Friday, January 28, 2022

The Tender Bar


'The Tender Bar' ஹாலிவுட் திரைப்படம் 'ஃபீல் குட்' வகையைச் சார்ந்தது. ஜார்ஜ் க்ளூனி தயாரிப்பில் பென் ஆஃப்லெக் நடிப்பில் வெளிவந்துள்ள இப்படம் உண்மைக்கதையின் அடைப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

தந்தை இல்லாத பல அமெரிக்க குடும்பங்கள் இங்கு சர்வ சாதாரணம். குடி, போதைப்பழக்கம், குடும்ப வன்முறை காரணங்களுக்காக பெண்கள் குழந்தைகளுடன் பிரிவது நடக்கிறது. அக்குடும்பத்தில் வளரும் குழந்தைகள் சில மன உளைச்சல்களுக்கும் ஆளாகிறார்கள். இப்படத்தில் அப்பாவைப் பிரிந்து வாழும் குழந்தையின் பெயரிலிருந்து கேள்விகள் எழுகிறது. தன் தந்தையின் உண்மையான முகத்தை அடையாளம் காணும் வரையில் அவரை எதிர்பார்ப்பவன் பிறகு நிரந்தரமாக விலகுகிறான்.

அப்பாவைப் பிரிந்து அம்மாவும் சிறுவனும் தாத்தா வீட்டிற்கு குடியேறுகிறார்கள். வயதான தாத்தா பாட்டி. அந்த வயதுக்கே உரிய கிறுக்குத்தனம் இருக்கும். விழா நாட்களில் மட்டும் வந்து செல்லும் உறவுகள். அப்பாவுக்காக ஏங்கும் சிறுவனுக்கு ஆதரவாக அவனை நல்ல மனிதனாக, ஆணாக உருவாக்கும் மாமா. இவர்களைச் சுற்றி நடக்கும் கதையில் அம்மாவின் கனவை நிறைவேற்றி தன்னுடைய எழுத்தாளர் கனவை அடையும் வரையில் அவனுடைய வாழ்க்கை படமாக்கப்பட்டிருக்கிறது.

நல்ல புத்தகங்களைச் சிறுவயதில் அறிமுகப்படுத்தும் தாய் மாமன் அந்தப் பையனுடைய ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திலும் சரியான அறிவுரைகளை வழங்கி எல்லா வழிகளிலும் உதவி நல்வழிப்படுத்துகிறார். புத்தகங்கள் நல்ல நண்பர்களாக அவனை வளர்த்தெடுக்கிறது. அவருடைய நண்பர்களும் அச்சிறுவனின் திறமையை ஊக்குவிக்கிறார்கள். இளம் வயதில் பெண்ணின் மேல் வரும் ஈடுபாடும் அதனையும் பக்குவமாக கடந்து செல்வதும் தந்தையிடம் எதிர்பார்த்த அன்பு கிடைக்காத ஏமாற்றமும் என்று காட்சிகள் அழகாக கடந்து செல்கிறது.

பென் ஆஃப்லெக் கதாபாத்திரம் உணர்ந்து அருமையாக நடித்திருந்தார். அந்த சிறுவன் கூட! அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

Thursday, January 27, 2022

மதுரம்


மலையாள இயக்குநர்களுக்குப் பல கதைக்கருக்கள் கிடைக்கிறது. பாவம் தமிழ் இயக்குனர்கள். யார் காலைக் கழுவினால் படத்தைத் திரையிட முடியும் என்ற பரிதாப நிலையில் இருக்கிறார்கள். அதனால் தான் ஆளும் கட்சிக்கு ஏற்றவாறு கூத்தாடி வேஷம் போட்டு கதையை மாற்றி உருப்படாமல் போகிறார்கள்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ஒருபுறம். அவர்களைக் கவனித்துக் கொள்ள வரும் உறவுகள் மறுபுறம். இவர்கள் ஒருவொருக்கொருவர் ஆதரவாக தங்கள் துயரங்களை மறந்து இருக்கும் தருணங்களை யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார்கள். மலையாளப்படங்களில் எனக்குப் பிடித்த அம்சமே அவர்களின் உடை, மொழி என்று இயற்கையாக இருப்பது. நம்மவர்கள் போல சற்றும் பொருந்தாத உடை, ஆங்கிலம் கலந்த தமிழ், கனவுப்பாடல்கள் என்ற ஜிகினா வேலைகள் இல்லாமல் இருப்பதாலோ என்னவோ மலையாளப் படங்கள் எளிதில் கவர்கிறது. கூடவே கதையும் நன்றாக இருக்கிறது. நடிகர்களும் இயல்பாக நடிக்கிறார்கள்.

அன்புடன், காதலுடன் செய்யும் உணவிற்கு சுவை அதிகம். அனுபவஸ்தர்கள் ஒத்துக் கொள்வார்கள். அப்படி ஒரு காதல் தம்பதியர் உறவில் இளவயதிலேயே நோயாளியான மனைவியைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளும் அன்பு கணவனாக ஜோஜு ஜார்ஜ் அசத்துகிறார். அவர் இல்லாத படங்களே இல்லையோ?

வசதி இருப்பவர்களும் அரசு மருத்துவமனைக்குச் செல்வது கேரளாவில் சகஜமோ? குஜராத்தி நாயகி என்பதால் கோலாட்டம் காட்சி வந்து செல்கிறது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவன் என்று எளிதாக ஒரு கதையை நகர்த்திச் செல்ல மலையாள இயக்குநர்களால் முடிகிறது. தமிழக இயக்குனர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. ஹீரோ என்று ஒருவருக்காக கதையை எழுதாமல் நல்ல பொழுபோக்குப் படங்களை தமிழில் எப்பொழுது தான் எடுக்க ஆரம்பிப்பார்களோ?

எந்த உறவிலும் புரிதலே பலம். அதைத்தான் இப்படத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலம் உணர்த்துகிறார்கள். 'மதுரம்' பெயருக்கு ஏற்றார் போல இனிமையான அனுபவம். 

Monday, January 24, 2022

The Trail of the Chicago 7

நெட்ஃப்ளிக்ஸ்ல் பல நாட்களாக முன்னணியில் இருந்த 'The Trail of the Chicago 7' திரைப்படத்தைக் கடந்த வாரம் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில நல்ல படங்களே நம் முழு கவனத்தையும் ஈர்க்கும். இல்லையென்றால் கைபேசியில் செய்திகளைப் படிப்பதும், சமூகவலைதளங்களை நோட்டமிடுவதும் இடையிடையே அரங்கேறும். அப்படி இல்லாமல் கவனத்தைத் தக்க வைத்துக் கொண்ட படம் இது. அமெரிக்க அரசியல் வரலாற்றில் நடந்த உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.

நல்ல கதையும் கதைக்கேற்ற நடிகர்களும் அமைந்து விட்டால் அந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இப்படத்தில் நடித்திருந்த கதாபாத்திரங்கள் மிக அருமையாக நடித்திருந்தது சிறப்பு. வியட்நாம் போர் அமெரிக்காவிற்கு எத்தகைய இழப்பைத் தந்தது என்பதை வரலாறு அறியும். அரசு மேற்கொண்ட இப்போரினை எதிர்த்து பல்வேறு குழுக்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தது. அதனை அரசு கவனமாக மறைத்து எல்லை தாண்டி சிகாகோ நகருக்குள் கலவரத்தைத் தூண்டியதாகவும் காவல்துறையை எதிர்த்ததாகவும் பொய் வழக்குகள் போட்டு போராட்ட குழுக்களின் தலைவர்களை சிறையிலடைத்தது. எங்கோ கேட்டது போல் இருக்கிறதா? இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அவலம் தான் 😞

1960களில் நடந்த நிகழ்விற்கு ஏற்ற ஒப்பனைகளும், பேச்சுவழக்குகளும், வடிவமைப்புகளும், ஆடைகளும் என்று கவனத்துடன் கையாண்டிருந்தார்கள். ஹாலிவுட்டிற்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?

இந்தப் படத்தின் வில்லனே நீதிபதி கதாபாத்திரம் தான். உண்மையில் அவர் அப்படிப்பட்ட மனிதர் தான் என்று கூறுகிறார்கள். மிகச்சரியான நடிகர் தேர்வு. குறைவில்லாமல் நடித்திருந்தார். கறுப்பின மக்களின் மேல் அவருக்கிருந்த வெறுப்பு மனப்பான்மையும், முறையான நீதிமன்ற முறைகளைக் கையாளாமல் தண்டனை அளித்த விதமும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல் தவறேதும் இல்லை என்று முன்னாள் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எடுத்துரைத்தும் தண்டனை அளிப்பது அரஜாகத்தின் உச்சம்.

கறுப்பின மக்களின் குரலாக 'பிளாக் பாந்தர் பார்ட்டி' என்று ஒன்றும் இருந்திருக்கிறது. அவர்களும் போருக்கெதிராக குரல் கொடுத்ததாக அதன் தலைவன் பாபி சீல் மீதும் குற்றம் சாட்டப்படுகிறது. தனக்கென வாதாட வக்கீல் இருந்தாலும் அவர் நேரில் வர முடியாததால் பாபி சீல் பேச முற்படும் போதெல்லாம் நீதிபதி தடுப்பது கறுப்பினத்தவர்களை எத்தகைய முறையில் வெள்ளையர் அரசாங்கம் நடத்தியது என்பதைப் புரிய வைக்கிறது.

இப்படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருந்தாலும் 'ஹிப்பி'களாக வரும் இருவர் அனாயசமாக நடித்திருந்தார்கள். கோமாளித்தனமாக இருந்தாலும் அவர்களின் பேச்சில் இருந்த நியாயத்தைக் கேட்டு அவர்களை பின்தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஏற்படும் அவமானங்களும் காவல்துறையின் அடக்குமுறையையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். குற்றம் சட்டப்பட்டவர்களுக்காக வாதாடும் வக்கீலாக மார்க் ரிலான்ஸ் , அரசு தரப்பில் ஜோசப் கோர்டன் லெவிட் இருவரும் சிறந்த நடிகர்கள் என்பதை மீண்டும் நிரூபணம் செய்திருந்தார்கள்.

நல்லதொரு படம்.


