடங்குகள் இப்படி பல.

கதாநாயகியாக வருபவர் தொடர் முழுவதும் சிரித்துக்கொண்டே தன் வாழ்க்கையை எதிர்கொள்கிறார். அவருடைய தோழிகளாக வருபவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக என்று எதிர்மறை எண்ணங்களே நம்மிடத்தில் தோன்றாமல் பொழுதுபோக்காக பார்க்க முடிவதில் இருக்கிறது கொரியன் நாடகங்களின் சுவாரசியம்.

இத்தொடரிலும் நன்றாக சாப்பிடுகிறார்கள். குடிக்கிறார்கள். நாயகி காலை உணவை ரசித்து ருசித்து சாப்பிடுவதைப் பார்த்தால் ஆஹா இதுவல்லவோ வாழ்க்கை என்று தோணுகிறது. 

பூனையும், மழையும், மலை வீடுகளும், நகரப்பேருந்தும், சாலைகளும் அழகான இலையுதிர்காலம், பஞ்சுப்பொதிகளாக  உதிரும் பனிக்காலம் என பருவநிலை மாற்றங்களும்  தொடர் முழுவதும் கூடவே பயணிப்பது மேலும் அழகு.

குடும்பம், வேலை, காதல் கதை என ஒரு தமிழ் தொடரை எதிர்பார்ப்பது முட்டாள்தனமோ? வெட்டி செண்டிமெண்ட், அழுகை, கூச்சல் என்று நம்மை நாமே தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறோம் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில். என்று தான் திருந்துவோமோ?

இனி எண்ட தேசம் சவுத் கொரியா 💓💓💓

உலக குடும்ப தினம்


புளியைக் கரைத்து புளிக்காய்ச்சல் செய்யும் பொழுதே வயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்து விடும். கொதிக்க ஆரம்பித்தவுடன் வெந்தயப்பவுடர், மஞ்சள் பவுடர், பெருங்காயத்தூள், சிறிது இஞ்சி சேர்க்க காற்றில் மணம் வீச, நாக்கும் ஏங்க ஆரம்பிக்கும். எண்ணெயில் வறுத்த வத்தல்கள் புளிக்கரைசலில் நாட்டியமாட, மணம் சேர்க்கும் கருவேப்பிலையும்.

அதற்குள் உதிரி உதிரியாய் வெந்த சோறும் வடிக்கத் தயாராகி விட, பொங்கல் தட்டில் ஆற விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, வத்தல், கருவேப்பிலை தாளித்துக் கொட்டி புளிக்காய்ச்சலைச் சேர்த்து அம்மா பிசைய, உப்பு சரிபார்க்க தட்டைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் எங்களுக்கு கைப்பிடி உருண்டை.... ம்ம்ம்... காரமா புளிப்பா ... யம் யம் யம்... அம்பட்பாத்💕

கூடவே வேக வைத்த
தட்டைப்பயறு
கருப்பு சுண்டல்

தேங்காயும் கொழிஞ்சியும் கொசுறு❤️

இனிப்பாக
சேமியா கேசரி
ரொட்டி ஹல்வா

இப்படி குடும்பமாக பாட்டி, மாமாக்கள், அத்தைகள், பெரியம்மாக்களுடன் உண்டு மகிழ்ந்ததொரு காலம் இனி வாரா. மகிழ்ந்திருந்த பொழுதுகள் மட்டுமே நினைவினில் என்றென்றும்ம்ம்ம்💕💕💕

குடும்ப உறவுகள் வாழ்வை வளமாக்கும் அற்புத படைப்புகள். உணர்ந்து கொண்டாடுவோம். உள மகிழ்வோம்.

அனைவருக்கும் குடும்ப தின நல்வாழ்த்துகள்🙌


உலக புத்தக தினம்

புத்தகம் பையிலே படிப்பதோ கதையிலே...

அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா குழந்தைகள் புத்தகங்களில் ஆரம்பமாகியது புத்தக வாசிப்பு. எப்படா வரும் என்று காத்திருந்து ஒரு வரி விடாமல் படக்கதை, ஒரு பக்க கதை, மாயாவி, ராஜா கதை, பாலு கரடி, டிங்கு, ஆறு வித்தியாசங்கள் ... என்று சிரிக்க, சிந்திக்க...

நடுநிலைப்பள்ளி வயதில் புதன், வியாழன், வெள்ளி இதயம், விகடன், குமுதம் கல்கண்டு என்று மாடிப்படிகளில் நகம் கடித்த்துக் கொண்டே தொடர்கதைகளையும், பயணக்கட்டுரைகளையும், லேனா தமிழ்வாணன், சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர்...அறிந்து கொள்ள , சினிமா விமரிசனங்கள், கிசுகிசுக்கள் ஒன்று விடாமல் படித்து அறிவை வளர்த்துக் கொண்டதெல்லாம்

மேல்நிலைப்பள்ளி வயதில் எதிர்வீட்டு அக்காக்களிடமிருந்து கதைப் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்து அடிவாங்கி, பள்ளி நூலகத்தில் புத்தகங்களை எடுத்து வீட்டுக்குத் தெரியாமல் படித்ததெல்லாம்...

கல்லூரி முடித்ததும் வேலையிடத்தில் கொட்டிக்கிடந்தது அத்தனை புத்தகங்கள்!

என்னைத் தொலைத்துக் கொள்ள, நான் தொலைந்து போக அப்போதைய தேவையாக இருந்தது கையில் ஒரே ஒரு புத்தகம்.

இன்று தூங்குவதற்கு முன் தூக்க மாத்திரையாகவும்ம்ம்ம் ...

கையிலேந்தி
மடியில்வைத்து
படுத்துக்கொண்டு
அமர்ந்து
நின்று
படிப்பதில் இருக்கும் சுகத்தை தரவல்லது புத்தகங்களே 🙂

விக்ருதி


நெட்ஃப்ளிக்ஸில் விக்ருதி மலையாளப் படம் வந்திருந்தது. இணையத்தில் பலரும் நன்றாக இருக்கிறது என்று போட்டிருந்தார்கள். நிஜமாகவே நன்றாக இருந்தது. இரு குடும்பங்கள் ஒரு புள்ளியில் சந்திக்கிறது. அதன் பாதிப்பிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்று மிக இயல்பாக காலத்தோடு பொருந்திப் போகிற கதை.

தங்கள் பாத்திரத்தை உணர்ந்து மிகைப்டுத்தாமல் நடித்திருந்தார்கள். கதாநாயகன் என்றால் வரும் பொழுதே காதுகள் அதிர இசை என்னும் இம்சை இல்லை. சம்பந்தமே இல்லாமல் நூறு பேருடன் குத்தலாட்டம் போட்டு அரசியல் வார்த்தைகளுடன் பாட்டு இல்லை. சற்றும் பொருத்தமே இல்லாமல் ஸ்லோமோஷன் காட்சிகள், நடிக்கிறேன் பேர்வழி என்று கண்ணைக் கசக்கி அறிவுரைகளைத் தெளிக்காத மிகவும் இயல்பான படம். கதாநாயகி என்றாலே வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற தமிழனின் கொள்கை இல்லாத பக்கத்து வீட்டு கதாநாயகிப் பெண்கள். கண்ணை உருட்டி ஓவர்ஆக்ட் செய்து கொல்லாமல் நடிக்கவும் செய்கிறார்கள்.

கடவுளின் தேசத்துப் படங்களில் எனக்குப் பிடித்தது ஆடம்பரமில்லாத, கூடுதல் அலங்காரமில்லாத நடிகர் நடிகையர்கள். வேட்டி , கைலியுடன் வளைய வரும் மனிதர்கள், மரங்கள் சூழ வீடுகள் எல்லாமே மனதிற்கு நெருக்கமாகி விடுகிறது. கதை தான் திரைப்படத்திற்கு அவசியம் என்று சேட்டன்களுக்குத் தெரிந்திருக்கிறது. நமக்கு அது எண்ணிக்குப் புரிஞ்சு தெரிஞ்சு தெளிவடைய!

தமிழ்ப்படங்களில் கதாநாயகன் என்றால் நூறு பேரைத் தூக்கி மிதிக்க வேண்டும். நரம்புகள் தெறிக்க நடைமுறைக்கு ஒவ்வாத ஆவேச வசனங்கள் பேச வேண்டும். கவர்ச்சி நடிகைகளுடன் குத்தாட்டம் போட்டு வண்டிவண்டியாக அறிவுரைகள் கூற வேண்டும். இயற்கையாக படம் எடுக்கிறேன் பேர்வழி என்று செயற்கைத்தனத்தில் இவர்களை மிஞ்ச முடியாது. இப்படி கொடுத்த காசிற்கு மேல் கூவுறவர்கள் நடித்து நாமும் அதைப் பார்த்துத் தொலைய வேண்டுமென்ற தலைவிதியை மலையாளப் படங்கள் மாற்றி வருகிறது.

