Friday, January 21, 2022

மாதங்களில் நான் மார்கழி

மார்கழி என்றதும் நினைவிற்கு வருவது ஆண்டாளும், திருப்பாவையும், குளிர்காலைப் பொழுதில் வாசலில் பெண்கள் இடும் அழகிய கோலங்களும், பரந்தாமனின் கீர்த்தியைப் பஜனைப் பாடிச் செல்லும் பக்தர்களும் தான். திருமால் வீற்றிருக்கும் அனைத்து தலங்களிலும் ஆழ்வார்களின் பாசுரங்கள் எதிரொலிக்கும் இனிய மாதம் இது. வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு பகல் பத்து உற்சவம் நடைபெறும் நாட்களில் கிடைக்காத மூலவர் தரிசனம் வைகுண்ட ஏகாதசியன்று திரும்ப கிடைக்கும். இராப்பத்து உற்சவமும் தொடங்கி பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. திவ்யதேசங்களில் பெருமாளுக்கு அலங்காரங்களும் பூஜைகளும் ஏகாந்தமாக நடைபெறும். "பன்னிரெண்டு மாதங்களில் நான் மார்கழி" என்று பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறிய தெய்வீக மாதமான மார்கழி, 'தனுர்' மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இம்மாதத்தில் கடவுளின் அருளைப் பெற மக்கள் சிறப்புப் பூஜைகள், பஜனைகள் செய்து நோன்பிருந்து வழிபடுகிறார்கள். மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது. வைணவ கோவில்களில் திருப்பாவை, ஆழ்வார் பாசுரங்கள்,  சைவ வழிபாட்டுத்தலங்களில் திருவெம்பாவைப் பாடல்கள் பாடப்படும் சிறப்புமிக்க மாதமும் ஆகும்.

30 பாடல்கள் கொண்ட 'ஆண்டாள் பாசுரம்' என்று அழைக்கப்படும் 'திருப்பாவை'யை எழுதியவர் கோதை நாச்சியார். இவர் எழுதிய நூற்றுநாற்பத்து மூன்று பாடல்களின் தொகுப்பு நாச்சியார் திருமொழி என்று அழைக்கப்படுகிறது. இவருடைய பாசுரங்கள் தமிழின் சிறப்பை உணர்த்துவது மட்டுமில்லாமல் கண்ணன் மீதான அவரின் பக்தியையும் அழகாக எடுத்துரைக்கிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற இயற்பெயருடன், பரந்தாமனுக்கு மாலைகளைச் சூடிக் கொடுத்ததால் 'சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்', திருமாலை ஆண்டதால் 'ஆண்டாள்', பெரியாழ்வாரின் மகளானதால் 'பட்டர்பிரான் புதல்வி' என வேறு பல பெயர்களுடனும் அழைக்கப்படுகிறாள்.

திருப்பாவையில் முதல் ஐந்து பாசுரங்களில் மார்கழி மாத நோன்பின் மகிமைகள், அதை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும், நோன்பின் பயன்களைக் கூறுகிறாள் ஆண்டாள்.

"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்' என தொடங்கும் முதற் பாடலில் கண்ணனை நோன்பிருந்து வணங்க, விடியலில் தோழிகளை எழுப்பும் பாடல்களின் அழகே அதன் அற்புதமான விவரணை, எளிமையான இனிமையான கொஞ்சிப் பேசும் தமிழ் , ஒவ்வொரு பாடலிலும் கண்ணனைப் போற்றும் விதம் என படிப்போரின் மனம் கவர்கிறது. இப்பாடலில் கார்மேனியான், கதிர்மதியம் முகத்தான், நந்தகோபன் குமரன், யசோதையின் இளஞ்சிங்கம் என்று கண்ணனைக் குறிப்பிடும் விதம் அத்தனை அழகு! வாசித்தாலே இன்பம்!