Dev Bhoomi


சில படங்களின் தலைப்பே பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டும். அப்படித்தான் இப்படத்தின் தலைப்பும் நினைக்க வைத்தது. அது மட்டுமில்லாமல் இமயமலையின் பின்னணி வேறு இருந்தது! கேட்கவா வேண்டும்? சிறு வயதிலிருந்தே கங்கை, காஷ்மீர், இமயமலை தொடர்பாக வரும் ஆவணப்படங்களைக் காண்பதில் அலாதி இன்பம். இரவு 10.30மணிக்கு மேல் தூர்தர்ஷன் பல அழகான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதைக் கண்டிருக்கிறேன். மதுரையில் வளர்ந்த எனக்கு வானுயர மலைகள் சூழ்ந்த காடுகளிடையே சீறி ஓடி வரும் கங்கையும், பனிபடர்ந்த இமயமலையும் என்றும் ஒருவித இனிமையைத் தரும். நேரில் சென்று தரிசித்து வர வேண்டும் என்ற என் கனவுப்பயணம் அது. இப்படி பல இனிமையான நினைவுகளுடன் தான் இப்படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.

'உத்தரகாண்ட்' இறைவழிபாட்டில் நம்பிக்கை கொண்ட இந்து மக்களின் கனவு மாநிலம். அங்கிருக்கும் சிவனை வழிபட பல லட்சக்கணக்கான மக்கள் செல்லும் யாத்திரைத்தலம். சில வருடங்களுக்கு முன் இயற்கை கோரத்தாண்டவம் ஆடியதில் பல உயிர்கள் மாண்டதோடு வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டு விட்டன. எஞ்சியது கோவில் மட்டும் தான். பாரதப் பிரதமர் மோதிஜி தலைமையிலான மத்திய அரசு அக்கோவிலையும் சிதையுண்ட நகரத்தையும் மீட்டெடுத்துள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

'தேவ் பூமி' அதிரடி படம் கிடையாது. படத்தின் நாயகனைப் போலவே அமைதியாக நகரும் கதை. பள்ளத்தாக்குகள் வழியே துவங்கும் ஆரம்ப பயணமே அத்தனை அழகாக இருந்தது. நாற்பது வருடங்களுக்குப் பிறகு தாய்மண்ணிற்குத் திரும்புபவன் எதிர்கொள்ளும் இன்ப, துன்ப நிகழ்வுகள், பால்ய காலத்து நண்பர்கள், உறவுகள், வெள்ளந்தி மனிதர்கள், அவர்களுடைய எளிமையான வாழ்க்கை, திருமண சடங்குகள், படிப்பு வாசம் அறியாத மக்கள், சாதி அரசியல், குருகுலம், கங்கை வெள்ளத்தில் தன் குடும்பத்தை இழந்த சிறுவனின் கோபத்தில் இருக்கும் நியாயம், அவன் கண்களில் மின்னலாடும் ஏக்கம், கதாநாயகனுடன் நெருங்கிப் பழகும் விதம், காஷ்மீரிலிருந்து வந்து இப்பகுதி குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியை, பால்ய திருமணத்தை நிறுத்த முடியாமல் தவிக்கும் அவலம் என்று எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறது இப்படம். இரவிலும் பகலிலும் மின்னும் இமயமலை கம்பீரமாக பரந்து விரிந்து கவருகிறது. 'சலசல'வென ஓடும் மந்தாகினியும், இமயமலையும், நீல மேகமும் "பூமியும் சொர்க்கமும் சந்திக்கும் இடம்" என்ற வசனத்துடன் படம் முடியும் பொழுது உண்மை தான் என தோன்றும். இதை சைபீரியன் டைரக்டர் எடுத்திருப்பது ஆச்சரியமான விஷயம்!

புலம் பெயர்ந்த மக்கள் பலரும் ஓய்வு பெற்ற பிறகு மீதி காலத்தைத் தங்கள் மக்களுடனும் தாய்மண்ணிலும் செலவிட விரும்புவது, பால்ய கால சிந்தனைகளுடன் காலத்தைக் கழிக்க  நினைப்பது இயல்பு. அந்த ஏக்கம் தான் இந்தப் படத்தின் மையக்கரு.

அமேசான் ப்ரைமில் கண்டு களிக்கலாம்.


உள்ளங்கையில் அடிமை உலகம்

நம் வாழ்க்கை இன்று ஒரு கைபேசியில் அடங்கியிருக்கிறது என்று உணர்ந்தாலும் பலரும் ஒத்துக் கொள்ளாத விஷயம். பனிக்காலத்தில் மைனஸ் டிகிரி குளிரில் பல நேரங்களில் ஆப்பிள் ஃபோன் கூட உறைந்து போய் விடுகிறது. அப்படித்தான் நேற்று 'வெஸ்ட் மெடோ பீச்' கடற்கரையில் மாலை நேர சூரியனின் அழகையும் குளிர்காற்றில் கரையோரம் சிறிது தூரம் நடந்து சென்ற வந்த சில நிமிடத்திற்குள் கணவரின் கைபேசி சார்ஜ் குறைந்து விட்டது. சரி வண்டிக்குத் திரும்பி விடலாம் என்று காரில் ஏறியவுடன் மீண்டும் கைபேசியை உயிர்ப்பிக்க அது சண்டித்தனம் செய்ய ஆரம்பித்து விட்டது. எத்தனை முறை கடவுச்சொல்லை தட்டினாலும் அது உள்ளே செல்ல மட்டும் அனுமதி மறுத்துக் கொண்டே இருந்தது. பாவம் ஈஷ்வர்! படு டென்ஷானாகி விட்டார். அவருடைய அலுவல் விஷயங்களில் இருந்து தின வாழ்க்கையின் அத்தனை விஷயங்களையும் அதில் தான் கையாண்டு கொண்டிருந்தார்.

அலுவலகத்தில் யாரையாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் தொலைபேசி எண் கூட தெரியவில்லை. இரவு உறங்கி காலையில் கண்விழிக்க அலாரம் வைப்பதிலிருந்து அலுவலக மீட்டிங், சமூக வலைதளங்கள், செய்திகளை வாசிப்பது, படங்கள் எடுப்பது, பாடல்கள் கேட்பது என சகலத்திற்கும் கையளவு சாதனத்தை நம்பியிருக்கிறோம். அது இல்லையென்றால் உலகமே தலைகீழான மாதிரி ஆகிவிடுகிறது.

ஆப்பிள் ஃபோன் ரிப்பேர் செய்வது என்பது மகா ஹிம்சையான விஷயம். ஆயிரத்தெட்டு கேள்விகள். நடைமுறைகள். அத்தனை எளிதில் முடிகிற காரியமல்ல. இப்படி ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பே அயர்ச்சியாக இருக்கிறது! இனியாவது எல்லாவற்றிற்கும் 'backup' எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொண்டோம்.

சிறு ஃபோன் ஒன்று எப்படி நம்மை அடிமையாக்கி வைத்திருக்கிறது! 


Friday, January 21, 2022

மாதங்களில் நான் மார்கழி

மார்கழி என்றதும் நினைவிற்கு வருவது ஆண்டாளும், திருப்பாவையும், குளிர்காலைப் பொழுதில் வாசலில் பெண்கள் இடும் அழகிய கோலங்களும், பரந்தாமனின் கீர்த்தியைப் பஜனைப் பாடிச் செல்லும் பக்தர்களும் தான். திருமால் வீற்றிருக்கும் அனைத்து தலங்களிலும் ஆழ்வார்களின் பாசுரங்கள் எதிரொலிக்கும் இனிய மாதம் இது. வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு பகல் பத்து உற்சவம் நடைபெறும் நாட்களில் கிடைக்காத மூலவர் தரிசனம் வைகுண்ட ஏகாதசியன்று திரும்ப கிடைக்கும். இராப்பத்து உற்சவமும் தொடங்கி பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. திவ்யதேசங்களில் பெருமாளுக்கு அலங்காரங்களும் பூஜைகளும் ஏகாந்தமாக நடைபெறும். "பன்னிரெண்டு மாதங்களில் நான் மார்கழி" என்று பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறிய தெய்வீக மாதமான மார்கழி, 'தனுர்' மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இம்மாதத்தில் கடவுளின் அருளைப் பெற மக்கள் சிறப்புப் பூஜைகள், பஜனைகள் செய்து நோன்பிருந்து வழிபடுகிறார்கள். மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது. வைணவ கோவில்களில் திருப்பாவை, ஆழ்வார் பாசுரங்கள்,  சைவ வழிபாட்டுத்தலங்களில் திருவெம்பாவைப் பாடல்கள் பாடப்படும் சிறப்புமிக்க மாதமும் ஆகும்.

30 பாடல்கள் கொண்ட 'ஆண்டாள் பாசுரம்' என்று அழைக்கப்படும் 'திருப்பாவை'யை எழுதியவர் கோதை நாச்சியார். இவர் எழுதிய நூற்றுநாற்பத்து மூன்று பாடல்களின் தொகுப்பு நாச்சியார் திருமொழி என்று அழைக்கப்படுகிறது. இவருடைய பாசுரங்கள் தமிழின் சிறப்பை உணர்த்துவது மட்டுமில்லாமல் கண்ணன் மீதான அவரின் பக்தியையும் அழகாக எடுத்துரைக்கிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற இயற்பெயருடன், பரந்தாமனுக்கு மாலைகளைச் சூடிக் கொடுத்ததால் 'சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்', திருமாலை ஆண்டதால் 'ஆண்டாள்', பெரியாழ்வாரின் மகளானதால் 'பட்டர்பிரான் புதல்வி' என வேறு பல பெயர்களுடனும் அழைக்கப்படுகிறாள்.

திருப்பாவையில் முதல் ஐந்து பாசுரங்களில் மார்கழி மாத நோன்பின் மகிமைகள், அதை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும், நோன்பின் பயன்களைக் கூறுகிறாள் ஆண்டாள்.

"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்' என தொடங்கும் முதற் பாடலில் கண்ணனை நோன்பிருந்து வணங்க, விடியலில் தோழிகளை எழுப்பும் பாடல்களின் அழகே அதன் அற்புதமான விவரணை, எளிமையான இனிமையான கொஞ்சிப் பேசும் தமிழ் , ஒவ்வொரு பாடலிலும் கண்ணனைப் போற்றும் விதம் என படிப்போரின் மனம் கவர்கிறது. இப்பாடலில் கார்மேனியான், கதிர்மதியம் முகத்தான், நந்தகோபன் குமரன், யசோதையின் இளஞ்சிங்கம் என்று கண்ணனைக் குறிப்பிடும் விதம் அத்தனை அழகு! வாசித்தாலே இன்பம்!

இரண்டாவது பாடலில் பரந்தாமனின் திருவடிகளை அடைய எப்படி நோன்பிருக்க வேண்டும் என்று கூறுகிறாள். நெய், பால் சேர்க்காமல் அதிகாலையிலேயே நீராடி, தீய சொற்கள், தீய பேச்சுக்கள், தீய எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாமல் இல்லாதவர்களுக்குத் தர்மம் செய்ய வேண்டும் என்று போதிக்கிறாள். 'வையத்து வாழ்வீர்காள்' என்று ஆரம்பமே என்ன ஒரு அழகு! 'பாவை நோன்பு' என்பது இளம்பெண்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பு. இந்த நாளில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வணங்குகின்றனர்.