கொரோனா வந்தாலும் வந்துச்சு...தமிழ்ப்படங்களைத் தவிர எல்லாவாற்றையும் பார்க்க போய் இனி தமிழ்ப்படம் என்றால் காத தூரத்திற்கு ஓட வைத்திருக்கிறது.

என்னவோ போடா மாதவா!

Varney AVashyamund



இரட்டை அர்த்த வசனங்கள், கோக்கு மாக்கு ஜோக்குகள் இல்லாத எதார்த்தம்னா கிலோ என்ன விலைன்னு கேட்கற படம்.

கதை நான் பிழியற முறுக்கு மாதிரி இஷ்டத்துக்குப் போகுது. சில்லறை சிதறினா காதல் வரும்ங்கறதெல்லாம்🙇🏻‍♀️

டேய் கொரோனா எல்லாம் உன்னால வந்தது. கொரியன் டிராமாவாவது பார்த்திருப்பேன்😞 ஷோபனா ரசிக, ரசிகைகள் வேணா ரசிக்கலாம்! என்னாச்சு சுரேஷ் கோபிக்கு?

ஒட்டாத காதல். துல்கர் ...ம்ஹூம்ம்ம்ம்

"தொவ்ளோ"


மழை வந்தாலே கூடவே அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக்கொள்ளும் இருமல், சளி, காய்ச்சல். அப்பொழுதெல்லாம் வீட்டில் இரவு உணவாக "தொவ்ளோ" எனும் அரிசி மாவுக்கொழுக்கட்டை செய்வார் அம்மா. சௌராஷ்ட்ரா மக்கள் பலரும் விரும்பிச் சாப்பிடும் இரவு உணவு. ஊறவைத்த அரிசியை உப்பு சேர்த்து கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். நன்கு உருட்டி சிறு சிறு உருண்டைகளாக்கி விரலால் ஒரு அழுத்து அழுத்தி பொங்கல் தட்டு அல்லது சுடகில் வரிசையாக வைக்க வேண்டும்.

உலையில் வைத்த பாத்திரத்தில் தண்ணீர் நன்கு கொதி வந்தவுடன் இந்த கொழுக்கட்டைகளைப் போட்டு வேகும் வரை பொறுமை காக்க வேண்டும். வெந்ததும் வடிகட்டி விட்டு, நெய் அல்லது எண்ணெயில் சீரகம், மிளகு, கருவேப்பிலை போட்டுத் தாளித்து அதை கொழுக்கட்டையில் சேர்த்து கலந்து சுடச்சுட சாப்பிட்டால் ...செத்துப் போயிருந்த நாக்கின் சுவை நாளங்கள் நர்த்தனமிடும். அப்படியே வடிகட்டிய கஞ்சியையும் கொஞ்சம் குடித்தால்...தொண்டைக்கு இதமாக நெஞ்சுக்கு சுகமாக நாக்கிற்கு சுவையாக... ம்ம்ம்ம்ம்...


இது போதும் எனக்கு இது போதுமே.... வேறென்ன வேண்டும் இது மட்டுமேன்னு பாடலாம்.

இட்லிப்பொடி தொட்டுச் சாப்பிட காரமும் சேர்ந்து திவ்யமாக இருக்கும்.



அசைவ கொழுக்கட்டையும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான். அதில் ஆட்டுக்கால் சேர்த்து பெரிய சைஸ் கொழுக்கட்டையுடன் வேகவைத்த சூப்...ம்ம்ம்... டம்ப்ளிங்லாம் பிச்சை எடுக்கணும்.

படங்கள்: இணைய உபயம். சௌராஷ்ட்ரா சமையல்கூடத்திலிருந்து (ஃபேஸ்புக்) முன்னொரு நாளில் சுட்டது.பூர்ணிமான்னு நினைக்கிறேன். நன்றி.

KARWAN


துல்கரின் வேறு இரு படங்கள் தந்த ஏமாற்றத்தால் பயந்து பயந்து தான் பார்த்தேன். சிறு வயதில் தந்தையை இழந்தவர், தன்னுடைய விருப்பத்திற்குத் தடையாக இருந்த தந்தையிடம் பேசாதவர், தந்தையின் நடத்தையால் அவரைப்போல் இருந்து விடக்கூடாது என்று நினைப்பவர் என மூவருடன் பெங்களூரிலிருந்து கொச்சிக்குப் பயணிக்கும் கதை. இடையில் நடக்கும் நிகழ்வுகள் எப்படி இவர்களின் பாதையை மாற்றுகிறது என்பதில் முடிகிறது.

கல்லூரியில் படிக்கும் இன்றைய இளம்பெண் குடி, புகைபிடித்தல், கர்ப்ப பரிசோதனை என்பதெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் காட்டியிருப்பது 🤔

Chopsticks படத்தில் நடித்திருந்த Mithila Palkar இப்படத்திலும். வித்தியாசமான பெயர். பள்கார் என்றிருக்கிறது😇

அமலாவா அது!

வளைந்து செல்லும் மைசூர் மலைச்சாலைகள், உயர்ந்த மரங்கள், பனிமூட்டம், ஊட்டி மலைவீடுகள், தென்னை மரங்கள் சூழ தண்ணீரில் படகுகள் செல்லும் அழகு கொச்சி என ரசிக்கலாம்.

படத்தைப் பற்றி பதிவிட்ட பழனிக்குமாருக்கு நன்றி 🙏

தொழிலாளர் தினம்

மதுரையில் சில வருடங்கள் தியாகராஜர் குடியிருப்பு பகுதியில் குடியிருந்தோம். அங்கு இருந்தவர்கள் பலரும் தியாகராஜர் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள். அங்கு வாழ்ந்த காலத்தில் தான் கடைநிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கண்கூடாகப் பார்க்க நேரிட்டது.

அந்தக் குடியிருப்பு பகுதியை குறைந்த விலைக்குத் தொழிலாளர்களுக்குப் பத்திரம் போட்டுக் கொடுத்திருந்தார்கள். ரேஷன் கடை அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் என்று அங்கு கிடைப்பதை வைத்துத் தான் வீடுகளில் சமைப்பார்கள். பல வீடுகளிலும் மண்ணெண்ணெய் மற்றும் கரி அடுப்புகள் மட்டுமே இருந்தது. சிலர் சுற்றுப்புறத்திலிருந்து சுள்ளிகளைப் பொறுக்கி வருவார்கள். வீடுகளில் காய்கறி செடிகள், அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, பப்பாளி, தென்னை, வாழை மரங்கள் இருக்கும். இல்லாதவர்களுக்கும் கொடுத்துத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள். பல வீடுகளிலும் பால் கூட வாங்கிப் பார்த்ததில்லை. குறைந்த வருமானம் தான். சோறு பொங்குவார்கள். காய்கள் போட்டு ஒரு குழம்பு, கீரை என்று ஒரு வேளை உணவு தான் பெரும்பாலான வீடுகளில். குழந்தைகள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொள்வார்கள். பெரியவர்கள் பாட்டுக் கேட்டுக் கொண்டு வேப்ப மர நிழலில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு, அக்கம்பக்கத்து ஆட்களுடன் உறவு முறை பெயரைச் சொல்லி ஒரு குடும்பமாக அவர்களுடைய வாழ்க்கை மிகவும் சாதாரணமான ஒன்று. ஆண்கள், பெண்கள் இருவரும் ஷிஃப்ட் முறையில் வேலைக்குச் சென்று, குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.

என் தங்கை மருத்துவர் என்பதால் உடல்நிலை சரியில்லாதவர்கள் ஊசி போட்டுக்கொண்டு செல்வார்கள். அதற்கு கூட பணம் கொடுக்க முடியாத நிலையில் தான் பலரும் இருந்தனர். மருந்து மாத்திரைகளைக் கூட இலவசமாக கேட்டு வாங்கிச் செல்வார்கள். அன்றைய நிலையில் எங்களுக்கும் அது கூடுதல் செலவு தான். ஆனாலும் முடிந்தவரை உதவிகள் செய்தோம்.

ஒரேடியாக ஆலையை மூடியவுடன் அனைத்துக் குடும்பங்களும் தத்தளித்துப் போயின. தங்கள் குழந்தைகளாவது நன்கு படித்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்று பலரும் சிரமப்பட்டு அவர்களைப் பள்ளிக்கு அனுப்பி, இன்று அடுத்த தலைமுறை நல்ல உத்யோகத்தில் இருக்கிறார்கள். குடும்பங்களும் நன்கு வளர்ச்சியடைந்து வீடுகளும் மாடி வீடுகளாகி அந்தக் குடியிருப்பு பகுதியே உருமாறி விட்டிருக்கிறது.

