நல்ல கதையும் கதைக்கேற்ற நடிகர்களும் அமைந்து விட்டால் அந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இப்படத்தில் நடித்திருந்த கதாபாத்திரங்கள் மிக அருமையாக நடித்திருந்தது சிறப்பு. வியட்நாம் போர் அமெரிக்காவிற்கு எத்தகைய இழப்பைத் தந்தது என்பதை வரலாறு அறியும். அரசு மேற்கொண்ட இப்போரினை எதிர்த்து பல்வேறு குழுக்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தது. அதனை அரசு கவனமாக மறைத்து எல்லை தாண்டி சிகாகோ நகருக்குள் கலவரத்தைத் தூண்டியதாகவும் காவல்துறையை எதிர்த்ததாகவும் பொய் வழக்குகள் போட்டு போராட்ட குழுக்களின் தலைவர்களை சிறையிலடைத்தது. எங்கோ கேட்டது போல் இருக்கிறதா? இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அவலம் தான் 😞
1960களில் நடந்த நிகழ்விற்கு ஏற்ற ஒப்பனைகளும், பேச்சுவழக்குகளும், வடிவமைப்புகளும், ஆடைகளும் என்று கவனத்துடன் கையாண்டிருந்தார்கள். ஹாலிவுட்டிற்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?
இந்தப் படத்தின் வில்லனே நீதிபதி கதாபாத்திரம் தான். உண்மையில் அவர் அப்படிப்பட்ட மனிதர் தான் என்று கூறுகிறார்கள். மிகச்சரியான நடிகர் தேர்வு. குறைவில்லாமல் நடித்திருந்தார். கறுப்பின மக்களின் மேல் அவருக்கிருந்த வெறுப்பு மனப்பான்மையும், முறையான நீதிமன்ற முறைகளைக் கையாளாமல் தண்டனை அளித்த விதமும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல் தவறேதும் இல்லை என்று முன்னாள் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எடுத்துரைத்தும் தண்டனை அளிப்பது அரஜாகத்தின் உச்சம்.
கறுப்பின மக்களின் குரலாக 'பிளாக் பாந்தர் பார்ட்டி' என்று ஒன்றும் இருந்திருக்கிறது. அவர்களும் போருக்கெதிராக குரல் கொடுத்ததாக அதன் தலைவன் பாபி சீல் மீதும் குற்றம் சாட்டப்படுகிறது. தனக்கென வாதாட வக்கீல் இருந்தாலும் அவர் நேரில் வர முடியாததால் பாபி சீல் பேச முற்படும் போதெல்லாம் நீதிபதி தடுப்பது கறுப்பினத்தவர்களை எத்தகைய முறையில் வெள்ளையர் அரசாங்கம் நடத்தியது என்பதைப் புரிய வைக்கிறது.
இப்படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருந்தாலும் 'ஹிப்பி'களாக வரும் இருவர் அனாயசமாக நடித்திருந்தார்கள். கோமாளித்தனமாக இருந்தாலும் அவர்களின் பேச்சில் இருந்த நியாயத்தைக் கேட்டு அவர்களை பின்தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஏற்படும் அவமானங்களும் காவல்துறையின் அடக்குமுறையையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். குற்றம் சட்டப்பட்டவர்களுக்காக வாதாடும் வக்கீலாக மார்க் ரிலான்ஸ் , அரசு தரப்பில் ஜோசப் கோர்டன் லெவிட் இருவரும் சிறந்த நடிகர்கள் என்பதை மீண்டும் நிரூபணம் செய்திருந்தார்கள்.
No comments:
Post a Comment