அந்த பரந்தாமனை நினைத்து விரதமிருப்பதால் உலகில் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை மூன்றாவது பாடலின் வாயிலாக அழகாக எடுத்துரைக்கிறாள் கோதை. இந்த நோன்பினால் உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும். நோன்பை கடைப்பிடிப்பவருக்கு மட்டுமில்லாமல் உலகிற்கே நன்மை பயக்கும் விரதம் என்று நோன்பின் மகிமையை எடுத்துரைக்கிறாள் பட்டர்பிரான் புதல்வி. 'ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவோம்' என்று வாமனவதாரம் எடுத்த கண்ணனின் திருவடிகளை வணங்கினால் வைகுண்டம் நிச்சயம் என்று சிறுமிகளை அழைக்கிறாள்.

நீராட நீர்நிலைகளுக்குச் செல்லும் மக்களுக்காக மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனிடம் கோரிக்கை விடும் நான்காவது பாடலில் கார்மேகவண்ணன், பத்மநாபன், சாரங்கபாணி என்று ஏகாந்தமாய் கண்ணனை விளிக்கிறாள் ரங்கநாதப்பிரியை!

மாயன், தேவகி மைந்தன், தாமோதரனை வழிபட நீராடி மணம் வீசும் மலர்களுடன் செல்வோம் என்பதை விளிக்கும் ஐந்தாவது பாடலில் தேவகியின் வயிற்றுக்குப் பெருமை சேர்த்தவன், சேட்டைகள் பல செய்து யசோதையின் கோபத்திற்கு ஆளானவன் என்பதை எத்தனை அழகாக சொல்லியிருக்கிறார்!

தன்னுடன் நீராட தோழிகளை அழைத்துச் செல்வதாக அமைந்த இப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் நாராயணனின் புகழையும் அவனுடைய வீர தீர பராக்கிரமங்களையும் எளிய தமிழில் எடுத்துரைக்கும் பாங்கும் அத்தனை அழகு!

மாமன் கம்சன் தன்னைக் கொல்ல அனுப்பிய பூதகி என்று அரக்கியைத் தாயாக்கி மோட்சமளித்த கருட வாகனனின் வீர தீர பராக்கிரமங்களையும் , அழகிய காலைக்காட்சிகளையும், ஹரி நாமம் கொண்ட கண்ணபிரானை வணங்கி வழிபட தூக்கத்திலிருந்து விரைந்து எழுந்திருக்குமாறு தோழியிடம் கூறுகிறது ஆறாம் பாடல்.

அதிகாலையில் பறவைகள் எழுப்பும் ஓசையும் தங்கள் இணையுடன் கதைக்கும் கீச்சுக்குரலும் பாடல்களும் அழகே அழகு! திருமணமான பெண்கள் வேலை செய்கையில் அவர்களின் கழுத்தில் இருக்கும் தாலியின் தங்கமும் மணிகளும் சேர்ந்து ஓசையெழுப்பும்.ஏழாம் பாடலில் காலைக்காட்சியைப் பறவைகள் எழுப்பும் ஒசை வாயிலாகவும், ஆயர்குலப் பெண்கள் மத்தால் தயிரைக் கடைகையில் எழும் ஒலியின் வாயிலாகவும் அழகுத்தமிழில் எடுத்துரைக்கிறாள் நாச்சியார். தடைகளை நீக்கும் கேசவனை அந்த நாராயணனைப் போற்றிப் பாடும் பாடல்கள் கேட்டும் இன்னும் உறங்கும் மர்மமென்ன? கதவைத் திற பெண்ணே என்று தோழியின் வீட்டுக்கதவைத் தட்டுவதாக அமைந்துள்ள இப்பாடலில் கேசவனைக் காண எப்படியெல்லாம் விடியலில் தோழிகளுடன் உரையாடுவதாக கற்பனை செய்துள்ளாள் அதுவும் தேன்மதுர தெள்ளத்தமிழில் !

கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை வழிபட்டு அவன் அருள் பெறுவோம் என்று தோழியை விரைந்து வரச் சொல்கிறது எட்டாம் பாடல்.

'மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?'
எத்தனை முறை கூவி அழைத்தும் எழும்பாத தோழியை எழுப்புமாறு மாமியிடம் முறையிடுகிறாள் ஆண்டாள். அவள் என்ன ஊமையா? செவிடா? என்ன தான் ஆயிற்று அவளுக்கு? இப்படியும் சோம்பல் அவளை ஆட்கொள்ளுமா என்று வியக்கிறாள்! இப்பாடலில் தோழியின் செல்வச்செழிப்பினை விவரித்தவாறே நாராயணனின் திருநாமங்களைச் சொல்ல அழைக்கிறாள். உலக மக்கள் சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டத்தை அடைய அவனின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும் என அறிவுறுத்துகிறது ஒன்பதாம் பாடல்.

முப்பிறவியில் செய்த பலனைத் தான் இப்பிறவியில் அனுபவிக்கிறோம் என்பது நம்பிக்கை. அதைத்தான் கோதா தேவியும் தன் தோழியின் சுகமான வாழ்க்கைக்கு முப்பிறவியில் திருமாலை வணங்கி நோன்பிருந்ததன் பலனை அனுபவிக்கிறாள் என்று பத்தாம் பாடலில் குறிப்பிட்டிருக்கிறாள். நன்கு உறங்குபவர்களைப் பார்த்து கும்பகர்ணனைப் போல் தூங்குவதாக சொல்வது வழக்கம். இப்பாடலில் ஆழ்ந்து உறங்கும் தோழியைப் பார்த்து அவ்வாறே விளிப்பது ஆண்டாளின் பாடல்கள் எத்தனை யதார்த்தமானது என்பதையே நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

மானிடப் பிறவியில் இறைவனை வணங்காமல் வெறும் உண்டு, உறங்குவதில் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பதைத் தன் அழகுத் தோழியிடம் கேட்பதாக அமைந்துள்ள பதினோராவது பாடலில் மேகவண்ணன், கண்ணன், கோபாலன் புகழைப் பாட வா என்று அழைக்கிறாள் நாச்சியார்.

மார்கழி மாதத்தில் ராமனைப் போற்றிப் பாடிக் கொண்டிருக்கிறோம். ஏனடி இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய் ஆயனின் தங்கையே! அப்படி என்ன தூக்கம்? விரைவில் எழுந்து வா என்று இறைஞ்சுகிறாள் தன்னுடைய பன்னிரெண்டாவது பாடலில்.

"வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று." என்ன ஒரு அழகான சொல்லாடல்! மார்கழி மாதம் குளிர் காலம். குளிர்ந்த நீரில் நீச்சலடித்துக் குளிக்க வா என எத்தனை எடுத்துரைத்தும் உறங்கும் தோழியை எழுப்ப, "தூக்கம் எனும் திருட்டை விடுத்து வா" என்றழைக்கிறாள் ஆண்டாள். ஆம், அதிக தூக்கம் நம் பொன்னான நேரத்தைத் திருடி விடுகிறது என்பதையும் அந்தப் பரந்தாமனை நினைக்காத ஒவ்வொரு நொடியும் வீணே என்கிறாள் கோதை. இந்தப் பாடலிலும் நாராயணின் வீர தீர பராக்கிரமங்களைச் சொல்ல மறக்கவில்லை.

வெளியில் எங்காவது செல்வது என்றால் நம்மில் கூட பலரும் முதல் ஆளாக வருவேன் என்று கடைசியில் வந்து நிற்பார்கள். அது போலவே தோழியும் முன்னதாக வந்து அனைவரையும் எழுப்புவேன் என்று சொன்னவள் இன்னும் உறங்கிக் கிடக்கிறாள். அழகிய கண்ணனைப் பாடாமல் இன்னும் என்ன உறக்கம் பெண்ணே? பொறுமை இழந்தவளாக சுடர்க்கொடியாள் கேட்கிறாள் இந்த பதினான்காவது பாடலில் .

"எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!" எத்தனை அழகான மொழி நடை! இன்னும் என்னடி உறக்கம்? இத்தனைச் சொல்லியும் எழுவதில் என்ன சுணக்கம்? தோழிகள் கோபத்துடன் கேட்க, ஒரு வழியாக எழுந்து வந்தவள் 'ஏன் இப்படி கோபித்துக் கொள்கிறீர்கள்?' என்று அவளுக்காக பனியில் காத்துக்கிடந்த தோழிகளிடமே கோபித்துக் கொள்கிறாள். எப்படி இருக்கிறது கதை? "வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக!" எல்லோரும் போந்தாரோ? என்று தோழி உரைப்பதைப் பதினைந்தாவதுபாடலில் ஆண்டாள் வெளிப்படுத்தும் பாங்கு தான் எத்தனை அழகு!

ஒருவழியாக தோழிகள் அனைவரும் நீராடச் செல்கின்றனர். கண்ணனைக் காண அவர் வீட்டு வாசலில் நின்று ஆயர்குலப் பெண்கள் முறையிடுவதாக இனி வரும் பாடல்களில் அழகுறச் சொல்கிறாள் பட்டர்பிரான் மகள்.

தோழிகளுடன் நீராடி விட்டு வாயிற்காப்பாளரிடம் கார்மேக வண்ணன் தங்களுக்குத் தருவதாக சொன்ன பறையைப் பெற்றுச் செல்ல வந்திருக்கிறோம். எந்த ஒரு காரியத்தையும் முடியாது என்று எடுத்த எடுப்பில் சொல்வதை அனுபவமிக்க பெரியவர்கள் விரும்ப மாட்டார்கள். இந்த ஆயர்குலச் சிறுமிகளும் மூடியுள்ள நந்தகோபனின் வீட்டு நிலைக்கதவைத் திறக்க முடியாது என்று சொல்லி விடாதே என சொல்வதையும் நயம்பட "வாயால் முன்னமுன்னம் மாற்றாதே" என்கிறாள் ஆண்டாள் பதினாறாவது பாடலில்.

நற்குணங்கள் கொண்ட தர்மவான் நந்தகோபன், பெருமாட்டி யசோதை, உலகளந்த பெருமான் கண்ணன், செம்பொற் சிலம்புகளை அணிந்த பலராமனின் தரிசனம் வேண்டுகிறது "அம்பரமே" என அழகிய தமிழ்ச் சொல்லில் துவங்கும் பதினேழாவது பாடல்.