ஒருவேளை உணவு உண்டு தங்கள் குழந்தைகளுக்காக உழைத்த அன்றைய தொழிலாளர்களின் வியர்வையில் இன்றைய தலைமுறை முன்னேறி இருக்கிறது. மகிழ்ச்சி.

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் அந்த ஏழ்மையிலும் சிரித்துக் கொண்டு வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைத்த மனிதர்கள்! இன்றும் நான் ஊருக்குச் சென்றால் தவறாமல் சந்திக்கும் பொழுது அதே பாசத்துடன் கரிசனத்துடன் மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள். மனிதம் ஜெயிப்பது இங்கு தான் என்று நினைத்துக் கொள்வேன்.





Wednesday, May 13, 2020

நன்மாறன் கோட்டைக் கதை





 "நன்மாறன் கோட்டைக்கதை"  ஒன்பது சிறுகதைகளைக் கொண்ட சிறுகதை தொகுப்பு. இமையம் எழுதிய இத்தொகுப்பில்  சமூக ஏற்றத்தாழ்வுகள், சாதீய தீண்டாமை,  சமகால அரசியல் அவலங்களை அழகாக கதையினூடே காட்சிப்படுத்துகிறார். காலனிவாசிகள் என்று ஒரு சமூகம் அடையாளப்பட்டிருப்பதும் அவர்களை அண்ட விடாமல் ஆதிக்கம் செலுத்துபவர்களின் மனப்பான்மையும் செய்திகளில் பார்த்து கேட்டறிந்ததை இத்தொகுப்பில் வாசிக்கையில் கதைகள் என்று ஒதுக்கி விட முடியவில்லை. சாதிகளை அழித்திடாமல் வெறுப்புடன் வளர்த்துக் கொண்டு வரும் அரசியல் மனப்பான்மை இந்த யுகத்திலும் அதிகரித்திருப்பது படிக்கும் பொழுது வருத்தமாகத்தான் இருக்கிறது. பெண்களை மையப்படுத்திய கதைகளில் வரும் மகளிரைப் போலவே  இந்த நூற்றாண்டிலும் பெண்கள் அவலங்களைச் சந்தித்துக் கொண்டு இருப்பது தான் இத்தொகுப்பை படித்து முடிக்கையில் எண்ணத் தோன்றியது.

நன்மாறன் கோட்டைக்கதையில்  தானுண்டு தன் வாழ்க்கையுண்டு என்றிருந்தவரை வலுக்கட்டாயமாக சல்லிக்கட்டில் அவருடைய மாட்டையும் கலந்து கொள்ள வைத்து வெற்றி பெற்றவுடன் வெறி பிடித்த மனித மிருகங்கள் மனைவி, குழந்தைகள் முன் மாட்டையும் உரிமையாளரையும் கொலை செய்வது சாதீய வெறியின் உச்சம். இப்படியெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை என்று கடந்து விட முடியாது. கல்லூரியில் படித்த காலத்தில் ஒரு குழுவாக வகுப்பிற்கு வந்து தலைநிமிர்ந்து யாரிடமும் பேசாமல் பழகாமல் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டிருந்த மாணவர்களை ஆச்சரியத்துடன் கடந்திருக்கிறேன். வங்கியின் உயர் பதவியில் இருந்தவர் கூட தயக்கத்துடன் தான் பேசுவார். இவ்வளவு பெரிய பதவியில் இருக்கிறவர் ஏன் இப்படி இருக்கிறார் என்றெல்லாம் நினைத்ததுண்டு!  அவர்களும் படித்து தகுதிகளை வளர்த்துக் கொண்டு வந்தாலும் காலம் காலமாக அடங்கிச் சென்று உளவியல் ரீதியாக ஆதிக்க சாதியினரை எதிர் கொள்ளத் தயங்கியதன் விளைவால் அன்று அப்படி இருந்தார்கள். இன்று மாறிக் கொண்டு வருகிறார்கள்!  சமூகத்தில் முன்னேற மற்ற சாதியினரின் ஆதரவும் வேண்டும். இன்றைய நிலையில் இவ்வாறு எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில் அரசியல்கட்சிகள் தெளிவாகவே இருக்கிறது.

போலீஸ் கதையில் தன்னை விட தாழ்ந்த சாதியினரின் இறந்த உடலைத் தொட்டுத் தூக்கி மயானம் வரை கொண்டு சென்றது தனக்கும், தன் குடும்பத்தினருக்கும், தான் சார்ந்த சமூகத்திற்கும் எத்தனை கேவலமென புலம்பும் மனித அவலம்! பரியேறும் பெருமாள் படம் கண்முன்னே வந்து சென்றது! இரட்டைக்குவளை இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பதும் சாட்சி தான். ஆதிக்க சாதியினர் தெருவைக் கடந்து செல்லும் பொழுது காலணியின்றி நடக்க வேண்டும், இறந்த உடலை அவர்கள் குடியிருக்கும் வீடுகள் வழியே எடுத்துச் செல்லக் கூடாது, பொதுக்கிணற்றில் மற்றவர்களுடன் தண்ணீர் எடுக்கக் கூடாது, பள்ளிகளில், பொது இடங்களில் என்று இன்று வரையிலும் தொடரும் வன்மங்களென இக்கதையின் வாயிலாக இன்றைய நிகழ்வுகள் நிழலாடுகிறது!

பணியாரக்காரம்மா  கதையிலும் வெவ்வேறு சாதிக்காரர்கள். இளம்பருவத்தில் அறிந்த ஆனால் சொல்லிக்கொள்ளாத காதல் வயதான பிறகும் இலைமறைகாயாக தொடர்ந்து காமத்தில் முடிவதாய் சொல்லியதிலும் ஆதிக்க சாதியினரை அனுசரித்து செல்வது தான் தனக்கு நல்லது அது தான் முறை என்பது போலவே கதைநாயகியின் செயல்கள் இருப்பதும் அடிமைப்பட்ட மனது அப்படித்தான் இருக்கும் என்று சொல்கிறாரோ ஆசிரியர்? காதல் என்று அவள் நினைப்பதும் அத்தனை வருடங்களிலும் மனைவியுடன் கூட உறவு கொள்ளாமல் நாகம்மாவுடன் ஒரு நாள் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கும் அவனால் காதலை விட சாதி ஜனங்களுக்கு அஞ்சுவதும்  அவளுடன் ஓரிரவு இருந்து விட்டுத் தூர தேசம் செல்வதில் என்ன நியாயம் என்று சொல்லாமல் விட்டுவிட்டாரோ ஆசிரியர்?

நம்பாளு கதையில் சாதிக்கட்சிகளும் சாதிமக்களும் எப்படியெல்லாம் அரசியல் செய்கிறார்கள் என்பது கண்கூடாகவே நடந்தாலும் கதையாக படிக்கையில் உள்ளரசியல் தெளிவாக தெரிகிறது. இன்று நம்கண்முன்னே நடக்கும் அரசியல் கூத்துகளை மனதில் வைத்து ஆசிரியர் எழுதியுள்ளது போல் இருக்கிறது.

கடவுள் என்ற ஆதிசக்தியை வைத்து எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள், மக்களும் ஏமாறுகிறார்கள். ஏழைப்பெண்ணின் நம்பிக்கையை பணத்திற்காக ஏமாற்றுபவனை பிராது மனு கதை சொல்லாமல் சொல்கிறது  கடவுளின் பெயரால் சுரண்டல் செய்யும் இன்றைய ஏமாற்றுக்காரர்களை.

பெண் என்பவள் பிண்டமல்ல. அவளுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. அவளை இழிவாக நடத்தும் கணவனை அவள் நினைத்தால் கேவலப்படுத்த முடியும் என்று தலைக்கடன் கதையில் சொல்கிறாரோ ஆசிரியர்?

 ஏழை சித்தாள் பெண்ணை எப்படியும் இணங்க வைத்து விடலாம் என்று தப்புக்கணக்கு போடும் படித்தவனின் இறுமாப்பு.  சாந்தா கதையில் விளிம்புநிலைப் பெண்களின் அன்றாட அவஸ்தையை விளக்குகிறார்.  அலுவலகத்தில், வேலை செய்யும் இடங்களில் ஆண்களிடம் அகப்பட்டு அல்லல்படும் அநேகப் பெண்களைப்  பொருத்திக் கொள்ளலாம்.

பேருந்தில் பயணிக்கும் பல பெண்கள் அனுபவித்த, அனுபவிக்கும் சிரமங்களை ஆலடி பஸ் கதை கண்முன்னே நிறுத்துகிறது.