இரண்டாவது பாடலில் பரந்தாமனின் திருவடிகளை அடைய எப்படி நோன்பிருக்க வேண்டும் என்று கூறுகிறாள். நெய், பால் சேர்க்காமல் அதிகாலையிலேயே நீராடி, தீய சொற்கள், தீய பேச்சுக்கள், தீய எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாமல் இல்லாதவர்களுக்குத் தர்மம் செய்ய வேண்டும் என்று போதிக்கிறாள். 'வையத்து வாழ்வீர்காள்' என்று ஆரம்பமே என்ன ஒரு அழகு! 'பாவை நோன்பு' என்பது இளம்பெண்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பு. இந்த நாளில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வணங்குகின்றனர்.

அந்த பரந்தாமனை நினைத்து விரதமிருப்பதால் உலகில் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை மூன்றாவது பாடலின் வாயிலாக அழகாக எடுத்துரைக்கிறாள் கோதை. இந்த நோன்பினால் உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும். நோன்பை கடைப்பிடிப்பவருக்கு மட்டுமில்லாமல் உலகிற்கே நன்மை பயக்கும் விரதம் என்று நோன்பின் மகிமையை எடுத்துரைக்கிறாள் பட்டர்பிரான் புதல்வி. 'ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவோம்' என்று வாமனவதாரம் எடுத்த கண்ணனின் திருவடிகளை வணங்கினால் வைகுண்டம் நிச்சயம் என்று சிறுமிகளை அழைக்கிறாள்.

நீராட நீர்நிலைகளுக்குச் செல்லும் மக்களுக்காக மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனிடம் கோரிக்கை விடும் நான்காவது பாடலில் கார்மேகவண்ணன், பத்மநாபன், சாரங்கபாணி என்று ஏகாந்தமாய் கண்ணனை விளிக்கிறாள் ரங்கநாதப்பிரியை!

மாயன், தேவகி மைந்தன், தாமோதரனை வழிபட நீராடி மணம் வீசும் மலர்களுடன் செல்வோம் என்பதை விளிக்கும் ஐந்தாவது பாடலில் தேவகியின் வயிற்றுக்குப் பெருமை சேர்த்தவன், சேட்டைகள் பல செய்து யசோதையின் கோபத்திற்கு ஆளானவன் என்பதை எத்தனை அழகாக சொல்லியிருக்கிறார்!

தன்னுடன் நீராட தோழிகளை அழைத்துச் செல்வதாக அமைந்த இப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் நாராயணனின் புகழையும் அவனுடைய வீர தீர பராக்கிரமங்களையும் எளிய தமிழில் எடுத்துரைக்கும் பாங்கும் அத்தனை அழகு!

மாமன் கம்சன் தன்னைக் கொல்ல அனுப்பிய பூதகி என்று அரக்கியைத் தாயாக்கி மோட்சமளித்த கருட வாகனனின் வீர தீர பராக்கிரமங்களையும் , அழகிய காலைக்காட்சிகளையும், ஹரி நாமம் கொண்ட கண்ணபிரானை வணங்கி வழிபட தூக்கத்திலிருந்து விரைந்து எழுந்திருக்குமாறு தோழியிடம் கூறுகிறது ஆறாம் பாடல்.

அதிகாலையில் பறவைகள் எழுப்பும் ஓசையும் தங்கள் இணையுடன் கதைக்கும் கீச்சுக்குரலும் பாடல்களும் அழகே அழகு! திருமணமான பெண்கள் வேலை செய்கையில் அவர்களின் கழுத்தில் இருக்கும் தாலியின் தங்கமும் மணிகளும் சேர்ந்து ஓசையெழுப்பும்.ஏழாம் பாடலில் காலைக்காட்சியைப் பறவைகள் எழுப்பும் ஒசை வாயிலாகவும், ஆயர்குலப் பெண்கள் மத்தால் தயிரைக் கடைகையில் எழும் ஒலியின் வாயிலாகவும் அழகுத்தமிழில் எடுத்துரைக்கிறாள் நாச்சியார். தடைகளை நீக்கும் கேசவனை அந்த நாராயணனைப் போற்றிப் பாடும் பாடல்கள் கேட்டும் இன்னும் உறங்கும் மர்மமென்ன? கதவைத் திற பெண்ணே என்று தோழியின் வீட்டுக்கதவைத் தட்டுவதாக அமைந்துள்ள இப்பாடலில் கேசவனைக் காண எப்படியெல்லாம் விடியலில் தோழிகளுடன் உரையாடுவதாக கற்பனை செய்துள்ளாள் அதுவும் தேன்மதுர தெள்ளத்தமிழில் !

கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை வழிபட்டு அவன் அருள் பெறுவோம் என்று தோழியை விரைந்து வரச் சொல்கிறது எட்டாம் பாடல்.

'மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?'
எத்தனை முறை கூவி அழைத்தும் எழும்பாத தோழியை எழுப்புமாறு மாமியிடம் முறையிடுகிறாள் ஆண்டாள். அவள் என்ன ஊமையா? செவிடா? என்ன தான் ஆயிற்று அவளுக்கு? இப்படியும் சோம்பல் அவளை ஆட்கொள்ளுமா என்று வியக்கிறாள்! இப்பாடலில் தோழியின் செல்வச்செழிப்பினை விவரித்தவாறே நாராயணனின் திருநாமங்களைச் சொல்ல அழைக்கிறாள். உலக மக்கள் சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டத்தை அடைய அவனின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும் என அறிவுறுத்துகிறது ஒன்பதாம் பாடல்.

முப்பிறவியில் செய்த பலனைத் தான் இப்பிறவியில் அனுபவிக்கிறோம் என்பது நம்பிக்கை. அதைத்தான் கோதா தேவியும் தன் தோழியின் சுகமான வாழ்க்கைக்கு முப்பிறவியில் திருமாலை வணங்கி நோன்பிருந்ததன் பலனை அனுபவிக்கிறாள் என்று பத்தாம் பாடலில் குறிப்பிட்டிருக்கிறாள். நன்கு உறங்குபவர்களைப் பார்த்து கும்பகர்ணனைப் போல் தூங்குவதாக சொல்வது வழக்கம். இப்பாடலில் ஆழ்ந்து உறங்கும் தோழியைப் பார்த்து அவ்வாறே விளிப்பது ஆண்டாளின் பாடல்கள் எத்தனை யதார்த்தமானது என்பதையே நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

மானிடப் பிறவியில் இறைவனை வணங்காமல் வெறும் உண்டு, உறங்குவதில் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பதைத் தன் அழகுத் தோழியிடம் கேட்பதாக அமைந்துள்ள பதினோராவது பாடலில் மேகவண்ணன், கண்ணன், கோபாலன் புகழைப் பாட வா என்று அழைக்கிறாள் நாச்சியார்.

மார்கழி மாதத்தில் ராமனைப் போற்றிப் பாடிக் கொண்டிருக்கிறோம். ஏனடி இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய் ஆயனின் தங்கையே! அப்படி என்ன தூக்கம்? விரைவில் எழுந்து வா என்று இறைஞ்சுகிறாள் தன்னுடைய பன்னிரெண்டாவது பாடலில்.

"வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று." என்ன ஒரு அழகான சொல்லாடல்! மார்கழி மாதம் குளிர் காலம். குளிர்ந்த நீரில் நீச்சலடித்துக் குளிக்க வா என எத்தனை எடுத்துரைத்தும் உறங்கும் தோழியை எழுப்ப, "தூக்கம் எனும் திருட்டை விடுத்து வா" என்றழைக்கிறாள் ஆண்டாள். ஆம், அதிக தூக்கம் நம் பொன்னான நேரத்தைத் திருடி விடுகிறது என்பதையும் அந்தப் பரந்தாமனை நினைக்காத ஒவ்வொரு நொடியும் வீணே என்கிறாள் கோதை. இந்தப் பாடலிலும் நாராயணின் வீர தீர பராக்கிரமங்களைச் சொல்ல மறக்கவில்லை.