கண்ணன் வீட்டு வாசலில் நின்று நந்தகோபனின் பராக்கிரமங்களையும், அன்னை யசோதா, பலராமனையும் போற்றிப் பாடிய பின் அழகிய மணம் கமழும் கூந்தலை உடைய நப்பின்னைப் பிராட்டியிடம் கண்ணன் புகழ் பாட வந்திருக்கும் தங்களுக்காக அவளுடைய செந்தாமரைக் கைகளால் கதவைத் திறக்குமாறு கேட்கிறாள். பந்தார் விரலி, செந்தாமரைக்கை போன்ற உவமைகள் நப்பின்னையின் நளினத்தைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது சிறப்பு.

நப்பின்னையின் அன்பின் அரவணைப்பில் உறங்கும் கண்ணனை எழுப்புமாறு செல்ல கோபித்தல் தொனியில் அமைந்துள்ள பத்தொன்பதாவது பாடலில் பூங்குழல், மலர்மார்பா, மைத்தடங்கண்ணினாய், மணாளன் என தமிழ்ச்சொற்களை ஆண்டாள் விளிக்கும் அழகே அழகு!

முப்பது முக்கோடி தேவர்களுக்கும் முன்னே சென்று மக்களின் துயர் துடைக்கும் கலியுகத் தெய்வத்தை துயில் நீங்கச் சொல்லி அவனின் மகிமைகளையும் நப்பின்னைப் பிராட்டியின் அழகையும் ஆராதித்து கண்ணனின் அருள்மழையில் நனைய வேண்டுகிறது இருபத்தியோராவது பாடல். கோதையின் அழகிய எளிய தமிழ் வாசிப்பவர்களின் மனதையும் வசீகரிக்கும்.

பால், தயிர், வெண்ணெய் என்று மக்களுக்கு வேண்டியனவற்றை அள்ளித்தரும் பசுக்கள் ஆயர்குல மக்களின் வாழ்வாதாரம். அத்தகைய பசுக்களின் உரிமையாளரான நந்தகோபனின் மகனான கண்ணனைப் போற்றிப் புகழும் பாடலில் வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே, உலகிற்கே வழிகாட்டும் சுடரே, வலிமையானவனே என்று அவன் திருவடியைப் புகழ்ந்து பாடி அவனின் தரிசனம் வேண்டுகிறது இருபத்திரெண்டாவது பாடல்.

கண்ணனின் திருப்பள்ளியெழுச்சிக்காக வீரர்களும், அரசர்களும் சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்பதாகவும், கண்ணனின் செந்தாமரைக்கண்ணால் பார்க்க தங்களின் பாவங்களும் சாபங்களும் தீருமே என்று அழகுற விளிக்கிறாள் இருபத்திமூன்றாவது பாடலில்.

"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி" என துவங்கும் இருபத்திநான்காவது பாடலில் கண்ணனின் அவதாரங்களையும், வீர, தீரச் செயல்களையும் பாராட்டி வந்தனம் செய்து தங்கள் மீதும் சிறிது இரக்கம் காட்டி அவனைப் போற்றிப்பாட அருள்பாலிக்க வேண்டுகிறார்கள் ஆயர்குலப் பெண்கள். வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் இவ்வுலகை அளந்து மஹாபலி எனும் அரக்கனிடம் இருந்து இவ்வுலகைக் காத்தவன். சீதையை மீட்க தென்னிலங்கைச் சென்று ராவணனை வெற்றி கொண்டவன். சக்கர வடிவில் வந்த வத்ஸாசுரனை விளா மர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எரிந்து அழித்தவன். பகைவர் எவ்வளவு பலவான்களாயினும் வேலால் அழித்தவன். அவனின் திருவடிகளுக்கு, வீரத்திற்கு, வேலாயுதத்துக்கு நமஸ்காரம் என்று நாச்சியார் எடுத்துரைக்கும் விதம் அழகு.

"ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர" என தொடங்கும் இருபத்திஐந்தாவது பாடலில் தேவகியின் மகனாகப் பிறந்து அதே இரவில் ஆயர்குல மாளிகையில் யசோதையின் மகனாக ஒளிந்து வளர்ந்த கண்ணன், தன்னைக் கொல்லத் துடித்த மாமன் கம்சனின் கெட்ட எண்ணம் அழிய அவன் வயிற்றில் நெருப்பாய் நின்ற உயர்ந்த குணங்களையுடைய பெருமையைப் பாடி துன்பங்கள் நீங்கி இன்பமாய் வாழ அவனின் அருளை யாசிக்கிறது.

மார்கழி மாத நோன்பிற்காக உலகையே அதிர வைக்கும் ஒலியையும், திருமாலின் கைகளில் இருக்கும் பால் வண்ண சங்கைப் போன்ற வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோர்களையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும், நோன்பை நிறைவேற்ற இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும் எனும் இருப்பத்திஆறாவது பாடலில், நீலக்கல் நிறத்தவனே, ஆலிலையில் மிதப்பவனே, பக்கதர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே என்று கிருஷ்ணனின் கீர்த்திகளைப் போற்றிப் பாடுகிறாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்.

"கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா!" என துவங்குகிறது இருப்பத்தியேழாவது பாடல். மார்கழி 27 ம் நாள் பெருமாள் கோவில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் 'கூடாரவல்லி விழா' கொண்டாடப்படும். அந்த நாள் ஆண்டாள் தன் விரதம் பூர்த்தி செய்யும் நாள். பக்தர்கள் ஆண்டாள் தரிசனம் செய்யத் திரளாகக் கூடுவார்கள். நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கல் போன்ற 'அக்கார அடிசில்' உணவினைப் படைத்து வழிபாடு செய்வார்கள். விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவைச் சாப்பிடுகிறார்கள். அருட்செல்வத்துடன் பொருட்செல்வமும் வேண்டி விரதத்தை நிறைவு செய்யும் வகையில் பால்சோறு உண்ண வருமாறு கண்ணனை வேண்டுகிறார்கள்.

எளிய வாழ்க்கை வாழும் ஆயர்குல மக்கள் தங்களுள் ஒருவராக கோவிந்தனைக் காண்கிறார்கள். அவன் மேல் கொண்ட அன்பினால் ஒருமையில் விளித்து அவனின் அன்பும் அருளும் மட்டுமே வேண்டி நிற்கிறார்கள். தங்கள் குலத்தலைவன் கண்ணனால் தங்களுக்கு வைகுந்தம் உறுதி என்பதை பிறவிப்பயனாக அடைந்ததாக அந்த பரந்தாமனை ஆராதிக்கிறார்கள். எளியவர்களின் அன்பு எத்தகையது என்பதை ஆண்டாள் இருபத்தியெட்டாவது பாடலில் எடுத்துரைக்கிறாள்.

மார்கழி மாதத்தில் நோன்பிருக்கும் ஆயர்குலப் பெண்கள் பரந்தாமனிடம் வேண்டுவதெல்லாம் பொன்னும் பொருளும் அல்ல. ஏழு பிறவிகளிலும் தங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். தங்களை உறவினர்களாக ஏற்க வேண்டும். அவனுக்குச் சேவை செய்யும் பாக்கியத்தைத் தர வேண்டும். மற்ற ஆசைகளை அவனையே அழித்து விட வேண்டுகிறார்கள். இதுவல்லவோ பக்தி! இதைத்தான் ஆண்டாளும் இறைஞ்சுகிறாள் தன் பாடலின் மூலமாக!

கோதை இயற்றிய முப்பது பாசுரங்களைப் பாடி மாதவனை வழிபடுவோருக்கு திருமாலின் ஆசியுடன் செல்வச்செழிப்பும் பெற்று இன்பமுடன் வாழ்வர் என்கிறது திருப்பாவையின் கடைசிப் பாடல்.

திருப்பாவைப் பாடல்கள் ஒவ்வொன்றின் எளிய தமிழும், ஆண்டாளின் அன்பும், பெருமாளின் பராக்கிரமங்களும் படிப்போரை வசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. "மாதங்களில் நான் மார்கழி" என்றுரைத்தவனைப் போற்றிப் பாடி அவனைச் சரணடைவது ஒன்றே இப்பிறவியின் தவம் என்று தன்னுடைய பாசுரங்கள் மூலமாக உணர்த்துகிறாள் ஆண்டாள். 

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாசுரங்களைப் பெருமாள் கோவில்களிலும், வீடுகளிலும் இசைத்து கண்ணனை மக்கள் வழிபடுகிறார்கள். இந்த வருடம் ஒவ்வொரு பாசுரத்தையும் வாசித்து, பொருளுணர்ந்து, கைப்பட எழுதியதில் பரம திருப்தி எனக்கு. அதைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.










Wednesday, January 19, 2022

Geronimo


இன்றைய அமெரிக்க தேசத்தை ஆள்பவர்கள் வேண்டுமானால் வெள்ளையர்களாக இருக்கலாம். ஆனால் இந்நாட்டின் உண்மையான மைந்தர்கள் செவ்விந்தியர்கள் தான் என்பது உலகம் அறிந்ததே. பல குழுவினராக இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்தவர்களின் வாழ்க்கையைச் சிதைத்தது ஸ்பெயினில் இருந்து புறப்பட்ட கப்பல் ஒன்று. அதை தலைமை தாங்கி வழிநடத்தியவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ். அவர் என்று இந்தியாவிற்குச் செல்கிறேன் என்று வட அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தாரோ அன்றே செவ்விந்தியர்களின் நிலம் அவர்கள் கையை விட்டுச் செல்ல காரணமாகியது. நாம் தப்பித்தோம்.

கல்வி அறிவில்லாத, வேட்டையாடி தத்தம் குழுவினருடன் வாழ்ந்து கொண்டிருந்த இனத்தின் மேல் கிறித்துவத்தைத் திணித்து மதம் மாற்றினார்கள். அதனால் ஏற்பட்ட வடுக்கள், அவலங்கள் இன்று வரையில் தொடருவதை சமீபத்தில் கனடாவில் கண்டறிந்தார்கள்.

அமெரிக்க இந்தியர்களின் நிலத்தை இங்கிலாந்து, பிரெஞ்சு, டட்ச், ஸ்பானியர்கள் என்று பலரும் ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாட செவ்விந்தியர்களைக் கொண்டே போரிட்டார்கள். இந்தியர்களின் குழுக்களிடையே ஒற்றுமை இல்லாதது இந்நாடுகளுக்கு வசதியாக போய்விட்டது. அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியில் வகையாய் மாட்டிக்கொண்டவர்கள் கடைசியில் தங்கள் நிலங்களை விட்டே துரத்தி விடப்பட்டு இன்று அந்நியர்களாக வாழ வேண்டிய நிர்பந்தம்.