கட்சிக்காரன் கதை இன்றைய அரசியல் நிலவரத்தை தத்ரூபமாக விவரிக்கிறது. வாழ்நாள்  முழுவதும் தத்தம் குடும்பங்களை மறந்து கட்சிக்காக உழைப்பவனின் ரத்தத்தைச் சுரண்டும் கட்சிகள்.  தேர்தல் என்று வந்தால் வெற்றி பெற பணமும், அதிகார பலமும் , சாதி அதிகாரமும் மட்டுமே வேண்டியிருக்கிறது. கட்சிக்காக மாடாக உழைத்தவனைப் பொருட்படுத்தாத தலைவர்கள் , கட்சியை வளர்க்கவும், கோஷம் போடவுமே அவர்களுக்கு வேண்டிய மனிதர்களை எப்படி நடத்துகிறார்கள் என இக்கதை நடைமுறை அரசியலை கண்முன்னே நிறுத்துகிறது.

எளிமையாக  வாசிக்கத்தூண்டும் வகையில் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களத்தில். பல்வேறு சமூக அடுக்குப் பெண்களின் அவதிகளை நிதர்சனத்தை கதையின் வாயிலாக அம்பலப்படுத்துகிறார் ஆசிரியர்.

இன்று நகமும் சதையுமாய் கலந்து விட்டிருக்கிறது சாதீய வெறி. சாதிகளை ஒழிக்கிறோம் என்று நெய் வார்த்து அணையாமல் வளர்த்துக் கொண்டிருக்கிறது இன்றைய அரசியல். கைத்தேர்ந்த அரசியல்வாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் கற்ற கல்வியும் அவர்களை சாதீய மனப்பான்மையிலிருந்து விலகி வெளிவர வழிநடத்தவில்லை. எங்கு சென்று கொண்டிருக்கிறது மானிடம்? வெறும் பொருளாதார முன்னேற்றமே மனித முன்னேற்றமா? என்று உணரப்போகிறோம்  நம் தவறுகளை? அடுத்த தலைமுறையாவது விழித்துக் கொள்ளுமா?


Sunday, May 10, 2020

சான்ஃப்ரான்சிஸ்கோ 7 - Bye, Bye SFO

SFO 1
SFO 2
SFO 3
SFO 4
SFO 5
SFO 6

Pier 39லிருந்து Palace of Fine Artsக்கு ஊபரில் பயணம். பதினைந்து நிமிடத்தில் வந்து விட்டது. கலைநேர்த்தியுடன் கட்டப்பட்ட புரதான ரோமன் கிரேக்க கட்டடக் கலையை பிரதிபலிக்கும் பிரம்மாண்ட கட்டடம். கண்களை நிறைக்கிறது அதன் வடிவமைப்பு. இதற்கென தனி வரலாறும் இருக்கிறது. கலைக்கண்காட்சிகள் நடக்கும் இடமாக இருந்தது காலப்போக்கில் பலவிதமாக பயன்பாட்டில் உள்ளது. ஜோடியாக ஜோடியாக திருமண உடைகளில் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். கழுத்தை வளைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அத்தனை உயரமான தூண்களுடன் கூடிய மண்டபங்கள்! நீர் சூழ ரம்மியமானஇடத்தில் அமைந்திருக்கிறது. நகரத்திலிருந்து வேறு கலாச்சாரத்திற்கு சென்று வந்ததது போலொரு நினைவினைத் தந்தது அவ்வளாகம். சிறிது நேரம் புல்தரையில் அமர்ந்து ஒருவர் சாக்ஸஃபோன் வாசித்துக் கொண்டிருந்ததைக் கேட்டோம்.

அப்பா இருந்திருந்தார்னா இங்கருந்து கிளம்பியிருக்க மாட்டார்ல?

அன்னம், வாத்துகள் ஆமைகள், நாரை இனங்கள் என பலவும் குளத்தில் உலவிக்கொண்டிருந்தது. செல்வந்தர்கள் வசிக்கும் அப்பகுதியில் வீடுகள் எல்லாம் கொள்ளை அழகு. மில்லியன் டாலர் வீடுகள்ம்மா.

ம்ம்ம்ம்.... மில்லியன் டாலர்களுக்கு புல்தரையுடன் மரங்கள் சூழ பெரிய்ய்ய்ய்ய்ய வீடுகள் கிடைக்கும் ஆல்பனியில். இங்கு அத்தகைய வீடுகளுக்கு மலைகளை நாடுகிறார்கள்! சில படங்களை க்ளிக் செய்து கொண்டோம். எந்த வீடு அழகாக இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே ஊபரில் "Burma Love" எனும் பர்மியர் உணவகத்திற்கு வந்து சேர்ந்தோம். அப்பா வந்திருந்தப்ப இங்க வந்தோம். அவருக்குப் பிடிச்சது. உனக்கும் ரொம்ப பிடிக்கும்மா.

ஆஹா! புதுவகையான உணவா? பாங்காக்ல சாப்பிட்டது மாதிரி இருக்காதே?

ம்ஹூம்! நம்ம ஊர் ஸ்டைல்ல தான் இருக்கும். அந்த சாலட் உனக்குப் பிடிக்கும்.

அப்புறமென்ன?

இங்கும் நீண்ட வரிசை. பிரபலமான உணவகம். காத்திருந்து உண்கிறார்கள்!

வணக்கம் சொல்லி இருக்கையில் அமர வைத்து உணவுப்பட்டியலைக் கொடுத்து விட்டுச் சென்றாள் பர்மிய அழகி. பின்னணியில் மெல்லிசை இழையோட தட்டுகளில் ராகம் பாடிக்கொண்டிருந்தது முள்கரண்டிகள். மதுப்பிரியர்கள் அழகான கண்ணாடி போத்தல்களில் குடித்துக் கொண்டே உணவருந்திக் கொண்டிருந்தார்கள். உணவுடன் மது அருந்துவது இவர்களின் பழக்கமாக இருக்கிறது. வரிசையாக என்னென்ன உணவு வகைகள் இருக்கிறது என்று பார்த்தேன். பெயர்கள் எல்லாம் புதுமையாக இருந்தது. என்ன ஆர்டர் செய்வது என்று தெரியவில்லை. நானே உனக்கும் சேர்த்து சொல்லிவிடுகிறேன் என்று நிவியே ஆர்டர் செய்து விட்டாள்.

பக்கத்து மேஜைகளில் விதவிதமான கிண்ணங்களில் புதுப்புது உணவு வகைகள்! ப்லாத்தா (நம்மூர் வீச்சு பரோட்டா), டீ லீஃப் சாலட், தேங்காய்ப்பால் கறியில் செய்த "நான் பியா டோக்" நூடுல்ஸ். சிக்கன் கிரேவி. சிறு சிறு கிண்ணங்களில் சாலடுக்குத் தேவையானவைகளை எடுத்து வந்து நம்முன் கலந்து கொடுக்கிறார்கள். அப்படியே நூடுல்ஸ்க்கும். ட்ராவல் ஷோக்களில் பார்த்திருக்கிறேன். அதை ஒரு கலை போல் செய்கிறார்கள். பார்க்க அழகாக இருந்தது. சாம்பார் சட்னி கிண்ணங்களுக்குப் பதிலாக வேறு சிறு சிறு கிண்ணங்கள்! சிறிது கசப்புடன் டீ லீஃப் சாலட் வித்த்தியாசமான சுவையில் நன்றாக இருந்தது. பேசிக்கொண்டே அனைத்தையும் காலி செய்தோம். திருப்தியான சாப்பாடு. இரவு உணவுக்காக சாலட் வாங்கிக்கொண்டோம்.

மாலை நேரம். உணவகங்களின் வெளியில் அமர்ந்து சாப்பிடும் கூட்டம் தெருக்களில். சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்களோ? சரியான சாப்பாட்டு ராமன்கள் உலகமாக இருக்கிறதே!