வெளியில் எங்காவது செல்வது என்றால் நம்மில் கூட பலரும் முதல் ஆளாக வருவேன் என்று கடைசியில் வந்து நிற்பார்கள். அது போலவே தோழியும் முன்னதாக வந்து அனைவரையும் எழுப்புவேன் என்று சொன்னவள் இன்னும் உறங்கிக் கிடக்கிறாள். அழகிய கண்ணனைப் பாடாமல் இன்னும் என்ன உறக்கம் பெண்ணே? பொறுமை இழந்தவளாக சுடர்க்கொடியாள் கேட்கிறாள் இந்த பதினான்காவது பாடலில் .

"எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!" எத்தனை அழகான மொழி நடை! இன்னும் என்னடி உறக்கம்? இத்தனைச் சொல்லியும் எழுவதில் என்ன சுணக்கம்? தோழிகள் கோபத்துடன் கேட்க, ஒரு வழியாக எழுந்து வந்தவள் 'ஏன் இப்படி கோபித்துக் கொள்கிறீர்கள்?' என்று அவளுக்காக பனியில் காத்துக்கிடந்த தோழிகளிடமே கோபித்துக் கொள்கிறாள். எப்படி இருக்கிறது கதை? "வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக!" எல்லோரும் போந்தாரோ? என்று தோழி உரைப்பதைப் பதினைந்தாவதுபாடலில் ஆண்டாள் வெளிப்படுத்தும் பாங்கு தான் எத்தனை அழகு!

ஒருவழியாக தோழிகள் அனைவரும் நீராடச் செல்கின்றனர். கண்ணனைக் காண அவர் வீட்டு வாசலில் நின்று ஆயர்குலப் பெண்கள் முறையிடுவதாக இனி வரும் பாடல்களில் அழகுறச் சொல்கிறாள் பட்டர்பிரான் மகள்.

தோழிகளுடன் நீராடி விட்டு வாயிற்காப்பாளரிடம் கார்மேக வண்ணன் தங்களுக்குத் தருவதாக சொன்ன பறையைப் பெற்றுச் செல்ல வந்திருக்கிறோம். எந்த ஒரு காரியத்தையும் முடியாது என்று எடுத்த எடுப்பில் சொல்வதை அனுபவமிக்க பெரியவர்கள் விரும்ப மாட்டார்கள். இந்த ஆயர்குலச் சிறுமிகளும் மூடியுள்ள நந்தகோபனின் வீட்டு நிலைக்கதவைத் திறக்க முடியாது என்று சொல்லி விடாதே என சொல்வதையும் நயம்பட "வாயால் முன்னமுன்னம் மாற்றாதே" என்கிறாள் ஆண்டாள் பதினாறாவது பாடலில்.

நற்குணங்கள் கொண்ட தர்மவான் நந்தகோபன், பெருமாட்டி யசோதை, உலகளந்த பெருமான் கண்ணன், செம்பொற் சிலம்புகளை அணிந்த பலராமனின் தரிசனம் வேண்டுகிறது "அம்பரமே" என அழகிய தமிழ்ச் சொல்லில் துவங்கும் பதினேழாவது பாடல்.

கண்ணன் வீட்டு வாசலில் நின்று நந்தகோபனின் பராக்கிரமங்களையும், அன்னை யசோதா, பலராமனையும் போற்றிப் பாடிய பின் அழகிய மணம் கமழும் கூந்தலை உடைய நப்பின்னைப் பிராட்டியிடம் கண்ணன் புகழ் பாட வந்திருக்கும் தங்களுக்காக அவளுடைய செந்தாமரைக் கைகளால் கதவைத் திறக்குமாறு கேட்கிறாள். பந்தார் விரலி, செந்தாமரைக்கை போன்ற உவமைகள் நப்பின்னையின் நளினத்தைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது சிறப்பு.