அதைத்தான் சொல்கிறது இப்படமும். அமெரிக்காவை வெள்ளையர்கள் ஆள தொடங்கிய பிறகு செவ்விந்தியர்களை அவர்களிடத்தில் இருந்து விரட்டியடித்து சோளம் பயிரிடும் விவாசாயிகளாக மாற நிர்பந்திக்கிறது அரசாங்கம். அவர்களை எதிர்த்த மக்களைக் கொன்றும் இடம் பெயரவைத்தும்  பூர்வகுடிகளைத் தண்டிக்கிறது. அரிசோனா பகுதியில் வாழ்ந்து வந்த 'அப்பாச்சி' இன மக்களை நிர்பந்திக்கும் பொழுது வெள்ளையர்களை எதிர்ப்பவர்களில் ஒருவரான 'ஜெரோனிமோ' எனும் செவ்விந்தியரையும் அவரது குழுவினரையும் பிடிக்க அரசு உத்தரவிடுகிறது.

5000 படை வீரர்களுடன் அவர்களைப் பிடிக்க படையின் தலைவரான சார்ல்ஸ் குரூக் அரிசோனாவிற்கு வருகிறார். அவருடைய குழுவில் அப்பாச்சி மக்களின் மொழியைப் பேசுபவரும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டவருமான சார்ல்ஸ் கேட்வுட் என்பவர் எவ்வாறு ஜெரோனிமோவை சம்மதிக்க வைத்து அரசிடம் ஒப்படைக்கிறார் என்பதே கதை. அவருக்கு உதவி செய்த சில அப்பாச்சி மக்களையும் சேர்த்தே தண்டிக்கிறது நன்றி மறந்த வெள்ளையர் அரசாங்கம்.

மிக அழகாக கதையை கொண்டு செல்கிறார்கள். வேகமாக ஓடி வரும் குதிரைகளும்,  மலைகளும், பாலைவன காட்சிகளும் பிரம்மாண்டமாக ஹாலிவுட் ஸ்டைலில் அருமையாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. அப்பாவிகளான செவ்வியிந்தியர்களும் நயவஞ்சக அரசும் என்று அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். நெட்ஃபிளிக்ஸ்ல் காணலாம்.

மென்மையான உள்ளம் கொண்டவராக, செவ்வியிந்தியர்கள் மேல் அக்கறையுள்ள 'கேட்வுட் ' கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும். ஒரு தனி மனிதனால் அரசு எந்திரத்தை எதிர்த்து என்ன செய்துவிட முடியும்? அவரால் முடிந்தவரை செவ்விந்தியர்களுக்கு நல்லது செய்யவே நினைப்பார். நிச்சயமாக அப்படிப்பட்ட மனிதர்களும் இருந்திருப்பார்கள். செவ்விந்தியர்களைப் பற்றிப் பல படங்கள் வெளிவந்திருக்கிறது. அதில் இதுவும் ஒரு நல்ல படம். Dances with Wolves படமும் நன்றாக இருக்கும்.  

அமெரிக்காவில் நியூயார்க், அரிசோனா , யூட்டா, நெவேடா, கலிஃபோர்னியா, நியூமெக்ஸிகோ, வட மற்றும் தென் டகோட்டா போன்ற பல மாநிலங்களில் இன்றும் செவ்விந்தியர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் வசித்து வருகிறார்கள். இத்தனை பெரிய நாட்டில் சுதந்திரமாக வாழ்ந்து வந்தவர்கள் இன்று சிறுமைப்படுத்தப்பட்டு அடிமை வாழ்க்கை வாழ்வதைப் பார்க்க பாவமாக தான் இருக்கிறது😔



Wednesday, January 12, 2022

மாதங்களில் அவள் மார்கழி 29


மார்கழி மாதத்தில் நோன்பிருக்கும் ஆயர்குலப் பெண்கள் பரந்தாமனிடம் வேண்டுவதெல்லாம் பொன்னும் பொருளும் அல்ல. ஏழு பிறவிகளிலும் தங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். தங்களை உறவினர்களாக ஏற்க வேண்டும். அவனுக்குச் சேவை செய்யும் பாக்கியத்தைத் தர வேண்டும். மற்ற ஆசைகளை அவனையே அழித்து விட வேண்டுகிறார்கள். இதுவல்லவோ பக்தி! இதைத்தான் ஆண்டாளும் இறைஞ்சுகிறாள் தன் பாடலின் மூலமாக! இன்று கோவிலுக்குச் செல்லும் பலரும் நமக்கு வேண்டிய பொன்னும் பொருளும் வேண்டித்தானே செல்கிறோம்? 

எந்த கஷ்டமான சூழலிலும் நமக்கு நன்மையையும், வெற்றியையும் தரக் கூடியதாக ராம மந்திரம் இருக்கிறது. இன்று வைகுண்ட ஏகாதசி. அந்த வைகுண்ட நாதனைப் பாடிச் சரணடைவோம். 

"ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே"

மாதங்களில் அவள் மார்கழி 28

எளிய வாழ்க்கை வாழும் ஆயர்குல மக்கள் தங்களுள் ஒருவராக கோவிந்தனைக் காண்கிறார்கள். அவன் மேல் கொண்ட அன்பினால் ஒருமையில் விளித்து அவனின் அன்பும் அருளும் மட்டுமே வேண்டி நிற்கிறார்கள். தங்கள் குலத்தலைவன் கண்ணனால் தங்களுக்கு வைகுந்தம் உறுதி என்பதை பிறவிப்பயனாக அடைந்ததாக அந்த பரந்தாமனை ஆராதிக்கிறார்கள். எளியவர்களின் அன்பு எத்தகையது என்பதை ஆண்டாள் இங்கு எடுத்துரைக்கிறாள்.

Tuesday, January 11, 2022

திருவரங்கன் உலா


ஸ்ரீ வேணுகோபாலன் எழுதிய 'திருவரங்கன் உலா' புதினத்தைப் பற்றி எனது கணவர் விஷ்வேஷ் ஒப்லாவின் விமரிசனம் இந்தச் சுட்டியில் உள்ளது. https://thiruvaranganula.blogspot.com/2014/01/venugopalans-thiruvarangan-ula-walk.html

சில வருடங்களுக்கு முன்பு இப்புத்தகத்தை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. உண்மை நிகழ்வுகளுடன் மிக அழகாக வரலாற்றுப் புதினமாக அருமையாக எழுதியிருந்தார் ஆசிரியர். இஸ்லாமியர்களின் படையெடுப்பில் சிதைந்தது குலப்பெண்களும், குடும்பங்களும் மட்டுமல்ல கோவில்களும் தான். கோவில் செல்வங்களைச் சூறையாடிய கயவர்கள் பல்லாயிரக்கணக்கான கோவில்களை இடித்து எதிர்த்து நின்றவர்களைக் கொன்று விட்டும் சென்றது மிகக்கொடிய வரலாறு. வடக்கில் மட்டுமில்லாது தெற்கிலும் அவர்கள் கொள்ளையடித்த கோவில் செல்வங்கள் எண்ணிக்கையில் அடங்கா. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கம் என்று பெரிய கோவில்கள் எதுவும் அவர்களிடமிருந்து தப்பவில்லை.

ஸ்ரீரங்கம் நோக்கி முகமது பின் துக்ளக் படையுடன் வருவதைக் கேள்வியுற்ற திருமால் பக்தர்கள், ஸ்ரீரங்கநாதன் உருவச்சிலையை துலுக்கர்களிடமிருந்து காப்பாற்ற உயிரையும் துச்சமென நினைத்து வெவ்வேறு ஊர்களில் தங்கி அவரைக் காப்பாற்றி மீண்டும் ஸ்ரீரங்கம் கொண்டு வருவதைக் காட்சிகளாக மனதில் விரியும் வண்ணம் வாசிப்பவரை ஆட்கொண்டு விடுகிறார் ஆசிரியர்.

கொடிய இஸ்லாமியர்கள் வருகிறார்கள் என்பதை அறிந்தவுடன் ஸ்ரீரங்கத்தில் குடியிருக்கும் பலரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களிடம் மாட்டிக் கொள்வதை விட உயிரை விடுவதே மேல் என்று இறந்த பெண்களும் பலர். ஸ்ரீரங்கத்தில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று கேரளா, ஆந்திரா , கர்நாடகா என்று அலைகிறார் ரெங்கமன்னார். அவரைப் பாதுக்காக்கும் பணியில் இருந்தவர்கள் அனைவரும் அவரை எப்படியாவது மீண்டும் ஸ்ரீரங்கத்தில் சேர்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் காடுகளில் அலைகிறார்கள். விஜயநகர பேரரசு உதவ, மீண்டும் ஸ்ரீரங்கம் வந்து சேர்கிறார் ஸ்ரீரங்கநாதர். வழிநெடுக திருமால் பக்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களின் இறப்பு வாசிப்போரை நெகிழ வைக்கும். 

இன்றும் ஸ்ரீரங்கத்தில் வெள்ளை கோபுரம் ஒன்று அதற்கு சாட்சியாக இருக்கிறது. ஸ்ரீரங்கநாதரின் உருவச்சிலையைத் தேடி அலைந்த சுல்தானின் கவனத்தைத் திசைதிருப்ப, தேவதாசி வெள்ளாயி நடனமாடி கோபுர உச்சிக்கு அழைத்துச் சென்று தள்ளி விட்டு அவரும் அங்கிருந்து கீழே குதித்து இறந்து விட்டார். அவரின் தியாகத்தைப் போற்றும் விதமாக விஜயநகர தளபதி கெம்பெண்ணா, அந்த கோபுரத்திற்கு வெள்ளை நிற வண்ணம் பூசி வெள்ளாயியின் அர்ப்பணிப்பை இன்றும் மக்கள் போற்றும் வண்ணம் நிறுவியது வரலாறு.

14ம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வு. 47 வருட போராட்டம்! அழகர்கோவில், எட்டயபுரம், ஆழ்வார் திருநகரி, நாகர்கோயில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு பயணித்து சத்தியமங்கலம் காட்டில் தொலைந்து போகிறது பகவான் ரங்கநாதர் சிலை. 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு திருப்பதியில் பத்து வருடங்கள் மறைக்கப்பட்டு கடைசியாக ஸ்ரீரங்கம் வந்து சேர்கிறார் பெருமாள். விஜயநகர மன்னரும், அமைச்சரும், தளபதியும் சுல்தான்களை வெற்றி கொண்டு ரங்கநாதரை ஸ்ரீரங்கம் அழைத்து வந்து கோலாகலத்துடன் மீண்டும் பிரதிஷ்டனம் செய்கிறார்கள்.

இந்நிகழ்வை இத்தனை அழகாக வரலாறும் புனைவுமாக படைத்திட்ட ஆசிரியர் ஸ்ரீவேணுகோபாலன் அவர்களை எத்தனை மெச்சினாலும் தகும். இதுவரையில் "திருவரங்கன் உலா" புதினத்தை வாசிக்காதவர்கள் கண்டிப்பாக வாசிக்கவும். நான்கு பாகங்கள் கொண்ட புதினத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும். https://archive.org/details/ThiruvaranganUlaa/ThiruAranganUlaa_Part1/

அந்த பரந்தாமனுக்காக உயிரை விடவும் துணிந்த புண்ணிய ஆத்மாக்கள் வாழ்ந்த பூமி என்னும் பெருமையுடைத்தது நம் பாரதம்.