அம்மா இது தான் நம்ம கடைசி நிறுத்தம். 'ஸ்மிட்டன் ஐஸ்கிரீம்' கடையின் முன்னால் நின்றிருந்தோம். நகரின் பிரபலமான கடை. விதவிதமான நிறங்களில், மணங்களில். இங்கே குளிர்ந்த ஐஸ்கிரீமை மெஷினில் ஒன்றரை நிமிடத்திற்க்கு கடைந்து சுவையைக் கூட்டுகிறார்கள். ஜில்லென்று தொண்டைக்குள் இறங்குகிறது. யம் யம் யம்.... 😍

வழியில் கிரேக்க இனிப்பான பக்லாவா கடை மூடியிருந்தது. இல்லையென்றால் அதையும் ஒரு கை பார்த்திருக்கலாம். இம்முறை வீட்டுக்கு வரும் பொழுது நிறைய வாங்கி வந்து விட்டாள் நிவி. ஃப்ரெஷ்ஷாக நன்றாக இருந்தது. வாயில் வைத்தால் கரைகிறது. வெண்ணையும் சர்க்கரையும் செய்யும் மாயம் தான் என்னவோ? வீட்டில் செய்து பார்க்க வேண்டும் 😜

நேரம் கடந்து சாப்பிட்டாலும் திருப்தியான சுவையான மதிய உணவு. பிடித்த ஐஸ்கிரீம். பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தோம். தினமும் குறையாமல் 23,000 ஸ்டெப்ஸ் நடந்திருந்தோம். வீட்டிற்கு வந்து வத்தல் குழம்பு, ரசம், கறி சமைத்துக் கொடுத்தேன். இனி நாலைந்து நாட்களுக்கு உனக்கு கவலையில்லை நிவி. நல்லா சாப்பிடு.

அந்த வீட்டில் தங்கியிருந்த மற்ற நண்பர்களையும் சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களும் நிவி இந்த வீட்டையும் எங்களையும் நன்கு நிர்வகிக்கிறாள். பொறுப்பான பெண் என்று பாராட்ட பெருமையாக இருந்தது. வீட்டில் நிவி கைப்பட அனைவரின் வேலைகளை அட்டவணை போட்டு வைத்திருந்தாள். அவர்களிடமும் கள்ளம் கபடம் இல்லாத ஒருவித வெளிப்படைத்தன்மை இருந்தது. நல்ல நண்பர்கள் அமைவதும் வரமே! அவர்களிடம் விடைபெற்று ஊருக்குத் திரும்ப துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு நானும் விமானநிலையத்துக்கு கிளம்ப தயாராகினேன். கவலையாக இருந்தது.

என் நண்பர்களை நிவியின் நண்பர்களைச் சந்தித்தது, நகர வாழ்க்கையைத் தெரிந்து கொண்டது , புதிய இடங்களைச் சுற்றிப் பார்த்தது, புதுப்புது உணவு வகைகளை ஆசைதீர உண்டது என நாட்கள் மடமடவென்று ஓடியே விட்டது.

நீ இங்க வந்தது நாம சுத்தினது நல்லா இருந்ததும்மா. அடுத்த தடவை வரும் போது இன்னும் கொஞ்ச நாள் கூட இருக்கிற மாதிரி வரணும். உனக்கு இங்க என்ன பிடிச்சதும்மா?

எனக்கு உன்கூட இருந்த எல்லா நேரமும் பிடிச்சது நிவி. எனக்கு என்னென்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்து நீ செஞ்சது ரொம்பவே பிடிச்சது. இந்த மாதிரி யாரும் என்னை கவனித்துக் கொண்டதில்லை. நான் தான் இப்படி மற்றவர்களுக்கு செய்து பழக்கம். நீ செய்தது எனக்கு ஆனந்தமாகவும் பெருமையாகவும் இருக்கு..

நீ எங்களுக்கு எவ்வளவு செய்யற? இதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா. சொல்லும் பொழுதே உடைந்து நான் அழ ஆரம்பிக்க, நிவியும் அழுதாள். கவலைப்படாதேம்மா. நான் அடுத்த மாசம் ஊருக்கு வர்றேன். வண்டி வர, அழுது கொண்டே விடைபெற்றேன். நான் ஏர்போர்ட் வரைக்கும் வரவா?

வேண்டாம். இப்பவே மணி 10 ஆயிடுச்சு. போய் தூங்கு. நீயும் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. உடம்ப பார்த்துக்கோ. நேரத்துக்குச் சாப்பிடு. அவளைக் கல்லூரியில் விட்டுவிட்டு கிளம்பும் போது எந்த மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில் தான் அன்றும் இருந்தேன்.

அன்பு மகளைப் பிரிந்துசெல்கிற வருத்தமா ? பெண் குழந்தைகள் தான் பொறுப்பாக இருப்பார்கள். தன்னுடைய மகனைப் பற்றி புலம்பிக்கொண்டும் சொந்தக்கதையை சொல்லிக் கொண்டும் வந்தார் மெக்ஸிகன் டிரைவர். ஊருக்கு வரும் பொழுது இருந்த உற்சாக மனநிலை இப்பொழுது இல்லை. ஏதோ ஒரு இனம்புரியாத கவலை.

பாலங்களின் விளக்கொளியில் பசிபிக் கடலும் மின்னிக் கொண்டிருந்தது. விமான நிலையத்தில் விடுமுறை முடிந்து ஊருக்குத் திரும்பும் கூட்டம். வந்து சேர்ந்த தகவலைச் சொல்லி விட்டு செக்கின் முடிந்த பிறகு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

சரிம்மா. பத்திரமா போ. டெட்ராய்ட் போனவுடனே எனக்கு டெக்ஸ்ட் பண்ணு. நான் தூங்கப் போறேன். களைப்பாக இருந்தது அவளுடைய குரல். பாவம்! அழுதாளோ என்னவோ. என்னைப் பற்றிக் கவலைப்பட்டிருப்பாள். நான் அழாமல் இருந்திருக்கலாம். பயமுறுத்தி விட்டேனோ?

அங்கிருந்த ஒவ்வொரு நாளையும் திகட்ட திகட்ட அன்பினால் என்னைச் சீராட்டி வாழ்வில் மறக்க முடியாத, பொக்கிஷமான நாட்களாக்கி விட்டாள் செல்ல்ல்ல மகள். சுகானுபவம்! தட் அவள் எனக்கா மகளானாள்... நான் அவளுக்கு மகளானேன் மொமெண்ட்ட்ட் 🙂

தூரத்தில்
தொலைதூரத்தில்
உற்றார் உறவினர்
எவரும் அருகே
இல்லாத ஒருதூரத்தில்
மகளிடத்தில்
மகளாயிருந்ததே
மாதவம்ம்ம்ம்ம்😍😍😍

SFO 7 Photos

Saturday, May 9, 2020

சான்ஃப்ரான்சிஸ்கோ 6 - Painted Ladies & Bueno Vista Park

SFO 1
SFO 2
SFO 3
SFO 4
SFO 5

டார்டின் பேக்கரியில் இருந்து அரை மைல் தொலைவில் டோலோரெஸ் பூங்காவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். பெரிய பெரிய அழகான வீடுகள். சாலைகளை அலங்கரித்த அழகு பனைமரங்கள். பூங்கா சற்று மேடான இடத்தில் அமைந்திருப்பதால் சுற்றி இருந்த கட்டடங்கள் அழகாகத் தெரிந்தது. பல நாட்களுக்குப் பிறகான இதமான வெயில் மற்றும் விடுமுறையைக் கொண்டாடும் மனிதர்கள். பூங்காவில் உட்கார இடமில்லை. ஊஞ்சல்களில், சறுக்கி விளையாடும் இடங்களில் குழந்தைகளின் உற்சாக குரல்கள். இங்கு குழந்தைகளைத் தனியே விடுவதில் இருக்கும் பயமும் பாதுகாப்பின்மையும் காரணமாக அவர்களைக் கண்காணித்துக் கொண்டு சுற்றி நின்று அவர்கள் விளையாடுவதை ரசிக்கும் பெற்றோர்கள். ஐஸ்கிரீம் விற்றுக் கொண்டிருந்த வண்டியைச் சுற்றி இளம் சிறார்கள். கோடை வந்தது போல் புத்துணர்ச்சியுடன் மக்கள்! வெயிலின் அருமை பனிக்காலத்தில் நன்கு தெரிந்து விடுகிறது! எப்படா வெளியில் சுற்றித் திரிவோம் என்று இந்நகர மக்களே காத்திருந்தால் நியூயார்க் நகர மக்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

புல்தரையில் துணியை விரித்துப் படுத்துக்கொண்டே புத்தகம்வாசிப்பவர்கள், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பவர்கள், கிடார் இசைப்பவரைச் சுற்றி அமர்ந்திருந்த நண்பர்கள் குழாம், தனியாக காதில் தொங்கட்டான் வழியாக பாடல்கள் கேட்டுக் கொண்டு என்று வைட்டமின் டியை பலவகையிலும் பெற்றுக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்தவர்கள். பலரும் சாப்பாட்டுக்கூடையுடன் குடும்பமாக அன்று முழுவதும் அங்கேயே பொழுதைக் கழிக்கும் உத்தேசத்தில் வந்தவர்கள் போல இருந்தார்கள். நாங்களும் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு கடையில் வாங்கிய ஆல்மண்ட் க்ரைஸாண்ட்டை சாப்பிட ஆரம்பித்தோம். வெண்ணையில் தயாரித்தது. இனிப்பும் கூட. வாயில் வைத்தால் கரைந்தது. ஆஹா! ஏதாவது கிடைக்குமா என்று பறந்து வந்த குருவிகளுக்கும் சிறிது கொடுத்து விட்டு " சிலுசிலு" காற்றில் "குளுகுளு" வெயிலில் முதன் முறையாக இவ்வளவு ருசியான இனிப்பு க்ரைஸாண்ட்! ஏகாந்தம்ம்ம்ம்!