நப்பின்னையின் அன்பின் அரவணைப்பில் உறங்கும் கண்ணனை எழுப்புமாறு செல்ல கோபித்தல் தொனியில் அமைந்துள்ள பத்தொன்பதாவது பாடலில் பூங்குழல், மலர்மார்பா, மைத்தடங்கண்ணினாய், மணாளன் என தமிழ்ச்சொற்களை ஆண்டாள் விளிக்கும் அழகே அழகு!

முப்பது முக்கோடி தேவர்களுக்கும் முன்னே சென்று மக்களின் துயர் துடைக்கும் கலியுகத் தெய்வத்தை துயில் நீங்கச் சொல்லி அவனின் மகிமைகளையும் நப்பின்னைப் பிராட்டியின் அழகையும் ஆராதித்து கண்ணனின் அருள்மழையில் நனைய வேண்டுகிறது இருபத்தியோராவது பாடல். கோதையின் அழகிய எளிய தமிழ் வாசிப்பவர்களின் மனதையும் வசீகரிக்கும்.

பால், தயிர், வெண்ணெய் என்று மக்களுக்கு வேண்டியனவற்றை அள்ளித்தரும் பசுக்கள் ஆயர்குல மக்களின் வாழ்வாதாரம். அத்தகைய பசுக்களின் உரிமையாளரான நந்தகோபனின் மகனான கண்ணனைப் போற்றிப் புகழும் பாடலில் வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே, உலகிற்கே வழிகாட்டும் சுடரே, வலிமையானவனே என்று அவன் திருவடியைப் புகழ்ந்து பாடி அவனின் தரிசனம் வேண்டுகிறது இருபத்திரெண்டாவது பாடல்.

கண்ணனின் திருப்பள்ளியெழுச்சிக்காக வீரர்களும், அரசர்களும் சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்பதாகவும், கண்ணனின் செந்தாமரைக்கண்ணால் பார்க்க தங்களின் பாவங்களும் சாபங்களும் தீருமே என்று அழகுற விளிக்கிறாள் இருபத்திமூன்றாவது பாடலில்.

"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி" என துவங்கும் இருபத்திநான்காவது பாடலில் கண்ணனின் அவதாரங்களையும், வீர, தீரச் செயல்களையும் பாராட்டி வந்தனம் செய்து தங்கள் மீதும் சிறிது இரக்கம் காட்டி அவனைப் போற்றிப்பாட அருள்பாலிக்க வேண்டுகிறார்கள் ஆயர்குலப் பெண்கள். வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் இவ்வுலகை அளந்து மஹாபலி எனும் அரக்கனிடம் இருந்து இவ்வுலகைக் காத்தவன். சீதையை மீட்க தென்னிலங்கைச் சென்று ராவணனை வெற்றி கொண்டவன். சக்கர வடிவில் வந்த வத்ஸாசுரனை விளா மர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எரிந்து அழித்தவன். பகைவர் எவ்வளவு பலவான்களாயினும் வேலால் அழித்தவன். அவனின் திருவடிகளுக்கு, வீரத்திற்கு, வேலாயுதத்துக்கு நமஸ்காரம் என்று நாச்சியார் எடுத்துரைக்கும் விதம் அழகு.

"ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர" என தொடங்கும் இருபத்திஐந்தாவது பாடலில் தேவகியின் மகனாகப் பிறந்து அதே இரவில் ஆயர்குல மாளிகையில் யசோதையின் மகனாக ஒளிந்து வளர்ந்த கண்ணன், தன்னைக் கொல்லத் துடித்த மாமன் கம்சனின் கெட்ட எண்ணம் அழிய அவன் வயிற்றில் நெருப்பாய் நின்ற உயர்ந்த குணங்களையுடைய பெருமையைப் பாடி துன்பங்கள் நீங்கி இன்பமாய் வாழ அவனின் அருளை யாசிக்கிறது.

மார்கழி மாத நோன்பிற்காக உலகையே அதிர வைக்கும் ஒலியையும், திருமாலின் கைகளில் இருக்கும் பால் வண்ண சங்கைப் போன்ற வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோர்களையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும், நோன்பை நிறைவேற்ற இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும் எனும் இருப்பத்திஆறாவது பாடலில், நீலக்கல் நிறத்தவனே, ஆலிலையில் மிதப்பவனே, பக்கதர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே என்று கிருஷ்ணனின் கீர்த்திகளைப் போற்றிப் பாடுகிறாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்.

"கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா!" என துவங்குகிறது இருப்பத்தியேழாவது பாடல். மார்கழி 27 ம் நாள் பெருமாள் கோவில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் 'கூடாரவல்லி விழா' கொண்டாடப்படும். அந்த நாள் ஆண்டாள் தன் விரதம் பூர்த்தி செய்யும் நாள். பக்தர்கள் ஆண்டாள் தரிசனம் செய்யத் திரளாகக் கூடுவார்கள். நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கல் போன்ற 'அக்கார அடிசில்' உணவினைப் படைத்து வழிபாடு செய்வார்கள். விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவைச் சாப்பிடுகிறார்கள். அருட்செல்வத்துடன் பொருட்செல்வமும் வேண்டி விரதத்தை நிறைவு செய்யும் வகையில் பால்சோறு உண்ண வருமாறு கண்ணனை வேண்டுகிறார்கள்.

எளிய வாழ்க்கை வாழும் ஆயர்குல மக்கள் தங்களுள் ஒருவராக கோவிந்தனைக் காண்கிறார்கள். அவன் மேல் கொண்ட அன்பினால் ஒருமையில் விளித்து அவனின் அன்பும் அருளும் மட்டுமே வேண்டி நிற்கிறார்கள். தங்கள் குலத்தலைவன் கண்ணனால் தங்களுக்கு வைகுந்தம் உறுதி என்பதை பிறவிப்பயனாக அடைந்ததாக அந்த பரந்தாமனை ஆராதிக்கிறார்கள். எளியவர்களின் அன்பு எத்தகையது என்பதை ஆண்டாள் இருபத்தியெட்டாவது பாடலில் எடுத்துரைக்கிறாள்.

மார்கழி மாதத்தில் நோன்பிருக்கும் ஆயர்குலப் பெண்கள் பரந்தாமனிடம் வேண்டுவதெல்லாம் பொன்னும் பொருளும் அல்ல. ஏழு பிறவிகளிலும் தங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். தங்களை உறவினர்களாக ஏற்க வேண்டும். அவனுக்குச் சேவை செய்யும் பாக்கியத்தைத் தர வேண்டும். மற்ற ஆசைகளை அவனையே அழித்து விட வேண்டுகிறார்கள். இதுவல்லவோ பக்தி! இதைத்தான் ஆண்டாளும் இறைஞ்சுகிறாள் தன் பாடலின் மூலமாக!

கோதை இயற்றிய முப்பது பாசுரங்களைப் பாடி மாதவனை வழிபடுவோருக்கு திருமாலின் ஆசியுடன் செல்வச்செழிப்பும் பெற்று இன்பமுடன் வாழ்வர் என்கிறது திருப்பாவையின் கடைசிப் பாடல்.

திருப்பாவைப் பாடல்கள் ஒவ்வொன்றின் எளிய தமிழும், ஆண்டாளின் அன்பும், பெருமாளின் பராக்கிரமங்களும் படிப்போரை வசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. "மாதங்களில் நான் மார்கழி" என்றுரைத்தவனைப் போற்றிப் பாடி அவனைச் சரணடைவது ஒன்றே இப்பிறவியின் தவம் என்று தன்னுடைய பாசுரங்கள் மூலமாக உணர்த்துகிறாள் ஆண்டாள். 

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாசுரங்களைப் பெருமாள் கோவில்களிலும், வீடுகளிலும் இசைத்து கண்ணனை மக்கள் வழிபடுகிறார்கள். இந்த வருடம் ஒவ்வொரு பாசுரத்தையும் வாசித்து, பொருளுணர்ந்து, கைப்பட எழுதியதில் பரம திருப்தி எனக்கு. அதைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.










No comments:

Post a Comment

Mulitple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தால...