ஹே ராம்!

Monday, January 10, 2022

நீயா நானா? நவீன ஆரோக்கிய உணவுகள்

நேற்றைய "நீயா நானா" விவாதத்தில், இன்றைய புது வகை ஆரோக்கிய உணவுகள் எவ்வாறு உடல்நலத்தை மேம்படுத்துகிறது என்று ஒரு குழுவினரும் அதெல்லாம் தேவையில்லை. நம் ஊரில் கிடைக்கும் உணவுகளே ஆரோக்கியமானது தான். அதுவே போதும் என்று ஒரு குழுவினரும் விவாதம் செய்தார்கள்.

நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே ஆரம்பித்தவர் 'கொம்புச்சா' என்ற புளித்த பானத்தைப் பற்றிப் பேசினார். ஆம். தற்போது பலருக்கும் அறிமுகமாகியுள்ள பானம் இது. அமெரிக்காவில் பிரபலமாகியிருக்கிறது. அதன் நன்மைகள் என்று பார்த்தால் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்களை உருவாக்க, உடல் எடையைக் குறைக்க, ஜீரணத்தை, எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்குகிறது என்று கூறினாலும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. நம் ஊரில் பழைய சாதம், தயிர் சாதம் சாப்பிடும் பழக்கம் குறைந்து விட்டதால் நமக்குத் தெரியாத வாயில் நுழையாத பெயரில் இருக்கும் கிறக்கத்தில் இதை நம்புகிறோமோ?

இதே போல் ஓட்ஸ், கார்ன்ஃபிளேக்ஸ், இதர சீரியல்கள் எல்லாம் ஆரோக்கியமானது என்று அழகாக மூளைச்சலவைச் செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்தும் அறியாமலும் பெரு நிறுவனங்களின் விளம்பர உத்திகளில் வகையாக மாட்டிக் கொண்டிருக்கிறோம். காலையில் வேக வைத்த இட்லி, தோசை, இடியாப்பம், சட்னி, சாம்பார்களில் இல்லாததையா இந்த விளம்பரம் செய்யப்பட்ட பொருட்களில் இருக்கிறது என்று யோசிக்கும் திறனை என்றோ இழந்து விட்டோம் என்று தான் தோன்றுகிறது. பழைய சாதத்தை அழகாக போத்தல்களில் அடைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் வெளிநாட்டினர். இனி அதையும் 'ஸ்டைலாக' குடிப்போம்.

'க்ரீன் டீ'யும் அப்படி மிகைப்படுத்தப்பட்ட பானம் தான்.என்னைப் பொறுத்தவரையில் சுடுநீர் குடிப்பது போல தான். அதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடெண்ட் இருப்பது என்பதெல்லாம் விளம்பர யுத்தி.

அவகாடோ பழமும் அந்த வரிசையில் தான் சேருகிறது. சமீபமாக அமெரிக்காவில் திரைப்பட்டாளங்கள் பலரும் அதில் முதலீடு செய்து பெரிதாக விளம்பரங்கள் செய்து வருகிறார்கள்.

நம்மூரில் கிடைக்கும் கொய்யா, நெல்லி, அன்னாசி, ஆப்பிள், வாழைப்பழம், இலந்தைப்பழம்... என்று பல வித பழங்களும் வெண்டைக்காய், அவரை, பாவக்காய், முருங்கைக்காய், வாழைதண்டு... என்று வகைவகையான காய்களும் கிடைக்கும் பட்சத்தில் வெளிநாட்டு மோகத்தினால் பெரு நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்யும் இந்தப் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் உள்நாட்டு வியாபாரிகளை ஆதரித்த மாதிரியும் இருக்கும், ஆரோக்கியமாக உண்பதும் நடக்கும். ஆனால், நாம் அமெரிக்காவில் இருப்பது போல் ஒரு பிரமையில் பீட்ஸா, பர்கர், டோனட் , வறுத்த கோழி என்று இன்றைய தலைமுறையை கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

முருங்கைக்கீரை கிடைக்காததால் மொரிங்கே பவுடர் அமேசானில் மாற்று பிற விற்பனைத்தளங்களில் கிடைக்கிறது. அதை ஏன் நம்நாட்டில் இருப்பவர்கள் வாங்க வேண்டும் என்பதும் நியாயமான கேள்வியாகத் தான் எனக்குத் தோன்றியது. அழகாக கீரைக்கொத்து கிடைக்கிறது. சுடச்சுட சமையல் செய்தால் ஆயிற்று. ஆனால் மொரிங்கே பவுடர் பயன்படுத்துகிறேன் என்று சொல்வது ஃபேஷன் ஆயிற்றோ?

இந்தியாவில் வெளிநாட்டு உணவுகளை உண்பதால் தங்களை மேட்டுக்குடியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் அவலமும் நடந்து வருகிறது. ஆசைக்காகச் சாப்பிடலாம் தவறில்லை. ஆனால் அதைச் சாப்பிட்டால் தான் நல்லது. தன்னுடைய பொருளாதார நிலை, சமூக அந்தஸ்து, சாப்பிடாதவர்களை அலட்சியமாக பார்க்கும் பார்வை தான் தேவையில்லாதது  என்பது எதிர் தரப்பினரின் வாதம்.  உண்மை தானே? நம் கையில் வைத்திருக்கும் அலைபேசி முதல் பயணம் செய்யும் வண்டி, வீடு, வேலை என்று சகலத்திலும் நம்முடைய சமூக அந்தஸ்தை தானே பறைசாற்றுகிறோம்?

மொத்தத்தில் விளம்பரங்கள் மூலம் நம் மேல் திணிக்கப்படும் உணவு யுத்தம் இது என புரிந்து கொண்டவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். புரியாதவர்கள் கைக்காசை செலவு செய்து வீண் ஆடம்பர வலையில் சிக்கிக் கொள்ளலாம். வெளிநாட்டுச் சந்தையில் பிரபல புதிய பெயர்களுடன் வலம்வரும் பொருட்கள் 'காக்கா முட்டை' படத்தில் வருவது போல் ஏழைகளை ஏக்கமாகவும்,  பணம், வசதி படைத்தவர்களை அனாவசியமாக செலவு செய்ய  வைக்கும் யுத்தியாகவும் தெரிகிறது. அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கின்றன பெரு நிறுவனங்கள். இந்தியாவில் தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்த அவர்களுக்குள்ளும் போட்டிகள்!  இது தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

மாதங்களில் அவள் மார்கழி 27

 

 "கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா!" என துவங்குகிறது இருப்பத்தியேழாவது பாடல். மார்கழி 27 ம் நாள் பெருமாள் கோவில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் 'கூடாரவல்லி விழா' கொண்டாடப்படும். அந்த நாள் ஆண்டாள் தன் விரதம் பூர்த்தி செய்யும் நாள். பக்தர்கள் ஆண்டாள் தரிசனம் செய்யத் திரளாகக் கூடுவார்கள். நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கல் போன்ற 'அக்கார அடிசில்'  உணவினைப் படைத்து வழிபாடு செய்வார்கள். விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவைச் சாப்பிடுகிறார்கள். அருட்செல்வத்துடன் பொருட்செல்வமும் வேண்டி விரதத்தை நிறைவு செய்யும் வகையில் பால்சோறு உண்ண வருமாறு கண்ணனை வேண்டுகிறார்கள்.

Sunday, January 9, 2022

மாதங்களில் அவள் மார்கழி 26


மார்கழி மாத நோன்பிற்காக உலகையே அதிர வைக்கும் ஒலியையும், திருமாலின் கைகளில் இருக்கும் பால் வண்ண சங்கைப் போன்ற வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோர்களையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும், நோன்பை நிறைவேற்ற இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும் எனும் இருப்பத்திஆறாவது பாடலில்,  நீலக்கல் நிறத்தவனே, ஆலிலையில் மிதப்பவனே, பக்கதர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே என்று கிருஷ்ணனின் கீர்த்திகளைப் போற்றிப் பாடுகிறாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்.

Saturday, January 8, 2022

மாதங்களில் அவள் மார்கழி 25

தேவகியின் மகனாகப் பிறந்து அதே இரவில் ஆயர்குல மாளிகையில் யசோதையின் மகனாக ஒளிந்து வளர்ந்தவன் கண்ணன். தன்னைக் கொல்லத் துடித்த மாமன் கம்சனின் கெட்ட எண்ணம் அழிய அவன் வயிற்றில் நெருப்பாய் நின்ற உயர்ந்த குணங்களையுடைய திருமாலின் பெருமையைப் பாடி துன்பங்கள் நீங்கி இன்பமாய் வாழ அவனின் அருளை யாசிக்கிறது இப்பாடல்.


Thursday, January 6, 2022

மாதங்களில் அவள் மார்கழி 24


"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி" என துவங்கும் இருபத்திநான்காவது பாடலில் கண்ணனின் அவதாரங்களையும்,  வீர, தீரச் செயல்களையும் பாராட்டி வந்தனம் செய்து தங்கள் மீதும் சிறிது இரக்கம் காட்டி அவனைப் போற்றிப்பாட அருள்பாலிக்க வேண்டுகிறார்கள் ஆயர்குலப் பெண்கள். வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் இவ்வுலகை அளந்து மஹாபலி எனும் அரக்கனிடம் இருந்து இவ்வுலகைக் காத்தவன். சீதையை மீட்க தென்னிலங்கைச் சென்று ராவணனை வெற்றி கொண்டவன். சக்கர வடிவில் வந்த வத்ஸாசுரனை விளா மர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எரிந்து அழித்தவன். பகைவர் எவ்வளவு பலவான்களாயினும் வேலால் அழித்தவன். அவனின் திருவடிகளுக்கு, வீரத்திற்கு, வேலாயுதத்துக்கு நமஸ்காரம் என்று நாச்சியார் எடுத்துரைக்கும் விதம் அழகு.


மாதங்களில் அவள் மார்கழி 23



சிலிர்த்தெழும் சிங்கத்தைப் போல் வீர நடை போட்டு கோவிலுக்குள் எழுந்தருளி தங்களுடைய கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்ற காயாம்பூ நிறமுடைய கண்ணனை வேண்டி ஆயர்குலப் பெண்கள் நிற்பதாக பாடும் பாடலில் சிங்கத்துடனான உவமையுடன் மிக அழகாக எடுத்துரைக்கிறாள் ஆண்டாள்.