எங்கள் அருகில் இளம்பெண்களும் ஆண்களுமாய் சிறு கூட்டம். தன்னை மறந்த நிலையில்! ஒருவர் மாற்றி ஒருவர் சுருட்டி வைத்த கஞ்சாவைப் புகைத்துக் கொண்டு அமைதியாக ஆனந்தமாக உல்லாச உலகம் எங்களுக்கே சொந்தம் ஸ்மோக் பண்ணுடா பண்ணுடா பண்ணுடான்னு அவர்கள் உலகில் கண்கள் சொக்கிய நிலையில் யாரையும் தொந்தரவு செய்யாமல் இருந்தது ஆம்ஸ்டர்டம் நகரை நினைவூட்டியது. கலிஃபோர்னியா மாநிலத்தில் கஞ்சா சட்டபூர்வமாக விற்பனை செய்யப்படுகிறது. அதனால் பொது இடங்களில் தாராளமாக புகைக்கிறார்கள். அந்த வாசனையே காட்டிக் கொடுத்துவிடுகிறது அருகில் யாரோ புகைப்பதை! நியூயார்க்கிலும் விரைவில் சட்டபூர்வமாக்கப்படும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள் திருட்டுத்தனமாக பயந்து பயந்து ஒளிந்து புகைப்பவர்கள். பலவும் இப்படி பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

வாம்மா. நீ பார்க்கணும்னு சொன்ன இடத்துக்குப் போவோம். ஒன்றரை மைல் தொலைவு தான். நல்ல மேடா இருக்கும். ஊபருக்குச் சொல்லிடறேன். கவலைப்படாதே . சிரித்துக் கொண்டே சொன்னாள் என் செல்லம்.

அப்பாடா என்றிருந்தது. காலையிலிருந்து நடந்து நடந்து கால்களுக்கும் ஒய்வு வேண்டுமே?

அங்கிருந்து சாய்வுச்சாலையின் உச்சியில் அலமோ ஸ்கொயர். அம்மாடியோவ்! இதுல நான் நடந்திருந்தா அவ்வளவு தான்!

சீக்கிரம் வந்துடுச்சே!

பக்கம் தான்ம்மா.

சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் சில தெருக்களில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான விக்டோரியன் வீடுகள் வரிசையாக இருக்கும். வெளிப்புறங்களில் மாற்றங்கள் ஏதும் செய்யாமல் பழமையைத் தக்க வைத்திருப்பார்கள். சில வண்ணங்களில் பூச்சு அடித்து கட்டட அழகை மெருகூட்டியிருப்பார்கள். அதைக் காணவும் ஒரு கூட்டம் வரும். அலமோ ஸ்கொயரில் வரிசையாக இருக்கும் இந்த ஏழு வீடுகள் 'Painted Ladies' , 'Postcard Row' என்று அழைக்கிறார்கள். கணிசமான கூட்டம் எதிரில் இருந்த பூங்காவில் நின்று கட்டடங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் படங்கள் எடுத்துக் கொண்டுமிருந்தது. நாங்களும் சேர்ந்து கொண்டோம். அந்த வீடுகளில் மக்கள் வசிக்கிறார்கள். அதில் ஒரு வீட்டில் அமெரிக்க தொலைக்காட்சித் தொடர் 'Full House' எடுத்திருந்ததும் நினைவுக்கு வந்தது. பூங்காவில் ஐஸ்கிரீம் விற்றுக் கொண்டிருந்தார்கள். வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு மைல் தொலைவில் இருக்கும் புயனோ விஸ்டா பூங்காவிற்குச் சென்றோம்.

வழியெங்கும் ஏற்றமும் இறக்கமுமாய் சாலைகள். தெருக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவித அழகு. வீடுகள் எல்லாம் ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு வண்ணங்களில். சிறு உணவகங்கள் அதிகம் தென்பட்டது. கால் வலி மெதுவாக எட்டிப்பார்க்க நல்ல வேளை பூங்கா வந்து விட்டது. வசதியானவர்கள் வசிக்கும் தெருக்களில் பெரிய வீடுகள்! அப்ப்ப்ப்ப்பா!

அங்க பாரும்மா!

வாவ்! சாலையின் இருபுறங்கிலும் ஓங்கி வளர்ந்த பனைமரங்கள் . சாலை இறங்கி நேரே கடலுக்குள் செல்வது போல இருந்தது. என்ன அழகு! கீழிருந்து மேலேறி வரும் வண்டிகள் சாய்ந்து வருகையில் நல்ல வேளை நாம் இந்தப்பகுதியில் வண்டியோட்டிக் கொண்டு வரவில்லை. பயத்திலேயே வண்டி பின்னோக்கிச் சென்றிருக்கும்...நினைத்துக்கொண்டேன். நடுசாலையில் நின்று சில படங்களை எடுத்துக் கொண்டு எதிரில் இருந்த பூங்காவில் சிறிது நேரம் கண் இமைக்காமல் அந்தச் சாலையில் கீழ் இறங்கும், மெதுவாக மேலேறி வரும் வண்டிகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். சில ஹாலிவுட் திரைப்படக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.

மீண்டும் ஊபர் காரில் ட்வின் பீக்ஸ் என்ற மலைகளுக்கு ஒரு மைல் தூர பயணம். அழைத்த சில நிமிடங்களில் 'டான்' என்று வந்து விடுகிறது ஊபர். வண்டிகளையும் நல்ல நிலைமையில் வைத்திருக்கிறார்கள். வளைந்து வளைந்து மலைகளில் எற வண்டியே சிரமப்பட்டது. சிலர் சைக்கிள்களில் வியர்த்து விறுவிறுக்க மேலேறிக் கொண்டிருந்தார்கள். எப்படித்தான் முடிகிறதோ! அதிசயிக்க வைக்கும் மனிதர்கள்! 'சல்'லென்று வளைவுகளில் கீழிறங்கும் வண்டிகளும் மிதிவண்டிக்காரர்களும் பார்க்க நன்றாகத் தான் இருந்தது. மலையில் தீயணைப்பு வண்டிகளும் போலீஸ் கார்களும் பாதுகாப்பிற்காக இருந்தது ஆறுதல். கூட்டத்தைச் சீர்படுத்திக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலான உள்ளூர் மக்கள் ஊபர் போன்ற வாடகை வண்டிகளையே நாடுகிறார்கள்.

இரு மலைகள். உச்சி வரை நடந்து சென்றால் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரம் முழுவதுமே தெரிகிறது. சாலைகளும் உயர்ந்த கட்டடங்களும் மேலிருந்து வளைவுச்சாலைகளில் கீழிறங்கும் வண்டிகளும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல காட்சிகள் கண்முன்னே விரிகிறது. மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. ச்ச்சில்லென்ற குளிர்க்காற்று வீசவும் திரும்பலாம் என்று முடிவு செய்து மீண்டும் ஊபரில் La Tacqueria என்ற பிரபலமான மெக்ஸிகன் உணவகத்திற்கு வந்து சேர்ந்தோம்.

இங்க எப்பவுமே நீளமான வரிசை இருக்கும்.இன்னிக்குப் பரவாயில்லைம்மா. கூட்டம் குறைவா இருக்கு.

இது கூட்டம் இல்லையா? அதுவும் இந்த நேரத்துல? ஆல்பனி போன்ற சிறுநகரங்களில் இருந்து விட்டால் பெருநகர வாழ்க்கை எல்லாமே மலைப்பாகத் தான் இருக்கிறது!

பதினைந்து நிமிடத்திற்குப் பிறகு உட்கார இடம் கிடைத்து ஆர்டர் செய்தது வர, இவ்வளவு பெரிய 'பரிட்டோ'வா? சொல்லிக்கொண்டே சாப்பிட்டு முடித்தேன். அருகில் உட்கார்ந்திருந்தவர்கள் சாப்பிட்டுக் கொண்டேஏஏஏஏஏ இருந்தார்கள். எப்படித்தான் இவ்வளவு சாப்பிடுகிறார்களோ? கடோத்கஜன்கள்! கூட்டமும் குறைந்தபாடில்லை. வரிசையாக மெக்ஸிகன் உணவகங்கள் இருந்தாலும் இங்கு மட்டும் அதிக அளவில் மக்கள் காத்திருந்து உண்கிறார்கள். நியூயார்க்கில் இல்லாத பலவும் இங்கு இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் மெக்ஸிகன் மக்கள் வாழ்வதால் அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளும் கிடைக்கிறது. திருப்தியான உணவு சாப்பிட்டவுடன் கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதி! நிவி என்னை அழைத்துச் சென்ற அடுத்த இடம் ... ஆஹா! பாதங்களை மசாஜ் செய்யும் பார்லர்!

தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்து நடந்து அந்த நேரத்தில் அவசியமாக இருந்தது. நான் கேட்காமலே அழைத்துச் சென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. வயிறு நிறைய பரிட்டோ. மிதமான சுடுநீரில் காலை வைக்கும் பொழுதே அவ்வளவு இதமாக இருந்தது. மசாஜ் செய்யும் பெண்மணிக்குச் சுத்தமாக ஆங்கிலம் பேச தெரியவில்லை. நான் சொன்னதைப் புரிந்து கொண்டவர் பாதத்தை மசாஜ் செய்ய, தாய்லாந்தில் செய்து கொண்ட மசாஜ் பற்றி நாங்கள் இருவரும் தாய்பாஷையில் பேசிக்கொண்டதை அப்பெண்மணி சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். தூக்கமும் கண்களைச் சுழற்ற பாதங்கள் நன்றி சொல்ல நான் அப்பெண்மணிக்கு நன்றி சொல்லி அங்கிருந்து ஊபரில் வீட்டுக்குப் பயணம்.

அன்று இரவு உணவுக்கு நிவியின் நண்பர்கள் வீட்டிற்கு வந்து என்னைச் சந்திப்பதாக சொல்லி இருந்தார்கள். இரவு உணவாக சௌராஷ்ட்ரா ஸ்பெஷல் தக்காளிப் பொங்கலும், சிக்கன் கிரேவி, சட்னி செய்ய வேண்டும். பரோட்டா இருக்கிறது. அம்மா, நீ கொஞ்ச நேரம் தூங்கு. நான் தக்காளி, வெங்காயம் நறுக்கி வைத்து விடுகிறேன்.

டீயுடன் எழுப்பும் பொழுது அடடா! சமைக்கணுமே. இன்ஸ்டாபாட் எடு சமைத்துப் போடு என்று ஒன்றரை மணி நேரத்தில் எல்லாம் முடித்தாகி விட்டது. நடுநடுவே ஈஷ்வருடன் பேசிக்கொண்டும் படங்களை அனுப்பிக் கொண்டே நாங்களும் தயாராகி நிவியின் நண்பர்களுக்காக காத்திருந்தோம்.

சான்ஃப்ரான்சிஸ்கோ 5 - Mission Street

SFO 1
SFO 2
SFO 3
SFO 4

மலைகளின் மேல் கவிழ்ந்திருந்த அதிகாலை பனிமூட்டம் தந்த சிலிர்ப்பு ஆல்பனி விடியலை நினைவுறுத்த, இன்றைய நாள் எப்படியோ என ஆராய்ந்ததில் சான்ஃபிரான்சிஸ்கோவில் மிதமான வெப்பம். காதலர் தினத்தைச் சிறப்பிக்க இயற்கையும் ஒத்துழைக்கிறது போலும். வெள்ளிக்கிழமை ஆரம்பித்து ஞாயிறு வரை கொண்டாட காரணம் ஒன்று எப்படியாவது கிடைத்து விடுகிறது. திங்கட்கிழமை அரசாங்க விடுமுறை வேறு! நகரைச் சுற்றிப் பார்க்க வரும் கூட்டமும் அதிகமாக இருக்கும். சீக்கிரம் கிளம்ப வேண்டும். அதிகாலையிலும் அந்திமாலையிலும் நல்ல குளிர். மதியம் சுடாத இளம்வெயில். ஸ்வெட்டர், லைட் ஜாக்கெட் இல்லாது வெளியே கிளம்ப முடியாது. எப்பொழுதும் தூறல் விழலாம் போன்றதொரு குளுகுளு வானிலை. நன்றாகத்தான் இருக்கிறது!

இன்றும் நீண்ட தூரம் நடக்கப் போகிறோம்ம்மா.

ம்ம்ம்ம்.... நகரைச் சுற்றிப்பார்க்கும் ஆசையில் கிளம்பிவிட்டோம். வழியில் அழுக்கு மூட்டைகளுடன் வீடற்ற மனிதர்கள் சாலையோரம் சுருண்டு படுத்திருந்தார்கள். அமெரிக்காவில் ஏழைகளிடமும் கார் இருக்குமாம் என்று சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே வந்தபிறகு தான் ஏழைகள் எல்லா நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். போதைக்கு அடிமையானவர்கள், குடும்பங்களை விட்டுப் பிரிந்தவர்கள், வருமானம் இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்கள் இவர்களோடு சிறுபான்மையினரும் இந்த ஊரில்!

இவங்கல்லாம் எப்பவும் இங்க தான் இருப்பாங்களா? தனியா நடந்து வர்றப்ப பிரச்னை இல்லையே?

இந்த ஊர் முழுக்க இருக்காங்க. பயப்படாதம்மா. எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டாள்!

நடந்து வரும்போது சுற்றுமுற்றும் பார்த்து கவனமா இருக்கணும் நிவி.

சிரித்துக் கொண்டாள். ம்ம்ம்ம் ... இளங்கன்று பயமறியாது.

நாய்களுக்கென்றே பூங்காக்கள்! துள்ளிக்குதித்து சக நாய்களுடன் சிறுகுழந்தைகளைப் போல விளையாடிக் கொண்டிருந்தது அழகு. அவர்களின் உரிமையாளர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நியூயார்க்கில் நாய்களை இப்படியெல்லாம் விட்டுவிட்டு பேசிக்கொண்டிருக்க முடியாது. சட்டப்படி குற்றமும் கூட. அதிசயமாகத் தான் இருக்கிறது. எதற்கு வம்பு என்று வேடிக்கைப்பார்த்துக் கொண்டே பூங்காவைச் சுற்றி நடந்தோம்.

சாய்வுக்கோணங்களில் சாலைகள். உணவகங்களில் எண்ணையில் பொரியும் கோழியின் வாசம், தேநீர்க்கடைகளில் சுடச்சுட அரைத்த காஃபி மணம். காலை நேரத்து நகரம் தான் எத்தனை அழகு! நெருக்கமான சிறுசிறு வீடுகளைக் கடந்து இருபுறமும் மரங்கள் அமைந்த சாலைகளில் வரிசையாக வெவ்வேறு உணவகங்கள் உணவகங்கள் மட்டுமே. மெக்ஸிகன் உணவகங்கள் அதிகம் தென்பட்டது. குட்டையான மனிதர்களின் நடமாட்டமும் அதிகம். இவங்க தான் இங்க நிறைய இருப்பாங்க. இது தான்மா மிஷன் ஸ்ட்ரீட் !

ஆஆஆ! இந்த தெரு கொஞ்சம் டேஞ்சர்னு சொல்லுவாங்கல்ல?

அது வேற பக்கம். கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும். நான் அங்கே போனதில்லை.

போகாத. போதைமருந்து கும்பல், கொலை, கொள்ளைன்னு படிச்சிருக்கேன்.

நாங்க யாருமே அங்க போக மாட்டோம். இங்க அடிக்கடி சாப்பிட வருவோம். இதெல்லாம் பாதுகாப்பான தெருக்கள் தான். பயப்படாத வாம்மா.

ஒரு சிறிய கடை முன் வரிசையாக நின்றிருந்தவர்களுடன் சேர்ந்து கொண்டோம். அமமா இங்க டோனட் ரொம்ப ஸ்பெஷல். ஆஹா! நான் ஒரு டோனட் அடிமைன்னு இங்க கூட்டிட்டு வந்துட்டாளே! இன்றைய ஸ்பெஷல் என்று வரிசையாக இதுவரை கேட்டிராத டோனட் பெயர்கள். ஒன்றும் புரியவில்லை. இருவர் ஆர்டர் எடுக்க உள்ளே பம்பரமாக வேலையாட்கள். கண்முன்னே சுடச்சுட தயாராகிறது சுவையான டோனட்கள்.

உனக்குப் பிடிச்சதா சொல்லும்மா.

எனக்குத் தெரிஞ்சதெல்லாம் டங்கின் டோனட்ஸ் தான். நீயே பாத்து எனக்கும் ஆர்டர் பண்ணிடு.

சரிம்மா. நீ உள்ள போய் உட்காரு. நான் வாங்கிட்டு வந்துடறேன்.