Wednesday, January 5, 2022

இன்சுலினும் அமெரிக்க மருத்துவமும்

சொல்வனத்தில் வெளியான என் கட்டுரை


உலகின் செல்வாக்கான நாடு என்று தன்னை முன்னிறுத்தும் அமெரிக்கா, மற்ற நாடுகளைவிட மருத்துவ வசதிகளில் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் மருத்துவக் காப்பீடு உள்ளவர்கள் மட்டுமே மருந்துகளையும் மருத்துவ வசதிகளையும் பெறமுடியும் என்பது மட்டும் எழுதப்படாத விதியாகவே இருக்கிறது. கனடா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் இருப்பதுபோல அதிகளவில் அரசு மருத்துவமனைகளோ, இலவச மருத்துவச் சேவைகளோ இங்கு கிடையாது. அதனால் பிறந்த நாள் முதல் 26 வயது வரை குழந்தைகள் பெற்றோர்களின் மருத்துவ காப்பீட்டின் பயனாளர்களாக இருக்க வேண்டிய கட்டாயம். அதுவும் “ஒபாமாகேர்” திட்டத்தால் மட்டுமே 26 வயது வரை சாத்தியமாயிற்று. இத்திட்டத்திற்கு முன்பு முழு நேர மாணவர்களாக இருக்கும் பட்சத்தில் 22 வயது வரையிலும், இல்லையென்றால் 19 வயது வரை மட்டுமே பெற்றோரின் உடல்நலக் காப்பீட்டில் குழந்தைகள் பயனாளராக இருக்க முடியும். அவரவர் வேலை, வருமானம், பணிபுரியும் நிறுவனங்களைப் பொறுத்தே மருத்துவ காப்பீடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். படிக்காதவர்கள் ஏதாவதொரு பணியில் சேர்ந்து தங்களுடைய மருத்துவ காப்பீட்டிற்கான வழியைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். காப்பீடு இல்லாதவர்கள் மருத்துவச் செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில்தான் தாறுமாறாக ஏறி வரும் இன்சுலின் மருந்தின் விலையைக் குறைக்க அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். “அண்டை நாடான கனடாவை விட அமெரிக்காவில் மட்டும் இன்சுலின் விலை ஏன் பத்து மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது?” என்ற அவருடைய சமீபத்திய ட்வீட் மீண்டும் மருந்தின் விலையேற்றம் பற்றின விவாதத்தைத் தொடங்கி அரசின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. இதைப் பற்றி 2016ல் இருந்தே அவர் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாலும் அதற்கான விடை தான் கிடைத்தபாடில்லை.

ஈலை லில்லி, சுனோஃபி, நோவோ நோர்டிஸ்க் போன்ற மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இன்சுலின் மருந்துகளின் விலையை 2002லிருந்து 2013க்குள் $231லிருந்து $736 ஆக அதிகரித்துள்ளது. இன்சுலின் தேவைப்படுவோருக்கான ஒரு வருடத்திய செலவு மும்மடங்காக அதிகரிக்க, மருந்தின் விலையைக் குறைக்கவும் மருந்தைப் பயன்படுத்துபவர்கள் எளிதாக கனடாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளவும் அரசு ஆவன செய்ய வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் பெர்னி.

இன்சுலின் என்பது உடலின் இரத்த சர்க்கரை அளவு மற்றும் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு ஹார்மோன் ஆகும். உடலில் உள்ள கணையம் இன்சுலினை உருவாக்கி இரத்த ஓட்டத்தில் வெளியிடுகிறது. இன்சுலின் உடலுக்குத் தேவையான ஆற்றலுக்கு உண்ணும் உணவிலிருந்து சர்க்கரையைத் திசுக்கள் உறிஞ்சிக்கொள்ள உதவுகிறது. தேவைக்கு அதிகமுள்ள சர்க்கரையை கல்லீரலில் சேமிக்கவும், இரத்த சர்க்கரை அளவு குறையும் பொழுது சேமித்து வைத்த சர்க்கரையை வெளியிடவும் உதவி செய்கிறது. கொழுப்பை உருவாக்குவதிலும் இன்சுலின் பங்கு வகிக்கிறது.

உடல் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யா விட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து உயர் ரத்த சர்க்கரை ( ஹைப்பர்கிளைசீமியா) ஏற்படும். இந்நோயைக் கட்டுப்படுத்த இன்சுலின் மருந்துகள் அவசியமாகிறது. டைப் 1 நீரிழிவு நோயாளிகள் உட்பட, நீரிழிவு நோயுடன் வாழும் மில்லியன் கணக்கான மக்களுக்கு இன்சுலின் மருந்து உண்மையில் வாழ்க்கை மற்றும் இறப்பு விஷயமாகும். சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவில் இன்சுலின் விலை அதிகரிப்புக்கான காரணங்கள் முற்றிலும் தெளிவாக இல்லை. கடந்த பத்து வருடங்களில் பிரபலமான நான்கு இன்சுலின் மருந்துகளின் விலை பல மடங்கு உயர்ந்து பலரும் தங்கள் கையிருப்பில் இருந்து செலவழிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள். நான்கில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்க அரசு விலையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மருத்துவ காப்பீடு வைத்திருந்தாலும் ஒரு மாதத்திற்கு இன்சுலின் மருந்து வாங்க $350 வரை தங்கள் கைப்பணத்தைச் செலவிடுவதாகவும் காப்பீடு இல்லாதவர்கள் $1400 வரை செலவிட வேண்டியுள்ளதால் பலரும் மருத்துவர் பரிந்துரைத்த அளவுகளில் எடுத்துக் கொள்ள முடியாமல் தத்தளிப்பதாகவும், அமெரிக்காவில் மட்டும் 30 மில்லியனுக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நீரிழிவு இதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘மெடிகேர்’ என்பது 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஊனமுற்றோர் நலன்களைப் பெறும் இளைஞர்களுக்கான தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தில் மூன்று வித காப்பீடுகள் உள்ளடக்கம். பார்ட் A , மருத்துவமனைக் காப்பீடு, பார்ட் B மருத்துவ காப்பீடு, பார்ட் D மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளுக்கான காப்பீடு.

மெடிகேர் சுகாதாரச் செலவுகளுக்கு உதவினாலும் அனைத்து மருத்துவச் செலவுகள் அல்லது பெரும்பாலான நீண்ட கால பராமரிப்புச் செலவுகளை முற்றிலும் ஈடுசெய்யாது. பயனாளிகள் அதற்கென தனியாக பார்ட் A, B, D காப்பீடுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இங்கு தான் பலருக்கும் பிரச்னையே! மெடிகேர் மருத்துவப் பயனாளிகளில் மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. 3.3 மில்லியனுக்கும் அதிகமான மெடிகேர் மருத்துவப் பயனாளிகள் இன்சுலினைப் பயன்படுத்துகின்றனர். மருத்துவர் பரிந்துரைத்த அளவில் இன்சுலின் மருந்துகளை உட்கொள்ள முடியாதவர்களுக்குப் பார்வை, சிறுநீரக செயலிழப்பு, கால் புண்கள், மாரடைப்பு என நீண்ட கால சிக்கல்கள் உருவாகி அரசிற்கு வருடத்திற்கு $327 பில்லியன்கள் செலவாகிறது. அதுவும் மக்களின் வரிப்பணத்தில்! சில பொருட்களின் மேல் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு, இன்சுலின் விஷயத்தில் மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக மக்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

இவற்றைக் கருத்தில் கொண்டு அதிபர் ட்ரம்ப் July 24, 2020 அன்று இன்சுலின் விலையைக் குறைக்கும் நிர்வாக உத்தரவு ஒன்றை வெளியிட்டார். மெடிகேர் பார்ட் D மூலம் மருந்துகள் வாங்குவோர் அதிகபட்சமாக $35 செலுத்தி தங்களுடைய மாதாந்திர இன்சுலின் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பயனாளிகளுக்கு உதவும் விதமாக இருந்த நிர்வாக உத்தரவு நல்ல வரவேற்பைப் பெற்றது.

அவரவர் உடல் தேவைக்கேற்ப பல விதமான இன்சுலின் மருந்துகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. சில நிமிடங்களில் வேலை செய்யத் தொடங்கி இரண்டு மணிநேரம் நீடிக்கும் வேகமாக செயல்படும் இன்சுலின், வேலை செய்ய 30 நிமிடங்கள் எடுத்து கொண்டு 3 முதல் 6 மணிநேரம் வரை நீடிக்கும் குறுகிய நேர இன்சுலின், இடைநிலை இன்சுலின் முழுமையாக வேலை செய்ய 2 முதல் 4 மணிநேரம் ஆகும். அதன் விளைவு 18 மணி நேரம் வரை நீடிக்கும். ஒரு நாள் முழுவதும் வேலை செய்யக்கூடிய நீண்ட நேரம் செயல்படும் இன்சுலின், கலப்பு இன்சுலின் என ஐந்து வகையான இன்சுலின் மருந்துகள் சந்தையில் கிடைக்கிறது. அதன் விலைகளும் மருந்து நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடுகிறது.

இன்சுலின் மருந்துகளின் விலையைக் குறைக்க பிராண்ட் பெயர் அல்லது பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரை இல்லாத நுகர்வோர் தயாரிப்பு மருந்துகளுக்கு அரசு ஒப்புதல் அளித்ததால் 2019லிருந்து விலையில் சிறிது மாற்றங்கள் தெரிந்தாலும் மற்ற நாடுகளை விட இன்னும் அதிக விலையில் தான் இருக்கிறது. வர்த்தக முத்திரை கொண்ட Humalog KwikPen $140ஐ ஒப்பிடும்போது ​​ பிராண்ட் பெயர் அல்லாத பொதுவான இன்சுலின் lispro KwikPen $60ன் விலை குறைவாக இருந்தாலும் சாமானியர்களால் வாங்க முடியாத நிலைமையே தொடருகிறது. கனடாவில் ஒரு யூனிட் இன்சுலின் சராசரிப் பட்டியல் விலை $12. அதுவே அமெரிக்காவில் $98.70. நீரிழிவு நோயாளிகளின் உடல் தேவைக்கேற்ப ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 4 இன்சுலின் ஊசிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ஏழு மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தின் விலை மற்ற உலக நாடுகளை விட அமெரிக்காவில் மட்டும் கூரையைப் பிய்த்துக் கொண்டு ஏறுவதால் அரசும் மக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இன்றைய விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது.

இதற்கெல்லாம் முதன்மைக் காரணமாக PBMகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. PBM எனப்படும் ‘Pharmacy Benefit Managers’கள் மருந்து நிறுவனங்கள் மற்றும் உடல்நலக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இடையே ஒரு இணைப்பாகச் செயல்படுகிறார்கள். காப்பீட்டு நிறுவனங்கள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகள் ஒரு மருந்துக்கு என்ன விலை செலுத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் இவர்களே. முதியோருக்கான அரசு நிதியுதவி வழங்கும் மருத்துவ காப்பீட்டு திட்டமானது இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் தலையீடு முற்றிலும் இல்லாத சூழ்நிலையில் மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய வகையில் வெளிப்படைத்தன்மையற்ற தீர்மானங்களைக் கொண்டு வருவதால் தான் இந்த விலையேற்றம் என்பது தெரிந்தும் தடுக்க முடியாமல் தவிக்கிறது முதலாளித்துவ அமெரிக்க அரசாங்கம். அரசே நினைத்தாலும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மனது வைத்தால் மட்டுமே விலையில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதே தற்போதைய நிதர்சனமான உண்மை..

ஆனால் மருத்துவ ஆராய்ச்சி, மருந்துகளின் உற்பத்திச் செலவு, விளம்பரங்கள், மருந்து நிறுவனங்கள் தரும் தள்ளுபடி கூப்பன்கள், நிர்வாக கட்டணங்களைக் காரணம் காட்டி PBMகள் விலையை அதிகரித்துக் கொண்டே வருவது தான் வேதனை.

1923ல் ஃபிரடெரிக் பேண்டிங் என்பவரால் இன்சுலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மக்களின் உயிரைக் காக்கும் மருந்திற்குத் தன் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று மறுத்திருக்கிறார். உயிர் காக்கும் இந்த மருந்து அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் யூனிவர்சிட்டி ஆஃப் டொரோண்டோவிற்கு $1க்கு அதன்
காப்புரிமையை விற்றிருக்கிறார். மற்ற தொழில்மயமான நாடுகளைப் போலவே கனடாவும் குறைவான விலையில் எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மருந்துகளின் மீதான விலைக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதே அங்கு குறைந்த விலையில் இன்சுலின் கிடைப்பதற்கு காரணம்.

கனடாவைப்போல் மருந்தின் விலையை அரசு நிர்ணயம் செய்யாததும், லாப நோக்குடன் செயல்படும் மருந்து உற்பத்தி, மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களின் அராஜக போக்குகளே அமெரிக்காவில் இன்சுலின் விலை ஏற்றத்திற்கு காரணம். அதிகரித்து வரும் இன்சுலின் செலவுகளைப் புரிந்து கொள்ள விநியோகச் சங்கிலி (சப்ளை செயின்) விஷயத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவது, எதிர்கால பட்டியல் விலை உயர்வுகளை பணவீக்க விகிதத்திற்கு ஏற்றவாறு மாற்றுவது, மருந்து விலையைத் தீர்மானிப்பதில் அரசின் பரிசீலனையைக் கருத்தில் கொள்வது, சந்தையில் போட்டியை உருவாக்க இன்சுலின் பயோசிமிலர்களின் ஒப்புதலை விரைவுபடுத்துவதன் மூலம் விலைகுறைப்பு சாத்தியம் என எண்டோகிரைன் சொசைட்டி நம்புகிறது.

கடந்த வாரங்களில் அதிபர் பைடன் தன்னுடைய “Build Back Better ” மசோதா மூலமாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விலையைக் குறைக்க சில திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.

முதலில் இன்சுலினுக்கான மாதாந்திர செலவை $35 வரம்புக்குள் கொண்டு வருதல். இது அரசு மற்றும் தனியார் சுகாதார காப்பீடுகள் வைத்துள்ள அனைவருக்கும் பொருந்தும். எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இரண்டாவதாக, மருத்துவ காப்பீடு இல்லாதவர்களுக்கு அரசாங்கமே காப்பீடு வழங்க வகை செய்தல். Healthcare.govல் மேற்படி தகவல்கள் கிடைக்கிறது என்று வெள்ளைமாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாதம் $10 மட்டுமே செலுத்தி பரிந்துரைக்கப்பட்ட இன்சுலின், மற்ற மருந்துகள், மருத்துவமனை அனுமதி, மருத்துவர் ஆலோசனை பெரும் வசதிகளும் இதில் பெற முடியும் என்பது எப்படி என்று தான் தெரியவில்லை! மசோதாவின் மீதான விவாதத்தில் இதன் தொடர்பான தகவல்களும் சாத்தியங்களும் தெரிய வரும்

மெடிகேர் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை மருத்துவர் ஆலோசனை, மருத்துவமனைச் செலவுகள் போன்றவற்றில் பேச்சுவார்த்தை நடத்தி விலையைக் குறைக்க முடிவதைப் போல பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கும் பேச்சுவார்த்தை நடத்தும் அனுமதி வழங்கப்படும் என்பது மிகப்பெரிய மாற்றம். கண்டிப்பாக இந்த மசோதாவிற்கு செனட்டிலும் பிரதிநிதிகள் சபையிலும் எதிர்ப்பும் ஆதரவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மூன்றாவதாக, மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் லாபத்தைப் பெற்று எந்தக் கண்காணிப்பும், பொறுப்புக்கூறலும் இல்லாமல் விலையை உயர்த்தும் நாட்களை முடிவுக்குக் கொண்டு வருதல். அது அத்தனை எளிதான விஷயமா? அவர்களுடைய லாபி எத்தகையது என்று நாடே அறியுமே! அரசியல்வாதிகள் பலரும் இந்த லாபிக்கு கட்டுப்பட்ட நிலையில் இத்தகைய மாற்றங்களை இரு கட்சிகளும் இணைந்து செயல்படுத்துமா என ஆர்வத்துடன் மக்களும் காத்திருக்கிறார்கள்.

“இந்த நாட்டில் சுகாதாரம் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டுமே ஒழிய சலுகையாக இருக்க கூடாது. பலருக்கும் ஒரு மருந்தின் விலை என்பது நம்பிக்கைக்கும் பயத்திற்கும், வாழ்வுக்கும் மரணத்திற்கும், கண்ணியத்திற்கும் சார்புக்கும் இடையேயான பெரும் வித்தியாசம்.”
இந்த அத்தியாவசிய மாற்றங்கள் மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகள் மற்றும் காப்பீடு இல்லாதவர்களுக்குத் தேவையான மருந்துச் செலவுகளைக் குறைத்து சுகாதார வசதிகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யப் போகிறது. அதனால் தன்னுடைய “Build Back Better” மசோதாவிற்கு செனட் பிரதிநிதிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார் அதிபர் பைடன்.

ஆனால் மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள், அதிகபட்ச விலையினால் கிடைக்கும் லாபத்தில் தான் இந்நிறுவனங்கள் அதிக ஆய்வுகளை மேற்கொள்ள முடிகிறது. கான்சர், எய்ட்ஸ் முதல் இன்றைய கொரோனாவிற்கான பல அரிய மருந்துகளை உலகிற்கு அளிக்க முடிகிறது. விலையைக் குறைப்பதன் மூலம் மேற்கொண்டு ஆய்வுகள் நடத்த முடியாத சூழலில் எதிர்காலத்தில் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பதில் தடைகள் உருவாகும் நிலை ஏற்படும். விலையேற்றம் சரியே. மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தள்ளுபடி கூப்பன்கள், சலுகைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வாதிடுவதால் பைடனின் அனைவருக்குமான இன்சுலின் விலைகுறைப்புத் திட்டம் சவாலாகவே இருக்கும்.

வெளிப்படைத்தன்மையற்ற அமெரிக்க சுகாதார அமைப்பில் மாற்றத்தினைக் கொண்டு வரும் நேரம் இது. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மனது வைக்க வேண்டும். இதில் அரசியலைத் தாண்டி இரு பெரும் கட்சிகளும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதே வாக்களித்தவர்களின் எதிர்பார்ப்பு.

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

மாதங்களில் அவள் மார்கழி 22


கண்ணனின் திருப்பள்ளியெழுச்சிக்காக வீரர்களும், அரசர்களும் சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்பதாகவும் சூரிய, சந்திரனைப் போன்ற கண்கள் விழித்துப் பார்த்தால் தங்கள் பாவங்களும் சாபங்களும் தீருமே என்று அழகுற விளிக்கிறாள் கோதை.


Tuesday, January 4, 2022

மாதங்களில் அவள் மார்கழி 21

பால், தயிர், வெண்ணெய் என்று மக்களுக்கு வேண்டியனவற்றை அள்ளித்தரும் பசுக்கள் ஆயர்குல மக்களின் வாழ்வாதாரம். அத்தகைய பசுக்களின் உரிமையாளரான நந்தகோபனின் மகனான கண்ணனைப் போற்றிப் புகழும் பாடலில் வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே, உலகிற்கே வழிகாட்டும் சுடரே, வலிமையானவனே என்று அவன் திருவடியைப் புகழ்ந்து பாடுகிறாள் ஆண்டாள்.


Monday, January 3, 2022

மாதங்களில் அவள் மார்கழி 20


முப்பது முக்கோடி தேவர்களுக்கும் முன்னே சென்று மக்களின் துயர் துடைக்கும் கலியுகத் தெய்வத்தை துயில் நீங்கச் சொல்லி அவனின் மகிமைகளையும் நப்பின்னைப் பிராட்டியின் அழகையும் ஆராதித்து கண்ணனின் அருள்மழையில் நனைய வேண்டுகிறது இப்பாடல். கோதையின் அழகிய எளிய தமிழ் வாசிப்பவர்களின் மனதையும் வசீகரிக்கும்.


Sunday, January 2, 2022

மாதங்களில் அவள் மார்கழி 19

நப்பின்னையின் அன்பின் அரவணைப்பில் உறங்கும் கண்ணனை எழுப்புமாறு செல்ல கோபித்தல் தொனியில் அமைந்துள்ள இப்பாடலில் பூங்குழல், மலர்மார்பா, மைத்தடங் கண்ணினாய், மணாளன் என தமிழ்ச்சொற்களை  ஆண்டாள் விளிக்கும் அழகே அழகு! 


மாதங்களில் அவள் மார்கழி 18


கண்ணன் வீட்டு வாசலில் நின்று நந்தகோபனின் பராக்கிரமங்களையும், அன்னை யசோதா, பலராமனையும் போற்றிப் பாடிய பின் அழகிய மணம் கமழும் கூந்தலை உடைய நப்பின்னைப் பிராட்டியிடம் கண்ணன் புகழ் பாட வந்திருக்கும் தங்களுக்காக அவளுடைய செந்தாமரைக் கைகளால் கதவைத் திறக்குமாறு கேட்கிறாள். குழலீ, பந்தார் விரலி, செந்தாமரைக் கைபோன்ற உவமைகள் நப்பின்னையின் நளினத்தைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது சிறப்பு.

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம்...