சிறு குடும்பம் ஒன்றும் ஆண் பெண் நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சிறு தோட்டம். அங்கே நான்கைந்து மேஜைகள். கால் முளைத்த குழந்தை டோனட்டை மென்று கொண்டே தத்தித்தத்தி புதுமுகங்களை அருகில் நின்று பார்த்துச் சிரித்தது....தட் பிள்ளையாய் இருந்து விட்டால் தொல்லையேதும் இல்லையடா மொமெண்ட்!

ரோஸ் ஹைபிஸிகஸ் , ஆரஞ்சு ஷாம்பெயின் டோனட், கப்பச்சினோவுடன் நிவியும் வந்தமர்ந்தாள். விடுமுறை நாட்களில் சோம்பலான காலை நேரத்தில் நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் இடம். அடிக்கடி வருவோம் என்று அவள் நண்பர்களைப் பற்றிச் சிறிது அளவாளாவினோம்.

வழக்கமான டோனட்டின் சுவையிலிருந்து வித்தியாசமாக இருந்தது. இனிப்பும் அளவாக, மெத்துமெத்தென்று டோனட் வாயில் கரைந்து போகிறது. நியூயார்க்கில் தடுக்கி விழுந்தால் டங்கின் டோனட் கடைகள் தான். டோனட் அடிமைகள் அதிலிருந்து மீள்வது மிக கடினம்😢 ஆல்பனியிலும் சுற்று வட்டாரங்களிலும் ஆப்பிள் சைடர் டோனட்கள் பிரபலம். அதுவும் இலையுதிர்காலங்களில் மட்டுமே கிடைக்கும். அத்தனை ருசி! ம்ம்ம்ம்... ஒரே மாதிரியான டோனட்க்கள் பழகின நாக்கிற்கு வித்த்தியாசமாகவும் சுவையாகவும் இருந்தது இந்த டோனட்கள்.

சாப்பிட்டு முடித்து மரங்கள் அடர்ந்த தெருவில் நடக்க ஆரம்பித்தோம். அமர்ந்து சாப்பிடும் வகையில் விதவிதமான காஃபிக்கடைகள். இளம்பெண்களும் ஆண்களும் கடைகளை ஆக்கிரமித்திருந்தார்கள். சிலர் அந்தக் காலை வேளையிலும் மடிக்கணியை தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். இங்கே இணையம் இலவசம் என்று சில கடைகளும் எங்கள் கடை உணவுகளை உண்டு மகிழுங்கள் நண்பர்களுடன் பேசி சிரித்திருங்கள் கணினிக்கு அனுமதி கிடையாது என்று சில கடைகளும் வித்தியாசமாக இருந்தது. சதாசர்வ காலமும் செல்ஃபோனுக்கு அடிமையாகி நண்பர்களுடன் இருக்கும் பொழுதுகளில் கூட பேச மறந்து அதை நோண்டிக் கொண்டிருப்பதால் இப்படியெல்லாம் கடைகளில் எழுதிப் போட்டிருக்கிறார்களோ என்னவோ.

ஒரு காஃபி வாங்கிக்கொண்டு பல மணிநேரங்கள் கூட கடைகளில் உட்காரலாம். இந்த ஊரில் வெளியில் சாப்பிடும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். அவரக்ளை நம்பித்தான் இத்தனை கடைகளும்! ஐடி நிறுவனங்களில் வேலைசெய்வோர் பலரும் பட்டதாரிகள். இளம் வயதினர். நல்ல மாத வருமானம். வீட்டில் சமைத்துச் சாப்பிட வேண்டுமென்ற அவசியமும் இல்லை. வாழ்க்கையை எளிதாக்க விரும்பியதை உண்ண இத்தகைய உணவகங்களை நம்பி இருக்கிறார்கள். உணவகங்களும் இவர்களை நம்பி ஓடுகிறது.

பேசிக்கொண்டே பல தெருக்களைக் கடந்து கொண்டிருந்தோம். நிழல் தரும் மரங்களாயினும் முறையான பராமரிப்பின்றி அங்குள்ள வீடுகளை பாதித்து வருவதால் அழகு மரங்களை வெட்டியெறிய அரசு முடிவெடுத்திருக்கிறது. மக்கள் அதனை எதிர்க்கிறார்கள். ஒவ்வொரு மரத்தின் மேலும் தன்னைக் காப்பாற்றச் சொல்லி மரங்கள் சொல்வதாக வாசகங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். தவறு செய்தவன் எவனோ இருக்க, வளர்ந்து நிற்கும் மரங்களை வெட்டுவதால் என்ன லாபம்? அத்தெருவின் அழகும் அடையாளமும் பாழாகும். அரசாங்கத்திற்கு எது எளிதோ அதனைத்தானே செய்வார்கள்?

அடுத்த முறை வரும் பொழுது இம்மரங்கள் இருக்க வேண்டுமே !

அப்படியே வேலன்ஷியா தெருவிற்கு வந்து விட்டோம். இங்குள்ள பேக்கரி கடை, சாக்லேட் கடைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் பிடித்தவற்றை வாங்கிச் சுவைத்துக் கொண்டும் தெருவில் நின்று கொண்டு, கூட்டமாக அமர்ந்து சாப்பிடுவோரையும் கடந்தோம். விடுமுறை என்பதால் அதிக கூட்டம் என்று நினைக்கிறேன். சான்ஃபிரான்சிஸ்கோ செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். சாலையில் அமைந்திருக்கும் வீடுகளின் முகப்பில் கருத்துக்களைச் சொல்லும் ஓவியங்கள் முதல் கண்கவர் ஓவியங்கள் வரை தீட்டியிருந்தார்கள். ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு அழகு. ஒவ்வொன்றையும் நின்று நிதானமாகப் பார்த்து படங்கள் எடுத்துக் கொண்டு கிளாரியான் தெருவிற்கு வந்து சேர்ந்தோம். இத்தெருவில் வீடுகள் கிடையாது. இருபுறமும் நீண்ட சுவர்களின் மேல் பல ஓவியங்கள். பெரும்பாலும் சிறுபான்மையினர், பெண்களுக்கு எதிரான, சமூக அநீதியை, அரசியலைக் க் கேள்வி கேட்கும் கருத்துக்கள் ஓவியங்களாக. ஓரிரு இந்தியக் குடும்பங்கள், சில அமெரிக்கர்கள் வேடிக்கைப் பார்க்க வந்திருந்தார்கள். தெருவின் முடிவில் போதை மயக்க நிலையில் அழுக்கு மனிதர்கள் சிலர் யாரைப்பற்றின கவலையுமின்றி அமர்ந்திருந்தார்கள்.

எங்கும் நம்மவர்கள், ஆசியர்கள், மெக்ஸிகன்கள், வெள்ளை அமெரிக்கர்கள். அதிசயமாக இன்னும் ஒரு கருப்பு அமெரிக்கரைக் கூட காணவில்லை. அவர்களுக்கான நகரம் இது அல்ல போலிருக்கிறது. உலகின் அதிபணக்காரர் முதல் ஏழைகள் வரை அனைவரும் அவரவர் வசதிக்கேற்ப நகரங்களில் வசிக்கிறார்கள். எல்லா நகரத்தைப் போலவே ஏழைகள் வாழுமிடங்களில் குற்றங்கள் அதிகம்.

பலவும் பேசிக்கொண்டே சான்ஃபிரான்சிஸ்கோவின் பிரபலமான டார்டின் பேக்கரி வந்து சேர்ந்தோம். ஆஹா! கடையில் நல்ல கூட்டம். ஒவ்வொருவரும் நான் பார்த்திராத ஐட்டங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆல்பனியில் தெருமுனையில் இருக்கும் இத்தாலியன் பேக்கரி கடையில் இருக்கும் எல்லா ஐட்டங்களும் அத்துப்படி. இங்கு ஒன்றும் புரியவில்லை. உள்ளேயிருந்து தயாராகி வருவது நொடியில் பறந்தோடிக் கொண்டிருந்தது. அதிசயமாக ப்ளாஸ்டிக் பொருட்கள் கண்ணில் படவில்லை. எவர்சில்வர் டம்ளர் , தண்ணீர் ஜக் என்றிருக்க ஆறுதலாக இருந்தது. மக்கள் பலரும் காஃபியை தங்கள் ஃப்ளாஸ்க்கில் வாங்கிக் கொள்வதும் சுற்றுப்புறச்சூழலின் மேல் இருக்கும் விழிப்புணர்வின் தீவிரம் தெரிந்தது. நியூயார்க் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாங்களும் எங்களுக்குப் பிடித்தவற்றை வாங்கி கொண்டு நிதானமாக சாப்பிடலாமென நகரில் பிரபலமான டொலரெஸ் பூங்காவை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...